Loading

அபூர்வன் அருகில் அமர்ந்து இருக்க தன் கையில் இருந்த எலுமிச்சை பழத்தை முகர்ந்து பார்த்தவாறே இருந்தாள் ஆரா.

 

அவளைத் தன் தோளில் சாற்றியவாறே இருந்தான்.

 

அப்போது அறைக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டதும்,”உள்ளே வாங்கம்மா”என்றிருந்தான் அபூர்வன். 

 

உடனே அறைக்குள் களியுடன் நுழைந்த நீலவேணி அதை ஆராவின் கைகளில் கொடுத்து விட்டு, 

 

“இந்தா ஆராம்மா! களி சாப்பிடு! முதல்ல கொஞ்சமாகச் சாப்பிட்டுப் பாரு! அப்பறம் நல்லா இருந்தால் ஃபுல்லா சாப்பிட்ரு. அப்பறம் எதுவுமே சாப்பிடலைன்னா சத்தே இருக்காதுல்ல”என்றவரோ, 

 

அப்படியே அதில் கொஞ்சம் நல்லெண்ணெயையும் ஊற்றிச் சாப்பிடுவதற்கு ஏதுவாக வழி செய்து விட்டு 

 

“கவனிச்சுக்கோடா”என்று மகனிடம் அறிவுறுத்தி விட்டுக் கீழிறங்கிச் சென்று விட்டார் நீலவேணி.

 

வாந்தி எடுத்ததால் களைத்துத் தெரிந்ததால் ஆராத்ரிகாவோ, அமைதியாக களியைச் சுவைத்துக் கொண்டு இருந்தாள்.

 

“இந்த வாந்தி வராமல் இருக்கறதுக்கு ஏதாவது மாத்திரை, சிரப் எதுவும் வாங்கலாமா ஆரா?”என்று தன் மனைவி முதல் தடவையாக வாந்தி எடுத்ததற்கே பதறிப் போய் விட்டிருந்ததால் அவளிடம் இவ்வாறு கேட்டிருந்தான் அபூர்வன். 

 

“இல்லங்க வேண்டாம். இதையே தாங்கிக்க முடியலைன்னா அப்பறம் பிரசவ வலியை எப்படி தாங்கிப்பேன். அதான், ஸ்கேன் பண்ண ஹாஸ்பிடலுக்குப் போகப் போறோமே? அங்கேயே இதுக்கான தெளிவானத் தீர்வுக் கொடுப்பாங்க”என்று அவனுக்கு விளக்கம் அளித்து விட்டுக் களியை உண்பதில் கவனம் செலுத்தினாள் ஆராத்ரிகா.

 

” அதை வேற ஞாபகப்படுத்தாதேம்மா. எனக்கு இப்பவே கண்ணுக் கலங்குது”என அவள் வாந்தி எடுத்ததே கஷ்டமாக இருக்கும் போது அவள் பிரசவ வலியில் துடிக்கப் போவதை அவனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

 

“நீங்க எதுக்குங்க இப்படி கலவரமாகிட்டு இருக்கீங்க? விடுங்க! இன்னும் அதுக்கு நிறைய மாசம் இருக்கு”எனக் கூறி கணவனைத் தேற்றினாள் ஆராத்ரிகா.

 

ஆனால் அவனது முகத்தில் இருந்த கலவரம் மட்டும் குறைந்தபாடில்லை.

 

“அபூ! டென்ஷன் ஆகாமல் அமைதியாக இருங்க”எனக் களியை முழுவதும் உண்டு முடித்தவளிடம் இருந்து தட்டை வாங்கிக் கொண்டு, 

 

“நீ ரெஸ்ட் எடு. நான் இதைக் கொண்டுப் போய்க் கழுவி வச்சிட்டு வர்றேன்” எனச் சொல்லி விட்டுக் கீழே சென்றான் அபூர்வன். 

 

“என்னடா சாப்பிட்டுட்டாளா?”என்று அவனிடம் விசாரித்தார் நீலவேணி. 

