கிருஷ்ணாரத்யா 15

Loading

அத்தியாயம்:15

 

 

இரவென்றாலும்  சென்னை மாநகரின் சோழிங்கநல்லூர் பகுதியில், ஜனக் கூட்டம் அவர்களின் வேலையில் மும்மரமாய் இருந்தது. பிரதான சாலையின் ஓரத்தில் தோளில் மாட்டப்படிருந்த ஸ்லிங் கைப்பையுடன், கையில் அலைப்பேசியை வைத்திருந்தவளின் செவியில் வெள்ளை நிற ஏர் பட் குடியிருந்தது,

அவளின் குழல் கற்றைகள் அவளின் நடைக்கேற்ப நாட்டியமாடியது, பெண்ணவளின் கருவிழிகளோ தன்னவனைத் தேடி அலைந்தது, கழுத்தில் மாட்டபட்டிருந்த அடையாள அட்டையுடன், தன் அடையாளத்தைத் தேடிக் கொடுத்தவனைத் தேடிக்கொண்டிருந்தாள்.

“ஹே ஆரா.! எங்கே இருக்க.?”ஏர்பட்டின் வழி அவன் குரல் அவளின் செவிகளைத் தீண்டியது.

“இங்கே தான் இருக்கேன் க்ரிஷ் நீ எங்கே இருக்க.? உன்னைத் தான் தேடிக்கிட்டு இருக்கேன். இங்கே பயங்கர ட்ராஃபிக்” எனப் பேசியபடி அங்கும் இங்கும் திரும்பி பார்த்தாள்.

“ஐ யெம் நியர் .” என ஒரு உணவகத்தின் பெயரை சொன்னான்.

“ஓகே வெயிட் க்ரிஷ், ரோட் க்ராஸ் பண்ணிட்டால் வந்துடுவேன், உனக்கு ரொம்பப் பக்கத்தில் தான் இருக்கேன்” என அவள் பேசியபடி சிக்னலை பார்க்காமல் சாலையைக் கடக்க முயன்றால், ஒரு லாரியின் ஹாரன் வீறிட்டு அடித்தபடி அவளை நெருங்க,

“ஆ.!” என்ற ஆராவின் அலறலை தொலைப்பேசியில் தொடர்பில் இருந்தவன் கேட்டு,

“ஆரா வாட் ஹப்பன் .? ஆரா.!” அவளிடம் இருந்து எந்தப் பதிலும் வர வில்லை, அவன் ஐந்து நிமிடம் நடந்து சென்றால் அந்த ட்ராஃபிக் சிக்னலை அடைந்து விடலாம், அவளுக்கு என்ன ஆனதோ என்ற பதற்றத்தில் விரைந்து ஓடி வந்தான் ஆதித் கிருஷ்ணா. பலகோடிக்கு சொந்தக்காரன், அவன் விழி அசைவின் உத்தரவிற்குக் காத்திருந்து. அவன் கேட்டதைச் செய்து கொடுக்கும் பணியாளர்கள் இருக்க, இப்போது தன் மனம் கவர்ந்தவளுக்காகச் சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறான் ஆதித் கிருஷ்ணா.

அந்த ட்ராஃபிக் சிக்னலை அவன் அடைந்த போது கூட்டமாய் மக்கள் கூடியிருந்தனர். அதில் வெள்ளை நிற சட்டை அணிந்திருந்த ட்ராபிக் காவலர்கள் இருவர் கூட்டத்தைக் கலைக்க முயற்சி செய்துக்கொண்டிருந்தனர். அதற்குள் வரிசைக்கட்டி நின்றுக்கொண்டிருந்த வண்டிகள் ஹாரனை ஒலிக்க விட்டுக்கொண்டிருந்து. கூட்டத்தை விலக்கி கொண்டு உள்ளே புகுந்தவன் கண்டது என்னவோ மயங்கிய நிலையில் கிடந்த ஆராவை தான். உடனே தார்சாலையில் மண்டியிட்டவன் தன்னவளை மடியில் ஏந்தியிருந்தான்.

