
மறுநாளே இத்தாலிக்கு வந்தடைந்தனர் கண்மணியும் நிவேதனும். இருவருக்கும் எண்ணமெங்கிலும் நிதர்ஷனாவின் மீது இருந்ததால் பெரியதாய் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை.
யாஷ் பிரஜிதனின் பங்களாவினுள் நுழைந்ததும், இருவரும் ஆசுவாசமாக அமர்ந்தனர்.
கண்மணி தான், “கதிர் அண்ணா லெட்டரை எடுத்துக் குடுத்தாங்களே அண்ணாட்ட. அதுல என்ன இருந்துச்சுனு எதுவும் சொன்னாங்களா நிவே?” என சந்தேகம் கேட்க,
“உன் அண்ணன்காரன் வாயில இருந்து விஷயத்தை புடுங்குறது என்ன அவ்ளோ சாதாரண விஷயமா? இத்தாலிக்குப் போயிட்டு வா. அப்பறம் சொல்றேன்னு சொல்லிட்டான்” என்றான் சலிப்பாக.
“ம்ம்… கதிர் அண்ணாவாச்சு பிரிச்சு படிச்சுருக்கலாம்”
“அவன் யாஷ்கு உண்மை விளம்பியா இருக்கான்…” லேசாய் முறுவலித்துக் கொண்டதில் கண்மணியும் புன்னகைத்து, “நாளைக்கு ப்ரசென்டேஷன் எப்படி வேணும்னு சொல்லுங்க நிவே. எப்ப வேலை முடிஞ்சாலும் உடனே கிளம்ப சொன்னாங்க அண்ணா” என்றாள்.
“இப்ப தான வந்தோம் கண்மணி. ரெஸ்ட் எடுத்துட்டு காலைல எந்திரிச்சு பாத்துக்கலாம். எப்படியும் மீட்டிங் மதியத்துக்கு மேல தான் நடக்கும் நீ போய் தூங்கு” என அவளை அறைக்கு அனுப்பி வைத்தான்.
அவள் உறங்கியதை உறுதி செய்து கொண்டவன், ரித்திகாவிடம் பெற்ற தகவலின் அடிப்படையில், அந்த பங்களாவில் இருக்கும் பேஸ்மெண்ட் படிக்கட்டை நோக்கிச் சென்றான்.
நிறைய பாஸ்வோர்ட்களைப் போட்டு பூட்டி இருந்தான்.
ரித்திகாவின் உதவியுடன் அதனைத் திறந்தவன், கீழிறங்கிச் செல்ல அங்கு இருளடைந்து இருந்தது.
அலைபேசியின் வெளிச்சத்துடன் மெல்லமாக உள்ளே சென்றவனுக்கோ அடிவயிற்றில் பயம் எழுந்தது.
இதென்ன பேய் பூத்து மாதிரி இருக்கு… எனப் புலம்பிக் கொண்டே சென்றவன், அங்கு கண்ணாடி தடுப்பின் பின்னால், முகமெல்லாம் வீங்கிப் போய் சுருண்டிருந்த இருவர்களை கண்டான்.
அவர்கள் கையைக் கட்டிப் போடவில்லை. ஆனால், அவர்களை எழுந்திருக்க விடாதபடி, யாஷ் பிரஜிதனின் ஆள்கள் அவர்களுக்கு தண்டனை கொடுத்த வண்ணம் இருந்தனர்.
‘நிதர்ஷனாவின் வைரஸை என்னால் முழுமையாக நீக்க இயலும். அதற்கு ஒப்புக்கொண்டு செயல்படுத்தி வெற்றி கண்ட மறுகணமே நீ என்னை கொன்று விடுவாய்…’ என அத்தனை அடியிலும் இளிவாய் சிரித்து வைத்த அலெஸ்சான்ட்ரோவின் மீது பெருக்கெடுத்த கோபத்தை அடக்கி வைத்திருந்தான் யாஷ் பிரஜிதன்.
வரதராஜன் சுயநினைவை இழந்திருக்க, அலெஸ்சாண்ட்ரோ அங்கிருந்து தப்பிக்கும் வழியைத் தீர ஆராய்ந்து கொண்டிருந்தார்.
அப்போது நிவேதனைக் கண்டதும் அவர் விழிகள் நெருப்பை உமிழ்ந்தன.
நிவேதனுக்கும் கூட அவரைக் கண்டதும் ஆத்திரம் சூழ்ந்தது தான். ஆனாலும் அடக்குவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
அவன் வைத்திருந்த மொழிப் பெயர்ப்புக் கருவியை எடுத்தவன், “எனக்கு என் தங்கச்சி வேணும். அவள் முழுசா குணமாகனும். உனக்கு யாஷ் சேர்மன் ஆகணும். நான் உன் இடத்துக்கு வரக்கூடாது அவ்ளோ தான. என்னைக் கொன்னா உனக்கு போதும்ல. என் தங்கச்சியை சரி பண்ணிட்டு என்னைக் கொன்னுக்கோ” எனப் பேசி காட்ட, அது அவருக்கு ஆங்கிலத்தில் கேட்டது.
நக்கலாய் புன்னகைத்த அலெஸ், “உன் தங்கச்சியை என்னைத் தவிர யாராலும் காப்பாத்த முடியாதுனு தெரிஞ்சும், யாஷ் என்னை இங்க அடைச்சு வச்சிருக்கான். என்னோட கண்டுபிடிப்பு, என்னோட சாம்ராஜ்யம் எனக்கு மட்டும் தான் வேணும். உன் தங்கச்சியை காப்பாத்தனும்னா, உன் உயிர் மட்டுமில்ல உன்னைச் சுத்தி இருக்குற எல்லாரோட உயிரும் வேணும்.
ஐ மீன், தட் பிட்ச் ஆதி, அவளோட ஹஸ்பண்ட், கண்மணி, யாஷ், ரித்தி… யாருமே உயிரோட இருக்க கூடாது.
