
அத்தியாயம் 24
பெங்களூரில் விஷ்வா தனக்கு தெரிந்த திருமண பதிவாளரிடம் சொல்லியிருக்க அவர் வீட்டிற்கே வந்திருந்தார். கனிமொழி, அருண் மற்றும் விஷ்வா அவரின் முன்னால் நின்றிருக்க வேலைகளை முடித்து விட்டு நிமிர்ந்து பார்த்தார்.
“பொண்ணும் பையனும் இதுல கையெழுத்து போடுங்க.. சாட்சி கையெழுத்து போட வர சொல்லிட்டீங்களா?” என்று கேட்க விஷ்வா தயங்கும் போதே கீதன் உள்ளே வந்தான்.
அதன்பிறகு தான் கனிக்கு மூச்சு வந்தது. அவள் கணவனை பாவமாக பார்க்க தான் பார்த்து கொள்வதாக தலையசைத்தவன் விஷ்வாவின் அருகில் வந்து நின்றான்.
“அருண் கண்டிஷன் பத்தி டாக்டர் என்ன சொன்னாங்க விஷ்வா?” அவன் மெதுவாக கேட்க “அவன் மனதில் இருந்து கனியை போக சொல்லுறது கஷ்டம் போல கீதன்.. எந்த ஒரு சின்ன விஷயம்னாலும் ரொம்ப ரியாக்ட் பண்றான்” என்றான்.
“ஓ..” என்றவன் கனியை பார்க்க அவள் கீதனை இப்போது முறைத்து கொண்டிருந்தாள்.
“கையெழுத்து போடுங்க அருண்..” சார்பதிவாளர் சொல்ல கனியை பார்த்தவாறே கையெழுத்து போட்டான். அடுத்து கனியை கூப்பிட அவளின் கைகள் நடுங்கியது. முதல் முறையாக கணவனின் கை கோர்த்து கையெழுத்திட்டது நினைவுக்கு வந்தது.
கீதனை பார்க்க கண்களால் சரியென்றவன் விஷ்வாவை இடித்தான். அவன் தன்னிடம் இருந்த மற்றொரு கைபேசியில் அருணுக்கு அழைக்க எடுத்து பார்த்த அருண் “எக்ஸ்கியூஸ்மி..” என்று நகர்ந்தான்.
“இவ்ளோ தான் அவன் ஆர்வம்..” என்று பெருமூச்சு விட்ட விஷ்வா வந்தவரிடம் இருந்து சான்றிதழை பெற்று விட்டு அவரை அனுப்பி வைத்தான்.
விஷ்வா அழைப்பு விடுத்து “ஹலோ.. ஹலோ..”என்று கத்திய அருண் யாரும் பேசாததால் அழைப்பை துண்டிக்க அடுத்து ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வர எடுத்து பேசியவன் அதிர்ந்தான்.
“அருண்..” அந்த குரல் அவனுக்கு எரிச்சலை கூட்ட “இன்னைக்கு எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டான்.
அந்த பக்கம் அம்ருதா பேச்சிழந்து நின்றாள். இத்தனை மாதங்கள் அவள் யாருக்காக காத்திருந்தாளோ இன்று அவனுக்கு திருமணம் முடிந்ததை அவன் வாயால் கேட்கும் போது நெருப்பை அள்ளி கொட்டியது போல் இருந்தது. போனமுறை அந்த வீட்டிற்கு வந்திருந்த விஷ்வாவின் அலைபேசியில் இருந்து தான் அருணின் எண்ணை எடுத்திருந்தாள். அவளுக்கு தெரியும் ஈஸ்வரன் அவனை பார்த்தால் கொல்லவும் தயங்க மாட்டார் என. அவனால் அவரின் மொத்த அரசியல் சாம்ராஜ்யமும் தகர்ந்து விட்டதே.
இன்று அவனுக்கு அழைப்பு விடுக்க அவளின் மனம் தூண்டி கொண்டே இருக்க தைரியத்தை வரவழைத்து அழைப்பு விடுத்தாள். ஆனால் ஒற்றை வார்த்தையில் அவளை மரிக்க செய்திருந்தான் அவன். கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவள் இனி அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற முடிவுடன் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
அருண் வரும் போது சார்பதிவாளர் கிளம்பியிருக்க “சைன் பண்ணிட்டாளாடா? ச்ச அந்த நேரம் பக்கத்தில இல்லாம போயிட்டேனே” என்று வருத்தப்பட விஷ்வா மனம் கொதிக்க அவனை பார்த்தான்.
ஆனாலும் அவனின் உடல்நிலை கருதி எதுவும் பேசாதவன் வெளியே சென்று விட்டான். அருண், கீதன் மற்றும் கனி நிற்க “நீங்க யார் சார்?” என்று கீதனை பார்த்து கேட்டான்.
