
மாயோன் 19
அந்த இடத்தில் நந்தினியை கண்ட வர்ஷாவின் முகம் நொடியில் அதிர்ந்து, பின் இயல்பான புன்னகை முகம் திரும்பியது.
” டாக்டர் நீங்களா? ” என்றபடி வர்ஷா நந்தினியின் அருகில் வந்தாள்.. அப்போது தான் நந்தினிக்கு அவளை அடையாளம் தெரிந்தது.
” வர்ஷா தானே நீ ” என்று பூரிப்புடன் கேட்டாள் நந்தினி
” ஆமா டாக்டர், என்னை ஞாபகம் இருக்கா உங்களுக்கு ? ஆமா நீங்க எங்க இங்க? ”
” என்ன கேள்வி இது? உன்னை எப்படி மறக்க முடியும்? இந்த ஊர்ல தான் என் பேமிலியோட பல வருஷமா இருக்கேன்.. இது எங்க மாமா ஊர்.. அப்புறம் நாங்களும் அப்படியே இங்கயே இருந்துட்டோம்.. நான் படிச்சது ஒர்க் பண்ணுறது எல்லாம் இங்க தான்..” என்று கூறிய நந்தினி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.. அவளை தொடர்ந்து வர்ஷாவும் அருகில் அமர்ந்தாள்.
இருவரையும் புரியாமல் பார்த்தபடி அமர்ந்திருந்தனர் அதியனும், சரத்தும். அதன் பிறகு தான் அவர்களை கவனித்தாள் நந்தினி..
” ஹான் வர்ஷா, இவங்க என் பிரெண்ட்ஸ்.. இவன் அதியன், இவன் சரத்.. அதி இவங்க வர்ஷா..” இருவரிடமும் அறிமுக படுத்தி வைத்தாள்.
” ஹெலோ ” என்று இருவரிடமும் கூறினாள் வர்ஷா
அதியனோ அதற்கு ஒரு சிறு புன்னகையை மட்டும் பதிலாக கொடுக்க… சரத்தோ, அவளை நோக்கி கரத்தை நீட்டினான், அதனை கண்ட வர்ஷாவும் அவனுடன் கை குலுக்கி கொண்டாள்…
” தமிழா நீங்க ? ” என்று வர்ஷாவிடம் சரத் கேட்க.
” ஆமா.. ஆனால் ஹிந்தியும் தெரியும் ”
” நந்தினி உனக்கு எப்படி இவங்களை தெரியும் ? ” என்று சரத் கேட்க. அவனை முறைத்து பார்த்த நந்தினி அதியனை பார்த்து பேச தொடங்கினாள்…
கீர்த்தியின் விஷயத்திலிருந்து, நந்தினிக்கும், சரத்துக்கும் இடையே ஒரு பனிபோர் நிகழ்ந்து கொண்டு தான் இருந்தது.
” ரெண்டு மாசத்துக்கு முன்னாடி மெடிக்கல் கேம்ப் விஷயமா தமிழ்நாட்டுக்கு போன போது, வழியில் ஒரு பெரிய ஆக்ஸிடென்ட் அப்போ இந்த பொண்ணு தான் என்னை காப்பாத்தி ஹாஸ்பிட்டல்ல சேர்த்து, மூணு நாள் என் கூடவே இருந்து பார்த்துக்கிட்டாள்.. ரொம்ப நல்ல பொண்ணு ” என்ற நந்தினி மென்புன்னகையுடன் வர்ஷாவை பார்க்க… அதியனது கண்களும் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தது.
” அப்புறம் வர்ஷா இங்க என்ன பண்ணுற ? ”
” அங்க படிப்பு முடிஞ்சுது… அதனால இனி இங்க தான் ”
” அப்போ ஜாப் எதுவும் ட்ரை பண்ணுறியா ? இல்லை மேற்கொண்டு படிக்க போறியா? ”
” படிக்க விருப்பம் இல்லை டாக்டர் ஜாப் வேணும்னா ட்ரை பண்ணலாம் ”
” நந்தினின்னு சொல்லு, இல்லை அக்கா சொல்லு, டாக்டர் எல்லாம் வேண்டாம் ”
” சரி நந்தினி க்கா ”
” ம்ம்ம்.. நீ ஜெமிஸ்ட்ரி ஸ்டுடெண்ட் தானே? அன்னைக்கு சொன்ன ஞாபகம் இருக்கு, நீ ஏன் மாஸ்டர் டிகிரி படிக்க கூடாது? ”
“ம்ம்ம்.. ஆனால் எனக்கு இதுக்கு மேல படிக்க ஆர்வம் இல்லைக்கா. லேப் ஆசிஸ்டன்ட் ஆகணும்னு படிக்கும் போது இருந்தே ஆசை, ஏன் என் கனவுன்னு கூட சொல்லலாம்.. ” என்று வர்ஷா கூற அதியனுக்கு சிரிப்பு வந்து விட்டது.
