Loading

நிறம் 13

 

தங்கள் வீட்டுப் பெண்ணை இத்தனை காலமாக தங்களிடமிருந்து மறைத்து வைத்ததற்கான காரணத்தை ராஜரத்தினத்திடம் வினவ, அவரோ அமைதியாகவே நின்றிருந்தார்.

 

அத்தனை நேரம் குடும்பத்தாரின் விசாரணையில் குறுக்கிடாத தமயந்தி பேச ஆரம்பித்தார்.

 

“உங்க கூட நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்திட்டு விக்ரமை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு என்னைப் பழிவாங்க, என் பொண்ணை இத்தனை வருஷம் என்கிட்ட இருந்து பிரிச்சு வச்சுட்டீங்களா?” என்று அவர் வினவ, அந்த இடத்தில் இருந்த பெரியவர்கள் அதிர்ந்தனர்.

 

அனைவரின் முகமும் ஒவ்வொரு உணர்ச்சியை வெளிப்படுத்த, தமயந்தியின் முகமோ நிர்மலமாகவே இருந்தது.

 

அனைவரும் தமயந்தியிடம் கவனத்தை திருப்பியிருக்க, அந்த பேச்சில் சம்பந்தப்பட்டவளோ அதிர்ச்சியின் பிடியிலிருந்து வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

 

முதலில் இதை எதிர்பார்க்காத வர்ஷினி, தான் கேட்டது சரியா என்று மீண்டும் நினைவுகளில் தேடிப் பார்க்க, அவளின் மூளையோ அவளின் செவித்திறன் சரியாக தான் உள்ளது என்றே ஒவ்வொரு முறையும் கூறியது.

 

‘அப்போ ராஜ் அப்பா என்னோட அப்பா இல்லயா?’ என்று மீண்டும் மீண்டும் தனக்குள்ளேயே வினவி அதற்கு கிடைத்த பதிலை மனதிற்குள் பதியவைக்க முயன்று கொண்டிருந்தாள்.

 

‘அப்போ யாரு என்னோட அப்பா?’ என்று அடுத்த கேள்வி எழ, தமயந்தி கூறிய ‘விக்ரம்’ என்ற பெயர் நினைவிற்கு வர, சட்டென்று அவளின் பார்வை ஸ்வரூபனை நோக்கியது.

 

‘அப்போ அவன் சொன்னது உண்மை தானா? நான் தான் யாரு என்னோட அப்பான்னே தெரியாம இத்தனை நாள் இருந்துருக்கேனா?’ என்று எண்ணத் துவங்கியவளிற்கு கழிவிரக்கத்தின் காரணமாக இமையோரத்தில் கண்ணீர் கசிய ஆரம்பிக்க, அப்போது ஒரு கரம் அவளின் கைகளை ஆதரவாக பற்றிக் கொண்டது.

 

வர்ஷினி யாரென்று நிமிர்ந்து பார்க்க முயல, கண்களில் உற்பத்தியாக துவங்கிய கண்ணீரினால் எதிரில் நிற்பவரின் முகம் சரியாக தெரியவில்லை என்றாலும், தொடு உணர்ச்சி யாரென்று சரியாகவே அடையாளம் காட்டியது.

 

இவர்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த இந்த காட்சி இரு ஜோடி கண்களிற்கு மட்டுமே தென்பட்டது. மற்றவர்கள் தமயந்தியின் மீதிருந்த கண்களை இன்னமும் அகற்றவில்லை.

 

தன் பெண்ணின் கூற்றைக் கேட்ட பெரியநாயகி, தன்னை மருமகளின் கைகளிலிருந்து விடுவித்து கொண்டு, தமயந்தியை நெருங்கி ஆதரவாக அணைத்துக் கொண்டார்.

 

தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கேட்டு திகைத்த ராஜரத்தினம் பதில் பேச முடியாமல் நிற்க, அவரருகே இருந்த கனகவள்ளி, “இது என்ன அக்கிரமமா இருக்கு? உங்க பொண்ணை அந்த விக்ரம் கிட்டயிருந்து காப்பாத்தி இத்தனை நாளா சோறு போட்டு வளர்த்ததுக்கு இப்படியெல்லாம் குற்றம் சொல்வீங்களா?” என்று கத்த ஆரம்பித்தார்.

 

ராஜரத்தினம் பேசியிருந்தால் கூட மற்றவர்கள் அமைதி காத்திருப்பரோ என்று எண்ணுமளவிற்கு கனகவள்ளி பேச ஆரம்பித்ததும் அனைவரின் முகமும் பிடித்தமின்மையை வெளிப்படையாகவே காட்டியது.

 

அங்கிருந்த மூத்த தலைமுறையினருக்கு தான் கனகவள்ளி பற்றி நன்றாகவே தெரியுமே!

