
மாயோன் 28
வர்ஷாவை குணப்படுத்த எத்தனையோ மருத்துவத்துவ முறையை நாடினான் விக்ரமன்., ஆனால் ஒன்றுமே பலனளிக்க வில்லை. மருத்துவர்கள் கொடுக்கும் எந்த மருந்தையும் அவளது உடல் ஏற்கவில்லை. இருந்தபோதும் இன்றுவரை அவனது நம்பிக்கையை கைவிடாமல் வர்ஷாவை கவனித்து கொண்டிருக்கின்றான். என்றாவது ஒருநாள் அவள் பழைய தேவாவாக மாறி தன்னை ” விகர்மா” என்று அழைத்து விட மாட்டாளா? என்ற ஏக்கத்துடன்.
வர்ஷா இந்த நிலைமையில் இருக்கும் போது தனக்கான ஒரு வாழ்க்கையை யோசித்து பார்க்க கூட விக்ரமனுக்கு விருப்பம் இல்லை… தனது ஆசை, கனவு,காதல் என அனைத்தையும் வேண்டாம் என முடிவு செய்தவன், அன்றோடு கீர்த்தியை மறக்க எண்ணினான். அவளது முகம், பேச்சு என எதையும் யோசித்து பார்க்க தயங்கினான்.
அவன் என்ன தான் முயற்சி செய்தாலும் தன் மனதில் தோன்றும் கீர்த்தியின் எண்ணத்தை அவனால் முழுவதுமாக விளக்கி வைக்க முடியவில்லை. அவளது ஞாபகம் வரும் போது எல்லாம் தேவாவை பற்றி நினைத்து மனதை கல்லாக்கி கொண்டான்.
அதற்கு முக்கிய காரணம் நந்தினி… நந்தினியின் மீது உள்ள கோவத்தை எங்கே அந்த சிறு பெண்ணின் மீது காட்டி விடுவோமோ என்ற அச்சம் விக்ரமனின் மனதில் வியாபித்திருந்தது.. அதனாலே அவளது நலனிற்க்காக அவளை விட்டு விலகி நின்றான்.
ஆனால் கீர்த்தி அவனை தேடினாள்.. அவனை பற்றி யாரிடம் சொல்லி எப்படி அறிந்து கொள்வது என்று அவளுக்கு தெரியவில்லை.. அதனால் அவனது நினைவுகளை கொண்டு நகர ஆரம்பித்தாள்.
என்ன தான் அவன் இருமுகம் கொண்டு அவளிடம் பழகினாலும், அந்த இருமுகமும் அவளிடம் அன்பை மட்டுமே வெளிப்படுத்தியது. என்பதை அவள் உணரவில்லை, உணர விரும்பவும் இல்லை.
இதை எல்லாம் நினைத்து பார்த்த விக்ரமனின் கண்கள் கலங்கி சிவந்திருந்தது.
******
இந்த மூன்று ஆண்டுகள் சத்யன் தான் பெரும்பாலும் வர்ஷாவை கவனித்து கொண்டான். அவள் அருகிலேயே இருந்தான். இரவில் தூக்கம் கூட அவளது அறையின் ஒரு ஓரத்தில் உள்ள சோபாவில் தான். இம்மியும் அவளை விட்டு அவன் விலகவில்லை.. விலக விரும்பவும் இல்லை.. அவள் உணர்வின்றி பதில் கொடுக்காமல் இருந்தாலும்! இவனே எதையாவது அவளிடம் தனியாக பேசிக்கொண்டு இருப்பான்.
அப்படியான ஒருநாளில் சத்யன் வர்ஷாவிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கு வர்ஷாவை காண வந்தான் விக்ரமன்.
” க்கும் என்ன நடக்குது இங்க? ” என்று கேட்ட விக்ரமன் அவனது தோளில் கைவைக்க.. சட்டென்று திரும்பி பார்த்தான் சத்யன்.
” அது ஒன்னும் இல்லை சார்.. தேவா கிட்ட பேசிட்டு இருந்தேன். ” என்றவனது பார்வை அங்கு செயல் இழந்து கிடக்கும் வர்ஷாவின் மீது பதிந்து மீண்டது.
” ம்ம்ம் என்ன பேசிட்டு இருந்த? ”
” சும்மா அப்படியே பழைய கதை பத்தி பேசிட்டு இருந்தோம்” என்று புன்னகையுடன் பதில் கூறிய சத்யனை நிதானமாக பார்த்தவன்
“அவளுக்காக நீ பார்த்து பார்த்து பண்ணுற ஒவ்வொரு விஷயத்தையும் அவளால பார்க்க முடியலையே… அதை நெனச்சு வருத்தமா இருக்குடா.. நீ பேசுறதை அவளால கேட்க முடியாமல் போய்டுச்சேடா ” என்ற விக்ரமனின் குரலில் அதீத வலி வெளிபட்டது.
