Loading

சென்னியுடன் கணி, அதி மற்றும் கீர்த்தி அமர்ந்திருந்தனர். சென்னியும் கணியும் உருண்டு பிரண்டனர் சற்றுமுன். இப்பொழுது அனைத்தும் முடிந்து பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்தனர்.

சென்னி திரையில் தெரிந்த புள்ளியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அது நகர்ந்து நகர்ந்து மாபெரும் நிலப்பரப்பை நோக்கி சென்றுகொண்டிருந்தது. கணி, அதி மற்றும் கீர்த்திக்கு அது என்னவென்று விளங்கவில்லை.

“இன்னும் கொஞ்ச நேரத்தில் லாண்ட் ஆயிடுவாங்க.. நாம பேசலாம்” என்று கூறியவன், ஒரு உபகரணத்தின் முன் கணியை அமர வைத்தான்.

“இப்போ பேசுங்க சார்” சென்னி.

“மது மேடம் லைன்ல இருக்காங்களா?” அதி.

“இல்லை..”சென்னி.

“அப்புறம் யாருகிட்ட பேசணும்” என்று புரியாமல் கேட்டான் கீர்த்தி.

“நாம போன்ல பேசுற மாதிரி பேச முடியாது. நீங்க ஹலோ சொல்லி இருபது நிமிஷம் கழிச்சுதான் அங்க உள்ளவுங்களுக்கு அந்த ஹலோ கேக்கும்” என்று சென்னி தலையில் இடியை இறக்கினான்‌.

“என்ன இருபது நிமிஷமா?” என்று வாயைப் பிளந்தனர் மூவரும்.

“இப்போ உள்ள டெக்னாலஜி வச்சு வாய்ஸ் நோட் அனுப்பலாம். அதைக் கேட்டுட்டு அவுங்க திரும்ப அனுப்பலாம். ஆனால் தகவல் போய் சேரவோ இல்லை வரவோ தேவையானது இருபது நிமிஷம்” சென்னி.

********

செவ்வாயின் மேற்பரப்பில் நின்றிருந்தனர் அனைவரும். சுற்றி சுற்றிப் பார்க்க, அங்கு இரண்டு கட்டிடங்களைத் தவிற வேறு எதுவும் இல்லை. செந்நிற மண். அவர்கள் வந்திறங்கிய இடம். சற்று தூரத்தில் மண்ணுக்கு மேல் ஒரு காண்க்ரீட் நடை பாதை. அதில் நடந்து சென்றனர் அவர்கள் வாழப்போகும் குடியிருப்பு பகுதிக்கு. எங்கும் இயந்திரங்களின் செழுமை. இயற்கை என்று அங்கு எதுவும் இல்லை. வெறும் மண் மட்டுமே இயற்கை என்று கூறவேண்டும். அதைக் காணும் பொழுது உண்மையில் அனைவரின் நெஞ்சமும் கணத்துப் போனது. இப்படியும் இருக்குமா என்று. ஏனெனில் நமது கற்பனை அனைத்தும் ஐம்பூதங்களின் சாயல்களே. அங்கு ஐம்பூதங்களும்முழுமை பெறாமல் இருந்தது. அது அவர்களின் ஐம்புலன்களைத் தட்டி எழுப்பியது. பூமியும் இப்படி ஆனால்…..

இந்த வினாவிற்கு விடையில்லை. விடை தெரியும் பொழுது நாம் நிச்சயம் இருக்கப்போவதில்லை.

இறங்கியவுடன் அந்த நடைபாதையில் இறங்கி சென்றனர். அந்த நடைபாதை வழுவழுப்பாக இருந்தது. திடமான பொருள்களால் ஆனது அல்ல‌. சிலிக்கா ஏரோஜெல் என்னும் ரசாயனத்தை சில கலவைகளுடன் சேர்த்து உருவாக்கிய பொருள். அதைக்கொண்டு பாதை அமைத்திருந்தனர்.

தூரத்தில் அரைக்கோள வடிவத்தில் மாபெரும் கட்டிடம். சிவப்புக் கம்பளத்தில் நடந்து செல்லும் உணர்வைத் தந்தது அந்த நடைபாதை. அவ்வளவு மிருதுவாக இருந்தது‌.

