Loading

“உன் பாட்டி எப்படி விக்ரமை உள்ள விட்டாங்க?” சஞ்சீவ் நடந்ததை அறிந்து அதிர்ந்தான்.

“அவங்க பெர்மிஷனை யாரும் எதிர்பார்க்கலையே” தோள் குலுக்கினான் அக்னி வேந்தன்.

சஞ்சீவின் நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பாக, அதனை அக்னிக்கு காட்டாமல் மறைத்துக் கொண்டவனைக் கவனியாமல், சஞ்சீவிற்கு உத்தரவுகளை பிறப்பித்தான்.

அதனைக் கேட்டு மெல்லத் திகைத்தவன், “இப்ப எதுக்கு இந்த அப்க்ரேட் அகி? ஹெவி இன்வெஸ்ட்மென்ட் இனி இங்க பண்ணக்கூடாதுனு அங்கிள் சொல்லிருக்காரே” என்றதில்,

“இனி அவர் அப்ரூவல் தேவையில்ல…” என அசட்டையாய் உரைத்து விட்டு பெரியவர்களை நோக்கிச் சென்றான்

அக்னிலா கீழே இருந்த கற்களையும் இலைகளையும் வைத்து விளையாடிக் கொண்டிருக்க, அவளையே ஆதூரமாய் பார்த்திருந்தார் விஜயா தம்பதியினர்.

அக்னி வேந்தன் வருவது தெரிந்ததுமே சட்டென பார்வையைத் திருப்பிக் கொண்ட பவித்ராத்யாவிற்கு நெஞ்சம் படபடவென இருந்தது.

“இன்னைக்கு கிளாஸ் வைக்காம ஓபி அடிச்சாச்சா” எனக் கிண்டலுடன் கேட்டவன், “குட்டிமா வாங்க” என்று அக்னிலாவைத் தூக்கிக் கொண்டான்.

“விக்ரமை பார்க்கணுமே அகி” விஜயா கேட்டதில்,

“சீக்கிரம் கூட்டிட்டு வரேன்” என்று விட்டு, இருவரையும் அழைத்துக் கொண்டு காருக்குச் செல்லும்போதே, “நீங்க தூக்கிட்டு வரணும்னு இல்ல. அவள் நல்லாவே நடப்பா” என்றாள் பவித்ராத்யா.

“கையில தூக்கிக் கொஞ்சுற வயசுல இருந்து தான் எல்லா உரிமையையும் பறிச்சுட்டீங்களே. அட்லீஸ்ட் இப்பவாவது தூக்கிக்கிறேன். இன்னும் கொஞ்ச நாள்ல இதுவும் பண்ண முடியாது” என்றவனின் குரலில் ஏமாற்றம் வெளிப்பட, ஏன்டா கேட்டோமென்றானது அவளுக்கு.

காரில் இருவருமே அமைதியாக வர, அவளே மெல்ல ஆரம்பித்தாள்.

“திலோ நிறைய தடவை உங்ககிட்ட பேச சொன்னா. விக்ரம் அத்தான் தான் கேட்கல…” திலோத்தமாவைத் தவறாக எண்ணி விடுவானோ என்று கூறியவள் அவனது இறுகிய முகம் கண்டபிறகே நாக்கைக் கடித்தாள்.

வீட்டை அடைந்ததும், தாயையும் தந்தையையும் கேட்டு சிணுங்கிய மகளைத் தமையனின் அறைக்கு அழைத்துச் சென்றான்.

அங்கு விக்ரமிற்கு மதிய உணவைக் கொடுத்துக் முடித்த திலோத்தமா, பதற்றமாகவே இருந்தாள்.

அவளைக் கவனித்து “திலோ” என அழைத்த விக்ரம் தன்னருகில் அழைக்க, அவன் மடியில் அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு அமர்ந்தவளிடம் “என்ன ஆச்சாம் மேடம்கு…” என்றான் நெற்றி முட்டி.

“இல்ல ஹாஸ்பிடல்ல என்ன சொல்லுவாங்களோனு இருக்கு. சரியாகிடும் விக்ரம்…” என அவன் கன்னத்தை வருடினாள்.

“சரியாகலைன்னா?” தலை சாய்த்து அவன் கேட்க,

“அப்படி சரியாகாதுன்னு சொல்லிட்டா, நம்ம மறுபடியும் எங்கயாவது போய்டலாம் விக்ரம். இங்க வேணாம். நான் உங்களை பத்திரமா பாத்துப்பேன். யார் கண்ணுலயும் படாம போய்டலாம்…” என்றவளின் கலங்கிய விழிகளில் அத்தனை வலி.

எப்போதும் அவனை அவன் குடும்பத்துடன் சேர்த்து வைத்திடவே பேசுபவள், இன்று இப்படி பேசியது வியப்பையும் யோசனையையும் ஒரு சேர குடுத்தது.

“அப்போ சரியாகிட்டா?” இந்தக் கேள்வியை கேட்க மறந்த மடத்தனத்தை எண்ணி அவன் ஒரு நாள் வருந்தும் நேரம் வருமென்று அறியாது, “எனக்கும் உன்கூட நம்ம வீட்ல இருந்தது தான் பிடிச்சுருந்துச்சு” என்றான் மூக்கோடு மூக்குரசி.

“க்கும்!” அக்னி வேந்தன் தொண்டையை கனைக்கும் ஒலி கேட்க, அவசரமாக அவனிடம் இருந்து எழுந்த திலோத்தமாவிற்கு பூமியில் புதைந்து விட மாட்டோமா என்றிருந்தது.

