Loading

16.அத்தியாயம்

சைத்ராவிடம் அவள் அலைப்பேசியில் உரையாட, ரகுவரனோ தன்னை பற்றி தற்போது ஏதும் கூறவேண்டாம் என்று செய்கை செய்ய சற்று குழம்பி போனாள் மது. சைத்ராவிடம் பேசிவிட்டு போனை வைத்தவள், அவனிடம் அதற்கான காரணத்தைக் கேட்க, சைத்ரா நேரில் வந்ததும் நம் காதலை பற்றி இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று கூறி சமாளித்திருந்தான் ரகுவரன்.

அவளுக்கும் ரகுவும் நானும் காதலிக்குறோம் என்று நேரடியாக கூற கூச்சம் இருக்கத் தான் செய்தது. இருந்தும் நாங்கள் நண்பர்களாக பழகுகிறோம் என்றாவது கூறியிருக்கலாமே. பின் அவள் வந்ததும் காதலிப்பதை எடுத்துக் கூறியிருக்கலாம் என்ற எண்ணம் தான் தோன்றியது.

அதன் பின்னான நாட்களில் என்ன தான் காதலை கூறினாலும் அவனிடம் தள்ளியே இருந்தாள் மது. அதற்கான காரணம் கூச்சமா? பதட்டமா? கலக்கமா?என்ன என்பது மட்டும் அவளுக்கு புரியவில்லை. போனில் மட்டுமே இருவரும் அதிக நேரம் பேசிக்கொண்டனர். அவளும் படிப்பில் கவனம் சிதறல் வருவதாக கூறி நேரில் பார்ப்பதை தவிர்த்தாள். அதுமட்டுமின்றி சைத்ராவிடம் காதலை மறைப்பதும் ஒரு உறுத்தலாகவே அவளுக்கு இருந்தது.

ரகுவரனும் அவளிடம் நெருங்க மிகவும் முயற்சித்தான். வருடத்திற்கு ஒருமுறை சந்திக்கும் சந்திப்பில் அவளது கரம் பற்றி அவன் ஆசையாக பேசினாலும் அவனது கைகளை விலக்கிவிடுவாள். அவள் கல்லூரி மூன்றாம் ஆண்டு முடிக்கும் தருவாயில் அவளை நேரில் சந்தித்தவன், படத்திற்கு போகலாம் என்று ஆவலாக கூற, கோவிலுக்கு செல்லலாம் என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டாள் மது. மருதமலை கோவிலுக்கு சென்றவர்கள், முருகனை தரிசித்து பின்னர் படியில் நடந்து வரத் தொடங்கினர்.

“வரு” என்றவன் பெண்ணவளது கைகளை ஆசையாக பற்றிக்கொள்ள, அவனது கைகளை தன்னிடமிருந்து பிரித்தாள் மது.

“என்ன பண்றீங்க. யாராவது தெரிஞ்சவங்க பார்த்தால் வீட்டுக்கு தெரிஞ்சு பிராப்ளம் ஆகிடும்.” என்றவள் பயத்தில் விலகிச் செல்ல அவனோ பல்லைக் கடித்து தன் கோபத்தை அடக்கினான்.

“வர்ணி, அதான் ஸ்டெடிஸ் முடிஞ்சுது தானே. இனி அடிக்கடி மீட் பண்லாமா?”

“அதுக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேளுங்க ரகு. அப்புறம் அதுக்கெல்லாம் முன்னாடி சைத்துகிட்ட சொல்லணும். எனக்கு அவகிட்ட ஒவ்வொரு முறையும் சொல்லாமல் இருக்குறது மனசுக்கு பாரமாகவும் கஷ்டமாகவும் இருக்கு.” பரிதவித்துப் போய் கூறியவளைக் கண்டு கோபம் வந்தாலும் தன்னைத் தானே கட்டுப்படுத்தியபடி அவளுடன் வந்தான் ரகுவரன்.

வீட்டிற்கு வந்தவளோ தனக்கு திருமணம் பற்றி பேச்சு எடுப்பதைக் கண்டு அதிர்ந்து போனாள். தனக்கு திருமணத்திற்கு என்ன அவசரம்? என்ற எண்ணம் தான் அவள் மனதில் தோன்றியது. அடுத்தநாளே ரகுவிற்கு அழைப்பை விடுத்தவள் வீட்டில் நடப்பதைக் கூறினாள்.

“என்ன வரு இவ்ளோ அவசரம்? நீ மேற்கொண்டு படிக்கணும்னு சொல்லு. சீக்கிரமே நான் வரேன்.” என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.

