Loading

அத்தியாயம் 36

“உன் அப்பனோட பொணத்தை வீட்டுக்குள்ள விட்டு என் வீட்டை அசுத்தமாக்க எனக்குப் பிடிக்கல. அதான் அநாதைப் பொணம்ன்னு மார்ச்சுவரிக்கு அனுப்பிட்டேன்” என்ற தனது பெரியப்பா ராமமூர்த்தியின் பேச்சில் அக்ஷிதா திகைத்தாள்.

உத்ஷவிக்கும் விஹானாவிற்கும் கோபம் கொழுந்து விட்டு எரிய, “யோவ்… ஓவரா பேசுன உன்னையும் அனாதைப் பொணமா மார்ச்சுவரிக்கு அனுப்பிடுவேன்” என்று மிரட்டினாள் உத்ஷவி.

அதில், “ஆளுங்களை கூட்டிட்டு வந்து கலாட்டா பண்றியா. முதல்ல எல்லாரையும் வெளில கூட்டிட்டு போ” என்று அதற்கும் அக்ஷிதாவையே அதட்ட, சஜித்திற்கோ அவரை அடிக்கக் கரங்கள் துறுதுறுத்தது.

ஸ்வரூப் ராமமூர்த்தியை சலனமின்றி முறைத்து, தம்பிகளுக்கு கண்ணைக் காட்டி விட்டு காருக்கு செல்ல, உத்ஷவியும் அவன் பின்னே சென்றாள்.

“டேய் நில்லுடா… கையில துப்பாக்கி வச்சுருக்கீல அந்த ஆளை வாயில சுட்டுடு.” என்ற உத்ஷவியின் கூற்றில், :ப்ச், சிலர் சாகுறதை விட உயிரோட இருக்குறதே தண்டனை தான்டி.” என்றான் எரிச்சலுடன்.

“அது என்னமோ உண்மை தான்.” என ஒப்புக்கொண்டவள், அவனது வாடிய வதனத்தைக் கண்ணெடுக்காமல் பார்த்தாள்.

இங்கோ சஜித் கையை முறுக்கி சரி செய்தபடி, “கலாட்டா பண்றோமா? கலாட்டா பண்றதுன்னா அர்த்தம் தெரியுமா உனக்கு?” என ராமமூர்த்தியை இளக்கார நகையுடன் ஏறிட்டு, சப்பென அறைந்தான்.

ஜோஷித், அவனது மறுபக்கம் சென்று, “டேய் கலாட்டா செய்றப்ப, தலைல இருந்து லேசாவாச்சும் இரத்தம் வரணும்ல” என சந்தேகம் போல கேட்டு, அவரது தலையைப் பிடித்து சுவற்றில் முட்ட, விஹானா “என்னடா ‘லைவ் ஷோ’ பண்ணிட்டு இருக்கீங்க. கொலை எதுவும் பண்ணிடாதீங்க.” எனப் பதறினாள்.

அக்ஷிதாவும், “ஜோ, சஜி விடுங்க அவரை…” என்று இருவரையும் தடுக்க,

சஜித் சினத்துடன், “வாயை மூடிட்டு போய் ஓரமா நில்லுடி. சும்மா இருக்குற பொண்ணை சொறிஞ்சு விட்டு, திருட்டு வேலைப் பார்க்க வச்சிருக்கான்.” என ஆத்திரத்தைக் கக்க, அவனை நகர விடாதவாறு அவனது கையை இறுக்கிப் பற்றிக்கொண்டவள்,

“இல்லன்னா மட்டும், நான் கலெக்டராவா ஆகி இருப்பேன். விடு காட்ஸில்லா. நம்ம வந்த வேலையைப் பார்க்கலாம்.” என்றவள், ராமமூர்த்தியின் மீது கொலைவெறியில் நின்றிருந்த ஜோஷித்தைக் கண்டு, “அடி விஹா… அவனைப் புடிச்சு இழுத்துட்டு வாடி. இவனுங்க அடுத்த மர்டர்க்கு பிளான் பண்றானுங்க.” என சஜித்தை வெளியில் இழுத்து வந்தாள்.

விஹானாவும் “வா ஜோஷ். இந்த ஆளை அப்பறம் பார்த்துக்கலாம்.” என ஜோஷித்தையும் வலுக்கட்டாயமாக இழுத்தாள்.

ஒவ்வொரு புதிரையும் கண்டுபிடிக்க முயலும் போதெல்லாம், அனைத்துக் கதவுகளும் இறுக்கி மூடிக்கொள்கிறதே! செல்லும் இடமெல்லாம் தோல்வி மட்டுமே மிஞ்சுவதை ஸ்வரூப் அவ்தேஷால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

இதுவரை, அடுத்து செய்ய வேண்டிய செயல் என்னவென்று தெரியாமல் நின்றது கிடையாதே! நேரமோ தண்ணீராக செலவாகிக் கொண்டிருக்க, உருப்படியாய் தகவல் எதுவும் கிடைக்காமல் தங்களைச் சுழற்றி அடிக்கும் மர்மத்திற்கான விடையை எப்படிக் கண்டறிவது என்று புரியாமல் வெகுவாய் குழம்பிப் போனான்.

