Loading

தேசம் 2

ஒரு நொடி உயிர் போய்விட்டது என்று தான் எண்ணினாள். அழுத்தமான ஏற்ற இறக்க மூச்சோடு கீழ் பார்வையால் தன் கழுத்தை தொட்டிருக்கும் கத்தியை வெகுவாக நோக்கினாள். சிறு வெளிச்சத்திலும் பளபளத்தது உயிர் காவு வாங்கும் அக்கத்தி.

“ஏ…ஏ…ஏ….” என்ற ஓசைக்குப் பின் ஒரு வார்த்தையும் வரவில்லை அவளிடம் இருந்து.

“சத்தம் வரக்கூடாதுன்னு சொன்னேன்” கத்தியை லேசாக அழுத்த, ‘வேண்டாம்’ என பார்வையால் கெஞ்சினாள்

சற்று நிதானித்தவன் கத்தியை விலக்காது, “அஞ்சு நிமிஷம் டைம் தரேன் என்ன கேட்கணுமோ கேட்டுக்க” என்றான்.

சீராகாத மூச்சை சரி செய்ய நினைக்காது திக்கித் திணறி ஏன் என்று கேட்டிட,
“உயிர் பயம் என்னன்னு இப்ப தெரியுதா. இந்த பயத்தை வாழ்க்கைய ஆரம்பிக்காத ஒரு பிஞ்சுக்கு கொடுத்துட்டியே. அப்போ அந்த மனசு இப்படி தான துடிச்சிருக்கும்.” என்றான்.

“நான் யாருக்கு என்ன செஞ்சேன்?”

“நல்லது செஞ்சா மறக்கலாம் கெட்டதை மறக்கலாமா…”

“சத்தியமா நான் யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணல. நீ யாரையோ நினைச்சு தப்பா என்னை கடத்தி இருக்க.” என்றதும் கத்தியை அழுத்தினான்.

கீறல் ஏற்பட்டு எரிச்சல் வந்தது. அதில் அலறி தரையில் விழுந்தவள், “சேதாரம் இல்லாம அனுப்பி வைக்கிறேன்னு சொல்லிட்டு… கொலை பண்ண பார்க்கிறியே.” என அஞ்சு நடுங்க,

“ஹா…!ஹா…! சேதாரம் இல்லாம அனுப்பி வைக்கிறேன்னு தான் சொன்னேன் உயிரோடு அனுப்பி வைக்கிறேன்னு சொல்லலையே.” என்றான்.

“என்னை விட்டுடு… சத்தியமா நீ நினைக்கிற மாதிரி நான் எதுவும் பண்ணல. இன்னைக்கு எனக்கு கல்யாணம் அங்க எனக்காக எல்லாரும் காத்திருப்பாங்க.”

“ஆஹான்! கல்யாணத்தை வச்சுட்டு அம்மணி எதுக்கு ஜன்னல் வழியா எகிறி குதிச்ச?”

அவன் கேள்விக்கு விடை அளிக்காத பிரார்த்தனா விடும்படி மட்டும் கெஞ்சி கொண்டிருக்க, “காதலனை பார்க்கத்தான் எகிறி குதிச்சேன்னு சொல்லு.” என்றதில் ஒரு நிமிடம் அதிர்ந்தாள்.

தன்னை சுற்றிய அனைத்தையும் தெரிந்திருக்கிறான். இது எதர்ச்சையாக நடந்த கடத்தல் அல்ல பல நாட்களாக பின் தொடர்ந்து திட்டமிட்டு கடத்தப்பட்டது என்பதை நன்கு உணர்ந்து கொண்டாள். தன் காதல் உட்பட அனைத்தையும் அறிந்திருக்கிறான் என்றால் காதலனையும் கடத்தி இருப்பானோ என்ற சந்தேகம் எழுந்தது.

“அவரையும் கடத்தி இருக்கியா? அவரு பாவம் விட்டுடு ப்ளீஸ்… ஏற்கனவே நொந்து போய் இருப்பாரு” என்றதும் கத்தியை எடுத்து விட்டான்.

