Loading

நிறம் 11

 

இரவில் தாமதமாக உறங்கி அதன் விளைவாக காலையிலும் தாமதமாக எழுந்ததால், அதை ஈடுகட்ட வேகமாக கிளம்பி வந்தவள், கீழே கேட்ட பேச்சு சத்தத்தில் குழம்பினாள் வர்ஷினி.

 

‘இது எனக்கு ரொம்ப பரிச்சயமான வாய்ஸ் மாதிரி இருக்கே!’ என்று யோசித்துக் கொண்டே கீழே இறங்கி வந்தவள், நடுகூடத்தின் மையத்தில் அமர்ந்திருந்த அகிலைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள்.

 

“வர வர கண்ணும் சரியா வேலை செய்யுறதில்லையோ?” என்று முணுமுணுத்துவிட்டு, கண்களை சிமிட்டிவிட்டு பார்த்தாள். அப்போதும் அங்கு அகிலின் உருவமே தெரிய, சற்று நேரம் செயலற்று இருந்த அவளின் மூளை விழித்துக்கொண்டது.

 

‘அப்போ அந்த வேந்தன் தான் இந்த அகிலா?’ என்று சரியாக யூகித்தவள் சுற்றிலும் பார்க்க, அங்கு ஸ்வரூபனும் அமர்ந்து அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தான்.

 

‘அப்போ ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் ஏற்கனவே தெரியுமா?’ என்று வாயைப் பிளக்க, அவளின் மனமோ, ‘ரெண்டு பேரும் மாமன் – மச்சான் உறவுல இருக்காங்க. தெரியுமான்னு வாயைப் பிளக்குற?’ என்று தலையில் தட்டியது (மானசீகமாக தான்).

 

‘அடப்பாவிங்களா! அப்போ அன்னைக்கு நடந்த எல்லாமே ஆக்டிங்கா? எவ்ளோ ட்ரிக்ஸா நடிச்சு ஏமாத்திருக்காங்க?’ என்று அவளே அவளை கலாய்த்துக் கொண்டாள்.

 

மனதிற்குள், அகிலை முதலில் பார்த்தது, அவனிடம் சகோதரனாக பழகியது என்று பழைய நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டே அங்கு சென்றாள்.

 

முதலில் வர்ஷினியை கவனித்த அகிலா, “மையூம்மா… வாடா.” என்று பாசமாக அழைக்க, அவருக்கு சிரிப்புடன் தலையசைத்துவிட்டு மீண்டும் தன் கூர்பார்வையை அகிலிடம் திருப்பினாள்.

 

அவளின் பார்வையை உணர்ந்து கொண்ட அகிலோ மனதிற்குள், ‘ஐயையோ, பார்க்குறாளே! என்ன பண்ணி வைக்க போறாளோ?’ என்று அதிர்ந்தவன் ஸ்வரூபனை பார்க்க, அவனோ எப்போதும் போல தான் இருந்தான்.

 

“ஹும், பண்றதெல்லாம் இவனுங்க. ஆனா, நான் தான் இங்க பயந்துட்டு இருக்கேன்.” என்று முணுமுணுக்க, அவன் அருகில் அமர்ந்திருந்த பெரியநாயகியோ, “என்ன அகிலா ஏதாவது கேட்டியா?” என்றார்.

 

அவரின் ‘அகிலா’ என்ற விழிப்பில் அங்கிருந்த அனைவரும் சிரிக்க, வர்ஷினிக்கும் லேசான சிரிப்பு எட்டிப்பார்த்தது.

 

‘இவங்க வேற நேரம் காலம் தெரியாம!’ என்று மனதிற்குள் அலுத்துக்கொண்டவன், “ப்ச் கிழவி, இன்னொரு தடவ அகிலான்னு கூப்பிட்ட, தாத்தாக்கு டவுன்லயிருந்து நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுட்டு, உன்னை உன் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வச்சுடுவேன் பார்த்துக்கோ. அதான் உனக்கு அகிலான்னு கூப்பிட எங்க அத்தையை அனுப்பியிருக்கோம்ல. அப்பறம் என்ன?” என்று அகில் கூற மீண்டும் அங்கு சிரிப்பலை எழுந்தது.