” ஏன் சிரிக்கிறீங்க ? ” என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு வர்ஷா கேட்க
” அய்யோ தப்பா எடுத்துக்காதீங்க ? எல்லாருக்கும் டாக்டர் ஆகணும், இன்ஜினீர் ஆகணும்னு தான் ஆசை இருக்கும்.. இதுவரை லேப் அசிஸ்டன்ட் ஆகணும்னு யாரு சொல்லியும் நான் கேட்டது இல்லை அது தான் ”
” அது ஏன்னா? நான் ப்ளஸ் டூ படிக்கும் போது எங்க லேப் ஆசிஸ்டண்ட் எப்போவும் சும்மாவே இருப்பாங்க.. எந்த வேலையும் செய்ய மாட்டாங்க.. சோ எனக்கு அப்பவே அவங்களை மாதிரி ஒரு லேப் அசிஸ்டெண்ட் ஆகணும் ஆசை வந்துட்டு. அவளோ தான் ” என்று சிரிக்காமல் கூறிய வர்ஷாவின் வாக்குமூலம் அங்கிருந்த அனைவரது இதழ்களிலும் புன்னகையை வர செய்தது.
” அப்போ பேசாமல் எங்க லேப்ல ஜாயின் பண்ணிடுறியா? அங்க உனக்கு எந்த வேலையும் இருக்காது.. கடைசிவரை கிளாஸ் வாஷ் பண்ணிட்டே காலத்தை போக்கிடலாம் ” என்று சரத் சிரித்தபடியே கேட்க..
” ஒஹ் உங்களுக்கு லேப் எல்லாம் இருக்கா சூப்பர்.. ஆனால் வேலை எதுவும் கஷ்டமா இருக்காது தானே ? ” என்றவளது கேள்வியில் அதியனுக்கு சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் போனது, இருந்தும் சமாளித்து கொண்டான்.
” கண்டிப்பா கஷ்டமா இருக்காது ” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் கூறினாள் நந்தினி
” நானும் அடிக்கடி அங்க வருவேன் வர்ஷா, உனக்கு எந்த கவலையும் வேண்டாம் ” என்று சரத் கூற… அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தான் அதியன் ‘ பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா’ அவனது பார்வையை உணர்ந்த சரத் ” நந்தினியும் தான் வருவாள் ” என்று கூறி முடித்தான்.
” அப்போ நந்தினி அக்கா நீங்களும் அங்க தான் வேலை பாக்குறீங்களா ? அப்போ டாக்டர் வேலை ”
” இது பார்ட் டைம் , என் விருப்பத்துக்காக.. அது உனக்கு புரியாது விடு நாளைக்கே உன் சர்ட்டிபிகேட் எல்லாம் எடுத்துட்டு நான் சொல்லுற அட்ரஸ்க்கு வா.. ஆமா இப்போ நீ எங்கே தங்கி இருக்க?”
” எங்க அங்கிள் வீட்டுல தான் ”
” ஒஹ் சரி.. உன் நம்பர் என்கிட்ட இருக்கு நான் கால் பண்ணி லொகேஷன் சொல்லுறேன் ” என்ற நந்தினியுடனும், சரத், மற்றும் அதியனுடனும் சிறிது நேரம் பேசிவிட்டு எழுந்து சென்றாள் வர்ஷா.
வர்ஷாவை சந்தித்ததில் இருந்தே அதியனது மனம் நிலையில்லாமல் அலைபாய தொடங்கியது… ஏன்? எதற்கு ? என்று காரணம் புரியாமலேயே அவளது அருகாமைக்கு மனம் ஏங்க தொடங்கியது…
அடுத்த சில நாட்களில் வர்ஷாவுக்கு தேவனது ஆய்வகத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.
