

மருத்துவமனையின் அறையில் மயக்கத்துடன் படுத்திருந்தாள் நிவாசினி.
அவள் படுத்திருந்த கட்டிலின் அருகே இருந்த நாற்காலியில் சோகமாய் அமர்ந்திருந்தான் நித்திலன்.
மெதுவாய் அவள் கண் விழிக்க முயற்சி செய்வது போல் முகத்தைச் சுருக்கவும், சட்டென அவளின் அருகே சென்று கன்னத்தை லேசாய் தட்டியவனாய், “ஹனிமா.. ஹனி… கண் முழிச்சி பாருடா” என்று கவலை நிறைந்த குரலில் உரைத்தான்.
மெல்ல கண் விழித்துப் பார்த்தவள், தான் எங்கே இருக்கிறோம் என்ற கேள்வியுடனேயே சுற்றும் முற்றும் பார்த்தாள்.
குழப்பமான முகத்துடன் அவள் நித்திலனைப் பார்க்க, அவள் கண் விழித்த மகிழ்ச்சியில் கண்ணீருடன் அவளின் நெற்றியில் முத்தமிட்டவனாய், “ரெண்டு நாளா என் உசுரே என்கிட்ட இல்ல தெரியுமா ஹனிமா. ரொம்பப் பயமுறுத்திட்டடா நீ” கண்களில் கண்ணீர் வழிய உரைத்தான்.
அச்சமயம் அறைக்குள் வந்தனர் பவானியும் அபிநந்தனும்.
“ஹாசினி முழிச்சிட்டியாடி” என்று தோழியை அணைத்த பவானி நித்தலனை முறைத்தவளாய், “உங்களை யாரு உள்ளே விட்டது? உங்களை இவக்கிட்டயே வரக் கூடாதுனு சொல்லிருந்தேன் தானே. இனி இவ உங்க பொண்டாட்டி கிடையாது. இங்கிருந்து போங்க” என்று கத்தினாள்.
அபிநந்தன் பவானியின் அருகில் சென்று, “காம் டவுன் வனி” என்றான்.
“எப்படிங்க அமைதியா இருக்க முடியும். சொத்துக்காகக் குழந்தையை அழிக்க நினைக்கிற இவருலாம் மனுஷனே கிடையாது” என்று கத்தினாள்.
பவானி கத்தியதில் இருந்தே அவளைக் குழப்பத்துடன் பார்த்திருந்த நிவாசினி, அவள் குழந்தை என்றதும் தனது வயிற்றில் கை வைத்தவளாய், “பவா என் குழந்தை.. என் குழந்தை நல்லா இருக்கு தானே” எனக் கலங்கிய குரலில் கேட்டாள்.
“குழந்தை நல்லா இருக்காடா” என்று அவளிடம் உரைத்த பவானி நித்திலனைப் பார்த்து, “இங்கே இருந்து போங்க. உங்க வீடு தேடி டிவோர்ஸ் நோட்டீஸ் வரும்” என்றாள்.
“வனி அவங்களுக்குள்ள பேசி எடுக்க வேண்டிய முடிவு இது. இதுல நீ தலையிடாத” என்றான் அபிநந்தன்.
“நான் தான்ங்க இவரை நல்லவருனு நம்பி இவளுக்குக் கல்யாணம் செஞ்சி வச்சேன். என் தோழி வாழ்க்கை இப்படி ஆக நானே காரணம் ஆகிட்டேனேனு கில்டியா இருக்கு நந்தா எனக்கு. இந்தக் குழந்தைக்கு ஏதாவது ஆச்சுனா என்னால தாங்கிக்க முடியாது நந்தா” என்று கண்ணீருடன் உரைத்தாள் பவானி.
“அதுக்காக நீயே அவங்க வாழ்க்கையோட முடிவை எடுப்பியா? அதுக்கு உனக்கு எந்த உரிமையும் இல்ல வனிமா. டிவோர்ஸ் கொடுக்கிறேன்னு நிவாசினி முடிவு செஞ்சி சொல்லட்டும். அந்த முடிவை நீ எடுக்காதனு தான் சொல்றேன்” என்றான்.
“ஓஹோ அவ வாயால இதைச் சொல்லனும்னு சொல்றீங்களா?” என்று ஆக்ரோஷமாக உரைத்தவள், “ஹாசினி சொல்லுடி! உன் புருஷனுக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்புறேன்னு சொல்லு” என்றாள்.
