

பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
வாசிக்க ஆசை இல்லை
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
நித்திலன் அவனது பண்பலை நிகழ்ச்சியில் இந்தப் பாடலை ஒலிக்க விட்டுக் கண்களை மூடியவாறு நிவாசினியின் நினைவில் மூழ்கியிருக்க, அச்சமயம் அங்கு வந்த அவனது சகப் பணியாளர்,
“என்னடா கல்யாணம் முடிஞ்சு முதல் நாள் ஆபிஸ் வந்துட்டு சோக கீதம் வாசிச்சுட்டு இருக்க? ஆடி மாசத்துக்குப் போற மாதிரி உன் வொய்ப் அம்மா வீட்டுக்கு போய்ட்டாங்களா?” அவனைக் கேலி செய்தார்.
அவரின் கேலிப் பேச்சில் நடப்புக்கு வந்தவனாய் அமைதியாய் மென்னகை புரிந்தவன், “ஆமாடா இப்படிலாம் நாம சோகமா இருக்கோம்னு காமிச்சா தானே அவங்க நினைப்பாவே நாம இருக்கோம்னு நம்புவாங்க” அவனும் கேலியாய் பதிலிறுக்க,
“பொழச்சிக்குவடா மவனே நீ” அவனின் தோளில் தட்டிவிட்டு அறையிலிருந்து அவர் வெளியேறவும் பாட்டு முடியவும் சரியாக இருந்தது.
அவர் சென்றதும் முகத்தில் ஒட்ட வைத்திருந்த போலி புன்னகை காணாமல் போனாலும், குரலில் உற்சாகத்தைக் கொண்டு வந்தவன்,
“ஹாய்! ஹலோ! வணக்கம் அண்ட் வெல்கம் டூ நித்தில நினைவுகள் வித் மீ நித்திலன்! எனக்குத் திருமண வாழ்த்து சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள் ஃப்ரண்ட்ஸ். இந்த ஒரு மாசமா என்னை யாராவது மிஸ் செஞ்சீங்களா? என்னோட கேள்விகளை இந்தக் கலந்துரையாடலை மிஸ் செஞ்சீங்களா? அப்படி மிஸ் செஞ்சிருந்தீங்கனா கண்டிப்பா நீங்க அதைப் பகிர்ந்துக்கலாம். அதுல எனக்கு ஒரு குட்டி சந்தோஷம் கிடைக்கும்” எனக் கூறி சிரித்தான்.
“சரி கல்யாணம் முடிஞ்சி ஹனிமூன்லாம் போய்ட்டு வந்தவன் எந்த மாதிரி டிஸ்கஷன் டாபிக் இன்னிக்கு வச்சிருப்பான்னு யோசிக்கிறீங்களா? அப்படி யோசிக்கலனா இப்ப யோசிச்சிட்டே இருங்க. இப்ப வர்ற இந்தப் பாட்டைக் கேட்டுட்டு வாங்க. இன்னிக்கான கலந்துரையாடல் தலைப்பு என்னனு சொல்றேன். நீங்க யோசிச்சதும் நான் சொல்றதும் சரியானு பார்க்கலாம்” எனக் கூறி அடுத்தப் பாட்டை ஒலிக்க விட்டான்.
இது என்ன புதுவித மாயம்
என் நெஞ்சில் நீ தந்த காயம்
எனை விட்டு நீ செல்லும் நேரம்
விடுகதையாகுதடி!
இப்பாடல் ஒலித்துக் கொண்டிருந்த அதே நேரம், நிவாசினி இங்கே படுக்கையறையில் மெத்தையில் படுத்திருந்தவளாய் ஒலிவாங்கியின் மூலம் இந்நிகழ்ச்சியினைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
மனம் வெகுவாய் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாலும், இவளுக்காகத் தானே இப்படிச் சோகக் கீதமாய்ப் பாடல்களை அவன் ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறான் என்பதில் அவளுக்குச் சற்றாய் சிரிப்பு வந்தது.