அன்றொரு நாள் மிகவும் உற்சாகமாக இருந்தான் ரகுவரன். கோட் சூட் எல்லாம் அணிந்தவன் தயாராகியபடி மது கூறிய இடத்திற்கு வர, அவளும் டிசைனர் புடவையில் தேவதைப் போல நின்றிருந்தாள்.

“வாவ், யூ லுக் கார்ஜியஸ் டியர்‌” என்றவன் அவளை அணைத்து விடுவிக்க கூச்சத்தில் தலைக்கவிழ்ந்தாள் மது‌.

“என்ன பேபி வெட்கமா?”

“அது எல்லாம் ஒண்ணும் இல்லை ரகு. இப்போ எல்லாம் கண்ணம்மா தவிர டியர், பேபி தான் அதிகமா வருதே?”

“அச்சோ கண்ணம்மா அப்போ எனக்கு நீ குழந்தை மாதிரி தெரிஞ்ச. ஆனால் இப்போ உன்னை என் மனைவியாவே பார்க்க ஆரம்பிக்கிறேன்.”

“அப்போ சீக்கிரம் வீட்டுல வந்து பேசுங்க ரகு.” என்றவள் உற்சாகமாக கூற, “சரிடா கண்ணம்மா.” என்றவன் தலையாட்டினான்.

மது அவனை அழைத்துக் கொண்டு பார்ட்டி நடக்கும் ஹோட்டலிற்கு சென்றாள். மதுவின் பள்ளி தோழி சந்தியா தனது திருமணத்திற்கு முன் தன்னுடன் பயின்ற தோழர்களையும் தோழிகளையும் அழைத்து சிறியதாக பேச்சுலர் பார்ட்டி ஒன்றை நடத்தியிருக்க, அதற்கு தான் ரகுவரனையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தாள் மது.

“வரு, பார்ட்டி முடிஞ்சதும் நீ பிராமிஸ் பண்ண மாதிரி என்னோட வெளிய வரணும் ஓகேவா.”

“அப்பப்பா எத்தனை தடவை சொல்லிட்டீங்க. இன்னைக்கு கண்டிப்பா வருவேன் போதுமா.” என்றவள் ஆணித்தரமாக கூறவும் அவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி குடிக்கொண்டது.

“சைத்து, இந்தியால இருந்திருந்தா அவளும் வந்திருப்பா.” என்றவள் சோகமாக கூற, அவன் பதிலுக்கு ஒன்றும் பேசாது அமைதியாக நின்றிருந்தான். அவ்விடம் வந்திருந்த தோழிகள் ரகுவை பற்றி கேட்க தன் அத்தை மகன் என்றெல்லாம் கூறி சமாளித்தவளை பார்த்து, ‘நான் சொல்லட்டுமா’ என்று தூரத்தில் நின்றே அவன் செய்கை செய்ய, ‘சும்மா இருங்க’ என்று வெட்கி புன்னகைத்தாள் மது.

இதுவரை படிப்பில் செலுத்திய கவனம் போதும். தன்னையும் கொஞ்சம் கவனி என்று வாய் திறந்தே அவன் கூறியவற்றை எல்லாம் நினைத்தவளுக்கு அவளையும் மீறி முகம் சிவந்துப் போனது.

சந்தியா தன் தோழிளோடு சேர்ந்து கேக்கை வெட்ட செல்ல, மதுவையும் அழைத்தாள்.

“வரேன் சந்து” என்றவள் நகர, பெண்ணவளின் கரம் பற்றிய ரகுவோ, “நான் இங்க தனியா நிற்கணுமே.” என்றவன் கூற,

“குறைஞ்சு போக மாட்டீங்க.” என்றாள் நக்கலாக.

“அநியாயம் வரு. அப்புறம் பொண்ணுங்க பேச்சிலர் பார்ட்டி ரொம்பவே மொக்கையா தான் இருக்குமா? ஒரு தண்ணீ கூட இல்லை.” என்றவன் கூறும் போதே பெண்ணவளது புருவம் உயர்ந்தது.

“ஹீஹீ சுடுதண்ணியை சொன்னேன் டியர்.” என்றவனுக்கோ அலைப்பேசி அழைக்க, “முக்கியமான கால் நீ கன்ட்டின்யூ பண்ணு. நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்.”

கேக்கை சந்தியா வெட்டும் நேரம் பார்ட்டியில் ஓடிக்கொண்டிருந்த இசைத் தடைப்பட்டது. அனைவரும் ஒருவரை ஒருவர் சுற்றி வேடிக்கை காண,

“நான் இல்லாமல் கேக் வெட்டலாமா?” என்று மைக்கில் கேட்ட குரலில் முதலில் சிலிர்த்துப் போய் நின்றது என்னவோ மது தான்.

“சைத்து” என்றவளது உதடுகள் அன்னிச்சையாக உரைக்க, மிக வேகமாக திரும்பி பார்த்தாள் மது.