” இல்ல விக்ரமன் சார் நான் பேசுறது அவளுக்கு கேட்கும். நான் பேசுறது அவளுக்கு புரியும். அதை என்னால உணர முடியுது. நான் பேசும் போது அவள் கண்ணு சிரிக்கும் சார்.. அது உங்க கண்ணுக்கு தெரியலயா? ” என்று சத்யன் நெகிழ்ச்சியுடன் கூற.. மொத்தமாக நொறுங்கி போனான் விக்ரமன்.
” இப்படி இருக்காதடா சத்யா, உன் வாழ்க்கையை நினைச்சு எனக்கு பயமா இருக்குடா ” என்று வேதனையுடன் கூறினான் விக்ரமன்.. சத்யன் எந்த அளவுக்கு பைத்தியக்கார தனமாக அவள் மீது அன்பு செலுத்துகிறான், என்பதை அவனும் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான்.
” அய்யோ சார்.. பயப்படாதீங்க? எனக்கு அவளை பிடிக்கும், அவள் நல்லா இருக்கணும் அவ்ளோ தான். அவள் குணமாகி பழையபடி எழுந்து வந்தால் நான் சந்தோசப்படுவேனே தவிர, அவளை எனக்கு கொடுங்கன்னு உங்க கிட்ட வந்து கேட்க மாட்டேன். அவளுக்கு துணையா இருக்கணும்னு நெனைக்கிறேனே தவிர அவளை சொந்தம் கொண்டாடும் எண்ணம் எனக்கில்லை சார்” என்றவனை வேதனையுடன் அணைத்து கொண்டான் விக்ரமன்.
” டேய் நான் அதுக்காக சொல்லலடா.. உனக்கும் ஒரு வாழக்கை இருக்கு அதை பத்தி கவலைபடுறேன்டா. எந்த ஒரு விஷயத்திலும் ரொம்ப அட்டேச்சா இருக்காத, நாளைக்கு அது உன் கையை விட்டு போகும் போது உயிர் போற அளவுக்கு வலிக்கும், அந்த வலியை கடந்து வாழும் போது ஒவ்வொரு நொடியும் நரகமாகிடும் சத்யா… நீயும் எனக்கு தம்பி தான்டா.. ஒருத்தனை வாழ வைக்க இன்னொருத்தனோட உணர்வுகளை பலி கொடுக்குற நிலைமை வந்திடுமோன்னு கவலையா இருக்குடா ” என்ற விக்ரமனை பார்த்து மெல்ல இதழ் பிரித்து சிரித்தான் சத்யன்.
” எனக்காக கவலைப்பட இப்படி ஒரு அண்ணன் இருக்கும் போது. எந்த உறவு என்னை விட்டு போனாலும் இந்த உறவு எனக்கு கடைசிவரை போதும்.. நான் சந்தோஷமா இருப்பேன்… நீங்க ஒரு நாள் சொன்னீங்க இல்லையா? ஒரு பொம்மையை நாலு பேருக்கு பிடிக்கும் அப்படிங்குறதால அதை அந்த நாலு பேருக்கும் பிச்சு கொடுக்க முடியாதுன்னு அது நூறு சதவீதம் உண்மை சார்.. பொம்மையா இருந்தாலே எனக்கு பிச்சு கொடுங்கன்னு நான் கேட்க மாட்டேன்.. அவள் என் தேவா சார்.. அவளை என் கைகுள்ள வைச்சுக்கணும்னு நான் ஆசைப்படல சார்.. அவள் யார் கையில் இருந்தாலும் அவங்க அவளை அழகா பார்த்துகிட்டா அதுவே எனக்கு போதும் ” என்று கூறினான் சத்யன்.
அதன் பிறகு சத்யன் தனியே வர்ஷாவிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது விக்ரமன் அதனை பார்த்தாலும் ஒரு சிறு புன்னகையுடன் அவர்களை கடந்து சென்று விடுவான்.
இன்றும் அதே போல வர்ஷாவை காண வந்தான் சத்யன்.
வர்ஷாவை கவனித்து கொள்ளும் செவிலியர் தனிப்பட்ட காரணத்தால் இன்று விடுப்பில் இருக்கவே… தானே மிதமான சூட்டில் சுடு நீரை காய வைத்து எடுத்து வந்தவன், அதனை அவள் அருகில் இருக்கும் டேபிளின் மீது வைத்தான்.
ஒரு சுத்தமான துணியை எடுத்து அந்த சுடு தண்ணீரில் நனைத்து பிழிந்து எடுத்தவன்.. அதனை கொண்டு வர்ஷாவின் முகம், கை, மற்றும் கால்களை சுத்தமாக துடைத்து விட்டான்.
அதில் ஒரு தாய் தன் மகளுக்கு செய்யும் சேவையும்,பாசமும் மட்டுமே நிறைந்து இருந்தது.