தனக்கு தேவனது ஆய்வகத்தில் வேலை கிடைத்த தகவலை வர்ஷா, விக்ரமனிடம் கூறினாள்..
“இங்கு இருக்கும் என் நண்பர்கள் மூலம் தான் இந்த வேலை எனக்கு கிடைத்தது விக்ரமா”
” அப்படி யார் உனக்கு இங்க புது பிரெண்ட்ஸ்? ” என்ற விக்ரமன் கேள்வியாக அவளை பார்க்க..
” அவங்களை எல்லாம் உனக்கு தெரியாது விக்ரமா.. ஆனால் ரொம்ப நல்லவங்க, அதை விடு.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்த வேலைக்கு எதுவும் தடை சொல்லாத ப்ளீஸ்..” என்று கூறுபவளிடம்,மேற்கொண்டு கேள்வி கேட்க முடியாமல் போனது.
அவளது சந்தோஷத்தை கண்ட விக்ரமனுக்கு ‘இது வேண்டாம்’ என்று கூறவும் மனம் வர வில்லை.. மேலும் தேவன் தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனையை என்றும் தொழில் விஷயத்தில் காட்ட மாட்டான்.. என்று முழுமையாக நம்பினான் விக்ரமன். அதனால் அமைதியாக அவளுக்கு வாழ்த்து கூறி விட்டு கடந்து விட்டான். அதற்கு இன்னுமொரு காரணம் அவளது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட விக்ரமன் விரும்பவில்லை.
ஆனால் இந்த விஷயத்தை கேட்ட அர்ஜுனுக்கு தான் மனம் அடித்து கொண்டே இருந்தது.. தேவனை பற்றி விக்ரமனை விட அதிகம் அறிந்தவர் அவர் தானே.. பின்னர் பயம் இல்லாமல் இருக்குமா?
தேவனை பற்றி அர்ஜுன் விக்ரமனிடம் எதுவும் பேசிக்கொண்டது இல்லை அதனால் விக்ரமனுக்கு தேவனை பற்றி முழுமையாக எதுவும் தெறியவில்லை..
விக்ரமன் எப்போதும் ஒருவரிடம் இருக்கும் நல்ல குணத்தை மட்டுமே பார்ப்பான்… அதனால் தேவனது இன்னொரு குணம் அவனுக்கு தெரிவில்லை..
ஆனால் அர்ஜுன் அப்படி இல்லை , அவர் முதலில் ஒருவரிடம் பார்ப்பது அவர்களது தீய குணத்தை மட்டும் தான்.. அதை வைத்து தான் அந்த நபரிடம் பழகுவதை பற்றி யோசிப்பார்.
” உனக்கு லேப்ல தான் ஒர்க் பண்ணனும் அப்படின்னு ஆசை இருந்தால், பேசாமல் விக்ரமனோட லேப்ல ஒர்க் பண்ணலாம் தானடா ” என்று அர்ஜுன் வர்ஷாவிடம் கேட்டார்.
” இல்லை ப்பா நம்ம இடத்தில ஒர்க் பண்ணா? இது நம்ம இடம்ன்னு ஒரு அசட்டு தனம் வந்துரும்… கொஞ்சம் நாள் வேற இடத்தில் ஒர்க் பண்ணி பார்த்தா தானே ப்பா எனக்கும் வெளி உலகம் தெரியும், ப்ளீஸ் ” என்றவளது தலையை ஆதராவாக வருடி விட்டு சென்றார் அர்ஜுன்.
நந்தினிக்கு, வர்ஷாவை பற்றி தெரியும் என்ற எண்ணத்தில் சரத், தேவனிடம் ‘வர்ஷாவை பற்றி எனக்கு நன்கு தெரியும் எந்த பிரச்சனையும் இல்லை’ என்று வாக்கு கொடுக்க.. தேவனும் அதற்கு மேல் வர்ஷாவிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை… அவளை அங்கு பணிக்கு அமர்த்தி கொண்டான்..
வர்ஷாவுக்கு அங்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை, எப்போதும் கோனிக்கல் ப்ளாஸ்க் மற்றும் டெஸ்ட் ட்யூப் வாஷ் பண்ணுவது… தேவன் கொடுக்கும் சிறு சிறு வேலைகளை செய்வது இது மட்டும் தான். அவ்வப்போது நந்தினியும் அங்கு வருவதால் அந்த வேலை அவளுக்கு மிகவும் பிடித்து போனது.. இதுவரை ஆய்வகத்தின் உள்ளே வராதா அதியன் கூட வர்ஷா வந்த பிறகு அங்கு வர தொடங்கினான்..
