Loading

அத்தியாயம் 27

அவளின் தலையின் மீது தன் கன்னத்தை வைத்து அழுத்தியவன்,
“நீ சாரி சொல்லனும்னு இல்ல. நீ செஞ்சது தப்புன்னு புரிஞ்சாலே போதும். அந்தப் பணம் உனக்குத் தான். உனக்கும் நம்ம குழந்தைக்கும் மட்டும். அதை நீ வேற எப்படி செலவு செஞ்சி இருந்தாலும் நான் கேட்கமாட்டேன். அவ்வளவு பணத்திற்கும் பட்டர் ஃப்ரூட் வாங்கி குடிச்சிருந்தாலும் நான் ஒண்ணுமே கேட்டிருக்க மாட்டேன்.” என்றவனை விழிகள் விரிய நிமிர்ந்து பார்க்க, அவள் விழிகளில் அழுந்த முத்தமிட்டவன்.
“நிஜமா தாண்டி…அதுக்கு ஏன் இப்படி கண்ண விரிச்சு பாக்குற.” என்றான் குறுஞ் சிரிப்புடன்.
“ஒன்னே முக்கால் லட்சத்துக்கு, பட்டர் ஃப்ரூட் மில்க் ஷேக். கொஞ்சம் ஓவரா தான் இருக்கு.” என்றாள் லேசான மனதுடன். கணவன் சிரித்ததில் பெரிதான நிம்மதி அவளுக்கு.

“ஹேய்.! சும்மா சொல்றேன்னு  நினைக்கிறியா.? நெஜமாத்தான் சொல்றேன். மில்க்ஷேக்கா வாங்கி குடிச்சிருந்தா, அது உன் சந்தோஷத்துக்கு. நீ ஆசைப்பட்டு செஞ்சுகிட்ட ஒரு விஷயத்துக்கு. அத நான் கேள்வியே கேட்டிருக்க மாட்டேன். ஆனா இது, உன்னை ஏமாத்தி பிடுங்கின பணம். பிடிக்காத உன்கிட்ட இருந்து அவங்களுக்கு எதுக்கு உன்னோட காசு. ஆக மொத்தம் உன்னை ஏமாளின்னு நினைச்சு இருக்காங்க. ஆனா நீ ஏமாளியா இருக்கலாம். உன்னைக் கட்டின உன் புருஷன் நான், ஏமாளி கிடையாது. அது எல்லாமே நான் என் பொண்டாட்டிக்கு கொடுத்த பணம். எங்க பணம். அதுக்கு கண்டிப்பா பதில் சொல்லணும் அவங்க.” என்றான் கோப குரலில்.

அவனின் கோப முகத்தில் அரண்டவள். அவனை விட்டுத் தள்ளி அமர்ந்தாள்.
“அவங்க கூடச் சண்டை போடப் போறீங்களா.?”
“ஆமா, வாங்கின பணத்திற்கு கணக்கு சொல்லனும் இல்ல. உங்க அம்மாவையாவது ஒரு வகையில ஏத்துப்பேன். ஆனா அவங்க செஞ்சதும் தப்புதான். இருந்தாலும் சின்ன மகளோட படிப்புச் செலவுக்கு மற்றும் திருமண செலவுக்கு வாங்கி இருக்காங்க. அது கூட எவ்வளவு தூரத்துக்கு உண்மைன்னு தெரியல. எல்லாத்தையும் கேட்டுக் கன்பார்ம் பண்ணனும். அப்புறம் உங்க அக்கா, எந்த உரிமையில உன்கிட்ட இருந்து பணம் வாங்கினாங்கன்னு  எனக்கு இன்னும் புரியல. அவங்களுக்கும் இருக்கு.” என்றான் பல்லைக் கடித்த படி.

“அவங்க கேட்டாங்க. ஆனா கொடுத்தது நான் தானே.”
“அதான் சொல்லிட்டேனே. நீ ஏமாளின்னு. உன்னை ஈசியா ஏமாத்தலாம்னு அவங்க முடிவு பண்ணி இருக்காங்கன்னு. நீ கொடுத்தது தப்புதான். நான் இல்லைன்னு சொல்லல அதுவும் என்கிட்ட கேட்காம கொடுத்தது ரொம்ப பெரிய தப்பு. இப்போ உனக்குப் புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். இனிமே இந்தத் தப்பை நீ செய்யமாட்ட. ஆனால், அவங்களும் செய்யாம இருக்கணும் இல்ல. அதுக்கு தான்.” என்றவனை பார்த்தவள்,
“இனி எப்பவும் இப்படி பண்ண மாட்டேன். உங்களைக் கேட்காமல், உங்களுக்குத் தெரியாமல் எதுவுமே செய்யமாட்டேன்.” என்றாள் உறுதி தரும் குரலில்.
“ம்ம்.” என்றவன் மீண்டும் வழிய துவங்கிய கண்ணீரை துடைத்து விட. அவன் கைகளை இறுக பற்றிக் கொண்டவள்.
“ஒன்னு மட்டும் எனக்காக.”என ஆரம்பிக்கும்போதே
“என்ன கேட்கக்கூடாதா.?” என்றான் வேகமாக.