இவன் முன்னால் விக்ரமிடம் குழைந்ததுமில்லாமல், மீண்டும் அவனிடம் இருந்து பிரித்துச் செல்லவே பேசி இருந்ததை எண்ணி நடுக்கம் வந்து விட்டது.

விக்ரமிற்கு தம்பியைக் கண்டதும் தானாய் ஒரு வெட்கம் உருவாக, அசடு வழிந்தவன் தன்னிடம் தாவிய அக்னிலாவிடம் கவனத்தைத் திருப்பினான்.

விக்ரமின் மடியில் நிலாவை அமர வைத்த அக்னி வேந்தன், திலோத்தமாவின் கையைப் பிடித்து வளைத்தான்.

“இங்க இருந்து யாராவது எஸ்கேப் ஆகணும்னு நினைச்சீங்க. காலை வெட்டி இங்கயே கட்டி போட்டுருவேன்…” எனக் குழந்தையின் காதில் விழாத வண்ணம் அடிக்குரலில் சீறினான்.

“ஆஆ…” திலோத்தமா கை வலிக்க கத்தி விட்டதில், நிலா அவள் புறம் திரும்பிய நேரம் கையை விட்ட அக்னி வேந்தன், இருவரையும் தீயாய் முறைத்து விட்டுச் செல்ல விக்ரம் பரிதாபமாய் விழித்தான்.
    
திலோத்தமா உதட்டைப் பிதுக்கி “பாருங்க விக்ரம் இவனை…” என்க, “உங்க ப்ரெண்ட்ஷிப்குள்ள ஆயிரம் இருக்கும். நான் எதுக்கு தேவையில்லாம தலையிட்டுக்கிட்டு” என கமுக்கமாக சிரித்ததில்,

“துரோகி…” எனச் செல்லமாய் கணவனை அடித்தாள்.

அக்னிலாவை பவித்ராத்யாவிடம் ஒப்படைத்து விட்டு, மூவரும் மருத்துவமனைக்குச் சென்றனர்.

பல வித சோதனைகளுக்குப் பிறகு, “ட்ரீட்மென்ட்டை இப்ப இருந்தே ஸ்டார்ட் பண்ணலாம் மிஸ்டர் அக்னி. நீங்க அட்மிட் பண்றது பெஸ்ட். 10 டேஸ் பிசியோ குடுக்கணும். தென், அப்சர்வேஷன்ல வச்சு பார்த்ததுக்கு அப்பறம், சர்ஜெரி டேட் பிக்ஸ் பண்ணலாம்” என மருத்துர் கூறியதில், அக்னியும் ஒப்புக்கொண்டான்.

மறுபடியும் மருத்துவமனையில் இருக்க வேண்டுமா எனும்போதே விக்ரமிற்கு ஆயாசமாக இருந்தது.

ஏற்கனவே ஒரு மாதத்திற்கு மேல் மருத்துவமனையில் கழித்து சில நாள்களுக்கு முன் தான் வீட்டிற்கே வந்திருந்தான்.

“நாளைக்கே அட்மிட் பண்றேன்” என்று மேலும் விவரங்களைக் கேட்டுக்கொண்டு மீண்டும் வீட்டை நோக்கிச் சென்றான் அக்னி.

திலோத்தமாவிற்கு சிகிச்சை நன்முறையில் முடிய வேண்டுமென்ற பதற்றம் இருந்தாலும், அவனுக்குச் சரியாகி விட்டால்? அதன்பிறகு நேர வேண்டிய பிரிவை எண்ணி உள்ளம் பதறியது.

ஆழ்ந்த மூச்சை எடுத்தபடி தன்னையே அடக்கினாள்.

கண்ணாடி வழியே தோழியின் பாவனைகளை அளவெடுத்த அக்னி வேந்தனைக் கண்டதும், திருதிருவென விழித்தவள், சட்டென ஜன்னல் புறம் திரும்பிக்கொண்டாள்.

வீட்டை அடைந்ததும், விக்ரமிற்கு தேவையான அனைத்தையும் தானே பார்த்துக்கொண்ட அக்னி வேந்தனிடம் மறுக்கவும் இயலாமல் திலோத்தமா தவித்தாள்.

விக்ரம் அவளுக்கு கண்ணைக் காட்ட, திலோத்தமாவும் தனது பையில் இருந்த பணக்கட்டை எடுத்து அக்னியிடம் நீட்டினாள்.

அவன் விழி சுருக்கி அவளை ஏறிட்டதில், விக்ரமே தொடர்ந்தான்.

“இங்க இருந்து போகும்போது எடுத்துட்டுப் போன பணம். எடுத்துட்டுப் போகணும்னு நினைக்கல அகி. திருப்பி உன்கிட்ட குடுக்க முடியல.

நீ தனியா பிசினஸ் ஸ்டார்ட் பண்ணனும்னு உனக்காக வாங்குன லோன் பணம். அதை நான் எடுத்துட்டு போயிருக்க கூடாது. ஆனா வேணும்னு பண்ணல அகி. உங்கிட்ட குடுக்க எவ்ளோவோ ட்ரை பண்ணேன். முடியல…” என்றான் தவிப்பாக.

