Loading

ஹரிதா அவன் அனுப்பிய குறுஞ்செய்தியைக் கண்டு சிவந்திருக்க, மனமோ ‘நான் உனக்கு வெறும் கைப்பொம்மை தான’ என்று வெகுவாக வலித்தது.

அதில் கோபமும் சேர்ந்து வர, கதவைத் திறந்தவள் “வெளிய போங்க!” என்றாள் காரமாக.

புகழ் “என் பொண்டாட்டி வீட்டுல நான் இருக்கேன். நான் ஏன் போகணும் ஸ்வீட்டி” என்று கண் சிமிட்டியதில்,

அவள் “பொண்டாட்டியா? நானா? எந்த விதத்துல, நான் உங்க பொண்டாட்டியா இருந்தேன்.” என பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க,

அவன் தடுமாறி “உன்னைத் தொட்டு தாலி கட்டிருக்கேன்…” என்றான் அவளைப் பாராமல்.

அவளோ “ஓ! தாலி கட்டிட்டா பொண்டாட்டி ஆகிடலாம் இல்ல. அப்போ இதைக் கழட்டிட்டா, நான் உங்க பொண்டாட்டி இல்லை அப்படித்தான?” எனக் கேட்டு, அவன் அணிவித்த மாங்கல்யத்தில் கையை வைக்க, அவள் கையைப் பிடித்தவன், அவளை அவன் அருகில் இழுத்தான்.

“எந்த விதத்திலடி நீ என் பொண்டாட்டியா இல்ல…? என்னை அன்பா பார்த்துக்கிட்ட, என்னை நிறைய நேரம் நான் சொல்லாமலேயே புரிஞ்சுக்கிட்ட, நான் குடிச்சா அமைதியா அதட்டுன, எனக்கு உடம்பு சரி இல்லைன்னா பதறுன, உனக்குக் கஷ்டமா இருந்தா, இல்ல பயமா இருந்தா என்னை கட்டிப் பிடிச்சுப்ப. அந்தப் பாதுகாப்பை நீ என் கிட்ட உணர்ந்துருக்குற தான? ஒருவேளை நான் உன்கிட்ட புருஷன்ற உரிமைய காட்டிருந்தா, நீ இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க மாட்டியோ?” என்றான் கோபத்துடன்.

அவனையே அமைதியாகப் பார்த்தவள் “ஆமா, எனக்குக் கஷ்டமா இருந்தா உங்களைத் தான் தேடுவேன். ஆனால், உங்களுக்குத் தான் எந்த விதத்துலயும் நான் தேவை இல்ல” என்று ஆற்றாமையுடன் கூறிட, அதில் புகழேந்தி அதிர்ந்தான்.

“நான் பண்ணது தப்பு தான் ரிது. ரொம்ப ரொம்ப தப்பு தான். என்னை நம்பி வந்த உன்னை, நான் தான்  நல்லா பார்த்துருந்துருக்கணும். கோட்டை விட்டது என் தப்பு தான். ஆனால் என்னைக்குமே நான் உன்னை வெறுத்தது இல்ல ஸ்வீட்டி” என்று வாடிய குரலில், அவனைப் புரிய வைக்க முயன்றான்.

“ஆமா வெறுத்ததும் இல்ல, பொண்டாட்டியா நினைச்சதும் இல்ல. உங்க ரூம்ல இருக்குற பொருள் மாதிரி தான நானும். வெறும் பரிதாபத்துல தான என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டீங்க?” என்று ஆற்றாமையுடன் பேசிக் கொண்டே போக,

“நான் அப்படி என்னைக்குமே சொன்னது இல்ல ரிது. உன் அம்மா அப்பா இறந்தப்போ கூட, உனக்காக, நீ பரிதாபப்பட விட்டதே இல்லை” என அழுத்தமாகச் சொன்னதும், அவளுக்கு, கண்ணைக் கரித்தது, அவளின் தாய் தந்தையின் நினைவில்.

அவள் கண்ணிலிருந்து நீர் உருண்டோட, அவன் பதறி “ரிது” என மென்மையாக அழைத்தவன், “சாரி ரிது! இனிமே சத்தியமா நான் உன்னை விடமாட்டேன். எனக்கு நீ வேணும்” என்றான் பாவமாக.