“நான் விஷ்வா பிரெண்ட்.. டேக் கேர்” என்று மனைவிக்கும் சேர்த்து சொல்லி விட்டு செல்ல அவளின் வெப்ப மூச்சில் நல்லவேளை சாம்பலாகாமல் தப்பித்தான்.
அருண் அவள் அருகில் வர “எனக்கும் உனக்கும் நடந்தது கல்யாணமா இருக்கலாம்.. பட் என்னால என் கணவனோடு வாழ்ந்த வாழ்க்கையை அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது.. பிடிக்காத வாழ்க்கைன்னாலும் நானா பிரிஞ்சு வரல.. அவர் தான் அனுப்பினார்.. அதாவது அவரோட வாழ்க்கையை தியாகம் செய்து அனுப்பிருக்கார்.. அவருக்கு சரி பண்ண முடியாத ஒரு வியாதி.. அதனால் என்னை அனுப்பி விட்டுட்டார்.. எனக்கு சொந்தம்னு சொல்லிக்க நிறைய பேர் இருக்காங்க.. என் சித்தி இனிமே கண்டிப்பா ஏத்துக்க மாட்டாங்க.. அதுக்காக என்னால் இன்னொரு வாழ்க்கையை வாழ முடியாது.. நாம நல்ல நண்பர்கள் அவ்ளோ தான்” என்று கூறி விட்டு செல்ல அவளை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் சரி என்றான். அவனுக்கு அந்த நொடி அவளின் கணவன் கடவுளாகவே தோன்றினான். அவனுக்கு அவளை பற்றி ஒன்றும் தெரியாததே அதை ஏற்க வைத்தது. வெறும் ஒருதலை காதல். அதுவும் கனிஷ்காவின் பின்புலம் எதுவும் அறியாமல் வந்த காதல். அவள் என்ன படித்திருந்தாள், என்ன வேலை செய்கிறாள் எதுவுமே அவன் அறிய முயற்சிக்கவில்லை. அதனால் தான் கனிமொழி சொல்லிய அனைத்தையும் நம்பியவன் அவளுடன் வீட்டிற்கு சென்றான்.
அடுத்து வந்த நாட்கள் கீதன் மற்றும் கனிக்கு நல்லதாகவே அமையவில்லை. அருண் நண்பன் என்றே அதிக உரிமை எடுத்து கொண்டான். அவளை மருத்துவமனைக்கு செக்கப் அழைத்து செல்வதில் இருந்து அவளின் உணவு வகை வரை அவனே பார்த்து கொண்டான். மனதளவில் அந்த குழந்தை அவனோடது என்றே நம்பினான். அவனின் இந்த செயலை யாராலும் தடுக்க முடியாமல் போனது. கீதன் மற்றும் கனி தனிமையில் சந்திக்க கூட முடியாமல் தவித்தனர்.
விஷ்வா இடையில் வந்து அவர்களை சந்திக்க வைக்க முயற்சித்தாலும் அவள் என் மனைவி என்று முன்னால் வந்து நின்றான் அருண். கணவனை காணாமல் கனியின் உடல்நிலை மோசமாகி விட கடைசியில் ஒருநாள் வேலை பார்த்த இடத்தில் மயங்கி சரிந்தாள் அவள்.
அங்குள்ளவர்களுக்கு அருணை தெரியும் என்பதால் அவனுக்கு அழைக்க வந்து பார்த்தவன் உடனே அவளை மருத்துவமனையில் சேர்த்தான். ஆனால் அது கீதனுக்கு தெரியாமல் போனது. அவசரமாக ஜெர்மன் போக வேண்டி இருந்ததால் மனைவிக்கு அழைத்து பார்த்தவன் அவள் எடுக்காத உடன் விஷ்வாவுக்கு அழைத்து சொன்னவன் ஜெர்மன் கிளம்பினான்.
அதே நாளில் பெங்களூர் வந்து சேர்ந்தான் சித்தார்த். அவன் முதலில் போக நினைத்தது கன்னிப்புரம் தான். ஆனால் அவனின் தந்தை அழைப்பு விடுத்ததால் இங்கு வந்து விட்டு கனிஸ்காவின் ஊருக்கு போக நினைத்தான். அவனின் தந்தை புகழ்பெற்ற நியூரோ சர்ஜன் டாக்டர் கிரண். என்ன தான் வெளிநாட்டில் வாழ்ந்திருந்தாலும் தன் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று பெங்களூரில் ஒரு மருத்துவமனையை நிறுவினார்.