 

“ஆசை ஆசையா என் மாமா என்னை தான் கல்யாணம் பண்ணிக்குவாருன்னு காத்திருந்தா, இப்படி குடும்பமா சேர்ந்து என் மாமனை என்கிட்ட இருந்து பிரிச்சுட்டீங்கள!  இதுக்கெல்லாம் குடும்பமா சேர்ந்து அனுபவிப்பீங்க.” என்று இதே பெரிய வீட்டின் முன்னே கனகவள்ளி ஆங்காரமாக கத்தியது பெரியவர்களின் கண்முன்னே வந்து சென்றது.

 

இத்தனைக்கும் இந்த திருமண பேச்சை ஆரம்பித்தது ராஜரத்தினம் தான். பரமேஸ்வரனின் நண்பனாக அறிமுகமானவர் தான் ராஜரத்தினம். அவருக்கு தமயந்தியை பார்த்ததும் பிடித்துவிட, பரமேஸ்வரன் தான் அவருக்காக வீட்டினரிடம் பேசி திருமணத்தை ஏற்பாடு செய்தார். அதன்பிறகு, நடந்த அனைத்து நிகழ்வுகளும், கனகவள்ளியின் சாபத்தினாலோ என்று அனைவரும் மனதிற்குள்ளே மறுகும்படி அந்த குடும்பத்தையே வேதனையின் பிடியில் ஆழ்த்தின.

 

இத்தனை வருடங்களில் கனகவள்ளி மாறியிருக்கலாம் என்ற எண்ணம் கூட அவரின் பேச்சில் காணாமல் போக, அனைவரும் அவரைப் பார்ப்பதைக் கூட தவிர்த்தனர்.

 

வீட்டிற்கு தலைமகனான பரமேஸ்வரன் தான், “குழந்தையை காப்பாத்துன வரைக்கும் சரி. அதுக்கு அப்பறம் எங்க கிட்ட தான குழந்தையை ஒப்படைச்சுருக்கணும். பெத்த அம்மாவை விட உங்களுக்கு என்ன உரிமை இருக்குன்னு நீங்களே வளர்த்தீங்க?” என்று காட்டமாகவே கேட்டவர், “அதை இப்போ வந்து சொல்லி வேற காமிச்சுட்டு இருக்கீங்க.” என்று முணுமுணுத்தார்.

 

வீட்டிற்கு வந்தவன் நண்பன் என்றாலும், அவனின் செய்கைகளால் தன் குடும்பத்தின் மகிழ்ச்சி பறிபோயிருக்கிறது என்பதால் உண்டான கடுப்பில் சற்று கோபமாகவே இருந்தார் பரமேஸ்வரன்.

 

பரமேஸ்வரனின் கேள்விக்கு கனகவள்ளியால் பதிலளிக்க முடியவில்லை. ஏனெனில் அவருக்கே அதற்கான பதில் தெரியாதே.

 

கையில் ஒரு குழந்தையுடன் வந்தவரை வாசலிலேயே நிறுத்தி, கனகவள்ளியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ராஜரத்தினத்தின் தாய் வற்புறுத்த, அவரோ கையிலிருந்த குழந்தையை சுட்டிக்காட்டி, “இது என்னோட பொண்ணு… இவளை ஏத்துக்குறதா இருந்தா மட்டும் தான் கல்யாணத்துக்கு சம்மதிப்பேன்.” என்று கூற, அப்போது இருந்த கனகவள்ளிக்கு, எப்படியாவது தன் முறை மாமனை திருமணம் செய்து கொண்டால் போதும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

 

மேலும், குழந்தை தானே, திருமணம் முடிந்த பிறகு எப்படியாவது பிரித்து விடலாம் என்றும் எண்ணியிருக்க, அவரின் எண்ணம் இப்போது வரை பலிக்கவில்லை. அதுவும் வர்ஷினி தன் எதிரி தமயந்தியின் குழந்தை என்பது சில வருடங்களுக்கு முன்பு தானே தெரிய வந்தது. இது முதலிலேயே தெரிந்திருந்தால், சண்டை போட்டாவது அவளை வெளியே அனுப்பியிருக்க மாட்டார்!

 

பழைய காலங்களை மின்னல் வேகத்தில் கடந்து வந்த கனகவள்ளி, ‘நீயே பதிலை சொல்லு’ என்பது போல ராஜரத்தினத்தைப் பார்த்தார்.

 

ராஜத்தினமோ யாரையும் பார்க்காமல் அப்போதைய தன் நிலைப்பாட்டைக் கூற ஆரம்பித்தார்.