அதன் விளைவாக, அவனது நெற்றி மத்தியில் சிறு முடிச்சு உருவாகி, கண்களில் ஒரு வித சோர்வும், மேனியில் சிறு தளர்வும் தென்பட, அதனை ஆராய்ச்சி செய்த பெண்ணவள், “இப்ப ஏன் நீ வெக்ஸ் ஆகுற டைனோசர். நம்மகிட்ட இருக்குற டீடெய்ல்ஸ வச்சு ஏதாவது கண்டுபிடிக்கலாம். மேகனாவை பத்தி தெரிஞ்சா யூஸ்ஃபுல்லா இருக்கும்.” என்றாள் யோசனையாக.

“ம்ம்… ஜுவனைல்ல இருந்து தப்பிச்சுப் போன 15 பேரை பத்தியும் விசாரிக்க சொல்லிருக்கேன். இட் ஈட்ஸ் டைம். காடன் மாதிரி அடுத்தடுத்து பசங்க சாகுறதுக்குள்ள இதுக்கானக் காரணத்தை கண்டுபிடிக்கலைன்னா…” என சொல்லிக்கொண்டே வந்தவனுக்கு இயலாமையும் ஆத்திரமும் பெருக்கெடுக்க, காரின் பேனட்டை நங்கென்று குத்தினான்.

“டேய்… காரை உடைச்சுட்டுப் போயிடாத. இது வேற பிரேக் டவுன் ஆகி சதி செய்யப் போகுது.” என அவன் குத்திய காரினை தடவிக் கொடுத்தாள் மெல்லமாக.

அதில் அவனது கோபம் அவள் புறம் திரும்ப, அவளோ உதட்டைச் சுளித்து, “பின்ன என்னடா, கூட ஃப்ரீயா ட்ரீட்மெண்ட் பார்க்க நர்ஸ் இருக்குற சாக்குல அண்ணனும் தம்பியும் ரத்தக்களரி ஆகிக்கிறீங்க. இப்ப டென்ஷன் குறையனும்ன்னா ஒரே ஒரு வழி தான் இருக்கு. சொல்லட்டா.” என்றாள் விழிகளை விரித்து.

அதனுள் புகுந்துத் தப்பிக்க முயன்றபடியே, சுவாரஸ்யத்துடன் அவன் என்னவெனக் கேட்டதில்,

“முதல்ல நம்ம கொஞ்ச நேரம் தூங்கலாம்.” என முகத்தைச் சுருக்க அவன் முறைத்தான்.

“ப்ச், நீ இந்த பவர் நேப் பத்தி எல்லாம் கேள்விப்பட்டது இல்லையா. கூர்க்கா படத்துல நம்ம யோகி பாபு தூங்குற மாதிரி நம்மளும் கொஞ்ச நேரம் தூங்குனா தான் மூளை வேல செய்யும். இப்பவே நீ எனக்கு ரெண்டு ரெண்டா தான் தெரியுற.” என்றாள் பாவமாக.

இறுக்கம் தளர்ந்து மெல்லப் புன்னகைத்தவன், “மார்ச்சுவரிக்கு போயிட்டு வந்து, நம்ம ஏற்கனவே தங்கி இருந்த ஹோட்டலுக்கு போய்டலாம்.” என்னும் போதே மற்றவர்களும் அங்கு வந்தனர்.

அடுத்ததாக அனைவரும் பிணவறைக்கு செல்ல, அக்ஷிதாவிற்கு மனமே சரி இல்லை. தந்தையைப் பார்க்கவும் தோன்றவில்லை.

ஆனால், அவள் தானே அடையாளம் காட்ட வரவேண்டும் என்றுணர்ந்து, அவர்களுடன் செல்ல, சஜித் அவளது கரத்தை விடவே இல்லை.

அவளும் அவனை விட்டு நகரவில்லை. என்னவோ, இத்தனை நாட்களாக அவனது அருகாமையிலேயே இருந்தது போலவும், அத்தனை வருத்தங்களுக்கும் அவனே ஆறுதலாக இருந்தது போலவும் ஒரு பிரம்மை இருவருக்கும்.

தந்தையைக் கண்டதும், கண்கள் பனிக்க, “என் அப்பா தான்” என்றாள்.

உத்ஷவி வருத்தத்துடன், “நீ வேணும்ன்னா காருக்கு போயேன் டார்ல்ஸ்” என்றிட, தன்னை சமாளித்துக் கொண்டவள், “இல்ல பரவாயில்ல.” என்று மறுத்தாள்.

நடராஜின் பொருட்களும் அவர்களின் கைக்கு வர, அவரே கைப்பட எழுதிய கடிதத்தில், “தனக்கு வாழ விருப்பமில்லை எனவும், சாவதே தனக்கு நிரந்தர விடுதலை எனவும், தனது தற்கொலைக்கு முழுக்க முழுக்க அவரே காரண”மென்றும் குறிப்பிட்டு இருந்தார்.

“ம்ம்க்கும் இதுல பின் குறிப்பு வேற…” என விஹானா எரிச்சலானாலும், மகளைப் பற்றிய அக்கறை சிறிதும் இல்லாமல் இப்படி இறந்து விட்டாரே என்றிருந்தது.