மகன் வரவும் “வெல்கம் மை சன்..” என்று அவனை அணைத்து கொள்ள பதிலுக்கு அவனும் அணைத்து கொண்டான். தந்தை மகன் என்பது அவர்கள் உறவில் மட்டுமே தவிர இருவரும் நல்ல நண்பர்கள்.
“கனி அப்பா எங்க?” என்று முதல் கேள்வி கேட்க “முத்தையா..” என்று அழைத்தார்.
“சொல்லுங்க டாக்டர்..” என்று கனிஸ்காவின் தந்தை முத்தையா வர “இது என் பையன் சித்தார்த்.. அமெரிக்காவில் இருந்து வந்திருக்கான்.. உங்களை பார்க்கணும்னு சொன்னான்” என்று கூற “என்னை எதுக்குயா பார்க்கணும்?” என்று பவ்வியமாக கேட்டார்.
“உங்க ஊர் கன்னிப்புரம்னு டேட் சொன்னாங்க.. அங்க போக போறேன்.. அது தான் யாருக்காச்சும் தகவல் சொல்லனுமான்னு கேட்க..” சித்தார்த் கூற முத்தையாவின் முகம் மாறியது.
“அந்த ஊரில் இருந்து ஓடி வந்ததே அங்க போக கூடாதுன்னு தான்யா.. வசதி இல்லனாலும் நல்லா வாழ்ந்துட்டு இருந்தேன்.. எனக்கு தலைச்சம் பிள்ளையா பிறந்தது எவன் கூடயோ ஓடி எங்க குல மானத்தையே வாங்கிடுச்சு..” என்று கூற சித்தார்த்தின் நரம்புகள் இறுகியது.
“உங்க கிராமத்துல உங்க கூட வளர்ந்த பொண்ணு மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இல்லை சார்.. அப்படி ஓடி போகுற பொண்ணு நீங்க பார்த்த பையனை கல்யாணம் பண்ணிருக்குமா?” அவன் அமர்த்தலாக கேட்க அவர் ஆச்சர்யமாக அவனை பார்த்தார்.
“அவங்களை பத்தி டேட் சொல்லிருக்காங்க” என்றவன் “எப்பவுமே பெத்த புள்ளைங்க மேல நம்பிக்கை வைங்க சார்.. அந்த நம்பிக்கை எப்பவும் உடைஞ்சி போகாது.. உங்க பொண்ணு ஓடி போனதா ஊர்ல தான் சொல்றாங்களே தவிர அவளை தேட நீங்க ஏதும் முயற்சி பண்ணுனீங்களா?” என்று கேட்க முத்தையாவின் தலை குனிந்தது.
அவன் கேட்பதும் நியாயம் தானே. இத்தனை வருடங்கள் வளர்த்த சொந்த மகளை எவனின் பேச்சையோ கேட்டு தூற்றியது தவறு தானே. “நான் தான்யா தப்பு பண்ணிட்டேன்.. இப்போ என் பொண்ணு எங்க என்ன கஷ்ட படுறாளோ?” என்று கண்கலங்க தன் கைபேசியில் இருந்த அவர்களின் போட்டோவை காட்டினான் சித்தார்த்.
முத்தையா அதிர்ந்து பார்க்க “உங்க பொண்ணு வேலு கூட என்ன மாதிரி வாழ்க்கை வாழ்ந்தா தெரியுமா? மொத்தமும் பெண் பிள்ளைகளையே பெத்துட்டோம்னு எவனோ ஒருத்தனுக்கு ஒரு வைரத்தை கல்யாணம் பண்ணி கொடுத்து அவள் வாழ்க்கையையே சீரழிச்சிடீங்க..” என்று கோபப்பட “அவ எப்படி உங்க கூட? அப்போ அவங்க சொன்னது உண்மை தானே..” என்று சீறினார்.
“மறுபடியும் அதே தப்பை தான் பண்ணுறீங்க.. என் மனைவியோட அப்பான்னு சும்மா இருக்கேன்..” என்று கையை இறுக மடக்க அடுத்த அதிர்ச்சி முத்தையாவிற்கு.
“அவ இன்னொருத்தன் பொண்டாட்டி..” முத்தையாவின் பேச்சில் சித்தார்த்தின் தந்தை கிரணுக்கே கோபம் வந்து விட்டது.
“யார் முத்தையா நல்ல புருஷன்? தன்னோட மனைவியை கடைசி வரைக்கும் கண்கலங்காம பார்த்துக்குறவன் தான் ஆம்பள.. ஆனா வேலு அவளை சித்திரவதை படுத்திருக்கான்.. அதை கூட மன்னிக்கலாம்.. ஆனா கடைசியில் பணத்துக்காக வித்துட்டான்.. நல்ல புருஷன் எவனும் அப்படி செய்ய மாட்டான்”
கிரண் சொல்லும் போது தான் தன் மகளை எவ்வளவு பெரிய பாழுங்கிணத்தில் தள்ளியிருக்கிறோம் என்பது அவருக்கு புரிந்தது.