பின்னர் அவள் தலை பக்கமாக இருக்கையை நகர்த்தி போட்டு அமர்ந்தவன்.. சிறிது நேரம் இமைக்காமல் அவளது முகத்தை பார்த்து கொண்டிருந்தான்.
” என்ன மன்னிச்சிடு தேவா.. நான் உன்கூட இருந்தும் உன்னை காப்பத்த முடியாமல் போயிடுச்சு.. எல்லாம் என்னால தான். எனக்காக ஒரு முறை எழுந்து என்னை மன்னிச்சிட்டேன்னு மட்டும் சொல்லு.. எனக்கு அது போதும் வேற எதுவும் வேண்டாம்.. நீ எழுந்து என்கிட்ட ஒரு வார்த்தை பேசினால் போதும்.. அப்ரோம் நான் செத்தா கூட எனக்கு சந்தோசம் தான்” என்று வேதனையுடன் உரைத்தவன் அவளது முகத்தை வலியுடன் பார்த்திருக்க.. என்றும் அசையாமல் அப்படியே விட்டதை மட்டும் வெறித்து பார்க்கும் அவளது கண்களில் இன்று கண்ணீர் திரண்டு விழியோரம் வழிந்தது.
அதனை கண்டு நொடியில் திகைத்தவனது மனதில் உண்டான மகிழ்ச்சியை வார்த்தைகளால் விளக்கமுடியாது.. சட்டென அவளது முகம் நோக்கி குனிந்தவனது விரல்கள் நடுக்கத்துடன் அவளது கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்து விட்டது” தேவா தேவா.. என்னை பாரு நான் பேசுறது கேக்குதா? உனக்கு கேக்குதாடா.. எனக்காகவா இந்த கண்ணீர்.. அப்போ நான் பேசுறது உனக்கு புரியுது தானே.. என்கிட்ட பேசுடா, இல்லையா என்னை தொட உனக்கு தகுதி இல்லை போ அப்படின்னாவது சொல்லுடா.. தேவா என்னை பாருடா… தேவா பேசுடா, பேசுமா ” என்ற சத்யனின் கண்களில் கணக்கில்லாமல் கண்ணீர் துளிகள் வழிந்தது..
உடனே விக்ரமனுக்கு போன் செய்து இந்த தகவலை கூறினான் சத்யன்.
விக்ரமனும் அடுத்த அரைமணி நேரத்தில் வர்ஷாவிற்கு ஆரம்பத்தில் இருந்து வைத்தியம் பார்க்கும் மருத்துவரை அங்கு அழைத்து வந்தான்.
மருத்துவரும் அவளை பரிசோதித்து பார்த்து விட்டு ” எந்த முன்னேற்றமும் இல்லையே விக்ரமா.. ஒருவேளை அவங்க முகத்தை துடைக்கும் போது கவனிக்காமல் விட்ட தண்ணீர் துளிகளா கூட இருக்கலாம் திடீர்ன்னு நீங்க அதை பார்க்கும் போது உங்களுக்கு அது கண்ணீர் மாதிரி தெரிந்து இருக்கலாம் ” என்று கூறினார்..
” இல்லை விக்ரமன் சார் நான் பார்த்தேன்.. அவள் கண்ணுல இருந்து கண்ணீர் வந்தது.. உண்மை சார் என்னை நம்புங்க ” என்று சத்யன் வேண்டி கூற…
” சரிடா.. விடு” என்ற விக்ரமன் டாக்டரை தனியே அழைத்து பேசிவிட்டு மீண்டும் உள்ளே வந்தான்.
” என்ன ஆச்சு சார் .. தேவாக்கு சரி ஆகிடுச்சு தானே? ” என்று வந்தவனிடம் ஆர்வமாக கேட்டான் சத்யன்.
” ம்ம்ம் கண்டிப்பா சரி ஆகும்.. நாளைக்கு ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு வர சொன்னாரு ” என்ற விக்ரமன் வர்ஷாவின் அருகில் சென்று அவளது கண்களை பரிசோதித்து பார்க்க.. அவளது கண்களில் உண்மையாகவே எந்த அசைவும் தெரியவில்லை.. ஆழ்ந்த பெறுமூச்சு விட்டபடி சத்யனை பார்த்தவன்…
” சீக்கிரமே அவளுக்கு சரி ஆகிடும்டா.. மனசை போட்டு குழப்பிக்காத ” என்ற விக்ரமன் சத்யனின் தோளில் தட்டி கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றான்.
வர்ஷாவை பார்த்துவிட்டு வந்த விக்ரமன் ” அடுத்து என்ன செய்வது ” என்று புரியாமல் தன் வீட்டில் அமர்ந்து கொண்டிருக்க.. அவனது சிந்தை முழுவதும் கீர்த்தியின் எண்ணங்கள் தான் நிறைந்திருந்தது.
