Loading

மனமே!

 

வாடாமல் நீயிருக்க, வஞ்சனை பல செய்தேனே!

வாழ்வியல்புகளை ஏற்காத உனக்கு வாழ்வளித்தேனே!

தீராதோ நின் பிணி?

காழ்ப்பில் நீ கரைந்து எம்மை தீர்த்தக் கரையில் கரைத்தாயே!

 

 

அந்த வெள்ளைக் காகிதத்தில் எழுதியிருந்த வாசகத்தைக் கண்டு திடுக்கிட்டான் நேத்ரன்.

 

“நவி, என்னடி ஆச்சு உனக்கு?”

 

“உன்னைக் கொல்ல சொல்லுது என்னோட மூளை. ஏதோ தப்பா இருக்கு. எங்கிட்ட இப்போ எதுவும் கேக்காத” என்றாள் வேதனையுடன்.

 

“ஏய் நவி.. என்னடி ஆச்சு? ஏன் இப்படி யோசிக்கிற. எனக்கு உன்னைப் பத்தி நல்லா தெரியும்.”

 

“இல்ல நேத்ரன். எனக்கே என்னைப் பத்தி ஒண்ணும் தெரியலை இப்போ. அதுதான் நிஜம். இதுக்கு மேல எதுவும் கேக்காத. நான் நானாவே இல்லை.”

 

“ஏன்?”

 

“தெரியலை”

 

“நீ எங்க போன. அங்க என்ன ஆச்சு. அதை சொல்லு” என்று அவன் வினவ, சிறிது சிந்தனைக்குப் பின் பதிலளித்தாள்.

“மைத்ரேயன்..”

“யார் அது?”

 

“அது தெரியாது. ஆனா அவன் பெயரில்தான் இன்பனின் வீடு இருக்கு இப்போ. யார் என்னன்னு தெரியாது. அதை விசாரிக்க முயற்சி செஞ்சேன். அவ்ளோதான் ஞாபகம் இருக்கு. இதுவே நான் ரெண்டு நாளா படாதபாடு பட்டு யோசிச்சது. இதுக்கு மேல நீ பாத்துக்கோ. தயவு செஞ்சு எதுவும் எங்கிட்ட சொல்லாத. எனக்கு தெரியிறது நல்லது இல்லை” என்றாள்.

 

“ஏய்.. உன்னோட பதிலில் ஒரு தெளிவு இருக்கா? இப்படி எதுவும் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்?”

 

“தெரியாததை எப்படி சொல்றது?”

 

“ஆர் யூ மேட்?”

 

“யெஸ்… ஐ அம்… ஐ அம் மேட்.. ஐ அம் கெட்டிங் மேட்.. நீ வெளில போறியா?” என்று கத்தினாள்.

 

முதலில் தெளிவாக பேசியவள் இறுதியாக குழப்பிவிட்டாள். எது பேசினாலும் அவளின் இறுதி வாக்கியம் இது மட்டும்தான்.

 

அதன்பிறகு அவளிடம் பேசுவதால் பலன் ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்தவன், அடுத்தக் கட்டமாக அவள் விட்ட இடத்திலிருந்து தொடங்க முடிவு செய்தான்.

 

இன்பனின் வீடு யார் பெயரில் இருக்கிறது என்று விசாரிக்க, மைத்ரேயன் என்ற பெயர் மட்டுமே அதிலிருந்து கிடைத்தது. அவன் வைத்திருந்த அனைத்து தரவுகளும் போலி. ஏனெனில் மைத்ரேயன் என்ற ஒருவன் இப்பொழுது இல்லை. அவன் இறந்து ஐந்தாண்டுகள் ஆகிறது என்று அரசு ஆவணங்கள் கூறியது. இறந்த ஒருவனின் பெயரில் அந்த வீடு பதியப்பட்டிருக்கிறது. இதுவே அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வழக்கில் அடுத்தத் திருப்பம். பெரும் தவறு நிகழ்கிறது. ஆனால் இறந்தவனின் பெயரில் நிகழ்கிறதா? இல்லை காவல் துறையைக் குழப்ப இப்படி ஒரு நாடகமா.

 

இது யார் செய்த வேலையாய் இருக்கும். சார்பதிவாளர் அலுவலகத்தில் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இறந்த ஒருவரின் பெயரில் ஏன் அனைத்தும் செய்ய வேண்டும். பத்திரத்தில் இருந்த கையெழுத்து அடையாளம் என்று அனைத்தையும் அலசிப் பார்த்தால் நகலென்று தோன்றவில்லை. அனைத்தும் தத்ரூபமாக இருந்தது. எந்த ஒரு வித்யாசமும் இல்லை. இறந்த ஒருவரின் அடையாளத்தை யாரோ பயன்படுத்தியிருக்க வேண்டும். அந்த நபர் யாராக இருக்கக் கூடும் என்று ஆராய்ந்தான்.

