
அத்தியாயம் 15
தன் வீட்டில் நடந்த நிகழ்வுகளையே நினைத்துக் கொண்டு கணவனோடு அவள் புதிய வீட்டிற்கு பயணப்பட்டுக்கொண்டிருந்தாள் வசுந்தரா. தனது பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள் லேசாக மூடி இருந்த கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத் திறக்க, வசுமதியின் கணவன் நின்றிருந்தான்.
“என்னம்மா சகல தூங்குறாங்களா.?” என்றவனின் கேள்வியில்
“இல்ல மாமா. வாங்க.” என்றபடி கதவைத் திறந்து பிடிக்க. உள்ளே வந்தவன்
“என்ன சகல டிஸ்டர்ப் பண்ணிட்டோமா.” என்று கேட்டபடியே உள்ளே வர.
“இல்ல, இல்ல வாங்க.” என்றவன் பதிலில் அவனுக்கு எதிரில் இருந்த மெத்தையில் அமர்ந்தவன் பின்னே, வசுமதியும் வந்திருந்தாள்.
“அப்புறம் எத்தனை நாள் லீவு எடுத்திருக்கீங்க.”
“பத்து நாள்.”
“எங்க போற பிளான்.?”
“இன்னும் முடிவு பண்ணல.”
“ஓஹ்.! நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வரணும் ஒரு நாள்.”
“நிச்சயமா. எப்பன்னு சொல்லுங்க.? வந்துடலாம்.” எனப் பதிலளித்தான்.
நெடுநாள் நண்பர்கள்போலச் சுவாரசியமாக இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“நான் உங்ககிட்ட அன்னைக்கு கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லவில்லையே.?” என வசுமதி கேட்க.
“என்ன கேட்டீங்க.?”
“இல்ல, நீங்க இவள விரும்பிக் கல்யாணம் முடிக்கிறதா, உங்க அப்பா சொன்னாரு. அதான் அப்படி எதைப் பார்த்து இவகிட்ட மயங்கி, இவளையே கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைச்சீங்க.?” என்றவளின் கேள்வியில், அதுவரை, ஏதோ வேலை செய்வதுபோல அலமாரியை உருட்டிக் கொண்டிருந்தவள் தமக்கையின் கேள்வியில் அதிர்வோடு கணவனைப் பார்க்க,
அதுவரை இவர்களிடம் பேச்சில் கவனமாக இருந்தாலும் மனைவி என்ன செய்கிறான் என்பதை நோட்டம் பார்த்துக் கொண்டிருந்தவன் வசுமதியின் நேரடியான கேள்வியில் மனைவியை நேராகப் பார்த்தபடி.
“இது, அதுன்னு குறிப்பிட்டு சொல்ல எதுவுமில்லை. மொத்தமாவே அவள பிடிச்சு தான் கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்பட்டேன்.”
“அது எப்படி.? அவ எங்களை மாதிரி கலர் கூடக் கிடையாது.”
“உங்கள மாதிரினா.? வெள்ள வெளேர்னு பிசாசு கலரா.? எனக்கு அந்த வெள்ளக் கலரே ஆவாது.” என்றவனின் வெளிப்படையான பதிலில். பீறிட்டு எழுந்த சிரிப்பை அடக்க மிகவும் சிரமப்பட்டான் வசுமதியின் கணவன். தங்கை கணவனின் பதிலில் அவனை முறைத்து பார்த்தவள்.
எப்படியேனும் தன் தங்கையை அவன் முன் மட்டும் தட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில்,
“அது எப்படி.? குறிப்பிட்டு சொல்ற மாதிரி ஏதாவது கண்டிப்பா இருக்குமே. என்ன.? மிஞ்சி, மிஞ்சிப் போனா அவளுடைய நீளக் கூந்தலை பார்த்து மயங்கி, ஆசைப்பட்டிருப்பீங்க. ஏன்னா அது ஒன்னு தான் அவகிட்ட இருக்குறதுலேயே உருப்படியானது.” என்று எள்ளலான குரலில் கூறிவிட்டு, சிரிக்க.
“நீளமான கூந்தலா.?” என்று ஆச்சரியமாகக் கேட்டுவிட்டு, மனைவியின் கூந்தலை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவன்,
“எனக்கு நீளமான கூந்தலே பிடிக்காது. நீளமான கூந்தலை பார்த்தால் எனக்கு மோகினி ஞாபகம் வரும்” என்றவனின் பதிலில்.
“ஓஹ்..! அப்ப, அவள மோகினி னு சொல்றீங்க.” என்று சிரிப்புடன் கேட்க.