மிக நீண்ட பாதை. ஆனந்த மிகுதியில் தணிகையும் வேதனும் ஓட ஆரம்பித்தனர். ஆனால் ஓட ஒரு காலை உந்த, சற்று தூரம் பறந்து சென்று தரையில் நின்றனர். இருவரும் திடுக்கிட்டுப் பார்த்தனர்.

காப்பியன் சிரித்துக்கொண்டே முன்னே வந்தான். அவன் விழிகளில் வெற்றிப் பெருமிதம். இவர்கள் அனைவரையும் பத்திரமாக இங்கு அழைத்து வந்தாயிற்று. இனிதான் பெரிய பொறுப்புகள் இருக்கிறது என்று சிந்தித்துக் கொண்டே வந்தான். அப்பொழுது இவர்கள் இருவரும் ஓட, அவனும் நடையை வேகாமாக்கி அவர்களின் அருகில் சென்றான்.

திடுக்கிட்டுப் பார்த்த இருவரையும் ஒரு நிமிடம் நில்லுங்கள் என்று செய்கையில் சொன்னான்.

“சார்.. என்ன சார்.. இது..‌ இந்த பாதையில் ஏதாவது ஸ்பிரிங் செட் பண்ணிருக்கீங்களா.. ஓடுனா… காத்துல பறந்து போற மாதிரி இருக்கு” தணிகை‌.

“நீ பறக்கலடா… பூமியோட இங்க ஈர்ப்பு விசை ரொம்ப கம்மி… அதாவது 60 சதவீதம் குறைவு. பூமியில நீ  குதிச்சா, அங்க உள்ள ஈர்ப்பு விசையால தரைக்கு வருவ… இங்க அது குறைவா இருக்கதால தீ ஓடும்போது கொஞ்சம் அதிக நேரம் காத்துல பறக்குற மாதிரி இருக்கும்‌. செவ்வாயோட ஈர்ப்புவிசை உன்னை தரைக்கு இழுக்க கொஞ்சம் அதிக நேரம் தேவைப்படும்” காப்பியன்.

“இவ்ளோ விஷயம் இருக்கா சார்..” வேதன்.

“நான் பயந்துட்டேன் சார்” தணிகை.

“இன்னும் நிறைய விஷயம் இருக்குடா… இது ஒரு விசித்திர உலகம்.. சரி.. எல்லாரும் சீக்கிரம் வாங்க. நமக்காக சென்னி உயரைக் கையில் பிடிச்சுகிட்டுக் காத்திருப்பான்” என்று கூற அனைவரும் அந்த கட்டிடத்தை நோக்கி நடந்தனர்.

நான்கு அடுக்கள் இருக்கும். மிக பிரமாண்டமாய் இருந்தது கட்டிடம். கட்டிடத்தின் உட்புறம் முழுக்க பச்சை வர்ணம் தீட்டப்பட்டிருந்தது. அந்த வர்ணத்தில் மட்டுமே இயற்கையை உணர முடிந்தது. உள்ளுக்குள் சென்றதும் அங்கு இருந்த தொழில் நுட்ப குழு இவர்களை வரவேற்றது‌.

“செவ்வாய்க்கு வருக!” என்று பெரும் பலகை.

உள்ளுக்குள் நேர்த்தியாக இருக்கைகள் போடப்பட்டிருந்தது. அதில் அனைவரும் சென்று அமர்ந்தனர்.

அங்கு இருந்த ஒருவர் அவர்களை வரவேற்றார்.

“எல்லாருக்கும் வணக்கம்… இந்த மிஷனை சக்சஸ்புல்லா நடத்துன சென்னி மற்றும் காப்பியனுக்கு எங்களோட நன்றிகள். அப்புறம் இங்க உங்களுக்கு எல்லா வசதியும் இருக்கு. எதுவாயிருந்தாலும் எங்கிட்ட கேளுங்க. இந்த கட்டிடத்துக்குள்ள எங்கவேணாலும் போகலாம். வரலாம். வெளில போக வேண்டாம். ஏனா…. இங்க உள்ள ஆக்சிஜன் இருக்கும். உள்ள இருக்கவரை உங்களுக்கு செயற்கை ஆக்சிஜன் தேவையில்லை.”

“அப்போ வெளில சுத்தமா ஆக்சிஜன் இருக்காதா?” மதுபல்லவி.

