Loading

அத்தியாயம் – 18

 

“நீங்க கடத்த வேண்டிய பொண்ணை இன்னும் கடத்தலயா?” இரண்டு நாட்கள் முழுதாக முடிந்து, மூன்றாவது நாளில் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டே விட்டாள் நித்யா,….

“இல்ல,…. அந்த பொண்ணு வீட்டுக்கு அவளை கடத்த போற விஷயம் எப்படியோ தெரிஞ்சு போச்சு, போலீஸ் பாதுகாப்புல பத்திரமா அவ வீட்ல இருக்கா, அதனால எங்களால அவளை நெருங்க முடியல” வெகு இயல்பாய் பதில் உரைத்தான் அவள் கேட்ட கேள்விக்கு…

அவளுக்கு தான் ‘ஐயோ’ என்றானது, எப்போது அவளை கடத்தி என்னை விடுவது, அதையும் கேட்டாள்,… “அப்போ என்னை எப்போ தான் விடுவீங்க?”

“அந்த பொண்ணு எங்க கஸ்ட்டடில வர ஒரு மாதம் ஆனாலும், அந்த ஒரு மாதமும் நீ இங்க தான் இருந்தாகனும்” என்றதும் அவளுக்கு அழுகை வந்துவிட்டது,…..

“நான் எந்த தவறும் பண்ணலேயே, என்னை எதுக்காக இப்படி கொடுமை பண்ணறீங்க, என்னை விட்டுடுங்களே” என்றாள் கண்ணீர் வழிந்தோட,…

“உன்னை எப்போ நான் கொடுமை பண்ணேன், மூன்று வேலையும் நல்லா சாப்பிட்டு தூங்கி எழற, அப்புறம் என்ன உனக்கு பிரட்சனை” என்றான்,…

“நான்… நான் என் வீட்டுக்கு போகணும், என் அம்மாவையும் அண்ணாவையும் பார்க்கணும், உங்களை பார்த்தா நல்லவர் மாதிரி தெரியுது, நீங்க சொன்ன மாதிரி என்னை கொடுமை படுத்தலாம் இல்ல, நல்லா சாப்பாட்டுலாம் போடுறீங்க, இதுக்காகவே நான் உங்களை பத்தி வெளியே யார்கிட்டயும் சொல்ல மாட்டேன், என்னை விட்டுடுறீங்களா” அவள் நீட்டி முழக்கி அவன் தலையில் ஐஸ்கிரீமை தூக்கி வைக்க, அவனோ சட்டென்று “முடியாது” என்றான்,…

“ஏன் ஏன் முடியாதுன்னு சொல்லிடீங்க, நீங்க ரொம்ப நல்லவரு, எனக்கு தெரியும், என்னை விட்டுடுவீங்கன்னும் எனக்கு தெரியும்” மீண்டும் பெரிய ஐஸ்கட்டியை அவன் மண்டையில் தூக்கி வைக்க,… “நான் நல்லவனா?” அதிசயமாக கேட்டான், அவள் கூறும் போது கேட்க நன்றாகவும் இருந்தது,…

“ஆமா ஆமா,… நீங்க நல்லவரு, கடத்திட்டு வந்த பொண்ணுக்கு யார் நேரா நேரத்துக்கு சுட சுட சாப்பாடு வாங்கி தருவா, மாற்று உடை வாங்கி தருவா” அவள் கண்கள் நாட்டியம் ஆடி ஆடி பேசியது, அவனுக்கு பிடித்தது, அவளது நயமிக்க பேச்சில் ஈர்க்கப்பட்டான்,….

“என்ன அப்படி பார்க்கிறீங்க, நான் சொல்றதை நம்பலயா” நம் நடிப்பை கண்டுபிடித்து விட்டானா என்ற கலவரத்தில் அலை பாய்ந்த விழிகளுடன் கேட்டாள்,…

“நம்புறேன், ஏனோ தெரியல நீ சொல்றதை நம்பாம இருக்க முடியல, அப்படினா நான் நல்லவன்?” அவன் ஆச்சரியமாய் கேட்க,… அவன் நம்புகிறான் என்றதே அவள் மனதில் பெரும் நிம்மதியை தர,.. “ஆமா நீங்க நல்லவரு, சரி நீங்க ஏன் இந்த கடத்தல் வேலையெல்லாம் பார்க்கிறீங்க, ஏதாச்சும் நல்ல வேலை பார்த்தா கை நிறைய சம்பாரிக்கலாம், நல்ல தொழில் மூலம் வர பணத்துல வர சாப்பாடு தான் வயித்துல நல்லா ஒட்டும், நீங்களும் மனைவி குழந்தை குடும்பம்னு நிம்மதியான வாழ்க்கையில செட்டில் ஆகிடலாம்” என்றாள்…..