“ஆரா.! ஆரா.!” அவள் கன்னம் தட்டி எழுப்ப முயன்றான். அவளோ விழியை இம்மி அளவும் திறக்கவில்லை.

“ஆம்புலன்ஸ்க்குச் சொல்லிருக்கு சார் இப்போ வந்திடும்” அங்கிருந்த பெரியவர் குரல் கொடுக்க, இந்த ட்ராபிக்கில் ஆம்புலன்ஸ் வருவதற்கே நேரம் ஆகும் என்று உணர்ந்தவன்.

“எனக்குத் தெரிஞ்சவங்க தான் சார் நான் பார்த்துக்கிறேன்” எனச் சொல்லி அவளைத் தூக்க முற்பட்ட போது,

“சார்.! அப்படிலாம் விட முடியாது, நீங்க அந்தப் பொண்ணுக்கு என்ன வேணும்” என்று ஒரு காவலர் கேட்க,

“ஷி இஸ் மை வொய்ஃப்” எனக் கம்பீரத்துடனும் அதே சமயம் அங்கிருப்பவர்கள் செவியில் விழும் படி கத்தியிருந்தான். அந்தக் கூட்டத்தில் அவன் சொன்னதைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றாள் அந்தப் பெண். அவள் கையில் இருந்த ஷாப்பிங் பைகள், அந்த தார் சாலையில் விழுந்தது. அந்த பெண்ணோ ஆதித் கிருஷ்ணாவையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

யாரையும் பொருட்படுத்தாது தன்னவளை கையில் ஏந்திக்கொண்டு தன்னுடைய கருஞ்சிறுத்தையை நோக்கி ஓடினான் ஆதித் கிருஷ்ணா. அவனின் எண்ணம் எல்லாம் தன்னுடைய ஆராவுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பது தான்.

***************

மருத்துவமனையின் காத்திருப்பு அறையில் அங்கும் இங்கும் நடந்துக்கொண்டிருந்தான் ஆதித், அவனை முறைத்தபடி நின்றிருந்தாள் மஹதி.

“ஆதித்.! நீங்க கொஞ்ச நேரம் நிக்கிறிங்களா.?”

“என்ன மஹதி.? நீ எதுக்கு ஹாஸ்பிட்டல் வந்த.?”

“உங்களைப் பார்த்து தான் வந்தேன் ஆதித்.! யார் அந்தப் பொண்ணு வொய்ஃப்ன்னு சொல்லிட்டு தூக்கிட்டு வர்றீங்க.?” அவள் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாய்த் தெரிந்தது.

“ஆமாம் அவ என்னோட வொய்ஃப் தான் மஹதி, அதுக்கு நீ ஏன் டென்சன் ஆகுற.?” ஆராவுக்கு என்ன ஆனது என்ற பதற்றம் அவனுள் இருந்தது, அவசர சிகிச்சை பிரிவில் அவளுக்குச் சிகிச்சை நடந்துகொண்டிருப்பதை நினைத்துக் கவலையில் இருந்தவனுக்கு, மஹதி பேசும் பேச்சுகள் அநாவசியமாய்ப் பட்டது.

“ஆதித் விளையாடுறீயா.? வீட்டில் என்னை மேரேஜ் பண்ணிகிறதுக்கு ஓகே சொல்லிட்டு இப்போ யாரோ ஒருத்தியை வொய்ஃப்ன்னு சொல்லுற” என மஹதி சொன்ன வார்த்தைகள் அவனுள் வியப்பை ஏற்படுத்தியது.

“உன்னை மேரேஜ் பண்ணிக்கிறேன்னு சொன்னேனா.? நான் ஆராவை பத்தி தான் வீட்டில் பேசினேன்”

“என்ன ஆதித் சொல்ற.?”