“இல்லை, இல்லை கேளுங்க. ஆனா இப்ப வேண்டாம். சீமந்தம் முடியட்டும். இது நம்ம குழந்தைக்குன்னு செய்ற ஸ்பெஷல் ஃபங்ஷன். அதுல யாரும் முகத்தைத் தூக்கி வெச்சி கோவமா இருக்கிறதோ இல்ல ஃபங்ஷனுக்கு வராமல் இருக்கிறதோ வேண்டாம். எல்லோரும் சந்தோஷமா வந்து கலந்துக்கிட்டு நம்ம குழந்தையை ஆசிர்வாதம் பண்ணனும். அதனால பங்க்ஷன் முடிஞ்ச பிறகு கேளுங்க.” என்றவளின் சொல் அவனுக்கும் நியாயமாக இருக்க.
“சரி ஃபங்ஷன் முடிஞ்ச பிறகே  கச்சேரியை வச்சுக்கலாம்.” என்றான்.
“அத்தை, மாமாவுக்கு.” என்று இழுத்தவளை பார்த்தவன்
“சொல்லமாட்டேன்.” என்றான் உறுதியான குரலில்.

அவன் கை வளைவில் சாய்ந்திருந்தவள். பின், நினைவு வந்துகளாகப் பதறி,
“அய்யோ டைம் ஆயிடுச்சு.”
“ஆமா டைம் ஆயிடுச்சு.”
“நீங்க ஆபீஸ் கிளம்பணுமே.” என்றபடி வேகமாக எழ முயன்றவளை தடுத்து மறுபடியும் அவர வைத்தவன்
“லேட் ஆயிடுச்சு. அதனால நான் ஹாஃப் டே எடுத்துக்க போறேன்.” என்றவன் பின்பு யோசித்தவனாக,
“இல்லல்ல வேண்டாம். நான் பேசாம வொர்க் ப்ரம் ஹோம் வாங்கிக்கிறேன். அம்மா, அப்பாவும் இன்னும் வரல. சீக்கிரம் வந்துடுவோம்னு சொன்னாங்க இன்னும் காணோம். உன்னைத் தனியா விட்டுட்டு போக முடியாது அதுவும் இந்த மாதிரி நேரத்துல.”என்றபடி எழுந்தவனை பார்த்தவள்

“எங்க போறீங்க.?” எனக் கேட்க
“மெயில் அனுப்பிவிட்டு வரேன் மா. என் பொண்டாட்டி தனியா இருக்கா. அதுவும் இப்போ நிறை மாசம் வேற. அவளைத் தனியா விட்டுட்டு வர முடியாது. அதுவும் இல்லாம முதல்முறையா அவ மேல கோபப்பட்டுட்டேன். அவ வேற ரொம்ப அழுதுட்டா. அதனால நான் அவளைச் சமாதானம் பண்ணனும் அதுக்கு எனக்கு ஒர்க் ப்ரம் ஹோம் வேணும்னு சொல்லிட்டு வரேன்.” என்று  குறும்புடன் கூறி சென்றவனை பார்த்தவளுக்கு முகம் முழுவதும் சிரிப்பு.

அவளின் அழுகையை பார்த்தவனுக்கு மனம் முழுவதும் தவிப்பு. இப்பொழுது முகம் கொள்ள புன்னகையுடன் அவள் சிரிப்பைப் பார்த்தவன் சற்றே நிம்மதியுடன் தன் வேலையைப் பார்க்க மாடி  ஏறிச் சென்றான்.
“கொல்றா மோகினி.” என முணுமுணுத்தப்படியே.

சீமந்த நாளும் அழகாக விடிந்தது. அழைத்திருந்த சொந்தங்களும் நண்பர்களும் மண்டபத்தில் நிறைந்திருக்க, அன்னை கூறியபடியே பச்சை மற்றும் சிகப்பு நிறத்தில் இருந்த கண்ணாடி வளையல்களை மனைவியின் கையில் அணிவித்து, அவள் இரு கன்னங்களிலும் சந்தனத்தை பூசினான் சஞ்சய்.
கோகிலா, வசுமதி மற்றும் வசந்தி புன்னகை முகத்துடன் வலம் வந்தார்கள். கோகிலாவிற்கு, மகள் தான் கேட்கும் போதெல்லாம் பணம் அனுப்புவதில் மிகுந்த சந்தோஷம். ரகுபதி கூறியது போலச் சற்று சிறப்பாகவே சீர் செய்திருந்தார்கள் மகளுக்கு. வசுமதிக்கும் தங்கை தனக்கு அவ்வப்போது பணம் அனுப்புவதில் மகிழ்வே. இதுவரை அவள் யாரிடமும் இதைப் பற்றிக் கூறவில்லை. அனைத்து கதைகளையும் பேசும் அன்னையிடமும் இதை மறைத்திருந்தாள்.

பிரபல கேட்டரிங்கில் உணவிற்கு சொல்லி இருக்க. ரிட்டன் கிப்டாக வெள்ளியிலான தவழும் கண்ணன் அனைவருக்கும் கொடுத்தார்கள். மனமும் வயிறும் நிறைய வாழ்த்தி விட்டுக் கிளம்பினார்கள் வந்தவர்கள்.
பங்க்ஷன் முடிய தந்தை வீட்டிற்கு சென்று விட்டு மாலையில் கணவனோடு அவன் வீட்டிற்கு செல்வதாக ஏற்பாடு செய்திருந்தார்கள். வசுந்தரா அங்கே இரண்டு நாட்கள் மட்டுமாவது தங்கட்டும் என ரகுபதி கேட்டதற்கு இல்லையென மறுத்திருந்தான் சஞ்சய்.