அப்போது எதர்ச்சையாக அவனது கண்கள் டேபிளின் மீதிருந்த அந்த மெட்டல் க்யூபின் மீதும், பட்டர் பிளை கார்டின் மீதும் படிந்தது… அது அன்று கீர்த்தியின் பேகில் இருந்து அவன் எடுத்து வைத்தது.
தன்னிச்சியாக அவனது கரம் அந்த பட்டர் பிளை கார்டை எடுத்து பார்க்க தொடங்கியது.
அந்த கார்டில் உள்ள கோல்டன் கிறீன் பட்டர் ப்ளையை பார்த்தவனுக்கு… அதனை எங்கோ பார்த்த நியாபகம் சிந்தையில் அடிக்கடி வந்து போனது.. ஆனால் எங்கு பார்த்தோம் என்று தான் அவனுக்கு சரிவர தெரியவில்லை. நீண்ட நேரம் யோசித்தவனது சிந்தையில் நொடியில் ஒரு மின்னல் வெட்ட.. அவனது இதழ்கள் தானாக புன்னகைத்து கொண்டது. உடனே அறையில் இருந்து வெளியே வந்தவன் அவள் இருக்கும் இடத்தை நோக்கி சென்றான்.
கண்களை சுருக்கி மெல்ல கண்விழித்தாள் கீர்த்தி…
கையில் சுருக்கென்று வலி எடுக்க.. கண்களை மூடி திறந்தவள் தன் பார்வையை சுழல விட்டாள்..
‘ எங்க இருக்கோம் இது எந்த இடம்’ என்றவள் தலையை பிடித்து கொள்ள.. அவள் அறைக்குள் சாப்பாடு தட்டுடன் நுழைந்தான் மகிழன்.
தனக்கு எதிரில் மகிழனை கண்ட கீர்த்தியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாய் பெருகியது..
” ம்மா மாமா ” என்று வாய்விட்டு அழுதவள் அவனை குழந்தையாக மாறி அணைத்து கொண்டாள்.
” மாமா நீ எங்கே போன? உனக்கு ஒன்னும் இல்லல நீ நல்லா இருக்கியா? அவங்க உன்னை சுட்டாங்களே மாமா, அதை நான் கேட்டேன்.. அப்ரோம் அக்கா.. அக்கா எங்க மாமா? நம்ம வீடு கூட என் கண்ணு முன்னாடியே எரிஞ்சு போச்சு மாமா.. அதில அம்மா.. அம்மா ” என்றவள் அடுத்த வார்த்தை பேசமுடியாமல் கதறி அழுதாள்.
” ஒன்னும் இல்லை பாப்பா.. இங்க பாரு நான் நல்லா தானே இருக்கேன்.. அத்தைக்கும் ஒன்னும் இல்லைடா அவங்க இங்க தான் இருக்காங்க ” என்று மகிழன் கூற, புரியாமல் முழித்தாள் கீர்த்தி..
” என்ன சொல்லுற மாமா.. அவங்க நம்ம வீட்டை எரிச்சிட்டாங்க அம்மா அங்க தான் இருந்தாங்க நான் பார்த்தேன் மாமா ” என்றவளது தலையை மிதமாக வருடி கொடுத்தவன்.. அவளை அம்பிகா இருக்கும் அறைக்குள் அழைத்து சென்றான்.
அங்கு கட்டிலில் படுத்திருந்த அம்பிகாவை பார்த்து கீர்த்தியின் கண்கள் மீண்டும் கண்ணீரை சுரந்தது..
” அம்மா “என்று தடுமாறி அழைத்தவள் பாய்ந்து சென்று அம்பிகாவின் மார்போடு சாய்ந்து கொண்டாள்.
ஓரளவுக்கு அம்பிகாவின் உடல் நலம் பெற்று இருந்தது.. சோர்ந்த அவரது கரங்கள் வாஞ்சையுடன் தன் மகளின் முதுகை வருடி கொடுத்தது.
அம்பிகாவின் உடல் முழுவதுமாக குணம் அடையவில்லை ஆனால் திக்கி திக்கி பேச ஆரம்பித்தார்.. எழுந்து நடக்க முடியாது ஆனால் கைகளை சிறிது அசைக்க முடிந்தது.
அம்பிகாவின் மார்பில் கண்ணீருடன் சிறிது நேரம் படுத்திருந்த கீர்த்தி ” அம்மா அப்போ அக்கா எங்க ம்மா ” என்று கேட்க..
