
அத்தியாயம்:18
சேகரிக்கப்பட்ட தகவல்கள்:
நார்வே ஐரோப்பிய கண்டத்தில் ஸ்காண்டிநேவிய தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அழகிய தேசம் ஆகும். இந்த நாடு ஆர்க்டிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ளதால் இங்கு ஒரு சிறப்பு வாய்ந்த நிகழ்வு நடக்கிறது. அது நள்ளிரவு நேரத்திலும் சூரிய ஒளி இந்த நாட்டின் நிலப்பகுதியில் விழுவதுதான்.
ஒரு நாளைக்குச் சுமார் இருபது மணி நேரம் வரை சூரிய ஒளி பிரகாசமாக இங்கு வீசுகிறது. குறிப்பாக, அங்குள்ள நார்த் ஆர்டிக் பகுதிகளில் இந்த அதிசய நிகழ்வைக் காணமுடியும். இந்த நாட்டில் உள்ள சொம்மாரோயி தீவுக்குத் தான் ஆரா செல்ல முயற்சித்திருக்கிறாள்.
இங்கு நள்ளிரவில் சூரியன் தெரிவதை பார்க்க வேண்டும் என்று பல நாள் கனவு கண்டாள், குறிப்பிட்ட காலம் மட்டுமே இங்கு நள்ளிரவு சூரியன் உதிப்பதாய் அறிந்தவள் அங்குப் பயணம் செய்ய வேலை செய்து பணம் ஈட்ட ஆரம்பித்தாள். லட்ச கணக்கில் பணம் தேவைப்படும் என அறிந்தவள் கிடைக்கும் வேலையில் சிறப்பாய் செயல்பட்டுப் பணத்தைச் சேமித்து வைக்க ஆரம்பித்தாள், அவள் ஐடியில் சேர்ந்த பிறகு அவளுக்கு அதிகச் சம்பளம் கிடைத்ததால் அவளால் எளிதில் பணத்தைச் சேமித்து வைக்க முடிந்தது.
ஆதித் கிருஷ்ணாவின் எண்ண ஓட்டமோ அன்று அவள் கனவை காஃபி ஷாப்பில் வைத்து அவனிடம் சொன்ன நாளுக்கு நகர்ந்தது.
“இப்படியே பார்த்திட்டு இருந்தால் என்ன அர்த்தம் ஆரா.?”
“க்ரிஷ்.! நார்வே போறது தான் என்னோட ட்ரீம்” என்றாள் அவன் விழி பார்த்து.
“ஹே யூ சில்லி.! நீ நார்வே போறதுக்காகத் தான் மேரேஜ் பண்ணிக்கூடாதுன்னு சொல்லுறீயா.?”
“க்ரிஷ் நார்வேல நடக்கிற மிட் நைட் சன்ரைஸை நான் பார்க்கணும், நான் பிறந்து வளர்ந்து இப்போ வரைக்கும் எனக்காக எதுவும் பண்ணிகிட்டதில்லை, எனக்ககாக நான் செய்யணும்னு நினைக்கிற ஒரே விசயம் இது மட்டும் தான், யா உனக்கு இது சில்லியா இருக்கலாம் பிகாஸ் பணம் உனக்கு ஒரு விசயமே கிடையாது, பட் எனக்கு அப்படி இல்லை இந்தப் பணம் எனக்கு வாழ்க்கை பாடத்தைச் சொல்லி கொடுத்திருக்கு, இதெல்லாம் ஒரு ட்ரீமான்னு நீ நினைக்கலாம். ஆனால் இந்த உலகத்தில் இருக்கிற அதிசயங்களை நான் பார்க்கணும்னு ஆசைப்படுறேன்” எனச் சொல்லியவள் அவன் முகத்தைப் பார்த்தாள் அவனோ பதில் எதுவும் கூறாமல் அமைதி காத்துக்கொண்டிருக்க மீண்டும் அவளே தொடர்ந்தாள்.