எடுத்த வேகத்தில் குத்தி விடுவானோ என்ற பயத்தில் பிரார்த்தனா அவனையே பார்த்திருக்க, முகமூடி அணிந்த கண் அவளை அங்குலம் அங்குலமாக அளந்தது.

“கதை அப்படி போகுதோ…!” என‌ அவளை அமர வைத்தவன் கீழ் உதடு நோக்கி கையை கொண்டு செல்ல, முகத்தை திருப்பிக் கொண்டாள்.

கன்னத்தை லேசாக தட்டி புன்னகைத்தவன் காதோரம், “அங்க அடிச்சா இங்க வலிக்குமா… முன்னாடியே இது தெரிஞ்சிருந்தா உனக்கு பதிலா அவன கடத்தி இருப்பேன்.” கிசுகிசுத்தான்.

“யாருடா நீ? எதுக்கு என்னை இப்படி டார்ச்சர் பண்ற”

“உன்னோட எமன்” என்றவன்,

“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு உன் காதலனோட வரேன். காதலர்களை பிரிக்காம ஒரே நேரத்துல நரகத்துக்கு அனுப்பி வைச்ச புண்ணியம் எனக்கு கிடைக்கட்டும்.” என்று விட்டு வேகமாக அங்கிருந்து சென்றான்.

முடியும் மட்டும் கத்தி பார்த்தவள் ஒரு கட்டத்தில் முடியாமல் சோர்ந்து சாய்ந்து விட்டாள். மூடிய விழியில் தாய் தந்தையும், காதலனும் வந்து சென்றார்கள். எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற முனைப்போடு எழுந்தமர்ந்தவள் சிந்திக்க செய்தாள்.

வெகு நேரம் கழித்து உணர்ந்து கொண்டாள் சென்றவன் வாய்க்கட்டு கட்டாமல் சென்றதை. கைகளை சுற்றி இருக்கும் கயிற்றை வாய் நோக கழட்டியவள் கால் கட்டையும் தூக்கி எறிந்தாள். அந்த இருட்டு அறையை துலாவி தனக்கான வழியை தேர்ந்தெடுத்தவள் வெளியேறப் போகும் நேரம்,

“அவன கடத்தி இருப்பேன்” என்றவன் வார்த்தை ஒலித்தது.

தப்பிக்க நினைத்தவள் அப்படியே நின்று விட்டாள். இங்கிருந்து சென்றதை அறிந்தால் தன் காதலனை ஏதாவது செய்து விடுவானோ என்ற பயம் மனதை கவ்வியது.

யாரோ ஒருவனாகத்தான் வாழ்வில் அறிமுகமானான். முதலில் அவன் கதை கேட்டு மருத்துவராக சிகிச்சை அளித்தவள் நாள் போக அவளையே சிகிச்சைக்கு பயன்படுத்தி விட்டாள். எப்பொழுதும் சோக முகத்தோடு இருப்பவன் முகத்தில் அவளால் ஒரு சிரிப்பு வந்து விட்டால் ஏதோ சாதித்தது போல் உணர்வாள். அந்த சாதனையை எண்ணி மகிழவே இன்னும் அவனை மகிழ்விக்க தொடங்கினாள்.

காலப்போக்கில் கனவிலும் அவனே நிறைந்திருக்க, எதைப் பற்றியும் யோசிக்காமல் இவளாகவே காதல் வயப்பட்டதை வெளிப்படுத்தினாள். முதலில் மறுத்தவன் இவளின் பரிபூரண அன்பில் அடங்கிப் போனான். ஒரு நாள் அவனைப் பார்க்காவிட்டாலும் சிகிச்சைக்கு வருபவர்கள் மனநிலை போல் ஆகிவிடும் இவள் மனநிலை.

தப்பிக்க வேண்டாம் என முடிவெடுத்து பழைய இடத்தில் அமர்ந்தவள் மனம், ‘இங்க இருந்து தப்பிச்சா தான் அவர காப்பாத்த முடியும். அங்க உன் அம்மா அப்பா உன்னை காணாம தேடிட்டு இருப்பாங்க. முதல்ல அவங்க கிட்ட போய் நடந்ததை சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்து. அப்புறம் போலீஸ் உதவியோட உன் ஆளையும் காப்பாத்திடலாம்.’ என தைரியம் கொடுத்தது.