திலோத்தமாவோ, “அவர் இவ்ளோ வருஷமும் இதுல இருந்து ஒரு ரூபா கூட எடுக்கல. இப்ப விக்ரமுக்கு ஆக்சிடென்ட் ஆனப்ப, ரொம்ப அடி. கைல வச்சிருந்த பணமெல்லாம் போக எக்ஸ்டரா புரட்ட முடியல. வேற வழியில்லாம இதுல இருந்து அஞ்சு லட்சம் எடுத்துட்டேன். அவருக்கு தெரிஞ்சுருந்தா செத்தாலும் பரவாயில்லனு கண்டிப்பா இதுல இருந்து எடுக்க ஒத்துக்க மாட்டாரு… எப்படியும் அந்தப் பணத்தை நான் திருப்பி குடுத்துடுறேன்…” அவள் தலையைக் குனிந்து கொண்டு கூறியதில்,

விக்ரம் வேகமாக, “நீ எனக்காக தான எடுத்த. உன்னைப் பல தடவை சொல்லிட்டேன் உன்மேல தப்பு இல்லைன்னு…” எனக் கடிந்தவன், அக்னி வேந்தனைப் பார்க்க, அவனோ விக்ரமை கடுமையாய் முறைத்தான்.

“என்கிட்ட சொல்லிட்டு உரிமையா இந்தப் பணத்தை எடுத்துட்டுப் போயிருந்தா கூட நான் சந்தோசம் தான் பட்டுருப்பேன். என்னை மாதிரி என்னோட பணத்தை கூட ஒதுக்கி வச்சுட்டல்ல…” எனக் கேட்டவனை அதிர்ந்து பார்த்த விக்ரம், “அகி என்னடா?” என்றான் அழுகுரலில்.

தம்பியின் வதனம் தாங்கிய வேதனையில் உயிர் வலி கொண்ட விக்ரமை நிமிர்ந்து பாராமல் அவன் சென்று விட, “அகி நில்லுடா ப்ளீஸ்” எனக் கத்தினான் விக்ரம்.

தம்பியின் கோப அளவைப் புரிந்தவன் தான். அவனை அதிகமாய் காயப்படுத்துகிறோம் எனப் புரிந்து உடைந்து போனான் விக்ரம்.

திலோத்தமாவோ, “நான் எத்தனை தடவை சொன்னேன். ஒருதடவையாவது அவன்கிட்ட பேசுங்க. நீங்க விளக்கமே சொல்லலைன்னாலும் உங்களை புருஞ்சுப்பான்னு. இப்ப பாருங்க எப்படி பேசிட்டு போறான்னு…” தோழனின் வேதனை அவளையும் அதிகமாய் தாக்கியது போலும்.

மதிய உணவைக் கொடுத்து அக்னிலாவை உறங்க வைத்த பவித்ராத்யாவிற்கு, விக்ரமின் உடல்நிலையை பற்றிய கவலை தான். அவர்கள் வந்தது அறிந்ததும் விசாரிக்க எண்ணி அறையை விட்டு வெளியில் வர, சரியாக அந்நேரம் உள்ளே வந்தான் அக்னி வேந்தன்.

அவன் நெஞ்சில் பலமாக இடித்துக் கொண்ட பவித்ராத்யா, “ஸ்ஸ்ஸ் ஆ’ என்று நெற்றியைத் தேய்த்து விட்டு வேகமாய் பின்னால் நகரும் போதே கால் தடுக்க விழப்போக, இடையுடன் கையை வளைத்துப் பிடித்துக்கொண்டான் நாயகன்.

பயத்தில் அவனது சட்டையை இறுக்கிப் பிடித்துக் கொண்டவள், கண்ணை இறுக்கி மூடி விட்டுச் சில நொடிகள் பிறகே நயனங்களைத் திறந்தாள்.

வெகு அருகில் சுவாசித்த ஆடவனின் மூச்சுக்காற்று, அவளது அடிவயிற்றின் அணுக்களை எல்லாம் ஒன்று திரட்டி சோதிக்க, அக்னியின் அடர்ந்த மீசை அவள் கன்னத்தில் உரசிச் சென்றது.

அதில் பதறி விலகியவளுக்கு காரணமின்றி மூச்சிரைத்தது.

அவனோ தனது அழுத்தப்பார்வையை மாற்றாது, அவளை நோக்கி அடியெடுத்து வைத்தபடி சட்டைப் பட்டனை ஒவ்வொன்றாய் கழற்ற, துணுக்குற்றாள் பாவை.

“என்… என்ன பண்றீங்க?” பின்னால் நகர்ந்தபடி படபடத்தவளுக்குப் பதில் கூறாது, தனது வேலையைத் தொடர்ந்தில், அரண்டே விட்டவள், “இங்க பாருங்க நான் கத்திடுவேன்…” என்று பலவீனமாய் மிரட்டினாள்.

“என்னைக் கட்டிக்கப் போறவ முன்னாடி ஷர்ட்டை கழட்டுனா தப்பா ஆத்யா?” ஆழக்குரலில் கிறக்கமாக கேட்டதில்,

இம்முறை ஏனோ கன்னங்கள் சிவந்து நின்றது.

கடவுளே! என நொந்தவளோ, “அன்னைக்கு நான் சும்மா தான் சொன்னேன்” எனும்போதே அவன் அருகில் நெருங்கி இருக்க, அதற்குள் மொத்த பட்டனையும் கழற்றி இருந்தான்.

வார்த்தைகள் தேய, நடுங்கிப் போனவளுக்கோ அவனை எதிர்க்கக் கூட துணிவில்லை. அவன் அண்மை அவளுக்குப் பிடித்தும் தொலைகிறதே!

“வேணாம்… நான் கத்துவேன்! அக்காட்ட சொல்லிடுவேன்” என்று உதட்டை குவித்து கூற,

“நானும் சொல்லுவேன்” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

“என்ன? என்ன சொல்லுவீங்க?” அவள் எகிறும்போதே அவன் சட்டையை முழுமையாய் கழற்றியதில் வெலவெலத்துப் போனாள்.

அடுக்கடுக்கான புஜங்களில் அவளை மீறி பார்வைப் படிந்தது.

