Loading

நிறம் 9

 

வர்ஷினிக்கு அந்த குடும்பத்தில் இருந்தவர்களைக் கண்டு மலைப்பாக இருந்தது. வெளிவந்த ஒவ்வொருவரின பார்வையிலும் எவ்வளவு வித்தியாசம்?

 

‘நான் என்னமோ பொருட்காட்சி மாதிரி இப்படி பார்த்துட்டு இருக்காங்க!’ என்று நினைத்தவளிற்கு அவர்களின் பார்வை ஒருவித கூச்சத்தை தந்தது என்னவோ உண்மை தான்.

 

இத்தனை நாட்கள் தன்னை ஒரு பொருட்டாக கூட மதிக்காதவர்களுடன் வாழ்ந்து வந்தவளுக்கு அனைவரின் பார்வையும் அவளையே சுற்றியிருப்பது இதுவே முதல் முறை என்பதால் உண்டான கூச்சமோ!

 

வர்ஷினி தன் மனதுடன் மல்லுகட்டிக் கொண்டிருந்த வேளையில், அங்கு நடந்த உரையாடல்களை கவனிக்கவில்லை. மீண்டும் தன் கவனத்தை அவர்கள் புறம் திருப்பும்போது, அவர்களின் கவனம் வேறெங்கோ திரும்ப, அந்த திசையை கண்டவள் அவள் வாழ்வில் இதுவரை அடைந்திடாத அதிர்ச்சியை அடைந்தாள் என்று தான் கூறவேண்டும்.

 

இவள் மட்டுமல்ல, மறுபுறத்திலுள்ள நபரும் அதே அதிர்ச்சியை வெளிப்படுத்த, வயதின் காரணமாக அந்த அதிர்ச்சி அவருக்கு மயக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

 

அவர் மயங்கி விழ, மற்றவர்கள் அவரை நோக்கி செல்ல, இங்கு தனித்து விடப்பட்டாள் வர்ஷினி.

 

இன்னும் அவளின் மூளை அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவரவில்லை என்பது அவளின் உடல்மொழியிலேயே நன்கு விளங்கியது அவனிற்கு.

 

அவள் அருகே வந்தவன், “வர்ஷினி…” என்று அழைத்தான் மென்மையாக! அவனை சந்தித்ததிலிருந்து முதல் முறையாக அவளிடம் மென்மையை கடைபிடிக்க, அதை உணராத பாவையோ தன் மனம்போன போக்கில் ஏதோ சிந்தனையில் இருந்தாள்.

 

‘இவளை இப்படியே விட்டா வேலைக்காகாது.’ என்று நினைத்தவன், அவளின் தோளைப் பற்றி உலுக்கினான்.

 

அவனின் உலுக்கலில் எப்போதும் போல சுயத்தை அடைந்தவள், அவனை பார்த்துவிட்டு சுற்றிலும் பார்வையை சுழற்றினாள். அதற்குள் அங்கிருந்த மொத்த குடும்பமும் மயங்கியவரை தெளிய வைக்க உள்ளே சென்றிருந்தது. அவர்களை காணாததால் நடந்ததை கனவோ என்று எண்ணினாள் வர்ஷினி.

 

‘ஓஹ், கனவா இருக்குமோ! இப்படி எல்லாமா கனவு வரும்?’ என்று மீண்டும் மனதோடு உரையாடப்போகும் வேளையில் அதை தடுத்தவன், “நீ கனவு காணல.” என்று மட்டும் கூறிவிட்டு, அவளையும் கையோடு வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.

 

இருவரும் ஒன்றாக வீட்டிற்குள் அடியெடுத்து வைத்ததை இரு ஜோடி கண்கள் மகிழ்ச்சியுடனும், ஒரு ஜோடி கண்கள் இன்னதென்று வரையறுக்க முடியாத உணர்வுடனும் பார்த்துக் கொண்டிருந்தன.

 

அங்கிருந்த நீள்சாய்விருக்கையில் அந்த நபர் வீற்றிருக்க, அவரை சுற்றி மற்றவர்கள் நின்றிருந்தனர்.

 

“தமா, பாரு உன் பொண்ணு எப்படி வளர்ந்துருக்கான்னு.” என்று அந்த பாட்டி கூற, “அப்படியே உன்னை அச்சுல வச்சு வார்த்த மாதிரி இருக்கா என் பேத்தி.” என்றார் அந்த தாத்தா.