 

“அந்த சம்பவத்துக்கு அப்பறம் என் வாழ்க்கைல பிடிப்பே இல்லாம தான் வாழ்ந்துட்டு இருந்தேன். அப்போ எதேச்சையா என் கைல கிடைச்சவ தான் வர்ஷினி. அவளைப் பார்த்ததுமே யாருன்னுக்கு எனக்கு தெரிஞ்சாலும், என் மனசுக்குள்ள ஏதோ ஒண்ணு, அவளை நீயே கூட்டிட்டு போன்னு சொல்ல, நானும் என் வாழ்க்கையை மாற்ற வந்த தேவதைன்னு நினைச்சு தான் வர்ஷினியை நான் தூக்கிட்டு போனேன்.” என்றார்.

 

அவரின் பேச்சு அவருக்கே அபத்தமாக தோன்றியிருக்க வேண்டும், அத்துடன் தன் பேச்சை முடித்துக் கொண்டார். ஆனால், அதைக் கேட்டவர்களின் முகபாவமோ எரிச்சலை பிரதிபலித்தது.

 

“அப்போ இதெல்லாம் உன் சுயநலத்துக்காக பண்ணேன்னு சொல்றியா?” என்று ஆற்றமாட்டாமல் கேட்டார் பெரியநாயகி.

 

தன் மனசாட்சி இத்தனை நாட்களாக கூறிக் கொண்டிருந்ததை இப்போது பெரியநாயகி அனைவரின் முன்பாக கேட்டதும் மிகவும் குற்றவுணர்ச்சியாகிப் போனது ராஜரத்தினத்திற்கு. மனசாட்சியை ஏதோ போக்கு காட்டி அடக்கியவரால், பெரியநாயகியை அடக்க முடியவில்லை.

 

பெரியநாயகியின் கேள்வியை சமாளிக்க முடியாமல் அவரின் கண்கள் யாரேனும் தன்னைக் காப்பாற்ற வருவார்களா என்று அலைபாய, தமயந்தியின் நிர்மலமான முகத்தை காண நேர்ந்தது. எப்போதும் தன்னை தவிர்க்கும் கண்கள், இன்று தன்னை நேருக்கு நேர் பார்த்து குற்றம்சாட்டுவதைக் கண்டவரின் மனதில் பாரம் கூடிக் கொண்டே போனது.

 

தன் மனது இப்படி தவிக்கும் நேரமெல்லாம், தன் முகத்தை கண்டே ஆறுதல் சொல்லும் மகள் நினைவிற்கு வர, அவரின் கண்கள் மகள் இருக்கும் திசை நோக்க, தாயின் கண்களைக் கொண்டிருந்த மகளின் பார்வையும் தாயினதைப் போலவே நிர்மலமாக இருந்தது.

 

வர்ஷினியை பார்த்து ஏதோ கூற வர, அவளோ அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல், எவ்வளவு அடக்கியும் லேசாக எழுந்த கேவலுடன் தன்னறைக்கு ஓடினாள்.

 

அங்கிருந்தவர்களுக்கு அப்போது தான் வர்ஷினியின் நினைவு வந்தது. அவள் அழுதுக் கொண்டே செல்வதைக் கண்ட பெரியவர்களால், உடனே சென்று ஆறுதலளிக்க முடியாத சூழலில் இருக்க, ரூபா வர்ஷினியின் அறைக்கு சென்றாள்.

 

இத்தனை நேரம் வர்ஷினியை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த ஸ்வரூபன் தன் தாத்தாவின் அருகே வந்து, “இன்னும் எவ்ளோ நேரம் இப்படி பேசிட்டு இருக்க போறீங்க தாத்தா? பேச பேச இங்கயிருக்குறவங்க மனசு இன்னும் புண்படத்தான் செய்யும்.” என்று கூற, வைத்தீஸ்வரனிற்கும் அதுவே சரியெனப்பட்டது. லேசான செறுமலுடன் பேசத் துவங்கினார் அவர்.

 

“என் பேரன் சொல்றதும் சரி தான். இனியும் பழைய விஷயங்களைப் பேசி யாரையும் காயப்படுத்த நாங்க விரும்பல. இத்தனை வருஷம் எங்க வீட்டு பொண்னை பாதுகாத்ததுக்கு நன்றி. இனிமே நாங்க பார்த்துக்குறோம்.” என்று கை கூப்பினார் வைத்தீஸ்வரன்.

 

இங்கு வரும்போதே இப்படி நடக்கும் என்று எண்ணி தான் வந்தார் ராஜரத்தினம். ஆயினும், தன் மகளுடன் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் போகும் என்று எண்ணவில்லை.

 

“நான் செஞ்சது தப்பு தான். என்னோட சுயநலத்துக்காக தாயையும் பொண்ணையும் பிரிச்சிருக்க கூடாது தான்.” என்றவர் பெருமூச்சுடன், “ஒரே ஒரு தடவை என் பொண்…” என்று ஆரம்பித்தவர், “வர்ஷினி கிட்ட பேசிட்டு போயிடுறேன். உங்களுக்கு வேணா நான் செஞ்சது சுயநலமா தெரியலாம். ஆனா, அவ மேல நான் வச்ச பாசம் உண்மை தான்.” என்று தழுதழுத்தார்.