“நிம்மதியான வாழ்க்கை ” என அழுத்தமாக கூறி விரக்தியாய் சிரித்தவன்,…. “எனக்கும் நிம்மதியான வாழ்க்கைக்கும் வெகுதூரம்” என்றான்…

“ஏன் அப்படி சொல்றீங்க, இப்போ நீங்க பண்ணுற வேலையையெல்லாம் மொத்தமா விட்டுட்டு வெளில வாங்க, ஏதாச்சும் வேலையில சேருங்க, யாரும் வேலை தரமாட்டாங்கனு நினைக்காதீங்க, கண்டிப்பா கிடைக்கும், நான் என் அண்ணா கிட்ட கூட சொல்லி வேலை வாங்கி தர சொல்றேன், அப்புறம் உங்களுக்கு ஏத்த பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க, அப்புறம் உங்க வாழ்க்கை சொர்க்கம் தான், என்ன நான் சொல்றது சரி தானே” என்றாள்,…..

“ஹ்ம்ம் சரி தான், ஆனா என்னை எந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கும்,” அவளை கூர்மையாக பார்த்துக் கொண்டு வினவினான்,…

“இந்த உலகத்துல பொண்ணுக்கா பஞ்சம், அதெல்லாம் கிடைக்கும், நீங்க முதல்ல இந்த கடத்தல் வேலையை விடுங்க, நல்ல வேலையில சேருங்க, அப்புறம் பாருங்க, பொண்ணுங்க எல்லாரும் போட்டி போட்டுக்கிட்டு வருவாங்க” என்றாள், அவன் இதழில் ஒருவித பிரகாச புன்னகை தோன்றியது பல வருடங்களுக்கு பிறகு,….

‘என்ன சிரிக்கிறான், நாம சொன்னதை நம்பலயோ’ அவள் துறுத்துறுவென்ற விழிகளுடன், விழிகளை உருட்டி யோசிக்க,… கொஞ்ச நேரம் அமர்ந்து எதையோ பற்றி யோசித்து சிரித்தவன், போன் ஒலிக்கவுமே அதில் கவனத்தை திருப்பினான்……

அடுத்து வந்த இரண்டு நாட்களும் சாப்பாடு தூக்கம் என்றே கடந்தது நித்யாவிற்கு, அவன் ஏதோ வேலையாக பாதி நேரம் வெளியே தான் போயிருந்தான், தப்பிக்கும் எண்ணம் இருந்தாளாவது அவள் ஏதாவது முயற்சி செய்வாள், ஆனால் வெளியே  இருக்கும் காட்டு பகுதியை போய் பார்த்துவிட்டு வந்த பிறகு அவள் தப்பிக்கும் முயற்சியையும் கைவிட்டிருந்தாள், அவளை கடத்தியவனும் தன்னை எந்தவித தொந்திரவும் செய்யாமல் நலமாக பார்த்துக் கொண்டதிலேயே அவன் தன்னை பத்திரமாக தன் வீட்டில் ஒப்படைத்து விடுவான் என்ற சிறு நமபிக்கையுடன் தான் திரிந்தாள், உன்னை கடத்தி வந்தவனின் மீது நம்பிக்கையா? என்று அவள் உள் மனம் கூச்சலிட்டு கேட்டாலும், இப்போது அவள் இருக்கும் நிலைமைக்கு அவனை நம்புவதை தவிர வேறு வழி இல்லை என்பதே உண்மை,…

மதியம் சென்றவன், இரவு அவளுக்காக உணவை மட்டும் கொடுத்து விட்டு மீண்டும் வெளியே சென்று விட்டான், அந்த இரவு நேரத்தில் காட்டு பகுதியிலுள்ள வீட்டில் அவள் மட்டுமே தனியாளாய் இருந்தாள், வெளியே கேட்ட பூச்சிகளின் சத்தம் கூட கொலை நடுங்க வைத்தது, அன்றைய இரவு பயத்தில் அவளுக்கு தூக்கமே இல்லை, விடிந்த பிறகு தான் உறங்கினாள், அவள் விழித்த போது அவன் அங்கு தான் இருந்தான்,… முகத்தில் ஒரு வித இறுக்கம் தெரிந்தது, கோபத்தில் இருக்கிறான் போல என்று அவள் கொடுக்கும் சின்ன சின்ன பேச்சுக்களையும் அன்று கொடுக்கவில்லை அவனுக்கு பயந்து,….