“ஆமா, நிச்சயமா, என்னை மயக்க வந்த மோகினி.” என்றான் ரசனையான குரலில். பின்,
சிறிய இடைவெளி விட்டு
“கூந்தல் மட்டும் தான் அவளுடைய பிளஸ் பாயிண்ட்டா என்ன.?
அதையெல்லாம் தூக்கி சாப்பிடற மாதிரி அவளுடைய கயல் விழிகள் இருக்கே. ஆளை அசத்தி, அப்படியே உள்ள இழுத்து, வெளிவர முடியாத அளவுக்கு இமை கொண்டு மூடி. அப்படியே உள்ளே புதைச்சுடுறா. மயக்கும் மோகினி மாதிரி. அப்படித்தான் புதைந்து இருக்கேன் நானும். எப்பவும் அதிலிருந்து மீளவும் விருப்பப்பட மாட்டேன்.”
“வாவ்.!சகல. கவித, கவித. பின்னிட்டீங்க போங்க. இதைவிட அழகா மனைவி மேல இருக்குற காதல யாராலும் சொல்ல முடியாது.”
என்றவனின் பாராட்டில் லேசாகப் புன்னகைத்தவன் மனைவியைப் பார்க்க, இவன் சொல்ல, சொல்லக் கேட்டிருந்தவளுக்கு என்ன மாதிரியான மனநிலை என்று விவரிக்க முடியாத நிலையில் சமைந்து போய் நின்றிருந்தாள் பெண் அவள்.
ஒற்றைப் புருவம் உயர்த்தி நீ வீட்டில் கேட்ட கேள்விக்கும் பதில் இதுதானெனச் சொல்லாமல் சொன்ன அவன் செய்கையில் மனம் ஆனந்த கூத்தாடி முகம் வெட்கத்தில் சிவந்து மிளிர்ந்தது.
கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருந்த வசுமதிக்கு தான் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த வசுமதியின் கணவனுக்கு மனம் ஆனந்தத்தில் கூத்தாடியது. இவளைப் போன்ற சின்னப் புத்தி காரிக்கு இப்படித்தான் மூக்கு உடைப்பட வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
தன் போலச் சிந்தனையில் அமர்ந்திருந்தவள், வீடு வந்ததும் தெரியாமல் அப்படியே அமர்ந்திருக்க.
“கனவு கண்டு முடிச்சிட்டின்னா, இறங்கி வா. வீட்டுக்குள்ள போகலாம்.” என்ற கணவனின் அழைப்பில் தான் பதறி இறங்கினாள்.
மாடி ஏறும் மகனைபார்த்த அனுபமா.
“பால் குடிக்கிறியா சஞ்சய்.?”
“கொஞ்சமா, அரை டம்ளர் மட்டும்.” என்றவன் மனைவியை ஒரு பார்வை பார்த்து விட்டுத் தன் அறையை நோக்கிச் சென்றான்.
“வா மா நீயும் பால் குடிப்பே இல்ல.” “பழக்கம் இல்ல அத்தை.”
“பழக்கம் இல்லையா.?இனிமே பழகிக்கோ. பால் உடலுக்கு அவ்வளவு நல்லது. அதுவும் நம்மள மாதிரிப் பெண்கள் கட்டாயமா தினமும் பால் குடிக்கணும். அதிகப்படியான கால்சியம் அதுல தான் இருக்கு.”என மருத்துவராக அவளுக்கு அறிவுறுத்த. சரியெனக் கேட்டுக் கொண்டாள் அவளும். ஒரு பெரிய டம்ளரில் சூடான பாலில் நாட்டு சக்கரை கலந்து கொடுத்தவர். “ரெண்டு பேரும் சேர்ந்து குடிங்க.” என்றபடி தனக்கும் தன் கணவருக்கும் அதே போன்ற ஒரு பெரிய டம்ளரில் எடுத்துக் கொண்டு தன் அறையை நோக்கிச் சென்றார்.
போகும் மாமியாரை பார்த்துவிட்டு. இவளும் தன் அறையை நோக்கிச் செல்ல. அங்கு இலகுவான ஆடைக்கு மாறி மெத்தையில அமர்ந்திருந்தான் சஞ்சய். தழும்ப தழும்ப இருந்த பால் டம்ளரை அவனிடம் நீட்டியவளை பார்த்தவன்.
“எதுக்கு இவ்வளவு.? நான் கொஞ்சமா தானே கேட்டேன்.”
“அத்தை, எனக்கும் சேர்த்து தந்திருக்காங்க.”
