Loading

சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு அவர்களது கார் கனிஷ்காவின் வீட்டிற்கு முன்னால் வந்து நின்றது. 

 

“இப்போ இறங்கலாம்மா” எனத் மன் மனைவியிடம் கூறி விட்டு ஓட்டுநர் இருக்கையில் இருந்து இறங்கினான் அபூர்வன். 

 

அதேசமயம் காரினுள்ளேயே இருந்து கொண்டு முன்னால் இருந்த வீட்டைக் கண்டதுமே ஆராத்ரிகாவிற்கு அது தனது தோழி கனிஷ்காவின் வீடு என்பது தெரிந்து விட்டிருந்தது. 

 

உடனே அதிர்ச்சியில் தனது கால்கள் தடுமாறுவதை உணர்ந்து கொண்டுத் தாவித் தனது கணவனின் கரத்தைப் பற்றிக் கொண்டாள். 

 

அவளது கரத்தை ஆறுதலாகப் பிடித்துக் கொண்டு,”நமக்காகத் தான் அங்கே உன்னோட இரண்டு ஃப்ரண்ட்ஸூம் காத்திருக்காங்க. நாம உள்ளே போகலாமா ஆரா?”என மென்மையான குரலில் வினவினான் அபூர்வன். 

 

உடனே தனது விழிகளிலும், முகத்திலும் ஒரு தீவிரமான பாவனையை வெளிப்படுத்திக் கொண்டு,”ம்ஹ்ம். போகலாம்ங்க”என்றிருந்தாள் ஆராத்ரிகா. 

 

உடனே தாங்கள் இருவரும் அந்த வீட்டை அன்மித்து அதன் அழைப்பு மணியை அழுத்தி விட்டுக் காத்திருந்தார்கள் இருவரும். 

 

அந்த வீட்டினுள் இருந்து கதவின் லென்ஸ் வழியாக வந்திருப்பது யாரென்றுப் பார்த்து விட்டுத் தனது தோழி மற்றும் அவளது கணவனின் முகங்களைக் கண்டதுமே கதவைத் திறந்தாள் கனிஷ்கா. 

 

அவளைப் பார்த்துப் புன்னகைத்தனர் ஆராத்ரிகா மற்றும் அபூர்வன். 

 

“ஹாய்! உள்ளே வாங்க!”என்று அவர்கள் வீட்டிற்குள் வர அனுமதித்தாள். 

 

அதே நேரத்தில் அவர்களுக்கு முன்னரே அங்கே வந்திருந்த நிஹாரிகாவைப் பார்த்ததும் அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்ந்து போய் விட்டாள் ஆராத்ரிகா. 

 

அவளோ அவர்களைப் பார்த்ததும்,“ஹாய் ஆரா! ஹாய் அபூ அண்ணா!”எனக் கூறிப் புன்னகையை உதிர்த்தாள். 

 

“ஹாய் நிஹாரிகாம்மா”என்றத் தன் கணவனைக் கண்டு மின்சாரம் தாக்கியதைப் போன்றதொரு அதிர்வு உண்டாகி விடவும், 

 

“இந்தப் பேர் உங்களுக்கு எப்படி தெரியும்?”என்று அவனிடம் தடுமாற்றத்துடன் கேட்டிருந்தாள் ஆராத்ரிகா. 

 

“எனக்கு இது மட்டுமில்லை உங்க மூனு பேரோட ஃப்ரண்ட்ஷிப்பைப் பத்தி முக்கியமாக உன்னைப் பத்தி இன்னும் நிறைய விஷயங்கள் தெரியும்மா”என்றதுமே, 

 

அதில் திடுக்கிட்டுப் போய் அவனைக் குற்ற உணர்வுடன் பார்த்தவளோ, தனது இரண்டுத் தோழிகளையும் குற்றம் சாட்டும் பார்வையுடன் நோக்கினாள் ஆராத்ரிகா. 

 

அவளை எதிர்கொள்ள முடியாமல் அவளைத் தர்ம சங்கடத்துடன் பார்த்தார்கள் நிஹாரிகா மற்றும் கனிஷ்கா. 

 

அதை அவதானித்து விட்டு,”அவங்க மேலே நீ கோபப்படாதே ஆரா! நான் தான் அவங்களைக் காண்டாக்ட் செஞ்சிப் பேசினேன்”என்று அவளது கல்லூரித் துறைத் தலைவரைச் சந்தித்தது முதல் இப்போது இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருப்பது வரைக்கும், அவளுக்காகத் தான் எடுத்த முயற்சிகளைப் பற்றி எல்லாம் அவளுக்கு விரிவான விளக்கத்தை அளித்தான் அபூர்வன். 

