
கனிஷ்கா மற்றும் நிஹாரிகாவுக்குக் கான்ஃபிரன்ஸ் கால் செய்து தனது காதலன் மற்றும் தங்களுக்குத் திருமணம் நடக்கப் போவதைப் பற்றி அவர்களிடம் தெரிவித்து விட்டு,”நான் என்னோட வாழ்க்கையோட அடுத்தக் கட்டத்துக்குப் போகப் போறேன் டி!”என்று அவர்களிடம் நெகிழ்வாக உரைத்தாள் ஆராத்ரிகா.
அதைக் கேட்டதும் முதலில் ஆச்சரியம் அடைந்து போயினர் தோழிகள் இருவரும்.
“என்னடி சொல்ற? நீ ஏன் இதையெல்லாம் எங்க கிட்ட முன்னாடியே சொல்லாமல் விட்ட?”என அவளிடம் உரிமையாகத் தங்களது கோபத்தைக் காட்டிக் கேட்டார்கள் கனிஷ்கா மற்றும் நிஹாரிகா.
“அதுக்கான காரணத்தை தான் நான் இப்போ உங்க ரெண்டு பேர் கிட்டேயும் சொல்லப் போறேன்”என்றவளோ,
சிறு மௌனத்திற்குப் பிறகு,”நான் இந்தப் புது வாழ்க்கையில் நுழையனும்னா என்னோட பழைய, கடந்த வாழ்க்கையில் இருந்து முழுமையாக வெளியே வந்தாகனும்! அதனால் என்னோட கடந்த கால கல்லூரி வாழ்க்கையைப் பத்தி அவருக்கும், அவரோட குடும்பத்துக்கும் தெரியக் கூடாதுன்னு நினைக்கிறேன்!”என்றவளிடம்,
“ம்ஹ்ம். அதுவும் நல்லது தான்”என்றிருந்தாள் கனிஷ்கா.
“என்னோட கல்யாணத்துக்கு அப்பறம் நான் நம்மக் காலேஜ் சம்பந்தப்பட்ட யார் கூடவும் காண்டாக்ட்டில் இருக்க விரும்பலை! அதனால், நம்மக் காலேஜ் ஃப்ரண்ட்ஸ் யாரையும் என் கல்யாணத்துக்குக் கூப்பிடப் போவதில்லை!”என்றதுமே,
“அப்போ எங்களையும் கூப்பிட மாட்டியா ஆரா?”என்று அவளிடம் ஆதங்கத்துடன் வினவினாள் நிஹாரிகா.
அதில் தயக்கத்துடன்,”ஆமாம்டி”என்று தர்மசங்கடத்துடன் கூறியிருந்தாள் ஆராத்ரிகா.
அதைக் கேட்ட மற்ற இருவரும் அதிர்ந்து போய்,”எங்களை ஏன் உன் கல்யாணத்துக்கு வரக் கூடாதுன்னு சொல்ற? எங்களுக்குத் தான் உன் விஷயத்தைப் பத்தி எல்லாமே தெரியுமே? அதே மாதிரி நாங்க எதுக்காக உன்னைப் பத்தின விஷயங்களை உன் கணவர் கிட்டேயும், அவர் வீட்டாளுங்க கிட்டேயும் சொல்லப் போறோம்? உனக்கு ஒரு நல்லது நடக்குதுன்னா அது எங்களுக்குச் சந்தோஷமான விஷயமாகத் தானே இருக்கும்? எங்களால் உனக்கு என்னப் பிரச்சினை வரப் போகுது சொல்லு?”என அவளிடம் மாறி, மாறிக் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்கள் தோழிகள் இருவரும்.
“அப்படியில்லைடி! உங்களால் எனக்கு எந்தப் பிரச்சினையும் வராதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்! ஆனாலும் உங்க கூடக் காண்டாக்ட்டில் இருந்தால் எனக்கு நடந்த அந்த மோசமான சம்பவத்தோட ஞாபகம் வந்துட்டே இருக்கும்! அதனால் நான் மன அழுத்தத்துக்கு ஆளாகித் தன்னிலை இழந்துடுவோனோன்னுப் பயமாக இருக்கு! அதனால் நீங்க என் கல்யாணத்துக்கு வராதீங்கன்னு நான் உங்ககிட்ட கெஞ்சிக் கேட்டுக்கிறேன்! என் நிலைமையைப் புரிஞ்சுக்கோங்க! ப்ளீஸ்!”என்று அவர்களிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டாள் ஆராத்ரிகா.