கண்ணீர் பார்வையை மறைக்க நித்திலனைப் பார்த்தாள் நிவாசினி.
நித்தலனின் கண்களும் குளமாகி இருக்க, “என்னை நீ நம்பலையா ஹனி? நம்ம குழந்தையை நானே அழிக்கனும்னு நினைப்பேனா?” என்றான்.
நிவாசினியின் உள்ளம் அவன் காதலை வெறுக்க முடியாமலும் அதே சமயம் ஏற்க முடியாமலும் தத்தளிக்கக் கண்களில் கண்ணீர் கரைப் புரண்டோட, “எனக்கு என் குழந்தை வேணும். என் குழந்தையை அழிக்க நினைக்கிற நீங்க வேண்டாம் நித்திப்பா” அழுகையுடன் உரைத்தாள்.
நெஞ்சத்தைக் கத்தியால் கீரிய வலியை உணர்ந்தான் நித்திலன்.
அவளும் இதயம் முழுவதும் ரணமாய் வலிக்க அவனைப் பார்த்திருந்தாள்.
கண்ணீருடன் வேதனை நிறைந்த குரலில், “ரெண்டாவது முறையும் நான் தோத்துட்டேன் ஹனி. அன்னிக்கு உன் தாத்தா பேச்சைக் கேட்டு என்னைச் சந்தேகப்பட்டு விட்டுட்டு போன! இன்னிக்கு உன் ஃப்ரண்ட் பேச்சைக் கேட்டு விட்டுட்டு போறனு சொல்ற! உன் நித்திப்பாவை நீ புரிஞ்சிக்கிட்டது அவ்ளோ தானா ஹனி? என் கூட வாழ்ந்த வாழ்க்கைல என் காதலை நீ புரிஞ்சிக்கவே இல்லையாடா? ஒரு நிமிஷம் கூட என் காதலை நீ உணரலையா ஹனி? நம்ம குழந்தையை அழிக்க நானே நினைப்பேனா?” என்றவன் குலுங்கி அழுதான்.
‘நித்திப்பா’ அவளின் உள்ளம் கதறி அழைத்தாலும் வாயை இறுக மூடியவளாய் தேம்பலுடன் அவனைப் பார்த்திருந்தாள் நிவாசினி.
தன்னைத் தேற்றிக் கொண்டு கண்ணீரைத் துடைத்தவனாய்,
“நான் இல்லாத வாழ்க்கை தான் உனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும்னா அதையும் நான் தரேன் ஹனி. நாம டிவோர்ஸ் செஞ்சிக்கலாம்” என்று உருக்கமாக உரைத்தவன் சட்டென அங்கிருந்து சென்றிருந்தான்.
அவன் அவ்வாறு உரைத்து விட்டு சென்றதை ஏற்க முடியாது நெஞ்சம் வலிக்கக் கண்ணீருடன் பார்த்திருந்தவளின் மனமோ, ‘நித்திப்பா! போகாதீங்க’ என்று அரற்ற, அதீத மன அழுத்தினால் மீண்டுமாய் மயங்கிச் சரிந்திருந்தாள் நிவாசினி.
*******
ஆழ்ந்த மயக்கத்திற்குள் இருத்தவளின் உள்ளமோ, ‘நித்திப்பா.. நித்திப்பா’ என்று அரற்றியவாறு இருக்க, அவளின் மூளையோ முன்பொரு முறை இதே போன்று நடந்த நிகழ்வை அவளுக்குக் கனவாய்க் காட்சிப்படுத்தியது.
அக்கனவில் மருத்துவமனையில் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருக்கும் நிவாசினி முன்பு நின்றிருக்கிறான் நித்திலன்.
கலங்கிய கண்களுடன் நின்றிருக்கும் அவனருகில் ஆவேசம் கொண்டவராய்க் கோபமாக அவனைத் திட்டிவாறு நின்றிருக்கிறார் அவளின் தாத்தா.
“எதுக்காக இப்ப நீ இங்கே வந்திருக்க? சொத்துக்காக வயித்துல வளர்ற குழந்தையை அழிச்ச பாவி நீ! இனி என்னிக்கும் என் பேத்தி உனக்குக் கிடையாது. இங்கிருந்து போய்டு” என்று கத்தியிருந்தார் அவளின் தாத்தா.