 

அங்கிருந்த அனைவரையும் அவரின் குரல் அசைதிருந்தாலும் யாரும் வாய் திறக்காமல் இருக்க, ஸ்வரூபன் தான், “நீங்க போய் பேசிட்டு வாங்க.” என்றான்.

 

ஸ்வரூபனை புருவம் சுருக்கி பார்த்தவர் லேசான தலையசைப்புடன் வர்ஷினி சென்ற அறை நோக்கி நடந்தார்.

 

இப்போது அனைவரின் பார்வையும் ஸ்வரூபனை நோக்கி திரும்ப, மெல்லிய குரலில், “இப்போவே பேசிட்டா, வர்ஷினிக்கும் ஃப்ரீயா இருக்கும். என்ன தான் இருந்தாலும், இத்தனை நாளா அப்பாவா நினைச்சவரை அவ்ளோ சீக்கிரம் தூக்கி போட்டுட முடியுமா?” என்றான் அனைவருக்கும் பொதுவாக.

 

*****

 

“ஷ்யாம்…” என்ற அழைப்பு வந்ததும், சட்டென்று தன் சிந்தனைகளிலிருந்து கலைந்தவன் தன் அறையின் கதவை திறக்க, அங்கு அவனின் அன்னை நின்றிருந்தார்.

 

அவரின் சாந்தமான குணத்தை முன்பே கணித்தது போல சாந்தா என்று அவரின் பெற்றோர் பெயரிட்டிருக்கின்றனரோ என்று தோன்றும் அளவிற்கு அன்பு மட்டுமே செய்ய தெரியும் அப்பாவி அவர். மூப்பின் காரணமாக முகத்தில் சுருக்கங்கள் கூடுவது போல, வேதனையின் சாயலும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது அவரிடம்.

 

அதைக் கண்ட மகனோ, ‘உங்க வருத்தத்தை சீக்கிரமே போக்கி, உங்க முகத்துல சந்தோஷத்தை கொண்டு வருவேன் ம்மா.’ என்று தனக்குள்ளே கூறிக்கொண்டான்.

 

வெளியே கூறியிருந்தாலாவது, அவரின் வேதனைக்கான சரியான காரணத்தை அறிந்திருப்பான். அப்படி தெரிந்து கொண்டாலும் கூட, அதை தற்போது நிவர்த்தி செய்வானா என்பது சந்தேகமே.

 

“என்ன பா என் முகத்தையே புதுசா பார்க்குற மாதிரி பார்த்துட்டு இருக்க?” என்று சாந்தா வினவ, லேசாக புன்னகைத்தவன், “என் அம்மாவோட முகத்துல மட்டும் எப்படி லிட்டர் கணக்குல கருணை வடியுதுன்னு தெரிஞ்சுக்க முயற்சிக்கிறேன்.” என்றான் அவன்.

 

“ஹ்ம்ம் ஆரம்பிச்சுட்டியா?” என்று செல்லமாக அலுத்துக் கொண்டவர், “ஆமா, வந்ததுலயிருந்து வீட்டுக்குள்ளேயே இருக்கியே.. ஊர் சுத்திப் பார்க்க போகலையா?” என்றார் சாந்தா.

 

“போகணும் ம்மா.” என்று சுரத்தே இல்லாமல் கூறியவனைக் கண்டவர், “என்னாச்சு பா? ஏதாவது பிரச்சனையா?” என்றவருக்கும் அந்த காரணம் தெரிந்து தான் இருந்தது.

 

“ஏன் ம்மா இன்னும் இந்த ஊர்ல இருந்து கஷ்டப்படுறீங்க? என்கூட வந்துடுங்கன்னு சொன்னாலும் கேட்க மாட்டிங்குறீங்க.” என்று ஷ்யாம் புலம்பினான்.

 

“நம்ம போற ஊரெல்லாம் நமக்கு சொந்தமாகிடாது ஷ்யாம். நம்ம சொந்த ஊர்ல இருக்க நிம்மதி வேற எங்கேயும் கிடைக்கவும் செய்யாது. அப்பப்போ வந்து போற உனக்கு தான் இதெல்லாம் புதுசா இருக்கு. எனக்கு பழகிடுச்சு.” என்று சாந்தா கூற, எப்போதும் போலவே அவரைப் புரிந்துகொள்ள முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவனின் எதிர்வினையைக் கண்டு சிரித்தவர், “உனக்கென்ன, உன்கூட வந்து தங்கனும் அவ்ளோ தான?” என்றவரைப் பார்த்து, “ஆமான்னு சொன்னா மட்டும் வரவா போறீங்க.” என்று சலித்துக்  கொண்டான் ஷ்யாம்.