 

தனக்கு மேலும், மேலும் அதிர்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் கணவனை ஏறிட்டுப் பார்த்து,”உங்களுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிடுச்சா?”என்று அவனிடம் விரக்தியுடன் வினவினாள் ஆராத்ரிகா. 

 

“ஆமாம்மா”என்றவனோ, 

 

“ஆனால் எனக்கு உன் மேலே எந்த வருத்தமும், கோபமும், அருவருப்பும் தோனலை!”எனக் கூறி அவளது கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் தனது கைகளால் துடைத்து விட்டான் அபூர்வன். 

 

அதை இறுக்கமாகப் பிடித்து,”உண்மையாகத் தானே சொல்றீங்க?”என்று கலக்கத்துடன் கேட்டிருந்தாள் ஆராத்ரிகா. 

 

“ஆமாம்மா!”என்று அவளுக்கு உறுதி அளிக்கவும், 

 

“நீங்க முதல்ல வந்து உட்காருங்க. நான் உங்களுக்குக் காஃபியும், ஸ்நாக்ஸூம் கொண்டு வந்து தர்றேன்”என்று அவர்களைச் சோபாவில் அமர வைத்து விட்டுச் சமையலறைக்குள் சென்று விட்டாள் கனிஷ்கா. 

 

“நீ எப்படி இங்கே வர்றதுக்கு ஒத்துக்கிட்ட?”என்று நிஹாரிகாவிடம் வினவினாள் ஆராத்ரிகா. 

 

அதற்கு அவளோ,”எல்லாம் உன் ஹஸ்பண்ட் அண்ட் கனியால் தான் நான் இங்கே வர்றதுக்கு ஒத்துக்கிட்டேன்”என்றாள்.

 

“அப்படியா?”எனத் தன் வியப்பை வார்த்தைகளில் வெளிப்படுத்தி இருக்கவும், 

 

அதே நேரத்தில் இரண்டு காப்பிக் கோப்பைகள் மற்றும் இரண்டுத் தட்டுக்களில் இருந்த சிற்றுண்டிகளைக் கொண்டு வந்து மேசையில் வைத்த கனிஷ்காவிடம், 

 

“நீ இரு. நான் மத்ததை எடுத்துட்டு வர்றேன்”என்று அவளிடம் அறிவுறுத்தி விட்டுத், தான் சமையலறைக்குப் போய் மீதியிருக்கும் இரண்டுக் கோப்பைகளையும், தட்டுக்களையும் எடுத்து வந்திருந்தாள் நிஹாரிகா. 

 

உடனே அவர்கள் நால்வரும் தங்களது காப்பியைக் குடித்து விட்டுச் சிற்றுண்டியை உண்டு முடித்து விட்டிருந்தார்கள். 

 

“இப்போதாவது இந்த மீட்டிங் எதுக்குன்னுச் சொல்லுங்களேன்!”என்று மற்ற மூவரிடமும் கேட்டுக் கொண்டாள் ஆராத்ரிகா. 

 

“நாங்க சொல்றதுக்கு ஒரு விஷயமும் இல்லை! எனக்கு எல்லா விஷயங்களும் தெரிஞ்சிடுச்சுன்னுச் சொன்னேன்ல? அதை உன் வாயால் கேட்க நினைக்கிறேன்! இப்போ சொல்லு ஆரா! நீ எதுக்காக இப்படியெல்லாம் செஞ்ச? இதில் உன் ஃப்ரண்ட்ஸ்ஸையும் ஏன் கூட்டுச் சேர்த்துக்கிட்டே?”எனக் கேட்டு விட்டு அவளைத் தீர்க்கமாகப் பார்த்தான் அபூர்வன். 

 

அதில் இனிமேல் அவனிடம் எதையும் மறைக்கத் தேவையில்லை என்பதை நன்றாகப் புரிந்து கொண்டு,”உங்ககிட்ட எல்லாத்தையும் நானே என் வாயாலேயே சொல்றேன்”என்றவளோ,  

 

“எனக்கு அந்த மோசமான சம்பவம் நடந்ததால் நான் ரொம்ப மனசளவுல துவண்டு போயிட்டேன்ங்க. என்னை எங்களோட ஹெச். ஓ. டி மேம் தான் சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே கூட்டிட்டுப் போய்க் கொஞ்சம் சரி பண்ணாங்க. ஆனாலும் என்னால் அதிலிருந்து முழுசாக மீண்டு வர முடியலை! அப்படி இருந்தாலும் நான் காலேஜ் படிப்பை முடிச்சிட்டு வேலைக்குச் சேர்ந்து லேடீஸ் ஹாஸ்டலில் சேர்ந்தேன்”எனத் தன்னிலை விளக்கத்தை அளிக்கத் தொடங்கினாள் ஆராத்ரிகா. 