“அதை நீங்க சொல்லாதீங்க. என் பொண்டாட்டி சொல்லட்டும்” என்றவன்,
“ஹனி நான் அப்படிச் செஞ்சிருப்பேன்னு நினைக்கிறியா?” என அவளிடம் கேட்டான்.
அவள் வாயைத் திறக்காமல் தேம்பி அழுதவாறு இருக்க, “அவளை என்னடா கேட்குறது? என் பேத்திக்கிட்ட இருந்து உனக்கு விவாகரத்துப் பத்திரம் வரும். இனியும் என் பேத்தி உன் கூட வாழுவானு கனவுலயும் நினைக்காத” என்றார்.
“ஹனி நீ சொல்லு! உன்னால என்னை விட்டு வாழ முடியுமா? நம்ம குழந்தையை அழிக்கிற அளவுக்கு நான் கெட்டவனா ஹனி? அப்படித் தான் நீ என்னை நினைக்கிறியா?” என்று வேதனை நிறைந்த குரலில் கேட்டான்.
“சொல்லுமா. ஆமாடா நீ தான் என் குழந்தையை அழிச்சனு அவன் மூஞ்சிக்கு நேரா சொல்லு. எதுக்காகத் தயங்குற? உனக்குத் துணையா நான் இருக்கேன். அவனால உன்னை ஒன்னும் பண்ண முடியாது. பயப்படாம சொல்லு மா” என்றார் அவளின் தாத்தா.
குரலைச் செருமியவளாய் அழுகையுடன், “என் குழந்தையைத் திட்டம் போட்டு அழிச்ச நீங்க எனக்கு வேண்டாம் நித்திப்பா. நாம டிவோர்ஸ் செஞ்சிக்கலாம்” என்று தேம்பலுடன் திக்கித் திணறியவாறு உரைத்தாள்.
கண்களில் கண்ணீர் வழிந்தோட அவளைப் பார்த்த நித்திலன், “என்னை நீ நம்பலையா ஹனி. நம்ம குழந்தையை நானே எப்படிடா அழிப்பேன்” என்று வேதனையுடன் உரைத்தான்.
அவளின் கண்ணீரும் மௌனமும் மேலும் அவனை வதைக்க, தன்னை நிதானப்படுத்திக் கொண்டு கண்களைத் துடைத்தவனாய், “நான் இல்லாத வாழ்க்கை தான் உனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும்னா அதையும் நான் தரேன் ஹனி. நாம டிவோர்ஸ் செஞ்சிக்கலாம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான்.
‘நித்திப்பா’ என்று அவளின் உள்ளம் அரற்ற மயங்கியிருந்தாள் நிவாசினி.
அப்போது அவள் மயக்கத்தில் இருந்தாலும் தன்னைச் சுற்றி நிகழ்பவைகள் அவளால் கேட்கவும் உணரவும் முடிந்தது.
மருத்துவர்கள் அவளை வந்து பரிசோதிப்பதை அவளால் உணர முடிந்தது.
அவர்கள் அவளது தாத்தாவிடம் ஏதோ உரைத்து விட்டு செல்வதையும் அங்கே மீண்டும் நித்திலன் குரல் ஒலிப்பதையும் கேட்டாள்.
“நீ என் பேத்தியோட வாழ்க்கைக்குள்ள வராம போயிருந்தா இப்படிலாம் அவளுக்கு நடந்திருக்கவே செய்யாது” என்று அவளின் தாத்தா நித்திலனைத் திட்டுவதையும், அதற்கு நித்திலன் கோபமாகப் பேசுவதையும் கேட்டவாறு மயக்கத்தில் இருந்தாள்.
நித்திலனின் பேச்சில் கோபமான தாத்தா நித்திலனை அடித்து அந்த அறையை விட்டு வெளியே துரத்துவதையும் உணர்ந்தாள்.
அடுத்தச் சில நிமிடங்களில் உள்ளே வந்த அவளின் தாத்தா மயக்கத்தில் இருந்த நிவாசினியிடம் கோபமாகப் பேசினார்.