கொஞ்ச நேரம் கழித்து போனில் யாருடனோ கத்தி கத்தி பேசினான், “அவனை கொல்லுங்கடா, நான் வரும் போது அவன் பொணத்தை தான் பார்க்கணும்” என கட்டளையிட்டவன், மேஜையிலிருந்த கண்ணாடி டம்ளரை தன் உள்ளங்கையால் நொறுக்கி உடைத்தான் கோபத்தில்,..

கையில் வீதல்கள் குத்தி கிழித்து ரத்தம் வழிந்தது, நித்யாவிற்க்கு அவன் செயல்கள் பதட்டத்தை தந்தாலும், அவன் கையில் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தையும் அவனையும் பரிதாபமாக பார்த்தாள், ஆனால் மறந்தும் அவன் பக்கம் செல்லவில்லை,…

சில நிமிடங்கள் அமைதியில் கடந்தது, அவன் ஏற்கனவே தன் பக்கத்தில் வைத்திருந்த காலை உணவு பொட்டலத்தை பசிக்கு சாப்பிட்டு முடித்தாள், நிமிடத்திற்கு ஒருமுறை அவளையும் அறியாமல் அவன் கையின் காயத்தில் வந்து நின்றது அவளது பார்வை, ரத்தத்தை கட்டுப்படுத்த கைகுட்டையால் கட்டி வைத்திருந்தான், அவன் கட்டிருந்த கைக்குட்டை அவன் ரத்தத்தால் சிவப்பு நிறமாக மாறி இருந்தது, தற்போது ரத்தமும் நின்றிருந்தது,….

‘சரியான லூஸா இருப்பான் போலயே, கையில காயம் இருக்கு அதுவும் வீதல் குத்தி, வீதல் குத்திருந்தா அதை க்ளீன் பண்ணி சுத்தபடுத்தி மருந்து போட்டா தானே  செப்டிக் ஆகாம இருக்கும், கையவே இழக்க தான் போறான் இவன்’ என்று நினைத்தாலும், மனதின் சிறு ஓரத்தில் அவனை நினைத்து வருத்தமாகவும் இருந்தது, எதனால் இந்த வருத்தம், கடத்தி வந்தும் பத்திரமாக வைத்து பார்த்து கொண்டிருப்பதாளா? சாப்பாடு உடை எல்லாம் வாங்கி தருகிறதாளா? புரியவில்லை அவளுக்கு,…

“ஏய் என்ன” நிமிடத்திற்கு ஒரு முறை அவள் தன்னை நோட்டமிடுவதை கண்டுகொண்டவன், எதுவும் பிளான் பண்ணுகிறாளா என்ற உறுத்தலுடன் அதட்டினான்,….

“ஒன்னுமில்ல, ஒன்னுமில்லயே” அவள் கூறிவிட்டு பார்வையை திருப்பிக் கொள்ள,…. “என்ன பயம் விட்டு போச்சா? அடுத்து தப்பிக்க பிளான் போடுறியா?” என்றான் உருமலாய்,…

“ஐயோ கடவுளே இல்லவே இல்லை,  இங்க இந்த வீட்டுக்குள்ள நான் பத்திரமா பாதுகாப்பா இருக்கேன், இப்போதைக்கு இது போதும், நீங்களா விடுற வரைக்கும் நான் சத்தியமா வெளியே போகவே மாட்டேன், யானை கிட்ட மிதி வாங்கி சாக எனக்கு விருப்பமில்லை, நான் வெயிட் பண்ணுறேன் நீங்க என்னை விடற வரைக்கும்” என்றாள்,..