நீயே சூஸ் பண்ணிக்கோ. உன் தங்கச்சி வேணுமா, இல்ல இந்த பிலவ்ட் ரிலேஷன்ஸ் வேணுமான்னு… டோன்ட் வொரி, ஒவ்வொருத்தரோட டெத் செய்தியும் எனக்கு கேட்க கேட்க, நான் என் வேலையை ஸ்டார்ட் பண்ணுவேன்” என நிபந்தனை விதிக்க, நிவேதனுக்கு அதிகபட்ச அதிர்வு.
“உனக்கு என்ன பைத்தியமா? சொந்தப் பையனையும் பொண்ணையும் கொல்றேன்னு சொல்ற. அதுக்கு என்னையும் உடந்தையாக்குறியா. போயா யோவ். என் தங்கச்சி எனக்கு முக்கியம்தான். ஆனா மீதி இருக்குற அத்தனை உறவும் என் உயிரானவங்க தான். நிதாவை எப்படி காப்பாத்தணும்னு யாஷ்கு தெரியும். எந்த வேலைக்கும் ஆகாத உன்னை தேவையில்லாம உயிரோட வச்சிருக்கான் மச்சான்” என எரிச்சலுற்றான்.
பேச்சுக்குரல் கேட்டு கண் விழித்த வரதராஜன், நிவேதனைக் கண்டு வேகமாய் வந்தார்.
“நிவே… நிவே… கண்டவன் பேச்சைக் கேட்டு உன் அப்பாவை இப்படி துன்புறுத்த உனக்கு எப்படி மனசு வருது. உன் அம்மா இருந்திருந்தா இந்நேரம் என்னை இப்படி விட்டுருப்பாளா…” என கண்கலங்கிப் பேச,
“சே சே விட்டிருக்க மாட்டாங்க. செருப்பைக் கழட்டி அடிச்சுருப்பாங்க. சொந்தப் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணி அந்தப் பொண்ணுக்கும் துரோகம் பண்ணிருக்க… இதுல உனக்குப் புள்ளைப்பாசம் ஒரு கேடு” என நெருப்பாய் காய்ந்தான்.
“இங்க பாரு. என் அப்பா செஞ்ச வேலையால வேற வழி இல்லாம தான் நான் அமுதாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவளுக்கு உங்களை பத்தி தெரிஞ்சதும், அவளை நான் வச்சுக்குறேன்னு தான் சொன்னேன். ஆனா அவள் தான் ஓவரா ரியாக்ட் பண்ணுனா. எப்படியோ செத்து தொலைஞ்சுட்டானு இருந்தேன். இப்ப அவளோட பொண்ணு ரூபத்துல வந்து என் இத்தனை வருஷ வாழ்க்கையையும் கெடுத்து விட்டுட்டா” கோபத்தில் மூச்சிரைத்தது அவருக்கு.
“நீ அவங்களுக்கு துரோகம் பண்ணனும்னு நினைச்சல்ல. அதான் உன் பிரெண்டு உன் கூடவே இருந்து உன் பையனை டார்கெட் பண்ணி உனக்குத் துரோகம் பண்ணிருக்கான்… நீயெல்லாம் செஞ்ச பாவத்துக்கு நானும் என் தங்கச்சிங்களும் தான்டா வேதனையை அனுபவிக்கிறோம். நீயெல்லாம் ஒரு மனுசன்!” எனக் காரித் துப்பாத குறையாக இருவரையும் முறைத்தவன், விறுவிறுவென அங்கிருந்து நகன்றான்.
பேஸ்மெண்ட் கதவை கவனமாய் மூடி விட்டு அவன் அறை நோக்கிச் செல்ல முற்படும்போதே யாஷ் பிரஜிதன் அழைத்தான்.
அவனது எண்ணைக் கண்டதும், நிவேதனுக்கு வியர்த்து விட்டது.
நடுங்கிய கைகளுடன் அழைப்பை ஏற்றவன், “ம… மச்சான்” என்க, “பேஸ்மெண்ட் டோர ப்ராப்பரா பாஸ்வோர்ட் போட்டு லாக் பண்ணு. நீ செய்ற முட்டாத்தனத்துக்கு நீ செத்தா பரவாயில்ல. உன்னை நம்பி அனுப்புன என் தங்கச்சியையும் அந்த இடியட்ஸ் கொன்னுடுவாங்க. லாக் இட் இமீடியட்லி” என்றவனின் பேச்சில் அனலடித்தது.
‘ஐயோ’ எனக் கண்ணை மூடி நொந்து கொண்ட நிவேதன் சரியாக லாக் செய்து விட்டு, எச்சிலை விழுங்கினான்.
“உனக்கு எப்படி தெரியும்?”
“யார் பேஸ்மெண்ட்ட அன்லாக் பண்ணுனாலும் எனக்கு அலெர்ட் வந்துடும்! உள்ள என்ன நடக்குதுன்னு எனக்கு வீடியோவே வந்துடும்!”
அவனது அட்வான்ஸ் டெக்னாலஜிகளைப் பற்றி தெரிந்தும் தான் செய்து வைத்த முட்டாள்தனத்தை எண்ணி நொந்தவன், ‘இவ்ளோ நேரம் ஒளியும் ஒலியும் பார்த்துட்டு இருந்துருக்கான்’ என்று முணுமுணுத்துக் கொண்டான்.
வந்த வேலை இப்படி சொதப்பி விட்டதில் எரிச்சல் வந்தாலும், ஊருக்குச் சென்றதும் யாஷ் பிரஜிதன் தன்னை எப்படி அடிப்பானோ என்ற பயம் வேறு எழுந்தது.
மறுநாள் ப்ரசெண்டேஷனை முடித்துக் கொண்ட இருவரும், பல நாள் எழுதிக்கொண்டிருந்த ப்ராஜக்ட் முடிந்ததில் நிம்மதியடைந்தனர். இன்னும் அவர்களை ஆசுவாசம் ஆக்கும்பொருட்டு, நிதர்ஷனாவின் உடல்நிலையில் நல்லதொரு மாற்றம் தெரிகிறதென்றும், எப்போது வேண்டுமானாலும் கண் விழிக்கக்கூடுமென்று தகவல் வர, மனம் சற்றே ஆறுதலடைந்தது.
மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பும் போது விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக, இருவரும் விமானநிலையத்தில் அமர்ந்திருந்தனர்.
நிவேதனை ஓரக்கண்ணில் ஏறிட்ட கண்மணிக்கு, இதயம் வேகமாய் துடித்தது.
எப்படியாவது பேசி விட வேண்டும். மனதை பகிர்ந்து விட வேண்டும். ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.
சில நிமிடத்தில் தொண்டையை செருமியவள்,” என் அம்மா உங்ககிட்ட எதுவும் பேசுனாங்களா?” என ஆரம்பிக்க, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன், புருவ மத்தியில் எழுந்த முடிச்சுடன் அவளை ஏறிட்டான்.
“எதைப் பத்தி?”
“தெரிஞ்சு கேட்குறாரா தெரியாம கேட்குறாரா” என விழித்தவள், “அது வந்து… என்னை… நம்மளைப் பத்தி” என ஆரம்பிக்க, “உங்கிட்ட எதுவும் பேசுனாங்களா?” என்று எதிர்கேள்வி கேட்டான்.
‘ஐயோ இப்ப என்ன சொல்றது?’ அவளது கன்னங்கள் சிவப்பு நிறங்களைத் தத்தெடுக்க, “அது… ஆ…” எனத் தொடங்கும்போதே, “அத்தை… உங்கிட்ட என்னைப் பத்தி ஏதாவது கேட்டாங்கன்னா, நீ நமக்குள்ள இருக்குற ரிலேஷன்ஷிப்பை தெளிவா சொல்லிடு கண்மணி” என்றான் உறுதியாக.
அதில் அவளுக்கு நாணம் வேறு சூழ்ந்திட, “என்ன சொல்லணும்?” என மெல்லிய குரலில் கேட்டாள்.
அவளை ஆழமாய் ஏறிட்டவன், “உண்மையை தான் சொல்லணும். நம்ம வெறும் ப்ரெண்ட்ஸ் தான கண்மணி. என் மச்சானோட தங்கச்சின்னு உன் மேல எனக்கு நிறையவே அக்கறை இருக்கு. அத்தை இதைத் தப்பா புரிஞ்சுகிட்டு என்கிட்ட உன்னை விரும்புறேனான்னு கேட்டாங்க. சட்டுனு அவங்களை அவமதிக்கிற மாதிரி பேச முடியல. உன்னை நான் அப்படி பார்த்தது இல்ல கண்மணி. அவங்க கேட்டா, நீயும் சொல்லிடு. நமக்குள்ள எதுவுமே இல்லைன்னு” என்று அழுத்தம் திருத்தமாய் கூறியிருக்க, கண்மணியின் சிவந்த முகம் அதிர்வில் சிதைந்தது.
கண்கள் நீரால் சூழப்பட்டிருக்க, அவன்முன்னே அழுது விடக் கூடாதென்று வேகமாய் தலையை தாழ்த்திக்கொண்டதில் ஒரு துளி கண்ணீர் அவன் வாங்கிக் கொடுத்த கண்ணாடி வளையலின் மீது தொப்பென விழுந்து, நகைத்தது.
அவனோ இந்த வளையளுக்கும் அவனுக்கும் கூட சம்பந்தமே இல்லை என்பது போல இயல்பாய் மீண்டும் வேடிக்கைப் பார்க்கத் தொடங்க, கண்மணி உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் மடிந்தே விட்டிருந்தாள்.
இந்தக் காதல் அவளை இத்தனை கொய்யுமென எதிர்பார்க்கவில்லை.
அதன்பிறகு வந்த நாள்களில் அவளிடம் துளியும் புன்னகை இல்லை. நிவேதனின் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதும் இல்லை.
இதற்கிடையில் நடேசனும் பரமேஸ்வரியும் நிதர்ஷனாவைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்தனர். அந்தக் கடிதத்தில் இருக்கும் செய்தியை யாஷ் பிரஜிதன் ரகசியமாகவே வைத்திருந்தான்.
கதிரவன் தான் தந்தையைத் திட்டிக்கொண்டான்.
“ஏன்பா… அந்தக் கடுதாசிய ஏதோ பொக்கிஷம் மாதிரி வச்சுருந்துருக்க. படிச்சாவது மனப்பாடம் பண்ணிருக்கலாம்ல. நானும் ஒரு ஆர்வத்துல அவனாண்ட போய் கொடுத்துட்டேன்” எனப் புலம்பினான்.
பரமேஸ்வரிக்கு நிதர்ஷனாவின் நிலை கவலையைக் கொடுத்தாலும், “யாரும் கடத்திட்டுப் போற வரை இவள் என்ன தான் செஞ்சுட்டு இருந்தாளாம். என்னாண்ட மட்டும் வக்கணையா பேசுறாள்ல” என்று திட்டினார்.
நிவேதனுக்கு இம்முறை அவரது பேச்சில் கோபமே கவலையோ வரவில்லை. சற்றே தங்களிடம் தணிவாய் நடந்திருக்கலாம் என்ற ஆதங்கம் இருந்தாலும், அதனைப் பெரியதாகவும் எடுத்துக்கொள்ளவில்லை.
“நீ சும்மா இருமா. அவ புருஷன் காதுல விழுந்தா உன்னை பரலோகத்துக்கு அனுப்பிடுவான்” கதிரவன் சற்றே பயம் கொள்ள,
“அதுசரி…” என நொடித்துக் கொண்டார்.
மகேந்திரனும் இளவேந்தனும் நடேசனை அடையாளம் கண்டு கொண்டனர்.
“ஐயா நல்லாருக்கீங்களா” நடேசன் மரியாதையாய் மகேந்திரனின் காலில் விழுக, “நீ என்ன நடேசா இங்க. சின்ன புள்ளையா பார்த்தது” என ஆசீர்வதித்தார் பெரியவர்.