“ரெண்டு நாள் தானே தங்கிட்டு வரட்டுமேடா.” என்ற அனுபமாவிடமும்
“முடியாதுமா.” என்று மறுத்திருந்தான் சஞ்சய். அவர்களுக்கு நடந்த விஷயங்கள் எதுவும் தெரியாததால் சகஜமாகவே வளம் வந்தார்கள். ஆனால் இவனுக்குத்தான் மாமியாரையும் மனைவியின் அக்காவையும் பார்க்கப் பார்க்கக் கோபமாக வந்தது. வசுமதியின் கணவன் இவனிடம் சகஜமாகப் பேசிப் பழகினாலும் வேலைகளை அவனோடு சேர்ந்து செய்தாலும் இவனுக்குத்தான் ஏனோ ஒட்ட முடியாமல் இருந்தது இவனுக்கும் அனைத்தும் தெரியுமா.? தெரியாதா…? என்ற சந்தேகமும் இருந்தது. அது நிவர்த்தியாகும் வரை அவனோடு சகஜமாகத் தன்னால் பேச முடியாது என நினைத்துக் கொண்டான்.

மனைவியை அவர்கள் அழைத்துச் சென்ற சிறிது நேரத்தில் மண்டபத்தில் இருக்கும் வேலைகளைத் தந்தையோடு முடித்தவன், அங்கிருந்தபடியே வசுந்தராவின் வீட்டை நோக்கிச் சென்றான் சஞ்சய். வந்தவனை முறையாக வரவேற்று அமர வைக்க, கணவன் வந்ததும் அவனைப் பார்த்த வசுந்தராவிற்கு, அவன் முகத்தில் இருந்த தீவிரம் தற்போது அவன் கேட்க ஆரம்பித்து விடுவான் என்ன நடக்குமோ என்று  பயத்தில் முகம் வெளிர அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் வசுந்தரா.
அவளை நிமிர்ந்து பார்த்தவன், தன் அருகில் அமர வைத்துக் கொண்டான்.
பின் தொண்டையை லேசாகக் கனைத்தவனாக,
“மாமா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றவன்
“சகலை கிட்டயும் பேசணும். அவரையும் கொஞ்சம் கூப்பிடுங்க.” என்றான் அவன் அங்கு இல்லாததை பார்த்து.
“வசுமதி, மாப்பிள்ளை எங்க.? அவரைக் கொஞ்சம் கூப்பிடு.” என்ற தந்தையின் சொல்லுக்கு ஏற்பத் தங்கள் அறைக்குச் சென்று பார்த்தாள். அதுவரை தூங்கிக் கொண்டிருந்தவன் குளியலறையில் இருப்பதை கண்டு அவன் வெளிவரும் வரை காத்திருந்தாள்.

வெளியில் வந்தவன் முகத்தைத் துடைத்தபடியே அங்கு நின்ற வசுமதியை பார்க்க அவளோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். இவன் அருகில் நிற்பது கூடத் தெரியாமல்
“என்னடி அவ்ளோ பலமான சிந்தனை.? எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போற.?” என அவள் அருகில் வந்து கேட்க.
சிந்தனையிலிருந்து வெளிவந்தவள்,
“உங்கள வசுந்தராவோட கணவர் கூப்பிடுகிறார்.”
“என்னையா.?  எதுக்கு.?”எனக் கேட்டவனிடம்,
“தெரியலையே.” என்றவளுக்கும் மிகுந்த யோசனை தான். எதற்காக இருக்கும் என்று.
வெளியில் வந்தவன் அனைவரும் அங்குக் குழுமி இருப்பதை பார்த்தபடியே மாமனாருக்கு அருகில் சென்று அமர்ந்தான். கோகிலாவும் வசந்தியும் உணவு மேஜையின் நாற்காலியில் அமர்ந்திருக்க அவர்களோடு சென்று அமர்ந்து கொண்டாள் வசந்தியும்.
சஞ்சயின் அருகில் தலைகுனிந்த படி ‘என்ன நடக்குமோ.’ என்ற பயத்தில் நடுங்கும் கைகளை மறைத்தபடி  அமர்ந்திருந்தாள் வசுந்தரா. மண்டபத்திலிருந்து வந்தவள். இலகுவான பிரக்னன்சி உடைக்கு மாறிச் சற்றே ஓய்வெடுத்து இருக்க. பின்னேயே வந்திருந்தான் சஞ்சய்.

அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவன் ஒரு பெருமூச்சு எடுத்தவனாக, தன் அருகில் இருந்த பையிலிருந்து நான்கு கட்டு பணத்தை எடுத்து “இந்தாங்க மாமா. இதுல ரெண்டு லட்ச ரூபா இருக்கு.?” என்றான்.
“எதுக்கு மாப்பிள்ளை இப்ப இவ்வளவு பணம்.”என்றார் ஒன்றும் புரியாமல் ரகுபதி.
‘ஒருவேளை பிரசவ செலவுக்குக் கொடுக்கிறாரோ.? ஆனால் அவர்கள் தானே பிரசவத்தை தங்கள் வீட்டிலேயே பார்த்துக் கொள்வதாகக் கூறியிருந்தார்கள்.” என அதற்குள்ளாகவே பல சிந்தனைகள் அவருக்கு.

“வசந்தியுடைய கல்யாண செலவுக்கு வச்சுக்கோங்க.”
“இப்ப அவ கல்யாணத்துக்கு என்ன அவசரம் மாப்பிள்ளை.?” என்றார் மறுபடியும் ஒன்றும் புரியாமல்.
“இல்ல மாமா அவ கல்யாணத்துக்கு, அப்புறம் காலேஜ் ஃபிஸ்க்கு அப்படின்னு கடந்த ஒன்பது மாசமா வசுந்தராவுக்கு அவளுடைய செலவுக்காக நான் கொடுத்த பணத்திலிருந்து வாங்கிட்டிருந்து  இருக்காங்க. அத்தை. எனக்குத் தெரியாம, என் மனைவி கிட்ட இருந்து பணம் வாங்குவது நல்லதில்லை இல்லையா.? அவளும் என்கிட்ட இத பத்தி எதுவுமே சொல்லல. ஆனாலும் அவ செலவுக்கு நான் கொடுத்த பணம் அதை எப்படி வேணா செலவு பண்ணலாம். அது தப்பும் இல்லை.” என்று மனைவியை விட்டுக் கொடுக்காமல் அவளைப் பார்த்தபடி பேசியவன்.