அதியனது வரவை ஆயிரம் கேள்விகளுடன் தேவன் பார்த்தாலும், அதை பற்றி அவனிடம் எதுவும் கேட்காமல் கடந்து சென்று விடுவார்.
வர்ஷா வேலைக்கு வந்து இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது… முதல் மாதம் வந்த வருமானத்தை அப்படியே ஜோதியிடம் சென்று கொடுத்தாள். அவரும் பெருமையுடன் அதனை சாமி படத்திற்கு முன்னே வைத்தார்.
இரண்டாம் மாதம் வாங்கிய சம்பளத்தை கொண்டு நந்தினி, சரத், மற்றும் அதியன் என அனைவரையும் வெளியே அழைத்து சென்றாள்.
அதன் பிறகு அனைவரும் வீட்டிற்கு கிளம்பும் நேரம் அதியனை அழைத்த வர்ஷா. அவனுக்கு மட்டும் ஒரு புத்தகத்தை பரிசளித்தாள்..
அவன் கவிதை எழுதுவான்,என்று இந்நாள் வரை அவர்கள் பேசிக்கொண்டதை வைத்து அறிந்து கொண்டவள் அவனுக்கு இந்த புத்தகத்தை பரிசளித்தாள்..
அது ஏன்? அவனுக்கு மட்டும்! என்ற கேள்வி அங்கிருந்த அனைவரது மனதிலும் இருந்தது…
ஆனால் அவர்கள் யோசிக்கும் எண்ணத்தில் எல்லாம் வர்ஷா, அதுயனுக்கு அதனை கொடுக்கவில்லை..
அவன் கவிதை எழுதுவான்! என்று அறிந்த அன்றே அவனுக்கு ஏதாவது ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்தாள்…
அதனால் புத்தகநிலையத்தில் அந்த புத்தகத்தை பார்த்ததும் அவளுக்கு அதியனது ஞாபகம் வந்தது உடனே அதனை வாங்கி வந்து அவனிடம் கொடுத்து விட்டாள்.
அதியனுக்கோ மனதில் ஆயிரம் எண்ணங்கள் உதிக்க.. இதழில் மென் புன்னகையுடன் அந்த புத்தகத்தை பெற்றுக்கொண்டான்.
பொதுவாக அவர்கள் யாரும் தங்களது பெர்சனல் விஷயங்களை பற்றி பேசிக்கொள்வது இல்லை அதனால் விக்ரமனை பற்றி அதியனுக்கோ, அதியனது குடும்பத்தை பற்றி வர்ஷாவுக்கு தெரியவில்லை. நந்தினிக்கும் கூட அது தெரியாது.. யாரும் அவராவர்களது சொந்தங்களை பற்றி கூறவோ? அல்லது அறிந்து கொள்ளவோ முயற்சிக்க இல்லை.. அதை அறிய ஆர்வம் காட்டவில்லை என்பது தான் உண்மை.
இப்படியே நாட்கள் கடந்தன…
அதியன், வர்ஷாவை பார்க்கும் பார்வையிலும், பேசும் விதத்திலும் ஏற்பட்ட மாறுபாட்டை முதலில் கவனித்தவள் நந்தினி தான். ஒருநாள் இதை பற்றி நேரடியாகவே அவனிடம் கேட்டாள்.
