
அத்தியாயம் 27
திருமணம் முடிந்து ஒரு மாதம் நிறைவடைந்திருந்தது. புகுந்த வீட்டில் நன்றாகவே பொருந்தி கொண்டாள் வசுந்தரா. மாமனார், மாமியாரும் பெண் குழந்தை இல்லாத குறையை இவளைக் கொண்டு நிறைவேற்றிக் கொண்டார்கள். அவர்களின் பாசத்திலும் கணவரின் காதலிலும் திகழ்ந்து சந்தோஷ பூரிப்பில் மிதந்துகொண்டிருந்தாள். அவர்களின் பழக்க வழக்கங்களையும் தெரிந்து கொண்டவள் கிச்சனையும் முழுதாகத் தன் கையில் எடுத்துக் கொண்டாள்.
மருத்துவரான மாமியாருக்கு இவள் பார்த்துப் பார்த்து அனைத்தையும் செய்து கொடுத்தாள். இதுவரை குடும்பத்திற்கு என அவர் செய்ததை இவள் தன் கையில் எடுத்துக் கொண்டு அனைவரையும் கவனித்துக் கொண்டாள். அதில் அனுபமாவிற்கு தாள முடியாத பெருமையே. தான் இதுவரை கணவனையும் மகனையும் கவனித்துக் கொள்ள. தற்போது தன்னை கவனிக்க ஒருவர் என்பதே அவருக்கு மிகுந்த மகிழ்வை கொடுத்தது.ஆரம்பத்தில் இருந்த தயக்கங்கள் நீங்கிச் சற்று இலகுவாகக் கணவனுடனும் பேசவும் பழகவும் ஆரம்பித்திருந்தாள்.
மாமியார் பிளாஸ்கில் காபி போட்டு வைக்கும் பழக்கத்தை முதலாக மாற்றி இருந்தாள். அவரவர் வரும்போது சூடாக அவர்களுக்குக் கலந்து கொடுத்தாள். மாமனாரும் மாமியாரும் பத்து மணிக்கு வீட்டிலிருந்து கிளம்புவதால் ஏழு மணிக்கு எழுந்து வேலை செய்வது இலகுவாக இருந்தது. வெகுசீக்கிரம் எழுந்து விட வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லாமல் சுதந்திரமாகவே வளம் வந்தாள் பெண்ணவள். கணவன் மட்டுமே எட்டு மணிக்கு மேல் கிளம்புவான். அதுவும் அவன் வேலை செய்வது எம் என் சி கம்பெனி ஆதலால் மதிய உணவை அவர்களே கொடுத்து விடுவார்கள். காலை உணவும் அங்கே கிடைக்கும் ஆனாலும் இவள் கணவனுக்கும் சேர்த்தே காலை உணவைச் செய்து விடுவாள்.
ஸ்ட்ரைன் பண்ணிக்காத என்று கணவன் சொன்னாலும் கேட்பதில்லை. வீட்டைப் பராமரிப்பதும் வேலை செய்வதும் அவள் பழகிய ஒன்று என்பதால் அவளுக்கு எதுவுமே சிரமமாக இல்லை. அதுவும் மனமுவந்து தன் மனதிற்கினியவர்களுக்கு மகிழ்வோடு செய்யும்போது ரெட்டிப்பு சுறுசுறுப்புடன் வலம் வந்தாள்.
அன்றும் வார நாட்களில் ஒரு நாளாக இருக்க வேலைகளைச் செய்வதற்காக எழுந்தவளுக்கு காலைக் கீழே வைக்க முடியாமல் தலை சுற்றி கொண்டு வந்து மறுபடியும் மெத்தையில் அமர்ந்து விட்டாள். இரு கைகள் கொண்டு தலையைப் பிடித்துப் படி அமர்ந்திருந்தவளுக்கு அறையே தட்டாமலை சுற்றுவது போல இருந்தது. மறுபடியும் சுருண்டு படுத்துக் கொண்டாள். எப்பொழுதும் தனக்கு முன் எழுந்து சென்றுவிடும் பெண் இன்று சுருண்டு படுத்திருப்பதை யோசனையுடன் பார்த்தவன் தன்னை சுத்தப்படுத்தி வந்து பார்க்க, அப்போதும் அவள் அதே நிலையில் இருப்பதை பார்த்து மெதுவாக அவளை எழுப்பியவன்,
“என்ன ஆச்சு.?” என்று கேட்க.