ஒலிவாங்கியைக் கைகளில் பிடித்தபடி, லாங் கவுன் வகை உடை அணிந்திருந்தவளை பார்த்த நொடி மதுவின் கண்களில் நீர் கோர்த்தது. கிட்டத்தட்ட மூன்றரை வருடங்கள் ஆகிறது அல்லவா?

“மது” என்றவள் புன்னகைக்க, சைத்ராவை நோக்கி ஓடிச் சென்று தாவி அணைத்துக் கொண்டாள் மது. “வாட் எ பிளசன்ட் சர்பிரைஸ்டி இடியட். ஏன் என்கிட்ட நீ சொல்லவே இல்லை. ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல” விசும்பலுடன் கேட்டாள்.

“சொன்னா சர்பிரைஸ் போயிடுமே மச்சி.” என்று பளிச்சென்று புன்னகைக்கும் சைத்ராவின் கன்னத்தை இருபுறமாக மாற்றி மாற்றி ஆட்டினாள்.

“ஓய் கேர்ள்ஸ் போதும் உங்க கொஞ்சல்ஸ். இப்போவாவது நான் கேக் வெட்டலாமா தங்கங்களா?” என்று பாவமாக சந்தியா கேட்க, இருவரும் சேர்ந்து சிரித்துக்கொண்டே தலையாட்டினர்.

கேக் வெட்டிய பின்பு இருவரும் தனியாக அமர்ந்து பேசத் தொடங்கினர். “இந்த லீவ்க்கு இந்தியா வந்து உன்னை பார்த்துட்டு போக பிளான் பண்ணேன். சரியா சந்தியாவும் இன்வயிட் பண்ணியிருந்தாள், நீயும் வருவேனு தெரியும். உனக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்னு தான் நான் வரது சொல்லலை.”

“அடிப்பாவி கேடி. மேடம் மட்டும் தான் இன்ப அதிர்ச்சி தருவீங்களா? நானும் தருவேன்.” என்றவளது பார்வை ரகுவைத் தேடியது.

“அப்படி என்ன அதிர்ச்சி மேடம்?” என்றவள் ஆர்வமாக கேட்டாள்.

“அது எப்படி சொன்னா சர்பிரைஸ் போயிடுமே. பார்த்து தெரிஞ்சுக்கோ.” என்றவள் ரகுவைத் தேடத் தவறவில்லை.

“மச்சி, சம்திங் இஸ் டிஃப்ரண்ட். என்ன மேடம் ரொம்ப அழகா ரெடியாகியிருக்க? சம்திங் சம்திங்கா?”

“ச்சே ச்சே நத்திங். கொஞ்சம் அமைதியா இரு.” என்றவளுக்கு மனமோ பதட்டமாகவே இருந்தது. நேரில் சந்தித்த பிறகும் இனி தன் தோழியிடம் எதையும் மறைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

அந்நேரம் பார்த்து ரகுவிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. முக்கியமான வேலை என்பதால் கிளம்பிவிட்டதாகவும் தன்னை மன்னித்து விடும்படி கூறி இருந்தான்.

அதை படித்ததும் இவள் முகம் நொடியில் வாடியது. சைத்ராவிடம் வெளிக்காட்டிக் கொள்ளாதவள், தன் கவலையை மறைக்க பெரும்பாடுபட்டாள்.

“என்னாச்சு மச்சி. எதாவது பிராப்ளமா?”

“தலைவலிடா. வேற ஒண்ணும் இல்லை.” என்று சமாளித்தவள் அவளுடன் சேர்ந்து உணவினை உண்டாள். அதன் பின்னர் தன் தோழியை அழைத்துக்கொண்டு நேராக தன் வீட்டிற்கு வந்தவள், தன் அம்மாவிடம் சைத்ராவை அறிமுகம் செய்தாள்.

“காலேஜ் பிரெண்டா” என்று கேட்கும் அன்னையைக் கண்டு இயலாமையுடன் பார்த்தாள். தனது தோழிகள் ஒருவரை பற்றிக்கூட அறிந்திட முயற்சிக்காத அன்னையின் ஒட்டுதலின்மை எப்போதும் போல விரக்தியைக் கொடுத்தது.

“ஹாய் ஆன்ட்டி, நான் சைத்ரா. நாங்க ஊட்டியில ஒன்னா படிச்சோம்.” என்றாள் சைத்து.

“ஜார்ஜியால மெடிக்கல் பண்றவங்க நீங்க தானே அக்கா.” என்று உமாபதி கூறவும் தான் மதுவிற்கு ஆறுதலாக இருந்தது. பின் மதுவின் தந்தையும் அவளை வரவேற்றார்.

