Loading

“உன் அப்பா எதுக்கு டார்ல்ஸ் ஜுவனைல்க்கு வரணும்?” என உத்ஷவிப் புரியாமல் வினவ, “யாருக்குத் தெரியும்.” என்று குழப்பத்துடன் அப்புகைப்படத்தைப் பார்த்தாள்.

“உன் அப்பாவுக்கும் இவங்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு கேடி.” என சஜித் யோசனையுடன் கூற, “இருக்கலாம். என் அப்பாகிட்ட கேட்டா ஒரு க்ளாரிட்டி கிடைக்கும்.” என்றாள்.

“உடனே உன் அப்பாவைப் போய் பாக்கலாம்.” என ஸ்வரூப் தீவிரத்துடன் கூற, அக்ஷிதா விழித்தாள்.

“எதுக்கும் போற வழில கோவில்ல ஒரு அர்ச்சனைப் பண்ணிட்டு போய்டுவோமா” என பயபக்தியுடன் கூற, விஹானா ஆச்சர்யத்துடன் “என்னடி இது உலக அதிசயம். கோவிலுக்குலாம் போறேன்னு சொல்ற.” எனத் தாடையில் கை வைத்தாள்.

“பின்ன என்னடி… இவனுங்க தேடிப் போற எல்லாருமே தெரிஞ்சோ தெரியாமலோ செத்துப் போயிடுறாங்க. எனக்கு ஏதோ அப்பன்னு சொல்லிக்க அந்த ஆளு மட்டும் தான் இருக்கான். அவனும் செத்து கித்து தொலைஞ்சுட கூடாதுல. அதான், காட்கிட்ட ஒரு அப்ளிகேஷனை போடலாம்ன்னு சொன்னேன்.” என்றாள் பாவமாக.

சஜித், “உன் வாயில இருந்தே நல்ல வார்த்தையே வராதா. அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது வா.” என்று அழைக்க, ஜோஷித் போனை யோசனையுடன் பார்த்திருந்தான்.

ஸ்வரூப் அவனைக் கவனித்து, “என்ன ஆச்சுடா?” எனக் கேட்க,

“காடனோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல சந்தேகப்படுற மாதிரி எதுவும் இல்லடா. அவன் வித்தியாசமா நடந்துகிட்டதுக்கு கூட காரணம் தெரியல. நம்ம ஒன்னு நினைச்சு இன்வெஸ்டிகேட் பண்ணுனா, அது ஒரு வழில போகுது ஸ்வரா…!” என்றான் எரிச்சலுடன்.

ஸ்வரூப்புடன் பெருமூச்சு விட்டு, “வேற வழி இல்ல ஜோ. இந்த கேஸ் இழுத்துட்டுப் போற வழில தான் நம்ம போயாகணும். அதுல இருந்து ஒரு சின்னத் துரும்பு கிடைச்சாலும் போதும். மொத்த ஆணிவேரையும் பிடிச்சு சுட்டுத் தள்ளிடலாம்” என வெறியுடன் கூறினான்.

அடுத்ததாக, அக்ஷிதாவின் தந்தை நடராஜனைக் காண்பதற்காக மத்திய சிறைச் சாலைக்கு சென்றனர்.

ஏற்கனவே அலைபேசியில் இதனைப் பற்றி ஐஜியிடம் பேசி இருந்ததால், கேள்வி கேளாமல் ‘யாரை வேணும்ன்னாலும் பாருங்க.’ என்று உள்ளே அனுப்பி இருந்தனர்.

உள்ளே இருந்த காவலரிடம், “சார்… நான் நடராஜன்றவர பார்க்கணும்.” என்றாள் அக்ஷிதா. அவளை ஏற இறங்கப் பார்த்தார் அந்தக் காவலாளி.

“திருட்டுக் கேஸ்ல உள்ள வந்த நடராஜன் தான?” என அவர் இளக்காரமாகக் கேட்க அவள் ஆமோதிப்பாகத் தலையசைத்தாள்.

“ஏம்மா, உனக்கு விவரமே தெரியாதா? உன் அப்பா ரெண்டு நாளைக்கு முன்னாடி செல்லுக்குள்ளத் தூக்கு மாட்டி செத்துப் போய்ட்டாரு. அவரு பாடியை உன் வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டோமே. பொண்ணுன்னு சொல்ற உனக்கே தெரியாதா?” என்று கேட்டதில், அக்ஷிதா திகைத்து விட்டாள்.