அவள் கண்ணைத் துடைத்துக் கொண்டு,

“சரி புகழ். ஏன் என்னை அவாய்ட் பண்ணீங்க…? என்னைப் பிடிச்சு தான கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. அப்புறம் ஏன் என்னை அவாய்ட் பண்ணீங்க…? இவ்ளோ நாளா நான் இருக்கேனா செத்தேனான்னு கூடத் தெரியாம, இப்போ மட்டும் எதுக்கு என்னைத் தேடி வந்தீங்க? எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொல்லுங்க. இப்போவே நான் உங்க கூட வரேன்.” என்றிட அவன் வாயே திறக்க வில்லை.

“கட்டிப்பிடிப்பீங்க. முத்தம் குடுப்பீங்க. உங்களுக்கு ‘போர்’ அடிக்கும்போது என்னைக் கொஞ்சுவீங்க. ஆனால் என்கிட்ட எதுவுமே ஷேர் பண்ண மாட்டீங்க. நானும் உங்க கிட்ட எதுவுமே கேட்கக் கூடாது. அப்படி தான? இப்ப வரை நான் ஜஸ்ட் உங்க பொழுதுப் போக்குக்குத் தான் தேவைப்படுறேன்… இல்ல?” எனக் கேட்டாள் தவிப்பாக.

புகழோ இறுகிய குரலில் “நீ போய்த் தூங்கு. நான் கிளம்புறேன்.” என்று கூறி விட்டு வெளியில் சென்று விட்டான்.

காரில் ஏறியவன், சீட்டில் சாய்ந்து தலையில் கை வைத்து, கசங்கிய முகத்துடன் அவள் பேசிய வார்த்தைகளை வேதனையுடன் நினைக்க, அப்போது அவனின் செல்பேசி அழைத்தது.

யாரென்று பாராமல் காதில் வைத்தவன், எதிர்முனையில் ரெஜினா குரல் கேட்டதும், “சொல்லு” என்றான்.

“ஹரிய பார்த்தியா? அவள் கிட்ட பேசுனியா?” எனக் கேட்க,

அவன் ‘ம்ம்’ என மட்டும் சொன்னான்.

“டேய் உன்னைத் தான் கேட்குறேன். அவள் கிட்ட நடந்ததை சொன்னியா?” என்று அழுத்தமாகக் கேட்க,

“சொல்றேன் சீக்கிரம்” என்று அமைதியாகக் கூறியவன்,

அவள் மேலும் ஏதோ பேச வரும் முன், “ரொம்ப டைம் ஆச்சு… டேப்லெட் சாப்பிட்டுட்டு தூங்கு ரெஜி. குட் நைட்” என போனை வைத்து விட,

அவள் தான் ‘கடவுளே! இவனை வச்சுக்கிட்டு என்ன தான் பண்றதோ?’ என்று நொந்து போனாள்.

அவன் சென்றதில் வெகுநேரம் அங்கேயே நின்றிருந்த ஹரிதா, மெல்ல உள்ளே சென்று அவளின் தாய் தந்தை புகைப்படத்தை எடுத்து, நெஞ்சில் வைத்தவள், தன் வாழ்வை உலுக்கிய சம்பவத்தை வலியுடன் நினைத்தாள்.

புகழ் பெண் பார்த்து விட்டுப் போனதற்கு பிறகு, மீண்டும் சிந்தியாவின் புகுந்த வீட்டு உறவுகள் கந்தனிடம் பெண் கேட்க, அவரோ ஒரு பெண்ணைக் கொடுத்து விட்டு, அவர்கள் அடித்த கொடுமை எல்லாம் போதும் என்றெண்ணி சமாளித்துக் கொண்டே வந்தார்.

இதில் சிந்தியாவும் தன்னை விட 10 வயது சிறியவளான ஹரிதாவின் மேல் எப்போதும் ஒரு ஆதிக்கத்துடனே இருப்பாள்.

இதில் அவளும் ‘அதெப்படி என் வீட்டில் கேட்டும் நீங்கள் பெண் தராமல் போகலாம்’ என்று அவளின் பெற்றோரிடம் சண்டையிட, ஹரிதா இதை எல்லாம் பெரிதாகக் கண்டு கொள்ளவே இல்லை.