“அக்ஷி இது உன் அப்பா கையெழுத்து தான?” என ஸ்வரூப் புருவம் சுருக்கிக் கேட்க, “அவரோடதா தான் இருக்கும். நான் அவ்ளோவா அவரோடக் கையெழுத்தைப் பார்த்தது இல்லை ஸ்வரூ.” என்றாள்.

பின், சிறு டைரி ஒன்றும் இருக்க, அதிலும் அவர் செய்தத் திருட்டு வேலைப் பற்றியும் சிலரது எண்களையும் எழுதி இருந்தார்.

அதிலும் பெரியதாக எதுவும் இல்லாதது போல இருக்க, ஜோஷித் அதனை வாங்கி இலக்கின்றிப் புரட்டினான்.

“டைரில எழுதி வைக்கிற அளவு அந்த ஆளு நல்லது எதுவும் செஞ்சுருக்க மாட்டாரு. இதுவும் வேஸ்ட் தான் போல…” என்றபடி இறுதிவரை புரட்ட, கடைசி சில பக்கத்தின் நடுவில், சின்னதாய் பிரவுன் நிற செல்லோடேப் ஒட்டப்பட்டிருந்தது.

“இங்க ஏன் செல்லோடேப் போட்டு இருக்காரு” என சஜித் வினவ, ஸ்வரூப் அதனை எடுத்துப் பார்த்தான்.

அந்த செல்லோடேப்பின் நடுவில் சிறு அளவிலான சிப் ஒன்று இருக்க, அதனைக் கண்டதும் அனைவரும் பரபரத்தனர்.

உடனடியாக அனைவரும் ஹோட்டல் அறைக்கு சென்றனர்.

இரு நாட்களுக்கு முன்பு, இங்கு இருந்து தப்பித்துச் செல்ல வேண்டும் என்ற உறுதி, இப்போது சுத்தமாக இல்லாமல் போனது மூன்று பெண்களுக்குமே வியப்பு தான்.

இம்சையாக எண்ணிய பெண்களை தங்களது ‘வெல்விஷர்’ போன்று நடத்தும் ஆடவர்களுக்கும் அவர்களை எண்ணி வியப்பே பரவியது.

ஆனாலும், ஆறு பேருமே அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அறைக்குச் சென்றனர்.

ஜோஷித் மடிக்கணினியின் மூலம் அந்த சிப்பில் இருக்கும் தகவல்களை எடுக்க முயல, உத்ஷவி தான், “ஜெயில்ல இருக்குறவருக்கு இந்த சிப் எங்க இருந்து கிடைச்சு இருக்கும்?” என யோசனையுடன் கேட்க, அதே சந்தேகம் அனைவருக்குமே எழுந்தது.

“எங்க அப்பாவே அஞ்சாங்கிளாஸ் பெயிலு டார்ல்ஸ் அவருக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” என அக்ஷிதா குழம்ப,

“யாருக்குத் தெரியும். ஒருவேளை உன் அப்பா அண்டர்கவர் டானா இருக்கலாம்ல” என்றாள் விஹானா.

“அந்த ஆளு குடிச்சா அண்டர்வேரையே ஒழுங்கா கட்ட மாட்டான். நீ வேற ஏண்டி…” என முறைத்திட, விஹானா அசடு வழிந்தாள்.

அதற்குள் சிப்பில் இருந்த விவரங்களை டீ – கோட் செய்தான் ஜோஷித்.

“ஸ்வரா… இதுல ஒரு ஆடியோ க்ளிப்பிங் தவிர வேற எதுவும் இல்ல.” என்றதில், “பிளே இட்.” என்றான்.

அதில் நடராஜின் குரல் தான் ஒலித்தது.

“நான் நடராஜ். உன் அப்பா தான் பேசுறேன் அக்ஷிதாம்மா.” என்றவரின் குரல் தழுதழுத்தது.

அக்ஷிதாவுடன் மற்றவர்களும் அதிர்ந்து நோக்க, “இது என் அப்பா வாய்ஸ் தான்” என்ற அக்ஷிதாவிற்கு உள்ளுக்குள் பாசமழை எல்லாம் ஏனோ பொங்கவில்லை. ஆனால், வருத்தம் நிறைந்திருந்தது.

“இதை நீ கேட்கும் போது நான் உயிரோட இருக்க மாட்டேன்னு உறுதியா தெரியும். உன் அம்மாவையும் உன்னையும் நான் சரியா கவனிச்சுக்கலைன்ற குற்ற உணர்ச்சி என்னை ரொம்பக் கொல்லுது அக்ஷிமா. காலம் கடந்த புரிதல்ன்னு புரியுது.” என்றவரிடம் சில நொடிகள் அமைதி.

“நான் நிறையத் தப்பு பண்ணிருக்கேன். ஆனா, நான் செஞ்சத் தப்புலயே உச்சக்கட்டம் ஒன்னு இருக்கு. அது அந்த துரோகியோட சேர்ந்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளில இருக்குற பசங்கள கூட்டுச் சேர்த்து அவங்களையும் க்ரிமினலா மாத்துனது தான்.