எந்த பொறுப்புமின்றித் தன்னை நிராதரவாக விட்டுச் சென்றவரை எண்ணி அழக்கூடாது என்ற வீராப்பு இருந்தாலும், கண்கள் தானாகக் கலங்கிப் போனது.

“எந்த அட்ரஸ்க்கு?” எனக் கேட்க வந்தவளுக்கு குரல் கம்மியது.

அவளை ஆதரவுடன் பிடித்துக் கொண்ட உத்ஷவி, “எந்த அட்ரெஸ்க்கு பாடியை அனுப்புனீங்க?” எனக் கேட்ட பின்னால் தான் தெரிந்தது, தந்தையின் உடலைத் தனது பெரியப்பாவின் வீட்டிற்கு அனுப்பி இருப்பதை.

“அது உன் பெரியப்பா வீட்டு அட்ரெஸா டார்ல்ஸ்?” உத்ஷவிக் கேட்டதில், தலையை மட்டும் ஆட்டினாள்.

கண்ணீர் கன்னத்தில் உருண்டோடியது. அவளது கண்ணீரைக் காணப் பிடிக்காமல் சஜித் வேறு புறம் திரும்பிக் கொள்ள, ஸ்வரூப்பும் ஜோஷித்தும் சலிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஸ்வரூப், “ரிலாக்ஸ் அக்ஷி” என அவளை அமைதிபடுத்தி விட்டு, “அவரு இருந்த செல்லை நான் பார்க்கணும்.” என்றான்.

“நீங்க எதுக்கு சார் பார்க்கணும்…” எனக் காவலாளி எகிற, “அவர் தூக்கு மாட்ட ஏதுவா கயிறு சேருன்னு எல்லாத்தையும் குடுத்து உதவி செஞ்சது யாருன்னு தெரியணும்ல.” என வெகு நக்கலாகக் கேட்க, அந்தக் காவலாளியின் முகத்தில் திகைப்புப் பரவியது.

“ச… சார்… நீங்க தேவையில்லாம எங்க மேல சந்தேகப்படுறீங்க. இது முழுக்க முழுக்க தற்கொலை தான்னு அவரே கைப்பட எழுதி இருக்காரு.” என்றதும்,

“எங்க அந்த லெட்டர்?” எனக் கேட்டான் ஜோஷித்.

“அவரு சம்பத்தப்பட்ட எல்லாத்தையுமே அவர் பாடியோட அனுப்பியாச்சு சார். எதுவா இருந்தாலும் அங்கப் போய் கேளுங்க” என்றதில்,

அக்ஷிதா “பெரியப்பா வீட்ல போய் பாக்கலாம் ஷவி. அப்பாவோட திங்க்ஸ்ல எதுலயாவது க்ளூ கிடைச்சாலும் கிடைக்கும்.” என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசியதில்,

சஜித் “போகலாம். நீ முதல்ல நார்மல் ஆகு.” என்றவன், “ஸ்வரா நான் இவளைக் கூட்டிட்டுப் போய் குடிக்க ஏதாவது கொடுக்குறேன்… நீ விசாரிச்சுட்டு வா.” என்று அவனது பதிலை எதிர்பாராமல் அக்ஷிதாவின் மறுப்பையும் கணக்கில் எடுக்காமல் தனியே இழுத்துச் சென்றான்.

உத்ஷவி தான் வெகுவாய் குழம்பி, “கைக்கு எட்டுறது எதுவுமே வாய்க்கு எட்ட மாட்டேங்குதே.” எனக் கடுப்புடன் கூற, நால்வரும் வெளியில் வந்தனர்.

ஸ்வரூப் சட்டென “விஹானா, ராகேஷ் சம்பந்தப்பட்ட ஏதாவது உனக்கு ஞாபகம் வந்துச்சா?” என்றான் கூர்மையுடன்.

உத்ஷவி, “இதுக்கும் அவனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா டைனோசர்? அவன் தான் செத்துட்டானே?” என்றாள் புரியாமல்.