‘சரி அப்படி என்ன டாபிக் இன்னிக்கு டிஸ்கஷனுக்குச் செலக்ட் செஞ்சிருப்பாங்க? எதுவும் ரொமேன்டிக் டாபிக்கா இருக்குமோ’ என்று சிரிப்புடன் யோசித்துக் கொண்டிருந்தாள்.
பவானியின் வீட்டில் நிவாசினியை நித்திலன் விட்டு சென்ற பிறகு அன்றைய நாள் முழுவதும் அவள் அவனிடம் பேசாது இருந்தாள். அவ்வாறு அவள் பேசாதிருப்பது அவனை வருத்தமடையச் செய்கிறது என்பதை அவனின் இப்பாடல்களின் வழியாய் உணர்ந்தாள்.
அப்பாடல் முடிந்து மீண்டுமாய் அவனின் குரல் ஒலிக்கத் தொடங்கவும் ஆர்வமுடன் கவனித்தாள்.
“இன்னிக்கான டிஸ்கஷன் டாபிக் என்னனா… முதல் காதல்! உங்க லைப்ல ஏற்பட்ட முதல் காதல் பத்தி, அவங்களை முதன் முதலா பார்த்த அனுபவம், அவங்ககிட்ட காதலை சொன்ன அனுபவம், அந்தக் காதல் நிறைவேறாத நிலைல உங்க முதல் காதலைப் பத்தி உங்க கணவன் அல்லது மனைவிகிட்ட சொன்ன அனுபவம்னு எல்லாத்தையும் இன்னிக்கு நீங்க பகிர்ந்துக்கலாம். நிகழ்ச்சியின் முடிவுல நான் என்னோட அனுபவங்களைப் பகிர்ந்துகிறேன்” என்றவனாய் அவன் அடுத்தப் பாடலை ஒலிக்க விட,
இங்கு இவளுக்கு உதட்டில் ஒட்டியிருந்த சிரிப்பு மறைந்து கடுப்பு குடி கொண்டது.
‘எதுக்கிப்ப இவரு முதல் காதல் பத்தி கேட்கிறாரு? என்கிட்ட இது மூலமா ஏதோ சொல்ல வராறோ! நான் தான் எதுவும் கேட்க விரும்பலைனு சொன்னேன்ல’ இதற்கு மேல் அந்நிகழ்ச்சியைக் கேட்க மனமற்று போனாலும், ‘என்ன தான் சொல்ல போறாருனு பார்க்கலாம்’ மனத்தோடு எண்ணியளாய் கோபத்தைப் புதைத்துக் கொண்டு தொடர்ந்து கேட்டாள்.
அடுத்து வந்த பாடலில் அவள் கோபத்தின் எல்லையைக் கடக்கச் செய்திருந்தது.
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
இப்பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும்,
‘நிவேதாவை நினைச்சு தானே இதைப் போடுறாரு. இதை வேற நான் கேட்கனுமா? ஒரு காலத்துல எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டா இருந்துச்சு. இப்பலாம் கேட்டாலே எரிச்சலா வருது’ மனத்தில் புலம்பியவளாய் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்திருந்தாள்.

தனது எண்ணப் போக்கினை மாற்ற ஒரு கதைப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிக்க முற்பட்டாள். ஆயினும் மனம் அதனுள் செல்லாமல் நித்திலனின் நினைவிலேயே சுழல எரிச்சலுடன் புத்தகத்தை மூடி வைத்தவள் மீண்டுமாய் அந்நிகழ்ச்சியைக் கேட்டிருந்தாள்.
அங்குப் பவானி விட்டத்தைப் பார்த்தவாறு படுத்திருந்தவளாய் தீவிரமாய் எதையோ யோசித்திருக்க, அபிநந்தன் அவளருகில் படுத்தவனாய் தீவிரமாய்க் கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்தான்.
“என்னங்க?” பவானி அழைக்க,
“ஹ்ம்ம்” என்றவன் அந்த விளையாட்டிலேயே கவனமாய் இருக்க,
“ஏங்க” அவள் மீண்டுமாய் அழைத்தாள்.