அப்படி க்ரிமினலா மாறின ரெண்டு பேரும் மிருகத்தனமா மாறி, உலகத்தையே கைக்குள்ள கொண்டு வரணும்ன்ற வெறியோட இருக்காங்க.

சின்னதுல இருந்து பார்த்து வளர்ந்த பசங்க தான். அவங்ககிட்ட காட்டுன பாசத்தை ஒரு துளி உங்கிட்ட காட்டாலையேன்ற அரிப்பு இப்போ எல்லாம் என்னை நிம்மதியா இருக்க விடுறது இல்ல. நான் காட்டுன பாசத்தையும் குடுத்த வாழ்க்கையையும் கொஞ்சம் கூட யோசிக்காம, என்னைக் கொல்ல துணிஞ்சுட்டாங்க. உன்னையும் கொல்லுவாங்க. உன் கூட இருக்குற எல்லாரையும் கொல்லுவாங்க. நீங்க போற இடமெல்லாம் வந்து, உங்களை இடைஞ்சல் பண்ணுவாங்க அக்ஷிமா.

நீ திருடுனதுக்கான காரணத்தையும் உன்ன அம்போன்னு விட்டுட்டுப் போன நிலைமையப் பத்தியும் யோசிக்காம, உன்ன திட்டி அனுப்பிட்டேன், அதுக்கு அப்பறம் நீ வந்து என்னைப் பார்க்க மாட்டியான்னு நிறைய தடவைத் தவிச்சு இருக்கேன். நீ எங்க இருக்கன்னு கூட எனக்குத் தெரியல.” என்றவருக்கு இப்போது மூச்சு பலமாக வாங்கியது.

“நிறைய சொல்லணும். ஆனா, எனக்கு நேரமில்லை அக்ஷிமா. ஒரு பெரியக் குற்றத்தை யாருக்கும் தெரியாம செஞ்சுட்டு இருக்காங்க மேகனாவும் பத்ரியும். அவங்க நினைக்கிறது நடந்தா, நாம எல்லாருமே அவங்களுக்கு அடிமையா தான் வாழனும். நீ எதிராளி கூட சேர்ந்து, பத்ரியோட ஒட்டு மொத்த அடியாழத்தையும் தோண்டி எடுக்குறன்னு என்கிட்ட வந்து சொன்னான். நீ அங்க சுத்தி இங்க சுத்தி என்கிட்டயும் வருவன்னு அவனுக்குத் தெரியும். அதான், நீங்க என்னை தேடி வர்றதுக்குள்ள, என்னை சாகடிக்கப் போறான்.” என்னும் போதே பலத்த மூச்சுடன், இருமலும் வந்தது.

“மேகனாவோட வீடு விஜயவாடா தாண்டி இருக்கு.” என்று ஒரு முகவரியைக் கூறியவர், “அங்க போனா உங்களுக்கு வழி கிடைக்கும். நான் செஞ்சத் தப்புக்கு இந்தத் தண்டனையே கம்மி தான். நீயும் இந்த பாழுங்குழிக்குள்ள விழுந்துடாமத் தப்பிச்சுடுமா. ஒரு அப்பாவா இந்த ஒரே ஒரு ஆடியோவை மட்டும் தான் உங்கிட்ட சேர்க்க முடியும். இதுவும் வேற யார் கையிலயும் போகாம, உன்கிட்டயே சேரனும்ன்னு மனசுல வேண்டுதல் வச்சுக்கிட்டு தான் பேசுறேன்.” என்னும் போதே ஆடியோ நின்று விட்டது.

அக்ஷிதாவிற்கு எந்த உணர்வை வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை.

உத்ஷவி தான் “உன் அப்பனுக்கு அறிவே இல்லையாடி. சொன்னது தான் சொன்னாரு முழுசா என்ன பிரச்சனை யார் இதை செஞ்சான்னு சொல்லாம, சாகப் போற நேரத்துல சென்டிமென்டை புழிஞ்சு ஒரு ஹேருக்கு கூட பிரயோஜனம் இல்ல.” என்றாள் கடுப்புடன்.

ஜோஷித்தும் அதனை ஆமோதித்து, “குற்ற உணர்ச்சியை வச்சுக் கூட்டு பொரியல் கூட செய்ய முடியாது. இந்த லட்சணத்துல இந்த ஆடியோவை நம்மகிட்ட குடுக்கணும்ன்னு வேண்டுதல் வேறயாம்.” என எரிச்சலுற,

விஹானா, “சரி விடுங்கப்பா. அட்லீஸ்ட் மேகனாவோட வீட்டு விவரத்தையாவது சொன்னாரே. நம்ம அடுத்து அங்க போகலாம்.” என்றிட, ஸ்வரூப் அவ்தேஷ் மட்டும் மீண்டும் மீண்டும் அந்த ஆடியோவைக் கேட்டுக் கொண்டே இருந்தான்.