அம்பிகாவின் முகமும் மகிழனின் முகமும் நொடியில் மாறியது…
அம்பிகாவிடம் நந்தினி தன் வயிற்றில் வளரும் குழந்தையை பற்றி பேசிய அன்று… மகிழன் குழந்தையை பற்றி கேட்கும் போதே நந்தினி முடிவு செய்து விட்டாள்.. தன் வயிற்றில் வளரும் குழந்தையை என்ன செய்வது என்று…
சத்யன் தன்னை ஏமாற்றி விட்டான்.. அவனிடம் தான் தோற்று விட்டோம் என்பதை எண்ணி எண்ணி நந்தினிக்கு தன் மீதும்.. தன் வயிற்றில் உருவாகி இருக்கும் சத்யனது குழந்தையின் மீதும் அதீத கோவம் வந்தது.
உடனே ஒரு முடிவு எடுத்தவளாக மருத்துவமனைக்கு சென்று கர்பத்தை கலைத்து விட்டு மாலை ஏழு மணி போல வீட்டிற்கு வந்தாள் நந்தினி..
வீட்டிற்கு வந்த நந்தினியிடம் அம்பிகா “எங்க போயிருந்த? ” என்று விசாரிக்க..
” ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்தேன் ” என்று நந்தினி பட்டும் படாமல் கூறினாள்.
” எதுக்குடி? உடம்புக்கு எதுவும் பண்ணுதா? ”
” அதெல்லாம் ஒன்னும் இல்லை குழந்தையை கலச்சிட்டேன்” என்று நந்தினி கூறிய அடுத்த நொடி அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார் அம்பிகா..
” பாவி ஒரு உயிரை அழிச்சிட்டு வந்து கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாமல் தைரியமா பேசுற ? ” என்றவர் மீண்டும் நந்தினியை அடிக்க..
” அதுக்கு என்ன பண்ண சொல்லுறீங்க? ஏமாத்திட்டு போனவனோட குழந்தையை சுமந்து பெத்துக்க சொல்லுறீங்களா?.. அப்படி நான் பெத்துக்கிட்டா அந்த குழந்தையை நான் பார்க்கும் போது எல்லாம் நான் அவன் கிட்ட ஏமாந்து போனது தான் எனக்கு நியாபகம் வரும்.. நான் அழிச்சிட்டு வந்தது என் குழந்தையை இல்லை.. என்னோட தோல்வியை.. என் தோல்வியோட அடையாளத்தை இன்னிக்கு நான் அழிச்சுட்டு வந்து இருக்கேன். ” என்று திமிராக பேசிய நந்தினியின் கன்னத்தில் மாறி மாறி அறைத்தார் அம்பிகா..
” எங்க இருந்துடி உனக்கு இவ்ளோ திமிரு வந்தது.. உன்னை நல்லா தானடி வளர்த்தேன்.. நல்லா தானேடி இருந்த ஏண்டி இப்படி மனசாட்சி இல்லாமல் நடந்துக்கிற? ” என்ற அம்பிகாவின் பேச்சிற்கு நந்தினியிடம் பதில் இல்லை.. மௌனமாக நின்றாள்.
அம்பிகா தன் மகளை நினைத்து புலம்பியபடியே.. பின்னே நகர்ந்து செல்ல.. அங்கு வாசல் படியை கவனிக்காத அம்பிகா தடுக்கி கீழே விழுந்தார்.. நந்தினி அதனை பார்த்து பதறியடித்து கொண்டு அவர் அருகில் வர.. அங்கு அம்பிகாவோ மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கி கிடந்தார்.. அதன் பின்னர் தான் நந்தினி அவரை அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தாள்.
இதை தான் அப்போது மகிழனிடம் கூற நினைத்தார் அம்பிகா.
உடல் சிறிது குணமடையவும், மகிழனை கண்ட அம்பிகா அனைத்தையும் அவனிடம் கூறினார்.. நந்தினியின் மீது வைத்திருந்த மகிழனது நம்பிக்கை மீண்டும் ஒருமுறை உடைத்து போனது.
” என்ன மாமா எல்லாரும் அமைதியா இருக்கீங்க? அக்கா எங்க மாமா அவளுக்கு என்ன ஆச்சு ? ” என்று மீண்டும் கீர்த்தி கேட்க..
குரலை செருமிய மகிழனும் விக்ரமன் மற்றும் வர்ஷா விஷயத்தில் நந்தினி செய்தது.. வர்ஷாவின் தற்போதைய நிலை.. மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு கீர்த்தியை நந்தினி அழைத்து சென்றது என அனைத்தையும் கீர்த்தியிடம் கூறினான்.
அதை அனைத்தியும் கேட்ட கீர்த்திக்கு வார்த்தை வர மறுத்தது… அமைதியா மீண்டும் தன் அறையை நோக்கி சென்றாள்.