ஒரு நாள் இரவு, சேரில் அமர்ந்திருந்த கந்தனுக்கு கால் பிடித்து விட்டுக் கொண்டிருந்த ஹரிதா, “அப்பா எதைப் பத்தியும் யோசிச்சு வருத்தப்படாதீங்க… எது நடக்கணும்னு இருக்கோ, அது நடந்தே தீரும்” என்று சிறு சிரிப்புடன் சொன்னவளைப் பாசத்துடன் பார்த்தவர்,

“உன்னோட இந்தச் சின்ன சிரிப்பைப் பார்த்தாலே போதும். எவ்ளோ பெரிய பிரச்சனையா இருந்தாலும் கால் தூசி மாதிரி ஆகிடும்” என்று அவள் தலையை வருடினார்.

வள்ளி, “அவள் எதைத் தான் பெருசா எடுத்துக்குறா? அந்தப் பையன் இவளை வேணாம்னு சொல்றான். அதுக்கும் இவள் சிரிச்சிக்கிட்டு தான் நிக்கிறா…” என்று பொய்யாய் முறைக்க,

அவள் அப்போதும் புகழை நினைத்துப் புன்னகைத்து, “மா, அவர் அவரோட விருப்பதைச் சொன்னாரு. யாரு இப்படி வந்து தன்னோட விருப்பத்தை மனசு கஷ்டப்படாத மாதிரி சொல்றா, சொல்லு?” என்றதும்,

கந்தன் அப்போது தான் நினைவு வந்தவராக “அந்தப் பையனோட அப்பா தான் ரொம்ப வருத்தப்பட்டாரு ஹரிம்மா… அந்தப் பையனுக்கு உன்னைப் பிடிக்கலைன்னுலாம் இல்லையாம். அவரு ஏதோ பெரிய ஹோட்டல் வச்சு நடத்துறாராம். அங்க ஏதோ வேலை நடந்துட்டு  இருக்குதாம். புதுசா ஒரு பிரான்ச் ஆரம்பிக்கிறதுனால, அந்த வேலையைப் பார்த்துட்டு இருக்காராம். அவரு ஒரு விஷயத்துல நுழைஞ்சுட்டா, அதை முடிக்கிற வரை வேற எதைப் பத்தியும் யோசிக்க மாட்டாராம். கொஞ்சம் பிடிவாதம் போல… நான் செய்றதை தான் செய்வேன்னு. அதைத் தான் மணி சொல்லி வருத்தப்பட்டு, டெய்லி போன் பண்ணிப் பேசுவாரு. நாங்க ஸ்நேகிதர்களாவே ஆகிட்டோம்…” என்றார் பெருமையாக.

அவளோ “பார்றா புது ஃப்ரெண்டா? என்கிட்ட சொல்லவே இல்ல…” என்று முறைத்தாள்.

அவர் தான் “திடீர்னு பேசி ஸ்நேகிதர்களாகிட்டோம் மா” என்றிட,

“இருந்தாலும் நீங்க எப்படி என்கிட்டே சொல்லாம இருக்கலாம்” என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள் ஹரிதா.

அதிலிருந்து, அவளைச் சமாதானம் செய்வதற்குத் தான், அவருக்குப் போதும் போதும் என்றானது.

ஏனோ அவளுக்கு மிகவும் பிடித்தவர்கள்,நெருக்கமானவர்கள் சிறு  விஷயத்தையும் அவளிடம் மறைக்காமல் கூற வேண்டும் என நினைப்பாள். அதுவும் அவளின் தாய் தந்தையிடம் மட்டுமே அவளின் இக்குணம் வெளிப்படும். அதுவரையில் தோழிகளிடம் கூட உரிமை எடுத்துப் பேசமாட்டாள்.

பின் கந்தன், “உண்மையிலேயே உனக்கு வருத்தம் இல்லைலமா, அந்தப் பையன் பேசுனதுல” எனக் கேட்க,

அவள் “நிஜமா இல்லப்பா” என்றாள்.

உண்மையிலேயே அவளுக்கு வருத்தம் எல்லாம் இல்லை. ஆனால் அவன்  நடவடிக்கைகள் எல்லாம் ரசிக்க வைத்திருந்தது.

வாழ்வில் எத்தனையோ பேரைப் பார்த்திருப்போம். அதில் ஒரு சிலர் மட்டும், நம் மனதில் மென்சாரலாகத் தங்கி விடுவார்கள். அதைப் போலவே அவனும் என்று எண்ணியவள், அவனை மறந்தே இருந்தாள்.

பின் சிறிது நாளில், அவளுக்கு வேறொரு இடத்தில் சம்பந்தம் பேசிய கந்தன், அது மனநிறைவாக இருக்க, ஒரு நாள் மாப்பிள்ளை வீட்டைப் பார்ப்பதற்காக அழைப்பு விடுத்திருந்தனர்.