“நீ முதலில் இங்கிருந்து கிளம்பு. நான் உன்னைக் கல்யாண பண்ணிகிறதா சொல்லவே இல்லை மஹதி, நானும் ஆராவும் லவ் பண்ணுறோம், அவளைத் தான் நான் கல்யாணமும் பண்ணிப்பேன்” என உறுதியாய் சொல்லி அவளை உதாசீனம் செய்து அங்கிருந்து நகர்ந்தவன் அவசர சிகிச்சை பிரிவை நோக்கி விரைந்தான். கண்ணாடி கதவின் வழி தன்னவளை பார்க்க முற்பட்டான் ஆனால் அவள் உள்ளே இல்லை. அவனைக் கடந்து சென்ற செவிலியரிடம் விசாரித்தான்.

“சிஸ்டர் ஆரா.?”

“அவங்களை ஸ்கேன் எடுக்க அழைச்சிட்டு போயிருக்காங்க சார்” எனச் சொல்லி அவளும் நகர்ந்துவிட, சில மணி நேரங்கள் கடந்த பின் ஆராவை பார்க்க அனுமதி கொடுக்கபட்டது.

தலையில் சிறிய கட்டுடன் அமர்ந்திருந்தாள் ஆரா, அவளின் விழிகளில் சோகம் இழையோடியது, அவனின் வன்மையான கரம் மென்மையாய் அவளின் வென்பஞ்சுவிரல்களைப் பிடித்தது.

“ஆரா.! சாரி என்னால தானே” என்றான் அவளிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை, அவள் அதி தீவிரமாய் எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

“க்ரிஷ் இப்போ மேரேஜ்க்கு என்ன அவசரம்.?” அவள் முதலில் அதைத் தான் கேட்டாள், அவளின் உடல் நிலை நினைத்து கவலை கொண்டிருந்தவன் அவள் விழிகளைப் பார்த்தான். அதில் சொல்ல முடியாத கவலை குடிக்கொண்டிருப்பதைப் போல் முகத்தை வைத்திருந்தாள் ஆரா.

“அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம் ஆரா.! உனக்குப் பெயின் இருக்க.?”

“க்ரிஷ் இது சின்ன அடி தான். ஐ யெம் ஓகே, இவ்ளோ பெரிய ஹாஸ்பிட்டல்ல வந்து சேர்த்து விட்டிருக்க, அவங்க பங்குக்கு டெஸ்ட் அது இதுன்னு பயம் காட்ட தான் செய்வாங்க”

“ஆரா.! நீ மயங்கினதும் நான் ரொம்பவே பயந்துட்டேன் தெரியுமா.?”

“இதில் பயப்பட என்ன இருக்கு க்ரிஷ் முகத்தில் தண்ணி தெளிச்சு, ஃப்ரஸ்ட் ஏய்ட் பண்ணியிருந்தாலே நான் ஓகே ஆகிருப்பேன்” என அவள் என்னவோ எளிதாய் சொல்லி முடித்துவிட்டாள், அவனால் தான் அதை ஜீரணிக்க முடியவில்லை. தன் காதல் தார் சாலையில் வீழ்ந்து கிடக்கும் போது. ஆறாம் அறிவெல்லாம் ஆதி காலத்துக்கு சென்றுவிடும் போல, உயிர்போகும் வழியை பெற்றவனுக்கு முதல் உதவி செய்ய வேண்டும் என்றுக் கூட தோன்றவில்லை.

“ஸ்மைலி நீ ஓகே தானே.?”

“நான் நல்லாதான் இருக்கேன் க்ரிஷ்” எனப் பெட்டில் இருந்து எழுந்து நின்று அங்கும் இங்கும் நடந்து காண்பித்தாள்.

“ஹே கேர்ஃபுல்” பதறினான் அவன்.

“அய்யோ க்ரிஷ்.! நான் நல்லா இருக்கேன்” என நடந்தவள் தன் கைப்பையை எடுத்துத் தோளில் போட்டாள்.

“ஆரா என்ன பண்ணுற.?”

“ஜாப்க்கு டைம் ஆகிடுச்சு க்ரிஷ்” எனத் துரிதமானாள் ஆரா.