“ஹ்ம்ம்” என அவன் கவனத்தைத் திசை திருப்பாது விளையாடிக் கொண்டிருக்க,
ஆத்திரத்தில் அவனது கைப்பேசியைப் பறித்துத் தனது தலையணைக்குள் வைத்தாள்.
“ம்ப்ச் வனி, வின் பண்ண போற டைம்ல… கொடு வனி.. டைம் முடிஞ்சிடும்” சற்றுக் கடுப்புடன் கூறியவனாய் அவளின் கைகளைப் பற்றி இழுத்துத் தாவி அவளது தலையணைக்குள் அவன் கைகளை வைக்க, இவள் அவனைத் தடுப்பதாய் எண்ணி அவன் மீதே விழுந்து வைக்க, அவளை இறுக்கமாய் அணைத்திருந்தான் அவன்.
“ம்ப்ச் விடுங்கப்பா! உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்” என்றவள் கூறவும், அருகில் அவளைப் படுக்க வைத்து அணைத்தவனாய், “ஹ்ம்ம் சொல்லுங்க மேடம். என்ன சொல்லனும்” எனக் கேட்டான்.
“ஹாசினிக்கு வர்ற கனவு பத்தி சொல்லிருக்கேன்ல” என ஆரம்பித்தவள் நிவாசினி இறுதியாய் கண்ட கனவினைப் பற்றி உரைத்தவளாய்,
“இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” எனக் கேட்டாள்.
“கனவை வச்சி மட்டுமே ஒருத்தர் மேல சந்தேகப்படுறது தப்பு வனி. நாளைக்குத் தான் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிருக்கீங்களே அந்தச் சைக்காடிரிஸ்ட்டை பார்த்தா எதாவது தெளிவு கிடைக்கும்னு தோணுது. என்னைக் கேட்டா நித்திலன் அப்படி ஆளு கிடையாது ஆனா ஏன் அப்படிக் கனவு வருதுனு தெரியலையே” என்றான்.
“சரி அவ எப்படியும் தூங்கியிருக்க மாட்டா! இன்னிக்கு நைட் மட்டும் நான் அவ கூடத் தூங்குறேன்ங்க” கெஞ்சுதல் பார்வையுடன் அவனின் தாடையையும் உதட்டையும் பிடித்திழுத்துக் கொஞ்சிவளாய் அவள் கேட்க,
“இப்படிலாம் க்யூட்டா கேட்டா எப்படி நான் உன்னை அனுப்புறதாம்” என்றவன் அவளின் இதழில் புதைந்து மீண்டு எழுந்து விட்டே அவளை அனுப்பி வைத்தான்.
பவானி நிவாசினி தங்கியிருந்த அறை நோக்கிச் சென்று கதவைத் தட்டிய சமயம் நித்திலன் தனது முதல் காதலைப் பற்றி உரைக்கத் தொடங்கியிருந்தான்.
திடீரெனக் கேட்ட கதவு தட்டும் சத்தத்தில் திடுக்கிட்டுப் பயந்தவளாய் நிவாசினி தனது கைப்பேசியினை நழுவ விட, தனது இயக்கத்தை நிறுத்தியிருந்தது அக்கைப்பேசி.
பதட்டத்துடன் கதவைத் திறந்தவள், அங்குப் பவானியைக் காணவும், “ஏன்டி எருமை! இப்படியா பயமுறுத்துவ?” எனக் கேட்டவளாய் மீண்டுமாய்க் கைப்பேசியை உயிர்பித்து அவசர அவசரமாய் அந்நிகழ்ச்சிக்குள் சென்ற சமயம், “என் காதல் முழுசும் என் மனைவிக்கு மட்டும் தான்” என்ற இறுதி வாக்கியத்துடன் பேசி முடித்திருந்தான் அவன்.
‘முதல் காதல்லாம் இப்ப மறந்துட்டு மனைவியை மட்டும் தான் நேசிக்கிறேன்னு சொல்றாரு போல’ என மனத்தோடு பேசியவளாய் கட்டிலில் சென்று அமர்ந்தாள் நிவாசினி.