அதில் தங்கள் இருவருக்கும் அவள் மீது கோபம், வருத்தம் மற்றும் ஆதங்கம் உண்டானாலும் கூட அவள் இந்தளவிற்கு இறங்கித் தங்களிடம் கெஞ்சவும், அதில் அவர்கள் இருவருக்கும் மிகவும் சங்கடமாகிப் போய் விட்டது.
அதனாலேயே அவளிடம்,”சரி. நீ எங்ககிட்ட இவ்வளவு தூரம் கெஞ்சிக் கேட்டுக்கிட்டதால் நாங்க உன் கல்யாணத்துக்கும் வர மாட்டோம், அதே மாதிரி, நாங்க இதை யார் கிட்டேயும் சொல்லவும் மாட்டோம்!”என்று தோழிக்கு வாக்களித்தனர் நிஹாரிகா மற்றும் கனிஷ்கா.
இதன் காரணமாகத் தான், அவளது கல்லூரித் தோழிகள் யாருமே அபூர்வன் மற்றும் ஆராத்ரிகாவின் திருமணத்திற்கு வரவில்லை!
ஆனால் தனது திருமண வாழ்க்கையில் நுழைந்த பிறகான சில மாதங்களிலேயே ஒரு உதவிக் கேட்பதற்காகத், தானே அவர்களைத் தொடர்பு கொள்ளப் போகிறோம் என்பதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.
இப்போது நிகழ்காலத்தில் விடியற்காலையில் தங்களது உறக்கத்தில் இருந்து கண் விழித்தார்கள் அபூர்வன் மற்றும் ஆராத்ரிகா.
தங்களது பக்கவாட்டில் திரும்பித் தாங்கள் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர் அவ்விருவரும்.
“குட் மார்னிங் ஆராம்மா”என்றக் கணவனிடம்,
“குட் மார்னிங் அபூ”என்றுரைத்தாள் மனைவி.
அன்று முதல் அதற்கு அடுத்து வந்த நாட்களில் எல்லாம் அவர்கள் இருவருக்கும் வண்ணமயமாகவே கழிந்தது.
அதற்கிடையில் தனது தோழி நிஹாரிகாவின் செல்பேசிக்கு விடாமல் அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தாள் கனிஷ்கா.
ஆனால் அவளோ அந்த அழைப்புகளை வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டிருந்தாள்.
அதை தெரிந்து கொண்டாலும் ஆராத்ரிகாவிற்காக அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்ற உறுதியான மனநிலையில் அவளுக்கு அழைப்பு விடுப்பதைக் கைவிடவில்லை கனிஷ்கா.
தான் எத்தனை தடவைகள் அவளது அழைப்பைத் துண்டித்தாலும் கூட இப்படி விடாமல் அழைக்கிறாளே! ஏதாவது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்குமோ என்ற யோசனையில் அந்த அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள் நிஹாரிகா.
அதை அவதானித்து விட்டு,”ஹலோ ரிகா!”என்றவளுக்கு மறுமுனையில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்பதால்,
“ரிகா! லைனில் இருக்க தானே?”என்றிருந்தாள் கனிஷ்கா.
அதற்கு,”ம்ஹ்ம்”என்று மட்டும் பதிலளித்தாள் நிஹாரிகா.
“நீ என்னோட ஃபோன் காலை அட்டெண்ட் செஞ்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ் டி. நான் இப்போ உங்கிட்ட ஒரு உதவி கேக்கிறதுக்காகத் தான் கால் பண்ணேன்”என்றவளோ,
சில நாட்களுக்கு முன்பு, ஆராத்ரிகாவின் கணவன் அபூர்வன் தன்னை வந்து சந்தித்தது, அதற்குப் பிறகுத் தங்களுக்கு இடையே நிகழ்ந்த உரையாடல்கள் அனைத்தையும் அவளிடம் ஒப்புவித்து முடித்திருந்தாள் கனிஷ்கா.
அதைக் கேட்டதும் அதிர்ந்து போய்,”அப்போ அந்த அண்ணாவுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சா?”என்றவளிடம்,
“ஆமாம் டி. அவர் நம்ம கிட்டே ஒரு உதவி கேட்டிருக்கார்”என அது என்ன என்பதையும் அவளிடம் தெரிவிக்க,
அதில் சில நிமிடங்கள் பேச்சற்றுப் போனாள் நிஹாரிகா.