“பின்ன எதுக்கு என்னை சைடுல நோட்டம் விடுற” அவன் வெளிப்படையாய் கேட்டு விட,… “நான் நோட்டமெல்லாம் விடல, உங்க கைல இருக்க காயத்தை தான் பார்த்தேன், நீங்க இந்த காயத்தை இப்படியே விட்டுட்டா அப்புறம் பெரிய பிரட்சனையாகிடும், எங்க வீட்டு பக்கம் ஒரு பையனுக்கு கால்ல வீதல் குத்தி அதை சரியா கவனிக்காததால பின்னாடி ரொம்ப கஷ்டப்பான், அதனால தான் சொல்றேன்” என்றாள் மனிதான்பிமானத்தோடு,…

தனக்கான அவளது அக்கறையை அதிசயமாய் பார்த்தான், ஒரு மாதிரி பிடித்தது, இதழ் புன்னகைத்தது,… “இங்க வா” என்றான் அவளை, ‘எதுக்கு கூப்பிடுறான்’ என்று நினைத்துக் கொண்டு, அவனுக்கு சில அடி இடைவெளிவிட்டு போய் நின்றாள் உருட்டிய விழிகளுடன்,…

“ஹ்ம்ம்… க்ளீன் பண்ணி, மருந்து போட்டு கட்டிவிடு” என்றான் தன் கரத்தை அவளது முன்னிலையில் நீட்டி,..

அவன் சொல்லில் விழித்தவள்,… “நான் ஏன் பண்ணனும்” நேரடியாக கேட்டுவிட்டாள்,… “எனக்கு பண்ண தெரியாது, ஒரு கையை வச்சு பண்ணவும் முடியாது, உனக்காக சாப்பாடு போடுறேன், பத்திரமா பார்த்துகிறேன், எனக்காக இது கூட பண்ண மாட்டியா? இப்படியே விட்டா பின்னாளில் கஷ்டப்படுவேன்னு வேற சொல்ற, ம்ம் பண்ணு” என்றான்….

‘சாப்பாடு போடுறது பத்திரமா பார்த்துகிறது அவனோட வேலை தானே, கடத்தி வந்தவன் செய்து தான் ஆகணும், அதுக்காக நான் அவனுக்கு உதவி பண்ணனுமா என்ன’ என யோசித்தவள்,… ‘இந்த உதவி பண்ணா கொஞ்சம் மனசு இறங்கலாம், என்னை வீட்ல விட்டுடவும் வாய்ப்பிருக்கு, நமக்கு கிடைத்த வாய்ப்பை மிஸ் பண்ண வேணாம்’ என எண்ணியவள், அவன் கொடுத்த முதலுதவி பெட்டியை திறந்து அதிலிருக்கும் பொருட்களை வைத்து அவன் காயத்தை சுத்தப்படுத்தினாள், ஒட்டிருந்த சிறு சிறு வீதல்களை நீக்கி மருந்திட்டு கட்டு போட்டாள், இதெல்லாம் செய்து பழக்கமில்லை என்றாலும் தனக்கு தெரிந்ததை வைத்து செய்து முடித்தவள், அவன் முகத்தை பார்த்தாள், அதில் என்ன தெரிந்தது, அவனது பார்வைக்கான அர்த்தம் அவளுக்கு புரியவில்லை, தவறாக பார்க்கும் பார்வையும் இல்லை, இல்லையென்றால் பயத்தையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு சப்பென்று அறைந்திருப்பாள், விழிகளில் ஒருவித வலி தெரிந்தது, ஆனால் ஏன் என்று புரியவில்லை, வாய்விட்டு கேட்டாள் “என்ன” என்று,….

“நன்றி” என்றான் நளிந்த குரலில்,…”பரவால்ல” என்றவள்,… “என்னை எப்போ போக விடுவீங்க” என்றாள்,….

சின்னதாய் சிரித்தவன்,…”ஓஹ்… அதுக்காக தான் இதை பண்ணியா” என்றான் கட்டு போட்டிருந்த தன் கையை ஆட்டி காட்டி,.. “ச்சே ச்சே இல்ல” என்றாள் கொஞ்சம் நெருடலான மனதுடன்,…

“நான் யோசிச்சேன்,  நான் கடத்தல் வேலையை விட்டுடுறேன், நல்ல வேலைக்கு போறேன்” என்றவனை ஆச்சரியமாக பார்த்தவள்.. “நிஜமாவா” என்றாள் கண்கள் மின்ன,…