‘நல்லவேளை பனியனாவது போட்ருக்கானே!’ என்றவளுக்கோ ‘இப்ப எதுக்கு உள்ளாடை விளம்பரம் பாதிரி ஆர்ம்ஸை காட்டிட்டு நிக்கிறான்னு தெரியல…’ என மனத்தினுள்ளேயே புலம்பினாள்.

சட்டையைத் தூக்கி அவள் முகத்திலேயே எறிந்தவன், “உன் இடுப்பைப் பிடிச்சு காப்பாத்துனதுக்கு என் சட்டையைக் கசக்கி வச்சுருக்க. எனக்குப் பார்த்த பொண்ணு கூட ஈவ்னிங் மீட்டிங் இருக்கு. ஒழுங்கா எனக்கு அயன் பண்ணிக் குடு!” என்றவனை ‘பே’ வெனப் பார்த்தாள்.

‘அயன் பண்றதுக்கா இவ்ளோ கலவரம் பண்ணுனான்…’ எனக் கடுப்பானவள், “உங்களை வந்து காப்பாத்துங்கனு கேட்டேனா… நீங்க தான திடுதிப்புன்னு உள்ள வந்தீங்க!” என சிலுப்பினாள்.

“அதுக்கு என் சட்டையைப் பிடிப்பியா?” சுவரோரம் அவளை தள்ளியவன், இரு கைகளாலும் அணை கட்டிட,

“உங்க பொண்டாட்டி வருவாள்ல அவகிட்ட சொல்லி அயன் பண்ணுங்க…” என அவனைத் தள்ளிவிட முயன்றதில்,

“இப்போதைக்கு பொண்டாட்டி இல்ல. ஆனா பொண்டாட்டி ஆக முறையுள்ளவகிட்ட கேட்கலாமே!” என்றதில் பூனை முடிகளெல்லாம் சிலிர்த்திருந்தது.

இதற்கு மேல் இவனிடம் வாக்குவாதம் செய்தால், தன்னைப் பைத்தியமாக்கி விடுவான் என்றதோடு, யாரேனும் இங்கு வந்து இவனது கோலத்தைப் பார்த்தால் அவ்வளவு தான் என்ற பயம் வேறு.

“உங்களுக்கு அயன் தான பண்ணனும். நான் பண்ணித் தரேன் நீங்க முதல்ல வெளில போங்க. யாரும் வந்துட போறாங்க.”

“சரி போறேன். பட் பனியனோட வெளில போனா, நீ தான் என்னை ஏதோ பண்ணிட்டதா நினைப்பாங்க. பாட்டி வேற இந்த ரூம் வாசல்ல தான் உக்காந்துருக்காங்க” எனத் தோளைக்குலுக்கியபடி நகரப்போக, வேகமாய் அவனது கையைப் பற்றியவள், “ஐயோ… நீங்க போகவே வேணாம். இருங்க…” என்றாள் தவிப்பாக.

“இப்படியே கையைப் பிடிச்சுட்டே இருக்கவா…” அவனது மணிக்கட்டைப் பிடித்த கரத்தை இப்போது அவன் பற்றி இருக்க, உடனடியாய் கையை உருவியவள், “நீங்க போய் அங்க உக்காருங்க” என்று சோபாவைக் காட்டி விட்டு, அங்கிருந்த அயன் பாக்ஸை வைத்து அவனது சட்டைக்கு இஸ்திரி போடத் தொடங்கினாள்.

‘என்னையவே வேலை வாங்கிட்டானே’ என்ற கடுப்பு வேறு!

சோபாவில் இரு கையையும் விரித்து கம்பீரமாய் அமர்ந்திருந்தவனின், பார்வை முழுக்க பாவை மீதே நிலைத்திருந்தது.

“விக்ரமும் திலோவும் இங்க இருந்து போறதுக்கு நீ தான் தூதா?” நக்கலாய் வினவினான்.

“தூதா?” அவனைத் திரும்பி முறைத்தவள்,

“அதெல்லாம் இல்ல. எனக்கு அவங்க லவ் பண்றாங்கன்னே தெரியாது. ஆனா விக்ரம் அத்தானை என் தெருவுல அப்போ அப்போ பார்த்திருக்கேன். நான் ட்வெல்த் முடிச்ச நேரம். அப்ப தான் அக்காவுக்கும் பெரிய கம்பெனில வேலை கிடைச்சுது. இனி அப்பாவை மெக்கானிக் கடைக்கு எல்லாம் போக வேணாம். நானே இனி குடும்பத்தை பாத்துக்குறேன்னு ரொம்ப சந்தோசமா இருந்தா” எனும்போதே அவள் முகத்தில் அத்தனை வேதனை.

“அந்நேரம் என் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாம போய்டுச்சு. அவங்களுக்கு உடனடியா யூட்டரஸை எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. இன்டெர்னல் ப்ளீடிங் வேற அதிகமா இருந்துச்சு. அவங்களை சர்ஜரிக்காக ஹாஸ்பிடல்ல சேர்த்துருந்தோம். நான் ரெண்டு நாளா அம்மா கூடவே தான் இருந்தேன். வீட்ல என்ன நடந்ததுன்னு தெரியல… சர்ஜரி நல்லபடியா முடிஞ்சுதுனு டாக்டர் சொன்னதும், அம்மாவுக்கு தேவையான திங்ஸ் எல்லாம் எடுக்கலாம்னு வீட்டுக்கு வந்தேன்.

அப்போ வீட்ல யார் யாரோ வந்து அப்பாவையும் அக்காவையும் மிரட்டிட்டு இருந்தாங்க. என்ன பிரச்சினைன்னு என் அப்பாட்ட கேட்டதுக்கு… ஏதோ கடன்காரங்கனு சொன்னாரு.

