
அத்தியாயம் 16
உண்டு முடித்த சஞ்சய் தன் அறைக்குச் செல்வதற்காக மாடியேறியவன் மனைவி தன் பின்னே வருகிறாளா எனப் பார்க்க அவளோ மும்முறமாக அனுபமா உடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். ஒரு பெருமூச்சுடன் வேகமாக மாடி ஏறிச் சென்றிருந்தான்.
மாமியாருடன் பாத்திரங்களை எடுத்துச் சமையலறையில் வைத்துக் கொண்டிருந்தவள்
“மதியத்துக்கு என்ன சமையல் அத்தை.?”எனக் கேட்க
“சைவம் தான் ம்மா. இப்ப தான திருமணம் முடிஞ்சிருக்கு, உடனே அசைவம் செய்யக் கூடாது. உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே.?” “ஐயோ அத்தை.! அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. நான் எல்லாமே சாப்பிடுவேன். எங்க வீட்டிலயும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் அசைவம் எடுப்பாங்க.”
என்றவளின் பதிலில் திருப்தியுற்றவளாக“சரி, உனக்கு எது ரொம்ப பிடிக்கும் சொல்லு. இந்த வாரம் அதையே சமைச்சிடலாம்.?” எனக் கேட்க முதல் முறை தன்னிடம் இப்படியொரு வார்த்தை வந்திருக்கிறது என நினைத்தவள் நெகிழ்வுடன் அமைதியாக நின்று கொண்டாள். “என்ன.” என்றவரின் கேள்விக்கு,
சரி என்பதாகத் தலையசைத்துக் கொண்டாள்.
“இன்னைக்கு சிம்பிள் தான். ரெண்டு நாளா நல்ல விருந்து சாப்பாடு சாப்பிட்டாச்சு. அதனால, சின்ன வெங்காயம், பூண்டு போட்டு மிளகு குழம்பு, அரைக்கீரை மசியல், கேரட் பொரியல். சஞ்சய்க்கு ரொம்ப பிடிச்ச அரிசி வத்தல் பொறிச்சிக்கலாம். ஓகேவா. உனக்கு வேற ஏதாவது வேணும்னா சொல்லு அதையும் சேர்த்து ஆட் பண்ணிக்கலாம்.” எனக் கண் சிமிட்டி கூறிய அத்தையை பார்த்தவள்.
“இதுவே அதிகம் அத்தை.” என்றாள் புன்னகையுடன்.“சரி, நீ இந்தப் பூண்டை மட்டும் உரிச்சிட்டு இரு. நான் உங்க மாமா கிளம்பிட்டாங்களான்னு பாத்துட்டு வந்துடறேன். இல்லன்னா ஒன்னு செய். நீ மேல போய்ச் சஞ்சய் என்ன செய்றான்னு பாத்துட்டு அவன் கூடப் பேசிட்டு இருக்கியா.? நான் சமையல முடிச்சிடுறேன்.?”
“இல்ல அத்தை. நான் உங்க கூட இருந்து எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிறேன். எனக்கு நிறைய உங்க கிட்ட கேக்கணும்.”
“ஓ.! சரி மருமக பொண்ணே எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்சுக்கோ.” என்று லேசாக அவள் கன்னத்தில் தட்டி விட்டுத் தன் கணவரைப் பார்க்கச் சென்றார் அனுபமா. ஒரு மருத்துவராக இருந்தாலும் எந்தப் பந்தாவும் இல்லாமல் எளிமையாக அவர் பழகுவதும், வேலை செய்வதும் ஆச்சரியமாகவும் அதே நேரத்தில் மகிழ்வாகவும் இருந்தது பெண் அவளுக்கு.
இவளுக்கு மகிழ்வாக இருந்த தருணம், இவளை எதிர்பார்த்து காத்திருந்தவனுக்கு தான் அனலாகக் கொதித்தது.கணவனின் மனநிலை தெரியாமல் மாமியார் வைத்துச் சென்ற பூண்டுகள் அனைத்தையும் நிமிடத்தில் உரித்திருந்தாள். இதற்கு முன் தனி ஒருவளாகச் சமையல் செய்து பழகி இருந்தவளுக்கு அனைத்தும் வேகமாகவே செய்ய வந்தது. பிரபுவும் கிளம்பி சென்று இருக்க யாருடனோ பேசிக் கொண்டே வந்த அனுபமாவை சமையலறையிலிருந்து வெளியில் வந்து எட்டிப் பார்த்த வசுந்தரா அவருடன் தங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி வருவதை பார்த்துவிட்டு லேசாகப் புன்னகைக்க.
