Loading

 

 

 

மனமே!

 

மென்னிதழ் கொண்ட மலராய் இருக்கவும் வேண்டாம்.

 

தேள் கொடுக்காய் கொடுங்கோணமையும் வேண்டாம்.

 

நடுநிலைமை வகித்திடு வாழும் எண்ணமிருந்தால்!

 

கீதன் நிரண்யாவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“கீதன்.. உங்களைத்தான். என்ன பிரச்சனை சொல்லுங்க?”

 

அவனும் ஒரு முடிவுடன் அவளிடம் தகவல் உரைத்தான்.

 

“அவங்க ஒரு போலீஸ் ஆபீஸர் நிர…மொழி. ஒரு வழக்கை விசாரிப்பதற்காக ஒரு இடத்துக்கு போய் இருக்காங்க. அங்க யாரோ இவங்கள என்னமோ செஞ்சிருக்காங்க. என்ன செஞ்சாங்கன்னு தெரியல. ஆனா வந்ததிலிருந்து அவங்க அவங்களாவே இல்லை.”

 

“அப்படின்னா புரியல..”

 

“எனக்கு சரியா சொல்ல தெரியல. ஆனா தெளிவா இல்லை. மனசு சரியில்லாம இருக்காங்க எது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்குறாங்க” என்றான் அவளின் மனநிலையில் இதில் கணிக்க முடியுமா என்பதை ஆராய.

 

அவளின் புருவங்கள் யோசனையாக சுருங்கியது.

 

“அவங்களுக்குள்ள யாரோ பேசுற மாதிரி சில குரல்கள் கேட்குதுன்னு சொல்றாங்க. அந்த குரல் சொல்றத கேட்க ஆரம்பிச்சுட்டாங்க” என்று கூற அவளின் இதயம் படபடவென்று துடித்தது.  உடல் முழுக்க வியர்க்க ஆரம்பித்தது. 

 

“ஏய்… மொழி.. ரிலேக்ஸ்… ஏன் இப்படி கஷ்டப்படுற.. உக்காரு முதலில்” என்று அவளை அமர வைத்தான்.

 

“எனக்கும் இது மாதிரி நடந்திருக்கு.”

 

அவளை மேலும் பேச ஊக்குவித்தான். அவளிடம் ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று ஒருமுறைப் பரிசோதிக்க முடிவு செய்தான்.

 

“அப்படின்னா புரியல”

 

“அது… அது…”

 

“ரொம்ப கஷ்டப்படாத. உனக்கு எப்போ என்ன நடந்துச்சுன்னு முடிஞ்சா யோசிச்சு சொல்லு. ஞாபகம் இல்லைன்னா ஒண்ணும் பிரச்சினை இல்லை” என்று அவள் முகத்தை தீவிரமாக பார்த்தான்.

 

“தெரியல.. நான் சோகமா இருக்கும் போதெல்லாம் யாரோ என் கிட்ட பேசுற மாதிரியே இருக்கும்.”

 

“யாரு பேசுவா?”

 

“தீபன்…”

 

“யாரு அது?”

 

“தெரியாது..”

 

“அந்தக் குரல் கேட்கும் போதெல்லாம் ரொம்ப நல்லா இருக்கும். அந்த குரல் சொல்றதை செய்யணும்னு தோணும். இப்ப உங்க கூட பழகுனதுக்கு அப்புறமா அது எவ்வளவு முட்டாள்தனம்னு புரியுது.”

 

“மொழி.. இப்போ என்னையும் முழுசா நம்பாத. ஏனா முதலில் நீ நம்ப வேண்டியது உன்னைத்தான். நான், தீபன் இப்படி எத்தனை பேர் வந்தாலும் உனக்குள்ள உள்ள உண்மை உனக்கு மட்டும்தான் தெரியும். நீ சோகமா இருக்கும்போது உனக்கு ஒரு ஆறுதல் தேவைதான். ஆனா அது ஆறுதலா மட்டும்தான் இருக்கணும். அதிகாரமா இருக்கக்கூடாது. எப்பவுமே உன் மனசு உனக்கு நல்லது நினைக்கும்னு நம்பணும்.”

 

“நம்ம மனசு நமக்கு நல்லதுதானே நினைக்கும். நமக்கு நாமளே கெடுதல் நினைப்போமா?” என்றாள் அவள் புரியாமல். 

 

“யாரு சொன்னா.. மனசு நமக்கு நல்லது நினைக்கும்னு. நமக்கு பெரிய எதிரியே நம்ம மனசுதான். மறக்க வேண்டிய விஷயத்தை நினைவுபடுத்தி, காயத்தை திரும்ப குத்தி குத்திக் கிழிக்கும். அப்புறம் ஏன் தற்கொலைகள் நடக்குது. அது நல்லதா. இல்லை அந்த விஷயத்தில் மனசு எந்த முடியும் எடுக்கலன்னு சொல்ல வரியா? தற்கொலை முழுக்க முழுக்க மனம் எடுக்கும் முடிவு. தெரியுமா?”