 

நேரம் கடந்ததே தவிர அவனுக்கு வழி ஒன்றும் புலப்படவில்லை. சில பழைய வழக்குகளையும் ஆராய்ந்தான். இம் மாதிரி வழக்குகளை எவ்வாறு கையாண்டிருக்கிறார்கள் என்று.

 

சில நாட்கள் சென்றிருந்தது. வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இருக்கவில்லை. பின் அந்த மைத்ரேயனைப் பற்றிய தகவல்களைத் திரட்ட ஆரம்பித்தான். ஐந்து வருடம் முன் அவன் எங்கு இருந்தான். என்ன காரணமாக இறந்தான் என்று அனைத்து தகவல்களையும் திரட்ட ஆரம்பித்தான்.

 

அவனும் அவன் நண்பன் ஒருவனும் சேர்ந்து குருத்தணு(stem cell) வங்கி ஒன்று தொடங்கியிருக்கின்றனர். அது சமீப காலமாக பணத்தினை வாரி வழங்கியதால், இருவரும் பொருளாதார ரீதியாக நன்றாகவே வாழ்ந்திருக்கின்றனர். அடுத்தடுத்து வேறு கிளைகள் திறந்தனர். ஐந்து வருடங்களில் அவர்களின் தொழில்நிலை நன்றாக வளர்ச்சியடைந்திருந்தது. 

 

எனில் அவர்கள் செய்ய நினைத்த தொழில் அப்படி. இப்பொழுதெல்லாம் பிறந்த குழந்தைக்கு, ஸ்டெம்செல் பேங்கிங் பற்றி கூறி பெற்றோர்களை அதை செய்ய வைத்து விடுகின்றனர். ஸ்டென்செல் பேங்கிங் என்பது வேறொன்றுமில்லை. பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் இருக்கும் குருத்தணுக்கள் நிறைந்த ரத்தத்தை லிக்விட் நைட்ரஜனில் பதப்படுத்துவதாகும். இம்முறையில் சேகரித்து பதப்படுத்தப்படும் குறுத்தணுவால், குழந்தைகளை பின்னாலில் வரும் உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து காப்பாற்றலாம். அதாவது இப்பொழுது அதிகமான குழந்தைகளுக்கு ரத்தத்தில் கேன்சர் வருகின்றது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த நோயில் இருந்து சேகரித்து வைத்த குருத்தணு குழந்தையை காப்பாற்றும். மேலும் இந்த குறுத்தணுவால் உடலிலுள்ள எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் ஆராய்ச்சிக்கூடத்தில் உருவாக்க முடியும். இது இன்றளவும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. நடைமுறையில் இன்னும் இல்லை என்றாலும் பின்வரும் நாளில் இது வெற்றியடைந்தால் நிச்சயம் இந்த குறுத்தணு பெரும் பங்கு வகிக்கும்.

 

கடந்த 15 வருடங்களாக குழந்தைகளை அதிகமாக நோய்கள் தாக்குவதால் பெற்றோர்கள் இந்த வழி முறையை பின்பற்றுகின்றனர். சுமார் ஒரு குழந்தையின் குறுத்தணுவை சேகரித்துப் பதப்படுத்த ஒரு லட்சம் வரை வாங்கப்படுகிறது. வருடா வருடம் ஒரு தொகையும் வசூலிக்கிறார்கள். 20 வருடங்கள் அந்த குருத்தணுக்கள் பதப்படுத்தப்படும் என்ற ஒப்பந்தம் எழுதி விடுவார்கள். இந்த இருபது வருடங்களில் குழந்தைக்கு ஏதேனும் நோய் தாக்குதல்யிருந்தால், சேகரித்த வங்கியில் இருந்து குறுத்தணுவை பெற்றுக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படும். குழந்தைகளைத் தாக்கும் லூக்மியா என்ற நோயிலிருந்து இந்த குறுத்தணு குழந்தையைப் பாதுகாக்கும்.

 

இந்த தொழிலை மைத்ரேயனும் அவனின் நண்பன் தேவாவும் செய்தனர். சில வருடங்களுக்குப் பிறகு மைத்ரேயன் இறந்துவிட்டான் என்ற தகவல் கிடைத்து. 