இளவேந்தனும், “கதிர் உன் பையனா நடேசா. அதான் அவனை பாக்கும்போதெல்லாம் எங்கயோ பழகுன பீல் இருந்துச்சு…” என்று வியப்பாய் கேட்க,
“என்னை மன்னிச்சுடுங்க மாமா. அமுதாவோட பொண்ணு என் வீட்ல இருக்கான்னு தெரிஞ்சும் உங்களுக்கு தகவல் தெரிவிக்க முடியல. நீலியோட சத்தியத்தை மீறி என்னால எதுவும் செய்ய முடியல” என மன்னிப்பு வேண்டினார்.
ஆதிசக்தியோ, “என்ன இருந்தாலும் நீங்க தெரிவிச்சு இருக்கலாம் அண்ணா. யாரும் இல்லாம வாழ்ந்துருக்க மாட்டாங்கள்ல” என ஆதங்கம் கொள்ள,
“நீலி தான்மா, அவங்க உயிருக்கு ஆபத்துனு மறைச்சே வச்சுட்டான். அமுதா புள்ளை உசுர காப்பாத்துறது தான் எங்களுக்கு முக்கியமா பட்டுச்சு” எனக் கண்கலங்கிட, இளவேந்தன் அவர் தோளில் கை வைத்து அழுத்தி பாரத்தை குறைத்தார்.
“ரொம்ப நன்றி நடேசா!” தங்கள் வீட்டின் பொக்கிஷத்தை இத்தனை வருடம் பாதுகாத்ததே பெரியது தானே.
கைகூப்பிய இளவேந்தனின் கையை பதறி பிடித்த நடேசன், “என்னங்க மாமா என்கிட்ட போய் நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு…” எனத் தடுத்தார்.
நடந்ததை பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணவேணி, “ஆனா அமுதாவோட பாடி கூட குடுத்த குழந்தை யாரு அப்போ” என யோசனையில் விழுக,
“நம்மகிட்ட குடுத்த பாடியை பத்தி மறுபடியும் விசாரிக்க கேஸ் குடுத்துருக்கேன் அண்ணி. அது விஷயமா தான் அழகேசன் அண்ணாவை தஞ்சாவூருக்கு அனுப்பி இருக்கேன். யாஷும் ஒரு பதில் வச்சுருப்பான். அவன் சொல்ற வரை வெய்ட் பண்ண வேண்டியது தான்…” எனப் பெருமூச்சு விட்டார் தன் மகனைக் கணித்து.
அவனோ, யாருக்கும் எந்தப் பதிலும் சொல்லப் பிடித்தமின்றி, நிதர்ஷனாவின் அருகில் அவளை அணைத்தபடி படுத்திருந்தான்.
கண்களோ அவளையே வெறித்திருக்க, “எப்ப டி இந்தக் குட்டிக் கண்ணை திறந்து என்னைப் பார்ப்ப… மிஸ் யூ ஆலம்பனா. ரொம்ப ரொம்ப மிஸ் யூ!” என அவள் தோள்பட்டையில் கன்னத்தை வைத்துத் தேய்த்தான்.
“இன்னும் ஒரு தடவை உனக்கு இப்படி ஆக விட மாட்டேன் ஆலம்பனா. ப்ராமிஸ். இந்த ஒரே ஒரு தடவை எனக்கு ஒரு சான்ஸ் குடுடி. எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன். ப்ளீஸ்டி. ஏன்டி என்னைக் கெஞ்ச வைக்கிற” என சண்டை பிடித்தான்.
பின் சில நொடிகள் மௌனம் காத்தான். சில நொடிகள் முத்தமிட்டு மூழ்கடித்தான்.
சில நொடிகள் சூடாய் கண்ணீர் உகுத்தான். அவனது உணர்வுகள் அனைத்தையும் பார்க்கவில்லை என்றாலும், அவளது உயிரானவளின் உயிருக்குள் பெருவலியாய் இறங்குவதை அறியாது போனான் ஆடவன்.
அவள் கோமாவுக்குச் சென்றே ஆறு மாதங்களும் கடந்திருந்தது.
அவ்வப்பொழுது கண்ணிமைகள் அசைவதும், விரல்கள் எதையோ தேடுவதுமாய் இருக்கும். அப்போதெல்லாம் யாஷ் பிரஜிதனின் ஸ்பரிசம் மட்டுமே அவளை அமைதியாக்கும்.
“மெதுவா கண்ணைத் திறந்து பாரு நிது… முடியலைன்னா ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணாத!” என அவளது கையை கன்னத்தில் வைத்துக் கொள்வான்.
ஒரு நாள், இதே போல கண்ணிமைகள் ஆடியதில், “ஆலம்பனா… டூ யூ ஹியர் மீ!” என அவளது கேசத்தைக் கோதியபடி கேட்டான்.
சில நொடிகளுக்குப் பிறகு, முழுதாய் கண் திறந்து விட்டவளின் கருவிழிகள் அங்கும் இங்கும் உருண்டது.
அவள் விழித்ததை நம்ப இயலாதவனாய், “கடன்காரி… என்னைப் பாருடி” என அவள் கன்னம் தட்ட, கடினப்பட்டுக் கண்ணைத் திறந்தவளுக்கு உடலெல்லாம் வலி எடுத்தது.
தாதியர் உடனடியாக மருத்துவரை அழைத்து வர, விவரம் அறிந்து வாசலில் இருந்த குடும்பத்தினர் அனைவரும் அறைக்குள் புகுந்து விட்டனர்.
நிவேதனும் கதிரவனும் அவளுக்கு மறுபுறம் சென்று நின்று பதற்றமாய் அழைக்க, “நிவே” என உதட்டை அசைத்தாள்.
“எப்படி இருக்கு நிதா. உனக்கு ஒன்னும் இல்ல… சரியா” என்று கண்ணில் நீர் நிறைய தவிப்பாய் அவள் கையைப் பிடித்தான் நிவேதன்.