சிந்தியாவோ, என்னால் வர முடியாது என்று பிடிவாதமாக இருக்க, கந்தனும் வள்ளியும் மட்டுமே சென்றனர் அருகில் இருந்த ஊருக்கு.

ஆனால் திரும்பி வரும்போது ஏற்பட்ட விபத்தில், உயிரற்ற பொருளாகத் தான் வந்தனர். இந்நாள் வரை, தனக்கு அரணாக இருந்த தாய், தந்தை சட்டெனத் தன்னை விட்டுப் போனது, ஹரியை வெகுவாகப் பாதிக்க, அவர்களின் நினைவிலிருந்து வெளிவர முடியாமல் தவித்துப் போனாள்.

 

இதில், சிந்தியா வேறு அவளின் புகுந்த வீட்டு நச்சரிப்பு தாங்க இயலாமல், அவர்கள் இறந்த மூன்று நாளில், ஹரிதாவிடம் கூடச் சொல்லாது, அவளின் கொழுந்தனை திருமணம் செய்து வைக்க, ஏற்பாடு செய்ய, அவள் அதிர்ந்து விட்டாள்.

“அக்கா, இப்போ எதுக்கு இந்த அவசர கல்யாணம்…?” என வினவ,

சிந்தியா “இங்க பாரு ஹரி. வயசுப் பொண்ணை தனியா விட்டுட்டு, நான் என் வீட்டுக்குப் போக முடியாது. ஊருல எல்லாரும் தப்பா பேசுவாங்க. ஏற்கனவே, உன் நேரம் சரி இல்ல. அதான், இப்படி அபசகுனமா நடந்துருச்சுன்னு, உனக்குப் பார்த்த மாப்பிள்ளை ஓடிப் போய்ட்டான்” என்றதும்,

அவள் கோபமாகி, “இறந்தது நம்ம அம்மா அப்பா. இழந்தது நம்ம தான். அப்போ அவனை நிச்சயம் பண்ணுனதால தான், இப்படி ஆச்சுன்னு நான் சொல்லலாமே?” என்றாள் காரமாக.

சிந்தியா “இந்த வீராப்பு பேச்சை எல்லாம் மூட்டைக் கட்டி வச்சுட்டு. கல்யாணத்துக்கு ரெடி ஆகு” என்று கட்டளை இட, ஹரிதாவிற்கு மனமெங்கும் பயம் சூழ்ந்தது.

என்ன செய்வதென்று அறியாமல் இருந்தபோது தான், இவர்களின் இறப்பை கேள்விப்பட்டு மணிகண்டன் அங்கு வந்தார்.

‘சில நாட்களே என்றாலும், அந்த மனிதரை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அன்று காலையில் கூட மாப்பிள்ளை பார்க்கப் போவதாக மகிழ்வுடன் சொல்லிவிட்டு தான் சென்றார். இப்போது…’ எனத் துக்கம் நெஞ்சை அடைக்க, ஹரிதாவைப் பார்த்தவர் அங்கு நடப்பதை அறிந்து திகைத்தார்.

‘என்ன பெண் இவள்…? தங்கை வாழ்க்கையைப் பற்றி அக்கறை இல்லாமல் இப்படி செய்கிறாளே’ என்று எண்ணியவர்,

புகழுக்கு போன் செய்ய அவன் தான் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தான். அதில் ‘இவன் எங்கே போய் தொலைஞ்சான்’ என்று எண்ணிக் கொண்டு இருக்க,

ஹரிதாவே தயங்கியபடி அவரிடம் வந்து “அங்கிள் அப்பா உங்களைப் பத்தி நிறைய சொல்லிருக்காங்க. என் அப்பாவோட ஃப்ரெண்டுன்றதுனால இந்த ஹெல்ப் கேட்குறேன், பண்றீங்களா ப்ளீஸ்…” என்றிட,

அவர் திகைத்து, “என்னமா நீ? நான் என்ன பண்ணனும்னு சொல்லு, பண்றேன்.” என்றதும்,

அவள் “அங்கிள், என்னை எப்படியாவது இங்க இருந்து ஏதாவது பொய் சொல்லிக் கூட்டிட்டு போயிடுறீங்களா…? இங்க இருந்தா கண்டிப்பா எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சுருவாங்க. ப்ளீஸ் அங்கிள். நான் சென்னை போனதும், ஏதாவது ஹாஸ்டல்ல தங்கிக்கிறேன். அங்க எனக்கு வேலை கூடக் கிடைச்சது. அப்பா தான் கல்யாணம் பண்ணிட்டு வேலைக்குப் போய்க்கலாம்னு சொன்னதால, நான் அதை அப்படியே விட்டுட்டேன்.” என்றாள் கண்ணீரை அடக்கிக் கொண்டு.