அன்று இரவு அதிசயம் போல வீட்டில் உள்ள அனைவரும் சைத்துவுடன் சேர்ந்து ஒன்றாக இரவு உணவினை உண்டனர். சைத்துவும் அவர்களுடன் கலகலப்பாக பேச, மதுவிற்கு நினைப்பு முழுவதும் ரகுவை பற்றியே ஓடிக்கொண்டிருந்தது.

“சைத்ரா, வருணிக்கு நாங்க மாப்பிள்ளை பார்த்திருக்கோம். அநேகமா திரும்ப நீ இந்தியா வர மாதிரி இருக்கும்.” என்று புன்னகையுடன் பிரபாவதி கூற, முதன்முறையாக சாப்பிடாது பாதியிலேயே எழுந்து சென்றவளை பிரபாவதியும், தாமோதரனும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

“என்ன பழக்கம் வருணி? எதுக்கு இப்படி பண்ற?”

“பிடிக்கலை மாம்.”

“என்ன பிடிக்கலை. சாப்பாடா? இல்லை கல்யாணமா?”

“இரண்டும் தான்.” என்றவள் முறைக்க, தன்னை எதிர்த்து பேசுபவளை அதிர்ந்து போய் பார்த்தார் பிரபாவதி.

“என்ன வருணிமா அம்மாகிட்ட இப்படி பேசுற? என்னாச்சு உனக்கு?” தாமோதரனும் கேள்வி கேட்டார்.

“என்னைக்காவது என்ன பத்தி நீங்க யோசிச்சிருக்கீங்களா? உங்க இரண்டு பேரையும் கேட்கிறேன்.”

“என்ன பேசுற? உனக்கு எல்லாமே பார்த்து பார்த்து பண்றோம். அப்பா யாருக்காக உழைக்கிறாரு. உனக்கும், உமாபதிக்கும் தானே. உங்களுக்கு என்ன குறை வெச்சிருக்கோம் ஸ்கூல்ல இருந்து, காலேஜ் வரை எல்லாமே டாப்கிளாஸ் பிளேஸ்ல தானே சேர்த்திருக்கோம். இவ்வளவு ஆடம்பரமா வளர்த்தும் நீ இப்படி சொல்றது சரியில்லை வரு.” பிரபாவதியும் ஆதங்கத்துடன் கேட்டார்.

சைத்துக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. ஏன் மது இவ்வளவு கோபத்துடன் பேசுகிறாள் என்ற யோசனையோடு அவளையே கவனித்தாள் சைத்ரா. உமாபதியும் செய்வதறியாமல் நின்றான்.

“அதுதான் மாம் என்னோட பிரச்சனை. டிரஸ்ல இருந்து சாப்பிடுற சாப்பாடு வரை எல்லாமே உங்க தேர்வு தான். பிடிச்ச ஸ்கூல்ல படிக்கக் கூட விடமாட்டிங்குறீங்க. என்னைக்காவது ஒரு நாள் இன்னைக்கு ஸ்கூல்ல என்ன நடந்துச்சுன்னு கேட்டிருப்பீங்களா? ரொம்ப வலிக்குது மாம். நான் ஏன் இந்த வீட்ல பிறந்தேன்னு பல நாள் அழுது இருக்கேன். அதுகூட உங்க யாருக்கும் தெரியாது. பணம் தான் வாழ்க்கைனா ஏன் மாம் குழந்தைங்களை பெத்துக்கிறீங்க? இப்படிப்பட்ட இயந்திரமான வாழ்க்கை வாழ்றதுக்கு வாழாமலே இருந்துட்டு போயிடலாம்.” என்றவள் கூறியதும் அவ்விடமே அமைதியாகிப் போனது.

“வரு, என்னடா இப்படி எல்லாம் பேசுற?” என்று துடித்துப் போய் கேட்டார் தாமோதிரன்.

“பேச வெச்சிட்டீங்களே. எனக்கு உங்க கூட நேரம் செலவிட ரொம்ப பிடிக்கும். எவ்ளோ நாள் ஏங்கியிருக்கேன் தெரியுமா? வேண்டாம் அப்பா இதுக்கு மேல பேசி உங்களை சங்கடப்படுத்த விரும்பலை.” என்று பொங்கி வந்த கண்ணீரை அடக்கியபடி அறை நோக்கி அவள் செல்ல, சைத்ராவோ, “நான் பார்த்துக்கிறேன்.” என்று அவர்களை சமாதானம் செய்தபடி அவள் பின்னே சென்றாள்.