 

“அடேய், யாரைப் பார்த்து டா வீட்டை விட்டு அனுப்பிடுவேன்னு சொல்ற? நான் கிழவின்னா உங்க தாத்தா மட்டும் குமரனாக்கும்! ரொம்ப பேசிட்டு இருந்த அப்பறம் உன் பிள்ளைக்கு அஞ்சு வயசாகுற வரைக்கும் தாயும் பிள்ளையும் இங்க தான் இருக்கணும்னு சொல்லிப்புடுவேன்.” என்று அங்கு அவரின் ராஜாங்கம் என்பதை நிரூபித்தார் பெரியநாயகி.

 

இதைக் கேட்டவனின் வாய் இனி திறக்குமா என்ன?

 

“மாமா என்ன பதிலை காணோம்?” என்று ரூபாவதி வேண்டுமென்றே வம்பிலுக்க, “நான் மரியாதை தெரிஞ்ச பையனாக்கும். பெரியவங்க பேச்சுக்கு கட்டுப்படுறவன்.” என்று கூறியவனின் பார்வை எதேச்சையாக வர்ஷினியின் மேல் விழ, “அப்போப்போ கூட இருக்குறவங்க பேச்சுக்கும் கட்டுப்படுறவன்.” என்று ஸ்வரூபனைப் பார்த்துக் கூறினான்.

 

அவனோ தோளைக் குலுக்கிக் கொண்டான். ‘க்கும், ஒரு ஹெல்புக்கு கூட வரமாட்டான் போலயே!’ என்று அலுத்துக் கொண்டான் அகில்.

 

“சரி சரி எல்லாரும் வாங்க சாப்பிடலாம்.” என்று அகிலா அழைக்க, அந்த இடம் கலைந்தது. அகிலோ வர்ஷினிக்கு பயந்து ஸ்வரூபனின் பின்னே சென்று விட்டான்.

 

முன்தினம் போல வர்ஷினி பெரியநாயகியின் அருகில் அமர, அவளிற்கு எதிர்திசையில் அவளின் பார்வையை தவிர்த்தவாறு, ஸ்வரூபனுடன் சென்றான் அகில். அகில் அங்கிருந்த நாற்காலியில் அமர முற்பட, அவனை தடுத்த ஸ்வரூபனோ, “இங்க வந்து உக்காரு டா.” என்று நாற்காலியை இழுத்தவாறே அவன் காதுகளில் முணுமுணுத்தான்.

 

‘இப்போ எதுக்கு தேவையில்லாம நம்ம மேல பாசத்தை பொழியுறான்?’ என்று குழப்பமாக ஸ்வரூபனை பார்க்க, அவனோ அவன் இழுத்து போட்ட நாற்காலிக்கு அருகில் உள்ள நாற்காலியில் ரூபா அமர்ந்திருப்பதை சுட்டிக்காட்டினான்.

 

‘அட ஒரு நிமிஷத்துல மச்சானை தப்பா நினைச்சுட்டேனே. உன்னை தவிர இங்க இருக்க யாருக்கும் என் மேல பாசம் இல்ல டா.’ என்று அவனை மனதிற்குள் பாராட்டிவிட்டு அவன் இழுத்த நாற்காலியில் சென்று அமர்ந்தான்.

 

அவன் அமர்ந்த அடுத்த நொடியே, “ரூபிமா நீ போய் பாட்டி பக்கத்துல உக்காரு.” என்று கூறி அகிலின் அருகில் ஸ்வரூபன் அமர, ‘ஏன் டா ஏன்?’ எனபது போல அவனை பார்த்தான் அகில்.

 

ஸ்வரூபனோ சிரிப்பை அடக்கியபடி, கண்களால் முன்னாடி பார்க்குமாறு சைகை செய்ய, நண்பனின் சைகையை உணர்ந்து பார்க்க, அங்கு தன் முட்டைக் கண்களை சுருக்கி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி.

 

“சிக்க வச்சுட்டியே டா ஸ்வரூபா!” என்று முணுமுணுத்தான் அகில்.

 

அப்போது அங்கு வந்தார் தமயந்தி. மகளின் கவனம் அன்னையிடம் திரும்ப, தற்காலிமாக தப்பித்தான் தமையன்.

 

தமயந்தியை பார்த்த வர்ஷினி சிரிக்க, அவரும் சிரித்தபடியே அவளைப் பார்க்கும் இடத்தில் அமர்ந்து கொண்டார். அடுத்த சில நிமிடங்கள் அங்கு கையும் வாயும் தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளும் வேலை மட்டுமே அரங்கேறியது.