“தலை சுத்துது.” என்றபடி மறுபடியும் கண்களைக் கூடத் திறக்க முடியாமல் தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள். அவள் பதிலில் ஏதோ புரிவதாக இருக்க மருத்துவர்கள் ஆன பெற்றோர்களிடம் விசயத்தைக் கூற, இருவருமே அவனின் அறைக்கு வந்து பெண்ணவளை சோதித்துப் பார்க்க அவர்களின் வாரிசு ஜம்மென்று வீற்றிருந்தது அவள் மணி வயிற்றில். மகிழ்வுடன் மருமகளை அணைத்த அனுபமா.
“ரொம்ப ரொம்ப சந்தோஷம்.” என்று வாழ்த்துக்கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டவர் தற்போதைய அவளின் மயக்கத்திற்கு சிறு வைத்தியம் செய்து அவளைச் சற்றே தெளிய வைத்தார்.
“என் பிரண்டோட மனைவி கய்னி தான்.(மகப்பேறு மருத்துவர்) அவங்க கிட்ட பேசிட்டு ஈவினிங் அப்பாயிண்ட்மெண்ட் போட்டு வச்சிடறேன். பாத்துட்டு வந்துடலாம்.” எனக் கூறிய பிரபு அலைபேசியை எடுத்துக்கொண்டு நகர்ந்துவிட.
“மெதுவாய் இறங்கி கீழ வரியா.? இப்போ எப்படி இருக்கு தல சுத்து.?” என மருமகளிடம் கேட்க. தற்போது பரவாயில்லை என்று கூறியவள் குளியலறை நோக்கிச் செல்ல, “சீக்கிரம் கீழ வா. உனக்குச் சூடா குடிக்க கலந்து வைக்கிறேன்.” என்று கூறியவர் சந்தோஷ ஆர்ப்பாட்டத்துடன் கீழே இறங்கி சென்றார்.
இதற்கு முழு முதல் காரணமான ஆண் அவனை யாருமே கண்டுகொள்ளாமல் அவர்களுக்குள்ளாகவே பேசி முடிவெடுத்து செல்பவர்களைப் பார்த்தவனுக்கு முகம் கொள்ளா புன்னகை தான். குளியலறையிலிருந்து வெளிவந்தவளுக்கு கணவனை எதிர்கொள்ள வெட்கமாக இருந்தது. அவள் எப்போது வெளி வருவாளெனக் காத்திருந்தவன் அவள் வந்ததும் வேகமாக அவளை இறுக்கி அணைத்தவன் எப்பொழுதும் போலக் காதின் அருகே இருக்கும் மச்சத்தில் அழுத்த முத்தமிட்டு,
“என்னடி அதுக்குள்ள ஜூனியர் வந்துட்டாங்க. உன்னையே நான் இன்னும் முழுசா சுற்றி பார்க்கல.” என்றான் கேலியுடன்.
“நீங்க எவ்வளவு சுத்தி பார்த்திருக்கீங்கங்கிறதுக்கு விடை தான் இது.” என்றாள் மென் புன்னகையுடன்.
“உனக்கு ஓகே தானே.” என்று அவள் முகத்தில் ஒட்டி இருந்த முடிகளை ஒதுக்கிவிட்டபடியே கேட்க.
“ஏன் ஓகே இல்லாமல்.? குட்டி பாப்பாங்க எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.”
“அதான் தெரியுமே. உன்ன முதன்முதலில் பார்க்கும் போதே இடுப்புல ஒரு குட்டியோட தான பார்த்தேன்.”என்றான் குறுஞ் சிரிப்புடன்.
“ஏன் உங்களுக்குக் குட்டி பாப்பா பிடிக்காதா.?”
“ரொம்ப, ரொம்ப பிடிக்கும். ஒரு தம்பியோ தங்கச்சியோ இல்லேயேன்னு ரொம்ப நாள் ஏங்கி இருக்கேன். இப்போ அதெல்லாம் விடச் சிறப்பா என் பிள்ளை.” என்றான் மகிழ்வுடன்.
“எனக்கே எனக்குன்னு என் ஜூனியர். எங்க அம்மாக்கு எப்பவுமே ஒரு வருத்தம் இருக்கு. எனக்கு அப்புறமா ஒரு குழந்தை தங்கலன்னு. அதனால நாம ஒன்றோட எல்லாம் நிறுத்தக் கூடாது. ஒரு மூணு, நாளாவது பெத்துக்கணும். உனக்கு ஓகே தானே.”