“க்ரிஷ் எல்லாருக்கும் அவங்க வாழ்க்கையில அச்சீவ் பண்ணும்னு ஆசை இருக்கும் அப்படி ஒரு ஆசை தான் இது, இந்த உலகம் அதிசயம் நிறைஞ்சது அதில் நான் பார்த்து வியந்த ஒண்ணு தான் இந்த நள்ளிரவு சூரியன், இதோட என்னோட கனவு ஆசைகள் முடிஞ்சிடுனும்னு இல்லை என்னோட கனவுகளுக்கு எப்போதும் எல்லையே இல்லை நம்ம காதல் மாதிரி, என்னோட கனவை அடையுற வரைக்கும் எனக்காகக் காத்திக்கிட்டு இருப்பியா க்ரிஷ்.?” என்றவள் காஃபியை பருகி முடித்திருந்தாள்.
“உனக்கு நம்மளோட காதல் முக்கியமா.? உன்னோட கனவு பேஷன் முக்கியமா ஆரா.? இந்தக் கனவு முடிஞ்சதும் அடுத்தக் கனவை தேடி தானே போகப்போற” அவன் அன்று அவளைக் கேட்ட கேள்வி இன்று அவன் மனதை சுக்குநூறாய் உடைத்திருந்து, அன்று இந்தக் கேள்விக்கு அவளின் முகம் மாறியதையும் அவன் கவனிக்கத் தவறவில்லை.
அந்த நள்ளிரவு சூரியனை அவள் காணும் போது அவள் முகம் எத்தனை அழகாய் பிரகாசமாய் இருந்திருக்கும், அவளின் கனவை அவள் கண் முன் கண்ட போது அவள் மனம் எப்படிக் குதுகலித்திருக்கும் ஆனால் அவள் அங்குச் செல்லவில்லை. அவளின் கனவுக்காகத் தானே காதலைக் கூடத் தள்ளி வைத்தாள்.
ஆராவின் அழைப்பு நின்று போன போது. மஹதி ஏற்பாடு செய்திருந்த கடிதத்தால் குழப்பம் ஏற்பட்டது. அதன் பின் ஆரா நார்வே நாட்டின் நள்ளிரவு சூரியனை காண வேண்டும் என்ற கனவை தேடி போயிருக்கிறாள் என அவளின் சிவப்பு நிற பெட்டி கிடைத்த போது முடிவு செய்திருந்தான் ஆதித் கிருஷ்ணா. ஆனால் இப்போது அவள் விமானமும் ஏறவில்லை எனத் தெரிந்த தகவலை தொடர்ந்து. அவள் கடத்தப்பட்டிருக்கிறாள் என்ற தகவல் அதிர்ச்சியைக் கொடுத்ததை விட, அதற்குச் சுதா உறுதுணையாய் இருந்திருக்கிறாள் என்பது மேலும் அவளுக்கு அதிர்வை கொடுத்தது. அதே சமயம் சுதாவின் கன்னத்தில் பளாரென அறைந்திருந்தான் விக்கி.
“ஏய் சுதா என்ன விளையாடுறீயா? அவ உன்னோட க்ளோஸ் ப்ரெண்ட் தானே. ஆராவை பிரிஞ்சதில் இருந்து ஆதித் லைஃப்ல எவ்ளோ பிரச்சனை நடந்திட்டு இருக்குன்னு உன்கிட்ட சொல்லிட்டு தானே இருக்கேன். எல்லாம் தெரிஞ்சும் உன்னால எப்படி இவ்வளவு பெரிய துரோகம் பண்ண முடிஞ்சுது, நீ ஆராவுக்கு மட்டும் துரோகம் செய்யலை சுதா நம்மளுடைய காதலுக்கும் சேர்த்து தான் பண்ணியிருக்க” கோபமாய்க் கத்தினான் விக்கி.
சுதாவின் கரங்கள் பயத்தில் நடுங்கியது அதைப் பார்த்த ஆதித் கிருஷ்ணாவுக்கு என்ன தோன்றியதோ. சுதாவை மெல்ல நெருங்கினான்.
“விக்கி!! தண்ணி கொண்டு வா” எனச் சுதாவை பார்த்தபடி சொன்னான் ஆதித்.
“ஆதித்! அவளை நம்பாதே” என விக்கி சொன்னான்.