“எப்படி செத்தான்?” ஸ்வரூப் அமைதியுடன் வினவ,

“நாயா மாறி தான்.” என இரு பெண்களும் ஒன்றாகக் கூற,

“ம்ம்… இந்த வியர்டா சாகுறது அவன்கிட்ட இருந்து ஆரம்பிச்சு, என் ஊர்க்காரனும் அதே மாதிரி சாகுற அளவுக்கு வந்துருக்குன்னா, இதுல லிங்க் இருக்கும்ன்னு தோணலையா உங்களுக்கு?” என்று அழுத்தத்துடன் கேட்டான்.

“தோணுது தான். அப்போ இதை எல்லாம் ஏன் ப்ரீத்தன் செஞ்சுருக்கக் கூடாது? அவன் தான ராகேஷோட லிங்க்ல இருந்து இருக்கான். அவன் தான எங்களைத் திருடவும் ராகேஷ் மூலமா ஏற்பாடு செஞ்சான்.” என்று அவனைப் பார்த்தாள் உத்ஷவி.

“இருக்கலாம். ஆனா நமக்கு ப்ரூஃப் வேணும். அவனை நெருங்குறதுக்கு வேலிட் ரீசனும் இருக்கணும்” என்றான் யோசனையாக.

“வேலிட் ரீசன் இருந்தா மட்டும் நீ அவன் செஞ்சத் தப்பை வெளில சொல்லிடுவியா? என்ன இருந்தாலும் அவன் உன் ரிலேட்டிவ் தான…” வழக்கம் போல அவனை வம்பிழுத்தாள் உத்ஷவி.

அவளை நிதானத்துடன் எக்ஸ்ரே விழிகளால் ஊடுருவியவன், “தப்பு செஞ்சது நானா இருந்தா கூட, என்னை நானே அழிச்சுக்கத் தயாரா தான் இருப்பேன்.” என்றவனின் வார்த்தைகளில் அத்தனை அழுத்தம்.

ஒரு நொடி அவளை மீறி அவன் மீது ரசனைப் பார்வை வீசியவள், “ரப்பர் தரேன் அழிச்சுக்க.” என உதட்டைச் சுளித்து அழகு காட்டினாள்.

அதில் சட்டென நழுவி விழப் போன இதயத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டான் ஸ்வரூப் அவ்தேஷ்.

ஜோஷித் தான், “இன்வெஸ்டிகேஷன் வழி மாறிப் போற மாதிரி, அப்போ அப்போ உங்கப் பேச்சும் புரியாத போக்குல தான் போகுது” என இருவரையும் முறைத்தவன், “விஹா… கொஞ்சம் யோசிச்சு பாரு. முக்கியமானதா இல்லைன்னாலும் பரவாயில்ல எதுவா இருந்தாலும் சொல்லு” என்றான் கண்டிப்பாக.

“ஐயோ உனக்கு புரியல ஜோஷ். என்னையவே அங்க உப்புக்கு சப்பாணியா தான் வச்சு இருந்தான். ஒருத்தன் வாட்ட சாட்டமா வருவான். ரெண்டு மணி நேரம் மூணு மணி நேரம் எல்லாம் மீட்டிங் போகும். நீங்க சொல்ற பிரீத்தன் அவனா தான் இருப்பான்னு நினைக்கிறேன்.

அப்போ எல்லாம் என்னை வெறும் டீ வாங்கிக் கொடுக்கவும் லன்ச் வாங்கிக் கொடுக்கவும் தான் வேலை வாங்குவான். அப்பவும் ஒரு தடவை ‘ஒரு எம். பி. ஏ கிராஜுவேட்ட இப்படி டீ க்ளாஸ் தூக்க விடுறியே. இதெல்லாம் உனக்கே நல்லா இருக்கா’ன்னு நான் ராகேஷ்கிட்ட கேட்டேன்.” என்றதும்,

ஜோஷ் புருவம் சுருக்கி “என்ன சொன்னான்?” எனக் கேட்க,

அவளோ, “ரொம்ப நாளா இந்த கடவாப் பல்லு வலிச்சுக்கிட்டே இருந்துச்சு. அதுக்கு அப்பறம் அந்த வலியே இல்ல.” என்றாள் ஆசுவாசமாக.

ஜோஷித்தின் மேனி நொடிப்பொழுதில் இறுகி விட, உத்ஷவியோ, “என்னடி சம்பந்தம் இல்லாம பேசுற” என்றாள் குழப்பத்துடன்.

“அட… அவன் அடிச்சதுல ஆடிட்டு இருந்த கடவாப்பல்லு கையோட வந்துடுச்சு டார்ல்ஸ்.” என்றதில், அவளுக்கும் சுறுசுறுவெனக் கோபம் பெருகியது.