“உனக்கு ஆக்ஸிடன்ட் ஆகிருக்கு ஆரா. ரெஸ்ட் எடுக்க வேண்டாமா.?”

“எது இந்தச் சின்ன அடிக்கு ரெஸ்ட் எடுக்கணுமா, என் மேல லாரி ஏறி ஒண்ணும் போயிடலை, ஜெஸ்ட் மயக்கம் போட்டுட்டேன் அவ்வளவு தான். நான் என்ன சின்னக் குழந்தையா க்ரிஷ் இவ்ளோ பெம்பர் பண்ணுற, இந்த அன்பு என்னை ரொம்பவே மிரட்டுது க்ரிஷ்” என்றவள் தன் அடையாள அட்டையைத் தேடிக்கொண்டிருந்தாள்.

“ஆரா ஒன் மினிட்” என அவளை நிறுத்தியவன் மறுநொடி அவளைத் தனக்குள் புதைத்துக்கொண்டான்.

“ரொம்பப் பயந்துட்டேன் ஆரா.! என்னை விட்டுட்டு போயிடுவியோன்னு ரொம்பவே பயந்துட்டேன், உனக்குச் சின்னக் காயமா தெரியலாம், ஆனால் எனக்கு அப்படி இல்லைடி, உயிர் போகும் வலியை கொடுத்திட்ட டி, இங்கே வழிக்குதுடி” என தன் இதயத்தை சுட்டிக்காட்டினான்.

“இதுக்கெல்லாம் நான் தான் காரணம்ன்னு நினைக்கும் போது” என இடைநிறுத்தியவன்.

“ஐ லவ் யூ ஆரா.! என்னை விட்டு தள்ளி மட்டும் போயிடாதே” எனச் சொல்லி அவள் கன்னத்தில் இதழ்பதித்தவனின் விழிகளில் தேங்கி நின்ற நீர், அவள் மீதான காதலை அவனுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. தன்னை மறந்து அவனை மேலும் ஒன்றியவள்.

“க்ரிஷ்.! உன்னை விட்டு நான் எங்கேயும் போகமாட்டேன்” என அவனின் மார்பில் இதமாய் இளைபாறினாள் அவனின் ஆரத்யா.

“எக்ஸ்க்யூஸ்மீ” என்ற குரல் கேட்டு இருவரும் திடுக்கிட்டு அறையின் வாயிலை பார்க்க, புன்னகைத்தபடி உள்ளே நுழைந்தாள் மஹதி.

“இங்கே ஆரத்யா யாரு.?” என்றாள் சிரித்த முகமாக மனதில் நஞ்சை கலந்திருந்தவளின் குரலில் தேன் வழிந்தது.

“நான் தான்” எனச் சொன்னவள் அவளின் க்ரிஷிடம் இருந்து விலகி நின்றாள்.

“இது உங்களோட ஐடி கார்டா.?” கையில் வைத்திருந்த அடையாள அட்டையைக் காட்டினாள்.

“ஆமாம் என்னோடது தான், ரொம்பத் தேங்க்ஸ் .” என அவள் பெயர் தெரியாமல் திணறிய போது.

“ஐ யெம் மஹதி” என ஆரத்யாவிடம் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டாள்.

“தேங்க் யூ சோ மச் மஹதி” எனச் சொல்லி அடையாள அட்டையை வாங்கிக் கொண்டவள்.

“க்ரிஷ் நான் கிளம்புறேன் ஆபிஸ்க்கு டைம் ஆகிடுச்சு”

“வெயிட் ஆரா.! நான் உன்னை ட்ராப் பண்ணுறேன்” எனச் சொல்லியவன் மஹதி புறம் திரும்பியவன்.

“தேங்க்யூ மஹதி.!” எனச் சிநேகமாய்ப் புன்னகைத்து தன்னவளை பாதுகாப்பாய் அங்கிருந்து அழைத்துச் சென்றவனை வன்மமாய்ப் பார்த்திருந்தாள் மஹதி.