“நானே உன்னை இந்தக் கல்யாணத்தை பண்ணிக்காதன்னு எப்படி சொல்றதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். நீயே சொல்லிட்ட. உனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலை தான. நான் பார்த்துக்கிறேன்.” என்றவர், அங்கிருப்பவர்களிடம் என்ன சொன்னாரோ, அது ஹரிதாவிற்கே தெரியாது.

ஆனால், அடுத்த இரு நாளில், அவளைக் கூட்டிக் கொண்டு சென்னை வந்து விட்டார். சிந்தியா அவளை முறைத்துப் பார்த்தும், திட்டிப் பார்த்தும், அவள் அதனைக் காதிலேயே வாங்கவில்லை.

ஆனால், அவளை விடுதியில் தங்க சம்மதிக்கவே இல்லை, மணிகண்டன்.

“இந்த நேரத்தில என்னால உன்னைத் தனியா விட முடியாது மா. நீ நம்ம வீட்டுலயே” என்றதும்,

“சாரி அங்கிள், நான் என்னைப் பார்த்துப்பேன்” என்றாள் உறுதியாக.

“சரி நீ வீட்டுல தங்க வேண்டாம். வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற அவுட் ஹௌஸ்ல தங்கிக்கோ” என்றார் பிடிவாதமாக.

அவரை எதிர்த்தும் பேச முடியாமல் சற்று சிந்தித்தவள் “சரி ஆனால், நான் வாடகை குடுத்து தான் இருப்பேன்.” என்றதும் அவர் அவளை முறைத்தார்.

அவளோ “புரிஞ்சுக்கோங்க அங்கிள். நான் யாருக்கும் பாரமா பரிதாபப் பார்வையோட இருக்குறதுல எனக்கு விருப்பம் இல்ல. நீங்க பணம் வாங்கிக்கிட்டா, நான் அவுட் ஹௌஸ்ல இருக்கேன்.” என்று முடிவாகச் சொல்லி விட,

அந்த நேரத்திலும் அவளின் நிமிர்வையும், அவளின் சுய மரியாதையையும் கண்டு வியந்தவர், வேறு வழியில்லாது சம்மதித்தார்.

இப்படியாக அவள் அங்கு வந்து ஒரு வாரம் ஓடி விட்டது.

ஒரு வாரம் கழித்து, வீட்டிற்கு வந்த புகழ் உறங்காமல் இருக்கும் தந்தையைப் பார்த்து, “இன்னும் தூங்கலையாப்பா?” எனக் கேட்டான்.

அவரோ கடுப்பாக “எத்தனை தடவை உனக்கு போன் பண்றது. எங்கே போய்த் தொலைஞ்ச நீ? எத்தனை தடவை சொல்லிருக்கேன் எங்கேயாவது போறதா இருந்தா சொல்லிட்டுப் போன்னு…” எனப் பொரிந்தார்.

அவன் புரியாமல் “என்னாச்சு பா ஏதாவது பிராப்ளமா” எனக் கேட்க,

அவர், “ப்ச் நீ எங்கே போன, அதைச் சொல்லு” என்றதும், 

“அது… ரெஜி கூட ஹைதராபாத் போயிருந்தேன். அவளை அங்க விட்டுட்டு வந்தேன்.” என்றவனிடம், 

“எதுக்குடா அவள் அங்கே போனா? அங்கு அவளுக்கு யாரையும் தெரியாதே” என்றான் குழப்பமாக.

புகழ் சற்று திணறி “அது, அங்க.. அவள் வேலை விஷயமா ஏதோ ப்ராஜெக்ட் இருக்காம். அதான் போயிருக்கா” என்றவன், பிரிட்ஜை திறந்து தண்ணீரைக்  குடிக்க, மணிகண்டன் ஹரிதாவின் பெற்றோர் இறந்ததை பற்றிக் கூறினார்.