 

கிடைத்த தகவல் அனைத்தும் எந்த ஒரு கோளாறும் இல்லாமல் அதனிடதத்தில் பொறுந்திப் போனது. மைத்ரேயன் உயிருடன் இருந்த வரையில் எந்த ஒரு மர்மமும் இல்லை. ஆனால் இறந்தபின் ஒரு தகவலும் சரியில்லை. அவன் இறந்துவிட்டதாக இறப்புச் சான்றிதழ் பெறப்பட்டத்தைத் தவிற வேறு ஒன்றும் தகவல் இல்லை. 

 

மைத்ரேயனின் குடும்பத்தைப் பற்றி விசாரிக்க, அவன் இறந்த பின்பு அவர்கள் வேறு ஊருக்கு சென்றுவிட்டனர் என்ற தகவல் கிடைத்தது. இதுதான் நேத்ரனுக்கு பெரும் சந்தேகத்தை விதைத்தது. மைத்ரேயனின் பங்குகள் அவனின் நிறுவனத்தில் இருந்திருக்குமே. அதை ஏன் அவனுடைய மனைவியின் பெயரில் மாற்றிக் கொடுக்கவில்லை என்று ஆராய்ந்தான். மைத்ரேயன் இறந்த சமயத்தில் ஒரு கோடி அவன் மனைவியின் கணக்கில் ஏறியிருந்தது. அதன்பிறகு அந்த கணக்கிற்கும் நிறுவன கணக்கிற்கும் வேறு பரிவர்த்தனைகள் இல்லை.

 

ஐந்து வருடங்கள் முன்பு நிறுவணத்தின் மதிப்பு ஐம்பது கோடியாவது இருக்கும். இது இப்பொழுது உள்ள வளர்ச்சியை வைத்து கணக்கிட்டது. அப்படியெனில் ஒரு கோடி மட்டுமே மைத்ரேயனின் மனைவிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் ஏமாற்றப்பட்டிருக்கிறார். அது ஏன் என்று தெரியவில்லை. நிச்சயம் தேவா அவரிடம் நிறுவனத்தின் பங்குகளை அவர் பெயருக்கு மாற்றி எழுதியிருக்க வேண்டும். போதுமான தகவல் அறியாததால் மைத்ரேயனின் மனைவியும் அதில் கையெழுத்திட்டிருக்க வேண்டும் என்று அனுமானித்தான்.

 

சிந்தனை செய்து சிந்தனை செய்து அவன் மூளை களைத்துவிட்டது. இந்த நிகழ்வுகளுக்கும் இப்பொழுது நிகழும் நிகழ்வுக்கும் என்ன தொடர்பு. அதற்கு ஒரு சிறிய துப்பும் கிடைக்கவில்லை.

 

மைதரேயன் பெயரில் ஏன் வீடு வாங்க வேண்டும். யார் வாங்கியிருக்கக் கூடும். அவர் மனைவியின் வங்கி கணக்கில் சந்தேகிக்கும்படி ஒன்றும் இல்லை.

 

ஒரு பக்கம் நற்பவிக்கு என்ன நிகழ்ந்ததென்று தெரியாது தவித்தான். மறுபக்கம் எந்த முன்னேற்றமும் இன்றி இந்த வழக்கு. ஆயிரம் தகவல் திரட்டியாயிற்று. ஆனால் பலன் சுழியம்தான். 

 

இன்பன், கீதன், நிரண்யா, மொழி என்று அனைவரையும் அவன் ஆராய்ந்துவிட்டான். இவர்கள் தவறில் சம்மந்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாக தெரிந்தது. இன்பன் இப்பொழுது வித்யாவை திருமணம் செய்திருந்தாலும், அதில் எந்த ஒரு உள் நோக்கமும் இல்லை. உண்மையில் மொழியுடன் வாழ முயற்சி செய்திருக்கிறான். முடியவில்லை. அவள் இறந்தும் விட்டாள். பின் ஒரு சராசரி மனிதனாக அடுத்த வாழ்வைத் தேடிவிட்டான். 

 

இதில் விசித்திரமான ஒன்றாக இருந்தது மொழியின் உடற்கூறாய்வு அறிக்கை மட்டுமே. ஒன்று மொழியின் அறிக்கை தவறு. இல்லை இன்பனிடம் ஒப்படைத்தது மொழியின் உடலே இல்லை.

 

திடீரென ஒரு வினா தோன்றி அவன் மனச்சுவரை அரித்தெடுத்தது. மைத்ரேயன் ஏன் உயிருடன் இருக்கக்கூடாது என்று அவன் மனதில் தோன்ற, அவன் விழிகள் எதையோ கண்டறிந்த வெற்றிப் பெருமிதத்துடன் பளிச்சிட்டது.

 

திகையாதே மனமே…

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்