“இருந்தாலும், இனிமே இது தொடர வேண்டாம். உங்களுக்கு வேணும்னா என்கிட்ட கேளுங்க. அதுக்கு உங்களுக்கு எல்லா உரிமை இருக்கு.” எனக் கூறும் போதே.
அவமானத்தில் முகம் சுருங்க தலை குனிந்து அமர்ந்திருந்தார் ரகுபதி. மனைவி செய்திருந்த செயல் அவருக்கு மிகுந்த தலை குனிவை ஏற்படுத்தியிருந்தது. இதைப் பற்றி இதுவரை தன்னிடம் ஒரு வார்த்தை கூடக் கூறாமல் இருந்தது கடும் கோபத்தை கொடுத்தது.

சஞ்சய் பேச ஆரம்பிக்கும் போதே பயத்தில் வயிறு கலங்க அமர்ந்திருந்தாள் வசுமதி. அடுத்து அவள் கணவனிடம் தான் கூறப் போகிறான் என்பது அவளுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. அவளின் ஐயத்தைப் பொய்யாக்காமல்
“அப்புறம் சகல.” எனச் சஞ்சய் ஆரம்பிக்கும்போதே கைக்கால்கள் வெட வெடவென நடுங்கியது அவளுக்கு.
“சொல்லுங்க சகல.” என்றான் இவனும். தன்னிடம் என்ன கூற வருகிறான் என்பது புரியாமல்.
“உங்களுக்கு முன்னாடி எங்களுக்குக் குழந்தை வருவதில் உங்களுக்கு ஏதாவது வருத்தமா.?”
“சேச்சே எனக்கு என்ன வருத்தம்.? ரொம்ப சந்தோஷம் தான்.” என்றான் புன்னகையுடன்.

“அப்புறம் எதுக்கு சகல உங்களுக்குக் குழந்தை பிறப்பதற்கான டிரீட்மென்டை பார்ப்பதற்கு என் மனைவி கிட்ட உங்க மனைவி பணம் வாங்கி இருக்காங்க.” என அமைதியான குரலில் வசுமதியை பார்த்துக் கொண்டே கேட்க,
கேட்டுக் கொண்டிருந்தவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.
“என்ன சொல்றீங்க சகல.? ஒன்னுமே புரியல.” என்றான் மனைவியைப் பார்த்துக் கொண்டே அவளின் அரண்ட முகத்திலேயே ஏதோ நடந்திருப்பது புரிந்தது அவனுக்கு.

“உங்க மனைவி, நான் என் மனைவியுடைய செலவுக்குன்னு அவளுக்காகக் கொடுத்திருந்த பணத்திலிருந்து அவங்களும் அவங்க அம்மா வாங்குவது போல என் மனைவி கிட்ட ட்ரீட்மென்ட் போகணும். நீ மட்டும் குழந்தை உண்டாகிட்ட நான் இன்னும் உண்டாகாம இருக்கேன். அதனால, எனக்கும் பணம் அனுப்புன்னு கேட்டு வாங்கி இருக்காங்க. என்ன ஒன்னு அத்தை மாதிரி மாச மாசம் வாங்காம அப்பப்போ வாங்கி இருக்காங்க. ஆனா இது சரியா.?” என்று கேட்க. அவமானமும் கோபமும் ஒருங்கே எழ வேகமாக வசுமதியை அடிக்கப் பாய்ந்திருந்தான்.

“சகல.” என்ற சஞ்சயின் சத்தமான குரலில் நிதானித்தவன்.
“இதைவிட என்னை வேற யாருமே அவமானப் படுத்திவிட முடியாது டி.” என்றான் மனைவியைப் பார்த்துக் கொண்டே.
“கிளம்பு வீட்டுக்குப் போலாம்.” என்றவன் சஞ்சயை நோக்கித் திரும்பி, “இதுவரைக்கும் எவ்வளவு வாங்கி இருக்கா சொல்லுங்க சகல. நான் உங்க அக்கவுண்ட்க்கு அனுப்பி விடுறேன்.” என்ற படியே தன் அலைபேசியை  எடுக்க,
“எனக்கு அதெல்லாம் தெரியாது சகல. நான் வசுந்தரா கிட்ட கேட்டுச் சொல்றேன். நீங்க அவளுடைய அக்கவுண்டுக்கு அனுப்பிடுங்க. ஏன்னா அது அவளுடைய பணம்.” என்றான்.

மனைவி செய்ததிலேயே அவமானம் தாங்காமல்  அமர்ந்திருந்த ரகுபதிக்கு, மகளும் சேர்ந்து செய்திருந்த அனர்த்தங்களால் பூமியில் புதைந்து விடலாம் போல் இருந்தது அவருக்கு. கோகிலாவோ ‘இப்படி எல்லோர் முன்பும் தன்னை மாட்டி அவமானப்படுத்தி விட்டாளே.’ எனக் கோபத்துடன் வசுந்தராவை அதுவரை பார்த்திருந்தவர். ‘அடிப்பாவி.! ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லலையே இத பத்தி.’ என இப்போது பெரிய மகளை முறைத்த படி பார்த்துக்கொண்டிருந்தார்.