 

தனது பணியில் சேர்ந்து சில மாதங்கள் ஆகி இருந்த போது தான் தன்னிடம் அபூர்வன் வந்து தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக அணுகி இருந்தான். 

 

முதலில் அவனை மறுத்துப் பின்னர் அவனை முழுமையாக அறிந்து கொண்ட பின்னர் தான் அவனைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டிருந்தாள்.

 

அதே சமயத்தில் அதை தனது தோழிகளிடம் கூறி அவர்களைத் அந்தத் திருமணத்திற்கு வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு, அதற்கான காரணத்தையும் அவர்களிடம் தெரிவித்து அவர்களைத் தன் வாழ்விலிருந்து விலக்கி வைத்து விட்டாள் ஆராத்ரிகா. 

 

ஆனால் அபூர்வனுடன் திருமணம் நடந்த சில மாதங்களிலேயே அவனது குடும்பத்தில் ஒருத்தியாக விரைவிலேயே இடம் பிடித்துக் கொண்டவளின் வயிற்றில் கரு உண்டாகவில்லை! 

 

தாங்கள் இருவரும் மனமொத்த தாம்பத்திய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் கூடத் தனது மணி வயிற்றில் குழந்தை உருவாகாமல் இருப்பதற்கு என்னக் காரணம் என்றெண்ணிக் குழம்பிப் போனவளோ,

 

அதனுடன் அதன் காரணமாகத் தனது மாமியார் தன்னை மிகவும் கரித்துக் கொட்டிக் கொண்டிருப்பதும் சேர்ந்து கொள்ளவும் மனதளவில் மிகவும் நொடிந்து போய் விட்டாள் ஆராத்ரிகா. 

 

தங்களுக்குக் குழந்தை உண்டாகவில்லை என்பதற்காகத் தன் கணவன் தன்னைத் தள்ளி வைக்காமல் தனக்குப் பக்க பலமாக இருப்பதைக் கண்டு அவனை நினைத்துப் பெருமிதம் அடைந்து கொண்டுக், 

 

குழந்தையின்மையால் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் தன்னுடைய திருமண வாழ்க்கையில் எந்த அனர்த்தமும் ஏற்படாது என்பதை உறுதி செய்து விட்டவளுக்கோ, 

 

ஆனால் தனது கடந்த கால கல்லூரி வாழ்க்கையில் நிகழ்ந்த அந்த மோசமான சம்பவத்தால் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்றப் பயம் தொற்றிக் கொண்டது. 

 

அதனாலேயே உடனே தனது தோழிகளுக்கு கூட்டு அழைப்பு விடுத்தாள் ஆராத்ரிகா. 

 

“என்னடி எங்களை உன் வாழ்க்கையில் தலையிடக் கூடாதுன்னு சொல்லிட்டு இப்போ நீயே எங்களுக்குக் கால் பண்ணி இருக்கிற?”என்று அவளிடம் குத்தலாக கேட்டிருந்தாள் நிஹாரிகா. 

 

அதில்,”சாரி டி!”என்று உள்ளிறங்கிய குரலில் கூறியவளிடம், 

 

“இப்போ எதுக்காக எங்ககிட்ட மறுபடியும் பேச வந்திருக்கிற?”என்றாள் கனிஷ்கா. 

 

உடனே,”நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணனும்!”என்றவளோ, 

 

சிறு தயக்கத்துடன் மேலும் தொடர்ந்து,”நம்மக் காலேஜ் டைமில் எனக்கு நடந்த அந்த மோசமான சம்பவத்தை என் புருஷனுக்குத் தெரிய வைக்கனும்! ஆனால், என்னால் அதைப் பத்தி அவர்கிட்ட நேரடியாகச் சொல்ல முடியாது! அதனால் நான் ஒரு திட்டம் வச்சிருக்கேன்! அதை நாமச் செயல்படுத்தி அவருக்கு அதை மறைமுகமாகத் தெரியப்படுத்திடலாம்னு முடிவு செய்து இருக்கேன்”என்றிருந்தாள் ஆராத்ரிகா. 

 

“அதெல்லாம் வேண்டாம் டி. உன்னால் சொல்ல முடியலைன்னா என்ன அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வை. நாங்க அந்த விஷயத்தை அவர்கிட்ட சொல்றோம்”என்று அவளுக்கு அறிவுறுத்தினாள் நிஹாரிகா. 