 

“ம்ம்ம் வர தான் நினைச்சேன். ஆனா, நீ தான் சலிச்சுக்குற!” என்று வேண்டுமென்றே ஷ்யாமை கேலி செய்தார். தன் அன்னை தன்னிடம் மட்டுமே இப்படி பேசுவார் என்பதை நன்கறிந்த ஷ்யாம் உள்ளுக்குள் அவரின் கிண்டலை ரசித்து சிரித்தாலும், வெளியே அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

 

“நாளைக்கே உனக்கு கல்யாணமாகி குழந்தை பிறக்கும்போது, என் மருமகளையும் குழந்தையையும் பார்த்துக்க கண்டிப்பா வரேன்.” என்று சாந்தா கூற, ஷ்யாமின் மனதில் சட்டென்று அந்த காட்சி தோன்றியது.

 

*****

 

கல்லூரி கேண்டீனில் தன் நண்பர்களுடன் அமர்ந்திருந்தான் ஷ்யாம். அவன் அமர்ந்திருந்த மேஜைக்கு அடுத்த மேசையில் பெண்கள் குழு அமர்ந்திருக்க, அவர்களுக்குள் சூடான விவாதம் நடந்து கொண்டிருந்தது.

 

ஷ்யாமிற்கு பெண்கள் என்றாலே ‘அலர்ஜி’ தான். பெண்களின் பக்கமே செல்லாதவன், அவர்களின் விவாதத்தையா ரசிக்கப் போகிறான். ஆனால், அன்று அவனின் தலையில் பெண்களின் பேச்சை கேட்க வேண்டும் என்று எழுதியிருந்தால், அதை யாரால் மாற்ற முடியும்?

 

வேறு எங்கும் இடமில்லாததால், அதே மேஜையில் அமர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன் தலையெழுத்தை நொந்து கொண்டே அமர்ந்தவனிற்கு ஆறுதலாக அமைந்ததென்னவோ, அவனிற்கு பின்னே அந்த மேஜை இருந்ததால், அந்த பெண்களை பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. ஆனால், அவனின் நிம்மதி எல்லாம் சில நொடிகளே. அந்த பெண்களின் பேச்சு, அவனின் பொறுமையை மிகுதியாகவே சோதித்தது.

 

“எனக்கு வரப்போற இன்-லாஸ் சும்மா நொய்யி நொய்யின்னு கேள்வி கேட்காம, ஹஸ்பண்ட் அண்ட் வொய்ஃப்புக்கு ப்ரைவசி குடுக்குற மாதிரி இருக்கணும்.”

 

“எக்ஸாக்ட்லி! ஃபர்ஸ்ட்டே அவங்களை எல்லாம் கழட்டிவிட்டுட்டு, தனியா வீடு பார்த்து போயிடனும்.”

 

இப்படி பல எதிர்பார்ப்புகளை அள்ளிவிட்டனர் அந்த பெண்கள். அதைக் கேட்ட ஷ்யாமிற்கோ எரிச்சலாக இருந்தது. தனியாக இருப்பதில் தான் சந்தோஷம் இருக்கிறது என்று அவர்களாகவே கற்பனை செய்து கொண்டு, அதை மிகைப்படுத்துவது போல இருந்தது அவர்களின் பேச்சு.

 

‘ஒரு பொண்ணுக்கு கூடவா, அந்த பையனோட பேரன்ட்ஸ் கூட சேர்ந்து இருக்கணும்னு தோணாது?’ என்று அவன் நினைத்துக் கொண்டிருகும்போதே, அந்த குரல் அவனின் காதுகளில் விழுந்தது.

 

“யாரு சொன்னா, தனியா இருந்தா தான் சந்தோஷமா இருக்கும்னு? எனக்கெல்லாம் அத்தை மாமா கூட தான் இருக்கணும் பா. அது தான் ஜாலியா இருக்கும். நமக்கு ஏதாவது ஆச்சுன்னா அக்கறையா திட்டுறதுல இருந்து, நாம ஏதாவது தப்பு பண்ணா, பாசமா கண்டிக்கிறது வரை அவங்க நம்ம கூட இருக்குறது தான் நல்லா இருக்கும். ரொம்ப ஃப்ரீயா பொறுப்புனா என்னன்னே தெரியாம சுத்திட்டு இருக்க நாம குடும்பங்கிற பெரிய பொறுப்பை சுமக்க ஆரம்பிக்கும்போது வர தடுமாற்றங்களை பார்த்து நாம மிரண்டு போகாம இருக்க, ‘இது இவ்ளோ தான்’ன்னு சொல்லிக் கொடுத்து அரவணைக்க அவங்க  இருக்கணும். நாளைக்கே என்னோட ஃப்யூச்சர் ஹஸ்பண்ட் அவுட் ஆஃப் ஸ்டேஷன் போயிட்டா, உன்கூட நான் இருக்கேன்னு எனக்கு துணையா இருக்க அவங்க கண்டிப்பா வேணும். இதே தான் என் பிள்ளைக்கும்.” என்று பேசிக் கொண்டே செல்ல, அவளின் தோழிகளோ, “எம்மா தாயே ஸ்டாப் பண்ணு! சும்மா ஃபன்னுக்கு பேச சொன்னா, கல்யாணத்துல ஆரம்பிச்சு குழந்தை வரைக்கும் போயாச்சு. விட்டா ஆறுபதாம் கல்யாணம் வரைக்கும் போயிடுவ. கிளாஸுக்கு டைமாச்சு வா போகலாம்.” என்று அவளின் மற்ற தோழிகள் அவளை அழைத்துக் கொண்டு சென்றனர்.