“அப்படி என்ன காவிய காதல் உனக்கும் அவனுக்கும். எவ்ளோ பிளான் செஞ்சி போராடி உன்னை அவன்கிட்ட இருந்து பிரிச்சிட்டு வந்தேன் தெரியுமா? இப்படிக் கண்ட சாதிக்காரப் பயலு கூட வாழுறதுக்குப் பதிலா நீ செத்துருந்தா கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். இனியும் உன்னை அவன் கூடச் சேர விடுவேன்னு நினைக்கிறியா? மயக்கத்திலருந்து நீ திரும்ப வரும் போது அவன் நினைப்பை முழுசா அழிச்சிட்டு தான் வரனும். திரும்பவும் முழிச்சி வந்து அவன் கூடத் தான் வாழுவேன்னு நீ நின்னா, நானே உனக்கும் அவனுக்கும் விஷத்தைக் கொடுத்து கொன்னுடுவேன்” என்று ஆங்காரமாய் உரைத்தவராய் அந்த அறையை விட்டுச் சென்றிருந்தார் அவளின் தாத்தா.
அன்று மயக்கத்தில் இதனைக் கேட்டிருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து காதினுள் புகுந்தது.
அதே போன்று இப்போது மயக்கத்தில் இக்காட்சிகளைக் கனவாய் பார்த்திருந்தவளின் கண்களில் இருந்தும் கண்ணீர் வடிந்து காதுகளுக்குள் ஓட, அருகில் அமர்ந்திருந்த பவானி மயக்கத்தில் இருப்பவளின் கண்ணீரைப் பார்த்துப் பயந்தவளாய், “டாக்டர்.. நர்ஸ்.. இங்க வாங்க” என்று கத்தியவாறு வெளியே சென்றாள்.
மருத்துவர் கிருஷ்ணனுடன் பவானியும் அபிநந்தனும் அறைக்குள் வந்து பார்த்த போது கண்விழித்து எழுந்து அமர்ந்திருந்தாள் நிவாசினி.
“ஹாசினி முழிச்சிட்டியா” ஆசுவாச மூச்சுடன் அவளருகே வந்த பவானி, “எழுந்துட்டியாடி! திரும்பக் கோமாவுக்குப் போய்ட்டியோனு பயந்துட்டேன்டி” என்றாள்.
“ஓ நான் மயங்கிப் போய் ரொம்ப மாசம் ஆயிடுச்சா?” என்று கேட்டாள் நிவாசினி.
“என்னடி இப்படிக் கேட்குற? காலைல தான்டி மயக்கம் போட்ட! இப்ப சாய்ந்திரம் ஆகுது” என்றாள் பவானி.
நிவாசினியைப் புருவ முடிச்சுடன் பார்த்த மருத்துவர், பவானியையும் அபிநந்தனையும் வெளியே அனுப்பி விட்டு, “நிவாசினி ஆர் யூ ஓகே?” எனக் கேட்டவாறு அவளைப் பரிசோதித்தார்.
கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவளாய், “நான் நல்லா இருக்கேன் டாக்டர்” என்றாள் நிவாசினி.
“இப்ப உங்கக்கிட்ட பேசிட்டுப் போனாங்களே அவங்க யாருனு உங்களுக்குத் தெரியுதா நிவாசினி” எனக் கேட்டார்.
“தெரியுது டாக்டர். என் ஃப்ரண்ட் பவானி” என்றாள்.
தனது கைப்பேசியில் ஒளிப்படம் ஒன்றை எடுத்துக் காண்பித்து, “இவர் யாருனு தெரியுதா?” எனக் கேட்டார்.
“என் ஹஸ்பண்ட் நித்திலன்” என்றாள்.
“உங்களுக்குக் கல்யாணமாகி எத்தனை நாள் ஆகுது?” என்று கேட்டார்.
விர்ரென்று வலித்த நெற்றியை அழுத்திப் பிடித்தவளாய், “ரொம்ப நாள் ஆன மாதிரி தோணுது டாக்டர்” என்றாள்.
“ரொம்ப நாள்னா ரொம்ப மாசமா இல்ல ரொம்ப வருஷமா?” எனக் கேட்டார்.
“ரொம்ப வருஷம் டாக்டர்” என்றாள்.
மருத்துவரின் நெறித்த புருவம் விரிந்து அவரின் முகம் மகிழ்வில் ஒளிர, “உங்களுக்குப் பழசுலாம் ஞாபகம் வந்துடுச்சா நிவாசினி?” எனக் கேட்டார்.
மெல்ல நிமிர்ந்து மருத்துவரின் கண்ணோடு பார்த்த நிவாசினி, “அப்படித் தான் நினைக்கிறேன் டாக்டர்” என்றாள்.