 

சாப்பிட்டு முடித்ததும், ஆண்கள் தங்களின் வேலையைப் பார்க்க வெளியே செல்ல, அவர்களுடன் சென்று மீண்டும் தப்பித்துக் கொண்டான் அகில்.

 

ரூபா முன்தினம் இரவு தாமதமாக உறங்கியதால், களைப்பாக இருக்கிறது என்று கூறி ஓய்வெடுக்க சென்றுவிட்டாள்.

 

வர்ஷினிக்கு தான் என்ன செய்வதென்றே புரியவில்லை. மேலும், ஸ்வரூபன் – அகில் கூட்டணி வேறு அவளை பித்துப்பிடிக்க வைத்ததென்றே கூறவேண்டும்.

 

‘அடிக்கவெல்லாம் செஞ்சியே டா சுவரு!’ என்று ஸ்வரூபனையும், ‘டேய் அண்ணா, தங்கச்சி தொங்கச்சின்னு சொல்லியே ஏமாத்திட்டேல?’ என்று அகிலையும் திட்டித் தீர்த்தாள் மனதில்.

 

அவள் தனியாகவே அமர்ந்திருப்பதைக் கண்ட பெரியநாயகி, அவளை அழைத்துக் கொண்டு தமயந்தியின் அறைக்குள் சென்றார்.

 

தமயந்தியோ அவரின் அறையின் மூலையை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவர் முகம் நிர்மலமாக இருந்தாலும், அவரின் சுருங்கிய புருவம் அவர் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார் என்பதை பறைசாற்றியது.

 

அவரின் வாழ்வு தொலைந்ததிலிருந்தே இப்படித்தான் இருக்கிறார் என்பதை இத்தனை நாட்களாக பார்த்துவந்த பெரியநாயகி இனியும் தமயந்தியை இப்படியே விடக்கூடாது என்று சிந்தித்து தான் வர்ஷினியை அழைத்து வந்திருக்கிறார்.

 

“என்ன தமா, இங்க வந்து செவுத்தை வெறிச்சு பார்த்துட்டு இருக்க? நம்ம மையூ அங்க என்ன பண்றதுன்னே தெரியாம உக்கார்ந்துட்டு இருக்கா. அவளை கூட்டிட்டு வெளிய போய் நம்ம ஊரை சுத்தி காமிக்கலாம்ல.” என்றவாறே உள்ளே நுழைந்தார் பெரியநாயகி. அவரின் பின்னே வர்ஷினியும் சென்றாள்.

 

நினைவு தெரிந்து முதல் முதலாக தன் அன்னையின் அறைக்குள் நுழைந்திருக்கிறாள் வர்ஷினி. பலவித உணர்ச்சிகளின் பிடியில் சிக்கியிருந்தவள் அந்த அறையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“ஸ்வரூபனோட அனுப்பி வச்சுருக்கலாமே அம்மா.” என்றார் தமயந்தி மெல்லிய குரலில்.

 

“ஏன் உன் பொண்ணுக்கு நீ சுத்தி காமிக்க மாட்டியா?” என்று பெரியநாயகி வினவ, “என் பொண்ணுன்னு இப்போ தான் தெரிஞ்சுதா ம்மா?” என்று பதிலுக்கு கேள்வி கேட்ட தமயந்தியின் குரலிலிருந்த உணர்ச்சிகளை அந்த அறையிலிருந்த மற்ற இருவராலுமே சரிவர கணிக்க முடியவில்லை.

 

தமயந்தியிடம் இத்தகைய பதிலை எதிர்பார்க்காத பெரியநாயகியோ, “தமா, என்ன மா இப்படி சொல்ற?” என்று வினவ, வர்ஷினியும் கேள்வியாக அன்னையைப் பார்த்தாள்.

 

“பின்ன என்ன சொல்ல சொல்றீங்க ம்மா? என் பொண்ணு வந்ததுக்கு அப்பறம் ஆளாளுக்கு அவளைக் கொண்டாடுறீங்களே தவிர அவளை என்கிட்ட பேசவிட்டீங்களா? அந்த படுபாவியை நம்பி என் வாழ்க்கையை தொலைச்சது நானு! என் பொண்ணே போனதுக்கு அப்பறம் எதுக்கு இந்த வாழ்க்கைன்னு எத்தனை முறை நினைச்சு தவிச்சுருப்பேன்? இத்தனை நாள் நான் பட்ட காயங்களுக்கான மருந்தா வந்தவளை என்கிட்ட கூட அனுப்பாம, ப்ச், போங்க ம்மா.” என்று கண்ணீர் வடிய பேசியவரைப் பார்த்த மற்ற இரு பெண்களுக்குமே கண்ணீர் வந்தது.