இத்தனை நாள் மனதிலிருந்த அனைத்தும் வார்த்தைகளால் வந்து விட்டது மதுவிற்கே ஆச்சரியம் தான். ஏனோ இன்று ரகு அவ்வாறு விட்டு சென்றது அவளை வெகுவாகத் தாக்கியது. முதன்முறையாக அவனை தவறாக யோசித்தது. சைத்ராவை காண விருப்பம் இல்லாமல் சென்றிருப்பானோ என்று யோசித்தவள், அப்படி எல்லாம் இருக்காது என்று தன்னைத்தானே தேற்றி சமாதானம் செய்தாள்.

அதே யோசனையில் உழன்றவளுக்கு திருமணம் என்ற பேச்சை ஆரம்பிக்கவும் கோபம் அதிகமாக, மாப்பிள்ளை கூட உங்கள் தேர்வுதானா என்ற கோபத்தில் மனதிலிருப்பதை கொட்டித் தீர்த்துவிட்டாள் மது.

அறையில் மெத்தையின் மீது முல்லை மலர் கொடி போல் படர்ந்து கிடந்தவளின் அருகே வந்தாள் சைத்ரா. அவளது தோள்களை பிடித்தவள்,

“யாரையாவது லவ் பண்றியா மது?” என்று ஒற்றைக் கேள்விக் கேட்ட நொடி பதறிப்போய் எழுந்தாள் மது.

“ஏன் இந்த கேள்வி கேட்குற?”

“நீ நடந்துகிட்டது வெச்சு தான் கேட்கிறேன். போன்ல பேசுறப்போ எதுவோ பேச வர, அப்புறம் அதை விட்டு வேற எதையோ பேசுற. இன்னைக்கு சர்பிரைஸ்னு எதுவோ சொல்ல நினைச்ச, ஆனால் சொல்லலை. அப்புறம் மாப்பிள்ளை பார்த்திருக்காங்கனு சொன்னதும் அவ்ளோ கோபம் வருது. இது எல்லாம் வெச்சு தான் சொல்றேன்.”

“சைத்து, என்மேல உனக்கு நம்பிக்கை இருக்கு தானே?”

“என்னடி, கேள்வி இது. முழு நம்பிக்கை இருக்கு.”

“தாங்ஸ் சைத்து. இது போதும். எஸ் நான் காதலிக்குறது உண்மை தான்.” தலை கவிழ்ந்துக் கொண்டு கூற,

“என்ன மேடம், இது எப்போ இருந்து? அப்புறம் யார் அந்த லக்கிமேன்?”

“எல்லாம் உனக்கு தெரிஞ்சவங்க தான்.”

“எனக்கு தெரிஞ்சவங்களா? யாரு?”

“உன்னோட கசின் ரகு தான்.” என்று அவள் உரைத்த நொடி அதிர்ந்துப் போய் பார்த்தாள் சைத்ரா.

மது சொன்ன வார்த்தைகளை கேட்ட நொடி அதிர்ச்சியில் உறைந்து நின்ற சைத்ராவை அவள் தான் உலுக்கி பழைய நிலைக்கு கொண்டு வந்தாள்.
“நான் சொல்றது உனக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும். சாரிடி சைத்து உங்கிட்ட சொல்லாம ரொம்பவே கில்டியா இருந்தேன். பைனலி இப்போ சொல்லிட்டேன். என்ன மன்னிச்சுடு.”

“மது, என்னடி இவ்ளோ பெரிய விசயத்தை அசால்ட்டா சொல்ற? நீ நிஜமாவே என் கசினை லவ் பண்றியா? அவனும் பண்றானா? எனக்கு தலை சுத்துது. அவனுக்கு இன்னும் பத்து நாள்ல கல்யாணம் மது. இப்போ இந்த லீவ்ல அவனோட மேரெஜ்காக தான் வந்திருக்கேன்.”

“வாட்? அப்படி எதுவும் அவர் சொல்லலை. என்ன சைத்து நடக்குது. ஒருவேளை அவருக்கு பிடிக்காமல் கல்யாணம் பேசிட்டாங்களா?”

“என்ன பேசுற? முதல்ல சொல்லு ரகுவை நீ நேர்ல பார்த்தியா? இது எப்படி நடந்துச்சு? அதுக்கு அப்புறம் மேற்கொண்டு பேசிக்கலாம்.”

சைத்ரா கேட்கவும் நடந்தவற்றை மறைக்காமல் கூறி முடித்தாள் மது. அவள் கூறியதுமே அதிர்ந்தவள் அவள் கூறிய ரகுவின் முகநூல் கணக்கினை வாங்கி பார்த்தாள். அந்நொடி மீண்டும் அவள் முகம் அதிர்வினைக் காட்டியது.

“மது, இந்த ரகு ஐடி என் கசின் இல்லைடி.”

“இல்லை சைத்து நல்லா பாரு. உங்கிட்ட கூட கேட்டேனே? ஞாபகம் இருக்கா? அவரு ஐடி தான்.” மிகுந்த நம்பிக்கை அவள் பேசும்போதே தெரிந்தது.