 

“உன்னோட கருத்தெல்லாம் விசித்திரமா இருக்கு. ஆனா நமக்கு ஒரு கெடுதல் நடக்கும்போது மனசை எப்படி தள்ளி வச்சு யோசிக்கிறது.”

 

“முடியும்… இந்த உலகத்தில் முடியாததுன்னு எதுவும் இல்லை. மனசு சோர்ந்துபோய் தற்கொலை செய்யவே நினைக்கும்போது, மனசை தள்ளி வச்சு அதுக்கிட்ட தீர்வு கேக்குறது பெரிய விஷயமா. எப்பவுமே நம்ம போடுற கோடுதான் பெரிய கோடுன்னு நினைக்கிறது பெரிய தப்பு. அதையும் தாண்டி விஷயம் நிறைய இருக்கு, இந்த உலகத்தைத் தாண்டி அண்டம் இருப்பதுபோல்.”

 

அவன் கூறுவதும் உண்மைதானே. மகிழ்ச்சியாக இருக்கும்போது இறகைப்போல் லேசாகவும், துன்பம் வரும் வேளையில் பாறையாய் கணப்பதும் மனதின் குணாதிசயங்கள். மனம் வேண்டிய நேரம் வேண்டிய உரு எடுத்துக்கொள்ளும் போது நாம் அதை வேண்டியபடி மாற்றிக் கொள்ளலாமே. சமீப காலமாக மனதைப் பற்றி பெரும் ஆராய்ச்சி செய்துவிட்டான் கீதன். உண்மையில் அவனும் துவண்டுபோய் பின் கண்ட படிப்பினைகள்தான் இவை அனைத்தும். அனுபவங்கள் நமக்கு ஆசான் என்பதில் சிறிதும் பழையில்லை. சில மனங்கள் அடிகள் வாங்கியபின் விழித்துக் கொள்ளும். இவன் வேறு ரகம். அடி வாங்கும் முன் விழித்துக் கொண்டான்.

 

மொழியே இல்லை. ஆனால் மொழியின் நினைவுகள் நிரண்யாவிடம் உயிர்ப்புடன் இருக்கிறது. இதை புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வதற்கே பக்குவம் வேண்டும். அவன் அதையும் தாண்டி அவளின் மனதையும் சரி செய்கிறான். 

 

“உன்னோட கவலைகளை மனசிடம் சொன்னால் தீர்வு கிடைக்கணும்னு நம்பணும். உன்னோட மனசு உனக்குள்ள இருக்குன்னு நீ நினைச்சு துவண்டு போறதுதான் பெரிய பிரச்சனை. உன்னோட மனசை உனக்கு எதிரில் கொண்டு வந்து அதுக்கிட்ட தீர்வு கேட்டா எல்லா பிரச்சனைக்கும் எளிதா தீர்வு கிடைக்கும். எனக்கு ஒரு விஷயம் குழப்பமா இருந்தா நான் அப்படித்தான் என் மனதிடம் கேட்பேன். உன்னோட பிரச்சனை உனக்கானதுன்னு நீ நினைக்கிறவரை தீர்வு கிடைக்காது. உனக்குப் பிடிச்ச, உனக்கு நல்லது நினைக்கிற ஒருத்தர்கிட்ட சொல்லி தீர்வு கேக்குற மாதிரிதான். அந்த இடத்தில் உன்னோட மனசு இருக்கணும். அப்போ காழ்ப்புணர்ச்சி, தாழ்வுணர்ச்சி போன்ற எதிர்மறை எண்ணங்களை ஒதுக்கிவிட்டு, நடுநிலையான தீர்வு சொல்லும் உனக்கு.”

 

எவ்வளவு பெரிய கருத்து. எளிதாக உரைத்துவிட்டான். மனதைப் புரிந்து கொள்ள புத்தனாய் மாறவும் வேண்டாம். சித்தனாய் மாறவும் வேண்டாம். இரண்டுமே மிகவும் கடினமான காரியம். மனதை நல்ல தோழனாய் வரித்துக் கொள். அது நல்லவைகள் நவிலும் உனக்கு. வேதங்களும் புராணங்களும் இதை கூறுகின்றனவா என்றெல்லாம் அவனுக்கு தெரியாது. ஆனால் இது அவனின் இடர்களை களைய உதவியது. அதைப் பிடித்துக் கொண்டான் அவன். 