“அந்த நாய் நாயா மாறி செத்துட்டான் இல்லன்னா, அவனை நானே நாய் மாதிரி தெரு தெருவா அலைய விட்டு சாகடிச்சு இருப்பேன்…” தன்னை மீறி ஜோஷித் நெருப்பைக் கக்க, அவனை விழி விரித்துப் பார்த்த விஹானா,

“அதான் செத்துட்டானே! விடு ஜோஷ்.” என்றும் கூட, அவனால் அவனை அடக்க இயலவில்லை.

கரங்கள் சிகரெட்டின் உதவியை நாட, தனியே சென்று இரண்டு சிகரெட்டுகளை கோபம் கொந்தளிக்க குடித்து விட்டே வந்தான்.

இவன் ஏன் திடீர்ன்னு டென்சன் ஆகுறான் எனப் புரியாத விஹானா, அவனருகில் சென்று, “நீ எத்தனை சிகரெட்டை குடிச்சு கேட்டாலும் என்கிட்ட பதில் இல்ல ஜோஷ்.” எனப் பாவமாக உரைக்க,

“ப்ச் ஏய்… செம்ம கோபத்துல இருக்கேன் போய்டு.” என்றான் எரிச்சலாக.

அவளது முகம் சட்டென சுருங்கி விட, “நிஜமா தான் சொல்றேன் ஜோஷ்.” என்று அவனை நம்ப வைக்கும் முயற்சியில் இறங்கினாள்.

அவன் தன்னை நம்ப வேண்டும் என்ற எண்ணமும் ஏன் வந்ததென்று தெரியவில்லை அவளுக்கு.

“அதான் எங்களை நல்லா சீட் பண்றியே. அதே மாதிரி அவனையும் சீட் பண்ணிட்டு தப்பிச்சுருக்க வேண்டியது தான. அடி வாங்கிட்டு ஏண்டி அங்க இருந்த.” எனக் கோபமும் தவிப்பும் ஒருங்கே தோன்ற வினவியவன், விரல்களுக்கு இடையில் பிடித்திருந்த சிகரெட் கையோடு அவளது கன்னத்தை மென்மையுடன் தொட்டுப் பார்த்தான்.

அந்த மென்மையை உணராதவள், “சூடு வச்சுடாத.” என அவன் கையைத் தட்டி விட்டவள், கன்னத்தையும் நன்றாக தடவிக் கொடுத்து,

“இந்த கருமத்தோட என் கன்னத்தை தொடுறியே ஸ்கின் அலர்ஜி ஆகிட்டா, யார் என் மூஞ்சியைப் பார்ப்பா…” என்ற பெரியதொரு கவலை எழ, அதில் அத்தனை கோபமும் மறைந்து மெல்லப் புன்னகைத்தான் ஜோஷித் அவ்தேஷ்.

“நான் பாக்குறேன். டோன்ட் வொரி.” எனக் குறும்பு மின்னக் கூற, “ஹான்?” என விழித்தாள் விஹானா.

“ஐ மீன்… நான் உன் பிரெண்டு தான. உன் மூஞ்சி எப்படி இருந்தாலும் பார்ப்பேன்” என்று பேச்சை மாற்ற, “அது சரி…” என்றாள் நாக்கை துருக்கி.

“கேடி… இந்த டீயை குடி.” என்று சுடசுட தேநீரை நீட்டினான் சஜித் அவ்தேஷ்.

“வேணாம் சஜி.” என்றவளின் அழைப்பிலேயே அவள் தன்னிலையில் இல்லை என்பதை உணர்ந்தவன்,

“முதல்ல இதை குடிடி. என்னமோ உன்னை உள்ளங்கைல வச்சு தாங்குன அப்பா இறந்துட்ட மாதிரி பீல் பண்ணுற. இருந்து மட்டும் அந்த ஆள் உனக்கு என்ன செஞ்சான்.” என்று அவளைத் திசை திருப்ப முற்பட,

“ஒண்ணுமே செய்யல தான். ஆனா, சொல்லிக்கவாவது அப்பான்னு ஒருத்தர் இருந்தாருல.” கண்ணில் நீர் தேங்க கேட்டவளுக்கு என்னவென்று ஆறுதல் உரைப்பதென்று புரியாமல் தவித்துப் போன சஜித், டீயை ஓரமாக வைத்து விட்டு, அவளது கையைப் பற்றிக்கொண்டான்.