“சொன்னதைச் செய் விக்கி தண்ணி கொண்டுவா” அதிகாரமாய் ஒலித்தது ஆதித்தின் குரல். ஆதித்தின் கர்ஜனையில் அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொடுத்தான் விக்கி.
“சுதா முதலில் தண்ணி குடிங்க” எனத் தண்ணீரை சுதாவிடம் நீட்டியிருந்தான் ஆதித் கிருஷ்ணா.
“டேய் ஆதித் என்ன பண்ணிட்டு இருக்க??” என ராகவ் கேட்ட போது,
“ஒரு நிமிசம் டா ராகவ்” என்றான் ஆதித். சுதாவோ ஆதித் கொடுத்த தண்ணீரை மூச்சு வாங்க குடித்தாள். விக்கி அடித்ததில் அவளின் கன்னம் வீங்கி போயிருந்தது.
“விக்கி உன்னை அடிச்சதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன் சுதா. எனக்கு என்னோட தங்கச்சி லாவண்யா எப்படியோ அதே இடத்தில் தான் நான் உன்னையும் வச்சிருக்கேன். உண்மையைச் சொல்லிடு. எனக்கு என்னோட ஆரா மட்டும் திரும்பி கிடைச்ச போதும். நான் உன்கிட்ட வேற எதையும் கேட்கலை” என ஆதித் சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டு தேம்பி அழ ஆரம்பித்தாள் சுதா.
“நீ தாமதிக்கிற ஒவ்வொரு நிமிசமும் ஆரா உயிருக்கு ஆபத்து தான் சுதா. என்ன நடந்திச்சு எதற்காக மறைச்ச? இப்போ ஆரா எங்கே இருக்கா.? என்னோட ஸ்மைலிக்கு எதுவும் ஆகியிருக்காதுன்னு நம்பிக்கையில தான் உன் முன்னாடி நின்னுட்டு இருக்கேன் சுதா. சொல்லு என்னாச்சு” என நடுங்கிக் கொண்டிருந்த சுதாவின் கரம் பிடித்து அவளின் நடுக்கத்தை நிறுத்தினான் ஆதித்.
“ஆதித்! நான் ஏர்போட் போயி ஆராவை கூட்டிட்டு வந்தது உண்மை தான். ஆனால் அவ எங்கே போனான்னு எனக்குத் தெரியாது” எனப் பதில் கொடுத்தாள் சுதா.
“பண்டிச்சேரில வேலை பார்த்திட்டு இருக்கிற நீ. சென்னை ஏர்போட்டுக்கு வர காரணம்” எனக் கேட்டவன் அவளை அழுத்தமாய்ப் பார்த்தான்.
“ஆரா கிளம்புறதுக்கு ஒரு நாள் முன்னாடியே பாண்டிச்சேரில இருந்து சென்னைக்கு என்னைக் கூட்டிட்டு வந்துட்டா. விக்கிகிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தாள். அவ சொன்னதைக் கேட்டு தான் நான் விக்கிகிட்ட இதைப் பத்தி எதுவும் பேசலை.” என்றாள் சுதா.
“அவளோட ட்ரீம் பத்தி எதாவது சொன்னாளா?”
“இல்லை!! அதையெல்லாம் என்கிட்ட சொல்லலை ஆனால் நார்வேல ஒரு பாட்டு கச்சேரி இருக்கு மகேஷ் தான் எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிக்கொடுத்ததா சொன்னாள்” என்றாள் சுதா.
“யார் அந்த மகேஷ்?? மகேஷூம் ஆரா கூடப் போறதா இருந்தானா?” எனக் கேள்விகளை அடுக்கினான் ஆதித்.
“ஆராவோட கிட்டார் க்ளாஸ்ல ப்ரெண்ட் ஆனவன் தான் மகேஷ். ராககீதம்ன்னு பாட்டு கச்சேரில அவன் பாடிட்டு இருந்தான். ஆராவையும் அதில் சேர்த்தும் விட்டான்” எனச் சொல்லிக் கொண்டிருந்த போது.