 

அவள் பேச ஆரம்பிக்கும்போதே, அந்த குரல் வெகு பரிச்சயமாக தோன்றியது ஷ்யாமிற்கு. முதலில் அவள் ஆரம்பிக்கும்போது அவளும் மற்றவர்களைப் போல தான் பேசி தன் எரிச்சலின் அளவைக் கூட்டப்போகிறாள் என்று ஷ்யாம் எண்ணியிருக்க, அவளின் பேச்சு முழுவதையும் கேட்டவன், ‘ஹ்ம்ம், இப்படிப்பட்ட பொண்ணுங்களும் இருக்கத்தான் செய்றாங்க!’ என்று நினைத்துக் கொண்டான்.

 

அவர்கள் கிளம்பிச் செல்லும்போது, அவள் யாரென்று அறிந்து கொள்ள வேண்டிய ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் எதேச்சையாக திரும்புவதைப் போல திரும்பிப் பார்த்தவனின் பார்வையில் விழுந்தது, தன் தோழிகளால் இழுத்துச் செல்லப்பட்டவள் தான்.

 

அப்போது தான் அவளின் குரல் தனக்கு ஏன் பரிச்சயமாக தோன்றியது என்பதை புரிந்து கொண்டான் ஷ்யாம். எப்போதும் அவளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காதவனிற்கு அவளின் அன்றைய பேச்சு சிறு மரியாதையை தோற்றுவித்தது என்னவோ உண்மை தான்.

 

*****

 

“டேய் என்னடா நின்னுட்டே யோசிச்சுட்டு இருக்க?” என்று சாந்தா வினவியதும் தான் தன் நினைவுகளிலிருந்து வெளிவந்தான் ஷ்யாம்.

 

‘என்ன இது? இப்போலாம் எப்போ பார்த்தாலும் அவளைப் பத்தியே யோசிச்சுட்டு இருக்கேன்.’ என்று நினைத்தவன் அன்னையிடம், “ஒன்னுமில்ல ம்மா. வேலையைப் பத்தி யோசிச்சேன்.” என்று சமாளித்தான்.

 

“ஊருக்கு வந்தும் கூட வேலையைப் பத்தி தன யோசிக்கணுமா? உன்கூட படிச்சு வேலை பார்க்குறவங்க எல்லாரும் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டாங்க. நீ எப்போ டா ஓகே சொல்ல போற?” என்று சராசரி தாயின் ஆசையை மகனிடம் வினவ, அவனோ தாயை சமாளித்துவிட்டு வெளியே கிளம்பினான்.

 

*****

 

அறைக்குள் சென்ற ராஜரத்தினம் கண்டது, விழியோரம் ஈரம் காயாமல், எங்கோ வெறித்துக் கொண்டிருந்த வர்ஷினியை தான்.

 

இதுவரை எத்தனையோ கஷ்டங்களை அவள் கடந்து வந்த போதிலும் இப்படி அழுதோ வருத்தப்பட்டோ அவளைப் பார்த்ததில்லை ராஜராஜத்தினம். இப்போது அவளின் கண்ணீருக்கு தானே காரணமாகிவிட்டதை எண்ணி மனதிற்குள் குமைந்தார் அவர்.

 

வெளியே பேசும்போது கூட, தான் செய்த செயலின் வீரியத்தை முழுதாக புரிந்து கொள்ளவில்லை. வெளியில் இருப்பவர்களின் வருத்தத்தைக் கண்டு சம்பிரதாயத்திற்காக மட்டுமே அவர் மன்னிப்பை வேண்டினார்.

 

ஆனால், வர்ஷினியின் வெறுமையான பார்வையைக் கண்டவரின் மனதில், முதல் முறையாக தன்னையும் தன் செயல்களையும் வெறுத்தார்.

 

அவர் உள்ளே வந்து நிமிடங்கள் இரண்டு கடந்திருந்தாலும், வர்ஷினி அவரைக் கவனிக்கவே இல்லை. ஆனால், அறைக்குள் இருந்த மற்ற இரு பெண்களும் அவரின் வருகையை உணர்ந்து, அவர்களுக்கான தனிமையைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தனர்.