 

“என்னத் திட்டம்ன்னுக் கூடக் கேட்காமல் நீ எடுத்தவுடனேயே இப்படி சொல்றியேடி”என்று கமறிய குரலில் மொழிய, 

 

“ரிகா! அவளோட திட்டத்தை முழுமையாகச் சொல்ல விடு!”என்றுரைத்து விட்டு, 

 

“அதென்னத் திட்டம் டி ஆரா?”எனத் தோழியிடம் வினவினாள் கனிஷ்கா. 

 

“அதாவது நீங்க ரெண்டு பேரும் தான் எங்க கல்யாணத்துக்கு வரலை தானே? அதுவும் இப்போ இந்த விஷயத்தில் உதவப் போகுது! நான் உங்களில் ஒருத்தியைக்’காரிகா’அப்படின்றப் பேரில் உங்க நம்பரை என்னோட மொபைலில் சேவ் செஞ்சி எனக்கு நடந்த பிரச்சினைகள் எல்லாம் அந்த நபருக்கு நடந்தா மாதிரியும், அதுக்குத் தினமும் நான் அந்த நபருக்குக் கால் செஞ்சி அவங்களுக்குக் கவுன்சிலிங் கொடுக்கிறா மாதிரியும் என் புருஷனுக்குத் தெரியுறா மாதிரி நடந்துக்கிறேன்! நான் அப்படி தினமும் பேசிக்கிட்டே இருந்தால் அதை எப்படியும் அபூ நோட் பண்ணி அதைப் பத்தி எங்கிட்டே கேட்பார்! அப்போ நான் எனக்குக் காலேஜில் காரிகான்னு ஒரு பெஸ்ட் ஃப்ரண்ட் இருந்ததாகவும், அவளோட வாழ்க்கையில் நிறையப் பிரச்சினைகள் நடந்ததுன்னும் சொல்லி அதை அவர்கிட்ட அப்பப்போ கதையாகச் சொல்றேன்! அதைக் கேட்கும் போது அவரோட முக பாவனைகளையும், மனநிலையையும் பார்த்துட்டு அடுத்து என்னப் பண்ணலாம்னு யோசிப்போம்! அவர் அந்தக் காரிகாவோட கதையை முழுசாக கேட்டு அவளுக்காக வருத்தப்பட்டால் அதை அப்படியே விட்றலாம்! அதை விட்டுட்டு அவருக்கு அந்தப் பொண்ணுக்கு நடந்த அநியாயமான சம்பவத்தால் அவரோட முகத்தில் சின்ன அருவருப்பான பாவனைத் தெரிஞ்சாலும் நான் அவர்கிட்ட இருந்து டிவோர்ஸ் வாங்கிடுவேன்!”என்றவளை, 

 

“லூசு மாதிரி பேசாதே ஆரா! இந்தத் திட்டம் எல்லாம் தயவு செஞ்சு வேண்டாம்! உன்னை இந்தளவுக்குக் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சி இருக்கிற அபூர்வன் அண்ணா எப்படி அந்த விஷயத்தை அருவருப்பாக நினைப்பார்! நான் சொல்வதைக் கேளு. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை! நீ அவர்கிட்டே இதை நேரடியாக சொல்லி இப்போவே உன்னோட பயம், சந்தேகம் எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வச்சிரு!”என அவளுக்கு மற்ற இருவர்களும் எவ்வளவோ அறிவுரைகளை வழங்கினர். 

 

ஆனாலும் தனது நிலையில் இருந்து மாறாமல் பிடிவாதம் பிடித்தாள் ஆராத்ரிகா. 

 

அதனால் வேறு வழியின்றி அவளுக்காக உதவி செய்ய ஒப்புக் கொண்டார்கள் அவளது தோழிகள். 

 

“நான் காரிகான்றப் பேரில் உன் கூட ஃபோனில் பேசுறேன் ஆரா. நம்ம ரெண்டு பேரையும் கண்காணிக்கிறப் பொறுப்பை கனி பார்த்துக்கட்டும். நம்மத் திட்டத்தில் நாம ஏதாவது சொதப்புனா அவ அதை எடுத்துச் சொல்லட்டும்”என்றுரைத்தாள் நிஹாரிகா. 

 

“எனக்கும் இதில் சம்மதம்”என்றிருந்தாள் கனிஷ்கா. 

 

“ரொம்பத் தேங்க்ஸ்டி. இதில் யாராலும் எந்தச் சொதப்பலும் நடந்துடக் கூடாது!”எனக் கலக்கத்துடன் கேட்டுக் கொண்டாள் ஆராத்ரிகா. 