“என்ன மருமக சமையலா இன்னைக்கு.?” என்று கேட்டபடியே வந்தார் வேலை செய்பவர்.
“மருமக சமையல் கிடையாது. என் சமையல் தான். வந்து அன்னைக்கே வேலை வாங்க சொல்றியா என் மருமகள.?” எனக் கேட்ட அனுபமாவை பார்த்தவர்
“எல்லாரும் உங்களை மாதிரியே நல்ல மாமியாரா இருந்துட்டா. மாமியார், மருமகள் சண்டையே வராதுமா.” என்ற படியே அவர் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்.
“வசுந்தரா இவங்க வேணி அம்மா நம்ம வீட்ல ரொம்ப வருஷமா வேலை பாக்குறாங்க.”
“இவங்கள பார்த்திருக்கேன் அத்தை.”
“அன்னைக்கு என்னால இன்டர்டியூஸ் பண்ண முடியல. நிறைய பேர் இருந்தாங்க இல்ல நம்ம வீட்டுல அதான்.”“உங்க வீட்டுக்காரர் ஸ்கூல் படிக்கிற காலத்துல இருந்து இங்க தான் மா வேலை பார்க்கிறேன். என்னை வேலைக்காரி மாதிரி யாருமே இங்க நடத்த மாட்டாங்க.. இந்த வீட்டு ஆளு மாதிரி என்னை பார்த்துப்பாங்க. நானும் உரிமையா எல்லாம் செய்வேன்.உங்க மாமியார் காலையிலேயே எல்லா வேலையும் முடிச்சிடுவாங்க. அதுக்கப்புறம் நான் வந்து வேகமா மத்த வேலையை முடிச்சிட்டு கிளம்பி போயிடுவேன். அவங்களும் கிளினிக் கிளம்பி போயிடுவாங்க. மறுபடியும் சாயந்தரம் ஒருமுறை வருவேன். உங்க மாமியார் டாக்டர் தானே. ஆனாலும் சமையல் வேலை எல்லாம் அவங்க தான் செய்வாங்க. கொஞ்சம் கூட பந்தாவே கிடையாது
தங்கமான மாமியார் உனக்கு..”என்று வசுந்தராவிடம் அனுபமாவிற்கு பாராட்டு பத்திரம் வாசித்தப்படியே வீட்டு வழக்கத்தை கூறிய படி, வேகமாக பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தார் அந்த பெண்மணி.“ஏன் அத்தை கிளினிக்கும் போயிட்டு வீட்டு வேலையும் செய்ய உங்களுக்கு கஷ்டமா இருக்காதா..? ஏன் சமையலுக்கு யாரையும் வெச்சிக்கல..?”
“உங்க மாமாவுக்கும், உன் புருஷனுக்கும் என்னோட சமையல் தான் எப்பவுமே பிடிக்கும். சில நேரம் எனக்கு உடம்பு சரியில்லைன்னா வேணி சமைப்பாங்க. அட்ஜஸ்ட் பண்ணி ரெண்டு பேரும் சாப்பிடுவாங்க. ஆனாலும் அவங்களுக்கு நான் சமையல் செய்தால்தான் திருப்தியா இருக்கும். நானும் செய்றது அந்த ஒரு வேலை தான். மற்ற வேலைகளுக்கெல்லாம் ஆளு. அதுவும் இல்லாம சமையல் செய்றது எனக்கு ரொம்ப பிடிக்கும். புருஷனுக்கும் பையனுக்கும் நம்ம கையால சமைச்சு கொடுக்கும் போது வர திருப்தி இருக்கே அது வேற எதிலுமே கிடைக்காது..” என்று உணர்ந்து கூறியவரிடமிருந்து அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டாள். உணவு முறைகள், காரம், உப்பு யார் யாருக்கு என்னென்ன பிடிக்கும். முக்கியமாக தன் கணவனுக்கு எதுவெல்லாம் பிடிக்கும் என கேட்டு தெரிந்து கொண்டாள்.வீட்டில் வழக்கமாக அனைவரும் எழுந்திருக்கும் நேரம், சாப்பிடும் நேரம், வேலைக்கு கிளம்பும் நேரம், திரும்ப வரும் நேரம் என அனைத்தையும் கேட்டு மனதில் பதித்துக் கொண்டாள். பேசிய படியே சமையல் வேலையும் முடிந்து, மதிய உணவு நேரமும் வந்திருந்தது. வேணி அம்மாவும் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு சாயந்திரம் வருவதாக கூறி சென்றிருந்தார்.