அவர்கள் அங்கிருந்து சென்ற பின் அவசரமாய்த் தன் தந்தை ஜெகன் நாதனுக்கு அழைப்பு விடுத்தாள்.

“டாட்.!”

“சொல்லுமா.!”

“ஆதித் ஒரு பொண்ணைக் காதலிக்கிறான் டாட்”

“மஹதி.! நிஜமாகத் தான் சொல்றீயா.?”

“எஸ் டாட், அவ பேர் ஆரத்யா, எதோ ஐடி கம்பெனில வேலை பார்த்திட்டு இருக்கா, அவளோட ஐடி கார்ட்டை உங்களுக்குப் போட்டோ எடுத்து அனுப்பியிருக்கேன், எனக்கும் ஆதித்க்கும் நடுவுல அவ இருக்கவே கூடாது டாட்” என அவள் உத்தரவாய் சொல்ல,

“சொல்லிட்டல்ல அவளை நான் பார்த்துக்கிறேன்மா” எனச் சொல்லி அழைப்பை துண்டித்திருந்தார் மஹதியின் தந்தை ஜெகன்

************

இரவின் இருளை கிழித்துத் தார் சாலையில் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தது அந்த ஜாக்குவார் அவனின் கருஞ்சிறுத்தை, அதன் வேகம் என்னவோ ஆமைப்போல் தான் இருந்தது, விரைந்து சென்று விட்டாள் அவளை அலுவலகத்தில் சீக்கிரம் விட்டு விட்டு அவளைப் பிரிந்து செல்ல வேண்டுமே என்ற எண்ணத்தில் முடிந்தவரையில் மெதுவாகத் தன் வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தான்.

“நம்ம என்ன ஊர்வலம் போகிறோமா க்ரிஷ்.? இவ்வளவு மெதுவா போற.?” என்று சலித்துக்கொண்டாள்,

“உனக்குத் தான் காயம் பட்டிருக்கு அதான் உனக்கு ஹர்ட் ஆகக் கூடாதுன்னு ஸ்லோவா போறேன் ஸ்மைலி” என்றவன் முகத்தில் எந்த உணர்வும் தென்படவில்லை.

“இதுக்கு நான் கேப் பிடிச்சே போயிருப்பேன்”

“அப்படியெல்லாம் உன்னைத் தனியா விடமுடியாது”

“இதுக்கு முன்னாடி தனியா தானே போயிட்டு வந்திட்டு இருந்தேன், இப்போ என்னவாம்” அவள் விழி உயர்த்திக் கேட்டாள் ஆரா.

“இதுக்கு முன்னாடி எப்படியோ, இப்போ ஏகே குரூப் ஆஃப் கம்பெனியோட முதலாளியம்மா கேப்ல போகலாமா.?” என்று அவன் விளையாட்டாய்ச் சொன்னான் விணையாகப் போவதை அறியாமல்.

“க்ரிஷ்.! நம்ம காதலிக்கிறோம் தான் நான் இல்லைன்னு சொல்லலை, ஆனால் உடனே கல்யாணம்ன்னு பேசுறதில் எனக்கு உடன்பாடு இல்லை” என அவள் பொட்டில் அடித்தாற் போல் சொல்லி முடித்தாள்.

“ஆரா.!” கோபமாய் அவன் கத்திய போது வாகனத்தின் வேகமும் மெல்ல உயர்ந்தது.

“எதுக்கு க்ரிஷ் கத்துற.? என் மனசுல இருக்கிறதை நான் நேரடியாய் சொல்லிடுறேன்”

“என்னோட டெஸ்டினேசன் நிறைவேறுற வரைக்கும், கல்யாணத்தைப் பத்தி பேசாதே க்ரிஷ்”

“டெஸ்டினேசனா.? ஏன் மேரேஜ்க்கு அப்பறம் உன்னோட டெஸ்டினேசனை நிறைவேத்த முடியாதுன்னு நினைக்கிறியா ஆரா.?”