“ஓ.! அப்போ இன்னொரு டம்ளர் கொண்டு வந்திருக்கலாம்ல.” “பரவால்ல, நீங்கக் குடிச்சிட்டு கொடுங்க. நான் அதுலயே குடிச்சிக்கிறேன்.” என்றவளை, ஒற்றைப் புருவத்தை உயர்த்தி வியந்து பார்த்தவன்.
“அப்பச் சரி, நீ போய் டிரஸ் மாத்திட்டு வா. சேர்ந்தே குடிக்கலாம்.”என்றான் ஹஸ்கியான குரலில். அவன் சொன்ன விதத்தில் லேசாக ஜெர்கானவள், அவசர குளியலை போட்டுவிட்டு, இலகுவான உடையில் அவன் அருகில் அமர்ந்தவளுக்கு பால் டம்ளரை நீட்டியவன்,
“நீ குடிச்சிட்டு குடு.”
“நான் கொஞ்சம் ஆறி தான் குடிப்பேன். அதனால நீங்கக் குடிச்சிட்டு குடுங்க.”
“அது ஏற்கனவே ஆறி தான் இருக்கு.குடி.” எனக் கூறியவனிடம் அதற்கு மேல் தட்ட முடியாமல் அரை டம்ளர் குடித்தவள் மீதியை அவனிடம் கொடுத்து, அவன் அதை அருந்தி முடிக்கும் வரை அமைதியாக அமர்ந்திருந்தாள்.
குடித்து முடித்த டம்ளரை எடுத்துக்கொண்டு அறையின் வெளியே வந்தவன் பால்கனிக்கு செல்லும் வழியில் இருந்த டீபாயின் மீது வைத்துவிட்டு உள்ளே வர.
“நான் வேணும்னா கீழே போய் வச்சிட்டு வரவா.?” என்று கேட்ட மனைவியைப் பார்த்தவன்
“வேண்டாம் காலையில வேலை செய்றவங்க வந்து எடுத்துப்பாங்க. அதுதான் இங்க வழக்கம்.”என்றான்.
அமைதியாகக் கேட்டுக் கொண்டவளை பார்த்தவன்,
“என்ன கேட்கணும் என்கிட்ட.” என்று திடீரெனக் கேட்டவனை பார்த்தவள்,
தயக்கத்துடன் தலையைக் குனிந்து சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் பின்பு தைரியம் வரப்பெற்றவளாக,
“உங்களுக்கு நீளமான முடி பிடிக்காதா.?” என ஒருவாறு கேட்டிருந்தாள், தன் மனதை குடைந்து கொண்டிருந்த கேள்வியை.
“யாரு சொன்னா பிடிக்காதுன்னு.? ரொம்ப பிடிக்குமே.” என்றான் புன்னகை நிறைந்த முகத்துடன்.
அவனின் பதிலில் வியந்து, குழப்பத்துடன் அவனைப் பார்த்தவள்,
“நீங்கத் தானே வசுமதி கேட்கும்போது சொன்னீங்க.”
“அது சும்மா உலூலூளாய்க்கு. உன் கண்ணு எனக்கு எவ்வளவு பிடிக்குமோ அதே அளவுக்கு இந்த நீளமான கூந்தலையும் பிடிக்கும்.”என்றவாறு அவள் முன்னாள், மடியில் தவழ்ந்திருந்த கூந்தலை எட்டி எடுத்துத் தன் கைகளில் லேசாகச் சுற்றிக்கொண்டான்.
“ஏன் ரொம்ப பிடிக்கும் சொல்லு.?”என்று கேட்டவன், பின்பு அவனே அதற்குப் பதில் அளிக்கும் விதத்தில்,
“நீ தூரமா இருக்கும்போது இப்படி இழுத்தா. என் பக்கத்துல வந்து விழுவேல்ல அதுக்குதான்.” என்று கூறியபடியே கூந்தலை இழுக்க, அவன் பக்கத்தில் வந்து விழாமல், அவன் மேலேயே விழுந்திருந்தாள்.