 

வர்ஷினியோ மனதிற்குள், ‘ச்சே, இப்படி ஃபீல் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சுக்காம… நேத்தே வந்து பார்த்துருக்கணும் வர்ஷு. என்னால தான் அம்மா அழறாங்க.’ என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.

 

“தமா, இங்க பாரு, நேத்து மையூவைப் பார்த்து நீ பதட்டப்பட்டுட்டன்னு தான் உன்னை ஓய்வெடுக்க சொன்னோம் மா. இதோ இவ உன் பொண்ணு. உனக்கு அப்பறம் தான் எங்களுக்கு உரிமை. இதுக்கெல்லாம் போய் வருத்தப்பட்டுட்டு இருப்பியா? பாரு உன்னால அவளும் வருத்தப்படுறா.” என்று வர்ஷினியை தமயந்தியின் அருகே அமர வைத்தார்.

 

வர்ஷினியும், “சாரி ம்மா, நீங்க இப்படி ஃபீல் பண்ணுவீங்கன்னு நான் நினைக்கல. நேத்து நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தீங்க. உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு தான் பார்க்க வரல.” என்று கூற, அவளின் தலையைக் கோதி, “பரவால டா, நீ இப்போ அம்மான்னு கூப்பிட்டதே மனசு நிறைஞ்சுடுச்சு.” என்றார்.

 

“அங்க சாப்பிடும்போது அத்தனை பேரு இருந்தாலும், உன் பொண்ணு உன்னை தான தேடிட்டே இருந்தா.” என்றவாறே உள்ளே வந்தார் அகிலா. இங்கு நடந்த சம்பாஷனைகளை அவரும் கேட்டுக் கொண்டு தான் இருந்தார். பெண்ணுடன் வாழ்க்கையையும் சேர்த்தே தொலைத்துவிட்டு, மகிழ்ச்சி என்பதே இல்லாமல் கடனுக்கே என்று இருந்த தமயந்தியை அவரும் பார்த்துக் கொண்டு தானே இருந்தார்.

 

இதோ இத்தனை வருடங்களுக்கு பிறகு அவர் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியையும் அதற்கு காரணமானவளையும் ஆதுரமாக பார்த்தார் அகிலா.

 

“என்னை மன்னிச்சுடுங்க ம்மா. ஏதோ ஒரு வருத்தத்துல அப்படி பேசிட்டேன்.” என்று தமயந்தி பெரியநாயகியிடம் கூற, அவரோ அதையெல்லாம் கண்டுகொள்ளும் மனநிலையிலேயே இல்லை. மகளின் மகிழ்ச்சியைக் கண்டு தானும் மகிழ்ந்தார் அந்த பெரியவர்.

 

“அத்த, நீங்க எப்படி திட்டினாலும் பாட்டி இன்னைக்கு ஒன்னும் சொல்ல மாட்டாங்க.” என்றவாறே அறைக்குள் வந்தாள் ரூபா.

 

அவளைக் கண்டு லேசாக சிரித்த தமயந்தி, “இப்போ மசக்கை பரவலையா?” என்று வினவினார்.

 

அவருக்கு பதிலளித்தவள், “உங்க பொண்ணு வந்ததுக்கு அப்பறம் தான் நாங்க கண்ணுக்கே தெரியுறோமா அத்த?” என்று வினவ, அவரும் வாஞ்சையாக மகளைப் பார்த்து, “உண்மை தான் ரூபா. இத்தனை நாள் நான் நானாவே இல்ல. இப்போ என் பொண்ணு வந்ததுக்கு அப்பறம் தான் இத்தனை நாள் நான் வாழ்ந்துட்டு இருந்த உப்புசப்பில்லாத வாழ்க்கைக்கு பதிலா அவளுக்காக நான் வாழனும்னு மனசு துடிக்குது.” என்றார்.

 

வெகு நாட்களுக்குப் பின்னர் அந்த வீட்டில் மகளிர் கூட்டணி ஒன்று கூடியிருந்தது.