 

அவள் அவனை பிரமிப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

“உலகத்தில் பிறக்கும் எல்லாருக்கும் உன்னோட முதிர்ச்சி இருந்தா பிரச்சனை இல்லாமல் போகுமே.”

 

“அப்போ வேற ஒரு பிரச்சனை இருக்கும். பிரச்சனை இல்லாத ஒரு உயிர் உலகத்தில் இல்லை.”

 

அவன் மடியில் படுத்துக் கொண்டாள். 

 

“எனக்கு கொஞ்சம் தலைகோத முடியுமா? என்னமோ ஒரு மாதிரியா இருக்கு” என்றாள் பாவமாக.

 

மொழியைப் பொறுத்தவரை அவன் ஒரு அன்னிய ஆண் மகன். அது அவள் சிந்தனையில் இருந்தது போல் தெரியவில்லை. அவனை முழுமையாக நம்பினாள். ஒரு கட்டத்தில் அவளை நம்பாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அவனை நம்பாமல் போக வாய்ப்பு இல்லை. இது மனநலம் பாதிப்பு உள்ளவர்களின் உண்மை நிலை. அவர்கள் ஒன்றின் மேல் பற்று வைத்திருந்தால் அது கண்மூடித்தனமாக இருக்கும். அன்பும் சரி.. வெறுப்பும் சரி. அவர்களின் மனநிலை துலாக்கோலில் சரிந்த ஒரு பக்கமாகவே இருக்கும்.

 

நிரண்யாவிற்கு இப்படித்தான் பல சமயங்களில் பல ஞாபகங்கள் இருக்கும். பல ஞாபகங்கள் வரும். பல ஞாபகங்கள் மறந்து போகும். அதனால் தான் மொழியுடைய குழந்தையைத் தேடாமல் இருக்கிறாள். திடீரென்று குழந்தையின் நினைவு வரும். எழுந்து சென்று தேட ஆரம்பிப்பாள். பின் அதை விட்டு வேறு விஷயம் சிந்திக்கத் தொடங்கிவிடுவாள். மனம் குரங்குபோல் தாவிக் கொண்டே இருக்கும்.  அதனால் மீண்டும் வேறு ஒரு விஷயத்திற்காக சிந்தனை செய்ய ஆரம்பிப்பாள். அதனால் மொழியாக இருக்கும் நிரண்யாவை சமாளிப்பது சற்று எளிதாகவே இருந்தது கீதனுக்கு. குழந்தையைப் பார்க்க வேண்டும், குழந்தையுடன் இப்போது இருக்க வேண்டும் என்று அடம்பிடித்தால் அவனால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் அதை ஒரு முறை கூட அவள் செய்தது கிடையாது. அவர் முற்றிலுமாக மொழியாக இருக்கிறாள் என்றால் அவளுடையக் குழந்தையைத் தேட வேண்டுமே. எப்படி யோசித்தாலும் கீதனிடம் இறுதியில் வினா மட்டுமே மிஞ்சும். விடை தெரியாது.

 

மொழியின் உடல் இந்த உலகைத் துறந்தது உண்மை. ஆனால் அவளின் மனம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்றால் அதுவேணும் நிம்மதி பெறட்டும் என்று நினைத்தான் கீதன். இதில் சுயநலமும் அடக்கம். அவன் மொழயை மீட்டெடுக்க, நிர்ணயாவும் நலமாய் இருக்கிறாள். உடலின் மெலிவு குறைந்திருக்கிறது. நன்றாக உணவு உண்டாள். நன்றாக உடுத்திக் கொண்டாள். சுயசுத்தம் பேணுவதும் அவளிடம் இருந்தது. மொத்தத்தில் மொழி நன்றாக இருந்தால் நிரண்யா பிழைத்துக் கொள்வாள் என்று அவன் உள்மனம் கணக்கிட்டுவிட்டது. அதனால் அதில் முனைப்புடன் இருந்தான் கீதன். இதுதான் மனதின் உண்மை உருவம். தனக்கு ஆதாயம் இல்லாமல் ஒன்றும் செய்யாது.

 

ஒரு விடயம் அவன் மனதிற்கு இதமாக இருந்தது.  முதல் முறையாக ஒன்றை வாய்திறந்து கூறியிருக்கிறாள். அவளின் மனம், கசந்த நிலையில் இருக்கும் பொழுது ஒரு குரல் கேட்கும் என்று. அந்த குரலின் பெயர் தீபன் என்றும் கூறியிருக்கிறாள். இது அவன் அறிந்த ஒன்றுதான் என்றாலும், புரிதலுடன் அவளின் வாய்மொழி கேட்கும் பொழுது, அவளின் மனம் தெளிவடைந்ததை உணர முடிகிறது.

 

திகையாதே மனமே!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்