உள்ளே நுழைந்ததிலிருந்து அவளின் செயலையும் முகப் பாவனையும் பார்த்துக் கொண்டிருந்த பவானி, “என்னடி ஆச்சு?” எனக் கேட்டவாறு அவளருகில் அமர்ந்தாள்.
“நித்திப்பா ஷோவை கேட்டுட்டு இருந்தேன்டி! நீ கதவு தட்டினதுல போனை கீழே போட்டுட்டேன்” என்றாள்.
அவள் அழுது கொண்டிருப்பாள் என எண்ணி ஆற்றுபடுத்தவே வந்தாள் பவானி. ஆனால் இவளோ அவனின் நிகழ்ச்சியையே கேட்டுக் கொண்டிருந்ததாய் உரைத்ததில், “எப்போதுலருந்துடி நீ இப்படி மாறின?” ஆச்சரியமாய்க் கேட்டாள்.
“என்ன மாறிட்டேன்?” என நிவாசினி திருப்பிக் கேட்க,
“உன்னால சின்ன அதிர்ச்சியையும் துக்கத்தையும் தாங்க முடியாது ஹாசினி. உன் தாத்தாவை விட்டு வரும் போது நீ அப்படித் தான் இருந்த. உன்னைத் தேத்துறதுக்கு நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன். ஆனா இவ்ளோ குழப்பம், கஷ்டம், அடுத்து உன்னோட வாழ்க்கை என்னாகும்னு தெரியாத இந்தச் சூழல்ல எல்லாத்தையும் ஈசியா எடுத்துகிட்டு எப்படி இப்படி இருக்க நீ?” மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“இந்தக் கஷ்டங்கள்லாம் கடந்த பிறகு, நான் சந்தோஷமா தான் வாழ்வேன்ற நம்பிக்கை நூறு சதவீதம் என் மனசுல இருக்கு பவா. இப்போதைக்கு எனக்கிருக்கக் கவலை அவரைப் பிரிஞ்சிருக்கிறது தான்” அவள் தெளிவாய் உரைக்க,
“ஆனா எனக்கு நித்திலன் அண்ணா மேல அந்த நம்பிக்கை இல்லையே! எனக்கு ரொம்பப் பயமா இருக்குடி! உன் கனவுலாம் யோசிச்சு பார்த்தா எனக்கு அவரை வில்லனா தானே யோசிக்கத் தோணுது” பயத்துடன் உரைத்தாள் பவானி.
பவானியின் கைப்பற்றித் தட்டிக் கொடுத்த நிவாசினி, “நீ எனக்கு ஃப்ரண்ட்டா கிடைச்சது என்னோட புண்ணியம்டி” என்றவள், “நீ இவ்ளோ பயபடுறனால உனக்கு ஒரு உண்மையைச் சொல்றேன்டி” என்றவள் சற்று அமைதியாக,
“என்னடி புதிர் போடுற? இன்னும் என்ன குண்டுலாம் என் தலைல போட போறடி” பயந்தவாறு கேட்டாள்.
“எங்கப்பா அம்மா இறந்த பிறகு அந்த அதிர்ச்சியில எனக்குப் பழசுலாம் மறந்துடுச்சுனு தாத்தா சொன்னாருடி. நான் திடீர்னு மயக்கம் தெளிஞ்சு பார்த்தப்ப ஒரு ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். மூனு மாசம் கோமால இருந்ததா தாத்தா சொன்னாங்க. அம்மா அப்பா இறந்த செய்தியைக் கேட்டதும் நான் கோமாக்குப் போய்ட்டதா சொன்னாரு. ஆனா அதுக்குப் பிறகு அவர் என்னை நாங்க தங்கியிருந்த ஃப்ளாட்க்கு கூட்டிட்டு போனப்ப எனக்கு அந்த இடமே புதுசா தெரிஞ்சிது. அங்கிருந்த யாரையும் தெரியலை. ஆனா அங்கிருந்த இரண்டு மூனு பேரு என்னைத் தெரிஞ்சா மாதிரி என்கிட்ட வந்து பேசினாங்க. ஆனா எங்க வீட்டுல வேலை செஞ்சிட்டு இருந்தவங்களை எனக்குத் தெரிஞ்சிது. ஏன்னா அவங்க என்னோட சின்ன வயசுலருந்தே எங்க வீட்டுல வேலை செஞ்சவங்க. இதை வச்சி தான் இடையில ஒரு இரண்டு மூனு வருஷம் நடந்தது எதுவும் எனக்கு ஞாபகம் இல்லைனு டாக்டர் கண்டுபிடிச்சு சொன்னாரு. ஆனா நான் அதைப் பெரிசா எடுத்துக்கலை. எனக்கு அப்பா அம்மா இல்லாதது தான் பெரிய விஷயமாபட்டுது. அதுக்குப் பிறகு தான் உன் கம்பெனியில் வேலை கிடைச்சு உன்னைப் பார்த்தது” என்றாள் நிவாசினி.