“மச்சான் எப்போ வரப் போற” என ஆரா என்றோ பாடியது அவன் செவிகளில் இன்று பாடியது போல் கேட்டது. அவள் எதோ ஆபத்தில் இருக்கிறாள் ஆதித் தாமதம் செய்யாதே அவனுக்குள் ஒரு குரல் கேட்டது. அந்தக் குரல் ஆராவின் குரலுக்கு ஏங்கி தவிக்கும் காதலின் குரல் என்று சொன்னால் மிகை ஆகாது.
“நான், ஆரா அப்பறம் மகேஷ் மூணு பேரும் தான அன்றைக்கி ஏர்போட்டுக்கு போனோம். மகேஷ் கார்லயே இருந்துகிட்டான். ஆராவை ஏர்போட்ல விட்டுட்டு வெளியே வந்தேன். மகேஷ் ஆராவை மறுபடியும் கூட்டிட்டு வரச் சொன்னான். ஆராக்கிட்ட முக்கியமான விசயம் பேசணும் அவ நார்வே போகத் தேவையில்லைன்னு சொன்னான். நான் மறுபடியும் மகேஷ் சொன்னதா சொல்லி ஆராவை அழைச்சிட்டு வந்தேன்” அதுக்கு அப்பறம் என்னை இறக்கி விட்டுட்டு அவங்க இரண்டு பேரும் வேற எங்கயோ போயிட்டாங்க
அதுக்கு அப்பறம் நான் ஆராவையும் பார்க்கலை மகேஷையும் பார்க்கலை” எனச் சொல்லி முடித்துத் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
—
தன்னுடைய வீட்டில் குட்டிப் போட்ட பூனைப்போல் அங்கும் இங்கும் நடந்துக்கொண்டிருந்தார் மஹதியின் தந்தை ஜெகன்.
“டாட்! அந்த ஆராவை நான் பார்த்துகிறேன்னு என்கிட்ட சொன்னீங்க, ஹோம் மினிஸ்டர்ன்னு சொல்லுறீங்க, கேவலம் ஒரு பொண்ணைக் கிட்நாப் பண்ண முடியலை. அவளோட டீடெயில் எல்லாமே உங்க கிட்ட கொடுத்திட்டேன். ஆனால் நீங்க இன்னும் அவளைத் தேடிட்டு இருக்கீங்க” எனப் பேசிக்கொண்டிருந்தவள் நறுக்கி வைத்திருந்த ஆப்பிளை வாயில் வைத்து நறுக்கெனக் கடித்தாள்.
“மஹதி மா உனக்காகத் தானே அப்பா அந்தப் பொண்ணைத் தேடிட்டு இருக்கேன். நீ ஏன்மா புரிஞ்சிக்க மாட்டேன்ற? நிச்சயம் அந்த ஆதித் கிருஷ்ணா உனக்குத் தான் மா” என உறுதியளித்தார் மஹதியின் தந்தை.
“இன்னும் எத்தனை நாள் அந்த ஆரத்யாவை தேடிட்டு இருக்கீங்கன்னு நானும் பார்க்கிறேன் டாட்? அந்த ஆரா முதலில் நம்மக்கிட்ட தான் மாட்டணும்.” என அவள் ஆக்ரோசமாய்ப் பேசிக்கொண்டிருந்த போது அந்த வீட்டிற்குள் நுழைந்திருந்தாள் லாவண்யா.
“ஆராவை பிடிச்சு வச்சு என்ன பண்ணப்போற மஹதி” என்றாள் திமிராக லாவண்யா.
“ஹேய் லாவா! வாட் எ சர்ப்ரைஸ் எங்க வீட்டுக்கு வந்திருக்க??” எனச் சோபாவில் இருந்து வேகமாக எழுந்தாள் மஹதி.
“சொல்லு மஹதி! யார் அந்த ஆரா” எனக் கேட்டாள் லாவண்யா.
“லாவா அது நமக்குத் தேவையில்லாத டாபிக், இதென்ன மஹதி மஹதின்னு தலையில் அடிச்ச மாதிரி கூப்பிடுற? அண்ணினு தானே என்னைக் கூப்பிடுவ?” எனச் சிரித்துக் கொண்டே கேட்டாலும் அவள் மனதில் தீ கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருந்தது.