தன் மேல் விழுந்தவளின் இடையைச் சுற்றி வளைத்துப் பிடித்தவன், அவள் முகம் பார்க்க. தான் இருக்கும் நிலையைக் கவனிக்காமல், அவன் சொன்னதை மட்டுமே யோசித்து கொண்டிருந்தவளின் செவியின் ஓரம் குனிந்து,
“உங்க அக்கா உன்ன மட்டம் தட்டுற மாதிரி பேசிக்கிட்டு இருந்தாங்க. அது எனக்குப் பிடிக்கல. ஏனோ உன் மேல அவங்களுக்கு காழ்ப்புணர்ச்சி இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன். அதான், அவங்க சொன்ன மாதிரி கிடையாதுன்னு அவங்களை குழப்பி விட்டேன்.” என்றவனின் பதிலில் குழப்பம் நீங்கியவளாக, தன்னை விட்டுக் கொடுக்காமல் அக்காவிற்கு தக்க பதிலடி கொடுத்த கணவனின் செயலில் மகிழ்ந்தவள். ஆனாலும், ஒன்று மனதை உருத்த
“மோகினி மாதிரி இருக்குன்னு சொன்னீங்களே.” என்று சற்று மனத்தாங்களுடன் கேட்க,
“அதுக்கும் அங்கேயே பதில் சொல்லிட்டேனே. என்னை மயக்கும் மோகினின்னு…” என்று அவன் உல்லாச குரலில் கூற. அதில் சற்று சமாதானமானவள் பின்பே தான் இருக்கும் நிலை உணர்ந்து அவசரமாக அவனை விட்டு நீங்க முயன்றவளை பார்த்தவன்.
“எதுக்கு இப்போ இந்த அவசரம்.? இரவு முழுக்க நீ இப்படி என் மேல படுத்து இருந்தாலும், இதுக்கு மேல ஒன்னும் போக முடியாது. ஏன்னா உன் உடல்நிலை அப்படி.”என்றவனுக்கு முகத்தைக் காட்ட முடியாமல் சங்கோஜமும், வெட்கமும் போட்டி போடக் குனிந்தவளை மார்போடு இறுக்கி அணைத்தவன் நேற்றை போலவே இன்றும் அழுந்த அவள் நெற்றியில் முத்தமிட்டவன். பின், மெதுவாக அவளைப் பக்கவாட்டாகச் சரிக்க உருண்டு மறுபக்கம் திரும்பிப் படுத்தவள், வெட்கத்தின் மிகுதியால் இறுக்கமாகக் கண்களை மூடிக் கொண்டாள்.
நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் தான் அன்றும் பெண் அவளுக்கு. எழுந்து, குளித்தவள் இலகுவான ஆலிவ் நிற பூனம் புடவை உடுத்தி, கணவன் மிகவும் பிடிக்கும் என்று கூறி, அதற்கான காரணமாக அவன் செயல் விளக்கத்தையும் நினைத்து வெட்கத்துடன் புன்னகைத்தவள். நீளமுடியை பின்னலிட்டு, நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமத்தை வைத்தவள், உறங்கும் கணவனைப் பார்த்துவிட்டுக் கீழே இறங்கி சென்றாள்.
ஒருவரும் இல்லாமல் அமைதியாக இருந்தது வீடு. மணியைப் பார்க்க ஏழு மணி ஆக இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன. சமையலறையை எட்டிப் பார்க்க, அங்குதான் அனுபமா மும்முறமாகச் சட்னிக்கு தேங்காய் வெட்டிக்கொண்டிருந்தார்.
“குட் மார்னிங் அத்தை.” என்றவளை திரும்பிப் பார்த்தவர்
“குட் மார்னிங் மா. எழுந்துட்டியா.? டைனிங் டேபிள் மேல காபி இருக்கு பாரு. குடி.” என்றவர் வேளையில் மும்முறமாக இருக்க.
“என்ன செய்றீங்க அத்தை.? நான் ஹெல்ப் பண்ணவா.?”என்றவளுக்கு “நீ முதல்ல காபி குடிச்சிட்டு வா. அப்புறமா ஹெல்ப் பண்ணலாம்.” என்றவரின் பேச்சை அதற்கு மேல் தட்ட முடியாமல் உணவு மேஜையில் இருந்த பிளாஸ்கிலிருந்த காபியை கப்பில் ஊற்றி அங்கேயே அமர்ந்து அருந்த ஆரம்பித்தாள்.
குடித்து முடித்த கப்பை எடுத்துக்கொண்டு இவள் கிச்சனுக்குள் போவதற்குள் காலை உணவு அனைத்தையும் செய்து முடித்திருந்தார் அனுபமா. இவளைப் பார்த்ததும்
“ஹெல்ப் பண்ணவான்னு கேட்ட இல்ல.? இதெல்லாம் எடுத்துட்டு போய் டைனிங் டேபிளில் வச்சிடு.” எனப் பெரிய வேலையாக அவளுக்குக் கொடுக்க. அவர் சொன்னபடி அனைத்தையும் கொண்டு போய் டேபிளில் அடுக்கி வைத்தாள். இவளைப் பார்த்தபடியே இறங்கி வந்த சஞ்சய்,
“அம்மா காபி.” என்ற படியே அங்கிருந்த சோபாவில் அமர. “வசுந்தரா, ஃப்ளாஷ்க்ல இருக்குற காபியை அவனுக்கு ஊற்றிக் கொடுமா.” என்ற மாமியாரின் சொல்லுக்கு இணங்கக் கணவனுக்குக் காபியை எடுத்துக் கொண்டு சென்றாள். புன்னகை முகத்துடன் அவனிடம் காபியை நீட்டியவளை தலை முதல் கால்வரை பார்வையால் வருடியபடி வாங்கிக்கொண்டான் அதே புன்னகை முகத்துடன்.