பேரதிர்வுடன் அவள் கூறியதைக் கேட்டிருந்தாள் பவானி.
“என்னடி சொல்ற? ஏன்டி இதை எல்லாம் என்கிட்ட நீ முன்னாடியே சொல்லலை” எனக் கேட்டாள்.
“எனக்கு நிஜமா ஞாபகம் இல்ல பவா. தாத்தா இறந்த பிறகு வாழ்க்கையே முடிஞ்சி போன மாதிரி தானே இங்கே வந்தேன்” என்றாள் நிவாசினி.
“ஏன்டி அப்ப இந்தத் தீபாவளி படத்துல ஹீரோயின்க்குப் பழசுலாம் ஞாபகம் வந்ததும் இப்ப நடந்ததுலாம் மறந்துடுமே! அப்படி என்னையும் மறந்துடுவியாடி” கண்களில் வலியை தேக்கி கண்ணீருடன் கேட்டிருந்தாள் பவானி.
நெஞ்சுருகிப் போனவளாய் அவளை இறுக்கி அணைத்த நிவாசினி,
“நீ எனக்கு அம்மா அப்பா தாத்தா எல்லாமுமேடி. உன்னை எப்படி நான் மறப்பேன். இந்த உலகத்துல யாரை மறந்தாலும், ஏன் நித்திலனையுமே நான் மறந்தாலும் என் அப்பா அம்மா தாத்தாக்குப் பிறகு நான் மறக்காம இருப்பேன்னா அது நீ மட்டும் தான்டி. இல்லனா நான் நன்றி கெட்டவள் ஆகிடுவேன்டி” எனக் கூறி அவளின் கண்ணீரைத் துடைத்துக் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
வழமைப்போல் கன்னத்தைத் துடைத்தவாறே, “அடியேய் ச்சீ! இன்னும் நீ இந்தப் பழக்கத்தை விடலையா! அண்ணாக்குக் கொடுக்க வேண்டியதுலாம் எனக்குக் கொடுத்துட்டு இருக்க” என முகத்தைச் சுழித்தாள் பவானி.
“நித்திலன் அண்ணா அப்ப உன்னை முன்னாடியே பார்த்திருக்காங்க. ஏதோ ஒரு வகையில் நீ அவருக்குத் தேவைபடுறனு தான் மேரேஜ் செஞ்சிருக்காங்க போல! எனக்குப் பயமா இருக்குடி. உன்கிட்ட அவருக்குத் தேவையானது கிடைச்சதும் உன்னைக் கொல்ல ப்ளான் செஞ்சிருப்பாரோ!” பவானி மிரண்டு போய்க் கூற,
“ம்ப்ச் என் நித்திப்பா அப்படிலாம் இல்லடி. அவருக்கு ரொம்பவே இரக்க சுபாவம் ப்ளஸ் என் மேல அளவு கடந்த அன்பு. ஆனா என்ன… இந்த அன்பு குற்றயுணர்வினால வந்துச்சானு தான் இப்ப என் சந்தேகம்” என்ற நிவாசினி தொடர்ந்து,
“அவர் என்னை முன்னாடி பார்த்திருக்காரு, பேசியிருக்காரு, பழகியுமிருக்காரு. அவருக்கு இதெல்லாம் ஞாபகமும் இருக்கு. எனக்குத் தான் நினைவுல இல்ல” என்றாள்.
