

மருத்துவர் அறையில் கவலைத் தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த நித்திலனிடம் ஓடோடிச் சென்ற மருத்துவர் கிருஷ்ணன்,
“நித்தலன் சக்சஸ்! நம்ம பிளான் சக்சஸ் ஆகிடுச்சு” என்று மகிழ்வுடன் உரைத்தார்.
மருத்துவரைப் புரியாத பார்வை அவன் பார்க்க, “உங்க மனைவிக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்துடுச்சு நித்திலன். அதுக்காக தானே நாம இவ்ளோ நாடகம் போட்டோம். நம்ம பிளான் சக்சஸ் ஆகிடுச்சு” என்றவர் கூறியதைக் கேட்டு இன்ப அதிர்வுடன் எழுந்து நின்று விட்டான் நித்திலன்.
“நிஜமாவா டாக்டர்” மகிழ்வான குரலில் கேட்டவனின் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.
“நான் போய் அவளைப் பார்க்கிறேன் டாக்டர்” என்றவன் போக முற்பட, அவனைத் தடுத்து நிறுத்திய மருத்துவர், “இருங்க நித்திலன். அவங்க அபார்ஷனுக்கு நீங்க தான் காரணம்னு அவங்க நம்பின நிலைல தானே கோமாக்கு போனாங்க. இப்பவும் அவங்க உங்க மேல அதே எண்ணத்துல இருந்தாங்கனா நீங்க போய் நின்னதும் அவங்க ஹைப்பர் ஆகி மயங்க வாய்ப்பிருக்கு. அதனால ரெண்டு நாள் பொறுத்திருங்க நித்திலன். அவங்ககிட்ட நான் பேசுறேன். அதுக்குப் பிறகு நீங்க வந்து பாருங்க. இப்ப நீங்க கிளம்புங்க” என்றார்.
கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவனாய், “சரிங்க டாக்டர். நீங்க சொல்லும் போதே நான் வந்து பார்க்கிறேன்” என்றவன் அங்கிருந்து செல்ல மனமே இல்லாமல் ஓரடி எடுத்து வைத்தவன் திரும்பி மீண்டும் மருத்துவரிடம் வந்தவனாய், “நான் அவளுக்குத் தெரியாம மறைஞ்சி இருந்து ஒரு தடவைப் பார்த்துட்டு போய்டுறேனே டாக்டர்” கெஞ்சும் பார்வையுடன் அவரிடம் கேட்டான்.
“இப்படி அன்பு கிடைக்குறதுக்கு நிவாசினி நிஜமாவே கொடுத்து வச்சிருக்கனும் நித்திலன்” மென்னகையுடன் நித்திலனின் தோளில் தட்டியவராய் உரைத்தவர் அவன் பார்த்து விட்டு செல்ல அனுமதி அளித்தார்.
நித்திலனைத் தன்னுடன் அழைத்துச் சென்ற கிருஷ்ணன் ஒரு ஜன்னலின் அருகே அவனை மறைவாய் நிற்கச் சொல்லி விட்டு நிவாசினி தங்கியிருந்த அறைக்குள் சென்றார்.
“அடியேய் நிவாஸூ தீபாவளி படம் ஹீரோயின் மாதிரி என்னை மறந்து போய்டுவியோனு பயந்தே போய்ட்டேன்டி” என்று பவானி உரைக்கவும், அபிநந்தன் சிரிக்க,
“நிவாஸூனு கூப்பிடாதனு எத்தனை தடவை சொல்லுறதுடி உனக்கு” என்று சிரிப்பும் கோபமுமாய் உரைத்தாள் நிவாசினி.
இவர்களின் பேச்சைச் சிரிப்புடன் கேட்டவராய் உள்ளே நுழைந்த கிருஷ்ணன், “ரூம் ரொம்ப அனலா தெரியலை. கொஞ்சம் காத்தோட்டமா இருந்தா தான் அடிக்கடி மயக்கம் வராது நிவாசினி” என்றவராய் நித்திலன் நின்றிருந்த ஜன்னலை திறந்து விட்டார்.
முகத்தில் மகிழ்வு பொங்க ஜன்னலருகே மறைவாய் நின்று அவளைப் பார்த்திருந்தான் நித்திலன்.
மருத்துவரின் அவளின் கை மணிக்கட்டில் நாடியைப் பிடித்துப் பார்த்தார்.
“டாக்டர் வயித்துல குழந்தை நல்லா இருக்கு தானே? எதுக்கும் டெஸ்ட் செஞ்சி பார்த்துடுவோமா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர். இந்த முறை என் குழந்தைக்கு எனக்கு வேணும் டாக்டர்” எனும் போதே அவளின் குரல் தழுதழுக்க கண்கள் கண்ணீரைப் பொழிந்திருந்தன.