மதிய உணவிற்கு கீழே இறங்கி வந்த சஞ்சய்யின் முகத்தில் கோபத்தின் சாயல் அப்பட்டமாக தெரிந்தது. அவன் முகத்தைப் பார்த்த பிறகே இவ்வளவு நேரமும் அவனைப் பற்றி சிந்திக்காமல், அவனைப் பற்றி மட்டுமே அதிகம் தெரிந்து கொள்ள மாமியாருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்ததில் கணவன் என்ன செய்கிறான் என்று ஒரு முறை பார்த்து வரவேண்டும் என்று நினைத்திருந்தவளுக்கு அது மறந்தே போயிருந்தது.அமைதியாக உணவு மேஜையில் அமர்ந்தவனுக்கு அருகில் வந்து பரிமாற முற்பட்டவளை தடுத்தவன் “நானே வச்சு சாப்பிடுவேன். நீயும் உட்கார்ந்து சாப்பிடு..” என்றான் அமைதியான குரலில்.
“ஏன்டா..?ஆசையா பரிமாற வந்தா. அவளை ஏன் தடுக்குற..?”என்று கேட்டபடி வந்த அனுபமாவை பார்த்தவன்.
“எதுக்கு இந்த ஃபார்மாலிட்டி எல்லாம். இருக்கிறது மூணு பேரு. நாமளே வச்சு சாப்பிட மாட்டோமா..”என்றபடி உணவில் கவனமானான். கணவன் தன் மேல் கோபமாக இருக்கிறானோ என்று அவன் முகத்தை, முகத்தை பார்த்தபடியே உண்டு கொண்டிருந்தாள். பெண். அவள் தன்னையே பார்ப்பது தெரிந்திருந்தாலும், அவளை நிமிர்ந்து பார்க்காமல்,உண்டு முடித்தவன் தன் அறையை நோக்கி சென்றிருந்தான்.மாடி ஏறியவன் இப்போதேனும் மனைவி தன் பின்னால் வருவாளா.? எனப் பார்க்கத் தன் அன்னையுடன் பேசியப்படியே பாத்திரங்களை எடுத்துக்கொண்டு சமையலறைக்கு செல்வதை பார்த்தவன். இரு பக்கமும் தலையசைத்து சலித்தவனாக இரண்டு இரண்டு படிகளாகத் தாவித் தன் அறையை நோக்கிச் சென்றான். ‘எப்போதுதான் வருகிறாளெனப் பார்ப்போம்.’ என நினைத்துக் கொண்டு.
சாப்பிட்ட பாத்திரங்கள் அனைத்தையும் ஒதுக்கிப் போட்டவர் மிச்ச மான உணவு வகைகளைச் சிறிய கிண்ணங்களில் மாற்றிவிட்டு சமையல் மேடையையும் சுத்தமாகத் துடைத்து விட்டு வரவேற்பறைக்கு வந்தவர்.
“நீ போய்க் கொஞ்ச நேரம் ஓய்வெடு. சஞ்சய் மாடிக்குப் போயிட்டான் பாரு.” என்றவரை பார்த்தவள்
“இருக்கட்டும் அத்தை. நாம கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருப்போம்.” என்றாள். அந்த வீட்டின் செயல்பாடுகளையும், மனிதர்களையும் குறித்து இன்னும் கேட்டுத் தெரிந்து கொள்ள அவளுக்கு நிறைய இருந்தது.“சரி அத்தை. நீங்க இவ்ளோ பெரிய டாக்டரா இருக்கீங்க. ஆனா வீட்ல எல்லா வேலையும் நீங்களே பாக்குறீங்களே எப்படி…?”
“இது என்னமா கேள்வி.? அப்புறம் நான் ஒன்னும் அவ்ளோ பெரிய டாக்டர் இல்ல. சாதாரண ஜென்ரல் பிசிசியன் (பொது மருத்துவர்) தான்.”
“ஆக மொத்தம் மருத்துவர் தானே.” என்று கேட்டவளிடம்“ஏற்கனவே சொன்னேனே. உங்க மாமாவுக்கும் உன்னுடைய புருஷனுக்கும் நான் செய்யற சமையல் தான் ரொம்ப பிடிக்கும். அதுவும் இல்லாம ஒரு பெண்ணா, வீட்டு தலைவியா இந்த வேலைகள் எல்லாம் நாம செய்றது தப்பு ஒன்னும் இல்லை. என்னதான் வெளில போய்ச் சம்பாதித்தாலும் வீட்டு நிர்வாகத்தை நம்ம கையில வச்சிக்கிறது தான் நல்லது. அதுக்காக எல்லாரும் அப்படி செய்யணும்னு நான் சொல்லமாட்டேன். என்னோட விருப்பம் இது.” என்றார் தெளிவாக. இப்படியே பல கதைகள் பேசி, பேசி மாலை நேரமும் வந்திருந்தது. இரண்டாம் கட்ட வேலை பார்ப்பதற்காக வேணி அம்மாவும் வந்திருந்தார்.