“ரிகா! இந்த ஒரு தடவை நம்ம ஆராவுக்காக இந்த உதவியைப் பண்ணுவோம்! இதுக்கப்புறம் அவளுக்கு எந்தப் பிரச்சினையும் வராது! அதே மாதிரி அபூர்வன் அண்ணாவும் அவளை எப்பவும் கை விடக் கூடாதுன்ற விஷயத்தில் உறுதியாக இருக்கார்! இப்போ மட்டும் நாம அவர் கேட்டதைச் செஞ்சிட்டா போதும்! எல்லாமே சரி ஆகிடும்! அவ இப்போ கர்ப்பமாக வேற இருக்காள். நீ கொஞ்சம் மனசு வை! ப்ளீஸ்!”என்று அவளுக்குப் புரிய வைக்க முயன்றாள் கனிஷ்கா.
அதில் தங்களது தோழியின் நலன் கருதி,”நீயும், அபூர்வன் அண்ணாவும் ஆராவுக்காக இவ்வளவு தூரம் ரிஸ்க் யோசிக்கும் போது நான் அவளோட ஃபர்ஸ்ட் பெஸ்ட் ஃப்ரண்ட்! அப்போ எனக்கு அவ மேலே இன்னும் அதிகமான அக்கறை இருக்கும் தானே? அதனால் நான் என் ஆராவுக்காக இதைச் செய்றேன்! நான் எங்கே, எப்போ, எத்தனை மணிக்கு வரனும்னு மட்டும் எனக்கு மெசேஜ் பண்ணிடு. நான் கண்டிப்பாக வர்றேன்”எனத் தானும் அவளுக்கும், அபூர்வனுக்கும் உதவி செய்ய ஒப்புக் கொண்டு விட்டிருந்தாள்.
அதைக் கேட்டுப் பெருமகிழ்ச்சியும், நிம்மதியும் அடைந்து,”தாங்க்யூ சோ மச் ரிகா! நான் கூடிய சீக்கிரமே உனக்கு அதைப் பத்தின விவரங்களை அனுப்பி வைக்கிறேன்!”என்று அவளிடம் நன்றி தெரிவித்து விட்டு,
“சாரி டி!”என நெகிழ்வுடன் தோழியிடம் மன்னிப்பு வேண்டினாள் கனிஷ்கா.
அதில் சமாதானம் அடைந்தவளோ,”பரவாயில்லை விடு”என்று பெருந்தன்மையுடன் கூறி விடவும்,
அதற்குப் பிறகு இருவரும் தாங்கள் ஒருவரையொருவர் நலம் விசாரித்து விட்டுத் தங்களது குடும்பங்களைப் பற்றிய விவரங்களையும் கலந்துரையாடிய பின்னர் அந்த அழைப்புத் துண்டிக்கப்பட்டு விட்டது.
அதற்கடுத்த நாளில் அபூர்வனுக்கு அழைத்து நிஹாரிகாவுடனான தனது செல்பேசி உரையாடலைப் பற்றி விவரித்தாள் கனிஷ்கா.
உடனே,”அப்படியாம்மா? இதைக் கேட்டதும் தான் எனக்கு ரொம்ப மன நிம்மதியாக இருக்கு! நான் என்னோட ஆராவைக் குணமாக்கிடுவேன்ற நம்பிக்கை வந்துடுச்சு! நான் உங்க ரெண்டு பேருக்கும் நேரிலேயே தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்”என்றவனிடம்,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அண்ணா. நீங்களும், ஆராவும் என் வீட்டுக்கு வந்துடுங்க. நான் அட்ரஸை உங்களுக்கு வாட்சப்பில் அனுப்பி விட்றேன்”என்றிருந்தாள் கனிஷ்கா.
“சரிம்மா”என்றுரைத்து விட்டுத் தன் மனைவியின் மருத்துவ பரிசோதனைக் குறிப்பை எடுத்து அதில் அடுத்தப் பரிசோதனை எப்போது என்பதை அறிந்து கொண்டு அதைக் கனிஷ்காவிற்குக் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து விட்டு அன்றைய தினமே தங்களது சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்தான் அபூர்வன்.