அவனைக் கண்ணாலேயே அருகில் அழைத்ததும், “என்ன நிதா…” எனக் காதை அருகில் கொண்டு வந்தான்.
அப்போது சற்றே அவளுக்கு கண்ணை நன்றாக விழிக்க இயல, “காசியாண்ட கடனை வாங்கிட்டு எங்கடா போய் தொலைஞ்ச. ஒன்ன எங்கலாம் தேடுறது. எரும!” எனக் கடிந்திட நிவேதனும் கதிரவனும் அவளை அதிர்ந்து பார்த்தனர்.
மீண்டும் கண்ணைச் சுழற்றியவள், “இன்னாடா கண்ணு மங்கலா இருக்கு. சுடுகாட்டுல புதைக்க போறீங்களா. சுத்தி நிறைய பேர் இருக்கீங்க…” என்று யாஷ் பிராஜிதனிடம் சிக்கி இருந்த கையை எடுத்துக்கொண்டு கண்ணைக் கசக்கினாள்.
கதிரவனோ யாஷை அவசரமாய் ஏறிட, அவனோ எவ்வித உணர்வுமின்றி அவளை வெறித்திருந்தான்.
கனத்த மனதுடன், “நீ மயங்கி விழுந்துட்ட நிதா… உனக்கு எதுவும் ஞாபகம் இல்லையா?” எனத் தவிப்பாக வினவ,
“மயங்கி வுழுந்ததுக்காடா இம்மாம்பெரிய ஆஸ்பத்திரிக்கு இழுத்து வந்திருக்கீங்க. பீஸ் யாரு உன் அப்பாவா கொடுப்பாரு…” எனத் திட்டிட, இரு ஆடவர்களும் பேந்த பேந்த விழித்தனர்.
யாஷ் பிரஜிதன் உடனடியாய் அவ்வறையை விட்டு வெளியில் சென்றிருக்க, திகைப்பில் ஆழ்ந்திருந்த குடும்பத்தினரும் வெளியில் வந்தனர்.
ஆதிசக்தியோ “என்ன யாஷ் இது. அவள் மறுபடியும் மறந்துட்டாளா?” என வேதனையாய் வினவிட,
“அக்கா, நிவே அண்ணா காணாம போன சீனுக்கு போய்ட்டாங்க அத்தை. இனி அவங்களை இத்தனை சீன் தள்ளி மறுபடியும் நிகழ்காலத்துக்கு கொண்டு வரணும்…” சிந்தாமணி நொந்து போனாள்.
கண்மணியோ, “அண்ணா இப்ப என்ன அண்ணி மறந்துட்டாங்க அவ்ளோ தான. எப்படியோ அவங்க பொழைச்சு வந்ததே போதும். நீங்க மறுபடியும் எல்லாத்தையும் அவங்களுக்கு ஞாபகம் வர வச்சுடுவீங்க” என்றாள் நம்பிக்கையாய்.
நிவேதனுக்கு தங்கை கண் விழித்த மகிழ்ச்சியை விட யாஷ் பிரஜிதனின் கண்களில் ஒளிர்ந்த வெறுமை அதிகம் வருத்தியது. ஏனோ உள்ளே இருக்க மனமில்லாமல், “டாக்டர் செக் பண்ணட்டும். நீ ரெஸ்ட் எடு” என்று விட்டு வேகமாய் யாஷிடம் வந்தவன், “என்ன மச்சான் இது?” என்றான் ஆதங்கமாக.
“அவள் எதையும் மறக்க சான்ஸ் இல்ல. அவளோட மெமரிஸை அஃபெக்ட் பண்ணாம இருக்க நான் குடுத்த மருந்து யூஸ் ஆகும்” யாஷ் பிரஜிதன் இறுக்கத்துடன் கூறிட,
“ஆனா மறந்துட்டாளே மச்சான்” என்றான் வேதனை மின்ன.
“நடிக்கிறா… அவளுக்கு நடிக்க சொல்லியா தரணும்” விரக்தி நகை அவன் இதழ்களில்!
அதில் அனைவரும் அவனை அதிர்வாய் பார்த்தனர்.
இளவேந்தனோ, “என்ன பேசுற யாஷ். அவள் உன்மேல எவ்ளோ அன்பு வச்சுருக்கான்னு உனக்கு தெரியுமே. வேணும்னே அவள் நடிப்பாளா. அது உன்னை எவ்ளோ ஹர்ட் பண்ணும்னு அவளுக்குத் தெரியும்” எனக் கண்டித்தார்.
“ஆமா தெரியும். தெரிஞ்சதுனால தான் நடிக்கிறா” அவன் திட்டவட்டமாக உரைக்க, அதனை ஏற்றுக்கொள்ள இயலாத நிவேதன், “இல்ல மச்சான். நீ தான் தப்பா புருஞ்சுட்டு இருக்க. அவளால உன்மேல இருக்குற காதலை என்னைக்கும் மறைக்க முடியாது…” என்றான் சிறு கோபத்துடன்.
அவனை விழிகளால் எரித்த யாஷ் பிரஜிதன், “உன்னை விட அவளை எனக்கு நல்லாவே தெரியும்…” என உறுத்து விழித்தான்.
நிவேதனும் முறைத்து வைக்க, சில நொடிகள் அமைதி காத்த யாஷ் பிரஜிதன் சில கட்டளைகளை பிறப்பிக்கத் தொடங்கினான்.
அதனைக் கேட்டுக்கொண்ட நிவேதனோ, “மறுபடியும் ரி-கிரியேட் பண்ண போறியா?” எனக் கேட்க,
“நோப்! பிரிவோட வலியை அனுபவிக்கட்டும் உன் சிஸ்டர். அவளுக்குத் தேவையான ட்ரீட்மென்ட்டை ரெடி பண்ணிட்டு, அவளை பாத்துக்குறேன்…” என்றவனின் முகத்தில் சீறல் தாண்டவமாடியது.