“நான் தான் உங்க பொண்ணை கடத்திட்டு போனேன்.. பாக்குற எல்லாருக்கும் அப்படி தான் தெரியும்.. ஆனா இப்போ அவகிட்ட இருக்கிற சந்தோசம் எப்பவுமே அந்த வேலுவால் அவளுக்கு கொடுத்திருக்க முடியாது” என்றவன் சில விடியோவை காட்ட மகளின் முகத்தில் இருந்த நிறைவான புன்னகை அவருக்கு சித்தார்த் எவ்வளவு அன்பு காட்டியிருப்பான் என புரிந்தது. ஆனால் சித்தார்த்தின் மனம் ஒவ்வொரு முறையும் அவளை வைத்து சோதனை செய்ததை நினைத்து தன்னையே வெறுத்தது.
“நான் அவளை பார்க்கணும்.. அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கணும்.. ஒரு அப்பனா அவளுக்கு நல்லது செய்யாம போயிட்டேன்” என்று அழ “அவ இங்க வரவே மாட்டா..” என்று உறுதியாக மறுத்தான் சித்தார்த்.
முத்தையா அதிர்ச்சியுடன் பார்க்க “அவளுக்கு உங்க யாரையும் நியாபகம் இல்ல.. அவளுக்கு இதுக்கு முன்னாடி கல்யாணம் ஆனதே தெரியாது.. அவ இப்போ இருக்குற சந்தோஷத்தோடு கடைசி வரைக்கும் இருந்துட்டு போகட்டும்” என்று கூற அந்த தகப்பனுக்கும் அதுவே நல்லதாக பட்டது. ஆனாலும் மனம் மகளை பார்க்க விழைந்தது என்னவோ உண்மை.
அவரை பாரத்த சித்தார்த் “உங்களுக்கு சொந்தமா வீடு இருந்ததே.. இப்போ இங்க வாடகை வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்க வேலுவின் தாய் மங்களம் பேசியதையும் பிறகு வீட்டை விற்றதையும் கூறினார் முத்தையா.
“பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ திமிராகி போச்சா அந்த லேடிக்கு.. நாளைக்கு இருக்கு” என்று மனதினுள் கறுவியவன் முத்தையாவை ஊருக்கு வர சொன்னான்.
“இதுவே போதும்யா.. என் புள்ள சந்தோஷமா இருக்கான்னு தெரிஞ்சா அதுவே போதும்.. அந்த ஊருக்கு வந்து மறுபடியும் அவமானப்பட தெம்பில்லை” என்றவர் வெளியே சென்று விட்டார்.
கிரண் சித்தார்த்தை யோசனையாக பார்க்க “அதுக்காக எல்லாம் அந்த லேடிய சும்மா விட முடியாது டேட்.. எல்லாத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் போது தான் மானம், மரியாதையோட அருமை தெரியும்” என்றவன் தன் கூட கேசவை அழைத்து கொண்டு வெளியே வந்தான். அந்நேரம் கனிமொழி, விஷ்வா மற்றும் அருண் அவர்கள் மருத்துவமனையில் இருந்தே வெளியே வர “சார் இவன் தான் நீங்க தேடுன அருண்..” என்று கை காட்டினான் கேசவ்.
“எங்கே?” என்று கேட்டு கொண்டே திரும்பிய சித்தார்த் அங்கு கனிஷ்காவின் உருவத்தில் ஒருத்தி நிற்பதை கண்டு அதிர்ந்தான்.
“அந்த பொண்ணு யாரு?” என்று திணற “அது அவன் வைப்னு இன்னைக்கு தான் தெரிஞ்சது” என்று கேசவ் கூற சித்தார்த் முகம் யோசனையானது.
“அருண் கனிஷ்காவை லவ் பண்ணதா தானே நீ சொன்ன?” பார்வையை கனிமொழியின் மீது வைத்து கொண்டே கேட்க “எஸ் சார்.. பட் இப்போ எனக்கும் ஆச்சர்யமா இருக்கு.. கனி மேடம் மாதிரியே இவங்களும் இருக்காங்களே” என்று கூற அவனை தாண்டி ஓடினான் சித்தார்த்.
அதற்குள் அருண் அவர்களுடன் காரில் ஏறி சென்றிருக்க “ஷிட்..” என்று கீழே உதைத்தவன் “அவங்க அட்ரஸ் சீக்கிரம் கண்டுபிடி” என்று கூறி விட்டு தன் கனிஷ்காவுக்கு அழைப்பு விடுத்தான்.