அத்தியாயம் 37

சிறிது வருத்தம் தோய்ந்த முகத்துடன் இருந்த அக்ஷிதாவை நொடியும் பிரியாமல் அவளுடனே இருந்த சஜித் தான், “நீ என்னடா அந்த ஆளு வாய்சை ரிப்பீட் மோட்ல கேட்குற” என்று முகத்தைச் சுளிக்க, அக்ஷிதாவும் பெருமூச்சுடன் தன்னை சமன்செய்து கொண்டு, “ம்ம்க்கும்… நானே அவர் பேசுறத முழுசா கேட்க மாட்டேன். நீ என்னமோ உன் லவரோட ஆடியோ க்ளிப்பிங்க கேக்குற மாதிரி கேக்குற.” என்று ஸ்வரூப்பை வாரினாள்.

அவளைக் காட்டத்துடன் பார்த்தவன், “உன் அப்பா இந்த மாதிரி இதுக்கு முன்னாடி சென்டியா பேசி இருக்காரா?” எனக் கேட்டான்.

“அந்த ஆளு என்கிட்ட மூஞ்சி குடுத்தே சரியா பேசுனது இல்லையே ஸ்வரூ” என அக்ஷிதாக் கூற, சில நொடிகள் அந்தக் குரலையே கூர்ந்து கவனித்த ஸ்வரூப்,

“இதுல இவன் பேசுறது எதுவுமே உண்மை இல்லைன்னு தோணுது. இந்தக் குரல்ல குற்ற உணர்ச்சி இருக்குற மாதிரி தோணல. பயம் மட்டும் தான் இருக்கு.” என்றபடி சோபாவில் சென்றமர்ந்து கால் மீது கால் போட்டு நெற்றியைத் தட்டியபடி ஏதோ யோசித்தான்.

“நீ என்னடா புதுசா பீதியைக் கிளப்புற” என உத்ஷவி விழிக்க,

ஸ்வரூப் சட்டென “சஜி… இந்த ஆடியோல குடுத்து இருக்குற மேகனாவோட அட்ரஸ்க்கு நம்ம ஆளுங்களை அனுப்பு. இட் ஷுட் பீ வெரி கான்பிடென்ஷியல். அந்த அட்ரஸ்ல உண்மையா யார் இருக்கா? அங்க என்ன நிலவரம்ன்னு எனக்குத் தெரியணும். இமீடியட்டா.” என்று உத்தரவிட, சஜித் மேலும் யோசியாமல் உடனே அதனை செயல்படுத்தினான்.

“என்னடா ஆச்சு உனக்கு?” என ஜோஷித் புரியாமல் வினவ, “இந்த ஆடியோவை ஒரு தடவைக்கு ரெண்டு தடவை நல்லாக் கேளு ஜோ.
ரொம்ப வருத்தத்தை வரவழைச்சு பேசுன மாதிரி இருக்கு.” என்றதும், ஜோஷித்தும் அதனை மீண்டும் கேட்டான்.

விஹானாவோ, “அந்த ஆளு எப்படியும் பேசிட்டு போகட்டும் ஸ்வரூ. நம்ம அந்த அட்ரஸ்ல போய் மேகனாவை பிடிக்கலாம்ல” எனக் கேட்க,

“ஏய் அரைலூசு. என் கெஸ் க்ரெட்ன்னா இந்த ஆடியோவே ஒரு டிராப் தான். நம்மளை வலைல விழ வைக்கிறதுக்காக, நடராஜ் மூலமா அவங்க இடத்துக்கு வரவச்சு, நம்மளை போட்டுத் தள்ள செஞ்ச பிளானா இருக்கலாம் இது. இதை நம்பி நம்ம அங்க போனா, எல்லாரும் பரலோகத்துக்கு தான் போகணும்” என்றதும்,

“வாயைக் கழுவுடா. நானே அடுத்து எங்க என்ன கொலை விழும்ன்னு தெரியாம அரண்டு போயிருக்கேன்” என்ற விஹானா நகத்தைக் கடிக்க, உத்ஷவிக்குமே ஸ்வரூப்பின் கூற்று சரிதானென தோன்றியது.

“அப்போ அக்ஷி அப்பாவை மிரட்டி இப்படி பேச வச்சு இருக்கணும் ஸ்வரூ. பேசி முடிச்சதும் கொன்னுருக்கனும். இல்லன்னா பயத்துல அந்த ஆளே தூக்குல தொங்கி இருக்கணும்.” என யோசனையுடன் கூற,

“எக்ஸ்சாட்லி திருடி.” என்றான் அழுத்தமாக.

சில நிமிடங்களில் சஜித் பரபரப்புடன் அவர்களை நெருங்கினான்.

“ஸ்வரா… உன் கெஸ் கரெக்ட் தான். அந்த வீட்டுக்குள்ள சிலர் துப்பாக்கியோடு பதுங்கி இருக்காங்க. அது மட்டுமில்ல, ரெண்டு மூணு பேர் வாசலிலேயே துப்பாக்கியோட மறைஞ்சு இருக்குறதாவும், அந்த சைட் கார் போனா கூட அது நம்ம தானான்னு தேடுறதாவும் நம்ம பசங்க சொன்னாங்க. இப்ப அங்க போனா, நம்மளை லாக் பண்ணிடுவாங்க.” என்றதில், “ஆத்தாடி” என்றிருந்தது பாவையர்களுக்கு.