 

*****

 

“எதுக்கு டா இவ்ளோ சீக்கிரமா இங்க கூட்டிட்டு வந்த?” என்று அந்த பழைய குடவுனிற்குள் நுழைந்தவாறே அகில் வினவ, ஸ்வரூபனோ அவனிற்கு பதிலளிக்காமல் உள்ளே செல்வதிலேயே முனைப்புடன் இருந்தான்.

 

‘அதான, இவன்கிட்ட பதிலை வாங்கிட முடியுமா?’ என்று நொந்தவாறே பின்தொடர்ந்தான் அகில்.

 

பகல் நேரத்திலும் இருட்டாக இருந்த இடத்தை விளக்கைக் கொண்டு வெளிச்சமாக்கினான் ஸ்வரூபன். அங்கு உடல் முழுவதும் இரத்தக்கறையுடன் மயங்கியிருந்தனர் நால்வர்.

 

“யாரு டா இவனுங்க? உன் காலேஜ் பொண்ணுங்க கிட்ட வம்பு பண்ணி மாட்டிக்கிட்டானுங்களா? வழக்கமாக வார்ன் பண்ணி விட்டுடுவ. இப்போ என்ன அடிதடி எல்லாம்?” என்று பேசிக் கொண்டே சென்றவனை தடுத்து நிறுத்திய ஸ்வரூபன், “அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் எதுல  ஒற்றுமை இருக்கோ, வாய் பேசுறதுல மட்டும் சரியா ஒத்துப்போறீங்க.” என்றவாறே ஒரு புகைப்படத்தை நீட்டினான்.

 

“இப்போ எதுக்கு டா அவளை ஞாபகப்படுத்துற?” என்று சலித்தவாறே அவன் நீட்டிய புகைப்படத்தை வாங்கிப் பார்த்தான்.

 

“இவனுங்க எதுக்கு வர்ஷினியோட போட்டோவை வச்சுருக்கானுங்க?” என்று சிந்தித்தவன், மீண்டும் அந்த நால்வரின் முகங்களை உற்று நோக்கி, “இவனுங்க அந்த பிரதீப்போட ஆளுங்க தான?” என்று வினவ, “ம்ம்ம், வர்ஷினியை தேடி இங்க வந்துருக்கானுங்க.” என்றான் ஸ்வரூபன் இறுகிய குரலில்.

 

“அதுக்குள்ள தெரிஞ்சுடுச்சா? அந்த மலமாடு பிரதீப் அப்போவே அவளை ஒரு மாதிரி தான் பார்ப்பான். ச்சை, அவன் வயசு என்ன இவ வயசு என்ன? என் கைல மட்டும் சிக்கட்டும், இத்தனை நாள் என்னைத் திட்டுனதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு பழி வாங்குறேன்.” என்று அகிலும் சற்று கோபமாகவே பேசினான்.

 

“உன் கோபத்தையெல்லாம் இப்போதைக்கு கண்ட்ரோல் பண்ணி வச்சுக்கோ. அவனே இங்க வருவான்.” என்றான் ஸ்வரூபன் மர்மமாக சிரித்தபடி.

 

அவனின் சிரிப்பைக் கண்ட அகிலோ பதறியபடி, “டேய் என்ன டா ஒரு மாதிரி சிரிக்கிற? என்னத்த பண்ணி வச்சிருக்கன்னு சொல்லிடு டா. சும்மாவே அங்கொருத்தான் உசுர வாங்குறான்.’ என்று புலம்பினான்.

 

ஸ்வரூபனோ, “சர்ப்ரைஸ்!” என்று கண்ணடித்து கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

 

“இதுவாடா சர்ப்ரைஸு? குடும்பமே எனக்கு ஆப்படிக்காம விடாது போல. இந்த கேஸ் முடிஞ்சதும் மெடிக்கல் லீவ் போட்டுட்டு எங்கேயாவது ஃபாரின்னுக்கு போயிடனும்.” என்று வாய்விட்டு புலம்பியபடி அவனும் வெளியே சென்றான்.

 

*****

 

மதிய உணவு முடிந்ததும் அகிலைப் பிடித்து கேள்விகளைக் கேட்கலாம் என்று நினைத்த வர்ஷினிக்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தவன் மாலை நேரத்தில் அவளிடம் அகப்பட்டான்.

 

தன் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே அந்த தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள் வர்ஷினி. அவளால் இன்னமும் நடப்பதையெல்லாம் நம்பிவிட முடியவில்லை.