 

மெல்ல வர்ஷினியின் அருகே சென்றவர், “பாப்பா…” என்று அழைக்க, அத்தனை நேரம் நினைவுகளில் பயணம் செய்து கொண்டிருந்தவளின் பயணம் தடைபட்ட உணர்வில் திரும்பிப் பார்த்தாள்.

 

அங்கு கண்களிலேயே மன்னிப்பை யாசித்தவாறு நின்றிருந்த ராஜரத்தினத்தை கண்டவள் எதுவும் கூறாமல் மீண்டும் தன் வேலையை தொடர்ந்தாள்..

 

அவளின் புறக்கணிப்பில் நொந்து போனவர், “இந்த அப்பாவை மன்னிக்க மாட்டியா பாப்பா?” என்று வினவினார்.

 

வர்ஷினியோ விரக்தியாக புன்னகைத்து, “உங்களை மன்னிக்க நான் யாரு?” என்றாள்.

 

“எல்லாம் என்னோட சுயநலம் தான் டா. வசதியா வாழ வேண்டிய உன்னை இவ்ளோ பெரிய குடும்பத்துல இருந்து பிரிச்சு கூட்டிட்டு போய், வள்ளி செய்யுற கொடுமைகளுக்கு மத்தியில உன்னை வாழ வச்சது எல்லாமே என்னோட சுயநலம் தான்.” என்று அவர் வாக்குமூலம் கொடுக்க, அவரை இடைவெட்டிய வர்ஷினி, “இந்த பணம், வசதிக்காக நான் கோபமா இருக்கேன்னு நினைக்குறீங்களா?” என்று புருவம் சுருங்க அவள் பார்த்ததிலேயே காரணம் அதுவல்ல என்பது நன்கு விளங்கியது ராஜரத்தினத்திற்கு.

 

அவரின் முகம் காண விரும்பாதவளாக மீண்டும் மறுபுறம் திரும்பியவள், “எனக்கு விபரம் தெரிஞ்ச நாள்லயிருந்தே, உங்ககிட்ட அம்மா பத்தி எதுவும் கேட்டதில்லை. ஏன்னு தெரியுமா? ஒருமுறை யாரோ என்னோட அம்மா பத்தி உங்ககிட்ட கேட்டதும், அதுக்கு நீங்க வருத்தப்பட்டதும் தான் காரணம். ஏன் என் அம்மா உயிரோட இருக்காங்கங்கிறதே இங்க வந்ததுக்கு அப்பறம் தான் தெரியும்.  அப்போ கூட நீங்க அம்மாவைப் பத்தி பேசாததுக்கு ஏதாவது முக்கியமான காரணம் இருக்கும்னு நினைச்சேன். இவ்ளோ நேரம் அங்க நின்னது கூட, ஏதாவது வேலிட் ரீசன் நீங்க கொடுத்துட மாட்டீங்களான்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன். ஆனா, இப்படி உங்களோட சுயநலத்துக்காக என்னை இந்த குடும்பத்துலயிருந்து பிரிச்சுருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. நீங்க சொன்னதுல ஒண்ணு உண்மை தான். உங்க சுயநலத்தால தான் எனக்கு கிடைக்க வேண்டிய அம்மா பாசத்தை இழந்தேன். உங்க சுயநலத்தால தான் இப்படி ஒரு குடும்பமே என்னை தொலைச்சுட்டு தவிச்சுட்டு இருக்காங்கன்னு தெரியாம, நான் அன்புக்காக தவிச்சுட்டு இருந்தேன்.” என்று சொல்லிக் கொண்டிருந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அன்பற்ற இடத்தில் வறண்டு போன அவளின் கண்ணீர், இப்போது அவள் வந்து சேர்ந்திருக்கும் இடத்தில் அன்பு கொட்டிக் கிடப்பதால்  மீண்டும் சுரக்க ஆரம்பித்ததோ.

 

வர்ஷினியின் கேள்விகளுக்கும் அவள் இத்தனை காலமாக அனுபவித்த இன்னல்களுக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார் ராஜரத்தினம்.

 

“என்ன தான் நான் செஞ்சது சுயநலமா இருந்தாலும், நான் உன்மேல வச்ச பாசம் பொய்யில்லை டா.” என்றார் அவர்.

 

வர்ஷினியோ ஒரு பெருமூச்சுடன், “பிளீஸ் இங்கயிருந்து கிளம்புங்க. உங்க பாசம் உண்மையா பொய்யான்னு ஆராய்ச்சி எல்லாம் இப்போ என்னால பண்ண முடியாது. எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் வேணும். இப்போ உங்களை பார்க்கும்போதெல்லாம் இன்னும் என் வாழ்க்கைல என்னென்ன இழந்துருக்கேன்னு தான் நினைக்க தோணுது. பிளீஸ் கிளம்புங்க.” என்று அவரைப் பார்க்காமல் கூறியவள், எழுந்து பால்கனி நோக்கி சென்றுவிட்டாள்.