“கண்டிப்பா உன்னைக் கல்யாணம் பண்ணிகிட்ட என்னோட டெஸ்டினேசன் அடுத்த நொடியில் கூட நடந்திடலாம், ஆனால் அதில் எனக்குத் துளி அளவும் சந்தோசம் இருக்காது க்ரிஷ்”

“அப்படி என்ன தான் டெஸ்டினேசன் ஆரா சொல்லு கல்யாணத்துக்கு முன்னாடியே நான் நடத்திக்காட்டுறேன்” என அவன் உறுதியாய் அவன் சொல்ல,

“இதுக்குத் தான் நான் பயப்படுறேன் க்ரிஷ் உன்னோட அன்பு என்னை ரொம்பவே மிரட்டுது, எனக்காக எதையும் செய்யத் துணியும் உன்னோட குணம் என்னை ரொம்பவே பயம் காட்டுது, என்னோட கனவை என்னோட சொந்த உழைப்பில் அடைய முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன் க்ரிஷ்” என அவள் சொல்வதை இவன் ஏற்றுக்கொள்ளும் மன பக்குவத்தில் இல்லை, மஹதியின் சூழ்ச்சியைச் சிறு வயதில் இருந்து அறிந்திருந்தான் அவன். இப்போது அவள் திருமணம் செய்துக்கொள்ளச் சொல்கிறாள், தான் நினைத்தை நடத்தியே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்தில் இருக்கும் மஹதி, தன்னை ஆராவிடம் இருந்து பிரித்துவிடுவளோ என்று முதல் முறை பயம் கொள்ள ஆரம்பித்தான் ஆதித் கிருஷ்ணா.

“ஆரா உனக்குப் பதினைந்து நாள் டைம் தர்றேன் அதுக்குள்ள ஒரு முடிவை சொல்லு, நான் டெல்லி வரைக்கும் ஒரு மீட்டிங்கு போறேன் அதை நான் முடிச்சிட்டு வரும்போது நீ என்ன சொல்கிறாயோ அதை வைத்து தான் நான் வீட்டில் பேச முடியும்” என உறுதியாய் சொன்னவனின் வாகனம் அவளின் ஆபிஸின் முன் நின்றது.

“க்ரிஷ்.!”

“ம்ம்”

“ஏன் உன்னோட ஃபேஸ் இப்படி மாறிடுச்சு.? என் மேல் கோபமா இருக்கியா.?”

“ஆமாம் கோபம் தான்”

“சாரி க்ரிஷ், உன்னை ஹர்ட் பண்ணணுன்னு நினைக்கலை”

“எதுக்குக் கோபம்ன்னு கேட்கமாட்டியா.?”

“எதுக்கு க்ரிஷ்.?”

“இப்படித் தலையில் அடிபட்டதோடு நீ வேலை செய்தாக வேண்டுமா ஆரா.? அது தான் கோபம், உன்னோட டெஸ்டினேசன் என்னன்னு சொன்னால் கண்டிப்பா நான் குறுக்க நிக்க மாட்டேன்” என அவன் எங்கோ பார்த்துப் பேசினான்.

“என்னைப் பார்த்து பேசு க்ரிஷ்”

“சொல்லு ஆரா.?” அவள் விழியைப் பார்த்து நேராய் கேட்டான்.

“க்ரிஷ்.! ரொம்பச் சூடா இருக்கியா.?”

“இல்லை ரொம்பச் சில்லுன்னு இருக்கேன்”

“ஓஓ.! ரொம்பத் தான் கோபம் போல” புருவம் உயர்த்தினாள்.

“ஆமாம்”

“காஃபியுடன் காதல் செய்யலாமா.?” அவனைக் காஃபி குடிக்க அழைத்தாள் அவள்.

“மிட் நைட்ல காஃபி குடிக்க மாட்டேன்”

“ஓ.!”

“சரி அப்போ நான் ஆபிஸ்கே போறேன்” எனப் புன்னகைத்தவளை.