என் அப்பா அப்படி எல்லாம் கடன் வாங்குற ஆள் இல்ல. அப்போதைக்கு அம்மாவைப் பார்க்க போகணும்னு நான் ஹாஸ்பிடல் கிளம்பிட்டேன். ஈவ்னிங் வரைக்கும் அம்மா நல்லா தான் இருந்தாங்க. திடீர்னு ப்ளீடிங் அதிகம் ஆகி மயங்கிட்டாங்க. நைட்டு முழுக்க ஐசியூல வச்சு தான் பார்த்தாங்க. அப்பவும் அப்பா மட்டும் தான் வந்தாரு.

ஆனா, ட்ரீட்மெண்ட் ஒத்து வராம அம்மா அடுத்த நாள் காலைல இறந்துட்டாங்க” எனும்போதே ஒரு சொட்டுக்கண்ணீர் அவனது சட்டையிலேயே விழுந்தது.

“ஆனா அதுக்கு அப்பறமும் அக்கா வரவே இல்ல. திலோ எங்கன்னு அப்பாகிட்ட கேட்டதுக்கு அவர் பதிலும் சொல்லல. காரியம் பண்ண கூட அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டுப் போகல. ஹாஸ்பிடல்ல வச்சே பார்மாலிட்டி முடிச்சு, அப்படியே அங்கிருந்தே காரியமும் பண்ணிட்டாரு.

அப்பறமும் என்னை ஹாஸ்பிடல்லயே இருக்க வச்சுட்டு, வீட்டுக்குப் போய் ரொம்பத் தேவையான பொருள்களையும், என்னோட ஸ்கூல் செர்டிபிகேட்ஸ் மட்டும் எடுத்துட்டு என்னை அங்கயிருந்தே கும்பகோணத்துக்கு கூட்டிட்டுப் போய்ட்டாரு.

அப்பறம் தான், அக்கா விக்ரம் அத்தான் கூட ஊரை விட்டுப் போய்ட்டான்னு எனக்குத் தெரிஞ்சுது…” எனும்போதே மீண்டும் ஒரு துளி கண்ணீர் தரையில் விழும்போதே அதைத் தாங்க நிழலாய் அவன் அருகில் வந்திருந்தான்.

அவள் கன்னம் பற்றி பெருவிரலால் கண்ணீரைத் துடைத்தவன், “அம்மா ஹாஸ்பிடல்ல இருக்கும்போது ஊரை விட்டு ஓடுற அளவு திலோ கல்நெஞ்சக்காரி கிடையாது…” என்றான் புருவம் சுருக்கி.

இத்தனை வருடம் மனதில் அழுத்தி வைத்த மனவேதனையில் தாக்கத்தில், அவனது தீண்டல் கூட அவளது பாரத்திற்கு சுகமாய் சுகித்தது.

“எனக்கும் அதே சந்தேகம் இருந்துச்சு. ஆனா, அம்மாவுக்கு அவ்ளோ சீரியஸ் ஆகும்னு நாங்க எதிர்பார்க்கவே இல்ல. அம்பது வயசுக்கு மேல யூட்டர்ஸ் ரிமூவ் பண்றது எல்லாம் இப்ப சாதாரணமாகிடுச்சே. அதுனால சர்ஜரி பெயிலியர் ஆகும்னு ஒரு பெர்சன்ட் கூட நினைக்கல. அதுனால அவள் போயிருக்கலாம்னு கூட நினைச்சு மனச தேத்திக்கிட்டேன்… ஆனாலும் அவள் மேல எனக்கு ரொம்ப கோபம் தான்.

அதுக்கு அப்பறம், அம்மா இறந்தது, அக்கா போனதுனு அப்பா ரொம்ப நொடிஞ்சுட்டாரு. என்னை நினைச்சு அவருக்கு ரொம்பக் கவலை. படிக்க போக பிடிக்காம, வீட்லயே அவரைப் பார்த்துட்டு யோகா க்ளாஸ், டியூஷன்னு எடுத்துட்டு இருந்தேன். திலோ அப்பாட்ட பேசிப்பா அப்போ அப்போ. அவருக்கு பணமும் அனுப்புவா. ஆனா நான் அடுத்த ஒரு வருஷமும் அவள்கிட்டே பேசவே இல்ல.

ஒரு நாள், அப்பா காலைல எந்திரிக்காம போய்ட்டாரு. அவர் இறந்துட்டாருனு தெரிஞ்சதும் தான், பயத்துல திலோட்டயே பேசுனேன்” எனும்போதே மீண்டும் மீண்டும் கண்ணீர் திவலைகள் உருவாக,

“உஷ்ஷ்! இட்ஸ் ஓகே ஆத்யா…” என அவளது வலிகளை நெஞ்சில் தாங்கியவனாய் வருத்தத்துடன் ஆறுதல் உரைத்தான்.

பவித்ராத்யாவின் எண்ணங்களும் சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததை அசைபோட்டது.

தந்தையின் இழப்பில் துவண்டிருந்த பவித்ராத்யா, திலோத்தமாவின் வருகையில் பெருக்கெடுத்து அழுதாள்.

“அக்கா… அப்பாவும் போய்ட்டாருக்கா… பாருக்கா” என அவளைக் கட்டிக்கொண்டு அழுதததில், திலோத்தமா கண்ணீர் வற்றிப்போன நிலையில் விரக்தியின் உச்சத்தில் இருந்தாள்.

உயிரானவர்களின் அடுத்த அடுத்த இழப்புகள் அவளை அதிகம் பாதித்தது.