“என்னடி சொல்ற! அப்ப அவர் உன்கிட்ட பொய் சொல்லி ஏமாத்திருக்காரு. நீ என்னடானா அவருக்கு இரக்க சுபாவம் அன்பு காதல்னு உளறிட்டு இருக்க?” என்று ஆத்திரத்துடன் உரைத்த பவானி,
“ஆமா எதை வச்சி அவரு உன்கிட்ட முன்னாடியே பேசி பழகியிருக்காருனு சொல்ற?” எனக் கேட்டாள்.
“என் கனவு வச்சி தான். என் கனவு எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சி பார்க்கும் போது என்னோடது ஒன் சைட் லவ்வா இருந்திருக்கனும். அவரும் நிவேதாவும் லவ் செஞ்சிட்டு இருந்திருக்கனும். எப்படியோ அவரறியாம என்னோட அப்பா அம்மா ஆக்சிடெண்ட்க்கு அவர் காரணம் ஆகியிருக்காரு போல. அதுல நான் அனாதை மாதிரி ஆனதால இரக்கப்பட்டுக் குற்றயுணர்வுல என்னைக் கல்யாணம் செஞ்சிருக்காருனு நினைக்கிறேன். கல்யாணத்துக்குப் பிறகு மனைவிக்குத் துரோகம் செய்யக் கூடாதுங்கிறனால நிவேதாவை விட்டு விலகி இருக்காரு” என்றாள்.
“அப்ப அவர் உனக்கு ப்ரபோஸ் செஞ்ச மாதிரி வந்த கனவுலாம் என்னவாம்? மேரேஜ் டைம்ல தேஜாவூலாம் சொன்னியே?” எனக் கேட்டாள் பவானி.
“அது என்னோட அடி மனசின் ஆசைகள்டி. நான் தான் அவரை ஒன் சைடா தீவிரமா லவ் பண்ணிட்டு இருந்திருக்கேனே! அவரை நான் மேரேஜ் செய்து வாழனும்ற என்னோட ஆசைகள் அவரைப் பார்த்ததும் அப்படிக் கனவா வந்திருக்குனு நினைக்கிறேன்” என்றாள்.
“எனக்கென்னமோ எதுவும் சரியா படலை ஹாசினி! அவரை எப்படி இரக்க சுபாவமுள்ளவர் நல்லவர் வல்லவர்னு இன்னும் நீ நம்புறியோ தெரியலை! நீ சொல்றதை எல்லாம் என்னால ஏத்துக்கவே முடியலைடி” குழப்பமான முகப் பாவனையுடன் உரைத்தாள் பவானி.
நிவாசினி விளக்க ஆரம்பித்தாள்.
“பவா உண்மையிலேயே எனக்கு இந்த அம்னீசியா இருக்குறதே மறந்து போச்சுடி! தாத்தா இறந்த பிறகு வாழனுங்கிற ஆசையே இல்லாம இருந்தப்ப எனக்கு எதைப் பத்தியும் யோசிக்கவோ நினைக்கவோ தோணலை. அதனால தான் நான் உன்கிட்ட இதைப் பத்தி எதுவும் சொல்லலை. எனக்கு மாஞ்சோலை போன சமயத்துல தான் இந்த அம்னீசியா பத்தின ஞாபகம் வந்துச்சு. அதுக்குக் காரணம் எனக்கு அங்க சில இடங்கள் பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வு தான். ஐ திங்க் நித்திலன் எனக்குப் பழைய நினைவுகள் வர வைக்கத் தான் அங்கே கூட்டிட்டு போனாருனு நினைக்கிறேன். அந்த ஊருக்குப் போனதும் நான் ஏற்கனவே அங்கே போன ஃபீல் வந்துச்சு எனக்கு. அந்த ஊருக்குப் போகுற வரைக்கும் நித்திலனுக்கும் எனக்கும் முன் ஜென்ம பந்தம் இருக்குனு தான் நினைச்சிட்டு இருந்தேன்டி. அதனால தான் எனக்கு இப்படிலாம் தோணுதுனு நினைச்சேன்” என்றாள்.