அதன்பிறகு நிதர்ஷனாவின் அறையில் நிவேதனும் கதிரவனும் மட்டுமே இருந்தனர்.
அவளோ, முற்று முழுதாய் நிவேதனின் தங்கையாகவும் கதிரவனின் தோழியாகவும் மட்டுமே இருந்தாள்.
எத்தனை சந்தேகித்து அவளைக் கவனித்தும், அவளிடம் எந்த வித தேடலும் வேதனையும் தென்படவே இல்லை.
“இந்த யாஷ் தேவையில்லாம இவளை நடிக்கிறதா சொல்றான் கதிரு” என நிவேதன் பொங்கினான்.
“எனக்கும் யாஷ் சொல்றது புரியல நிவே. நிதாவால அவன் இல்லாம ஒரு செகண்ட் கூட நார்மலா இருக்க முடியாது. இப்ப இவ்ளோ நார்மலா இருக்கான்னா கண்டிப்பா அவ நடிக்கல…” என்றான் குழப்பமாக.
யாஷோ அதன்பிறகு மருத்துவனைக்கு வரவே இல்லை. சிரிப்பை முற்றிலும் தொலைத்திருந்தவன், தன்னுடைய ஆராய்ச்சியை முழு மூச்சாய் தொடங்கினான்.
மனமெங்கும் ஆத்திரமும் காதல் தந்த வலியும் கொஞ்ச கொஞ்சமாய் கொன்றது அவனை.
ரித்திகா தான், “யாஷ் நீ ஒரு தடவ அவகிட்ட பேசி பாரு. அவளுக்கு பீலிங்ஸை முகத்துல காட்டாம இருக்க முடியாதுடா. உண்மையாவே மறந்துருக்கலாம்ல…” எனக் கேட்க,
“யூ டூ யுவர் ஓன் பிசினஸ். அவ பீலிங்ஸ் பத்தி யாரும் எனக்கு க்ளாஸ் எடுக்க வேணாம்…” என்று அமிலமாய் கொதித்தான்.
ஆஹில்யன் தான் ரித்திகாவை தனியே அழைத்து, “பாஸ் ஒரு விஷயத்துல டவுட் பண்ணுனா கரெக்ட்டா இருக்கும் ரித்தி. உனக்குத் தெரியாதா?” எனக் கடிந்து கொண்டான்.
தற்போது நிவேதனும் நிதர்ஷனாவும் அவர்களது பழைய வீட்டிற்கே செல்லப் போகின்றனர்.
அதை எண்ணும்போதே அவளுக்கு வலித்தது.
“ஏன்டா யாருமே என்கூட நிரந்தரமா இருக்க மாட்டுறாங்க” எனக் கலங்கியவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன்,
“எல்லாருமே எல்லாருக்கும் நிரந்தர உறவா மாறுற சூழ்நிலை வரும் ரித்தி. என்னை நம்பு. பாஸ் கண்டிப்பா ஒரு பிளான் வச்சுருப்பாரு. இந்த சின்னப்பிரிவும் ஒரு நல்ல விஷயத்துக்காக ஆரம்பமா இருக்கலாம். நம்ம இப்போ இதை நினைச்சு கலங்காம, இன்னொரு தடவை அவளுக்கு இப்படி நடக்காம எப்படி தடுக்கலாம்னு பார்க்கலாம். இந்த அலெஸ் ஹெல்ப் பண்ணுனா, ஏதாச்சு வழி கிடைக்கும். அந்த பரதேசி, வாயைத் திறக்க மாட்டேங்குது. இதுல ஒரே நல்ல விஷயம். அவளுக்கு அந்த வைரஸ் பெயிலியர் ஆனது தான்…” என்று பெருமூச்சு விட்டான்.
“பெயிலியர் ஆனதுக்கே இவ்ளோ கஷ்டப்படுறாளே. சக்ஸஸ் ஆகிருந்தா… இந்த மனுஷங்க ஏன் தான் இவ்ளோ குரூரமா இருக்காங்களோ…” என வெந்தாள்.
நிவேதன் இனி தங்களுடன் இருக்கப் போவதில்லை. அதுவே கண்மணியை அதிகம் சிதைத்தது.
உடன் இருந்தால் மட்டும்! குமுறிய உள்ளத்தை மறைத்துக் கொண்டாள்.
சிந்தாமணிக்கும் கதிரவனின் பிரிவில் இதயம் வலித்தது. எப்படியும் நிதர்ஷனாவிற்கு அனைத்தையும் நினைவு படுத்த தனது வீட்டிற்கு வந்து தானே ஆக வேண்டும். மீண்டும் புதிதாய் காதலிக்கலாம்… என மனதை தேற்றிக்கொண்டாள்.
பரமேஸ்வரியும் நடேசனும் மற்றவர்களை எப்படி ஆறுதல் செய்வது என தெரியாமல் இருந்தனர்.
மகேந்திரனோ, “என்னப்பா இது மாறி மாறி ஏன் இவ்ளோ கஷ்டம்” எனக் கலங்கிட,
“இனி அவளை எப்ப பாக்குறது… தெரியாத மாதிரி பார்த்து வைப்பாள். அதுவே கஷ்டமா இருக்கும் மாமா” என இளவேந்தனும் குமுறினார்.
பரமேஸ்வரி தான், “ஏன் அப்போ அப்போ வந்து பார்த்துட்டுப் போங்க அதுனால என்ன?” என்றிட,
“இல்லமா… யாஷ் அதுக்குலாம் ஒத்துக்க மாட்டான்” என்றார் வேதனையாக.
“அடுத்த மாசம் கதிருக்கு நிச்சயம் வைக்கலாம்னு இருக்கேன். நீங்க அவளோட சொந்தக்காரங்களா வந்தா தான் பிரச்சினை. எங்க சொந்தக்காரங்க மாறி வாங்க. வந்து பார்த்துட்டுப் போங்க…” என்று அவர்களை சமாதானம் செய்கிறேன் பேர்வழி என சிந்தாமணியின் நெஞ்சில் ஈட்டியை சொருகினார்.