அதிரடியாக மனம் சொன்னதை நம்பி அங்கிருந்து வெளியேறியவள் அடித்து பிடித்து மண்டபம் வந்து சேர்ந்தாள். அவளைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் சலசலக்க, அழுதபடி நின்றிருந்தார் வள்ளி. அன்னையைப் பார்த்து மனம் கலங்கியவள் தந்தையைத் தேட, இடிந்து போய் அமர்ந்திருந்தார் நாற்காலியில்.

ஓடி சென்று தந்தையை அணைத்துக் கொண்டாள். தள்ளி விட்டவர் ஐவிரல் பதிய அடித்தார் மகளை. அதிர்ந்து நடந்ததை சொல்ல வாய் திறக்க,

“பேசாத! உன்னை எவ்ளோ நம்பினேன் இப்படி ஒரு காரியத்தை செஞ்சி ஊர் முன்னாடி என்னை அசிங்கப்படுத்திட்டியே. இதுக்கு அன்னைக்கே என்னை சாக விட்டிருக்கலாம்.” என கண் கலங்கினார்.

“அப்படி எல்லாம் சொல்லாதீங்கப்பா. என்னை யாரோ ஒருத்தன்…”

“ச்சீ! என்னை அப்பானு சொல்லாத.”

“தயவு செஞ்சு என்னை நம்புங்கப்பா நான் அவரை பார்க்க போனது உண்மைதான். ஆனா…” என்ற அவளின் மற்றொரு கன்னம் வீங்கியது வள்ளி அடித்ததில்.

“எவ்ளோ தைரியம் இருந்தா எங்க கிட்டயே இப்படி ஒரு வார்த்தையை சொல்லுவ. உன்ன பெத்து வளர்த்ததுக்கு நல்ல பாடத்தை புகுத்திட்ட. இப்ப எதுக்கு இங்க வந்த? நாங்க உயிரோட இருக்கோமா இல்ல செத்துட்டோமானு பார்க்க வந்தியா.”

“அம்மா… நீயாவது கொஞ்சம் பொறுமையா கேளும்மா.”

“இதுக்கு மேல எங்க முன்னாடி நின்னினா ரெண்டு பேரும் சேர்ந்து பிணமா தான் உன் முன்னாடி இருப்போம்.” என்ற சாமிநாதன் மகளை வெளியேற்ற நினைத்து தள்ளிவிட்டார்.

சரியாக மணமேடையை பிடித்து விழப் போனவள், “அப்பா…” என எதையோ வாய் திறக்க… அப்படியே அதிர்ந்து நின்றாள்.

உலகம் சுழல்வதை நிறுத்தி அவள் கண்ட காட்சியில் அப்படியே நின்றது. தன் பார்வையில் நிறைந்து இருப்பது உண்மைதானா என்ற சிந்தனையில் சிலையானாள். மகள் அசையாமல் நிற்பதை உணர்ந்த பெற்றோர்கள் கண்டபடி வசைப்பாடி மீண்டும் தள்ள முயற்சிக்க,

“மாமா!” என்ற குரல் சிலைக்கு உயிர் கொடுத்தது.

“அவ என்ன சொல்ல வரான்னு கூட கேட்காம நீங்களா ஒரு முடிவு எடுக்கிறது நல்லா இல்ல. போற பொண்ணு மணமேடை வரைக்கும் வந்துட்டு போகணும்னு அவசியம் இல்ல. அவ நினைச்சிருந்தா எப்பவோ போயிருக்க முடியும். கொஞ்சம் பொறுமையா நடந்தது என்னன்னு விசாரிங்க. உங்க பொண்ண நீங்களே நம்பலைன்னா ஊர் நம்பாது.”