அவளை பின் தொடர்ந்து வந்த மகிழன் ” என்னடா எதுவும் சொல்லாமல் வந்துட்ட? ” என்று கேட்டான்
” என்ன சொல்லுறது மாமா.. நீங்க எல்லாரும் அக்காவை தப்பானவள், கெட்டவன்னு சொல்லும் போது எல்லாம் எனக்கு வலிக்குது மாமா.. அக்கா எப்படி மாமா எனக்கு அப்படி ஒரு கொடுமை பண்ண நினைப்பாள்.. அவளும் எனக்கு ஒரு அம்மா தானே மாமா.. பொண்ணு கிட்டயே வந்து உன் அம்மா தப்பானவள் கெட்டவன்னு நீங்க எல்லாம் சொல்லும் போது அதை என்னால ஏத்துக்க முடியல மாமா… அவளை நான் அக்கவா பார்க்கலயே அம்மாவா தான பார்த்தேன். அவள் என்னை கொன்னா கூட என்னால அக்காவை வெறுக்க முடியாது மாமா… இங்க யாரு சொல்லுறது உண்மை, யாரு சொல்லுறது பொய் எதுவும் எனக்கு புரியல மாமா.. யாரு நல்லவங்க யாரு கெட்டவங்கன்னு கூட எனக்கு பிரிச்சு பார்க்க தெரியல மாமா… என்னால முடியல மாமா.. மனசு எல்லாம் பாரமா இருக்கு.. நாலு வருஷத்துக்கு முன்னாடி நீ, நான், அம்மா, அக்கா எல்லாரும் எவ்ளோ சந்தோஷமா இருந்தோம்.. அந்த வாழ்க்கை எனக்கு மறுபடி வேணும் மாமா.. இவங்க யாரும் எனக்கு வேண்டாம் எதையும் என்னால யோசிக்க முடியல.. மனசு எல்லாம் ரணமா வலிக்குது மாமா… தாங்க முடியல.. ப்ளீஸ் என்னை கொஞ்சம் தனியா விடு ” வேதனையுடன் கூறினாள் கீர்த்தி.
” புரியுதுடா சாப்பிட்டு கொஞ்சம் நேரம் தூங்கு எல்லாம் சரி ஆகிடும் ” என்று மகிழன் கூற
” எனக்கு எதுவும் வேண்டாம் மாமா ” என்று கீர்த்தி கூறி கொண்டு இருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தான் விக்ரமன்.
வாசலில் விக்ரமனை கண்ட கீர்த்தியின் மனதில் வலியும், சந்தோஷமும் ஒரு சேர தோன்றி மறைந்தது.
” சார் நீங்க இங்க? வாங்க சார் ” என்ற மகிழன் விக்கிரமனை அழைக்க.. உள்ளே வந்த விக்ரமன். கீர்த்தியை பார்க்க.. அவளோ முகத்தை திருப்பி கொண்டாள்.
” நான் அவள் கிட்ட கொஞ்சம் பேசணும்.. ப்ளீஸ் நீங்க ” என்று விக்ரமன் மகிழனிடம் அனுமதி கேட்க.. விக்கிரமனை சற்றென்று நிமிர்த்து பார்த்தாள் கீர்த்தி..
அவளது பார்வையை உணர்ந்த விக்ரமன் இதழோரம் மறைத்த புன்னகையுடன் அவளை பார்த்து ஒற்றை கண் சிமிட்ட.. அவனை முறைத்து பார்த்தாள் கீர்த்தி.
” இல்லை சார் எதுக்கு ” என்று மகிழன் தயங்கவும்…
” நீ போ மாமா நான் பேசிக்கிறேன் ” என்ற கீர்த்தியின் விழிகள் விக்ரமனின் மீது பதிந்து இருந்தது.
மகிழனும்” சரி” என்று கூறி வெளியே செல்ல… அவன் செல்லவும் விரைந்து சென்று கதவை தாழிட்டான் விக்ரமன்.
அதனை பார்த்து உள்ளூர பயம் கொண்ட கீர்த்தி ” பேசணும்னு தானே சொன்னிங்க? அப்ரோம் எதுக்கு கதவை லாக் பண்ணுறீங்க ” என்றவள் எழுந்து வந்து கதவை திறக்க முற்பட…வழக்கம் போல அவளுக்கு தாழ்ப்பாள் எட்டவில்லை..
அதனை புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்த விக்ரமன் மெல்ல அடியெடுத்து வைத்து அவள் அருகில் வரவும்… பின்னால் நகர்ந்த கீர்த்தி ” இங்க பாருங்க.. நான் உங்க மேல கோவமா இருக்கேன்.. என் அம்மாவும், என் மாமாவும் நல்லா இருக்காங்க அதனால உங்க மேலே எனக்கு கோவம் போய்டும்னு மட்டும் நினைக்காதீங்க, நீங்க என்கிட்ட ரெட்டை வேசம் போட்டதை நான் இன்னும் மறக்கல.. என் மாமாவையும் அம்மாவையும் நெனச்சு எப்படி எல்லாம் அழுதேன் தெரியுமா? எல்லாம் உங்களால தான் ” என்று சிறுபிள்ளை போல முகத்தை தூக்கி வைத்து கொண்டு சண்டைக்கு காத்திருக்கும் தன் குட்டி காதலியின் மீது எல்லை இல்லாமல் காதல் கொண்டான் விக்ரமன்.