 

“அதெல்லாம் எதுவும் சொதப்பாது!”என்று உறுதி அளித்த நிஹாரிகாவே முதல் சொதப்பலைச் செய்து இருந்ததால் தான் அவளது மனம் வருந்தும் படியாகத் திட்டி விட்டிருந்தார்கள் மற்ற இருவரும். 

 

அதனால் இந்தத் திட்டத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அவர்களிடம் கூறி விட்டு கனிஷ்கா மற்றும் ஆராத்ரிகாவுடன் இருந்த தொடர்பைத் துண்டித்து விட்டிருந்தாள்.

 

அதே சமயம் அந்தக் காரிகாவின் செல்பேசி எண் மற்றும் வீட்டு விலாசத்தை தன்னிடம் தருமாறு கேட்டுக் கொண்டிருந்த கணவனின் செய்கையாலும் ஆராத்ரிகாவிற்கு மன உளைச்சல் உண்டாகி விட்டிருந்தது! 

 

அதனாலேயே இதற்கு மேலும் தனக்கு நேர்ந்த மோசமான சம்பவத்தால் தன் கணவனையும் போட்டுப் படுத்தி எடுக்க விரும்பாமல் தான் அவனிடம் காரிகாவின் கதையைச் சொல்லி முடித்த பிறகு அவனை விட்டுப் பிரிந்து விடுவதாக உறுதியாக கூறியிருந்தாள். 

 

அப்போது அவள் கர்ப்பம் தரித்து விடவும் அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்ததற்குப் பிறகு விவாகரத்திற்கு முன்னெடுப்பதைப் பற்றியும் முடிவெடுத்து வைத்திருந்தாள் ஆராத்ரிகா. 

 

ஆனால் அபூர்வனோ தன் மேலிருக்கும் காதல் மொத்தத்தையும் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டும், தன்னை விட்டுப் பிரிவதில் அவனுக்குக் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்பதை வெளிப்படையாகவும் காட்டிக் கொண்டும், தனக்கு இருக்கும் பிரச்சினை என்னவென்று தெரிந்து கொள்வதற்காக செய்த முயற்சிகளையும் அறிந்து கொண்ட பின்னர் அவனிடம் அனைத்து உண்மைகளையும் கூற முடிவெடுத்து இருந்தவளுக்கு அவனும், தனது தோழிகள் இருவரும் தனக்குத் தற்போது அளித்த அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டதையும் அனைவரின் முன்னிலையிலும் போட்டுடைத்து விட்டு, 

 

அவர்கள் மூவரையும் தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்தியதற்காகவும், படுத்தி எடுத்ததற்காகவும் தன் கணவனிடமும், தனது தோழிகளான நிஹாரிகா மற்றும் கனிஷ்காவிடமும்,”இதுக்கு எல்லாம் நான் ஒருத்தி மட்டும் தான் காரணம்! அதனால் நீங்க மூனு பேரும் என்னை மன்னிச்சிருங்க!”என மனதார மன்னிப்புக் கோரினாள் ஆராத்ரிகா. 

 

“அதெல்லாம் ஓன்னும் வேண்டாம்! அது தான் எல்லா பிரச்சினைகளும் முடிஞ்சுதே! நாங்க இனிமேல் உங்க வீட்டுக்கு வரலாம் தானே? அதுக்கு எதுவும் தடை இருக்கா?”என்று விறைப்புடன் கேட்டாள் நிஹாரிகா. 

 

“ஹேய்! நீங்க எப்போ வேணும்னாலும் எங்க வீட்டுக்கு வரலாம்டி!”எனத் தோழிகள் இருவரிடமும் கூறி விட்டு, 

 

“ஓகே டி. நாங்க வந்து ரொம்ப நோரமாச்சு! அடுத்த தடவை உன் ஹஸ்பண்ட், குழந்தை அப்பறம் உன் மாமியாரும் வீட்டில் இருக்கிறப்போ சொல்லு நாங்க அப்போ வர்றோம்!”என்று கனிஷ்காவிடம் கூறி விட்டு, 

 

“நாங்க உங்க வீட்டுக்கும் கண்டிப்பாக ஒருநாள் வருவோம் டி”என்று நிஹாரிகாவிடமும் சொல்லி அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்து காரில் ஏறி உட்கார்ந்தார்கள் கணவனும், மனைவியும். 