 

வர்ஷினியோ இவர்களின் பேச்சை கவனிக்கும் நிலையிலேயே இல்லை. தனக்கு வயதானதை போல இருக்கும் அந்த நபரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“என்ன மையூ இப்படி தள்ளி நின்னு பார்த்துட்டு இருக்க.” என்றவாறே அவளின் கைபிடித்து அவர்களின் அருகே அழைத்துச் சென்றார் பாட்டி.

 

வர்ஷினியோ திருதிருத்தவாறே அவனைக் காண, அவனோ, “பாட்டி, அவளுக்கு எதுவும் தெரியாது. நான் இன்னும் சொல்லல.” என்றான்.

 

‘எப்பா சாமி இப்போயாச்சும் சொன்னியே. என்ன தான் நடக்குது இங்க? யாராச்சும் சொல்லுங்க.’ என்று மனதிற்குள் நினைத்தாள் வர்ஷினி. என்ன தான் அங்கு நிகழும் சம்பவங்களை கொண்டு ஓரளவிற்கு யூகித்திருந்தாலும், எதனால் இப்படி நடந்தது என்பது வர்ஷினிக்கு தெரிய வேண்டியிருந்தது.

 

“என்ன ஸ்வரூ எதுவுமே சொல்லாமலா கூட்டிட்டு வருவ? அதான் பிள்ளை இப்படி முழிக்குது.” என்று அவனைக் கடிந்தார் அங்கிருந்த பெண் ஒருவர்.

 

‘எதே சுவருவா! நல்ல பேரு வச்சுருக்காங்க சுவரு கிணறுன்னு.’ என்று வர்ஷினியின் மனம் நடப்பதை எல்லாம் விட்டுவிட்டு தன்னை இவ்வளவு நேரம் ‘கொடுமை’ப்படுத்தியவனை கிண்டல் செய்து கொண்டிருந்தது.

 

‘மானங்கெட்ட மனசே! இங்க என்ன நடந்துட்டு இருக்கு, நீ என்ன யோசிச்சுட்டு இருக்க?’ என்று அடிக்கடி ‘அப்ஸ்காண்ட்’ ஆகும் மனதை ஒருநிலைப்படுத்தினாள் வர்ஷினி.

 

“இங்க வா டா மையூ நான் எல்லாரையும் அறிமுகப்படுத்துறேன்.” என்று அழைத்துச் சென்றவர், முதலில் அந்த வீட்டு பெரியவர்களின் முன்னே நின்றார்.

 

“இவங்க தான் உன்னோட பாட்டி – தாத்தா, பெரியநாயகி – வைத்தீஸ்வரன்.” என்றதும், அவர்கள் இருவருமே தங்களின் மகள் வழி பேத்தியை தொட்டு தடவி தங்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டனர்.

 

“மையூம்மா, இப்போ தான் உன்னை சின்ன குழந்தையா என் கையில தூக்குனது மாதிரி இருக்கு. இப்போ என்னை விட உயரமா வளர்ந்து என் முன்னாடி நிக்கிற.” என்று பாட்டியும், “எல்லா வளங்களும் பெற்று நல்லா இருக்கணும் டா.” என்று தாத்தாவும் கூற, இதுவரை பாட்டி – தாத்தா பாசத்தை உணர்ந்தறியாதவளுக்கோ கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. எதுவோ உந்த, அவர்களின் சரணங்களை ஸ்பரிசித்தவளை தூக்கி அணைத்துக் கொண்டனர் அந்த வயதான தம்பதியர்.

 

இந்த பாச பிணைப்பைக் கண்ட அங்கிருந்தவர்கள் கலங்கித்தான் போயினர்.

 

சூழ்நிலையை இலகுவாக்க வேண்டி வர்ஷினியை சற்று நகர்த்தினார் அந்த பெண். அடுத்து நின்றிருந்தவர்களை காட்டி, “இவங்க உன்னோட பெரியப்பா தாமஸ்,   அவரோட மனைவி உஷா.” என்று அவர் கூற, சிறு சிரிப்புடன் அவளை வரவேற்கும் பார்வை பார்த்தார் உஷா. ஆனால் தாமஸின் முகத்திலிருந்து அவளால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

வர்ஷினிக்கு அப்போதே இருவரின் பெயரைக் கேட்டதும், ‘லவ் மேரேஜ்ஜா இருக்குமோ!’ என்று சந்தேகம் எழுந்தாலும், அதை பொதுவில் கேட்க முடியாமல் அமைதியாக இருந்தாள்.