” சாப்பிடலையா? ” என்று அங்கு இருந்த உணவு தட்டை எடுத்து கையில் வைத்து கொண்டு கேட்டான் விக்ரமன்.
” நான் என்ன பேசுறேன், நீங்க என்ன கேக்குறீங்க ? ” என்று அதற்கும் அவள் கோவம் கொள்ள… தனது கரத்தினை கழுவி வந்தவன்… அவளை பிடித்து இருக்கையில் அமரவைத்து. இட்லியை எடுத்து அவளுக்கு ஊட்டி விட தொடங்கினான்.
வாயில் இட்லியை வைத்து கொண்டு ” நான்…உங்க மேல” என்று பேச வந்தவளது வாயில் மீண்டும் இட்லியை திணித்தான்.. வாய் முழுவதும் இட்லியை வைத்து கொண்டு அவனை முறைத்தபடி அனைத்தையும் உண்டு முடித்தாள் கீர்த்தி.. அவள் சாப்பிட்டு முடிக்கவும் எழுந்து சென்று கையை கழுவிவிட்டு வந்தவன். அவளை பார்த்து இதழ் பிரித்து சிரித்தான்.
அதனை பார்த்து ” இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க? ” என்று மூக்கு சிவக்க கோவம் கொண்டவளின் அருகில் வந்து அவளது உதட்டோரம் ஒட்டி இருந்த உணவை துடைத்து விட்டவன்… நொடியில் மென்மையாக அவளை அணைத்து கொண்டான்.. அவனது அணைப்பில் அவளது பேச்சு தடை பட்டது… அவனது பிடி இறுக இறுக மெல்ல மெல்ல அவளது குரல் உள் வாங்கியது…
” என்ன… என்..ன பண்ணுறீங்க? ” என்றவளின் கரத்தை தன் ஒரு கை கொண்டு பிடித்தவன் தனது இடுப்பை சுற்று அவளை பிடிக்க வைத்தான்… அவளோ அவன் செயல் புரியாமல் முழித்து கொண்டிருக்க.. அவனது மறுகரமோ அவளது இடையில் அழுத்தமாக பதிந்தது… கீர்த்தியோ மெல்ல தன் கண்களை மூடவும் சற்றென்று அவளை விட்டு விலகி நின்று கொண்டான்.
கீர்த்தியோ இன்னும் கண்களை மூடி இருக்க.. அவளை புன்னகையுடன் பார்த்தபடி நின்றிருந்தவனின் கையில் கீர்த்தி அணிந்திருந்த அந்த கோல்டன் கிறீன் பட்டர் ப்ளை செயின் இருந்தது. அவளது இடையில் இருந்து அவளே அறியாத வண்ணம் அதனை கழட்டி எடுத்திருந்தான் விக்ரமன்.
அவனது விலகலை உணர்ந்து மெல்ல கண் விழித்த கீர்த்தி, எதிரில் தன் செயினுடன் நின்றிருந்த விக்ரமனை திகைப்புடன் பார்த்தவள் தனது இடையில் கைவைத்து செயின் இருக்கிறதா? என்று தொட்டு பார்த்தவள் அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
” அது என்னோடது.. என் அக்கா எனக்காக வெளிநாட்டுல இருந்து வாங்கி வந்தது ” என்று சொன்ன கீர்த்தியை சலிப்பாக பார்த்த விக்ரமன்.
‘ இப்படி வேற சொல்லி வச்சு இருக்காளா? ‘ என்று எண்ணி கொண்ட விகர்மன் “இது எனக்கு வேணும்.. நான் உனக்கு வேற வாங்கி தரேன் ” என்று கூறினான்.
” எனக்கு வேற எதுவும் வேண்டாம் என் அக்கா வாங்கி கொடுத்த இந்த செயின் தான் வேணும் ” என்றவள் அவனிடம் இருந்து செயினை பிடுங்க முயற்சி செய்தாள்.. அவளது செயலை இதழோரம் மறைத்த புன்னகையுடன் பார்த்த விக்ரமன் அவளை ஒருகையால் பிடித்து தன்னோடு சேர்த்தணைத்தவன் அவளை புருவம் உயர்த்தி பார்த்தான்.
” விடுங்க ” என்று கூறி அவனிடம் இருந்து விலக முயன்றவளின் கண்களை ஊடுருவி பார்த்தவன் அவளது கண்களில் தெரிந்த கலக்கத்தை உணர்ந்து பின்னர் அவளை விடுவித்தான்.