“மது, என் பிரெண்ட் லிஸ்ட்ல இது மாதிரி ஆறு ரகு இருக்காங்க. அதுக்காக எல்லாரும் என் கசின் ஆகிடுமா? நீ கேட்ட இல்லைனு சொல்லலை. ஆனால் நீ அவனோட பேசுறது பத்தி ஏன் ஒரு வார்த்தை சொல்லலை. அது எங்க வீட்டு ரகுவாகவே இருக்கட்டும். அவனை காதலிக்கறதுக்கு முன்னாடி அவனை பத்தி நீ என்கிட்ட சொல்லியிருக்கணும். என்னை வெச்சு தானே இந்த பிராடு ரகு உன் வாழ்க்கையில வந்திருக்கான். ஒரு வார்த்தை கூட சொல்லணும்னு தோணலையா?” என்றவளின் கேள்வி இவளை சுருக்கென்று தைக்க, சிலை போல் நின்றவளது கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் தரை புரண்டது.

“இ… இல்லை சைத்து இவரு உன் கசின் தான். எனக்கு அவரு மேல நம்பிக்கை இருக்கு.”

“பைத்தியம்…” என்று பற்களை கடித்தவள் பின் தன்னை நிதானித்து, “மது உனக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன். அந்த ரகுவோட போட்டோ காட்டு.” என்றாள் கோபமாக.

தன்னிடமிருந்த ஒரு புகைப்படத்தை அவளுக்கு காட்டினாள். அதைக் கண்டதும் கண்களை விரித்த சைத்ரா தன் தோழியைக் கண்டு மனம் கனக்க பார்வை பார்த்தாள்.

“சொல்லு சைத்து இவரு உன் கசின் தான?”

“இல்லை.” என்றவளின் ஒற்றை வார்த்தையில் ஸ்தம்பித்துப் போய் நின்றவள், பொத்தென்று தரையில் அமர்ந்துவிட்டாள். அவளையும் மீறி அழுகைப் பீறிட்டது. ஒவ்வொரு முறையும் சைத்ராவிடம் இப்போது தெரிவிக்க வேண்டாம் என்று அவன் கூறியதற்கு காரணம் இது தானா? தலை சுற்றுவது போல இருந்தது அவளுக்கு. தான் ஒருவனால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை அவளால் ஜீரணிக்கவே இயலவில்லை.

உதடுகளை பிதுக்கி வெடித்து அழுதவளை வாரி அணைத்துக் கொண்டாள் சைத்ரா. தன் தோழி படும் வேதனையை அவளால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை.

“ஒண்ணும் இல்லை மது. தப்பா ஒண்ணுமே நடக்கலை. முன்னாடியே அவனை பத்தி நம்ம தெரிஞ்சுகிட்டோம். இப்போவே அவனுக்கு கால் பண்ணி உன் லைஃப்ல அவன் வராத மாதிரி நான் பேசிடுறேன். இந்த மாதிரி ஏமாத்துறவங்க உலகத்துல நிறைய பேர் இருக்காங்கடா. நல்லவேளை இதோட போச்சேனு மனச தேத்திக்க முயற்சி பண்ணு.” என்றவள் அவள் அழுது முடிக்கும் வரை காத்திருந்தபடி அதன் பின்னர் கூறியும் கூட அவளால் அதனை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“என் உணர்வுகளோட எப்படி விளையாட மனசு வந்துச்சு. ஏன் என்னை ஏமாத்தணும் சைத்து?”

“லிசன் மது. இந்த சமூக வலைத்தளம் எவ்வளவு நமக்கு சந்தோசத்தைக் கொடுக்குதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கு. தெரியாத ஒருத்தரோட பிரெண்ட் ரெக்வெஸ்டை அக்சப்ட் பண்றதுனால மட்டுமில்லை, அவர்களோடு நம்ம தனிப்பட்ட வாழ்க்கையை பகிர்ந்துக்கிறதுனால தான் இவ்வளவு பிராப்ளம் வருது. என்னைக்குமே நம்ம வாழ்க்கையை பத்தி முகம் தெரியாத ஒரு நபர்கிட்ட பேசக்கூடாது. இந்த முகநூல்ல எனக்கு நிறைய அனுபவம் இருக்கு.

என்னையவே நிறைய பேர் தப்பா அப்ரோச் பண்ண முயற்சி பண்ணியிருக்காங்க. கெட்டவனை விட நல்லவன் மாதிரி வேசம் போடுறவன் தான் உலகத்துல நிறைய பேர் இருக்காங்க. நல்லவன்னு நம்மளை நம்ப வெச்சு காதல் வலையில வீழ்த்தி சிலர் தனியா அழைச்சுட்டு போய் அந்த பொண்ணோட வாழ்க்கையை கெடுக்கிறவனும் இருக்கான். அதே சமயம் பிளாக்மெயில் பண்ணி பணத்தை பறிக்குறவனும் இருக்கான்.