 

“ம்ஹ்ம். சாப்பிட்டாள்ம்மா”என்றதுமே, 

 

“மிதமான சூட்டில் சுடு தண்ணீர் வச்சுக் கொண்டுப் போய்க் குடிக்கக் கொடு”என்றுரைக்கவும், 

 

உடனே அதைச் செயல்படுத்தி விட்டுத் தண்ணீர்த் தம்ளருடன் மாடி ஏறினான் அபூர்வன். 

 

அதை மனைவியிடம் கொடுத்து விட்டு,”நான் நாளைக்கு ஆஃபீஸூக்குப் போகப் போறதால் இப்போ விட்டுப் போன வேலையை முடிக்கிறேன்”என்று மனைவியைத் தன் மடியில் தலை சாய்த்துக் கொண்டே மடிக்கணினியில் வேலையத் தொடர்ந்தான். 

 

அப்போது எதிர்பாராத நேரத்தில் அவனின் கன்னத்தில் முத்தமிட்டு இருந்தாள் ஆராத்ரிகா.

 

அதில் பூரித்துப் போனவன் மடிக்கணினியை இயக்குவதை விடுத்துக் குனிந்து மனைவியைப் பார்த்து, 

 

“என்ன ஒரே ஷாக் ஆக இருக்கே?”என அவளிடம் புன்னகைத்துக் கொண்டே கேட்டான் அபூர்வன்.

 

“ஓஹோ! நான் கிஸ் கொடுக்குறதே உங்களுக்கு ஷாக் ஆ?”என்று செல்லமாய்க் கோபித்துக் கொண்டாள் அவனின் மனைவி.

 

“இல்ல! ரொம்ப நாள் கழிச்சு இவ்வளவு லவ்வில் இப்படி எனக்குக் கிஸ் கொடுத்து இருக்கிறேன்னு நினைக்கிறேன் ஆரா? நான் சொன்னது உனக்குப் புரியும்னு நினைக்குறேன்”என்று கூறி விட்டு மனைவியின் முகத்தைப் பார்த்தவனோ, 

 

தன் வார்த்தைகள் அவளைக் காயப்படுத்தி இருக்கிறது என்பதைக் கண்டு கொண்டதும் இவனுக்குக் கஷ்டமாகி விட்டது.

 

ஆனால் இவன் கூறியது உண்மை தானே!

 

அவள் காதலாய் இவனிடம் பேசி வெகு நாட்கள் ஆயிற்றே? 

 

“சாரிங்க.! எனக்குத் தூக்கம் வருது. நான் தூங்கறேன்”என அவன் பேசியதற்கு எந்த மாற்றுக் கருத்தும் சொல்லாமல் உறங்கத் தொடங்கினாள் ஆராத்ரிகா.

 

அதில் ஒரு பெருமூச்சை வெளியிட்டு விட்டு அவளைத் தொந்தரவு செய்யாமல் தன் வேலையைத் தொடர்ந்தான் அபூர்வன்.

 

அடுத்த காலை வேளையில் ஆராவிற்கு விழிப்புத் தட்டிய போது நேரம் ஒன்பது மணி ஆகி இருந்தது.

 

தன் அருகில் திரும்பி அபூர்வனைத் தேடிப் பார்த்தாள். 

 

ஆனால் அவனைக் காணவில்லை.

 

“கீழே இருப்பாரு. நான் வேற இவ்வளவு நேரமாகத் தூங்கிட்டேனே!”என்றெண்ணிக் கொண்டு எழுந்து கீழே வந்தவள் அங்கே அவளது அத்தை நீலவேணி மட்டுமே அமர்ந்து இருப்பது தெரிய அவரிடம் போய், 

 

“அத்தை! மாமா எங்க காணோம்? அவரையும் ஆளைக் காணோமே?”என்றவளுக்குக் குமட்டிக் கொண்டு வருவதைப் போலிருக்க சோபாவின் ஓரத்தில் அமர்ந்து கொண்டாள் ஆராத்ரிகா.

 

“அவரு வாக்கிங் போயிருக்காரு! முக்கியமான நேரத்தில் லீவ் போட்டுட்டீங்களேன்னு அபூர்வனைக் காலங்கார்த்தாலயே கால் பண்ணி வரச் சொல்லிட்டாங்க. நீ தூங்கிட்டு இருந்ததால் உன்னை எழுப்ப வேண்டாம்னுச் சொல்லிட்டு வேலைக்குக் கிளம்பிப் போய்ட்டான்”என்றத் தகவலைத் தெரிவித்து விட்டு அவளுக்கான பழச்சாற்றை எடுத்து வந்து கொடுத்தார் நீலவேணி. 