“மூணு, நாலா.?” என்று அதிர்வோடு கேட்டவளை பார்த்தவன்.
“ஏன் முடியாதா.?” எனப் பாவமாகக் கேட்க,
“முடியும்.” என்று விட்டுத் தலையைக் குலுக்கியபடி,
“முதல்ல இத நல்லபடியா பெத்து எடுப்போம். அப்புறம் மூணு, நாலு யோசிப்போம்.” என்றாள் அவன் கைச் சிறையில் நன்றாகப் பொருந்திய படி.
அன்று அலுவலகத்திற்கு செல்லாமல் குடும்பமாக மகப்பேறு மருத்துவரைப் பார்த்து, அவளின் கர்ப்பத்தை உறுதி செய்து கொண்டார்கள். அவர்களே மருத்துவர்களாக இருப்பதினால் அதிகப்படியான கேள்விகளோ விளக்கங்களோ தேவைப்படாமல் மருத்துவர் கூறியதை கேட்டுக்கொண்டு அவளுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.
முறையே அவளின் தந்தை ரகுபதிக்கு அழைத்துச் சொல்ல. அவருக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கிவிட்டது. திருமணம் முடிந்து சில வருடங்கள் ஆகியிருந்த போதும் பெரிய மகளுக்குக் குழந்தை வரம் இன்னும் கிட்டாமல் இருக்க, திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் இரண்டாம் மகளின் கர்ப்ப செய்தி அவரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருந்தது. கரகரத்த தொண்டையை சரி செய்து அவர்களுக்கு வாழ்த்து கூறியவர் தன் மகளிடமும் பேசிவிட்டு நாளை வந்து பார்ப்பதாக உறுதி அளித்து அலைபேசியை அணைத்து இருந்தார்.
“வசுந்தரா. மா நீ பாட்டுக்குக் காலைல எழுந்து வந்து எல்லா வேலையும் பார்த்துட்டு இருக்காத உனக்கு மார்னிங் சிக்னஸ் இருக்கும் போல. அதுவும் உனக்குக் கொஞ்சம் அதிகமாக இருக்கும் போல.”என அத்தை கூறியதை கேட்டுக் கொண்டவள் சரி என்பதாகத் தலையசைத்துக் கொண்டாள். அவளுக்குமே தலைச்சுற்று சற்று அதிகமாகவே இருந்தது. மாத்திரை எடுத்துக் கொண்டதால் சற்று மட்டுப்பட்டு இருந்தது, மீண்டும் அவளை எழ முடியாமல் படுத்திக் கொண்டுதான் இருந்தது.
மறுநாள் எழும் போதே தலைச்சுற்றுடன் வாந்தியும் சேர்ந்து கொண்டது சோர்ந்து துவண்டவளை தாங்கிக் கொண்டான் சஞ்சய். அன்றும் வேலைக்கு விடுமுறை எடுத்திருந்தான்.
அவள் குடிப்பதற்கும் உண்பதற்கும் மேலே கொண்டுவந்து கொடுத்தவனை பார்த்தவள்
“நீங்க ஆபீஸ் போலையா…?” எனச் சோர்ந்த குரலில் கேட்க.
“போலாம், போலாம் எங்க ஓடிட போகுது.” என்றான் அசட்டையாக. உணவுடன் மருந்தும் வந்திருக்க அதை உண்டவளுக்கு சற்று தெம்பாக இருந்தது.
குளித்து வந்தவள் சஞ்சையை பார்க்க. அவன் மும்முறமாக லேப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.
“நான் கீழே போறேன்.”என்றவளை நிமிர்ந்து பார்த்தவன்.
“உனக்காக நான் இங்க வேலைக்கு லீவு போட்டுட்டு உட்கார்ந்திருந்தா. நீ கீழ போறன்னு சொல்ற.?” எனக் கேட்டவனுக்கு பதில் கூற ஆரம்பிக்கும் போதே அவர்களின் அறை வாசலில் அரவம் கேட்டதில் திரும்பிப் பார்க்க, ரகுபதி மற்றும் கோகிலா வந்திருந்தார்கள்.
அவர்களோடு அனுபமாவும் மேல் ஏறி வந்திருந்தார்.
“வாங்க மாமா, வாங்க அத்தை.” என்று முறையே அவர்களை வரவேற்றிருந்தான் சஞ்சய்.
தந்தையை கண்டதும் அவரின் அருகே விரைந்தவள்.
“வாங்கப்பா, வாங்கம்மா.” என அவளும் வரவேற்க, அவளை லேசாக அணைத்து கொண்டார் ரகுபதி.