கோகிலா மனைவியை முறைத்து பார்த்துக் கொண்டிருப்பதை பேச்சினூடே  கவனித்துக் கொண்டுதான் இருந்தான் சஞ்சய்.
“அப்புறம் இது எதையுமே அவ என்கிட்ட சொல்லல. நானா தெரிஞ்சுக்கிட்டேன். நான் தெரிஞ்சுக்காம இருந்திருந்தா எப்பவுமே அவ இத என்கிட்ட சொல்லி இருக்க மாட்டாள்.” என்றான். மனைவியைப் புரிய வைத்துவிடும் நோக்கத்துடன்.
“ஹான்.! இன்னொன்னு கேட்கணும்னு நினைச்சேன். உங்களுக்குத் தான் அவள பிடிக்காதே. அப்புறம் எப்படி.?” என்று யோசனையாக நாடியை தடவியவன், “ஆனா அவ பணம் மட்டும் பிடிச்சிருக்கு போல.” என்றான். அவர்கள் இருவரையும் பார்த்தபடி, அவர்களுக்குக் குத்தட்டும் என்ற நோக்கில்.
இந்தச் செருப்படி இருவருக்கும் தேவைதானென நினைத்த ரகுபதி. “மன்னிச்சிடுங்க மாப்பிள. இது எதுவுமே எனக்குத் தெரியாது.” எனக் கூற. அதே நேரத்தில் வசுமதியின் கணவனும்
“ஆமா சகல மன்னிச்சிடுங்க. எனக்கும் எதுவும் தெரியாது.”
“மன்னிப்பெல்லாம் வேண்டாம். உங்க ரெண்டு பேருக்கும் இது தெரியாதுன்னு நானும் ஊகித்திருந்தேன்.பரவா இல்லன்னு சொல்ல முடியல. இனி இது தொடராது என்று நம்புவோம்.” என்றான் பெண்களைப் பார்த்துக் கொண்டே.

“நிச்சயமா.” என்றார்கள் இருவரும் ஒன்றுபோல.
“சரி மாமா நாங்க கிளம்புறோம்.” என இவன் எழுந்திருக்க அவனோடு வசுந்தராவும் எழுந்து நின்றிருந்தாள்.
“நானும் வசுந்தரா உடைய அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்பிடறேன் மாப்பிள்ளை.” என ரகுபதி கூற.
“வேண்டாம் மாமா. நீங்கப் பணத்த அனுப்ப வேண்டாம். அது வசந்தரா அவ தங்கச்சிக்கு கொடுத்ததா இருக்கட்டும். அவ கல்யாண செலவுக்கு உபயோகப்படுத்திக்கோங்க. அக்காவுடைய பரிசாக இருக்கட்டும்.” என்றான் தெளிவாக.
கணவனோடு வெளியேறியவள் தந்தையிடம் கண்ணீருடன் தலையசைத்து விடை பெற அவளின் அருகில் வந்து அவள் தலையைக் கோதியவர்.

“அருமையான மனுஷன் உனக்குப் புருஷனா அமைஞ்சுருக்காரு. நீ நல்லா இருப்ப.” என்று அவள் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தவர்.
“போயிட்டு வா மா.நான் அப்பப்ப வந்து உன்னைப் பார்ப்பேன்.” என்றார் அவளின் சஞ்சலம் நீங்க.
சரி என்று தலையசைத்தவள் வேறு யாரையும் பார்க்காமல் கணவனோடு வெளியேறினாள் வசுந்தரா.

கொடுக்கப்பட்ட நான்கு நாட்களுக்கு முன்பாகவே பிரசவ வலி வந்திருந்தது வசுந்தராவிற்கு. அன்று காலையிலிருந்தே அவள் முகம் வாடித் தான் இருந்தது. காலையிலேயே மனைவியின் முகம் கண்டு யோசனையான சஞ்சய் அன்னையைச் சென்று அழைத்து வந்தான். பிரசவ காலம் நெருங்கவுமே வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அலுவலகத்தில் அனுமதி வாங்கி இருந்தான். அவளைப் பரிசோதித்த அனுபமா,

“பிரசவத்துக்கு இன்னும் நாலு நாள் இருக்கே.” என்றவர் அவளை உடல் பொறுக்கும் அளவிற்கு வெந்நீரில் குளிக்கவைத்து மெதுவாகக் கீழே அழைத்து வந்தவர் காலை உணவைக் கொடுக்க. ஏனோ ஒரு அசவுகரிய நிலை. முடிந்தும் முடியாமலும் உண்டு முடித்தவளுக்கு. சிறிது நேரத்தில் நன்றாக வலி தெரிய ஆரம்பித்தது.

அது பிரசவ வலி தான் என்பதை உறுதி செய்து கொண்ட அனுபமா மகன் மற்றும் மருமகளுடன் குழந்தைக்குத் தேவையான வற்றையும் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.
இவர்களோடு மருத்துவமனையில் சேர்ந்து கொண்டார் பிரபு. நன்றாக வலி வந்த போதும் குழந்தை வயிற்றுக்குள்ளே மலம் கழிக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. அவளை அறுவை சிகிச்சையின் அறைக்குள் அழைத்துச் சென்ற பதினைந்து நிமிடத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டது.
குழந்தையின் சத்தத்தில்
“பையன்.” என்றார் அனுபமா புன்னகையுடன்.
“ஸ்கேன் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டிங்களா.? எத்தனை முறை கேட்டோம். சொன்னீங்களா.?” எனப் பொய் கோபத்துடன் கேட்ட மகனைப் பார்த்தவர்.
“ஜெண்டர் ரிவில் பண்ணா. போலீஸ்  பிடிச்சிட்டு போயிடும் மகனே. தெரியாதா.? எனக் கேட்டார் விரிந்த சிரிப்புடன். இவர்கள் இங்கு வழக்காடிக் கொண்டிருக்க நீல நிற பூந் துவளையில் சுற்றி சஞ்சயின் மகனைக் கொண்டு வந்தார் மருத்துவர்

“அனு, பையன்.” என்று சிரிப்புடன் கூறியவர் அனுபமாவிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு. “அம்மாவும் நல்லா இருக்காங்க? கொஞ்ச நேரத்துல ரூமுக்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க.” என்ற வழக்கமான தகவலைக் கூறிவிட்டு மறுபடியும் உள்ளே சென்று விட்டார்.