“இருக்கும்… ஆனா ஒரு மனஷனுக்கு தேவையான அளவு இருக்காதுமா…. செவ்வாய் கிரகத்தில் கார்பன் டையாக்சைட்தான் அதிகம். அதனால நம்மாளால வெளில ஆக்சிஜன் இல்லாம இருக்க முடியாது.”

“அப்போ இந்த கட்டிடத்தில் மட்டும் எப்படி ஆக்சிஜன்.. புரியல” ஆரு.

“மேல நீங்க பார்க்குற பச்சை வெறும் பெயிண்ட் இல்ல. சையனோ பேக்டீரியா என்னும் நுண்ணுயிர். அதை இங்க உள்ள ரொம்ப அதிகமா வளர்க்கிறோம். அந்த நுண்ணுயிர் நம்ம தாவரங்கள் மாதிரி. காத்துல இருக்க கார்பன் டையாக்சைடை எடுத்துட்டு நமக்கு ஆக்சிஜன் கொடுக்கும். அது மட்டுமில்லாம இந்த கட்டிடம் பல சுவர்களைக் கொண்டது. மேல உள்ள லேயர் சிலிக்கா ஏரோஜெல். அப்புறம் ஒரு லேயர் காண்க்ரீட். அப்புறம் உள்ளுக்குள்ள உள்ள லேயர் சையனோ பேக்டீரியா. வெளில உள்ள லேயர் நம்மளை தட்பவெப்ப நிலையிலிருந்து பாதுகாக்கும். செவ்வாய் சூரியனிலிருந்து கொஞ்சம் அதிக தூரத்தில் இருக்கும் கோள். அதனால பூமியைவிட இங்கு குளிர் அதிகம். இங்கு அமுக்கமும் குறைவா இருக்கதால தண்ணீர் திரவ நிலையில் இருக்காது. ஆனா இந்த சிலிக்கா ஏரோஜெல் மூலமா தட்பவெட்ப நிலையை நமக்கு தேவையான மாதிரி தக்க வச்சுக்க முடியும். உள்ள இருக்க சையனோ பேக்டீரியா வளர தேவையான கார்பன் டையாக்சைட் குழாய் மூலம் கிடைக்கிற மாதிரி ஏற்பாடு செஞ்சிருக்கோம். அதனால இங்க உங்களால சுவாசிக்க முடியும். எந்த சங்கடமும் இருக்காது” என்று அவர்களுக்கு விளக்கிக் கூறினார்.

அதன்பிறகு அவர்கள் தங்கப் போகும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சற்று நேரத்தில் மதுபல்லவிக்கு செய்தி வந்திருப்பதாக காப்பியன் வந்து கூற, அவள் எழுந்து ஓடினாள்.

“அக்கா.. மெதுவா போங்க..” என்று இரட்டையர்கள் இருவரும் கத்திக் கொண்டே வந்தனர்.

அனைவரும் மதுபல்லவியுடன் எழுந்து சென்றனர்.

கண்ட்ரோல் ரூமிற்குள் படபடப்புடன் சென்றாள் மதுபல்லவி. அவள் அமர்ந்ததும் கணி அவளுக்கு அனுப்பிய செய்தியை ப்ளே செய்தான் காப்பியன்.

“பல்லவி.. எப்படி இருக்க.. எனக்கு உன்னை உடனே பாக்கணும். இவ்ளோ தூரத்துல உன்னைக் கொண்டு போயிட்டாங்களே… என்ன சொல்றது. நம்ம குழந்தைக்கு எதுவும் இல்லையே.. நல்லா சாப்புடுறியா.. கஷ்டமா இருக்கா.. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ.. நான் எப்படியாவது வந்துடுறேன். இவுங்க யாரையும் நான் சும்மா விடமாட்டேன்” என்று கணி செய்தி அனுப்பியிருந்தான்.

அதைக் கேட்டதும் அவள் கண்களில் இருந்து வழிந்தோடியது விழிநீர்.

“அக்கா… எதுக்கு அழற.. அதான் மாம்ஸ் வரேன்னு சொல்லிட்டாரே. மாம்ஸ் வந்துட்டா உங்களுக்கு ரெண்டாவது ஹனிமூன்” தணிகை‌.