“ம்ம்…. நான் நல்ல வேலைக்கு போனா என்னை கல்யாணம் பண்ணிக்க பொண்ணுங்க போட்டி போட்டுக்கிட்டு வருவாங்கனு சொன்னல்ல” அவன் கேட்க, அவள் ஆம் என்பதாய் வேகமாக தலையசைத்தாள்,…

“யாரும் வேணாம், நீ.. நீ என் கூடவே இருக்கியா? என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா” என்றான் விழிகளில் ஏக்கத்துடன், இதை எதிர்பார்க்காதவள் விழிகள் இரண்டும் விரிந்த நிலையில் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்,…

அவன் கேட்ட கேள்வியில் அதிர்ந்து நின்றவளுக்கு உள்ளுக்குள் ஒரு வித பயம் ஏற்பட்டது, தானே வாயை கொடுத்து முதலை வாயில் சிக்கிக் கொண்டோமோ என்று தோன்றியது, கரங்களை பிசைந்தபடி முகத்தில் கலவரம் படர நின்றவளிடம்,…”சொல்லு ஸ்ரீ” என்றான்,…

‘என் பேர் இவனுக்கு எப்படி தெரிஞ்சது’ என முதலில் மிரண்டவள்,… ‘ச்சே நான் தானே சொன்னேன்’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள்,… “இங்க பாருங்க,… நான்” அவள் ஏதோ விளக்கம் தர வர,… அவனோ “நீ எதுவும் சொல்ல வேணாம், நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொன்னா போதும்” என்றான்….

“நீ கடத்தல் வேலையெல்லாம் பண்ணுற ரவுடி, உன்னை எப்படி நான் கல்யாணம் பண்ணிக்க முடியும், இது வரைக்கும் நீ எவ்வளவு கொலை குற்றமெல்லாம் பண்ணிருக்கியோ எனக்கு தெரியாது, என்னை மாதிரி குடும்பத்து பொண்ணு உன்னை மாதிரி ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கவே மாட்டா” அவன் கேட்டது அவளுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை, ஏதோ தன்னை விட்டுவிட மாட்டானா என்ற எண்ணத்தில் தான் அவனுக்கு புத்திமதி கூறி கல்யாணமெல்லாம் கட்டிக்க சொன்னது, அவன் தன்னிடமே திரும்பியது பயத்தை தந்தாலும் ஒரு ரவுடி தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவது நினைக்கவே நாராசமாய் தெரிந்தது, அதனால் தான் கோபத்தில் எகிறி விட்டாள்,….

அவளது கோபவார்தைகளை மௌமாய் இருந்து கேட்டவனோ,… “அப்படினா நீ என் கூட இருக்க மாட்ட?” என்றான்

“மாட்டேன் மாட்டேன், எப்படி என்னால உன்கூட இருக்க முடியும், பைத்தியமா நீ, இப்படி கேட்க உனக்கே அசிங்கமா இல்ல” என்றாள் எள்ளலாய்,…

“அப்படினா நீ என்கூட இருக்க மாட்ட?” அவன் மீண்டும் அதையே தான் கேட்டான், சற்று நேரத்திற்கு முன் அவள் கட்டிவிட்ட கைகட்டை மெது மெதுவாக அவிழ்த்துக் கொண்டே,…

அவள் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை,”நீ எத்தனை தடவை கேட்டாலும் நான் ஒரே பதிலை தான் சொல்லுவேன், நல்லவன் மாதிரி எனக்கு சாப்பாடுலாம் போட்டதுக்கு காரணம் ஏதோ ஒரு உள்அர்த்தத்துனால தானா? என் அண்ணனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது உன்னை குழி தோண்டி புதைச்சுடுவான்” என்றவளை பார்த்து நக்கலாய் சிரித்தவன் முழுதாக கட்டை பிரித்திருந்தவன், மேஜையின் மீதிருந்த இன்னொரு கண்ணாடி டம்ளரை உள்ளங்கையால் அழுத்தி பிடித்து உடைத்தான், அதன் விளைவாய் பட்ட காயத்திலேயே கண்ணாடி துண்டுகள் சொருகி மீண்டும் ரத்தம் வழிந்தது,….