 

தன் மருமகளுக்குச் பழச்சாறு, களி, உணவு இதையெல்லாம் சரியான நேரத்தில் கொடுத்துக் கவனித்துக் கொண்டார் நீலவேணி.

 

“சரிங்க அத்தை”என்றவளுக்கு, 

 

அன்று அவர் குடிக்கக் கொடுத்தது தர்பூசணி பழச்சாறு! 

 

அவளுக்கு மிகவும் பிடித்தமானது! 

 

ஆதலால் அதை விரும்பிக் குடித்தாள் ஆராத்ரிகா.

 

பழச்சாற்றைக் குடித்து முடித்தவளிடம் காலை உணவைப் பற்றிக் கேட்டார்.

 

“வாந்தி வர்ற மாதிரி இருந்தால் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடு”எனக் காலைப் பதார்த்தம் தயாரானவுடன் அழைப்பதாகச் சொல்லி விட்டு அவளை அங்கேயே சாய்ந்து அமரச் சொன்னார் நீலவேணி.

 

தங்களது அறைக்குள் இருந்து வந்த போதே கையில் செல்பேசியையும் எடுத்துக் கொண்டு வந்திருந்ததால் அதில் புலனத்தில் குறுஞ்செய்தி எதுவும் வந்துள்ளதா? என்று ஆராய்ந்து பார்த்துக் கொண்டு இருந்தாள் ஆராத்ரிகா.

 

அப்போது கனிஷ்கா அனுப்பி இருந்த அந்தக் குறுஞ்செய்தி இவளது கண்களுக்குத் தென்பட்டது.

 

‘இப்போ நீ ஃப்ரீயாக இருந்தால் கால் பண்ணு ஆரா. இட்ஸ் வெரி அர்ஜன்ட்’என்றதைக் கண்டதும், 

 

சாதாரணமான விஷயத்திற்கு எல்லாம் இவ்வாறான குறுஞ்செய்தியை அனுப்ப மாட்டாள் கனிஷ்கா. 

 

அப்படியானால் உண்மையில் ஏதோ முக்கியமான விஷயமாகத் தான் இருக்கும்!

 

“அத்தை! ஒரு கால் பேசிட்டு வந்து பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடறேன்”என்று அவரிடம் தெரிவித்து விட்டுத் தங்கள் அறைக்குச் சென்று துரிதமாக கனிஷ்காவிற்குக் கால் செய்தாள் ஆராத்ரிகா.

 

“ஹலோ கனி. என்னாச்சுடி? அப்படி என்ன அர்ஜன்ட் ஆன விஷயம்?”

 

“உன் வீட்டுக்குக் காரிகா வந்ததைப் பத்தி அவகிட்ட கேட்டுத் திட்டினேன்டி! அவ என்னடான்னா சாரி கேட்டாள்! நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமாக இருங்கன்னுச் சொல்லிட்டு காலைக் கட் பண்ணிட்டாள்”எனத் தன்னிடம் காரிகா அப்படி பேசியது பயத்தைக் கொடுத்தது என்பதைப் போல் தோழியிடம் கூறினாள் கனிஷ்கா.

 

“என்னடி இப்படி சொல்லிட்டா? அவளுக்கு நான் கால் பண்ணிப் பேசலாம்னு இருந்தேன். ஆனால் உங்கிட்ட நம்மளை இனிமேல் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்றதைப் போல் பேசி இருக்காளே! இவளை நினைச்சாலே பயமாக இருக்குடி கனி”என்றவளோ,

 

தனக்காக இவ்விருவரும் எத்தனை போராட்டங்கள், கஷ்டங்கள் பட்டிருக்கிறார்கள் என்பதை எல்லாம் நினைத்துப் பார்த்து விட்டுக் காரிகாவை நினைத்து வருத்தம் அடைந்தாள் ஆராத்ரிகா. 

