Loading

மனமே!

 

எங்கிருக்கிறாய் நீ?

உயிரின் இடுக்கிலா?

சிந்தனையின் அடுக்கிலா?

இல்லாமலே உன் இருப்பை அனுதினமும் உணர்த்துகிறாயே!

 

என்றேனும் என் முன் தோன்றுவாயா?

என் வினாக்களுக்கு விடையளிப்பாயா?

என் கைக்கோர்த்து என்னை வழி நடத்துவாயா?

 

 

நாளுக்கு நாள் நற்பவியின் நிலையும் மோசமானது. அனைத்தையும் முன்னுக்குப் பின் முரணாக உரைத்தாள். பல சமயங்களில் மௌனமாக ஒரு இடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். மருத்துவரிடம் அழைத்துச்சென்றனர். அவளுக்கு மாத்திரைகள் மருந்துகள் அளிக்கப்பட்டது. பின் ஏதோ ஒரு காகிதத்தில் எதையோ எழுதிக் கொண்டே இருப்பாள்.

 

நேத்ரனுக்கு அவளின் நிலையை காணவே முடியவில்லை. எப்படி கம்பீரமாக இருந்தவள். இப்படியாகி விட்டாளே என்று வேதனையுற மட்டுமே முடிந்தது. அப்படி என்னதான் நிகழ்ந்திருக்கும் அவளுக்கு இந்த சில தினங்களில். வழக்கை எட்டு திசையிலும் ஆராய்ந்தாயிற்று. துப்புதான் கிடைக்கவில்லை. ஏழ்பரியோன்(சூரியன்) எழாமல் போனால் கூட ஆச்சர்யம் இல்லை. ஆனால் இதில் வழி தென்படுமா என்று வானை வெறிக்க மட்டுமே முடிந்தது.

 

மொழி மனநலம் பாதிக்கப்பட்டவள். தற்கொலை செய்து கொண்டாள். பின் அவளின் எதிர் வீட்டிற்கு வந்தாள் நிரண்யா. அவளும் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறாள். மொழியால் பாதக்கப்பட்டிருக்கிறாள். மொழியைப் போல் பேசுகிறாள். மொழியாய் மாறியிருக்கிறாள். மொழியின் கதையைக் கேட்டு மன அழுத்தம் ஏற்பட்டு, பைத்தியம் போல் நடந்து கொள்கிறாள். இதுதான் அறிவியல் கூறுகிறது. ஆனால் மொழியின் தாக்கம் மிகவும் அதிகமாக ஏன் நிரண்யாவிற்கு இருக்கிறது என்று அறிவியலிடம் பதிலில்லை.

 

இங்கு நிரண்யாவின் வரிசையில் அடுத்து நற்பவி. நற்பவி மொழியின் உணர்வுகளைத் தாங்கியிருக்கிறாளா என்று கேட்டால் அது தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு பாதிப்பு இருக்கிறது.  இந்த வழக்கில் உள்ள ஒற்றுமை இது ஒன்றுதான். அடுத்தடுத்து மனநலம் பாதிக்கப்படுகிறார்கள். ஏன் என்று காரணம் விளங்கவில்லை. அப்படி என்னதான் நிகழ்ந்திருக்கும் என்றும் தெரியவில்லை. 

 

இதில் இடைச்செறுகலே அந்த மூன்று கொலைகள். ஆக மொத்தம் குற்றவாளியின் நோக்கம் மூன்று கொலைகள் அல்ல. மொழி, நிரண்யா மற்றும் நற்பவி, மூவரும் குற்றவாளியின் இலக்கென்றால்,  ஏதோ ஒரு விடயத்தை மறைக்க அந்த கொலைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். நற்பவிக்கு நிரண்யாவைப் பற்றி தெரிந்ததால் அவளும் இலக்காகியிருக்க வேண்டும். நிர்ணயா எதிர்வீட்டிற்கு சென்றபோது இறந்து போன பெண் எதற்காகவோ அங்கு சென்றிருக்க வேண்டும். அதனால் அதில் சம்மந்தப்பட்ட மூவரையும கொலை செய்தாயிற்று. நற்பவி நிரண்யாவின் ரகசியம் அறியக்கூடாதென அவளையும் உள்ளே இழுத்தாயிற்று. ஒருவழியாக அனைத்தையும் ஒற்றைப் புள்ளியில் கொண்டு வந்துவிட்டான் நேத்ரன். இவை அனைத்தும் அவன் அனுமானமே. ஆனால் உண்மையாய் இருக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

 

இனி மொழி, நிரண்யா, நற்பவி, தேவா, மைத்ரேயன் மற்றும் அந்த வீடு, இவை அனைத்தும் இணையும் அந்த ஒரு புள்ளியைக் கண்டறிய வேண்டும்.