” என்ன மாமியாருக்கும் மருமகளுக்கும் இன்னும் பேச்சு முடியவே இல்லையா…?காலைல இருந்து பேசிகிட்டே தான் இருக்கீங்களா.? இன்னைக்கு ஒரு நாளிலேயே எல்லாத்தையும் பேசி முடிச்சிடலாம்ன்னு இருக்கீங்களா.? என்ன மா மருமக பெண்ணே.? ஒரே நாளில் எல்லாத்தையும் மாமியார் கிட்ட கேட்காத. இன்னும் நிறைய நாள் இருக்கு. பொறுமையா ஒன்னு ஒன்னா கேட்டுத் தெரிஞ்சுக்க.”எனச் சிரிப்புடன் கூறினார்.
அவரோடு இணைந்து சிரித்த இருவரும் அவரைப் பின்பற்றிச் சமையலறையின் உள் சென்றார்கள்.
காபி போடுவதற்கு பாலை எடுத்த அனுபமாவை பார்த்த வசுந்தரா,
“நான் காபி போடவா அத்தை.” என்று கேட்க
“தாராளமா போடு.” என்றபடி பால் பாத்திரத்தையும் ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்த பாலையும் அவள் கைகளில் கொடுத்துவிட்டு, இரவு உணவுக்காகச் சப்பாத்திக்கு மாவு பிசைய ஆரம்பித்தார். முதலில் தங்கள் மூவருக்கும் காபி போட்டவள், “மாமாக்கு உங்க பையனுக்கும் அவங்க வந்ததும் நான் சூடா போட்டுக் கொடுக்கிறேன் அத்தை இன்னைக்கு ஃப்ளாஷ்க் காபி வேண்டாம்.” என்பதற்கு சரி என்றார் அவரும்.இவர்கள் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் மாடியிலிருந்து சஞ்சய்யும், வெளியிலிருந்து பிரபுவும் வந்திருந்தார்கள். இருவருக்கும் தன் கையாலே சூடாகக் காபி போட்டுக் கொண்டு போய்க் கொடுத்தாள் வசுந்தரா. மனைவியிடமிருந்து காபியை வாங்கிக் கொண்டவன் எதுவும் கூறாமல் அருந்த மாமனார் பிரபுவோ,
“என்னமா.? வந்த இரண்டாம் நாளே உங்க மாமியார் உன் கிட்ட வேலை வாங்குகிறாளா.?” எனச் சிரிப்புடன் கேட்க,
“அய்யய்யோ.! மாமா, இல்ல நான்தான் காப்பி போடறேன்னு அத்தை கிட்ட கேட்டேன்.” என்றாள் பதறிப் போய்,
“அவங்க சும்மா உன்ன கலாட்டா பண்றாங்க. அதுக்கு எதுக்கு நீ இவ்வளவு பதறுற..?” என அனுபமா சாவதானமாக கூறிய பின்பே சற்று ஆசுவாசமடைந்தாள் வசுந்தரா. “உங்களுடைய சேட்டை எல்லாம் அவகிட்ட வந்த அன்னைக்கே காட்டாதீங்க. ஏற்கனவே நம்ம டாக்டர்ஸ்னு நம்மள ஒரு பெரிய, உயர்ந்த இடத்தில் வச்சிருக்கா உங்க மருமக. நீங்க இந்த மாதிரி அடாவடித்தனம் பண்ணீங்கன்னா, என்ன இவங்க சிரிப்பு போலீஸ் மாதிரி சிரிப்பு மருத்துவர்களோன்னு நினைச்சுக்குவா..”என்பதற்கு அட்டகாசமாக சிரித்தார் பிரபு.“அப்படியா மா..?” என கேட்டு கொண்டே. அதில் மேலும் பதறியவள் “இல்ல மாமா… “என்றாள் வேகமாக. “அப்பாவை சொல்லிட்டு நீங்க தான் இப்ப அவளை பதற வைக்கிறீங்க. இரண்டு பேருமே சிரிப்பு மருத்துவர்கள்ன்னு அவ நினைக்கப் போறது கன்பார்ம்…” என்றான் தன் பங்கிற்கு சஞ்சய்யும்.