தந்தையின் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதில் இருந்து, இறுகி இருந்த மனையாளின் நிலை விக்ரமினுள் பயத்தை தூண்ட,

“திலோ அழுதுடு… ப்ளீஸ். நீ இப்படி இருக்குறது உனக்கும் நல்லது இல்ல. பேபிக்கும் நல்லது இல்ல…” எனும்போது தான் பவித்ராத்யா அவளது வயிற்றையே கவனித்தாள். ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தாள்.

தன்னுடைய வேதனையை மறைத்துக்கொண்டு அவளது நலத்தில் கவனம் கொண்டவளாக,

“திலோ இப்படி இருக்காத. அழுதுடு. பயமா இருக்கு” என மருண்ட விழித்த தங்கையின் அச்சத்தில் தான் கதறி அழுதாள்.

அதன்பிறகு அவளை நிறுத்துவதற்கு தான் விக்ரமும் பவித்ராத்யாவும் போராட வேண்டியது இருந்தது.

“தயவு செஞ்சு நீ அழுதது போதும்கா. குழந்தைக்கும் ஏதாச்சு ஆனா பரவாயில்லையா உனக்கு” என அவள் சத்தமிட்டதும் தான் மெல்ல மெல்ல சுயநினைவு பெற்றாள்.

ஆகினும் அதிக நேரம் அங்கிருக்க இயலாது என்ற உண்மையை உணர்ந்த விக்ரம வேந்தன், சடுதியாக செய்ய வேண்டியவற்றை செய்து விட்டு, திலோத்தமாவிடம் பேசினான்.

“பவியை நம்ம கூட்டிட்டுப் போய்டலாம் திலோ…”

அவளும் தங்கையைப் பற்றித் தான் சிந்தித்தாள் போலும்.

“நிஜமா தானா விக்ரம்… உங்களுக்கு ஓகேவா?”

ஏற்கனவே தன்னால் தனக்காக பல பாரங்களை சுமக்கிறானே என்ற குற்ற உணர்வு அவளுள்.

“நியாயமா, உன் அப்பா இருக்கும்போதே அவங்களை நம்ம கூட வர சொல்லணும்னு தான் நினைச்சேன். ஆனா, நம்மளால அவங்களுக்கு பிரச்சினை வேணாம்னு தான் அமைதியா இருந்தேன். இப்போ வயசுப்பொண்ணை தனியா விட்டுட்டு போற அளவு நான் கேவலமானவன் கிடையாது திலோ” விக்ரமின் முகத்தில் கோப ரேகைகள் தென்பட, “ஐயோ இல்ல விக்ரம்… நான் அப்படி சொல்லல” எனப் பதறி விட்டாள்.

பவித்ராத்யாவிடம் சொன்னதும் அவள் தயங்கினாள்.

“வேணாம் திலோ. நான் இங்கயே இருக்கேன். பக்கத்துல சொந்தக்காரங்க எல்லாம் இருக்காங்க தான…”

“விளையாடுறியா. முதல்ல அப்பா இருந்தாரு. இப்ப எப்படி உன்னைத் தனியா விட்டுட்டுப் போறது. நீ என்கூட தான் வர்ற…” என்று கண்டிப்பாய் கூறி அவள் மறுக்க மறுக்கவே அழைத்துச் சென்றாள்.

திலோத்தமாவிடம் பேசியவளால், என்னவோ விக்ரமிடம் பேச இயலவில்லை. முயன்றவரை அவன் முகம் பார்ப்பதை தவிர்த்தாள்.

ஒரு படுக்கையறை கொண்ட வீடு ஆதலால், திலோத்தமாவையும் பவித்ராத்யாவையும் அறையில் தங்க சொல்லி விட்டு அவன் ஹாலில் தங்குவதை வழக்கமாக்கி இருந்தான்.

ஒரு வாரமும் இதுவே தொடர, பவித்ராத்யாவிற்கு அதுவும் சங்கடமாக இருந்தது.

“அக்கா, அவரை உள்ள வந்து படுக்க சொல்லு. நான் ஹால்ல படுத்துப்பேன்.”

“வேணா பேபி. நீ எப்படி தனியா படுத்துப்ப.”

“அதுக்காக உனக்கும் அவர்கூட இருக்கணும்னு இருக்கும்ல…”

“அவர் உனக்கு அத்தான் பவிமா” திலோ கண்டிப்பாய் கூற, அவளிடம் பதில் இல்லை.

“நீயே வேணும்னா உன் அத்தான்ட்ட சொல்லிக்கோ. எனக்கு தெரியாதுப்பா” என திலோ விலகிக்கொள்ள, முதலில் பின்வாங்கியவள் பின் ஹாலுக்கு சென்றாள்.

பவித்ராத்யாவைக் கண்டதும் தரையில் படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்.

“என்ன பவி எதுவும் வேணுமா?”

பஞ்சு மெத்தையில் பங்களாவில் வாழ்ந்தவன், எதற்காக இப்படி கட்டாந்தரையில் படுக்க வேண்டும் என்ற கேள்வி அவளை ஊசியாய் குத்தியது.

“அது… இல்ல. நீங்க உள்ள படுத்துக்கோங்க. நான் ஹால்ல படுத்துப்பேன்.”

விக்ரம் வேகமாக மறுக்க வர, “அவள் திடீர்னு நைட்டு வலி வந்துச்சுனு சொன்னா, என்ன பண்றது. நான் சில நேரம் அசந்து தூங்கிட்டா? அதான் நீங்க அவகூட இருந்துட்டா பிரச்சினை இல்லைல…” என இலாவகமாக அவனை மடக்கினாள்.