 

இது என்ன சைக்கலாஜிக்கல் வாரா? இந்த நூற்றாண்டில் நாம் பெறிதும் அச்சம் கொள்வது  பயோ வார் மற்றும் பயோ வெப்பன் பற்றியதே. அணு ஆயுதங்களுக்கு பயந்த காலங்கள் முடிந்துவிட்டது. பயோ வார் அத்தியாயம் முடிந்துவிட்டதோ. இந்த புதுவிதமான போரை நிகழ்த்துகிறார்களா தேச துரோகிகள். ஏனெனில் திரும்பிய பக்கமெங்கும் மனநல மருத்துவமனைகள். ஏழு எட்டு பிள்ளை பெற்ற காலத்தில் தேவைப்படாத மனநல மருத்துவ ஆலோசனை இப்பொழுது தேவைப்படுகிறதே. அன்று நாட்டிற்காக நெஞ்சைக் கிழிக்கும் கூர்முனைகளுக்கு அஞ்சாமல் இருந்த நெஞ்சம் எங்கே. இன்று அடுத்தவன் முதுகில் கத்தி ஏறுகிறதா என்று மறைந்து நின்று பார்க்கும் நெஞ்சம் எங்கே. நூற்றாண்டுகள் கடக்க கடக்க மனதின் திடம் நீர்த்துப் போவதை உணர முடிகிறதா. மனித இனம் எதை நோக்கிப் போகிறது. 

 

குரங்கிலிருந்து மனிதன் வந்தான். பரிணாமம் வளர்ந்தது. நாகரிகம் தோன்றியது. பின் மாறியது. கலாச்சாரம் மாறியது. உடல் அமைப்பில் சிந்தனையில் மாறினான் மனிதன். இதில் மாறாமல் இருப்பதற்கு மனம் மட்டும் விதிவிலக்கா என்ன. இந்த அண்டத்தில் மாற்றத்தற்குரியது மட்டுமே மாறாமல் இருக்கிறது. 

 

முன்பெல்லாம் கல்லமாய் மனதின் கோட்டைக்குள் நுழைந்ந வஞ்சம், இப்பொழுது முன்னறிவிப்புடன் பகிரங்கமாக படாடோபத்துடன் நெஞ்சிற்குள் குடிபுகுந்து ஆட்டிப் படைக்கிறதே. மனதின் கொடை மழைக்கு ஒதுங்கும் குடையளவு கூட இல்லை என்பதை மனிதன் மறுபரிசீலனை செய்யாமல் போனால், இனம் காக்க ரட்சகன் வரப்போவதில்லை. முதலும் கடைசியாக ஓர் அழிவு. மீண்டும் ஒரு தொடக்கம் என்று அண்டம் அசையாமல் அதன் வேலையைத் தொடங்கிவிடும். ஆக நாம் ஒரு புள்ளியில் தொடங்கினோம். மீண்டும் அதே புள்ளியில் முடியும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

 

இந்த உலகத்தில் இல்லாத ஒன்று இருக்கிறது என்றால் அது மனம்தான். உருவமும் இல்லை. உறைவிடமும் இல்லை. எங்கிருந்து வந்தது. மீண்டும் எங்கு சென்றது. மனம் ஒரு இல் பொருள் நிலை. இல்லாமை வாடாமல் பேணவே வகைவகையாய் போராட்டங்கள்.

 

இதுவரை நிரண்யாவின் வாயிலிருந்தும் ஏதும் வந்தது போல் தெரியவில்லை. நாளாக ஆக மொழியாக மாறி இருக்கிறாள். நேத்ரனுக்கு பயமாக இருந்தது. நிரண்யா போல் நற்பவியும் மாறி விடுவாளோ என்று.

 

சில நேரங்களில் மிகத் தெளிவாக பேசுவது போல் இருக்கும். உடற்பயிற்சி செய்தாள் தியானம் செய்தாள். பின் தலை வலிக்கிறது என்று படுத்துக் கொள்வாள். அப்படி என்னதான் மண்டைக்குள் போட்டு உருட்டுகிறாள். எதையாவது வெளியில் சொல்லி தொலைந்தால் அல்லவா அவளுக்கு ஆறுதல் வழங்கமுடியும்.

 

அதையும் மீறி உரையாடினால், “மிஸ்டர் நேத்ரன். நீங்க அதிகமா என்கிட்ட பேசாம இருப்பது நல்லது. இதுக்கு மேல என் பேச்சை மீறினால் அதுக்கு விலை உங்க உயிரா கூட இருக்க வாய்ப்பு இருக்கு” என்று இவனை அச்சுறுத்துவாள்.