“நிச்சயமா?”
அவளது கேள்வியில் “ஆமாமா, என் அண்ணன் பொண்ணு தான். சின்ன வயசுலயே பேசி வச்சாச்சு. அவங்க சீக்கிரமா கல்யாணத்தை வைக்கணும்னு அவசரப்படுத்திட்டு இருக்காங்க. அவனுக்கும் வயசாகிடுப் போகுதே…” எனத் தன் போக்கில் ஏதேதோ பேச, சிந்தாமணிக்கு ஏண்டா கேட்டோம் என்றானது.
முழுதாய் உடைந்திருந்த உள்ளத்தை எங்கனம் சரி செய்வதென்று தெரியாது உறைந்திருந்தாள்.
அன்று நிதர்ஷனாவிற்கு டிஸ்சார்ஜ் என்பதால், சில மருத்துவமனை சம்பிரதாயங்களை முடிக்க யாஷ் அங்கு வந்திருந்தான்.
அவனும் பரமேஸ்வரி பேசியதைக் கேட்டு விட்டு, சிந்தாமணியைப் பார்க்க அவளோ தேங்கி நின்ற கண்ணீருடன் அவனைப் பார்த்தாள்.
அவன் கண்ணை மூடி அவளுக்கு ஆறுதலுரைக்க, இதனைக் கேட்டு விழித்தபடி நின்ற கதிரவன், “ரெண்டு பேரும் வீட்டுக்குப் போய் க்ளீன் பண்ணி வைங்க. நாங்க அவளை கூட்டிட்டு வரோம்” என்று அனுப்பி வைத்தான்.
‘இவள் சும்மாவே ஆடுவா. இந்தம்மா, நிச்சயம் அது இதுனு கோர்த்து விடுது’ எனப் பதறியவன் அவனைப் பார்க்க பயந்து அறைக்கு ஓடி விட்டான்.
நிதாவை கதிரவனிடம் ஒப்படைத்து விட்டு வெளியில் வந்த நிவேதன், “மச்சான்… எல்லாம் முடிஞ்சுதா. கிளம்பலாமா? எப்ப வீட்டுக்குப் போகலாம்னு கேட்டு சாவடிக்கிறா. விட்டா ட்ரிப்ச கழட்டிட்டு கிளம்பிடுவா போல. பதில் சொல்ல முடியல” எனப் பரிதாபமாக கேட்டான்.
“ம்ம்! நான் குடுத்த டேப்லட்ஸை அவளைக் கண்டிப்பா சாப்பிட வச்சுடு. கரெக்ட் டைம்கு குடு…” யாஷ் கூறியதில்,
“ஆமா அதெல்லாம் டாக்டர் குடுத்த மாதிரி தான் சொல்லிருக்கேன். அடுத்த ஆறு மாசத்துக்கு கண்டிப்பா மாத்திரை போடணும். இல்லன்னா ஆஸ்பத்திரிலயே இருக்க வேண்டியது தான்னு மிரட்டி தான் ஒத்துக்க வச்சேன்” என்றதும், “நீ மிரட்டி… அவள் கேட்குறா?” என்றான் ஒற்றைப்புருவம் உயர்த்தி.
“அதெலாம் என் தங்கச்சி கேட்பா…” என நொடித்துக் கொண்ட நிவேதன், “நீ சீக்கிரம் வந்து அவளை சரி பண்ணிடு மச்சான். நீ வர்ற வரை நான் பதட்டத்துல தான் இருப்பேன்” என்றான் தவிப்பாக.
“எப்டியோ அவள் பொழைச்சு வந்ததே மனசுக்கு ஆறுதலா இருக்கு… அதுசரி, எல்லாத்தையும் ரி – கிரியேட் பண்ண போறப்ப, என்னை மறுபடியும் கடத்திடுவீங்களா?” எனக் கேட்டான் மிரண்டு.
“ஆமா ஆமா உனக்கு ஹாலுசினேஷன் வந்தப்ப தான், எங்களுக்குள்ள ஒரு பிரேக் த்ரூ வந்துச்சு. அவளுக்கு என் மேல லவ்வும் வந்துச்சு. மறுபடியும் தேவைப்பட்டா உனக்கு அதே ட்ரக்ஸ் குடுக்க வேண்டியது தான்” எனப் பயமுறுத்த, “அடப்பாவி மச்சான்” என்று வாயில் கை வைத்தான் நிவேதன்.
ஆதிசக்தி, “என்ன யாஷ்… அவனே பொழைச்சு வந்தது பெருசு, மறுபடியும் ட்ரக்ஸ் அது இதுன்னு..”. எனக் கடிந்து கொள்ள,
“நல்லா கேளுங்க அத்த. என்னை ஹாலுசினேஷன்லயே லவ் பண்ண வச்சு கல்யாணம் பண்ணி வச்சுடுவானுங்க போல” என்றதில் அவரிடம் சின்னதாய் ஒரு புன்னகை.
அவனையும் கண்மணியையும் ஒரு கணம் பார்த்தவர், ‘இந்த நேரத்தில் கேட்கலாமா வேண்டாமா’ என மனதினுள் ஒரு பட்டிமன்றத்தை நடத்தினார்.
பின், எதையும் வெளிப்படையாய் கேட்பதில் தவறில்லை என்றெண்ணி, “நான் அன்னைக்கு கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலையே நிவே. இங்க இருந்து போறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு சாலிட் ஆன்சர் குடுத்தா, எங்களுக்கு முடிவெடுக்க ஈஸியா இருக்குமே!” என்றார் நேரடியாக.
இப்படி அனைவரின் முன்னும் கேட்டு விடுவாரென எதிர்பாராது நிவேதனின் முகம் இருள, யாஷ் பிரஜிதன் கூர்மையுடன் “வாட் இஸ் கோயிங் ஆன் ஹியர்?” எனக் கேட்டான்.