 

“இவங்களுக்கு கிரிஷ்னு ஒரு பையன் இருக்கான். உனக்கு அண்ணா… அவன் இப்போ அமெரிக்கால வேலை பார்த்திட்டு இருக்கான். அவனுக்கு ஆறு மாசம் முன்னாடி தான் கல்யாணம் ஆச்சு. உன் அண்ணி பேரு விஷாகா.” என்று கூடுதல் விபரங்களையும் கூறினார் அவர்.

 

“அப்பறம் இவங்க உன்  மாமா பரமேஸ்வரன்.” என்று கூற, “இரு இரு என் மனைவியை நானே அறிமுகப்படுத்துறேன்.” என்ற பரமேஸ்வரன் அருகிலிருந்தவரின் மீது கை போட்டு, “இதோ உனக்கு இவ்வளவு நேரம் நம்ம குடும்பத்தையே அறிமுகப்படுத்தி வச்சது தான் உன் அத்தை அகிலாண்டேஸ்வரி.” என்றார்.

 

அவரின் கலகலப்பான பேச்சில் கவரப்பட்டவளாக அனைவரை விடவும் சில சென்டிமீட்டர் நீள புன்னகையை பரிசாக அளித்தாள் அவரின் மருமகள்.

 

“உன்னை கூட்டிட்டு வந்தானே அவன் தான் என் மூத்த பையன் ஸ்வரூபசந்திரன்.” என்று கூற, ‘எது கூட்டிட்டு வந்தானா? தூக்கிட்டுல வந்தான்!’ என்று நினைத்துக்கொண்டே ஓரக்கண்ணில் அவனைக் காண, அவனும் அதே சமயம் அவளை தான் கைகளைக் கட்டி பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவன் பார்ப்பதை அறிந்ததும் உதட்டு சுழிப்புடன் திரும்பிக் கொண்டாள் அவளின் அத்தையின் புறம்.

 

“இது என்னோட பொண்ணு ரூபாவதி.” என்று அகிலாண்டேஸ்வரி கூற, அருகே நின்றிருந்த ரூபாவதி இவளை நோக்கி அறிமுக புன்னகை புரிந்தாள். அவளின் மேடிட்ட வயிறு அவள் திருமணம் ஆனவள் என்று கூற, அவளின் பார்வை சென்ற திசை அறிந்த ரூபா லேசான வெட்க சிரிப்பை உதிர்த்தாள்

 

“ரூபாவை என் அண்ணன் பையனுக்கு தான் கல்யாணம் பண்ணி கொடுத்துருக்கோம். வேந்தன் இப்போ சென்னைல இருக்கான். இந்த வாரம் வருவான்.” என்றார் அகிலா.

 

அடுத்து வர்ஷினி சென்றது அவளின் அன்னையிடத்தில். ஆம் அன்னை தான்! டி.என்.ஏ டெஸ்ட் எடுக்காமலேயே  உருவ ஒற்றுமையிலேயே சொல்லிவிடலாம் இருவரின் உறவைப் பற்றி.

 

மயக்கத்தினால் சற்று சோர்ந்திருந்தாலும், அவரின் முகத்திலிருந்த தேஜஸ் குறையவில்லை. இவ்வளவு நேரம் இவள் மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்ததையே அவரின் இரு கருவிழிகளும் சுழன்று பார்த்துக் கொண்டிருந்ததை வர்ஷினியும் அறிவாள்.

 

இவ்வளவு நேரம் சந்தோஷமாக இருந்தவர்கள் இப்போது சற்று சங்கடத்துடன் இருந்தனர். தாய்க்கும் மகளிற்குமான அறிமுகம் அல்லவா! எப்போதும் அன்னை தானே மற்றவர்களை அறிமுகப்படுத்துவார். அன்னையையே அறிமுகப்படுத்தும் சூழ்நிலையில் இருப்பதால் அனைவரும் மௌனமாக இருந்தனரோ?

 

இப்போதும் நிலைமையை கையாள வேண்டி, “தமயந்தி, இதோ உன் பொண்ணுக்கு எல்லாரையும் அறிமுகப்படுத்தியாச்சு.” என்று சாய்ந்திருந்த அன்னையின் கையில் பெண்ணை ஒப்படைத்துவிட்டு நகர்ந்தார் அகிலாண்டேஸ்வரி.