ஒற்றைப்புருவம் உயர்த்தியவன், “சரி நாளைல இருந்து நீ ஹால்ல படுத்துக்கோ” என்று விட, அவளும் ஆமோதித்தாள்.

ஆனால், மறுநாள் ஹாலில் ஒரு சின்ன திரைமறைவுடன் ஒரு ஆள் படுக்கும் படியான மெத்தையும் அமைத்தவன், அவள் உறங்கினால் வெளியில் தெரியாத அளவு திரை போட்டிருந்தான்.

திலோத்தமா கணவனின் மனம் புரிந்து அவனை ரசிக்க, பவித்ராத்யா தான் நெளிந்தாள்.

“எதுக்குங்க இதெல்லாம்…” கையைப் பிசைந்தவளிடம்,

“உனக்கு பிரைவசி வேணும் பவி…இப்ப இங்க படுத்துக்கோ…” என்று மென்புன்னகையுடன் கடந்தான்.

அப்போதே அவன் மீது அவளுக்கு நல்லதொரு மதிப்பு வந்தது.

திலோத்தமாவின் பிரசவ நேரத்தில், அவனும் சேர்ந்து தான் துடித்தான்.

லேபர் அறையின் வாசலின் தலையில் கை வைத்து மொத்த பயத்தையும் குவித்து அமர்ந்திருந்தவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

உள்ளிருந்து தாதியர் வெளியில் வரும்போதெல்லாம், பள்ளி மாணவனாய் எழுந்து எழுந்து விவரம் கேட்டுப் பின் தளர்ந்து அமர்ந்தவனின் ஆழ்நேசம் புரிபட, இந்தக் காதல் அனைத்தையும் மறக்க வைக்கும் போல எனத் தனக்குள்ளேயே பேசிக்கொண்டாள்.

சில நிமிடங்களில் கையில் பெண்குழந்தையுடன் வந்தார் தாதியர்.

பூக்குவியலைக் கையில் வாங்கியவனுக்குள் அத்தனை ஆர்பரிப்பு.

கண்ணில் திரண்டிருந்த நீருடன் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டவனை அதிசயமாய் பார்த்திருந்தாள். நொடிக்கு ஒருமுறை மனையாளின் நலனை கேட்டுக்கொண்டே வேறு இருந்தான்.

“இந்த பங்களா வீட்ல இருக்குறவங்களுக்கு எல்லாம் கொம்பு இருக்குமாம்…” இந்த வசனம் அவளுக்கே அதிகப்படியாக தோன்றியது.

அடுத்ததாக குழந்தையை விக்ரம் பவித்ராத்யாவின் கையில் கொடுக்க, அதில் திணறினாலும் அவளுக்கும் கண் கலங்கிப் போனது.

பெரும் இழப்புகளுக்கு மத்தியில் கடவுள் கொடுத்த உயிர் அல்லவா!

தாயும் சேயும் நலமாக இருப்பதை உறுதிப்படுத்தி விட்டு, குழந்தையை உள்ளே வாங்கிச் சென்றதும், பவித்ராத்யா அவசரமாக பழச்சாறை வாங்கி வந்தாள்.

இப்போது நடுக்கம் மறைந்திருந்தாலும், ஏதோ ஒரு வலியை மென்று விழுங்கியவனாக எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவனை முதன் முறையாக அழைத்தாள் “அத்தான்” என்று.

அதில் நிமிர்ந்தவன், அவளை சற்றே வியப்பாக பார்க்க, “அதான் இப்ப ரெண்டு பேரும் நல்லாருக்காங்கள்ல. இதைக் குடிங்க. எதுவுமே சாப்பிடல நீங்க” எனக் கொடுத்தாள்.

சின்னதாய் புன்னகைத்தவன், அந்த அன்பை உதாசீனப்படுத்தாமல் வாங்கிக்கொண்டான்.

அப்போது ஆரம்பித்த சின்னதொரு அன்பு, தந்தை மகளைத் தாண்டியும் அவர்களுக்குள் அது புனிதமாய் வளர்ந்திருக்கிறது. 

குழந்தை பிறந்த பின்பு, பவித்ராத்யா இல்லையென்றால் அந்தக் கட்டத்தை எப்படி கடந்திருப்பார்கள் என்று கூட தெரியாது.

முழுக்க முழுக்க அவளது உறுதுணையிலேயே குழந்தையை அழகாக வளர்த்தனர். மூன்று மாதங்கள் கடந்திருக்க, குழந்தையுடன் குழந்தையாக விளையாடிக்கொண்டிருந்த பவித்ராத்யாவிடம் கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பத்தை நீட்டினான் விக்ரம்.

“என்ன அத்தான் இது?” அவள் வாங்கிப் பார்த்து திகைத்தவளாக, “இது எதுக்கு?” என்றாள் குழப்பமாக.

“நீ படிக்க வேணாமா. ஆல்ரெடி ஒரு வருஷம் வேஸ்ட். இதுவே லேட் அட்மிஷன் தான். இருந்தாலும் இன்னும் லேட்டானா, இன்னும் ஒரு வருஷம் லேட் ஆகும்…”

“இல்ல அத்தான். நான் படிக்கலாம் போகல. நான் வீட்லயே இருந்து பாப்பாவை பார்த்துக்கறேன். அக்காவும் ஆபிஸ்க்கு போகணும்னு சொன்னாள். அப்போ பாப்பாவை யார் பார்த்துப்பா”

“உன்னை என் குழந்தைக்கு ஆயா வேலை பார்க்க கூட்டிட்டு வரல பவி” விக்ரம் அதட்டியதில் அவள் முகம் சுருங்கியது.