“ஹே ஸ்மைலி.! லெட்ஸ் கோ ஃபார் காபி” என்றான் ஆதித்.

அதே வளாகத்தில் இருந்த கேஃப் காஃபி டே வினுள் இருவரும் நுழைந்தனர்.

“டூ கேப்பர்ச்சீனோ” எனச் சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தாள் ஆரா அவளெதிரே அவனும் அமர்ந்தான்.கேப்பர்சீனோ வரும் வரையில் புயல் அடித்து ஓய்ந்தது போல் அமைதி நிலவியது. ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

“இப்படியே பார்த்திட்டு இருந்தால் என்ன அர்த்தம் ஆரா.? என்ன தான் நினைச்சிட்டு இருக்க”

“க்ரிஷ்.!” எனத் தொடங்கியவள் அவளின் இலக்கையும் அதற்காக அவள் மேற்கொண்டிருக்கும் திட்டங்களையும் அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள், அவள் சொல்ல சொல்ல அவன் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது, அவளின் கனவு அவனுக்குள் பிரமிப்பை ஏற்படுத்தியது, அவள் ஒவ்வொன்றையும் எடுத்து சொல்லும் போது அவளின் விழியில் இருந்த தேடல், அவனால் புரிந்துக்கொள்ள முடிந்தது. அவளின் விளக்கங்கள் அனைத்தும் அவளின் கனவுக்காக அவளுக்குள் இருக்கும் பிடிமானத்தைப் படம் போட்டுக் காட்டியது அவள் சொல்லி முடித்து அவனைப் பார்த்து கேட்டாள்.

“எனக்காகக் காத்திருப்பீயா க்ரிஷ்.?” அவளின் விழிகளில் இப்போது காதலின் தேடல், எங்கு முடியாதென்று சொல்லி விடுவானோ என்ற பயம், ஆனாலும் உறுதியாகத் தான் இருந்தாள்.

“இப்போ நான் முடியாது சொன்னால் உன்னோட முடிவு என்னவா இருக்கும் ஆரா.?”

“இந்த ஒரு கப் காஃபி தான் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து குடிக்கிற கடைசிக் காஃபியா இருக்கும் க்ரிஷ்” துளி பயமும் இன்றி அதைச் சமயம் உறுதியுடன் சொன்னாள்.

“அப்போ நான் சொல்றதை கேட்கமாட்ட அப்படித் தானே ஆரா.?”

“நான் எதுக்குக் கேட்கணும் க்ரிஷ், இது என்னோட லைஃப் என்னோட டெஸ்டினேசன்னு சொல்லி நான் தப்பிச்சிக்க விரும்பலை, பட் காதலுக்காக ஒட்டுமொத்த வாழ்க்கையும் என்னோட கனவுகளையும் புதைக்கணும்னு என்ன அவசியம் இருக்கு க்ரிஷ், உன்னைக் காதலிக்கிறேன்றதுக்காக உன்னோட பிஸ்னஸ் டீலிங்ஸ்ல நான் முடிவெடுக்க முடியுமா க்ரிஷ்.? முடியாதுல்ல அதே மாதிரி தான் இதுவும் இது என்னோட பேஷன்(passion)”

“உனக்குக் காதல் முக்கியமா.? இல்லை உன்னோட கனவு உன்னோட பேஷன் முக்கியமா.?” என அவன் கேட்ட கேள்வியில் திடுக்கிட்டு விழித்தாள்.அவளால் ஒரு நொடியில் அவனைத் தூக்கி எறிந்து விட முடியாது, அதே போல் தான் அவளின் கனவையும் தூக்கி எறிந்து விட முடியாது, புரியாது தன்னவனை ஏறிட்டாள். அவனோ மௌனம் சாதித்தான்.

இருவரின் விழிகளும்

மௌனமாய்ப் போரிட,

தவித்ததென்னவோ

நேசம் கொண்ட

நெஞ்சங்கள் தான்.!

*********

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்