“இது என்ன அக்கிரமம் இஷா… வீட்டுக்குத் திருட வந்த பொண்ணுங்களைக் கூட கூட்டிக்கிட்டே சுத்துறானுங்க. அதுவும் நம்ம ஸ்டேடஸ்க்கே பொருந்தாதவங்களோட பேச்சு வார்த்தை வச்சுக்குறதே அபத்தம். பொதுவா, எந்த ஒரு விஷயத்துக்கும் வெளி ஆளை சேர்த்துக் கூடாதுன்றது நம்ம குடும்பத்தோட வழக்கம் தான. சொந்தக்காரங்களை மீறி அந்நிய ஆளுங்க நம்ம வீட்டுக்குள்ள நுழையக் கூட முடியாது. இவனுங்க என்னென்னா, ஹோட்டலுக்கும், மலைக்கிராமத்துல இருக்குற காட்டேஜ்க்கும் ஜெட்லயே அவளுகளோட பறக்குறானுங்க.” என்று மூச்சிரைக்க ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தாள் பாவனா. சஜித்தின் வருங்கால மனைவி.

“இந்த ஜோ என்கிட்ட நின்னு ரெண்டு வார்த்தைக் கூட பேச மாட்டான். இப்போ என்னனா, ஒருத்தி கூட இளிச்சு இளிச்சு பேசுறான்…” என்று அனன்யா கடுப்பாக, இஷானி ஒன்றும் பேசாமல், உள்ளுக்குள் எரிமலையாக எழுந்த கோபத்தையும் வெளிக்காட்ட இயலாமல் இறுகினாள்.

“என்னடி நாங்கப் பேசிக்கிட்டே இருக்கோம். நீ அமைதியா இருக்க.” என்று பாவனா அவளை உலுக்க,

“ப்ச், என்ன பேச சொல்ற. முதல்ல அந்த மூணு திருடிங்களையும் அவனுங்ககிட்ட இருந்து துரத்தணும்.” என இஷானாக் கூறியதில், தங்கைகளையே இளக்கார நகையுடன் பார்த்திருந்த ப்ரீத்தன், “அது நடக்குற மாதிரி தெரியலையே!” என்றான் தாடையைத் தடவி.

இஷானா தமையனை அழுத்தத்துடன் பார்த்து, “நடக்கும்ண்ணா. நடத்திக் காட்டுவேன். அண்ட், குடும்ப கவுரத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுக்குறவன் ஸ்வரூப். அவன் முன்னாடி ரம்பை ஊர்வசியே வந்து நின்னாலும் மசிய மாட்டான்.” என்றதும்,

ப்ரீத்தன், “உனக்கு ஆம்பளைங்க சைக்காலஜியே தெரியல இஷா. மனுஷன் மனசு தடுமாற ரம்பை ஊர்வசி தான் வரணும்ன்னு இல்லை.” என்றான் நக்கலாக.

“நீ கொஞ்சம் வாயை மூடுறீயா. எனக்கு இப்பப் பிரச்சனை அவன் மனசு மாறிடுவான்றது இல்ல. அப்படியே மனசு மாறுனா கூட, வீட்டாளுங்கப் பேச்சை மாறி இந்தக் கல்யாணத்தை அவனால நிறுத்தவே முடியாது. நிறுத்தவும் மாட்டான். எனக்கு அந்த நம்பிக்கை அதிகமாவே இருக்கு. அதுக்கு அப்பறம் அவனை வழிக்குக் கொண்டு வர்றது எனக்குத் தெரியாதா என்ன?” எனக் கர்வத்துடன் புன்னகைத்தவள்,

சட்டென முகம் மாறி, “இந்தக் கலவரத்துல இந்தத் திருட்டு ஐடியா என்னோடதுன்னு அவனுக்குத் தெரியக் கூடாது. தெரிஞ்சா முதலுக்கே மோசமாகிடும்.” என்றாள் சற்று அச்சத்துடன்.

“அது தெரிஞ்சாக் கூட, நிச்சயத்தை கேன்சல் பண்ண மாட்டான் இஷா. இப்ப எனக்கு வேண்டியது எல்லாம், அந்த டாக்குமென்ட் தான். ராகேஷ் ஸ்டுப்பிட்னால எல்லாம் ஸ்பாயில் ஆகிடுச்சு.” என ப்ரீத்தன் கோபத்தில் சிவந்தான்.

இவர்களின் உரையாடலின் போதே, அதனைக் கேட்டபடி அவர்களை நெருங்கினார் பூமிநாதன். இவர்களின் அருமை தந்தை.

“எது ஸ்வரூப்புக்கு தெரியக் கூடாதுன்னு பதறுற இஷா?” எனக் கூர்மையாகக் கேட்டபடி வந்தவர், சோபாவில் தன்னை நுழைத்துக் கொள்ள, அவரைக்கண்டதும் பவ்யமாய் எழுந்து நின்ற இஷானி, “அது…ஒ… ஒன்னும் இல்லப்பா.” என்றாள் தடுமாற்றத்துடன்.