 

இப்போது தனக்குள் இருந்த அனைத்துப் பயங்களும், பதட்டங்களும் காணாமல் போயிருக்க, 

 

“ஏங்க! நாம இதையெல்லாம் அத்தை, மாமாகிட்டே சொல்லிடலாமா? அவங்க கிட்ட இந்த விஷயத்தை மறைக்கிறதுக்கு ஒரு மாதிரி இருக்குங்க”என்றிருந்தாள் ஆராத்ரிகா.

 

“அதெல்லாம் அவங்க கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்மா. நமக்குள்ளே நடந்தது நமக்குள்ளேயே இருந்துக்கட்டும். அதைப் போய் அப்பா, அம்மா கிட்டே சொல்லி அவங்களை வருத்தப்பட வைக்க வேண்டாம் ஆரா. அதே மாதிரி நான் இதைக் கனிஷ்கா அப்பறம் நிஹாரிகா கிட்டேயும் சொல்லிடுவேன்! அவங்க மூலமாகவும் யாருக்கும் இந்த விஷயம் தெரிஞ்சிடக் கூடாது! இதை இப்படியே விட்றலாம்! நாம இனிமேல் நமக்குப் பிறக்கப் போறக் குழந்தை மேல் மட்டும் நம்மளோட கவனத்தை வைப்போம்! ஆனால் ஓன்னு இனிமேல் நான் உனக்காக எப்பவும் இருப்பேன்! என்ன விஷயமாக இருந்தாலும் அதை நீ எங்கிட்டே தான் முதலில் சொல்லனும்!”என்று அவளுக்கு வலியுறுத்தி விட்டுத் தங்களது வீட்டை நோக்கிக் காரை இயக்கினான் அபூர்வன்.

 

அவனைத் தன் கண்களில் ஆனந்தக் கண்ணீரை நிரப்பிக் கொண்டு ரசித்தவளோ,”நீங்க என்னோட அபூர்வமானவர்!”என அவனிடம் காதலுடன் மொழிந்து விட்டு அவனது கன்னத்தில் தனது இதழை அழுந்தப் பதித்து விலகிக் கொண்டாள் ஆராத்ரிகா. 

 

அதில் தனது முகத்தில் வெளிப்பட்ட வெட்கப் புன்னகையுடன் அவளைப் பார்த்துக் குறுஞ்சிரிப்பை உதிர்த்தான் அவளது கணவன். 

 

—————————————-

 

“இப்போ சொல்லுங்க டாக்டர்! இந்தக் கதை எப்படி இருக்கு?”என்று தனக்கு எதிரில் அமர்ந்திருக்கும் மனநல மருத்துவரிடம் ஆர்வமாக கேட்டான் அபூர்வன்.

 

ஆம்! அவனது பெயர் அபூர்வன் தான்! 

 

அவன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதில் தனது இடத்தையும், தடத்தையும் பலமாகப் பதித்து விட வேண்டும் என்றக் குறிக்கோளுடன் இருக்கிறான்.

 

அவன் பல தயாரிப்பாளர்களிடம் தனது கதைகளைச் சொல்லி அலுத்து மனம் நொந்து போய்க் கடைசியில் அந்த அழுத்தம் தாங்க முடியாமல் சில நாட்களுக்கு முன்பு தான் இந்த மனநல மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வந்தான் அபூர்வன். 

 

அவனிடம்,”அப்போ நீங்க ஒன்னுப் பண்ணுங்க! உங்க கிட்டே இருக்கிற நல்ல கதைகளை ஒவ்வொரு கவுன்சிலிங் அன்னைக்கும் எங்கிட்டே சொல்லுங்க. அதில் எனக்குப் பெஸ்ட் ஆகத் தோனுற கதை ஒன்னை நான் செலக்ட் பண்ணி அதை நானே என் செலவில் புரொடியூஸ் பண்ணி ரிலீஸ் பண்றேன்!”என்று அவனிடம் கூறினார் அந்த மருத்துவர் கனிஷ்கா. 

 

அதைக் கேட்டதுமே,“உண்மையாகவா மேம்?”என்றவனிடம், 

 

“ஆமாம். ஆனால் நான் சொன்ன அந்தக் கண்டிஷனை நல்லா ஞாபகம் வச்சுக்கிட்டு நல்ல, பெஸ்ட் ஆனக் கதையாகச் சொல்லனும்! அப்போ தான் நானும் உங்க மேலே நம்பிக்கை வச்சு அதைப் புரொடியூஸ் பண்ண முடியும்!”என்று அவனிடம் கறாராக உரைத்து விட்டிருக்க, 

 

“நீங்க இதை உங்க வாய் வார்த்தையாகச் சொன்னதே போதும்! நான் உங்க கிட்ட என் மனதில் யோசிச்சு வச்சிருக்கிற ஒவ்வொரு கதையையும் சொல்றேன்! நீங்க அதில் எது பெஸ்ட்ன்னுச சொல்லுங்க. அதுவே எனக்குப் போதும்!”என்றிருந்தான் அபூர்வன். 