“இல்ல மாப்பிள்ளை இவ எல்லாத்தையும் திட்டம் போட்டு தான் பண்ணி இருக்கா. உங்களை மாதிரி ஒரு தங்கமான மனுஷன கட்டிக்க கொடுத்து வைக்கல. எங்கயாது போய் கெட்டு சீரழியட்டும் விடுங்க”

“அப்படி பண்ணவ எதுக்காக மாமா இப்ப இங்க வரணும். நீங்க வேணா உங்க பொண்ண நம்பாம இருக்கலாம். எனக்கு என் மனைவி மேல முழு நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிக்கையில தான் மணமேடையை விட்டு எந்திரிக்காம அப்படியே உட்கார்ந்து இருந்தேன். என் நம்பிக்கையை பொய்யாக்காம வந்திருக்க இவளை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.”

புது மணமகன் பேச்சை ஊரே ஒருவித ஆச்சரியத்தோடு கேட்டுக் கொண்டிருக்க, சம்பந்தப்பட்ட பெண் அதிர்வு மாறாது அந்த குரலுக்கு சொந்தக்காரனான தன் காதலனை வெறித்து பார்த்தது.

அவள் பார்ப்பதை அறியாதது போல் அவளது பெற்றோர்களோடு வாதம் செய்து கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில், “உங்களுக்கு விருப்பமில்லனா நீங்க இங்க இருக்க தேவையில்ல மாமா. யார் என்ன சொன்னாலும் நான் உங்க பொண்ண தான் கல்யாணம் பண்ணிப்பேன்.” என்றான் மண்டபம் அதிர.

“பார்த்தியாடி…உனக்கு நாங்க எந்த மாதிரி மாப்பிள்ளையை பார்த்து இருக்கோம்னு பார்த்தியா. இப்பவாது திருந்தி மணமேடைல போய் உட்காரு.” என்ற மனைவியை சாமிநாதன் சத்தமிட,

“மாமா, தயவு செஞ்சு இந்த விஷயத்துல நீங்க தலையிடாதீங்க.” அவரை அடக்கி விட்டான்.

சொந்த பந்தங்கள் ஓடிப்போன பெண்ணின் குணத்தை கூறு போட்டதை நிறுத்திவிட்டு  மாப்பிள்ளையின் குணத்தை வான் அளவிற்கு புகழ ஆரம்பித்தது. சாமிநாதன் குடும்பத்தின் மீது அக்கறை உள்ள சிலர் அவரை சமாதானப்படுத்தி கல்யாணத்தை நடத்த அறிவுரை கூறினார்கள்.

தங்கமான மாப்பிள்ளைக்காக அவரும் அமைதிக்காக்க, ஒரு வழியாக யாரைத் தேடி மண்டபத்தை விட்டு ஓடி சிக்க கூடாதவன் கையில் சிக்கினாளோ அவன் பக்கத்தில் பெற்றோர்கள் சம்மதத்தோடு அமர்ந்தாள். சற்றும் அவளை நிமிர்ந்து பார்க்காதவன் கண்ணும் கருத்துமாக சடங்குகளை செய்து கொண்டிருந்தான்.

அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவள் முன்பு மஞ்சள் தாலி. நொடியும் யோசிக்காது வாங்கியவன் அந்த நொடி தான் அவளைப் பார்த்தான். இருவரின் விழிகளும் சந்தித்துக் கொண்டது. எப்பொழுது பார்த்தாலும் நிரம்பி வழியும் காதல் இருவரின் விழியிலும் இல்லாமல் போனது.

பிரார்த்தனா கேள்வியோடு தன் காதலன் விழி நோக்க, எவ்வித பதிலையும் தர விருப்பம் இல்லாதவன் விழிகள் எதையோ கூற முயன்றது. அந்தக் கண்ணையே பார்த்துக் கொண்டிருந்தவள் மூளை சட்டென்று ஒன்றை நியாபகப்படுத்த, இருந்த மனக்குழப்பத்தில் அதை உதாசீனம் செய்தாள்.

மனம் சொன்னதைக் கேட்டு ஓடி வந்தவள் தன் மூளை சொன்னதைக் கேட்டு ஒரு நொடி சிந்தித்து இருந்தால் வாழ்வு தப்பித்து இருக்குமோ என்னவோ… இனி தப்பவே முடியாது என்ற தாரக மந்திரத்தை மனதில் சொல்லிக் கொண்டு மூன்று முடிச்சு போட்டான் சரவணப் பொய்கை.

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
15
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்