குடும்பமாக இப்படி ஒருவருக்கு ஒருவர் கேலி செய்து சிரித்து பேசுபவர்களை அதிசயத்து அதே நேரம் மகிழ்வோடு பார்த்துக் கொண்டிருந்தாள் வசுந்தரா.
“சரி, சரி போதும் அரட்ட அடிச்சது போய் சப்பாத்தி சுடுங்க போங்க..” என சஞ்சய் கூற
“ஆமா மா, நேரம் ஆயிடுச்சு வா போலாம்..” என வசுந்தராவை தன் கூடவே அழைத்துக் கொண்டு செல்ல,
“மருமகளே காபி சூப்பர்..” என்ற பிரபுவின் குரல் அவர்களை பின்தொடர்ந்தது.“முதல் நாளே மாமனார் கிட்ட இருந்து பாராட்டு கிடைச்சிருச்சு..” என்று சிரிப்புடன் கூறியபடி அவளுடன் சமையல் அறைக்குள் சென்றவர்,
சூடான சப்பாத்திக்களுடன் பன்னீர் குருமாவையும் செய்தார். அவருக்கு உதவியவாறு அவர்களின் கார, உப்பு அளவுகளை கேட்டும், பார்த்தும் தெரிந்து கொண்டாள் வசுந்தரா.இரவு உணவு முடிந்து அனைத்தையும் ஒதுக்கி வைத்தார்கள் மாமியாரும் மருமகளும். அதுவரை சோபாவில் அமர்ந்திருந்த சஞ்சய் அன்னையும் மனைவியும் சமையலறையில் இருந்து வெளிவருவதை பார்த்துவிட்டு மாடி ஏறி சென்றான். இப்போதாவது தன் பின்னே வருகிறாளா இல்லையா என மனைவியை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே.
இருவருக்குமான பாலை எடுத்து கொண்டு அவள் வருவது ஓரக் கண்ணில் தெரிந்தது.
“வா, டி வா..” என நினைத்துக் கொண்டே வேகமாக தன் அறையை நோக்கி சென்றிருந்தான். உள்ளே வந்தவள் பால் டம்ளரை அவனிடம் கொடுக்க.
“என்ன ரூமுக்குள்ள வந்துட்ட. வரமாட்டேன்னு நினைச்சுட்டு இருந்தேன். நைட்டுக்கும் எங்க அம்மா கூடவே சுத்திட்டு இருந்துப்பேன்னு நெனச்சேன்..” என்றவனின் கிண்டலில் கலங்கி நின்றவளுக்கு பேச்சே எழவில்லை.
பதிலுக்காக அவள் முகத்தை பார்த்தவன்“என்ன அப்படி அதிர்ந்து நின்னுட்டு இருக்க. காலையில கீழ இறங்கி போன, புருஷன் ஒருத்தன் இருக்கானே, கல்யாணம் ஆகி இரண்டு நாள் தானே ஆகுது. அவனோட பேசி பழகலாம்னு நினைக்காம எங்க அம்மாவோட பேசி பழக தான் உனக்கு ரொம்ப முக்கியமா இருந்திருக்கு இல்லையா..?” என்றவனின் கேள்வியில், இன்னுமே கலக்கம் நீங்கவில்லை பெண்ணவளுக்கு
‘இவனோடு என்ன பேசுவது என தெரியாமல் தயங்கி பயந்து தானே மாமியாரோடு சுற்றிக் கொண்டிருந்தாள்..’ என்பதை எப்படி அவனிடம் சொல்ல முடியும் என அது வேறு மண்டையில் யோசனையாக ஓடிக்கொண்டிருந்தது.
“உன்கிட்ட தான் கேட்கிறேன். பதில் வரல..” என்று கேட்டவனிடம்
“இல்ல, வீட்டு வழமைகள தெரிஞ்சுக்கலாம்னு தான்..” என்றாள் மெதுவாக.
“வீட்டு வழமைகள் தெரிஞ்சுகிறது இப்ப ரொம்ப முக்கியமா..? முதல்ல புருஷனோட வழமை என்னன்னு தெரிஞ்சுக்கோ. அதுக்கப்புறம் மத்ததெல்லாம் தெரிஞ்சுக்கலாம்..” என்பதற்கு அவள் பதில் கூறாமல் அமைதியாக இருக்க.“நீ சரிப்பட்டு வர மாட்ட முதல்ல உன் டிரஸ் எல்லாம் பேக் பண்ணு..” என்றவனின் கூற்றில் அதிர்ந்தவளுக்கு. சடுதியில் கண்களை நிறைத்தது கண்ணீர்.
தொடரும்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
+1