 

அவரின் இந்த செயலில் அங்கு இருக்கும் முக்கால்வாசி பேரின் மெச்சுதல் பார்வையை பரிசாக பெற்றார்.

 

அம்மாவிற்கும் பெண்ணிற்கும் இடையே வார்த்தைகள் எதுவும் இல்லை. மௌனமே அங்கு மொழியாய் மாற, இருவரும் ஒருவரையொருவர் அளவிடும் பார்வையை மட்டும் மாற்றவே இல்லை.  நேரம் இப்படியே கழிய, அங்கிருந்தவர்களின் கவனம் கலைந்தது, வெளியே கேட்ட மகிழுந்தின் ஓசையில் தான்.

 

வாசலில் மகிழுந்தின் சத்தம் கேட்டதும், யாரென்று அனைவரும் வாசலை பார்த்திருக்க, உள்ளே வந்தார் அவர்களின் குடும்ப மருத்துவர். அவரைக் கண்டதும் பரமேஸ்வரனும் அகிலாண்டேஸ்வரியும் தங்களின் மகனை பார்த்தனர். அவர்கள் மட்டுமல்ல, அவர்களின் பார்வையை தொடர்ந்து வர்ஷினியின் பார்வையும் அவனை தான் நோக்கியது.

 

“என்ன மாமா, ஊருக்குள்ள ஏதோ பேச்சு அடிப்படுதே?” என்றவாறே வந்தார் அந்த மருத்துவர் கதிரேசன். கதிரேசன் அகிலாண்டேஸ்வரியின் உடன்பிறந்த அண்ணன். ரூபாவதியின் மாமனார். அகிலாண்டேஸ்வரியின் திருமணத்திற்கு முன்பு, பெரியநாயகியின் தூரத்து உறவினர்கள் இருவரும்.

 

“அதுக்குள்ள உனக்கு தெரிஞ்சுடுச்சா கதிரு? இதோ பாரு என் பேத்தி. உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று கண்கள் மின்ன கேட்டார் பெரியநாயகி.

 

“ஞாபகம் இல்லாமையா? இந்த குட்டியை அவங்க அம்மா பிரசவிக்கும் போது நானும் மோகனாவும் தான இவங்களுக்கு மருத்துவம் பார்த்தோம்.” என்று சிரித்தவரைக் கண்டதும் தானும் சிரித்தாள் வர்ஷினி.

 

“என்ன வரு பாப்பா, உங்க அம்மா கையை இப்படி பிடிச்சிட்டு இருந்தா நான் எப்படி வைத்தியம் பார்க்குறது?” என்று அவர் கேட்டதும், சிரிப்புடனே அங்கிருந்து நகர்ந்தாள்.

 

“என்ன இவங்க இவ்ளோ அமைதியா இருக்காங்க?” என்று ரூபாவதி அவளின் தாயிடம் ‘கிசுகிசுப்பது’ அங்கிருந்த அனைவரின் காதுகளிலும் விழ, அனைவரும் மெல்லிய சிரிப்பை உதிர்க்க, இருவர் மட்டும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

‘எதே நான் அமைதியா?’ என்று வர்ஷினி மனதிற்குள் பேச, அதையே தான் ஸ்வரூபனும் செய்து கொண்டிருந்தான்.

 

“எல்லாரும் உன்னை மாதிரி வாயாடியா இருப்பாங்களா மருமகளே?” என்று கதிரேஷன் கேலி செய்ய, “மாமா…” என்று சிணுங்கினாள் ரூபாவதி.

 

இவர்களின் உரையாடல்களை பார்த்துக் கொண்டிருந்த வர்ஷினியின் முகத்தில் இதனை இத்தனை வருடங்களாக இழந்துவிட்ட வேதனையின் சாயல் நொடிப்பொழுது வந்து போனதை ஸ்வரூபனும் பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.

 

அவன் அவளிடம் ஏதோ சொல்லப் போகும்போது  கதிரேசன் அவனிடம் வந்து, “வரு, உன் பிரெண்டு எப்போ தான் இங்கே வருவானாம்?” என்றார்.

 

“இந்த வாரம் வரேன்னு சொன்னான் மாமா.” என்று ஸ்வரூபன் கூற அதற்குள் ரூபாவதி, “என்ன மாமா, ஸ்வரூ அண்ணாவையும் வருன்னு கூப்பிடுறீங்க, மையூவையும் வருன்னு கூப்பிடுறீங்க. அவங்க கன்ஃபியூஸ் ஆக மாட்டாங்களா?” என்று அடுத்த கட்ட தாக்குதலை ஆரம்பிக்க, அனைவரின் மனநிலையும் சற்று இலகுவானதாக மாறியிருந்தது.