திலோத்தமாவும் தங்கையை முறைத்து விட்டு, “நீ வரதுக்கு முன்னாடியே குழந்தை பிறந்ததும் கேரியரையும் இதையும் எப்படி மேனேஜ் பண்ணனும்னு நாங்க பிளான் பண்ணி தான் வச்சுருந்தோம். நீ வந்ததுனால எங்களுக்கு இன்னுமே ஈஸியா இருந்துச்சு. அதுக்காக நீ வீட்லயே இருப்பியா. உனக்குன்னு ஒரு கேரியர் வேணும் பேபி. ஒரு வருஷம் நீ காலேஜ் போகாததே எனக்கு தெரியாது. அப்பா கூட என்கிட்ட எதுவுமே சொல்லல” எனக் கடிந்தாள்.

“நான் தான் அப்பாட்ட சொல்லவேணாம்னு சொன்னேன்…” அவள் முணுமுணுக்க, “ஏன்” என்றாள் புரியாமல்.

“உன்மேல கோபமா இருந்தேன். அதான்…”

“ஓ! இப்ப கோபம் போயிருச்சா?”

“ஏதோ அத்தானும் பாப்பாவும் இருக்குறனால கோபம் போய்டுச்சு” என சிலுப்பிய தங்கையை இடுப்பில் கையூன்றி முறைக்க, விக்ரம் அவளுக்கு ஹைஃபை கொடுத்துக் கொண்டதில், திலோத்தமா அவனை செல்லமாக புஜத்தில் அடித்தாள்.

அதன்பிறகு வம்படியாக அவளை கல்லூரிக்கு அனுப்பியதெல்லாம் தனி கதை. கல்லூரி நேரம் தவிர மீதி நேரங்களெல்லாம் அக்னிலாவைப் பார்த்துக்கொள்வதையே தனது தலையாய கடமையாக கொண்டிருப்பாள்.

அந்த நான்கு வருடங்களும் அத்தனை அழகான ரம்மியமான பொழுதுகள்.

இருவருமே வேலைக்குச் சென்றதால், பணப் பிரச்சினை என்றெல்லாம் எதுவும் இருந்ததில்லை.

ஆனாலும், அவர்களுக்கு அதிக செலவு வைத்து விட கூடாதென்பதில் மட்டும் கவனமாக இருப்பாள்.

அவர்களின் கூட்டைக் கலைப்பது போல, நிகழ்ந்தது அவ்வொற்றை விபத்து. சிரிப்பை மட்டுமே கண்ட வீடு, கண்ணீரையும் சேர்த்தே கண்டது.

—————-

எப்போது அக்னி வேந்தனின் நெஞ்சில் சாய்ந்திருந்தாள் என்பதே அவள் அறியவில்லை.

தனது கோபம், ஆற்றாமை, வேதனை என அனைத்து உணர்வுகளையும் கொட்டிவிட, அவனது அழுத்த கரங்கள் அவளை இறுகி அணைத்திருந்தது.

“என் அண்ணன் உன்னை விட்டுருந்தா தான் ஆச்சர்யப்பட்டுருக்கணும். அவனை சரி பண்றது தான் எனக்கு முதல் வேலையே! ரிலாக்ஸ்!” என்று அவள் கேசத்தை கோதி கொடுக்க, அதன்பிறகே நினைவு வந்தவளாக பின்னால் நகன்றாள்.

‘ஐயோ என்ன பவி இவனைக் கட்டிப்பிடிச்சு பேசிட்டு இருக்க…’ எனத் தன்னையே மானசீகமாக அறைந்து கொண்டவளின் விலகளில் முகம் சுருங்கியவன், சட்டையை எடுத்து அணிந்து கொண்டான்.

“உனக்கு என்னைத் தெரியும் தான?”
அவன் கேட்டதில்,

“உங்க வீட்டுக்கு வந்தப்ப பார்த்தது தான். அப்பறம் முகம் பெருசா ஞாபகம் இல்ல. ஆனா நீங்க என்னை முறைச்சது மட்டும் ஞாபகம் இருக்கு…” என மூக்கைச் சுருக்கினாள்.

“எனக்கும் உன் முகம் ஞாபகம் இல்ல. ஆனா அன்னைக்கு நான் முறைக்கவே இல்லையே” சிறு முறுவலுடன் கூறியதில், “எனக்கு அப்படி தான் இருந்துச்சு…” என முணுமுணுத்தாள்.

அந்நேரம் அக்னிலாவும் எழுந்து விட, அவளைத் தூக்கிய அக்னி, “எந்திருச்சிட்டீங்களா குட்டிமா…” என கன்னத்தில் முத்தம் வைக்க,

இத்தனை நேரம் அவள் போட்ட இஸ்திரி எல்லாம் வீண் என்பது போல, அவன் சட்டையைப் பற்றி விளையாடினாள் அக்னிகா.

“நிலா, சித்தப்பா சட்டையை கசக்காத” என்று அவள் அதட்ட,

“நீ புடிச்சுக்கோ செல்லம். உனக்கு இல்லாத உரிமையா?” என அவளைக் கட்டிக்கொண்டு விளையாடியவன், தன்னவளின் கோப மூச்சுகளை ஓரக்கண்ணில் ரசித்தபடி அவளது தோளை இடித்து விட்டே வெளியில் சென்றான்.

‘அடப்பாவி…’ எனப் பல்லைக்கடித்த பவித்ராத்யாவிற்கு, தனக்கு உரிமை இல்லை என்றதும் இதுவரை உணர்ந்திடாத சிறு துளி வலி ஒன்று உள்ளத்தை ஊடுருவிச் சென்றது.

போதை தெளியும்
மேகா

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்