அவளை ஜன்னலருகே நின்று பார்த்தவனின் கண்களும் கண்ணீரைப் பொழிய, ‘இன்னும் நம்ம குழந்தையை நான் அழிச்சிடுவேன்னு நினைக்கிறியா ஹனிமா’ என்று மனத்தோடு பேசிக் கொண்டவனின் நெஞ்சத்தில் பெரும் வலியை உணர்ந்தான்.
வாய்விட்டுக் கதறி அழ தோன்றிய உணர்வை அடக்கியவனாய் அவளையே பார்த்திருந்தவன் அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் கண்ணீரைத் துடைத்தவனாய் அங்கிருந்து சென்றிருந்தான்.
“நான் சொல்ற டாக்டரைப் போய் பாருங்க நிவாசினி. உங்க குழந்தை பிறக்கிற வரைக்கும் அவங்க உங்களை கவனமா பார்த்துப்பாங்க” என்று நம்பிக்கை வார்த்தை அளித்தவராய் மகப்பேறு மருத்துவரின் பெயரை எழுதிக் கொடுத்தார் மருத்துவர்.
“இப்ப நீங்க டிஸ்சார்ஜ் ஆகிடலாம். ரெண்டு நாள் கழிச்சி வாங்க. அப்ப ஒரு செக்கப் மட்டும் செஞ்சி பார்த்துடலாம்” என்றார்.
அதன் பிறகு நிவாசினியை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் பவானியும் அபிநந்தனும்.
அன்றைய நாள் முழுவதும் உறங்கியே கழித்த நிவாசினியின் மனம் இரவு நேரம் ஆனதும் நித்தலனின் நிகழச்சியைக் கேட்கச் சொல்லி பரபரத்தது.
இவள் அலைவரிசையை வைக்கவும் நித்திலன் பேசவும் மிகச் சரியாக இருந்தது.
“ஹாய் ஹலோ வணக்கம் அண்ட் வெல்கம் டூ நித்தில நினைவுகள் வித் மீ நித்திலன்” என்று உற்சாகக் குரலில் தொடங்கியவனின் குரலைக் கேட்டு இவளுக்குள்ளும் உற்சாகம் தொற்றிக் கொண்டதைப் போல் உணர்ந்தாள்.
‘அதெப்படி என்ன நடந்தாலும் இவரை என்னால வெறுக்கவே முடிய மாட்டேங்குது. அதான் இவரை யாருனு மறந்த நிலைல கூட இவரையே பைத்தியமா காதலிச்சி கல்யாணம் செஞ்சிருக்கேன் போல’ என்று மனத்தோடு பேசியவளாய் சிரித்துக் கொண்டாள் நிவாசினி.
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
என்று பாடல் அலறவும் தனது நினைவில் இருந்து மீண்டு நிகழ்வுக்கு வந்தவளோ, ‘ஏன் இப்ப இந்தப் பாட்டைப் போட்டிருக்காரு’ என்று நினைத்தாள்.
அங்கோ வானொலி நிலையத்தில் அமர்ந்திருந்த நித்தலன் இப்பாடலின் வரியினைப் போல் மார்பு துடிக்க வலியுடன் அமர்ந்திருந்தான்.
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைப் போல் பாவை தெரியுதடி
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு
இருவரும் இரு வேறு மனநிலையிலும் சிந்தனையுடனும் இப்பாடலைக் கேட்டு முடித்திருந்தனர்.
அந்நேரம் நிவாசினியின் அறைக்குள் வந்தாள் பவானி.
“நாளைக்கே டாக்டர் சொன்ன கைனிக் டாக்டரைப் போய் பார்க்கலாம் ஹாசினி. அபி அப்பாய்ட்மெண்ட் வாங்கிட்டாரு” என்றவளாய் மெத்தையில் அவளருகில் சென்று அமர்ந்தாள்.
“ஏன்டி நீ இதெல்லாம் செஞ்சிட்டு இருக்க?” எனக் கேட்டாள் நிவாசினி.
“பின்னே புருஷனை டிவோர்ஸ் பண்ண பிறகு உனக்குனு ஒரு வாழ்க்கை அமையுற வரைக்கும் நான் தானே உன்னைப் பார்த்துக்கனும்டி” என்றாள் பவானி.
“என்னது டிவோர்ஸ்ஸா? நான் எப்ப என் புருஷனை டிவோர்ஸ் செய்றதா சொன்னேன்” என்று நிவாசினி அதிர்வுடன் கேட்டதில், “என்னடி இப்படிச் சொல்ற? மயங்குறதுக்கு முன்னாடி பேசினதுலாம் மறந்து போச்சா உனக்கு?” என்று கேட்டாள் பவானி.