 

அப்படி சொன்னக் கதைகளில் ஒன்று தான் இந்தக்,’காந்தையவளின் அபூர்வன்’ என்றக் கதையாகும்! 

 

அதைப் பற்றிய அவளது கருத்துக்களைத் தான் இப்போது கேட்டிருக்க, 

 

அதற்கு அவளும்,”கதையெல்லாம் நல்லா தான் இருந்துச்சு. ஆனால் இந்த ஆராத்ரிகா ஏன் ஈஸியாகத் தீர்வுக் கண்டுபிடிச்சு சரி பண்ண வேண்டியதை இப்படி பண்ணிக் காம்ப்ளிகேட் செஞ்சா? அதுவும் அவளோட ஃப்ரண்ட்ஸ் அவ்வளவு தூரம் அவ அதைக் கேட்கவே இல்லையே? அது ஏன்?”எனத் தனது சந்தேகத்தை அவனிடம் வினவி இருந்தாள் கனிஷ்கா. 

 

அதற்கு அவனோ,”அவ தனக்கு நடந்த அந்தக் கொடுமையைத் தன்னோட புருஷன் கிட்டே தனக்குத் தான் அது நடந்ததுன்றதைச் சொல்றதுக்கு ரொம்ப சங்கடப்பட்டாள். அதனால் தான் காரிகான்றக் கேரக்டரை உருவாக்கி அவளுக்கு நடந்தா மாதிரிப் புருஷன் கிட்டே கதையாகச் சொன்னாள் மேம்”எனப் பதிலளிக்க, 

 

“இதில் வர்ற எல்லா கேரக்டர்ஸூமே உங்களோட கற்பனையா?”என்றதும், 

 

“ஆமாம் மேம். உங்களோட கேரக்டர் மட்டும் தான் உண்மை. அதே மாதிரி என்னேட கேரக்டரும் எதிர்காலத்தில் இந்தக் கதையில் வர்ற ஹீரோ மாதிரியானதாகத் தான் இருக்கும்”என உறுதியாக கூறியிருந்தான் அபூர்வன். 

 

“ம்ஹ்ம். இந்தக் கதைக் கொஞ்சம் ஓகே தான். அதுவும் இதில் நிறைய உளவியல் ரீதியான விஷயங்கள் இருக்கிறதால் இதை நான் பெஸ்ட்ன்னுச் செலக்ட் பண்றேன்! இன்னும் ஒரு மாசத்துக்கு நான் உங்களுக்கு மாத்திரைகள் எழுதி தர்றேன். அது முடிஞ்சதும் என்னை வந்து பாருங்க”எனக் கூறவும், 

 

உடனே அவரிடம் விடைபெற்றுக் கொண்டு அறையிலிருந்து வெளியே வந்த அபூர்வனுக்கோ அங்கே நாற்காலியில் காத்திருந்த ஒரு பெண்ணைக் காண நேர்ந்தது. 

 

அவளைச் சில கணங்கள் மட்டும் பார்த்து விட்டு அவளிடமிருந்து தனது பார்வையைத் திருப்பிக் கொண்டு மாத்திரைகளைப் பெறுவதற்காக காத்திருந்தான். 

 

அப்போது அந்த மனநல மருத்துவர் கனிஷ்காவின் உதவியாளரோ உள்ளே சென்று சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்து,”இங்கே யாரு மிஸ். ஆராத்ரிகா?”என விசாரித்தார். 

 

உடனே அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த பெண்ணோ,”அது நான் தான் சிஸ்டர்”எனப் பதிலளிக்கவும், 

 

அதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்து அவளைத் திரும்பிப் பார்த்த அபூர்வனைக் கண்டும், காணாமல் மருத்துவரின் அறைக்குள் நுழைந்தாள் ஆராத்ரிகா. 

 

அவளது பெயரை அறிந்ததும் தனது இதழ்களில் விரிவான புன்னகையுடன் அவளை ஏறிட்டுப் பார்த்து,”சொல்லுங்க மிஸ். ஆராத்ரிகா! உங்களுக்கு நான் எந்த விதத்தில் உதவி செய்யனும்! எங்கிட்டே நீங்க எந்த விஷயத்தைப் பத்தி ஷேர் செய்ய வந்திருக்கீங்க?”என்று கனிவுடன் கேட்டிருந்தார் மருத்துவர். 