உண்மையை சொல்லணும்னா ஒரு சில ஆண்களை தவிர்த்து பலர் பொறுக்கியா தான் இருக்காங்க. கல்யாணம் ஆகி குடும்பம் குட்டி எல்லாம் இருக்கும். ஆனால் ஃபேஸ்புக்ல தெரியாத பொண்ணோட கடலை போட்டுகிட்டு இருப்பானுங்க. அந்த மாதிரி ஆளுங்க மனைவிக்கு காய்ச்சல் வந்தால் கூட பெருசா கண்டுக்க மாட்டானுங்க. இதே தெரியாத பொண்ணு உடம்பு சரியில்லைனு சொன்னா போதும். டேக் கேர், ஹாஸ்பிடல் போனியா? தூங்குனியா? தாங்குனியானு பச்சையா கேர் பண்றேங்குற பேர்ல வழிவானுங்க.

எல்லா ஆண்களும் கெட்டவங்க கிடையாது. அதே சமயம் எல்லா ஆண்களும் நல்லவங்களும் கிடையாது. ஒரு பொண்ணுக்கு ஆண் மட்டும் தான் எதிரினு இல்லை. பொண்ணுக்கு பொண்ணு கூட எதிரியாதான் இருக்காங்க. அதனால நம்ம தான் நம்மளை காப்பத்திக்கணும் மது. என்னைக்குமே நம்மளை வேற யாரும் வந்து காப்பாத்துவாங்கனு வேணும்னே ஆபத்துல போய் சிக்கிக்கக்கூடாது.” என்றவள் பேசி முடிக்க, மதுவிடமிருந்து அமைதி மட்டுமே நிறைந்திருந்தது.

“பேசு மது. ஏன் அமைதியா இருக்க? உன் போனை கொடு அந்த அயோக்கியனுக்கு போன் பண்ணி நாலு வார்த்தை நாக்கை புடிங்கிக்குற மாதிரி கேட்குறேன்.”

“என்னால முடியல சைத்து அவரை ரொம்ப நம்புனேன்.”

“போதும். அவனை பத்தி பேசாத அவனுக்கு கால் பண்ணு. இத்தோட இதுக்கு ஃபுல்ஸ்டாப் வைப்போம்.” என்று அவள் கூறியதும் தனது கைபேசியை எடுத்தவள் ரகுவரனுக்கு அழைப்பினை விடுத்தாள். அவன் எடுத்ததுமே ஸ்பீக்கரில் அவள் போட்டுவிட அவன் பேசியது சைத்ராவிற்கும் தெள்ளத்தெளிவாகக் கேட்டது.

“ஹலோ கண்ணம்மா, ஐ அம் ரியலி சாரிடா பாதியிலே விட்டுப் போயிட்டேனு பீல் பண்றியா?”

‘எப்படி நல்லவன் மாதிரி வேசம் போடுறான். பிராடு பையன்.’ என்று பல்லைக் கடித்தபடி நின்றாள் சைத்ரா.

“பாதியிலே விட்டு போறது தான் நல்லது போல.” கண்ணீரை அடக்கியபடி பேசிய மதுவின் குரலில் தெரிந்த மாற்றம் அவனுக்கும் வியப்பே.

“அழுதியா வரு?”

“ம்ம்ம்… ஒரேடியா அழுது முடிக்கணும்.”

“என்னாச்சு வரு. நீ என்ன பேசுற?”

“ம்ம்ம்… ரகு அது விடுங்க. சைத்ரா வந்திருந்தா இன்னைக்கு.”

“ஓ… சொல்வவே இல்லை? நம்ம விசயத்தை எதுவும் சொல்லிட்டியா?”

‘எப்படி பாயிண்டா கேட்குறான் பாரு. பாவி’ என்று சைத்ரா வாய்க்குள் முணங்கியவள் அதற்கு மேல் பொறுமை இல்லாமல் பேசத் தொடங்கியிருந்தாள்.

“ஹாய் மை டியர் கசின்னு…” என்று சைத்ரா பேசவும் மறுமுனையில் பெருத்த அமைதி நிலவியது.

“ஏய், பிராடு நீ என் கசின்னா? சொல்லுடா எதுக்கு இப்படி ஒரு நாடகம்?” என்றவள் எகிற, மது தான் அவளை அமைதிப்படுத்தினாள்.