“அந்தத் தகுதியை நீ எப்பவோ இழந்திட்ட மஹதி. உன்னோட லக்கேஜ்லாம் எங்க வீட்டில விட்டுட்டு வந்திட்ட, அது வேற என்னோட ரூம்ல இடத்தை அடைச்சிட்டு இருந்துச்சு அதான் கொடுத்திட்டு போகலாம்ன்னு வந்தேன்” என நக்கலாய் சொன்னாள் லாவண்யா.
“லாவா! உனக்கு என்ன ஆச்சு?”
“எனக்கு எதுவும் ஆகலை மஹதி, மறுபடியும் எங்க வீட்டுக்குள்ள வர எண்ணத்தில் தான் இதை விட்டுட்டு வந்திருப்ப, அந்த எண்ணம் உனக்குத் திரும்ப வந்திடக் கூடாதுன்னு தான் கொடுத்திட்டு போக வந்தேன்” எனச் சொன்னவள் நடுவீட்டில அந்தப் பையை வைத்துவிட்டு மீ்ண்டும் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
“மஹதி நான் உன்னோட அண்ணி!” எனக் கத்தியிருந்தாள் மஹதி.
“அதை நீ மட்டும் சொல்லிட்டு இரு மஹதி. என் அண்ணோட மனசுல ஆரா அண்ணி தான் இருக்காங்க. அவங்களை நிச்சயம் கூட்டிட்டு வந்திடுவாங்க. நீ இப்போவே நல்ல சைக்காட்டிரிஸ்ட்ட பார்க்கிறது ரொம்ப நல்லது” என முகத்தில் அறைந்தார் போல் சொல்லி விட்டு நகர்ந்தாள் லாவண்யா.
“டாட்” என மஹதி கத்திக்கொண்டிருந்தது அவள் செவிகளில் விழ தான் செய்தது. கண்டுக்கொள்ளாமல் முன்னேறி நடந்தாள்.
“விடு மஹதி, அவ சின்னப் பொண்ணு புரியாமல் ஏதோ பேசிட்டுப் போற, நாளைக்கு நீ அந்த வீட்டுக்குப் போனால் அண்ணின்னு தான் கூப்பிடுவா. கோதண்டம் நம்ம பக்கம் இருக்கிற வரைக்கும் நீ எதுக்கும் பயப்படாதே” எனத் தன் மகளுக்கு ஆறுதல் கூறியதும் லாவண்யாவின் செவிகளில் விழ தான் செய்தது. அதைக் கேட்ட படி அந்தப் போர்டிகோவில் நின்றிருந்த காரின் முன்னிருக்கையில் வந்தமர்ந்தாள் லாவண்யா. அவள் வாகனத்தில் ஏறியவுடன் காரை இயக்கினான் அஜய்.
பிரம்மாண்டமான அந்த வீட்டை விட்டு வெளியேறிய வாகனம் நால்வழிச் சாலையை அடையும் வரை அமைதியாய் இருந்த லாவண்யா.
“அஜய்!!” என விழித்தாள். எப்போதும் “ஹே ட்ரைவர்” என்று அழைப்பவள் முதல் முறை பெயர் சொல்லி அழைத்ததில் தடுமாறினாலும் காரை சரியாக இயக்கி கொண்டிருந்தான்.
“மேடம்.” என இழுத்தான்.
“லாவண்யான்னு கூப்பிடலாம்” என்றாள் அமைதியாய்.
“ஒரு சாதாரன ட்ரைவர் நான் சின்ன முதலாளியம்மாவை அப்படிக் கூப்பிட்ட நல்லா இருக்காது மேடம்” எனப் பேசியவன் சிரிப்பை அடக்கி கொண்டான்.
“யாரு மேன் நீ? எங்க அண்ணன் எதுக்காக உனக்கு நல்லவன்னு சர்ட்டிஃபிகெட் கொடுக்கணும்” என விழிகளைத் துருத்திக் கேட்டாள்.