எந்த நிற குறைபாட்டினால் வசுந்தரா, தாய் மற்றும் சகோதரிகளால் வெறுக்கப்பட பட்டாளோ அந்த நிறத்தில், பாலில் குங்குமப்பூ கலந்தது போன்ற செக்கச்சிவந்த நிறத்தில் பிறந்திருந்தான் சஞ்சய் மற்றும் வசுந்தராவின் மகன்.
“அப்படியே உன்னை உருச்சி வச்ச மாதிரி பிறந்து இருக்கான்டா உன் புள்ள.” என்று  அனுபமா கூற சிறகு இல்லாமல் பறப்பது போன்று உணர்ந்தான் அந்தப் புத்தம் புதிய தந்தை.

மருத்துவமனை வாசம் முடிந்து வீடு வந்து சேர்ந்திருந்தார்கள் தாயும் சேயும் நலமாக. கோகிலா உடன் ரகுபதி மருத்துவமனைக்கு வந்து மகளையும் பேரணையும் பார்த்துவிட்டுச் சென்றார். செக்கச் சிவந்த நிறத்தில் குழந்தையைப் பார்த்ததும் அவனை விட்டுச் செல்லவே மனமில்லை கோகிலாவிற்கு.
‘நிறம் எப்படி பாசத்தை  அளவீடாகக் கொள்கிறது.’  என இப்போதும் நினைத்து வேதனைப்பட்டாள்  வசுந்தரா.
சிலரை எப்போதும் திருத்த முடியாது என நினைத்து மனதை சமம் செய்து கொண்டாள்.
அதுபோல வசுமதியும் அவள் கணவனுடன் வந்து பார்த்துச் சென்றாள். பிரச்சனை நடந்த மறுநாளே சஞ்சய், மனைவியிடம் கேட்டுச் சொன்ன தொகையை அனுப்பி இருந்தான் வசுமதியின் கணவன். மறுபடியும் ஒரு மன்னிப்போடு. அதன் பிறகு, வசுந்தராவின் உடல்நிலையை கேட்டு அவ்வப்போது அலைபேசியில் பேசிக் கொள்வார்கள் இருவரும்.

பதினாறாம் நாளில் குழந்தைக்கு மொட்டை அடித்து அனு வருணன் எனப் பெயர் சூட்டியிருந்தார்கள்.
அன்னையின் பெயரைச் சேர்த்து தன் மகனுக்கு வைக்க வேண்டும் என்பது சஞ்சயின்  ஆசையாக இருந்தது. தன்னைப் போல ஜாடையில் இருக்கும் பேரனுக்குத் தன் பெயரின் பாதியும் இணைந்ததில் பெரும் மகிழ்வு அனுபமாவிற்கு.
இவை அனைத்தையும் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் பிரபு.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக நாட்களும் கடந்து செல்ல அனு வர்ணனுக்கும் மூன்று வயது முடிந்திருந்தது. கணவன் மாமனார் மாமியார் மகன் என மகிழ்வாகவே நாட்கள் நகர்ந்தது வசுந்தராவிற்கு. இந்த நாலரை வருடத்தில் கணவனின்  காதலை முழுவதுமாகப் பெற்றிருந்தாள். தன் தயக்கம் நீங்கி மெது மெதுவாகக் கணவனோடு பழக ஆரம்பித்திருந்தாள். சண்டை என்று பெரிதாக அவர்களுக்குள் வந்ததில்லை. அவனுக்குப் பெரிதாக நண்பர்கள் யாரும் இல்லாததால் அவர்களோடு வெளியே செல்வதோ, வீட்டிற்கு நேரம் கடந்து வருவதோ இல்லாமல் குடும்பத்துடன் வெளியில் செல்வதே எப்போதும் வாடிக்கையாக இருக்க. சண்டைக்கு வேலை இல்லாமல் இருந்தது அங்கு.

கணவனைவிட மாமியாரே உற்ற தோழிபோல இருந்தார். அதிகமான நேரம் இவர்கள் இருவருமே ஒன்றாக இருக்க. மாமியார், மருமகளுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அன்பு மட்டுமே இருவருக்கும் இடையில் இருந்தது.

சஞ்சைக்கும் அலுவலகத்தில் அடுத்த உயர் பதவி நிலைக்குச் செல்ல, கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. தாய், தந்தை இருவரும் மனைவி மற்றும் மகனை நன்றாகப் பார்த்துக் கொள்வதால் எந்தக் கவலையுமின்றி தன் பதவி உயர்வுக்காக  நேரம் காலம் இல்லாமல் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தான்.