“எதுவா இருந்தாலும் சொல்லிடு இஷா. உன் அண்ணன்காரன் இப்படித் தான், முட்டாள்தனமா ஊரை அழிச்சு, அபார்ட்மெண்ட் கட்டப் போறேன்னு, அந்த மூணு பசங்க முன்னாடியே டாக்குமென்ட் ரெடி பண்ணி, இப்போ அவனுங்களோட கோபத்துக்கு ஆளாகி இருக்கான்.

சொந்த அத்தை மகன்றனால மட்டும் இவனை உயிரோட விட்டு வைக்கல. தேவையான ஆதாரம் கிடைச்சுட்டா ஸ்வரூப், ஊருக்கு துரோகம் பண்ணனும்ன்னு நினைக்கிற இவனை ஒரு செகண்ட் கூட உயிரோட விட மாட்டான். ராட்சசன். கொஞ்சம் கூட பாவம் பார்க்க மாட்டான்.” என்று மிரட்டினார்.

“அவன் ஒன்னும் எனக்குப் பாவம் பார்க்கத் தேவை இல்லப்பா. அதுக்கு அவன் உயிரோட இருந்தா தான…” என எகத்தாளம் புரிய, அவனது கன்னத்தில் சப்பென அறை விழுந்தது.

“இப்படி பைத்தியக்கரைத் தனமா எதுவும் செஞ்சு வைக்காத. நல்லவேளையா, உன்னைப் பத்தி நிச்சயம் முடிஞ்சதுக்கு அப்பறம் தெரிய வந்துச்சு. முன்னாடியே தெரிஞ்சுருந்தா, இந்த நிச்சயத்தை நிறுத்தி இந்தப் பேச்சு வார்த்தையையே இல்லாம ஆக்கி இருப்பானுங்க அந்த மூணு பிசாசுகளும்.

இப்பவும் இந்த நிச்சயத்தை அரை மனசா தான் ஏத்துருக்கானுங்க. அதுவும், உன் தங்கச்சிங்க இனிமே உங்கிட்ட பேசவே கூடாதுன்ற கண்டிஷனோட. இப்ப உங்கிட்ட நின்னு பேசுறதைப் பார்த்தா, ஸ்வரூப் என்னையவே பகைச்சாலும் ஆச்சர்யப் படுறதுக்கு இல்ல” என்று பொரிந்தார் பூமிநாதன்.

ப்ரீத்தன், அவமானத்தில் கருகினான். அதுவே, மூன்று ஆடவர்களின் மீதும் வஞ்சத்தை வளர்க்க வைத்தது.

இஷானி கையைப் பிசைத்துக் கொண்டு, செய்து வைத்தக் குளறுபடியைக் கூற, பூமிநாதன் அவளை அடிக்க கையோங்கினார்.

“ஏம்மா, உங்க மூனு பேருக்கும் புத்திப் பிசகி போயிருச்சா. உங்க அண்ணனுக்கு உதவுறேன் பேர்வழின்னு உங்கத் தலைல நீங்களே மண்ணை அள்ளிப் போட்டுக்குறீங்க. இலவச இணைப்பா, மூணு பொண்ணுங்களை அவனுங்க கூடவே சுத்த விட்டு வேடிக்க பார்த்துட்டு இருக்கீங்க. அறிவு இருக்கா இல்லையா… உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்க இஷா.” என்று கண்டித்தார்.

“அப்பா ரிலாக்ஸ். எந்த வகையிலயும் ஸ்வரூப் இதுக்குக் காரணம் நான் தான்னு கண்டுபிடிக்கவே முடியாது. இப்ப வரை அண்ணன் தான் டாக்குமெண்ட்டை எடுக்க சொல்லி இருப்பான்னு நினைச்சு இருப்பான். நீங்க பதட்டப் படாதீங்க…” என்று அவரை சமாளித்து விட்டு, தனியே வந்து ஸ்வரூப்பிற்கு போன் செய்தாள்.

இங்கோ ஸ்வரூப் “எல்லாரும் கொஞ்ச நேரம் தூங்குங்க. ஈவினிங் அக்ஷியோட அப்பாவுக்கு க்ரிமேஷன் முடிச்சுட்டு ஊருக்குக் கிளம்பலாம்.” என்றதும்,

“அந்த ஆளுக்கு இது ஒன்னு தான் குறைச்சல். நான் கூட ரெண்டு டிராப் கண்ணீரை வேஸ்ட் பண்ணிட்டேன். ச்ச்சே…” என ஏமாற்றத்தில் வெந்தாள் அக்ஷிதா.

“எப்படியும் அவரு உன் அப்பாவா ஆகிட்டாரு. அட்லீஸ்ட் அவரோட கடைசி காரியத்தை நீ செய்றது தான் முறை ஆக்ஷி. நம்மளோட கடமையை நம்ம செய்யத் தவறக் கூடாது” என்று அறிவுறுத்தியதில், அரைமனதோடு சம்மதித்தாள்.

பின் நால்வரும் உறங்கச் சென்று விட, உத்ஷவி ஸ்வரூப்பை முறைத்து நின்றாள்.