“எப்படிம்மா இருக்க.?” என்றவரின் கேள்விக்கு நன்றாக இருப்பதாகத் தலையசைத்துக் கொண்டாள் பெண்.
அவர்களையே பார்த்திருந்த சஞ்சய்க்கு, தாயுடன் மனைவிக்கு அவ்வளவாக ஒட்டுறுதல் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. அவளுக்கு இல்லை என்பதை விட அவளின் தாய்க்கு சுத்தமாக இல்லை. என்பது மிக நன்றாகத் தெரிந்தது அவனுக்கு.
‘ஏன்.? இப்படி. ?’ என்று யோசித்தவன் இதைப் பற்றி மனைவியிடம் பேச வேண்டும் எனக் குறித்து கொண்டான்.
சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் கீழே போக முற்பட அறையைச் சுற்றி பார்க்கும் நோக்கத்தில் கோகிலா அங்கே நின்றுவிட, தாயும், மகளும் ஏதேனும் தனிமையில் பேசிக்கொள்வார்கள் என நினைத்து மற்றவர்கள் வெளியேறினார்கள். ஆனாலும் சந்தேகமாக ரகுபதி மனைவியைப் பார்த்துவிட்டே சென்றார். கர்ப்பமாக இருக்கும் மகளிடம் இப்பொழுதேனும் மனைவி பாசமாக நடந்து கொள்ளட்டும் என்று நினைத்தவராக அவரும் கீழே இறங்கி சென்றார்.
அறையைச் சுற்றிப் பார்த்த கோகிலா,
“ஹ்ம்ம். ரொம்ப அழகா இருக்கு. இந்த அறையே நம்ம வீடு அளவுக்கு இருக்கும் போல. ” என்றார் சுற்றிப் பார்த்துக் கொண்டே.
“அப்புறம் சந்தோஷமா இருக்க. நல்லது. நாங்களும் சந்தோஷமா இருக்க வேண்டாமா.?” எனக் கேட்கும் அன்னையைப் பார்த்தவள், தன்னை பற்றி எதுவும் நலம் விசாரிக்காமல் தன் நோக்கத்தை மட்டும் பேசும் தாயைப் பார்த்து, பெருமூச்செறிந்தபடி,
“நாளைக்கு வசந்தியோட அக்கவுண்ட்ல பணம் போட்டு விடுறேன்.” என்றாள். அதற்கு மேல் தொல்லை தாங்காமல்.
“ம்ம் சரி, நீ எப்படி இருக்க.? நான் நாளைக்கு தான் வரணும்னு நினைச்சேன். உங்க அப்பா தான் இன்னைக்கே போகணும்னு பிடியா நின்னுட்டாரு.” என்று அவர் அழுத்து கொண்டு கூறும் போதே, வாசலின் அருகே வந்திருந்தான் சஞ்சய்.
அவனைப் பார்த்ததில் இரு பெண்களுக்குமே அதிர்வு தான்.
அவர்கள் பேசியதை எங்குக் கேட்டிருப்பானோ என இரு பெண்களும் இரு வேறு கோணத்தில் நினைத்துக் கொண்டார்கள்.
“அம்மா கீழ கூப்பிட்டாங்க.”என இருவரையும் பார்த்துக் கூறியவன் அவர்களோடு கீழே இறங்கி சென்றான்.
கீழே வந்தவர்களைக் காலை உணவு உண்ண அழைக்க, அவர்களும் தயக்கம் இல்லாமல் அமர்ந்து கொண்டார்கள்.
சோர்வையும் மீறி மகளின் முகத்தில் தெரிந்த புன்னகையையும் மகிழ்வையும் பார்த்து நிம்மதி கொண்டார் ரகுபதி.
தன் அருகில் அமர்ந்திருந்த பிரபுவையும் உணவு பரிமாறிக் கொண்டிருந்த அனுபமாவையும் பார்த்த ரகுபதி.
“பெண்ணை, எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போகட்டுமா சம்பந்தி.? ஒரு பத்து நாள் வெச்சி இருந்துட்டு அனுப்புறோம்.”
“தாராளமா கூட்டிட்டு போங்க. அவளுக்கும் அம்மா வீட்டுக்குப் போகணும்னு இருக்கும் தானே.”
என்ற அனுபமாவின் பதிலில் அதிர்ந்து நின்றவள் வசுந்தராதான்.