“மேடம். அதை நீங்க உங்க அண்ணன் கிட்ட தான் கேட்கணும், நான் என்னோட வேலையை எந்தக் குறையும் இல்லாமல் சரியா செய்யுறதால அப்படிச் சொல்லியிருக்கலாம் மேடம்” என அவன் சொன்ன போது, அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனோ வேலையே கண் கண்ட தெய்வம் என்பது போல் சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“உன்னோட வேலை என்ன?”
“உங்களைப் பார்த்துகிறது தான்” என்றான் பட்டென.
“வாட்? இப்போ என்ன சொன்ன அஜய்” எனக் கேட்டாள் லாவண்யா. இதோடு அவள் இரண்டாவது முறை அந்தப் பெயரைச் சொல்லி அழைக்கிறாள். அவளின் அழைப்பு அவன் மனதில் தித்தித்தாலும் அதையெல்லாம் காட்டிக்கொள்ளாதவன் போல்.
“உங்களைப் பத்திராம காலேஜ்ல விட்டுட்டு கூட்டிட்டு வர்றது தான் என்னோட வேலைன்னு ஆதித் கிருஷ்ணா சார் சொல்லியிருக்கார். அதைச் சொன்னேன் மேடம்” என்றான் அவன்.
“அப்போ உண்மையைச் சொல்ல மாட்ட?” எனக் கேட்டாள் அவள்.
“என்ன உண்மை மேடம்?” என அவன் சாதாரணமாய்க் கேட்ட போது அந்த வாகனம் தன் இயக்கத்தை நிறுத்த. அவள் திரும்பி பார்த்தாள். அஜய் க்ருப் ஆஃப் கம்பெனிஸ் என்ற பெயர் பலகை தாங்கி நின்றக் கட்டிடத்தைப் பார்த்து அவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது.
—
ராககீதம் அலுவலகத்தில் மகேஷ் பற்றிய தகவலை பெற காத்திருந்தான் ஆதித்த கிருஷ்ணா. சுதா மேல் தவறு இருக்காது என ஆதித் கிருஷ்ணாவிற்குத் தோன்றியதால் அவளை அங்கேயே விட்டுவிட்டு ராகவனை அழைத்துக் கொண்டு இங்கு வந்திருந்தான்.
மகேஷை பற்றி விசாரித்ததில் அவன் வேறு ட்ருப் பிற்குச் சென்று விட்டதாய் தகவல் கிடைத்தது. அதோடு இன்று இரவு அவன் கச்சேரி நடத்தும் மண்டபத்தின் முகவரி கிடைக்க
அதை பெற்றுக்கொண்டு ஆதித் கிருஷ்ணா புறப்பட்டான். மாலை ஆறு மணி இருக்கும் அந்த மண்டபத்தின் மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
மண்டபத்திற்குள் நுழைந்தான் ஆதித் கிருஷ்ணா. மகேஷ் உற்சாகமாய்ப் பாடிக்கொண்டிருந்தான். அங்கிருந்த ஜனங்களும் அதை ரசித்துக்கொண்டும் இசைக் கேற்ப நடனமாடிக் கொண்டிருந்தனர். இரவு கச்சேரி முடியும் வரை ராகவனும், ஆதித் கிருஷ்ணாவும் காத்திருந்தனர்.
மகேஷ் மண்டபத்தை விட்டு வெளியே வந்தான். அவன் முகத்தில் பயம் அப்பட்டமாய்த் தெரிந்தது. அவனுடைய இருசக்கர வாகனத்தை விரைந்து எடுத்தான். சீறி பாய்ந்த அவனுடைய இருசக்கர வாகனத்தைத் துரத்திக்கொண்டிருந்தது ஆதித் கிருஷ்ணாவின் கறுஞ்சிறுத்தை.
அறிமுகம் இல்லாத
பாதைகளில்
பயணித்துக் கொண்டிருக்கிறேன்,
என் காதல்,
என்றாவது
என் கரம் சேர்ந்து விடாதோ?
காயங்கள் நிறைந்து
கிடக்கும் என் மனதை,
உன் கரம் கொண்டு
மருந்திடு பெண்ணே,
ஆறுதல் அடையட்டும்.!
நீயே என் தேடல்!
நீயே என் காதல்!
என் ஆரத்யா!
—