“உனக்கென்ன பைத்தியமா?” அவன் செய்கையை கண்டு கத்தியவள்,… “இந்த முறை நான் உனக்கு உதவ மாட்டேன்” என்றாள்,…

“நல்லது ரொம்ப நல்லது” முகத்தில் சின்னதாய் கூட வலியை உணராமல் சொன்னவனின் கையிலிருந்து ரத்தம் நிற்காமல் வடிந்தது, கல்லாக நின்று கொண்டிருந்தவளின் மனதும் கரைந்தது கொஞ்சம் கொஞ்சமாய்,…

“இப்படியே நின்னனா ரத்தம் முழுக்க வெளியேறி செத்துடுவ” என்றாள் ஆதங்கமாய்,…

“எனக்கு கவலை இல்லை, பட் நீயும் என் கூட சேர்ந்து செத்துடுவங்குறது தான் பரிதாபபட வேண்டிய விஷயம்,..” அவன் சொன்னதும், அவள் விழிகள் இரண்டும் பயத்திலும் அதிர்ச்சியிலும் விரிந்தது,… “என்ன சொல்ற?” என்றாள் தந்தியடித்த குரலில்….

“ஆமா நான் செத்து போயிட்டா, உனக்கு யார் சாப்பாடு வாங்கி தருவா, அதோட உன்னால இந்த காட்டை தாண்டி வெளியே போகவும் முடியாது, சாப்பாடு இல்லாம இந்த வீட்டுக்குள்ள எத்தனை நாள் உன்னால இருக்க முடியும்” என்றதும் அவள் முகம் பயத்தில் வெளிறியது,… முதலுதவி பெட்டியை திறந்து அவனுக்கு தேவையான பொருளை எடுத்தாள் அவன் காயத்திற்கு மருந்திட,….

“நீ என்கூட இருப்பேன்னு சொன்னா மட்டும் தான் என் காயத்துக்கு மருந்து போட விடுவேன்” அவனது அழுத்தமான குரலில் அவனை எரிச்சலும் கோபமும் கலந்த பார்வை பார்த்தவள்,…. “என்ன ஆனாலும் நான் உன்கூட இருக்க மாட்டேன்” என்றாள்,…

“சரி” என்று தோள்களை குலுக்கியவனும் அலட்சியமாய் திரும்பிக் கொள்ள, ரத்தம் ஒரு பக்கம் வடிந்தது, அவனுடன் இருக்க அவளுக்கு துளியும் விருப்பம் இல்லை, தன் அண்ணன் வருவான் தன்னை காப்பாற்றி அழைத்து போக என்று நம்பி கல் மனதாய் நின்றாள், அதற்குள் அவனுக்கு என்னவானதோ தடுமாறி கீழே விழ போனவன், நாற்காலியை பிடித்துக் கொண்டு நின்றான்,…

கண்கள் சொறுகிக் கொண்டு போக தலையை இடவலமாக ஆட்டி, தன்னை சமன்படுத்த முயன்றவன் அடுத்த கணம் தரையில் விழுந்து மயங்கி போனான், நித்யாவிற்கு ‘இவனுக்கு என்னவானது’ ஒன்றும் புரியவில்லை, ‘செத்துட்டானோ’ பேச்சு மூச்சில்லாமல் கீழே விழுந்து கிடந்தவனை மிடறு விழுங்க பார்த்தாள், ‘இவன் செத்துட்டால் அந்த பாவம் முழுக்க தன்னையே அல்லவா வந்து சேரும், கடவுளே ஏன் எனக்கு இப்படியொரு சோதனை?’ புலம்பிலவள் அவளை நெருங்கினான், மூச்சு வருகிறதா என்று மூக்கின் பக்கம் கை வைத்து சோதித்து பார்த்தாள், மூச்சு சீராக வந்தது, ரத்தம் அதிகமாய் வெளியேறியதால் வந்த மயக்கமா? முதலில் அவன் காயத்திற்கு மருந்திட்டு ரத்தம் வெளியேறாத வகையில் மீண்டும் கட்டு போட்டு விட்டாள்,…

நிமிடங்கள் கடந்தும் அவன் கண்விழிக்கவில்லை, முகத்தில் தண்ணீரை தெளித்து பார்த்தாள், அப்போதும் அவன் எழவில்லை, பயம் கை கால்களை நடுங்க வைத்தது, தைரியத்தை வர வழைத்துக் கொண்டு அவனை பிடித்து உலுக்கினாள், ம்ஹும் எழவேயில்லை, அந்த நேரம் எதிர்பாராவிதமாய் கதவு தட்டப்பட்டது, யாரோ வந்துவிட்டார்களா? தன்னை காப்பாற்ற தன் அண்ணன் வந்துவிட்டானா? அவள் முகத்தில் நிம்மதி படர்ந்தது, ஓடிப்போய் கதவை திறந்தாள், வெளியே யாரோ முகமறியா ஒருவன் நின்று கொண்டிருந்தான்,…