அவளது உள்ளங்கையைத் தனது உள்ளங்கைக்குள் புதைத்து, மற்றொரு கையால் அதனை இறுக்கிக்கொண்டவனுக்கு, ஏதேதோ சொல்ல வேண்டும் என்ற ஆவல் தான். ஆனால், எதையும் சொல்ல இயலவில்லை. அதற்கு அவனது மனதில் தெளிவு வேண்டுமே!

தொண்டையை கணைத்துக் கொண்டவன், “அதான் உன் ப்ரெண்ட்ஸ் நாங்க எல்லாரும் இருக்கோம்ல. உன்னை அப்படி எல்லாம் விட்டுட மாட்டோம் கேடி.” என்றான் குரலில் அத்தனை அன்பையும் சேர்த்து.

அதில் விழி நிமிர்த்தியவள், “நிஜமாவா? இந்த வேலை முடியற வரை தான் நம்ம ப்ரெண்ட்ஷிப்ன்னு நீ தான சொன்ன?” என சிறுமி போலக் கேட்டதில், சிவந்த இதழ்களை விரித்துப் புன்னகைத்தவன்,

“இந்த வேலை எல்லாம் முடிஞ்சாலும் சரி முடியலைன்னாலும் சரி… நீ எப்பவும் என் ப்ரெண்டு தான்.” என அவள் தலையை செல்லமாகக் கலைத்து விட்டான்.

அவளது பூமுகம் மலர்ந்ததில் அவனது மனதிலும் ஒரு நிம்மதி.

“சரி இதை குடிச்சுட்டு வா. அடுத்தடுத்து நிறைய வேலை இருக்கு. இதை குடிச்சு ப்ரெஷ் ஆகிடு. கமான்.” என்று அவளை தேற்றிட,

மீண்டும் அவள் “வேண்டாம்” என்றாள்.

“நான் சொல்றதை கேட்க மாட்டியா கேடி.” என சலனமற்று அவன் கேட்ட கேள்வியில், என்னவோ பல வருடப் பழக்கத்துடனான உரிமை மிதந்தது.

“ஹய்ய… எனக்கு டீ பிடிக்காது. காபி சொல்லு காட்சில்லா.” என்றதில், அவளை முறைத்தவன் மறுக்காமல் காபியை வாங்கி கொடுத்தான்.

அத்தனை சீக்கிரம் உண்மையை ஏற்றுக்கொள்ள இயலவில்லை தான். ஆனாலும் சஜித்தின் வார்த்தையை மீறி வருத்தத்தை இறுக்கிப் பிடிக்க விரும்பவில்லை அவள். தன்னையும் மதித்து, தனக்கு ஆறுதல் கூறுபவனை உதாசீனப்படுத்த இயலவில்லை.

ஒரு வழியாய் அனைவரும் அக்ஷிதாவின் பெரியப்பா வீட்டிற்கு சென்றனர். அங்கோ பாடியை மார்ச்சுவரிக்கு அனுப்பி விட்டதாகக் கூற, “அடப்பாவிங்களா, நீங்க போற இடமெல்லாம் பொணமா இருக்குடா.” என அங்கலாய்த்த உத்ஷவியை முறைத்த ஸ்வரூப், “மார்ச்சுவரிக்கு போகலாம்” என்று விறுவிறுவென காரை நோக்கி நடந்ததில்,

“காணாமப் போனப் பசங்களைத் தேடி அலைஞ்சது பத்தாதுன்னு பாடியை தேடியும் அலைய விடுறானுங்க.” எனப் புலம்பியவள், “டேய் நில்லுடா” என்று அவன் பின்னே ஓடினாள்.

முதலும் முடிவும் நீ
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
85
+1
4
+1
7

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    5 Comments

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு ஆர்வத்தைத் தூண்டும் திகிலான கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    2. Indhu Mathy

      போற இடத்தில எல்லாம் முட்டு சந்தா இருந்தா அவனுங்களும் என்ன பண்ணுவாங்க….. 🤣🤣🤣🤣🤣

      அவனுங்க மிஷன் சக்ஸஸ் ஆகுமோ இல்லையோ லவ் சக்ஸஸ் ஆகிடும்…. 🤭🤭🤭😜😜😜😜