 

“நான் வேற அவ சொன்னதைக் கேட்டு ஒரு நிமிடத்தில் ஆடிப் போயிட்டேன்! ஒரு வேளை அவ நம்மக் கூட காண்டாக்ட்டே வச்சுக்காமல் மொத்தமாக நம்மளை விட்டுப் பிரிஞ்சுப் போயிட்டால் என்னடி செய்றது?”என்றக்

 

கனிஷ்காவிற்குத் தங்களது சக தோழியை நினைத்துக் கவலை அதிகமாகி விட்டிருந்தது.

 

“நீ வேற என்னைப் பயமுறுத்திட்டே இருக்காதே டி பக்கி! அவ உங்கிட்ட என்னவெல்லாம் பேசினாள்ன்றதை தெளிவாக, விவரமாகச் சொல்லு!”என்றதுமே, 

 

“முதல்ல அவளை நான் பேச விடாமல் திட்டிட்டேன்! அப்பறம் அவ நான் இனிமேல் உங்களைத் தொந்தரவு பண்ண மாட்டேன்னு சொன்னாள்”என ஆரம்பித்துக் காரிகா தன்னிடம் பேசியதை ஒரு வார்த்தை விடாமல் கூறி முடித்தாள் கனிஷ்கா.

 

காரிகா தங்களது நட்பை எப்பொழுதும் துண்டிக்க நினைக்க மாட்டாள் என்பது ஆராவிற்கு நன்றாகத் தெரியும்!

 

எனவே, அவள் வேறு எங்கும் வெளியூருக்குக் கூடச் செல்ல நினைக்கலாம்! 

 

அதனால் தான் அப்படி கூறி இருப்பாளாக இருக்கும்! 

 

“ஸ்ஸப்பா! அவ வீட்டுக்கு வந்ததே எனக்குச் செம்ம ஷாக் டி! இதில் உங்க ரெண்டு பேரோட உரையாடலைக் கேட்டதுக்கு அப்பறம் இன்னும் பதறுது! ஏன் தான் என்னோட ரெண்டு ஃப்ரண்ட்ஸ்ஸூம் என்னைப் பதட்டமாகவே வச்சுட்டு இருக்கீங்களோ? உங்களை என்னப் பண்றதுன்னு தெரியலை”எனக் கனிஷ்காவிடம் வெளிப்படையாகவே சலித்துக் கொண்டாள் ஆராத்ரிகா.

 

“கன்சீவா இருக்கிறியே இந்த டைமில் இவ உனக்கு ஸ்ட்ரெஸ் கொடுக்குறாளேன்னு தான் காரிகாவுக்குக் கால் பண்ணேன்டி! ரொம்ப சாரி!”என்று குற்ற உணர்ச்சியில் அவளிடம் மன்னிப்புக் கேட்டாள் கனிஷ்கா.

 

“அட அதை விடுடி! நீ எதுக்கு சாரி கேட்கனும். எனக்கு உதவி செய்யப் போய்த் தானே நீங்க ரெண்டு பேரும் இப்படி அல்லாடுறீங்க! அதுக்கு நான் தான் உங்க கிட்ட சாரி கேட்கனும்!”என்றவளோ, 

 

“நான் ஈவ்னிங் அவளுக்குக் கால் செஞ்சுப் பார்க்கிறேன். அவகிட்டேயும் சாரி கேட்கனும்!” என்று நிலைமை கையை விட்டுப் போவதற்குள் சரி செய்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் கனிஷ்காவிடம் சொன்னாள் ஆரா.

 

“எங்களுக்குச் சாரி எல்லாம் வேண்டாம்! நீ இப்படி தைரியமாகப் பேசறதே போதும்! எங்களால் உன் ஹெல்த் மோசமாகிடக் கூடாது! அது மட்டும் எங்களுக்கு இப்போ முக்கியம்”என்று அவளுக்கு அறிவுறுத்தினாள் கனிஷ்கா.

 

“சரிடி! நான் என்னை நல்லா பார்த்துக்கிறேன்! அடியே எனக்கே இங்க வாமிட் வர ஆரம்பிச்சுருச்சு! நான் இன்னும் பிரேக்பாஸ்ட் சாப்பிடலை! நீ மெசேஜ் பண்ணதும் உடனே கால் பண்ணிட்டேன்!” என்றவள் இயல்பாகப் பேசியது கனிஷ்காவின் மனதிற்கு நிம்மதியாக இருந்தது. 