அவ்வப்போது வசுந்தராவின் தந்தை மட்டுமே வந்து பார்த்துச் செல்வார். இவளுக்கும் தாய் வீடு என்பதே இல்லாமல் போய்ப் புகுந்த வீடே பிறந்த வீடாகவும் மாறி இருந்தது. குறை கூற முடியாத அளவிற்கு கண்ணிற்குள் வைத்துப் பார்த்துக் கொள்வதைப் போலப் பார்த்துக் கொண்டார் அனுபமா. ஒற்றைப் பிள்ளையாகச் சஞ்சய் அவருக்கு இருக்க. மகனுக்குப் பிறந்த குழந்தையும் ஆண் குழந்தையாக இருக்க பெண் குழந்தைக்கான அவரின் ஏக்கத்தை மருமகளை வைத்தே தீர்த்துக் கொண்டார். அதில் இன்னும், இன்னும் அதிகமான பிணைப்பு ஏற்பட்டது இருவருக்கும். அவரின் அதீத அன்பில் ஒரு முறை தன் பிறந்த வீட்டில் தந்தை மற்றும் தந்தையின் அன்னை இருவரையும் தவிர தன் மேல் பாசம் காட்ட யாரும் இல்லை என்பதை கூறியிருந்தாள்.

“இப்படி உங்க பாசம் முழுக்க எனக்கு மட்டுமே  கிடைக்கணும்னு  தான் அங்க நான் அவ்வளவு கஷ்டப்பட்டேன் போல.”எனச் சிரிப்புடன் சில நேரம் கூறுவாள்.

பதவி உயர்வுக்காகக் கணவன் வேலையே கதியென இருப்பதில் சில நேரம் இவளுக்கு அலுப்பாக இருக்கும். நேரம் சென்று வீட்டுக்கு வருபவன் தூங்கும் குழந்தையை முத்தமிட்டு செல்லும்போது அந்த முத்தம் இவளுக்கும் வேண்டியதாக இருக்கும். ஆனால் வாய் திறந்து கேட்க மட்டும் முடியாது.

இப்படியே ஆறு மாதத்தில் சஞ்சய் எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைத்தது இடமாற்றத்துடன். ஆம், அவனுக்கு அகமதாபாத்திற்கு மாற்றல் கிடைத்தது. அன்று வேலை முடிந்து விரைவாகவே வீட்டிற்கு வந்தவன் இரவு உணவின்போது அனைவரிடமும் இதைப் பற்றிக் கூறினான். அனைவருக்குமே மகிழ்வு தான். அவன் இரவு பகலாக உழைத்ததற்கு அதிக சம்பளத்துடன் பதவி உயர்வு.

“இப்போ என்னப்பா செய்றது.?” எனக் கேட்டான் இரவு உணவாகச் சப்பாத்தி குருமாவை தானும் சாப்பிட்டு தன் மடியில் அமர்ந்திருந்த மகனுக்கும் ஊட்டியப்படியே. விடுமுறை தினங்களில் மட்டும் பார்க்கும் தந்தையை அன்று பார்த்ததும் வருணனுக்கு அவ்வளவு மகிழ்வு. தந்தையோடு ஒட்டிக்கொண்டு அவன் மடியிலிருந்து இறங்காமல் அமர்ந்திருந்தான்.

“என்னப்பா செய்றதுனா.? இப்ப சாப்பிடற சப்பாத்திய சாப்பிட்டு பழகிக்கோ. இனிமே சப்பாத்தி தான் உனக்கு.”என்று கூறிவிட்டு அவர் அட்டகாசமாகச் சிரிக்க.
உண்பதை நிறுத்திவிட்டு கடுப்புடன் அவரைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் சஞ்சய்.
“போதும் போதும் அவனைக் கேலி செஞ்சது.” என அனுபமா வர அமைதியானது இடம்.

“ஏன் சஞ்சய்.? இத்தனை நாளா பதவி உயர்வு வேணும்னு கடுமையா உழைச்சிட்டு இருந்த. இப்போ கிடைச்சிருக்கு. அப்புறம், என்ன யோசனை.?” என்ற அன்னையின் கேள்விக்கு
“ஆமாம்மா.பதவி உயர்வு வேணும்னு தான் கடுமையாக உழைத்தேன். ஆனா இப்போ வேற ஊருக்குப் போகச் சொல்றாங்களே. அதான் என்ன செய்றதுன்னு பார்க்கிறேன்.?”
“வேற ஊரா இருந்தா என்ன.? ஆப்பர்ச்சூனிட்டீஸ் வரும்போது புடிச்சிக்கணும். இதோ இருக்கிற அஹமதாபாத். பிளைட் ஏறினா மூன்று அல்லது நான்கு மணி நேரத்துல வந்துடலாம். அதுக்கு போய் இவ்ளோ யோசிக்கிற. இப்போ இருந்தே அங்க இருக்கிற ஸ்கூல், வீடுபற்றி எல்லாம் விசாரிச்சு பாரு. உன் ஆஃபீஸ் கிட்ட இருக்கிற மாதிரி வீடு அமைந்தா நல்லது தானே. அங்க இருக்கிற ஆபிஸர்ஸ்  யார் கிட்டயாவது கேட்டுப் பாரு. இங்கேயே ஒரு அளவுக்கு முடிவு பண்ணிட்டு அங்க போய்ப் பைனலைஸ் பண்ணிடு.அதுக்கப்புறம் வந்து ரெண்டு பேரையும் கூட்டிட்டு போ.” என்று இலகுவாக அனுபமா கூற.

பெரும் கவலையுடன் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தாள் வசுந்தரா
“ஏன் அத்தை நீங்களும் அங்கேயே வந்துற முடியாதா.?” எனப் பாவமாகக் கேட்கும் மருமகளை பார்த்துச் சிரித்தவர்.
“நான் வந்துட்டா இங்க கிளீனிக்கை யாருமா பாத்துக்குறது.?” என்றவர் மகனுக்குக் கூறியதையே அவளுக்கும் கூறினார்
“எப்போ நினைச்சாலும் உடனே வரத் தூரத்தில் தானே இருக்கோம்? அப்புறம் என்ன.? வார இறுதியில் நீங்க வாங்க.அப்புறம் நாங்க வரோம்.” என்றார் சுலபமாக.