பரிதவிப்புடன் கணவனைப் பார்த்தாள் ‘ஏதேனும் செய்யேன்…’ என்பதைப் போல. அதே நேரம் அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். பின், ரகுபதியை நோக்கி,
“இல்லைங்க மாமா. தப்பா எடுத்துக்காதீங்க. அவளுக்கு ஏற்கனவே மயக்கம், தல சுத்து எல்லாம் ரொம்ப அதிகமாவே இருக்கு. எங்க அம்மா, அப்பா ரெண்டு பேருமே டாக்டர்ஸ். அதனால எது ஒன்றென்றாலும் அவங்க உடனே பார்த்துப்பாங்க. அதுவும் இல்லாம அவ இல்லாம என்னால இருக்க முடியாது. பிரசவத்தை கூட நானே பாத்துக்கலாம்னு இருக்கேன். நீங்க எதுவும் நினைக்காம உங்களுக்கு எப்ப எல்லாம் தோணுதோ அப்ப எல்லாம் வந்து பாத்துட்டு போங்க.” என்றவனின் பதிலில் அனுபமா தான்,
“என்ன சஞ்சய் இப்படி சொல்ற.? அவங்களுக்கும் அவங்க பொண்ண பக்கத்துல வச்சி சீராட்டனும்னு இருக்காதா.? வசந்தராவும் அவங்க வீட்டுக்குப் போகணும்னு ஆசைப்படலாம் இல்லையா. நீயா ஒரு முடிவு எடுத்துப் பேசுறது நல்லா இல்ல. சொல்லிட்டேன்.” என்றார் ஆதங்கமாக.
கணவன் பேச்சில், எங்கு அவள் வீட்டிற்கு வந்தால் அவளுக்கு வேலை பார்க்க நேருமோ என யோசித்துக் கொண்டிருந்த கோகிலா,
“மாப்பிள்ளை சொல்றதும் சரிதான். நீங்க மருத்துவர்கள் வீட்டிலேயே இருக்கும்போது எந்தப் பிரச்சனையும் இல்ல. இதே அவ அங்க வந்தாள்னா ஒவ்வொண்ணுக்கும் அவசரமா ஓட வேண்டி வரும். அது சிரமம் தானே.” என்றார் லேசாகச் சிரித்தபடி.
பெற்ற தாயே இப்படி கூறுவது ஆச்சரியமாக இருந்தது அனுபமாவிற்கு.
விரக்தியான புன்னகை அரும்பியது வசுந்தராவிற்கு ‘தான் கர்ப்பமாக இருக்கும் இந்நிலையில் கூடத் தன்னை வைத்துப் பார்க்கத் தன் அன்னைக்கு மனதில்லை.’ என்பதை நினைத்தவளுக்கு கண்ணீர் அரும்பியது நாசுக்காக அதைத் துடைத்துக் கொண்டு பெருமூச்செறிந்தாள்.
தன் பெண்ணை வைத்து எப்போதும் தன்னால் சீராட்ட முடியாது தன் வீட்டில் என்பதை தெரிந்துகொண்ட ரகுபதி
“மாப்ள சொல்றதும் சரிதான். எப்ப எல்லாம் எனக்குத் தோணுதோ அப்பெல்லாம் நான் வந்து பார்த்துக்கிறேன். என்னடாமா.?” என மகளைப் பார்த்துக் கேட்க. சரி என்பதாகத் தலையசைத்தாள் அவளும். புன்னகை முகத்துடன்.அவளுக்கென வாங்கி வந்திருந்த பழங்களை அவளிடம் கொடுத்து விட்டு விடை பெற்றார்கள் இருவரும்.
வீட்டின் கேட்டைத் தாண்டிச் சென்றதும்.
“கர்ப்பமா இருக்குற நேரத்துல கூட அந்தப் பொண்ண உன்னால பார்த்துக்க முடியாது இல்ல. சீய்.! நீ எல்லாம் என்ன பொம்பளையோ.? நல்லவேளை தங்கமான புகுந்த வீடு அமைஞ்சிருக்கு என் பொண்ணுக்கு.” என்று கோபமும் நிம்மதியும் ஒருங்கே கொண்டு கூறியவர், அருகில் சென்று கொண்டிருந்த ஆட்டோவைக் கைதட்டி அழைத்தபடியே முன்னாள் செல்ல
“ம்ம்க்கும்.” என்று நாடியை தோளில் இடித்தபடி அவரின் பின்னே சென்றார் கோகிலா.
தொடரும்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
+1