நிவாசினிக்கு கனவில் அவளின் தாத்தா உரைத்தது மட்டுமே நினைவினில் இருக்க, “இல்லடி மயக்கத்துல ஒரு கனவு வந்துச்சுடி. அதனால தான் எனக்கு பழசுலாம் ஞாபகம் வந்துச்சு. அது தான் இப்ப எனக்கு மைண்ட்ல இருக்கு” என்றாள் நிவாசினி.
நிவாசினி மயங்கி விழுவதற்கு முன்பு நிகழ்ந்தவைகளை உரைத்தாள் பவானி.
‘ஓ அதான் வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மானு இந்தப் பாட்டைப் போட்டிருக்காரா அவரு’ என்று மனத்தோடு நினைத்தவளாய் அமைதியாக இருந்தாள் நிவாசினி.
“பிளான் செஞ்சி உன்னை கல்யாணம் பண்ணிட்டு உனக்கு குழந்தை இல்லாம ஆக்கி அவரோட கைக்குள்ள வச்சிக்கிட்டு உன்னோட சொத்தெல்லாம் எழுதி வாங்கி ஆயுசுக்கும் அவரும் அவர் குடும்பமுமே அனுபவிக்கலாம்னு பிளான் போட்டிருக்காருடி” என்றாள் பவானி.
“அப்படினு உனக்கு யாரு சொன்னா?” எனக் கேட்டாள் நிவாசினி.
“என்னடி இப்படிக் கேட்குற? இல்லனா அவரு ஏன் உன் குழந்தையை அழிக்க நினைக்கனும்?” எனக் கேட்டாள் பவானி.
பெருமூச்சு விட்டவளாய் எழுந்து ஜன்னலருகே சென்று நின்ற நிவாசினி, “இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் என் தாத்தா தான்டி. நித்திப்பா இல்ல. ஆனா இப்ப ஏன் அவர் மருந்து கொடுத்தாருனு தான் எனக்குப் புரியலை” என்றாள் நிவாசினி.
“என்னடி சொல்ற? எனக்கு ஒன்னும் விளங்கலை” என்றாள் பவானி.
“எனக்கும் நித்திப்பாக்கும் முதல்ல நடந்த கல்யாணத்தைப் பத்தி சொன்னா தான் அவர் பக்க இருக்க நியாயம் உனக்கு புரியும் பவா” என்ற நிவாசினி தன்னுடைய பழைய நினைவுகளைக் குறித்துக் கூறத் தொடங்கினாள்.
“நித்திலனைப் பார்த்ததும் பிடிச்சிது எனக்கு. இக்கட்டான சூழ்நிலைல இருக்கும் போது தான் அவரைப் பார்த்தேன். சென்னைல ரெண்டு மூனு வருஷமா வேலை செஞ்சிட்டு இருந்தப்ப, வேற கம்பெனியில வேலைக்குப் போலாம்னு தேடிட்டு இருந்தேன். பெங்களூர்ல ஜாப் வேகன்ஸி இருக்குனு தெரிய வந்து அங்க இன்டர்வியூ அடெண்ட் செய்யலாம்னு போனேன். அப்பாவும் தாத்தாவும் அதுக்கு ஒத்துக்கவே இல்லை. அம்மா தான் அவங்கக்கிட்ட பேசி ஒத்துக்க வச்சி அனுப்பி வச்சாங்க. சென்னைல இருந்து பெங்களூர் போகுற வரை எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனா அங்க இருந்த லோக்கல் பஸ்ல இன்டர்வியூ நடக்கிற இடத்துக்குப் போகும் போது இறங்க வேண்டிய ஸ்டாப் மறந்து போய் நான் திணறிட்டு இருக்கும் போது வந்து ஹெல்ப் பண்ணாரு. எங்க போகனும் கேட்டு அந்த ஆபிஸ் போகுற வரை கூடவே இருந்தார். இன்டர்வியூல செலக்ட்டான பிறகு மூனு மாசம் கழிச்சு அந்த ஆபிஸ்ல ஜாய்ன் பண்ணிட்டு பெங்களூர்ல ரூம் பார்த்து ஷிப்ட் ஆகிட்டேன். அதுக்குப் பிறகு நான் வேலை பார்த்த ஆபிஸ்ல யாரையோ பார்க்க வந்து ஆபிஸ் கேட் கிட்ட வெயிட் பண்ணிட்டு இருந்தாரு. அப்ப போய் பேசினேன். அதுக்குப் பிறகு அடிக்கடி அந்த ஆபிஸ்ல வேலை செய்ற ஃப்ரண்ட்டை பார்க்க வந்ததா சொல்லி என்கிட்ட