 

தமயந்தியிடம் திரும்பிய கதிரேசன், “கொஞ்சம் பிரஷர் அதிகமா இருக்கு. டேப்லெட்ஸ் எல்லாம் சரியா போடுறீங்களா?” என்று வழக்கமான சில கேள்விகளை கேட்டுவிட்டு தமயந்தியை சிறிது நேரம் ஓய்வெடுக்க கூறினார்.

 

அகிலாண்டேஸ்வரி தமயந்தியை அழைத்துக் கொண்டு அவரின் அறைக்குச் செல்ல, பெரியநாயகி வர்ஷினியை பார்த்து, “நீயும் போய் கை கால் கழுவிட்டு வா டா மையூம்மா. எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம்.” என்றார் வாஞ்சையுடன்.

 

தமயந்தியை உள்ளே விட்டு வந்த அகிலாவிடம் கண்ணைக் காட்ட அவரும் வர்ஷினியை அவரின் அறைக்கு அழைத்துச் சென்றார்.

 

இத்தனை நேரம் தனக்கு ஏற்பட்ட திடீர் அதிர்ச்சியினால் தன் சுயத்தை மறந்திருந்தவளிற்கு இப்போது மூளையுடன் வாயும் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பிக்க தன் அத்தையிடம் இத்தனை நேரம் தனக்கிருந்த குழப்பத்தை வினவினாள்.

 

“அத்த, நான் எப்படி உங்களை எல்லாம் விட்டு பிரிஞ்சு… அப்பா… அம்மா…” என்று ஆரம்பித்தவள், அன்னை இறந்து விட்டதாக அவள் எண்ணினாள் என்று கூற முடியாமல் அமைதி காக்க, அவரோ வர்ஷினியின் தலையை ஆதுரமாக தடவியவர், “இப்போ தான மையூம்மா வந்துருக்க. நாளைக்கு மெதுவா எல்லாத்தையும் தெரிஞ்சுக்கலாம் சரியா? பெரியவங்களும் இன்னைக்கு உன்னைப் பார்த்த சந்தோஷத்துல இருக்காங்க. இந்த விஷயத்தை ஆரம்பிச்சா அவங்களுக்கும் மனசு கஷ்டமா இருக்கும்.” என்று கூற, வர்ஷினியும் அவர் கூறுவது சரியென்பதால் ஒப்புக்கொண்டாள்.

 

பின் என்ன நினைத்தாலோ, “அது எப்படி அத்த, உங்களை மாதிரி சாந்தஸ்வரூபிக்கு இப்படி ஒரு சிடுமூஞ்சி ஸ்வரூபன் மகனா பிறந்துருக்காங்க?” என்று கிண்டலாக வினவியதும், அகிலா சிரிப்புடன் அவளைப் பார்க்க அவளிற்கான விடை அவளின் பின்னிலிருந்து வந்தது.

 

“நான் என் ஸ்டேட்மெண்டை வாபஸ் வாங்கிக்குறேன் மையூ.” என்ற குரல் ரூபாவுடையது என்பதைக் கண்டுகொண்ட வர்ஷினி, “ஹாஹா, நீங்க என்னை பார்த்து அப்படி சொன்னதும் எனக்கே சிரிப்பா…” என்று கூறிக் கொண்டே திரும்பியவள், அங்கு ரூபாவதியுடன் ஸ்வரூபனும் நிற்பதைக் கண்டு வாயை மூடிக்கொண்டாள்.

 

“ம்மா, உங்க பையனையே கிண்டல் பண்ண ஒரு ஆள் வந்தாச்சு பாருங்களேன்.” என்று நமுட்டுச் சிரிப்புடன் கூற, ‘ஐயோ சும்மா இருக்குறவனை இவங்க வேற சொறிஞ்சி விடுறாங்களே!’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டவள், வெளியே சமாளிப்பாக இளித்து வைத்தாள்.

 

அவனோ அவளை கண்டுகொள்ளவே இல்லை. “ம்மா, என் ரூம் சாவி எங்க இருக்கு?’ என்று அகிலாவிடம் வினவினான்.