அதற்கு அவளும் சம்மதித்து விட்டு நிஹாரிகாவிற்கும் அந்தத் தகவலைத் தெரிவித்து விட்டு அன்று தனது வீட்டிற்குப் பதினொரு மணியளவில் வருமாறு கேட்டுக் கொண்டாள் கனிஷ்கா,
அதேபோல், தனது மனைவியின் பரிசோதனை நாளிற்காக காத்திருக்க,
அந்த நாளும் வெகு விரைவிலேயே வந்து விடவும் தனத பெற்றோரிடம் சொல்லிக் கொண்டுத் தன் மனைவியை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லும் போது,”நாம செக்கப் போகிற அன்னைக்கு நீ எங்கிட்ட எதையோ சொல்லனும்னு சொன்னியே? அது என்னம்மா? இப்போ சொல்லலாமே?”என்று வாகனத்தைக் கவனமாக இயக்கிக் கொண்டே அவளிடம் வினவினான் அபூர்வன்.
அதற்கு,“நான் அதை நாம செக்கப் போயிட்டுத் திரும்பி வரும் போது உங்ககிட்ட சொல்றேன் அபூ”எனக் கூறி விட்டிருந்தாள் ஆராத்ரிகா.
“சரிம்மா. நானும் உங்கிட்ட சொல்ல நினைச்சதை அப்போவே சொல்றேன்!”என்றுரைத்து விடவும்,
சில நிமிடங்களிலேயே அவர்கள் இருவரும் மருத்துவமனையை அடைந்து இருந்தார்கள்.
அங்கே ஆராத்ரிகாவைப் பரிசோதித்து முடித்து விட்டு,”இந்த தடவை உங்களோட குழந்தை ரொம்பவே ஆரோக்கியமாக இருக்காங்க! அதே மாதிரி உங்களுக்கும் பிரஷர் சீரான அளவில் இருக்கு! அதனால் நான் கொடுத்த மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கோங்க! நான் உங்களுக்குக் கொடுத்த டயட்டையும் ஃபாலோவ் பண்ணுங்க”என்று அவளுக்கு அறிவுரை வழங்கினார் மருத்துவர்.
அதைக் கேட்டவுடன் அந்தக் கணவனும், மனைவியும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து போயினர்.
“ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்”எனக் கூறி விட்டு அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டுப் பரிசோதனைக்கானப் பணத்தைக் கட்டி விட்டு வெளியே வந்தார்கள் இருவரும்.
தங்களது காரில் ஏறி அமர்ந்ததும்,”நான் உன்னை ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போக நினைக்கிறேன்! அதைப் பத்தி ஏன், எதுக்குன்னு எங்கிட்ட எந்தக் கேள்விகளையும் கேட்காமல் என் கூட அந்த இடத்துக்கு வருவியா ஆரா?”எனத் தன் மனைவியிடம் கேட்டான் அபூர்வன்.
“நான் அதைப் பத்தி உங்ககிட்ட எதுவுமே கேட்க மாட்டேன்! நான் உங்க கூட எங்கே வேணும்னாலும் வருவேன்!”என்று அவனுக்கு உறுதி அளித்தாள் ஆராத்ரிகா.
அவளது வார்த்தைகள் கொடுத்த தெம்பு மற்றும் தைரியத்தில் காரைக் கனிஷ்காவின் வீட்டை நோக்கிச் செலுத்த தொடங்கினான் அவளது கணவன்.
அதே சமயத்தில் தானும், தனது மனைவியும் அங்கே வந்து கொண்டிருக்கும் விஷயத்தைக் கனிஷ்காவிற்குக் குறுந்தகவல் அனுப்பி வைத்து விட்டான் அபூர்வன்.
உடனே நிஹாரிகாவிற்கு அழைத்து அவளைக் கிளம்பித் தனது வீட்டிற்கு வருமாறு தகவல் அனுப்பி வைத்து விட்டாள்.
அன்று விடுமுறை தினம் என்பதால் தனக்கு அலுவலக வேலை இருப்பதாகத் தனது கணவன் மற்றும் மாமியாரிடம் கூறி விட்டு அவர்கள் மட்டும் ஊரைச் சுற்றிப் பார்க்கச் செல்லுமாறு அறிவுறுத்தி அன்று காலையிலேயே தனது மகளையும் அவர்களுடன் அனுப்பி வைத்து விட்டிருந்தாள்.
சில சிற்றுண்டிகளைச் செய்து வைத்து விட்டு நிஹாரிகா, ஆராத்ரிகா மற்றும் அபூர்வனின் வரவிற்காக காத்திருக்கலானாள் கனிஷ்கா.
– தொடரும்