அவனோ அவர் பேசுவதை காதில் வாங்காமல், வேறு ஏதோ சிந்தித்துக் கொண்டு ‘ஓ’ என்று மட்டும் சொல்ல,

மணிகண்டன் அழுத்தமாக “புகழ், நான் பேசுறதை கவனி. உன் வேலை விஷயத்தைப் பத்தி, உன் ரூம்ல போய் யோசிச்சுக்கோ”  என்றிட,

அவன் “ஸ்ஸ்! சாரி டாடி, சொல்லுங்க! என்ன சொன்னீங்க?” என்று மீண்டும் கேட்க,

அவர் ‘இவன் எப்போ தான் மாறப்போறானோ?’ என நினைத்து நடந்ததைச் சொன்னதும்,

“காட் இவ்ளோ விஷயம் நடந்துருச்சா?” என்று அதிர்ந்தான்.

பின், “அவளை ஏன் ப்பா அவுட் ஹௌஸ்ல தங்க வச்சீங்க?”

“ஏன்? அதுல உனக்கு என்ன பிரச்சனை?” என ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு கேட்டார். 

“ப்ச் பா, ஊர்ல நிறைய பேர் அவளுக்குத் துணைக்கு இருந்துருப்பாங்க. இங்க அவளை இப்படி தனியா அவுட் ஹௌஸ்ல இருக்க வச்சுருக்கீங்க. அவள், சொன்ன மாதிரி ஹாஸ்டல்னா கூட, அங்க பொண்ணுங்க பேச்சு துணைக்கு இருப்பாங்க. இல்லைன்னா, அவளை இங்க கூடத் தங்க வச்சுருக்கலாம். எதுக்கு தனியா விட்டீங்க?” என்றிட,

அவரும் “அட ஆமா, இதை நான் யோசிக்கவே இல்லை” என்றார் சிந்தனையுடன்.

அதில் சோம்பலாக முறுவலித்தவன், “பரவாயில்ல பா. எதுக்கும் நாளைக்கு அவளுக்குத் துணைக்கு நம்ம வீட்ல வேலை பார்க்குற பொன்னியை அனுப்பி வைங்க” என்றவன் அறைக்குள் சென்றிட,

‘இந்த அக்கறை எல்லாம் நல்லாத்தான் இருக்கு. நீ கல்யாணம் மட்டும் பண்ணிருந்தா இந்நேரம் அவள் மருமகளாவே இங்க வந்துருந்திருப்பா’ எனப் புலம்பியவர் சென்று உறங்கி விட்டார்.

மறுநாள், ஞாயிற்றுக்கிழமையாக இருக்க, தாமதமாக எழுந்த புகழ், சோம்பல் முறித்து மணியைப் பார்க்க, அது 11 எனக் காட்டியது. அன்று ‘பந்த்’ ஆக இருந்ததில், வேலையும் இல்லாததால் சிறிது நேரம் திரிந்து கொண்டு  வந்தவன், அப்போது தான் ஹரிதாவை பார்த்து விட்டு வரலாம் என்று அவுட் ஹௌஸிற்குச் சென்றான்.

கதவை மெல்ல தட்டிட, உள்ளிருந்து எந்த சத்தமும் வராமல் இருந்ததில், லேசாகக் கதவைத் திறந்தவன், அது பூட்டப்படாமல் இருக்கவும், “எக்ஸ்கியூஸ் மீ” என அழைத்தான். 

அப்போதும் பதில் வரமால் போக, சற்று உள்ளே வந்தவன், அங்கு சோபாவில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஹரிதாவை கண்டு, ‘இவள் ஏன் இங்க தூங்குறா?’ என எண்ணிக் கொண்டு அவள் அருகில் செல்ல, அவளோ அவன் அன்று பார்த்ததை விட, முகம் கறுத்து வாடிப் போயிருந்தாள்.

அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும், ‘என்னைப் பரிதாமாகப் பார்க்க வேண்டாம்’ என்று மணிகண்டனிடம் சொன்னதில், சிறிதாய் சிரித்துக் கொண்டவன்,

அவள் கையில் வைத்திருந்த நோட்டையும் பேனாவையும் மெதுவாக எடுத்தான். அப்போதும் அவள் நல்ல உறக்கத்தில் தான் இருந்தாள்.

பின், அந்த நோட்டை திருப்பிப் பார்த்தவன், அதில் எழுதியிருந்ததைக் கண்டு அதிர்ந்து விட்டான்.