 

“அப்பா கிட்ட கேளு ஸ்வரூபா.” என்று அகிலா கூறிவிட, அறையை விட்டு வெளியே செல்லும்போது வர்ஷினியை பார்த்துவிட்டு சென்றான். அவனின் பார்வைக்கான அர்த்தம் தான் அவளிற்கு புரியவில்லை.

 

*****

 

அந்த ப்ரான்ஸ் நிற ரினால்ட் க்விட் வாகனம் சீரான வேகத்துடன் அதன் இலக்கை அடைய சென்று கொண்டிருந்தது. ஓட்டுநர் இடத்தில் ஷ்யாமும், அவனருகே அகிலும் அமர்ந்திருந்தனர்.

 

ஷ்யாமிற்கு மகிழுந்துகளின் மேல் தனி ‘க்ரேஸ்’. அவ்வப்போது அவனின் மகிழுந்தை மாற்றிக்கொண்டே இருக்குமளவிற்கு ‘க்ரேஸ்’. எத்தனை பதட்டமாக இருந்தாலும், அவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துவிட்டால்,  தானாக அவனின் மனம் அமைதியடைவதை பலமுறை உணர்ந்திருக்கிறான்.

 

“சார் எதுக்கு கார் எடுத்துட்டு வரீங்க? பஸ்லயே வந்துருக்கலாமே.” என்று அகில் அவனின் இந்த ‘க்ரேஸ்’ விஷயத்தை தெரிந்துகொண்டே  வினவ, ஷ்யாமோ, “ஹ்ம்ம், எல்லாம் காரணமா தான்.” என்றான் யோசனையுடன்.

 

அவனின் இந்த யோசனைக்கான காரணம், இந்த பயணத்திற்கு முன் காவல்துறை அலுவலகம் சென்றிருந்தவன், எதேச்சையாக ‘அக்யூஸ்ட் லிஸ்ட்’டை பார்த்தது தான்.

 

“சார், இதெல்லாம் ரீசெண்ட்டா நடந்த பெட்டி தெஃப்ட் கேஸ்ல தேடப்படுற குற்றவாளிங்க. எல்லாம் சின்ன வயசு பசங்க! இவங்க பின்னாடி பெரிய ஆளுங்க இருக்காங்க. நாம கஷ்டப்பட்டு பிடிச்சிட்டு வந்தா அடுத்த ஒரு மணி நேரத்துலயே கூட்டிட்டு போயிடுவாங்க. இதோ இப்போ கூட ‘செயின் ஸ்னாட்சிங்’னு ஒரு போன் கால்.  இவனுங்களா தான் இருக்கும்.” என்று அலுத்துக் கொண்டே சென்றார் அந்த காவலர்.

 

ஷ்யாம் அவர் கூறியதைக் கவனித்தாலும் அவனின் கண்கள் அந்த புகைப்படத்திலிருந்தவனையே பார்த்துக் கொண்டிருந்தன. அந்த புகைப்படத்தில் இருந்தது, முன்தினம் ஷர்மி அவளின் தம்பி என்று அறிமுகப்படுத்திய வினய்!

 

சில நாட்களாக, ஷ்யாமின் கவனம் பெரிய ஆட்களின் வழக்குகளின் பக்கம் திரும்பியிருந்ததால், அண்மையில் பெருகி வரும் இந்த சிறிய குற்றங்கள் அவன் கவனத்திற்கு வரவில்லை.

 

அவன் யோசனையுடன் இருந்ததைக் கண்ட அகில், “சார், நேரமாச்சு.” என்றான்.

 

ஷ்யாமும், விக்ரமின் வழக்கை முடித்துவிட்டு இந்த வழக்குகளை கவனித்துக் கொள்ளலாம் என்று எண்ணி கிளம்பினான்.

 

அப்போதும் மனதில் ஏதோ தோன்ற, ஷர்மிக்கு அழைத்தான். ஷர்மியின் அலைபேசி எண்ணை முன்தினமே அவளுடன் வந்திருந்த புகைப்படக்காரனிடமிருந்து  பெற்றிருந்தான். ஆனால் ஷர்மியோ அவனின் அழைப்பை ஏற்கவில்லை.

 

“ப்ச், ஓவரா தான் பண்றா.” என்று முணுமுணுத்ததும் அவனருகே நின்றிருந்த அகிலோ, “யாரு சார்?” என்றான்.

 

“ஒன்னுமில்ல… நாம கிளம்பலாம்.” என்று அவனையும் அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தான் ஷ்யாம்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்