“நீ… நீங்க யாரு” உள்ளே போன குரலில் கேட்டவளுக்கு அவன் முகத்தில் தெரிந்த பார்வை பயத்தை உண்டுபண்ணியது,… வந்தவன் அவளை மேலிருந்து கீழ் வரை அளவிட்டபடி உள்ளே எட்டி பார்த்தான், அவன் சுயநினைவில்லாமல் கிடப்பதை கண்டு அவன் இதழில் மர்மபுன்னகை, அவளை ஒரு மாதிரி பார்வையில் பார்த்தவன் அவளை நெருங்கினான்,… “யா.. யார் நீங்க” அவள் கேட்டுக் கொண்டே பின்னால் நகர்ந்தாள், அவன் முகத்தில் தெரிந்த பார்வை அருவருப்பை ஏற்படுத்தியது, கொஞ்சம் தொலைவிலிருந்தாலும் அவன் மீதிருந்து வெளிப்படட வாடை குமட்டிக் கொண்டு வந்தது,.

அவள் பயத்தில் பின்னோக்கி நகரவும், அவளை தாவி நெருங்கியவன், அவள் மார்பை போர்த்திருந்த துப்பட்டாவை உருவி எடுத்தான், தன்னை கடத்தி கொண்டு வந்தவன் அவளை பார்க்கும் பார்வையில் கூட கண்ணியத்தை கடைபிடித்திருந்தான், ஆனால் இவனோ வந்ததுமே தன் துப்பாட்டவை பிடித்து இழுக்கவும், கதிகலங்கி போனாள், அவள் பார்வை மயங்கி கிடந்தவனின் மேல் வந்து விழுந்தது, எழுந்து வர மாட்டானா தன்னை வந்து காப்பாற்ற மாட்டானா?  என்று ஏங்கியது….

அவளை நெருங்கி கொண்டிருந்தவனோ,… அவளது தோள்பட்டையில் கரம் வைத்து அவள் உடையை பிடித்து இழுக்க,… “கடவுளே காப்பாத்து” எனும் பெருங்குரலோடு விழிகளை மூடிக் கொண்டவள், யாரோ ஒருவனின் அலறல் சத்தத்தில் தான் விழிகளை திறந்தாள்,…

அவள் முன் அவளை கடத்தி கொண்டு வந்தவன் தான் நின்றிருந்தான் விழிகள் சிவக்க, அவளை தவறான எண்ணத்துடன் தொட வந்தவன், கீழே சுருண்டு விழுந்து கிடந்தான், தற்போது அவன் அவளுக்கு கடத்தல்காரனாய் தெரியவில்லை, தன்னை காக்க வந்து பாதுகாவளனாய் கடவுளாய் தெரிந்தான், மனதில் நிம்மதி படர்ந்தது, அது அவன் எழுந்து வந்து விட்டான் என்பதனால் வந்த நிம்மதியா? அல்லது அவள் மானம் காக்கபட்டுவிட்டதால் வந்த நிம்மதியா? அவளே அறிவாள்,…

கீழே விழுந்து கிடந்தவனின் காலை பிடித்து தரதரவென்று வெளியே கொண்டு சென்றவன், அவனை என்ன செய்தானோ! சற்று நிமிடத்தில் உள்ளே வந்தவன்,… “யாரை கேட்டு வெளிக்கதவை திறந்த” என்று அவள் முன்னிலையில் நின்று உறுமினான்,..

“இல்ல அது, நீ வேற பேச்சு மூச்சில்லாம கிடந்த, கதவை யாரோ தட்டவும், பதட்டத்துல, உதவி செய்ய தான் யாரும் வந்திருக்காங்களோனு நினைச்சு தான் திறந்தேன்” என்று விளக்கம் கொடுத்தாள் பதட்டப்பட்ட குரலில்,…

“இங்க யாரும் உதவி செய்ய வரமாட்டாங்க, மனிதனோ மிருகமோ எது வந்தாலும் அதனால நமக்கு பிரட்சனை தான் வரும், இதை எப்போதும் மனசுல வைச்சுக்கோ” அவன் அழுத்தமாய் உரைக்க, அவள் சம்மதமாய் தலையை ஆட்டினாள்,…