 

சிறுவயதிலிருந்தே பாசத்திற்காக ஏங்குபவளை திடீரென்று யாரோ ஒருவன் அவளைக் கடத்திச் சென்று பாசம் நிறைந்த கூட்டில் இணைத்துவிட்டு, ‘இது தான் உன் குடும்பம்’ என்று கூறினால், யாரால் தான் நம்ப முடியும்?

 

அவளின் ஒரே வேண்டுதல் எல்லாம் இந்த குடும்பமாவது தனக்கு நிலைக்க வேண்டும் என்பது தான். தன்னை உரிமை கொண்டாடும் அன்னை, தன் வரவை கொண்டாடிய சொந்தங்கள், இதுவே போதும் என்று நினைத்தாள் போலும், எங்கு தந்தை பற்றி வினவினால் அது தன் தாயை பாதித்துவிடுமோ என்று அஞ்சியவளாக,  அவள் அதைப் பற்றி வாயே திறந்து கேட்கவில்லை.

 

இவற்றை எண்ணியபடியே நடந்து கொண்டிருந்தவள், அங்கு வேகவேகமாக வந்த அகிலை கண்டுவிட்டாள்.

 

“என்ன போலீஸ்கார், காலைலயிருந்து கண்ணாமூச்சி ஆடி டையர்ட்டாகிட்டிங்க போல!” என்றாள் வெகு கிண்டலாக.

 

‘அடப்பாவி. ‘ரூபா தோட்டத்துல இருக்கா’ன்னு நீ என்னை அனுப்புனப்போவே சந்தேகப்பட்டிருக்கணும் ஸ்வரூபா.’ என்று மனதிற்குள் புலம்பினான் அகில்.

 

“என்ன சார் டெரர் போலீஸ் நீங்களே இப்படி ஷாக்காகி நின்னுட்டீங்க?” என்று வர்ஷினி வினவியதும், “என்ன தான் டெரரா இருந்தாலும், பேய்யை பார்த்தா ஷாக் தான் ஆவாங்க மா.” என்று தவறுதலாக வெளியே கூறிவிட்டான் அகில்.

 

“என்னாது பேய்யா?” என்று வர்ஷினியின் கோபக் குரலில் தான் சுயத்தை அடைந்தவன் தான் கூறியதை ‘ரீவைண்ட்’ செய்து பார்த்து அதிர்ச்சியுடன் அவளை நோக்க, சற்று முன் அவன் கூறியதற்கு பக்காவாக பொருந்தியதைப் போல நின்று கொண்டிருந்தாள் வர்ஷினி.

 

‘சரியா தான சொல்லியிருக்கோம்!’ என்று இம்முறை சரியாக மைண்ட்வாய்ஸில் மட்டுமே பேசினான்.

 

வர்ஷினியோ கோபமாக, “நீங்களும் உங்க கூட்டாளியும் என்னென்ன ஃப்ராடு வேலை பண்ணியிருக்கீங்களோ எல்லாத்தையும் வரிசையா சொல்லுங்க.” என்றாள்.

 

“போலீஸ் கிட்டயே என்குயரி பண்றாளே.” என்று அகில் முணுமுணுக்க, “போலீஸ் பண்ற வேலையா நீங்க பண்ணியிருக்கீங்க. இதுல உங்க மச்சான் ப்ரொஃபெசர்னு ஊரை ஏமாத்திட்டு இருக்காரு” என்று அங்கு இல்லாத ஸ்வரூபனையும் விட்டு வைக்கவில்லை அவள்.

 

‘அடேய் என்னை மட்டும் தனியா மாட்ட வச்சுட்டு நீ எஸ்கேப் ஆகிட்டியா. பேருக்கு தான் ‘ஹீரோ’. இங்க எல்லா அடியையும் சோலோவா நான் வாங்கிட்டு இருக்கேன்.’ என்று மீண்டும் புலம்ப ஆரம்பிக்க, “என்ன திரும்பவும் மைண்ட் வாய்ஸா? கேட்ட கேள்விக்கு பதிலைக் காணோம். உங்க கூட சுத்திட்டு இருந்தாரே அந்த கஞ்சி சட்டை எங்க? அவரும் உங்க கேங் தானா?” என்று அடுத்தடுத்து கேள்விகளால் அவனை வருத்தெடுத்தாள்.

 

அதைத் தாங்க முடியாமல், “போதும் நிறுத்து. உனக்கென்ன பதில் தான வேணும்? சொல்லிடுறேன்.” என்றான் அகில்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்