பேசிட்டு போக ஆரம்பிச்சாரு. எனக்கு பெங்களூர்ல ஃப்ரண்ட்னு சொல்லிக்கப் பெரிசா யாரும் இல்ல. எங்கயும் வெளில போகனும்னாலும் தனியா தான் போய்ட்டு இருந்தேன். இவரும் அப்ப கூட ஜாய்ன் பண்ணிக்க ஆரம்பிச்சாரு. இப்படியே எங்க ஃப்ரண்ட்ஷிப் டெவலப் ஆகி ஆறு மாசத்துல நாங்க க்ளோஸ் ஃப்ரண்ட்டா மாறின டைம்ல ஒரு நாள் நிவேதாவை ஒரு ஹோட்டல்ல வச்சி எனக்கு இன்ட்ரோ கொடுத்தாரு. நிவேதா அவங்கக்கிட்ட ரொம்ப உரிமையா பேசினது எனக்கு ஒரு மாதிரி மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு. அப்ப நிவேதா நித்தலனுக்கு ப்ரபோஸ் செஞ்சாங்க. நித்திலனும் அக்சப்ட் பண்ணிக்கிட்டது போல ரியாக்ட் செய்யவும், நான் அழுதுட்டே அந்த இடத்தை விட்டுப் போய்ட்டேன்” என்றவள் நிறுத்தவும்,
இன்ப அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொண்டவளாய், “ஹே ஹாசினி இது உனக்கு வந்த கனவு தானே? கனவுல நிவேதா உன் புருஷனுக்கு பிரபோஸ் செஞ்சதைப் பார்த்துத் தானே உங்களுக்குள்ள சண்டை வந்துச்சு. அப்ப இதெல்லாம் நிஜமா நடந்துச்சாடி? உன் வாழ்க்கைல நடந்தது தான் உனக்கு கனவா வந்துச்சாடி?” எனக் கேட்டாள் பவானி.
“ஆமாடி அப்படித் தான் நினைக்கிறேன்” என்ற நிவாசினி தனது நினைவுகளை தொடர்ந்து கூறினாள்.
“அன்னிக்கு என் அழுகையைப் பார்த்துட்டு ரெண்டு பேரும் என் பின்னாடியே வந்தாங்க. அவங்களும் நிவேதாவும் நடிச்சதா சொன்னாங்க. ‘நித்திலனுக்கு அவங்க லவ்வை என்கிட்ட டைரக்ட்டா சொல்ல தயக்கமா இருந்தனால, நித்திலன் லவ் சொல்லி நான் இருக்கிற ஃப்ரண்ட்ஷிப்பையும் வேண்டாம்னு சொல்லிடுவேன்னு பயந்தனால’ இப்படி ப்ளான் செஞ்சதா நிவேதா சொன்னாங்க. என் உணர்வை வச்சி ரெண்டு பேரும் விளையாடிருக்காங்கனு எனக்கு அவங்க மேல செம்ம கோபம். அடுத்த ஒரு மாசத்துக்கு நித்திலன் கிட்ட நான் பேசவே இல்ல. அவர் என்னை கன்வின்ஸ் பண்ண ரொம்ப ட்ரை பண்ணாரு. நான் அவரை ரொம்பவே அவாய்ட் செய்ய ஆரம்பிச்சேன். அப்ப நான் ஒரு வீக்கெண்ட்ல சென்னை வந்தப்ப எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறதா வீட்டுல சொன்னாங்க. எங்கே நித்திலனை மிஸ் பண்ணிடுவேனோனு பயம் வந்துடுச்சு எனக்கு. சென்னைலருந்து வந்ததும் நித்திலன்க்கு கால் பண்ணி அவரை உடனே பார்க்கனும்னு சொன்னேன். எங்க பிஜிகிட்ட இருக்க பார்க்ல வந்து வெயிட் பண்ணிட்டு இருந்தார். என்னை பார்த்ததும் மிஸ் யூனு ரொம்பவே ஃபீல் செஞ்சி பேசினாரு.
இப்படி அவர் பார்க்ல நின்னு என்கிட்ட மிஸ் யூ சொல்ற மாதிரி கூட எனக்கு கனவு வந்துச்சு பவா. இதுவும் முன்னாடியே என் வாழ்க்கைல நடந்த நிகழ்வு தான்டி” என்று நிவாசினி கூறியதை வியப்புடன் கேட்டிருந்தாள் பவானி.
“அன்னிக்கு பார்க்ல ரொம்ப ஃபீல் செஞ்சி பேசினாரு. எங்கே என்னை அவர் லைப்ல மிஸ் பண்ணிட்டாரோனு நினைச்சு ரொம்பக் கவலைபட்டதா சொன்னாரு. அப்ப தான் நிவேதா யாரு என்னனு சொன்னாரு” என்றாள் நிவாசினி.