“யாரவன் எப்படி இங்க வந்தான்” அவள் சும்மா தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் கேட்க,…”குடிகாரன் காமுகன், மனித உருவில் இருக்கும் அரக்கன், இப்படி எது வேணும்னாலும் சொல்லலாம், போதையை ஏத்திகிட்டு சுத்திக்கிட்டு இருந்திருப்பான், வீட்டை காணவும் வந்திருப்பான், உள்ளே ஒரு பொண்ணை பார்த்ததும் சும்மா இருப்பானா” அவன் சொல்வதன் அர்த்தம் புரிந்தது, பயம் தொண்டையை அடைத்தது, இனி ஒரு தடவை இந்த தவறை செய்ய கூடாது என தனக்கு தானே கூறிகொண்டு மனதில் அழுத்தமாக பதிய வைத்தும் கொண்டாள்,…

“யாரை கேட்டு எனக்கு நீ கட்டு போட்டு விட்ட” என கேட்டுக் கொண்டே அவன் மீண்டும் தன் கையிலுள்ள பேண்டேஜை பிரிக்க,… “தயவு செஞ்சு மறுபடியும் அப்படி பண்ணிடாத” என்று அவசரமாய் வந்து தடுத்தவள்…. “இந்த இடம் ரொம்ப மோசமான இடம், இங்க என்னை தனியா விட்டுட்டு ஜாலியா நீ மயங்கி போயிட்ட, நீ மட்டும் எழுந்து வராம போயிருந்தா அந்த அரக்கன் கையில மாட்டி சின்னா பின்னமாயிருப்பேன்” என்றாள் குரல் நடுங்க,…..

“என் பொறுப்புல இருக்க, அவ்வளவு சீக்கிரம் யாரையும் உன்னை நெருங்க விட மாட்டேன்” அவன் வார்த்தையில் தெரிந்த அழுத்தம், அவளுக்கு பிடித்தது, தனக்கு அவன் எதுவும் ஆக விட மாட்டான் என்பது புரிந்தது, தன் அண்ணனுக்கு பிறகு தன்னை பத்திரமாய் பார்த்துக் கொள்ள இன்னொருவனும் இருக்கிறான் நினைக்க நினைக்க மனம் பரவசமடைந்தாலும், தான் இதை நினைத்து சந்தோசப்படுவது சரி தானா என்று அவள் உள்மனம் கேள்வி கேட்டது,…

“என்ன முடிவு பண்ணிருக்க” அவன் கேட்டதன் அர்த்தம் புரியாமல் அவள் மலங்க மலங்க பார்க்க,…”என்கூட இருப்ப தானே?” என்றான்,…

அவளுக்கு இப்போது கோபம் வந்து விட்டது,… “உன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்க?” என்று எகிறியவள்,… “ஒரு பொண்ணை கடந்து கொண்டு வந்து என் கூட இரு, என்னையே கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்ற, உன் கண்ணியமான பார்வை, செயல் அனைத்தையும் பார்த்து கடத்தல்காரனா இருந்தாலும் உன் மேல பெரும் மதிப்பு மரியாதையே வந்தது, ஆனா இப்போ உன்னை பிடிக்கல எனக்கு, நீயும் சக ஆம்பிளைங்களை போல தான்னு நிரூபிச்சுட்ட, இப்போ வந்தானே அவனுக்கும் உனக்கும் இருக்க எண்ணம் கூட ஒரே மாதிரி தான்னு நிரூபிச்சுட்ட, அவன் அனுமதி கேட்காம என்னை தொட வந்தான், ஆனா நீ அனுமதி கேட்டு நிற்கிற அவவளவு தான் வித்தியாசம் அவனுக்கும் உனக்கும்” என பேசிக் கொண்டு போனவளை அடிபட்ட பார்வை பார்த்தான் அவன்,…

அவன் விழிகளில் தெரிந்த வலி வேதனை அவளை அசைத்து பார்த்தது, அதிகமாய் பேசிவிட்டோமோ என்று எண்ண வைத்தது, அதற்கு பிறகு அவன் கூறிய பதில் அவளை திகைப்படைய வைத்து, அவனை பரிதாபமாகவும் ஆச்சரியமாகவும் பார்க்க வைத்தது,…

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்