 

“அதுதான் ஏன்னு கேக்குறேன். இப்படி மாறிட்ட. என் மேல கோவமா இருக்கலாம். வெறுப்பு கூட இருக்கலாம். ஆனா இன்னைக்கு கொலை செய்யும் உணர்வு இருக்குன்னு சொல்ற அளவுக்கு ஏன் மாறி இருக்க? என்ன ஆச்சு உனக்கு? நீ நீயாக இல்ல” என்று இவன் வினவ, அவளிடம் பதிலில்லை. 

 

“நவி, கொஞ்சம் எனக்கு ஒத்துழைப்பு கொடு. அப்பதான் என்ன நடக்குதுனு என்னால கண்டுபிடிக்க முடியும். நிரண்யாவுக்கு நீ சொன்னதைத்தான், நான் உனக்கு சொல்றேன். நான் இப்போ என்ன செய்யணும்னு நினைக்கிற. ஏதோ ஒரு காரணத்தினால் நிரண்யா பாதிக்கப்பட்டான்னு நீ நினைச்ச.  அது உனக்கு நடந்துட்டு இருக்கு இப்போ. புரியுதா, இல்லையா?” என்று அவளைக் கடிந்து கொள்ள, அவள் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

 

“இல்ல புரியல. நீங்க என்ன விட்டு விலகி இருப்பது நல்லது” என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தாள்.

 

கீதனை அழைத்துப் பேசினான் நேத்ரன். நடந்த அனைத்தையும் கேட்ட கீதன்திடுக்கிட்டான். நற்பவி தாக்கப்பட்டிருக்கிறாள் என்பதை மட்டுமே அறிவான் அவன். இப்பொழுது அவளின் இந்த மாற்றம் அவனையுமே அச்சுறுத்தியது.

உண்மையில் கீதனிடம் பேசினால் ஏதேனும் தெளிவு கிடைக்கும் என்று அழைத்தான் நேத்ரன். ஆனால் இந்த அழைப்பு இருவரையும் குழப்பியதுதான் மிச்சம். அழையா விருந்தாளியாக அச்சமும் மனதின் நடுகூடத்தில் வந்தமர்ந்தது. 

 

அழைப்பைத் துண்டித்த கீதன் சிந்தனையில் ஆழ்ந்திருக்க, நிரண்யா அவன் அருகில் வந்தாள். நிரண்யாவிற்கும் கீதனுக்கும் நல்ல புரிதல் வந்திருந்தது. மொழிக்கும் கீதனுக்கும் என்று கூட கூறலாம். ஏனெனில் அவள் முழுவதுமாக மொழியாகவே மாறியிருந்தாள்.  

 

‘தனக்கு எவ்வளவு உதவி இருக்கிறாள் அவளுக்கு இப்படி ஒரு நிலையா? இதில் என்னதான் மர்மம் இருக்கிறது’ என்று சிந்தனை செய்து கொண்டிருந்தான் கீதன்.

 

“என்னாச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க கீதன்” என்றாள் நிரண்யா. அவள் அருகில் வந்து அமர்ந்தது கூட தெரியாது அவன் வேறு உலகில் இலயித்திருந்தான். அவளின் கேள்வியில் அவளைத் திரும்பிப் பார்த்தான். இப்பொழுது சில கேள்விகளுக்கு நினைவடுக்கில் தேடி அவளால் பதில் கூற முடிந்தது.

 

“என்னோட ஃபிரண்ட் ஒருத்தருக்கு உடம்பு சரியில்ல” கீதன்.

 

“என்ன ஆச்சு?”

 

“உனக்கு சொன்னா புரியாது. விடு மொழி” என்றான் சலித்துக் கொண்டே. 

 

“நீங்க எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்கீங்க. வாழணும்ங்கிற உத்வேகத்தை கொடுத்திருக்கீங்க. எங்கிட்ட சொன்னா என்னால முடிஞ்ச உதவியை நிச்சயம் செய்வேன்” என்று புரிதலுடன் உரைத்தாள். அவள் வார்த்தையில் தெளிவு, உத்வேகம் மற்றும் அழுத்தம் அனைத்தும் நிறைந்திருந்தது. அவளின் இந்த தெளிவில் கீதனின் மனதில் நிம்மதி பிறந்தது.

 

இப்பொழுதல்லாம் இப்படித்தான். சில நேரங்களில் மிகவும் தெளிவுடன் இருப்பாள். ஆனால் அந்த தெளிவு சில மனித்தியாளங்களே நீடிக்கும். ஆனால் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கிறது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. மொழியாய் முன்னேறியவள், நிரண்யாவாய் பின்னடைகிறாளோ?

 

திகையாதே மனமே!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்