“அதை நீ உன் தங்கச்சிகிட்டயும் மச்சான்கிட்டயும் தான் கேட்கணும்” என இருவரையும் பார்க்க, அவனும் கண்மணியை கூர்ந்து பார்த்தான்.
கண்மணியோ இடுங்கிய புருவத்துடன் நிமிர்ந்து, “ம்மா நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல. எனக்கு நிவேதன் மேல எந்த பீலிங்க்ஸும் இல்ல. இனிமே இந்தப் பேச்சை எடுக்காதீங்க” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட, நிவேதனின் முகத்தில் ஒரே ஒரு கணம் வலியொன்று ஊடுருவிச் சென்றது.
மற்றவர்கள் அறியும் முன் அழகாய் அதனை மறைத்துக்கொண்டான் என்றாலும் யாஷ் பிரஜிதனின் விழிகளில் இருந்து இருவரது உணர்வும் தப்பவில்லை.
நிவேதன் யாரையும் நிமிர்ந்து பாராமல், “நான் கேப் வந்துடுச்சா பாக்குறேன்” என்று விறுவிறுவென வாசலுக்குச் சென்று விட, சிந்தாமணி திகைப்பில் ஆழ்ந்திருந்தாள்.
கண்மணி மீது கோபம் பெருக்கெடுத்து ஓடியது அவளுக்கு.
இத்தனை காதலித்து விட்டு அனைவரின் முன்னும் இப்படி காயப்படுத்தி விட்டாளே என்ற கோபம் துளிர, அவளது கன்னத்தில் பளாரென அறைந்து விட்டாள்.
“சிந்தா…” கிருஷ்ணவேணி மகளை அதட்ட, கண்மணியோ வலித்த கன்னத்தைக் கூட பிடிக்காமல் இறுக்கத்துடன் அமர்ந்திருந்தாள்.
“இவங்களுக்குலாம் ஒருத்தர் மேல வைக்கிற அன்பும் நேசமும் விளையாட்டுப் பொருள் மாதிரி இருக்கு போல. எல்லாரும் பிரிஞ்சு அனுபவிங்க. அப்போ தான் வலி தெரியும்” என்று அவளுக்கு சாபமிட்டவள் அங்கிருக்க மனமற்று வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.
அனைவரின் பார்வையும் தன்னைத் துளைப்பதை அறிந்தும் கீழுதட்டைக் கடித்து அமைதி கொண்டாளே தவிர, எதற்கும் வாய் திறக்கவில்லை.
யாஷ் பிரஜிதன் இருவரையும் மனதில் குறித்து வைத்துக் கொண்டு, ஆயிரம் பத்திரம் கூறியே ஆடவர்களுடன் தன்னவளை அனுப்பினான். எக்காரணத்தைக் கொண்டும் அவள் முன் வரவில்லை.
“ஒரு தடவை அவளைப் பாரேன் யாஷ்” கதிரவன் கேட்டதற்கு கூட, “அது அவளை இன்னும் ஹர்ட் பண்ணும். வேணாம்” என்று விட்டவனை அணைத்துக் கொண்டவன், “சீக்கிரமே அவள் உன் ஆலம்பனாவா உங்கிட்ட வருவா…” என்றான் நீர்பெருக்குடன்.
“ஐ ஹோப் சோ” தோளைக் குலுக்கிக் கொண்ட யாஷ் பிரஜிதன் ஒட்டு மொத்த உணர்வையும் தனக்குள் அடக்கிக்கொள்ள, அவனது வலி நிறைந்த வதனத்தை காண இயலாமல் அவளுடன் கிளம்பி விட்டனர்.
தனது வீட்டிற்குச் சென்றதும், “இன்னைக்கு டேட் என்னடா? இன்டெர்வியூ வேற இருந்துச்சு…” எனப் புலம்பிக்கொள்ள, அவளுக்கு தேதியில் சந்தேகம் வராத வண்ணம், வீட்டில் இருந்த காலண்டர் முதற்கொண்டு அனைத்தையும் யாஷ் மாற்றி இருந்தான்.
“ஆறு மாசத்துக்கு நீ வீட்ல ரெஸ்ட் தான் எடுக்கணும் நிதா?” நிவேதன் கூறியதில்,
“வெளயாடுறியா?” என முறைத்தாள்.
“நீ திடீர்னு மயங்கி விழுந்து ஒரு வாரமா எந்திரிக்கவே இல்ல தெரியுமா. நாங்க பயந்தே போய்ட்டோம். டாக்டர் உன் மூளைக்கு ரெஸ்ட் குடுக்க சொல்லிருக்காரு. தயவு செஞ்சு நான் சொல்றதை கேளு…” என அவளை சமாளிக்க, “என்னமோ பண்ணி தொலை” என அறைக்குச் செல்லப் போனவள், “என் போன் எங்க?” எனக் கேட்டாள்.
அவள் சில மாதங்களுக்கு முன் உபயோகித்த பழைய அலைபேசியை அவளிடம் கொடுத்தான். யாஷ் அதில் தேதியையும் நேரத்தையும் மாற்றியும் வைத்திருக்க, அதனை ஒரு கணம் பார்த்தவள், “தலைவலிக்குது நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்…” என அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
கதவின் மீது சாய்ந்து சரிந்து அமர்ந்தவளுள், சொல்லொணா வலி ஊசியாய் குத்திக் குடைந்தது.
‘என் வலியை என் குழந்தையும் அனுபவிக்க வேணாம்…’ யாஷ் பிரஜிதனின் வார்த்தைகள் நெஞ்சில் வாள் கொண்டு தைக்க,
“என்கிட்ட வந்துடு ஆலம்பனா…” எனக் கடந்த ஆறு மாதமாய் கேட்ட தன்னவனின் வேதனை நிறைந்த குரலில்,
வாயை மூடிக்கொண்டவள், துளியும் சத்தம் வராது தேம்பி தேம்பி அழுதாள்.
அரக்கன் தொடரும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
2
+1
+1