என்னை மன்னிச்சுடு. நான் உன்னை விட்டுப் போகப் போறேன். உன்னை நான் எவ்ளோ காதலிச்சேன்னு உனக்குத் தெரியாது. என் மனசு முழுக்க எந்தக் கஷ்டம் இருந்தாலும், நான் உன்னை மட்டும் தான் நினைச்சுப்பேன். உன் ஆறுதல் மட்டும் தான் எனக்கு நிம்மதியே. ஆனால் அது எனக்கு சொந்தம் இல்லைன்னு ஆகும் போது, நான் ஏன் உயிரோட இருக்கணும். நான் போறேன்.” என முடித்திருக்க அவன் அரண்டு,

‘ஐயோ இந்தப் பொண்ணு என்ன பண்ணி வச்சுருக்கா…’ என்று வேகமாக ஆம்புலன்ஸுக்கு எல்லாம் போன் செய்து விட்டான்.

பின், “ஹே ஸ்வீட்டி, என்னைப் பாரு! என்ன பண்ணித் தொலைச்ச, ஸ்வீட்டி!” என்று கன்னத்தைத் தட்ட, சிறிது நேரத்தில் கண்ணைத் திறக்க முடியாமல் திறந்தவள், கண்ணெல்லாம் சிவந்திருக்க, அவனை மிக அருகில் பார்த்துத் திகைத்தாள்.

அவனோ “ஹே என்ன பண்ண நீ…? அறிவிருக்கா? வா! சீக்கிரம் ஹாஸ்பிடல் போலாம். இப்போ ஆம்புலன்ஸ் வந்துடும்.” என்று அவளை  எழுப்ப, அவள் தான் பேந்த பேந்த விழித்தாள்.

“என்ன ஆச்சு? எதுக்கு ஆம்புலன்ஸ்?” என்று புரியாமல் கேட்டவளிடம்,

அந்த நோட்டைக் காட்டியவன், “என்ன இது, ஹான்? டெத் நோட் ஆ? என்னத்தை சாப்பிட்டுத் தொலைச்ச… பாய்சன், இல்ல எலி மருந்து” என்று முகத்தை அஷ்டகோணலாக்கிக் கேட்க,

அவளோ “ஹா ஹா ஹா ஹா” என விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

புகழ் கடுப்பாகி, “இப்போ எதுக்கு சிரிக்கிற நீ?” என்னும் போதே, வெளியில் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்க, அவளோ மேலும் சிரிக்க ஆரம்பித்தாள்.

புகழோ, கொலை வெறிக்குச் சென்று அவளை முறைக்க, அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, “ஐயோ! அம்மா! புகழ், நான் சூசைட்லாம் ட்ரை பண்ணல” என்று சிரித்துக் கொண்டே சொல்ல,

அவனோ குழப்பத்துடன் “அப்போ இது என்ன?” எனக் கேட்டான்.

“அது நான் எழுதுற கதையோட ஒரு சீன்…” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கூறியதில், அவனோ ‘பே’ வென அவனைப் பார்த்திருக்க, ஆம்புலன்சிலிருந்து ஸ்ட்ரக்சரோடு இருவர் வீட்டினுள் நுழைந்தனர். அதனைப் பார்த்து அவள் மேலும் சிரிக்க,

புகழோ “சே இப்படி அசிங்கப்பட்டோமே!” என்று அசடு வழிந்தான்.

அவன் செய்கையை நினைத்து இப்போதும் ‘கிளுக்’ எனச் சிரிப்பு வந்தது அவளுக்கு.

காரினுள் அமர்ந்து புகழும் இதனைத் தான் நினைத்து, ‘கிரேட் இன்சல்ட் டா’ எனச் சிரித்திருக்க, வேகமாக அவளுக்குக் குறுஞ்செய்தி தட்டச்சு செய்தான்.

நீ இல்லையென ஒரு நொடி துடித்துப் போனேன்!

இப்போது நீ இல்லாமல்

ஒவ்வொரு நொடியும் துடித்துக் கொண்டிருக்கிறேன்!

சாப விமோசனம் தருவாயா…!

சந்திரிகையே…!

என்று அனுப்ப, அதனைப் பார்த்து ‘நல்லா வாயில வந்துடும்’ என்று கோபத்துடன் திட்டியவள், அதனை அழித்து விட்டாள்.

அலைகள் தீண்டும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
11
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்