“சரி நித்திலன் அண்ணா ஏன் உன்கிட்ட உண்மையை மறைக்கனும்! மறைக்கிற அவரே உனக்கு ஏன் பழைய ஞாபகங்கள் வர வைக்கனும்னு நினைச்சு அங்க கூட்டிட்டு போகனும்?” குழப்பத்துடன் கேட்டாள் பவானி.
“எனக்குப் பழைய ஞாபகங்கள் வந்தா அவரை நான் வெறுத்திடுவேனோனு நினைச்சிருக்கலாம். அதே சமயத்துல எனக்குப் பழைய நினைவுகள் வராமலேயே போகனும்னு நினைக்கிற அளவுக்கு அவருக்குக் கல் மனசில்லையே! இந்த இரண்டுக்கும் இடையில தள்ளாடிட்டு இருந்திருப்பாரா இருக்கும்” என்றாள் நிவாசினி.
“தெரியாத்தனமா உனக்குக் கதை புக் படிக்கிற பழக்கத்தை ஏற்படுத்தி விட்டுட்டேன்டி! அநியாயத்துக்குக் கதையா அளக்கிறடி” என்றாள் பவானி.
“நான் சொல்றதுலாம் கதையா உண்மையானு நாளைக்கு அந்தச் சைக்காடிரிஸ்ட் டாக்டரை பார்க்கும் போது தெரிஞ்சிடும்” என்றவளாய் நிவாசினி படுக்கையில் படுத்துக் கொள்ள,
தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னைக் கண்டேன்
என் மேலே ஈரம் ஆக ஓருயிர் கரைவதை
நானே கண்டேன்
கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவளே வரமாய் வருவதை இங்குப் பார்த்தேன்
வேறு என்ன வேண்டும் வாழ்வில்
அவளின் கைப்பேசி இப்பாடலை அழைப்பொலியாய் இசைத்து அலறியது.
அவளருகில் படுத்திருந்த பவானி எட்டிப் பார்க்க, நித்திப்பா எனப் பெயர் மின்னியது.
நிவாசினி கையில் கைப்பேசியை வைத்துக் கொண்டு எடுக்காமல் அதனையே பார்த்திருக்க,
“எடுத்து பேசுடி” அவளின் கைகளில் தட்டினாள் பவானி.
கைப்பேசியை மௌன மொழிக்கு மாற்றியவள், “அவர் ஷோ முடிஞ்சி இப்ப தான் வீட்டுக்குப் போய்ருப்பாரு போல. அதான் கால் பண்றாரு” என்றாள் நிவாசினி.
“நான் இருக்கேன்னு எடுக்காம இருக்கியா? நான் வேணா வெளில இருக்கேன்டி” என்று பவானி கூற,
“ம்ப்ச் அதெல்லாம் இல்லடி! இத்தனை நாளா என்கிட்ட எதுவும் சொல்லாம விட்டதுக்கு நான் அவருக்குக் கொடுக்கிற தண்டனை இது” என்றாள் நிவாசினி.
“நீ தானே அவர் எது சொன்னாலும் காது கொடுத்து கேட்காம, எதுவும் சொல்ல வேண்டாம்னு சொன்ன” பவானி நிவாசினி மீது குற்றம் சுமத்த,
“ஏன்டி நீ எனக்குச் சப்போர்ட்டா இல்ல அவருக்குச் சப்போர்ட்டா? இத்தனை நேரம் அவரை வில்லன் ரேஞ்ச்க்கு பேசிட்டு அவருக்குச் சப்போர்ட் பண்ணிட்டு இருக்க” என்று சிரிப்புடன் கேட்டாள் நிவாசினி.