அவளை பார்த்து மென்மையாக சிரித்தவன் வெளியே செல்ல பார்க்க ” இதுக்காக தான் இங்கே வந்திங்களா? ” என்று கேட்டாள் கீர்த்தி.. அந்த வார்த்தையில் ” எனக்காக வரலையா? ” என்ற அர்த்தம் மறைந்து இருந்தது.
அவளது கேள்வியின் அர்த்தம் உணர்ந்தவன் அவளை நெருங்கி வந்து அவளது கழுத்தில் தான் கொண்டு வந்த ‘v’ என்ற டாலர் செயினை போட்டு விட்டு அவளது நெற்றியில் மென் முத்தம் இட்டு விலகி நின்றான்.
கண்களை மூடி அவனது முத்தத்தை ஏற்றவளின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் வழிந்தது.
அவளது கண்ணீரை துடைத்து விட்டவன், அவளது முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தினான்.
” நான் உன் முன்னாடி ரெட்டை வேசம் போட்டாலும் என் மனசு உனக்கு உண்மையா தான் இருந்தது. ஒரு நொடி கூட நான் உன்கிட்ட நடிக்கலடி.. நான் நடந்துகிட்ட முறை ஏதாவது உனக்கு வலியை கொடுத்து இருந்தால் என்னை.. ” என்றவன் ஒருகணம் கண்களை மூடி திறந்து ” மன்னிச்சிடு.. ” என்றான்.
அவளிடமோ அதற்கு எந்த பதிலும் இல்லை. கண்களில் கண்ணீர் மட்டுமே நிறைந்து இருந்தது.. உதடுகள் மௌனம் காத்தது…
அவளை பார்த்தபடி தனது சட்டையின் இரு பட்டனை கழட்டியவன் மெண்மையான அவளது வலது கரத்தை பற்றி தன் மார்பின் மீது வைத்தான் ” இங்க நீ தான் இருக்க.. உயிரே போனாலும் இது மாறாது ” என்றவனை தவிப்புடன் பார்த்தவள் அப்போது தான் கவனித்தாள் அவனது மார்பில் எழுதி இருந்த ” ஸ்ரூதி ( sruthi)” என்ற பெயரை.. அவள் அதனை உணர்ந்து அவனிடம் பேச வாய் எடுக்கும் முன் கதவினை திறந்து கொண்டு வெளியே சென்றிருந்தான் விக்ரமன்.
அவனது காதலின் ஆழம் உணர்ந்தவள் அப்படியே நொறுங்கி அமர்ந்தாள்..
மனம் நெருடலாக இருக்கவே… மகிழனை அழைத்து கொண்டு கோவிலுக்கு கிளம்பினாள் கீர்த்தி… அப்போது அந்த கோவில் வாசலில் வைத்து லேகாவை பார்த்தான் மகிழன்..
மகிழனது பழைய முதலாளியின் மகள் தான் லேகா.. அன்று அம்பிகாவின் வீட்டுக்கு வந்து மகிழனை மாப்பிள்ளை கேட்டது லேகாவின் தந்தை தான்.
மகிழனை கண்ட லேகா ஒருவித முகமலர்ச்சியுடன் அவன் அருகில் வந்து நலம் விசாரித்தாள்.
அவளது அப்பாவை பற்றி மகிழன் விசாரிக்க.. லேகாவின் முகம் நொடியில் வாடி போனது.
” அவர் இறந்துட்டாரு மகி.. இப்போ நான் தான் அவரோட பிஸ்னசை பார்த்துட்டு இருக்கேன் ” என்று லேகா கூற…
” உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? ” என்று லேகாவிடம் கேட்டாள் கீர்த்தி.
“இல்லை ” என்ற லேகாவின் பார்வை ஒரு கணம் மகிழனை தழுவி சென்றது.
” சரி மாமா நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க.. நான் ஐஸ் க்ரீம் வாங்கிட்டு வரேன் ” என்ற கீரத்தி மகிழனின் பர்ஸை எடுத்து கொண்டு செல்ல..
” பாப்பா இரு நானும் வேரேன் ” என்ற மகிழனின் குரல் காற்றில் கரைந்து போனது..
ஐஸ்க்ரீம் வாங்கி கொண்டு வெளியே வந்த கீர்த்தி, அங்கு நந்தினியை பார்த்து திகைத்து நின்றாள்..
தனக்கு தேவையான சில பொருட்களை வாங்க அங்கு வந்திருந்தாள் நந்தினி.. வாங்கி முடித்தவள் சரத்துடன் காரில் ஏறி செல்வதை பார்த்த கீர்த்தி ” அக்கா… அக்கா” என்று அழைத்தபடி அவள் பின்னால் செல்ல.. அப்போது இடையில் வந்த ஒரு ஆட்டோவை மறித்து அதனுள் ஏறிக்கொண்டவள் நந்தினியின் காரை பின் தொடர்ந்து சென்றாள்.