“என்ன விஷக்கிருமி… என்னை வெறிச்சுப் பார்த்துட்டு இருக்க. இப்போல்லாம் நேரடியாவே சைட் அடிக்க ஸ்டார்ட் பண்ணிட்டியா?” எனக் கேட்டான் நக்கலாக.

“நான் எப்ப மறைமுகமா சைட் அடிக்கிறேன்னு சொன்னேன். எப்பவுமே நேரா தான் உன்னை சைட் அடிக்கிறேன்.” எனத் தோளைக் குலுக்கியவள், “நீ ஒன்லி சைட்டிங் பீஸ் டைனோசர்” என்றான் கிண்டலாக.

அதில் அவளை முறைத்தவனை கண்டுகொள்ளாமல், “அதென்ன அப்பான்ற கடமையை இந்த ஆம்பளைங்க பண்ண மாட்டானுங்களாம். ஆனா நாங்க மட்டும் கடைசி காரியத்தை சிரத்தை எடுத்து செய்யணுமாம். என்ன லாஜிக் இதெல்லாம். அந்த ஆளு அனாதைப் பொணமாவே போகட்டுமே.” என கோபத்தில் பொங்கினாள்.

“இப்ப கோபத்துல எல்லாமே தோணும் விஷா. காலம் போற வேகத்துல, ஒரு நாள் இல்ல ஒரு நாள், சின்ன விஷயம் கூட, நம்மளை உறுத்தக் கூடாது. நம்ம நம்மளோட மனசாட்சிக்குட்பட்டு நடந்துக்கிட்டா, எந்த காலத்துலயும் அதை நினைச்சு வருத்தப்பத் தேவை இல்ல.” என்றதில்,

“வந்துட்டான் சத்குருவோட சித்தி பையன் மாதிரி, வாழ்க்கைத் தத்துவத்தை பேசுறதுக்கு… இன்னைக்கு எது சரியோ அதை செஞ்சா போதும். நாளைக்கு நடக்குறதைப் பத்தி நாளைக்குப் பாக்கலாம்.” என முறுக்கிக் கொண்டவள், வெளியேற முற்பட, அந்நேரம் ஸ்வரூப்பின் அலைபேசி அழைத்தது.

அதனை எடுத்தவாறே, “ஏய் திருடி, டேபிள் மேல இருந்து திருடுன என் கூலிங் கிளாஸை வச்சுட்டு போ.” என்றதில் கடியானவள்,

“நீ எதுக்குடா என்னை வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்க.” என சிடுசிடுத்தபடி கண்ணாடியை டேபிள் மீது வைத்தவள், “நீ எல்லாம் சைட் அடிக்கக் கூட வொர்த் இல்ல…” என்று சிலுப்பினாள்.

அது அவனைக் கோபப்படுத்தி இருக்க வேண்டும். அதை வெளிக்காட்டாமல், ஒற்றைப் புருவத்தை உயர்த்தி, போனை எடுத்து காதில் வைத்தவன்,

“ஹாய் இஷா டியர். என்ன நேத்துல இருந்து எனக்கு போன் பண்ணவே இல்லை.” என்று மென்மையிலும் மென்மையாகப் பேசி இஷானாவை திகைத்த வைத்தான்.

உத்ஷவியோ, “ம்ம்க்கும் பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்புடுறான். நீ நடந்து ராஜா.” என அவன் கொஞ்சுவதை கடுப்புடன் பார்த்து விட்டு வெளியேற, அவள் சென்ற பின்னும் கூட ஸ்வரூப் அவனது டோனை மாற்றவில்லை.

இஷானி, “நீங்க எங்க இருக்கீங்க ஸ்வரூப். நான் உங்களைப் பார்க்கணும்” எனக் கேட்டதில்,

“ஈவ்னிங் வந்துடுவேன் இஷா டியர். நம்ம அங்க பார்க்கலாம். கண்டிப்பா உன்னை நான் இன்னைக்குப் பார்த்தே ஆகணும்…” என்றவனின் குரல் குழைவாக வந்ததா, குறிப்புடன் வந்ததா எனத் தெரியாமல் திடுக்கிட்டாள் இஷானா.

அலைபேசியை அணைத்தவன், அத்தனை நேரம் இருந்த இணக்கம் மறைந்து, சீறலுடன் கரத்திலிருந்த நிச்சய மோதிரத்தைப் பார்த்தான்.

“யூ ப்ளடி சீட்டர்.” என அதனைக் கழற்றி எறிந்தான் ஆவேசத்துடன்.

முதலும் முடிவும் நீ
மேகா

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
86
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    6 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    2. கதை மாந்தர்கள் மனதில் பதிந்து விட்டனர். அழுத்தமான சமூக கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    3. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    4. Indhu Mathy

      பத்ரியும் மேகனாவும் பயங்கர கேடிங்களா இருக்காங்க… 😱
      இவங்களோட ஒவ்வொரு அசைவையும் தெரிஞ்சு வச்சுருக்காங்க… 😨😨😨

      குடும்பத்துக்குள்ளயே சதி பன்றாங்க….🥶🥶🥶🥶 அண்ணனுக்காக உதவுறேன்னு இஷா ஸ்வரூகிட்ட மாட்டினா… 🤭