“நான் பேசிக்குறேன்.” என்றவள் அவனிடம், “ஏன் ரகு, என்னை ஏமாத்தினீங்க? உங்களை நம்பி ஏமாந்து நிற்குறது நான் மட்டும் இல்லை என் காதலும் தான். வேற ஒருத்தரை நினைச்சு தான் உங்களோட பழகுனேன். என் காதல் வேற ஒருத்தர் மேலயா? இல்லை உங்க மேலயானு கூட தெரியலை. இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை பண்ண உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு?”

“ஒத்துக்கிறேன் வரு. நான் சைத்ரா கசின் இல்லை. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் வரு. நீதான் என்னை சைத்ரா கசின்னு நினைச்சு பேசியிருக்க. நான் என்னைக்காவது சைத்ரா கசின்னு உங்கிட்ட அறிமுகம் ஆகியிருக்கேனா? எங்க நான் சைத்ராவோட கசின் இல்லைனு சொன்னால் நீ பேசாமல் போயிடுவியோனு பயத்துல தான் மறைச்சேன். மத்தபடி என் லவ் உண்மை.”

“ச்சீ வாயை மூடு. எத்தனை நாளுக்கு இந்த நல்லவன் வேசம் போட்டு என் பிரெண்டை ஏமாத்துவ. நீ பண்ண காரியத்துக்கு போலீஸ்ல பிடிச்சு தந்திருக்கணும். இதோட விடுறோம்னு சந்தோசப்பட்டு ஓடி போயிடு. இதுக்கு மேல என் பிரெண்ட் வாழ்க்கைக்குள்ள வந்த, அவ்வளவு தான்.”

“நான் என் வருகிட்ட பேசிட்டு இருக்கேன். நீ எதுக்கு இடையில வர? எங்க காதலுக்கு நடுவில வர உனக்கு எந்த உரிமையும் இல்லை.” என்று மறுமுனையில் அவன் பற்களைக் கடித்தான்.

“போதும் நிறுத்து. என் சைத்துவை வெச்சு தான் நீயே என் வாழ்க்கையில வந்திருக்க. அவளை பேசக்கூடாதுனு சொல்ல உனக்கு தான் உரிமை இல்லை. போதும் இதோட என் வாழ்க்கையிலயிருந்து போயிடு. நீ எனக்கு பண்ற ஒரே நல்லது அது ஒன்னா தான் இருக்க முடியும்.”

“வர்ணி, கோபத்துல பேசாதடா. ஐ ரியலி லவ் யூ சோ மச். உன்னை நான் இழக்க விரும்பலை. உனக்காக எது வேணாலும் நான் பண்றேன்.”

“அப்போ என் வாழ்க்கையை விட்டு தூரமா போயிடு. இனி என் மூஞ்சில கூட முழிக்காத. அதுதான் நீ எனக்கு பண்ற நல்லது.” என்றவள் அழைப்பை துண்டிக்க, அவளது கைப்பேசியிலிருந்து சிம்மை கழற்றி எறிந்தாள் சைத்ரா.

“போதும் அவனை நினைச்சு உன்னை கஷ்டப்படுத்திக்காத மச்சி. இந்த மாதிரி ஆளை நேரில் சந்திச்சு பேசுறது கூட வேண்டாம். போன்ல ஆரம்பிச்சது போன்லயே முடியட்டும். இதோட அவனை மறந்திடு.” என்று கூறும் சைத்ராவின் தோளில் சாய்ந்துக் கொண்டவள் கேவி அழத்தொடங்கினாள்.

இரண்டு நாட்கள் சைத்ரா அவளுடன் இருந்து அவளைத் தேற்றினாலும் அவள் வலி குறைந்தபாடில்லை. இருந்தும் தான் நலமாக இருப்பதாக கூறியவள் சைத்ராவை ஊருக்கு அனுப்பி வைத்தாள். உண்மையான அவளது கசின் ரகுவின் திருமணத்திற்கான வாழ்த்துக்களை அவளிடம் கூறியிருந்தாள். ரகுவின் திருமணம் முடிந்த கையோடு சைத்ரா மீண்டும் ஜார்ஜியாவிற்கு செல்வதாக இருந்தாள்.

நாட்கள் மாதங்களாக ஓடின. மது தனது பேஷன் டிசைனிங் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கினாள்‌. தற்போது எல்லாம் பிரபாவதி மற்றும் தாமோதரன் மகளுடன் நன்கு பேசத் தொடங்கியிருந்தனர். அதுவே அவளுக்கு ஆறுதலாக இருந்தது. இருந்தும் ரகுவரனது நினைவு பெண்ணவளை இம்சிக்க, தனது மெயிலை உயிர்ப்பித்தவளின் பார்வை ரகுவரனது மெயில்களை கண்டு கலங்கி நின்றது.

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்