பின் அத்தையின் அருகில் சென்று நின்று கொண்டவள் அவர் சின்ன வெங்காயத்தை உரிப்பதை பார்த்துவிட்டு இவளும் அவரோடு சேர்ந்து உரிக்க ஆரம்பித்தாள்.
“ஏன் அத்தை பிளாஸ்க்ல காபி போட்டு வைக்கிறீங்க.?”என்றவளின் கேள்விக்கு.
“ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நேரம் வருவாங்க மா. நான் சமையல் செய்து முடிச்சிட்டு கிளீனிக்கும் கிளம்பனும். இவங்க வர நேரத்துக்குச் சூடா ஊத்தி கொடுத்துட்டு இருக்க முடியாது. நான் குடிக்கும் போதே இவங்க ரெண்டு பேருக்கும் பிளாஸ்க்ல போட்டு வச்சுட்டேனா அது நல்ல சூடாவே இருக்கும். அவங்களாவே வந்து ஊத்தி குடிச்சுப்பாங்க.”
தன் வீட்டில் பள்ளிக்குச் செல்லும் முன்பு, எழுந்து வரும் ஒவ்வொருவருக்கும் தான் அடுப்பில் செய்து கொண்டிருக்கும் வேலையை நிறுத்திவிட்டு காபி கலந்து கொடுத்ததை நினைத்துப் பார்த்தவர்களுக்கு இப்படியும் அனுசரணையான ஒரு குடும்பம் என்ற நினைப்பு வராமல் இல்லை.
“மதிய சமையல் இப்பவே செய்றீங்களா அத்தை.?”
“எப்பவுமே செய்ய ஆரம்பிச்சிடுவேன். ஆனா இன்னைக்கு லேட்டா தான் செய்யணும். ஏன்னா இன்னைக்கு கிளினிக் போற வேலை இல்ல. சரி சும்மா இருக்கோமே சின்ன வெங்காயத்தை மட்டும் உரிக்கலாம்னு எடுத்து வெச்சேன்.”
“ஹ்ம்ம்.” என்று கேட்டுக் கொண்டாள்.
“இன்னைக்கு உங்க மாமாக்கு மெடிக்கல் கான்பிரன்ஸ் இருக்கு. சாப்பிட்டுட்டு கிளம்பனும்னு சொன்னாரு அதான் வேக வேகமா டிபன் வேலையை முடிச்சேன்.” என இவர் கூறிக் கொண்டிருக்கும் போதே “அனு.” என்ற படியே வந்தார் பிரபு? “உங்க மாமா வந்துட்டாரு. வா, போலாம். நீயும் அவன் கூட உட்கார்ந்து சாப்பிடு.”
“நீங்களும் வாங்க அத்தை.”
“வரேன், வரேன்.” என்றபடியே உணவு மேஜையின் அருகில் வர அதற்குள் பிரபுவும் வந்து அமர்ந்திருந்தார்.
சஞ்சையை திரும்பிப் பார்க்க. பேப்பரில் மும்முறமாக ஆழ்ந்திருந்தான் அவன்.
“சஞ்சய் சாப்பிட வா.” என்ற அன்னையின் அழைப்பிற்கு எழுந்து வந்தவன். தன் அருகில் அமர மனைவிக்குக் கண் காட்ட அவளும் அமர்ந்து கொண்டாள். பின்பு, நால்வரும் ஒன்றாக அமர்ந்து அவர் அவர்களுக்குத் தேவையானதை எடுத்து வைத்து உண்ண ஆரம்பித்தார்கள். சூடான இட்லியும் அதற்குத் தேங்காய் சட்னியுடன் சாம்பாரும் நெய் மணக்க ரவை கேசரியும் இருந்தது.
“என்ன கேசரி எல்லாம்.?”என்று கேட்டபடியே பிரபு உண்ண “சும்மாதான் மருமக வந்திருக்கா இல்ல?.” என்று சிரிப்புடன் கூறினார். அனுபமா.
தொடரும்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1