 

அதில் கொஞ்சம் தடுமாறிப் போய் அங்கேயிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து அதிலிருந்த நீரைப் பருகித் தன்னைச் சமன்படுத்திக் கொண்டு,”நான் காலேஜ் படிச்ச டைமில் எங்கிட்டே ஒரு பையன் மிஸ்பிஹேவ் பண்ணிட்டான் மேம்! அதனால் என் உடம்பில் நிறைய காயங்கள் உண்டாகிடுச்சு! அதுவும் முக்கியமாக என்னோட முதுகுப் பகுதியில் ஒரு ஆழமான காயம் ஏற்பட்ருச்சு!”என்று சிறிது நேரத்திற்கு முன்புத் தன் கதையின் நாயகிக்கு நடந்த மோசமான சம்பவத்தைப் பற்றித் தன்னிடம் கூறிய அபூர்வன் சொன்ன அதே கதையை இவள் இப்போது தன்னிடம் கூறுவதைக் கண்டுப் பேச்சற்றுப் போய்ச் சில நிமிடங்களிலேயே தன்னைச் சமநிலைப்படுத்திக் கொண்டு, 

 

அவளுக்குச் சில அறிவுரைகளை அனுப்பி வைத்து விட்டு அடுத்த மாதம் தன்னை வந்து பார்க்குமாறு அபூர்வனிடம் கூறியதை அப்படியே அவளிடம் தெரிவித்து அவனுக்குக் கொடுத்த அதே மாத்திரைகளை எழுதிக் கொடுத்து அனுப்பி வைத்தாள் கனிஷ்கா. 

 

அதே சமயம், தனக்கான மாத்திரைகளை வாங்கிக் கொண்டு ஆராத்ரிகா உள்ளேயிருந்து வெளியே வரும் வரை அங்கேயே காத்திருந்த அவளது தரிசனம் கிட்டியதும் அவளைப் பார்த்துச் சிநேகமாகப் புன்னகைத்தான் அபூர்வன். 

 

ஆனால் அவனது பார்வையையும், புன்னகையையும் கண்டு கொள்ளாமல் அவனைக் கடந்து செல்லும் போது அவளது கைப்பேசி ஒலிக்கவும் அதை எடுத்துப் பார்த்து விட்டுக் காதில் வைத்து, 

 

“ஹலோ ரிகா! நீ சொன்ன டாக்டரைப் பார்த்துட்டேன்! ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பிட்டேன். என் ஸ்கூட்டியிலேயே ஹாஸ்டலுக்குப் போயிட்றேன்! நீ ஒன்னும் பர்மிஷன் போட்டுட்டு எல்லாம் வர வேண்டாம். அதே மாதிரி இந்த டாக்டர் கிட்டே பேசிட்டு வந்ததுக்கு அப்பறம் என் மனசு ரொம்ப இலேசான மாதிரி ஃபீல் பண்றேன்!”என்று பேசிக் கொண்டே அங்கேயிருந்து வெளியேறி இருந்தாள் ஆராத்ரிகா. 

 

அவள் செல்லும் வரைப் பார்த்திருந்து விட்டு,’என்ன இந்தப் பொண்ணோட பேர் நம்மளோட கதையில் வர்ற ஹீரோயினோடது மாதிரியே இருக்கே! ஒருவேளை அவளுக்கு நடந்த மாதிரியான கொடுமை தான் இவளுக்கும் நடந்து இருக்குமோ? இப்போ போய் இவளைப் பத்தின தகவல்களை டாக்டர் கிட்டே கேட்டாலும் அவங்க அதைச் சொல்ல மாட்டாங்க! ஏன்னா, அது அவங்களோட தொழில் தர்மம்! நாமளே தான் இவளை ஃபாலோவ் செஞ்சி இவளைப் பத்தி தெரிஞ்சிக்கனும்!’என்று தன் மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டவனோ, 

 

“அபூர்வா! உன் நிலைமையைப் பார்த்தியா? கதையிலேயும் நாம தான் இவ பின்னாடி அலைய வேண்டியதாக இருந்துச்சு! இப்பவும் நாம தான் இவளை ஃபாலோவ் பண்ணி இவளைப் பத்தி தெரிஞ்சிக்க வேண்டியதாக இருக்கு! எல்லாம் விதி!”எனக் கூறிக் கொண்டே தனது இருசக்கர வாகனத்தில் சிறிது இடைவெளி விட்டு ஆராத்ரிகாவைப் பின் தொடர்ந்து சென்றான் “அந்தக் காந்தையவளின் அபூர்வன்!”

முற்றும் 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்