 

“அபூர்வன் காரிகாவைப் பத்திக் கேட்டாரா? அவளைப் பத்தி வேற எங்கேயும் விசாரிச்சாரா?”என்று அபூர்வனை அவள் எவ்வாறு சமாளித்தாள் என்பதை அறிந்து கொள்ள கேட்க, 

 

“இல்லடி. நான் கன்சீவா இருக்கிறதால் கவனமாகப் பாத்துக்கனும்னு அவர் எதுவும் கேட்டுக்கிறது இல்லை! நானாகப் போட்டு வாங்கிப் பான்க்கலாம்னுக் கேட்டாலும் கூலா தேவை இல்லைன்னுப் பதில் சொல்றாரு. இவர் இப்படியே இருந்துட்டால் நல்லது!”என்று அவள் நேர்மறையாகப் பேசியது கனிஷ்காவிற்கும் ரொம்பப் பிடித்திருந்தது.

 

“நீ சொல்றதும் வாஸ்தவம் தான்! அண்ணா எப்படியும் உனக்காக மாறிடுவாரு! இந்தக் காரிகாவை நினைச்சா தான் பைத்தியமே பிடிக்குது. அவளுக்கு உன்னைத் தானே ரொம்பப் பிடிக்கும்? அதனாலேயே உங்கிட்ட நேரில் பேசனும்னு ஆசையாக வந்தாள்! ஆனால் அப்படி நீங்கப் பேசிக்கிற சூழ்நிலை இல்லைன்னுத் தெரிஞ்சதும் ரொம்ப ஃபீல் பண்றாள் போல?”எனத் தோழிக்காக வருத்தப்பட்டாள்.

 

“ஆமாம் கனி. அவ காலேஜ் படிக்கிற டைமிலேயே எப்பவும் என் கூடத் தான் இருப்பாள்! இப்பவும் என்னோட ஃப்ரண்டஷிப்பை அவ்வளவு மதிக்கிறாள்! ஆனால் எங்களால் தான் ஒருத்தருக்கு ஒருத்தர் அதிகமாகப் பார்த்துப் பேசிக்க முடியலை! எல்லா பிரச்சனையும் முடிஞ்சதும் நாம மூனு பேரும் எப்பவும் போல நல்ல ஃப்ரண்ட்ஸ் ஆக ஜாலியாக இருப்போம்!”என்று உணர்வுபூர்வமாக கூறினாள் ஆராத்ரிகா. 

 

“நீங்க இப்போதைக்கு உங்க வயித்துல இருக்கிற என்னோட செல்லத்தை நல்லாக் கவனிச்சுக்கோங்க! எல்லாம் நல்லதே நடக்கும். மிசஸ். ஆராத்ரிகா அபூர்வன்”என்றதுமே,

 

 அவள் கடைசியாக கூறிய அந்த ஆராத்ரிகா அபூர்வனில் சிரிப்பு வந்தது ஆராவிற்கு.

 

அபூர்வனும் ஒரு தடவை இந்த மாதிரி தானே தனது முழுப்பெயரில் அழைத்திருந்தான் என்றெண்ணிச் சிரித்தாள். 

 

அவளது சிரிப்பின் சத்தத்தைக் கேட்டதும்,”இப்படியே அழகாகச் சிரிச்சுட்டே இரு! நான் காலைக் கட் பண்றேன்”என்று கூறி அவள் அழைப்பைத் துண்டித்து விடவும், 

 

காலை உணவைத் தாமதமாக உண்பது சரியில்லை என்று தனக்காக காத்திருக்கும் அத்தையிடம் செல்ல நினைத்துப் படியில் இறங்கத் தொடங்கினாள் ஆராத்ரிகா.

 

ஆனால் இறுதிப் படியில் இறங்கும் பொழுது கால்கள் தளர்ந்து அப்படியே மயங்கிச் சரிந்து விட்டாள்.

 

“ஆராம்மா!” 

 

– தொடரும்

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்