” என்னடா வர வர உன் நடவடிக்கையில் அதிகம் மாற்றம் தெரியுது, என்ன விஷயம் ? ”
“என்ன சொல்லுற நந்த் எனக்கு ஒன்னும் புரியல ”
” சரி நேரவே கேக்குறேன், உனக்கு வர்ஷா மேல ஏதாவது பீலிங், அதாவது என்ன கேட்க வரேன்னா? அவளை உனக்கு பிடிச்சி இருக்கா? ” என்று சட்டென கேட்க . மௌனமாக நின்ற அதியன், சிறிது நேரத்திற்கு பிறகு
” அவளை பிடிச்சு இருந்தால் கூட பரவாயில்லைடி.. அவளை பார்த்ததில் இருந்து அவள் கூட வாழனுங்குற ஆசை வருது, அது தான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு . ”
” இதுல பயப்பட என்னடா இருக்கு? முதல் முறையா உருப்படியான ஒரு உணர்வு உனக்குள்ள வந்து இருக்கு.. நீ இப்போ எல்லாம் சரத் கூட சேர்ந்து பொண்ணுங்க பின்னாடி சுத்தாமல் இருக்கும் போதே, எனக்கு சந்தேகம் வந்தது. திருந்திட்டான் போல அப்படின்னு? ஒரு பொண்ணு வந்தா தான் நல்லவனா மறுவீங்க போல? வர்ஷா ரொம்ப நல்ல பொண்ணுடா, கண்டிப்பா உனக்கு ஒரு நல்ல லைப் பாட்னரா இருப்பாள். வாழ்த்துக்கள் அதி.. அப்போ நம்ம செட்ல முதல் கல்யாணம், உனக்கு தான் எஞ்சாய் ” என்று புன்னகை முகமாக நந்தினி கூறினாள்.
” நீ வேற நந்தினி என்னை மாதிரி ஒருத்தனை அவளுக்கு பிடிக்குமா என்ன? ஆனால் அவள் கூட இருக்கும் போது எனக்கு எல்லாமே கிடைச்ச மாதிரி இருக்கு.. என் விக்ரமன் என் கூடவே இருக்க மாதிரி இருக்கு. கடைசிவரை இப்படியே அவள் என் கூட இருந்தா மட்டும் போதும்ன்னு தோணுது ” என்றவனது தோளில் தட்டிய நந்தினி
” உன்னோட உண்மையான அன்பு அவளுக்கு புரியும் போது. அவள் எங்க போனாலும் சரி உன்கிட்ட வந்து சேருவாள்.. இந்த நொடியை நிம்மதியா அனுபவி, எல்லாம் நல்லபடியா நடக்கும்… அப்புறம் உன்னை பிடிக்காமல் தான் உனக்கு மட்டும் புக் வாங்கி கொடுத்தாளா? நம்ம நாலு பேரும் எப்போ வெளியே போனாலும் அவள் உன்கூட மட்டும் தான் இருப்பாள். எனக்கு என்னமோ அவளுக்கும் உன்னை பிடிக்கும்ன்னு தான் நினைக்கிறேன், நீ பேசி பாரு.. எல்லாம் சரியா நடக்கும்” என்றவளை பார்த்து மென்மையாக புன்னகைத்தான் அதியன்.
வர்ஷாவின் பிறந்தநாள் விழாவை ஆடம்பரமாக ஏற்பாடு செய்தனர் விக்ரமனும், விஜய்யும்…
விஜய்க்கு வர்ஷாவின் மீது சிறு ஈடுபாடு இருந்தது… அது காதல் இல்லை! ஒரு ஆர்வம் என்று கூறலாம்.
அனைவரிடமும் சகஜமாக பேசி பழக கூடியவள் தான் வர்ஷா… அவள் சந்தித்து வளர்ந்த எல்லாரும் விக்ரமன், பரதன், நிதின் போன்ற ஆண்கள் தான்.. அதனால் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் நட்புடன் பழகுவாள்.
அப்படித்தான் விஜயுடனும் எளிதில் நட்பாகினாள்… அவளுடன் கழிக்கும் பொழுதுகள் விஜய்க்கு ஒரு புது வித சந்தோஷத்தை கொடுத்தது..
அதனால் தானகவே முன் வந்து விக்ரமனிடம், வர்ஷாவை பெண் கேட்டான் விஜய்.
விக்ரமனோ ” வர்ஷா கிட்ட பேசிட்டு நான் உனக்கு முடிவு சொல்லுறேன் ” என்று கூறியவன், நேராக அர்ஜுனிடம் வந்து இதனை கூறினான்.
” அவன் ரொம்ப நல்ல பையன் தான் எந்த வித கெட்ட பழக்கமும் இல்லை… வர்ஷாவுக்கு ஓகேன்னா எங்களுக்கும் இதுல எந்த வித மாற்று கருத்தும் இல்லை அபி நீ வர்ஷா கிட்ட பேசு ” என்றார் அர்ஜுன்.
அர்ஜுன் மற்றும் ஜோதியை முன்னால் வைத்து கொண்டு வர்ஷாவிடம் “விஜயை திருமணம் செய்ய சம்மதமா ?” என்று கேட்டான் விக்ரமன்.