“என்ன ஒன்னு இந்தக் குட்டி பையன தான் ரொம்ப தேடும்.” என்றார் மகனின் மடியில் அமர்ந்திருந்த பேரனின் நாடியைப் பிடித்து ஆட்டியபடி. அதற்கே அவன் தந்தையிடமிருந்து பாட்டியிடம் தாவி இருந்தான்.
“நீங்க எப்படி இருப்பீங்களோனு கவலைப்படுறீங்க ஆனா அவன் எப்படி இருப்பானோ உங்கள விட்டு அப்படின்னு யோசிக்க மாட்டேங்கிறீங்க.” என்றாள் மனம் தாங்காமல் வசுந்தரா.
“புரியுதுமா. சூழ்நிலை வரும்போது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள தானே வேணும்.? என்றார் பெருமூச்செரிந்தவராக.

“நீ பேசுவதை பார்த்தால் பையன் கஷ்டப்படுவான்னு  பேசுற மாதிரி இல்ல. நீதான் எங்க அம்மா இல்லாம ரொம்ப கஷ்டப்படுவ போல. அவன் தேடுறானோ இல்லையோ நீதான் அவங்களை அதிகமா தேட போற.”

‘ஆமா உங்களுக்கு என்ன.? நீங்கப் பாட்டுக்கு வேலைக்குப் போயிடுவீங்க. தனியா இருக்க போறது நான்தானே.’ என்று அவள் வாய்க்குள் முனுமுனுத்தது யாருக்கும் கேட்காமலே போனது. மற்ற இருவரும் சஞ்சயின் கூற்றில் சிரித்த சிரிப்பலையில்.

புது வேளையில் சேர்வதற்கு இன்னும் இருபது நாட்கள் இருந்தது சஞ்சய்க்கு. அன்னை கூறியது போலவே இங்கிருந்தபடியே தன் அலுவலகத்தின் அருகிலேயே வீட்டையும் மகனுக்குப் பள்ளிக்கூடத்தையும் தேடினான். அப்படி அலுவலக விஷயமாகவும், சொந்த விஷயமாகவும் பேசியதில் அவனுக்கு இங்கிருந்தே ஒரு நட்பு கிடைத்தது. அவர் பெயர் தாரணி, மலையாளி. இவன் தென்னிந்தியாவிலிருந்து வருவதை தெரிந்துகொண்டு அவராகவே முன்வந்து பேசி அவனோடு அங்கிருந்தபடியே நட்பு பாராட்டிக்கொண்டார்.

அவர் அங்கு ஏற்கனவே தங்கி இருக்கும் கம்யூனிட்டி அப்பார்ட்மெண்ட்டை பற்றிக் கூறி அங்கேயே வீடு ஏதும் வாடகைக்கு கிடைத்தால் கூறுவதாகக் கூறியிருந்தவர், அதற்குள்ளாகவே மழலையர்களுக்கான பள்ளிக்கூடமும் இருப்பதைப் பற்றிக் கூறினார். இவனுக்குமே  அவர் சொன்னது ஏற்புடையதாக இருந்தது.

அலுவலகத்திற்கு அருகில் வீடு இருப்பதும் அதன் உள்ளே குழந்தைக்கான பள்ளிக்கூடம் இருப்பதும் மற்ற தேவைகளுக்கு அவசியமான கடைகள் இருப்பதும் புது இடத்தில் மனைவிக்கும் வசதியாக இருக்கும். தனக்கும் ஒரு நண்பராக அவர் அங்கு இருக்கும்போது பல வகையில் உதவியாக இருக்கும் என எண்ணியவன். தாரணி கூறியவற்றுக்கு சம்மதித்து அவனும் கூகுளில் அவர் சொன்ன அப்பார்ட்மெண்ட்டை பார்த்துப் படித்துத் தெரிந்து கொண்டான். தாரணி இவனைவிட ஐந்து வயது மூத்தவராக இருந்தார்.
பழகிய சில நாட்களிலேயே இருவருக்கும் வெகுநாள் பழகியது போன்ற நட்புறவு ஏற்பட்டிருந்தது.

மனைவியிடமும், தாய், தந்தையிடமும் இதைப் பற்றிக் கூறியிருக்க,
“போற இடத்துல நல்ல பழகுறவங்க யாராவது இருக்கிறது நல்லது தான்.ஆத்திர அவசரத்துக்கு அவர்களிடமிருந்து உதவியும் பெற்றுக் கொள்ளலாம். தெரியாததையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஒரு பாதுகாப்பு உணர்வும் இருக்கும்.”என்ற அனுபமாவிற்கு மிகுந்த திருப்தியே.

புது இடத்தில் மருமகள் எங்குச் சிரமப்படுவாளோ என்று மனதிற்குள் பயந்து கொண்டே இருந்தார் அவர். துணிச்சலாக எதையும் செய்து கொள்ளும் பெண் அல்ல அவள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதற்காக ஒரேடியாகப் பயந்தவளும் அல்ல. இருந்தாலும், புது ஊரில் ஆரம்பகட்ட தயக்கம் அவளுக்கு இருக்கும் என்பது அவர் அனுமானித்தே இருந்தார். இதுவரை தனியாகவும் இருந்ததில்லை என்பதால் குழந்தையை வைத்துக் கொண்டு எப்படி சமாளிக்க போகிறாளோ என நினைத்தவருக்கு இது, பெரும் கவலையாக இருந்தது. இப்போது சஞ்சய் கூறிய விஷயத்தில் சற்றே நிம்மதியும் ஆசுவாசமும் கிடைத்தது.

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்