 

வர்ஷினி கூறியதும் சரி தான் என்ற முடிவிற்கு வந்தவர், பால்கனியிலிருந்தவளை தன் கண்களில் நிரப்பிக் கொண்டு வெளியே வந்தார்.

 

அங்கு அவருக்காகவே காத்திருந்ததைப் போல சுவரில் சாய்ந்து நின்றிருந்தான் ஸ்வரூபன்.

 

அவனைக் கண்டதும், “தம்பி நீங்க…” என்று இழுத்த ராஜரத்தினத்தை இடைவெட்டியவன், “நானே தான்…” என்று கூறியபடி அவரை அழைத்துச் சென்றான்.

 

இங்கு ராஜரத்தினம் வர்ஷினியிடம் பேச சென்ற இடைவெளியில், அவரின் மனைவி அவர் வந்த வேலையை துவங்கிவிட்டார்.

 

“ஹ்ம்ம், இந்த வீட்டு பொண்ணை அந்த வில்லன் கிட்டயிருந்து காப்பாத்தி இத்தனை வருஷம் பத்திரமா வளர்த்தா, அவருக்கு நன்றி சொல்லி அவருக்கு வேணுங்கிறது செய்வோம்னு யாருக்குமே எண்ணம் இல்ல போல. இவ்ளோ பணம் இருந்து என்ன பிரயோஜனம்? அதைக் குடுக்கவும் மனசு இருக்கணும்.” என்று  தனக்குள்ளே பேசிக்கொள்வதாகக் காட்டிக்கொண்டு சத்தமாகவே முணுமுணுத்தார்.

 

அவரின் முணுமுணுப்பு அங்கிருப்பவர்களுக்கு மேலும் எரிச்சலைத் தான் தந்தது.

 

வைத்தீஸ்வரனோ தன் மூத்த மகன் பரமேஸ்வரனிடம் கண்களைக் காட்ட, அவரும் தன்னறைக்கு சென்று காசோலை புத்தகத்துடன் திரும்பினார்.

 

“எங்க பொண்ணோட உயிரை விட பணமெல்லாம் எங்களுக்கு பெருசு இல்லை. இந்தாங்க பிளாங்க் செக்.” என்று பரமேஸ்வரன் நீட்ட, அப்போது அங்கு வந்த ராஜரத்தினம், “வேணாம் ஈஸ்வரா. நானும் காசுக்காக வர்ஷினியை வளர்க்கல. ஏற்கனவே, உள்ளுக்குள்ள புழுங்கிட்டு இருக்க என்னை, பணம் கொடுத்து மேலும் கஷ்டப்படுத்தாத.” என்றார்.

 

“ப்ச், அவங்களே குடுக்குறேன்னு சொல்றாங்க. இந்த மனுஷன் அதை கெடுத்துவிட்டுட்டாரு.” என்று முணுமுணுத்தார் கனகவள்ளி.

 

அவரை தன் பார்வையாலே அடக்கிய ராஜரத்தினம் அங்கிருந்தவர்களிடம் விடைபெற்று சென்றுவிட்டார்.

 

*****

 

“அப்பா, இவ்ளோ விஷயம் நடந்துச்சா?” என்று அலைபேசியில் கிரீஷ் வினவ, அவனுடன் ஏற்பட்டிருந்த பிணக்கு இவர்களின் குடும்ப சமாச்சாரத்தினால் ஒன்றுமில்லாமல் போனது.

 

“ஆமா டா, ராஜரத்தினத்தை பார்த்ததும் எனக்கு பயங்கர ஷாக். நல்ல வேளை அவனைப் பார்த்ததும் ரூமை விட்டு வெளியே வரவே இல்ல. அங்க இருந்த சூழல்ல நான் இல்லாதது யார் கண்ணுக்கும் படவும் இல்ல.” என்று ஆசுவாசப்பட்டுக் கொண்டார் தாமஸ். ஒருவன் அவர்கள் அனைவரையும் கண்கொத்திப் பாம்பாக கண்காணிக்கிறான் என்பதை அறியவில்லை போலும்!

 

“ஆனா, அந்த ராஜரத்தினத்துக்கு உங்களைப் பத்தின விஷயம் தெரிஞ்சுருக்குமா என்ன?” என்று கிரீஷ் வினவ, “எப்படி இருந்தாலும் நாம தான் எப்பவும் கவனமா இருக்கணும்.” என்று தன் ராஜதந்திரங்களை மகனிற்கும் கற்று தந்தார். இவர்களின் உரையாடலை இன்னொரு ஜீவனும் கேட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் அறியவில்லை.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்