” ரொம்ப நல்ல பையன்டா, எங்க எல்லாருக்கும் பிடிச்சு இருக்கு.. நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்க கூடவே இருக்கலாம், நல்ல முடிவா சொல்லுடா ” என்று ஜோதி தன் விருப்பத்தை வார்த்தையாக்கி அவளிடம் கேட்க…
ஜோதியின் முகத்தில் வெளிப்பட்ட மகிழ்ச்சியை கண்ட வர்ஷாவுக்கு விஜயிக்கு மறுப்பு கூற மனம் வர வில்லை…
அவளுக்கு, விஜயின் மீது தனிப்பட்ட எந்த விருப்பமும் இல்லை… அதே போல அவன் மீது வெறுப்பும் இல்லை. அதனால் ஜோதியின் விருப்பத்துக்கு மதிப்பளித்து பதில் கூறினாள்.
” உங்க விருப்பம் எதுவோ! அதுக்கு என் முழு சம்மதம் ம்மா ” என்று கூறியவள் நேராக தன் அறைநோக்கி செல்ல … அப்போது மாடி படியில் இருந்து கீழே இறங்கி வந்த விஜயின் பார்வையும், வர்ஷாவின் பார்வையும் ஒருகணம் தீண்டி சென்றது..
வர்ஷா, திருமணத்திற்கு சம்மந்தம் கூறிய அடுத்த நொடி மொத்த குடும்பமும் சந்தோஷத்தில் திளைத்தது… இந்த தகவல் போலீஸ் ட்ரைனிங்கில் இருக்கும் பரதன் செவிகளையும் அடைய,அவனுக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.
உடனே இந்த தகவலை யாரிடமாவது கூற வேண்டும், என்று நினைத்த பரதனுக்கு, நிதினின் ஞாபகம் வந்தது. உடனே அவனுக்கு அழைத்தான்.
பாரில் தனது நண்பனுடன் மது அருந்தியபடி அமர்ந்திருந்த நிதின் அலைபேசியின் திரையில் பரதனது எண்ணை பார்த்தவன், யோசனையுடன் அழைப்பை ஏற்றான்..
” சொல்லுங்க பரதன் சார் என்ன இவ்ளோ நாள் கழித்து என் நியோகம் உங்களுக்கு வந்து இருக்கு ”
” டேய் போன மாசம் தானே உனக்கு கால் பண்ணினேன், அதுக்குள்ள ரொம்ப தான் பேசுவ? ”
” ரைட்டு விடு இப்போ எதுக்கு போன் பண்ண ? ”
” ஒரு சந்தோஷமான விஷயம் உன்கிட்ட சொல்லணும் ”
” சரி சொல்லு ”
” வர்ஷாவுக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சுடா, அண்ணாவோட பிரெண்ட் தான் மாப்பிள்ளை.. அசிஸ்டன் கமிஷ்னரா இருக்காரு. வர்ஷா கூட கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாள், இன்விடேசன் அடிக்கிற அளவுக்கு பேச்சு வார்த்தை போயிடுச்சு. ” என்று பரதன் கூற.. அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த நிதின் சத்யன்
” ம்ம் சந்தோஷம்.. வர்ஷாவுக்கு வாழ்த்துக்கள் சொன்னேன்னு சொல்லிடு ” என்று கூறி அழைப்பை துண்டித்தான் நிதின்.
” என்னடா உன் லவ்வர்க்கு மேரேஜ் பிக்ஸ் ஆகி இருக்கு போல ? ” என்று நிதினின் அருகில் இருந்த அவன் நண்பன் கேட்க..