“இல்லடி அண்ணா சொல்ல வந்ததைக் கேட்காம விட்டுட்டேன்னு நீ தானே அழுது புலம்பின” என்றாள் பவானி.
“நான் அவரை நெருங்க விடாம தள்ளி வச்சி அழுது கவலைப்படுறதப் பார்த்துட்டு தான் அவர் ஏதோ சொல்ல வந்தாரு. அவரா ஒன்னும் தானா என்கிட்ட சொல்ல வரலை. கண்டிப்பா இப்ப அவர் எது சொன்னாலும் நம்புற நிலைல என் மனசு இல்லடி! ஐ நீட் சம் பிரேக். நாளைக்கு டாக்டர் சொல்றதை கேட்டுட்டு அவர்கிட்ட நான் பேசிக்கிறேன்” எனக் கூறியவளாய் கண்மூடி உறங்க முயற்சித்தாள் நிவாசினி.
அங்கு நித்திலனோ இவள் கைப்பேசியை எடுக்காது போகவும் தவித்துப் போனான்.
இன்று நாள் முழுவதும் அவள் அவனுடன் பேசாது இருந்ததில் அவளுக்குப் பழைய நினைவுகள் வந்திருக்குமோ என்ற பயத்தில் பதட்டத்தில் உறக்கம் வராமல் கவலையில் உழன்றான்.
நாளை இருவருக்கும் என்ன வைத்திருக்கிறது என அறியாது தத்தமது சிந்தினையில் மூழ்கியிருந்தனர் இருவரும்.
இங்கு நிவாசினியோ பலவிதமான சிந்தனையில் கண் மூடி கிடந்தவள் திடீரெனப் பவானி என அலறியவளாய் எழுந்தமர்ந்தாள். அன்னிச்சைச் செயலாய் அவளின் கரம் வயிற்றைத் தடவியிருந்தது.
ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றிருந்த பவானி பதறி எழுந்தவளாய், “என்னடி என்னாச்சு எதுவும் கெட்ட கனவு கண்டியா?” எனக் கேட்டாள்.
“இல்லடி! அந்தப் பழைய கனவு வந்ததுலருந்து நான் ப்ரக்னன்ட்டா இருப்பேனோனு உள் மனசு சொல்லிட்டே இருக்கு. உனக்குத் தெரிஞ்ச லேடி டாக்டர்ட்ட நாளைக்குப் போய்ப் பார்த்துட்டு வந்துடலாமாடி” எனக் கேட்டாள் நிவாசினி.
“வாவ் சூப்பர்டி. எவ்ளோ சந்தோஷமான விஷயம் அதை ஏன் இப்படிச் சோகமா சொல்ற! அதுவும் நித்திலன் அண்ணா மேல தான் நீ அவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கியே” என்றாள் பவானி.
“ஆனாலும் ப்ரக்னன்சினு யோசிச்சாலே மனசு என்னமோ பதபதைக்குதுடி” என நிவாசினி கூற,
“அது பொதுவா பொண்ணுங்களுக்கு வர்ற பயம் தான். நாளைக்கு இதுக்கும் கன்செல்ட் பண்ணிட்டு வந்துடலாம். ஆபிஸ்க்கு லீவ் போட்டதும் தான் போட்டாச்சு. எல்லா வேலையும் முடிச்சிடலாம். இப்ப எதையும் யோசிக்காம நிம்மதியா தூங்கு” எனக் கூறியவளாய் படுத்து விட்டாள் பவானி.
பலவிதமான மனக் குழப்பத்தில் உறக்கம் வராமல் தவித்த நிவாசினி மனத்தை மாற்றுவதற்காகக் கைப்பேசியில் நித்திலன் அனுப்பியிருந்த மாஞ்சோலையில் எடுத்த ஒளிப்படங்களைப் பார்த்தாள்.
அங்கு அவனுடன் இன்பமாய்ச் செலவழித்த நாள்களை அப்படத்தின் வழியே எண்ணிப் பார்த்தவளின் மனம் பூரித்து நெகிழ, அவ்வுணர்வுடனேயே உறங்கிப் போனாள் நிவாசினி.