” ம்ம்ம் ” என்று பதில் கொடுத்தான் நிதின்
” உனக்கு கோவம் வரலையாடா? ”
” எனக்கு ஏன் கோவம் வரணும்.. அப்படியே கோவம் வரணும்னா இந்த கேள்வியை கேட்ட உன் மேல தான் எனக்கு கோவம் வரணும் ”
” அது சரி.. உன்னை விரும்பாமல் அவள் வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க போறாள்.. அப்ரோம் உனக்கு கோவம் வர வேண்டாமா? ” என்று அவன் கேட்க.. சத்தமாக சிரித்தான் நிதின்
” எதுக்குடா இப்போ சிரிக்குற? ”
” ஒன்னும் இல்லை, ஆமா காதல்னா நீங்க எல்லாம் என்ன நினைக்குறீங்க ? ”
” புரியலடா ”
” எனக்கு அவளை பிடிச்சது ஆனால் அவளுக்கு நான் பொறுத்தமானவன் இல்ல, சோ நானே விலகிட்டேன், இப்போ அவளுக்கு பிடிச்ச ஒருத்தரோட அவளுக்கு கல்யாணம் ஆக போகுது, இதுக்கு போய் அவள் மேல நான் ஏன் கோவப்படனும் ”
” அப்புறம் ஏன்டா இப்படி குடிக்கிற? ”
” என்னமோ நான் புதுசா குடிக்கிற மாதிரி பேசுற ? மது, மாது இந்த எல்லாம் கெட்ட பழக்கமும் அப்போ இருந்து இப்போ வரை எனக்கு இருக்கு.. இதுக்கும் அந்த காதலுக்கும் என்ன சம்மந்தம்.. உடலோட தேவைகள் வேற.. மனசோட தேவைகள் வேற.. என்னைக்கும் ரெண்டையும் ஒண்ணா போட்டு குழப்பிக்க கூடாது ”
” ஐ ஹுட் நாட் அண்டர்ஸ்டேன்ட் ” ( i could not understand )
” ம்ம்ம்.. ஆனால் அது ஏன் தப்பு இல்லயே… ”
” அப்போ இப்போ நீ அந்த பொண்ணை விரும்பல அப்படி தானே ”
” யார் சொன்னா? இப்போவும் எனக்கும் அவளை பிடிக்கும் , அது ஒரு தூய்மையான அன்பு , இப்போவும் அவள் மேல லவ் இருக்கு, ஆனால் அதுல துளி கூட லஸ்ட் இல்லை… எந்த வித எதிர்பார்ப்பும் எனக்கு அவள் கிட்ட இருந்ததே கிடையாது.. எனக்கு அவள் நல்லா இருக்கணும், அவ்ளோ தான். இப்போவும் அவளுக்கு ஒரு பிரச்சனைனா நான் முன்னால போய் நிற்ப்பேன்… அவளுக்கு துணையா இருப்பேன், அவ்ளோ ஏன் ? தேவைப்பட்டால் என் உயிரை கூட கொடுப்பேன், அதுக்கு அவள் என் காதலியாவோ இல்லை எனக்கு மனைவியாவோ, இல்லை என் குழந்தைகளுக்கு அம்மாவாவோ இருக்கணும்னு அவசியம் இல்லை , எனக்கு அவளை பிடிக்கும் அந்த ஒரு காரணம் போதும். அவளுக்கு பிடிக்கலனாலும் என்னோட அன்பை நான் அவளுக்கு கொடுத்துட்டு தான் இருப்பேன், அவளுக்கு என்னை பிடிக்கல அப்படிங்குறதால என் அன்பு பொய் ஆகிடாதுடா.. நிச்சயம் அவள் கல்யாணத்து நான் போவேன்.. நூறு வருஷம் சந்தோஷமா இருன்னு சொல்லி வாழ்த்திட்டு வருவேன் ” என்று கூறி புன்னகைத்த சத்தியனது விழியோரம் ஒரு துளி கண்ணீர் வழிந்தது… அதற்கு காரணம் என்னவோ?
” ம்ம்ம் ” என்று பெரு மூச்சு விட்ட அவனது நண்பன் ..
” அப்போ கடைசி வரை நீ இப்படியே தான் இருக்க போறியா ? உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா? ”
” நான் ஏன் இப்படியே இருக்க போறேன்? என் வாழ்க்கையில் நான் ஹீரோவா இருந்தால் என்னோட ஹீரோயின் கண்டிப்பா எங்கயாவது இருப்பா, நான் வில்லனா இருந்தால் எனக்கு ஏற்ற வில்லி எங்கேயோ என்னை எதிர்பார்த்திட்டு இருப்பாள், என்ன இது எல்லாம் தேவாவா இருக்கும்னு எதிர்பார்த்தேன்.. அந்த எதிர்பார்ப்பு தப்பாகிடுச்சு அவ்ளோ தான்.. எனக்கானவளை கடவுள் எங்கேயோ மறைச்சி வச்சி விளையாடிட்டு இருக்கார் போல ” என்றவன் மீண்டும் மதுவை அருந்த தொடங்கினான்…