“ஆமா.. அக்கா… அவரு உன்னோட நேரம் செலவழிக்கமாட்டாருன்னு சொன்னியே.. இனிமே இங்க வந்தா ரெண்டு வருஷம் இங்கதான்” இரட்டையர்.

“சரி…. அழாம பேசுக்கா..” சித்திரன்.

“நான் நல்லாருக்கேன் கணி.. நீங்க எப்படி இருக்கீங்க. நீங்க இல்லாததைத் தவிற எனக்கு வேற ஒண்ணும் குறையில்லை. எனக்கு உங்களைப் பார்க்கணும் போல இருக்கு” மது.

அடுத்து அவர்கள் அனைவருக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பல்ஸ், பீபி, வெயிட் என்று அனைத்தையும் பரிசோதனை செய்தனர்.

முதலில் ஆரெழிலுக்கு பார்க்க அனைவரும் அருகில் அமர்ந்திருந்தனர். அடுத்த தணிகை நின்று கொண்டிருந்தான்.

அனைத்தும் ஒருவர் எடுத்து பரிசோதனை முடிவைக் கூற, அதை ஒருவர் குறித்துக் கொண்டார்.

“வெயிட் – 30.8kg” என்று கூற, அனைவரும் அதிர்ந்தினர்.

“அண்ணே… இந்த வெயிட் பாக்குற மெஷின் சரியில்லை.‌ இவ நிச்சயம் ஒரு நூறு கிலோ இருப்பா..” என்று தணிகைக் கூற, பல்லைக் கடித்தாள் ஆரெழில்.

“இல்ல‌ தணிகை.. வெயிட் மெஷின் கரெக்டா வேலைப் பார்க்குது. மிஸ். ஆரெழில்.. பூமில உங்க வெயிட் 80 கிலோவா?” என்று பரிசோதனை செய்த நபர் கேட்க, அவள் ஆச்சர்யமாக, “ஆமா” என்றாள்.

“பூமில 100கிலோனா செவ்வாய்ல 38 கிலோதான்.”

“வெயிட் கூடவா மாறும்” சித்திரன்.

“ஆமா… நம்ம வெயிட் நம்ம இருக்க கோளோட ஈர்ப்புவிசையையும் நிறையையும் கொண்டுதான் கணக்கிடப்படும். இங்க ரெண்டுமே குறைவு. அதனால உங்களோட வெயிட்டும் கம்மியாதான் இருக்கும்” என்று கூறிட, அனைவரும் வியந்து நின்றனர். அவர்களால் வியந்து மட்டுமே நிற்க முடிந்தது.

ஒவ்வொன்றும் அதிசயமாக இருந்தால் என்னதான் செய்வது. இரவாகிவிட்டது. அனைவருக்கும் உணவை அளித்துவிட்டு உறங்குவதற்கு ஏற்பாடுகளை செய்தனர். இன்னும் அந்த கட்டிடத்திற்குள் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் ஆயிரம் இருந்தது. அனைவரும் உண்டு முடித்ததும் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடித்தனர்.

“என்னால ஒரு விஷயம் தான் தாங்க முடியல..” தணிகை.

“இந்த குந்தாணிங்க முப்பது கிலோன்னு சொன்னதை ஏத்துக்கவே முடிமல” என்று இரட்டையரை வம்பிற்கு இழுத்தான்.

“டேய்… ரெண்டு பேரும் உருண்டா செவ்வாய்க்கு அடில புதைஞ்சு போயிருவ” இரட்டையர்.

“தங்கச்சி.. ஏதாவது உதவி வேணுமா” சித்திரன்.

“டேய்.. சின்சான்.. சும்மா இரு.. உன்னைய ஏத்திட்டு அந்த ஷட்டில் வந்ததே பெருசு. உன் வெயிட் தாங்காம கீழ விழுந்துடும்னு நினைச்சேன்” தணிகை.

“எனக்கு ஒரு கவலை ஓஞ்சுது. நாளைக்காவது நல்லா பல்லு விளக்கணும்” வேதன்.

“நீ வேற.. நான் ஒழுங்கா டாய்லெட் போகணும். பயத்துல வரவே இல்ல இத்தனை நாள்” தணிகை.

“ஆமா.. அது என்னமோ உண்மைதான் . காப்பியன் சார் பாடு யூரினை டீயா போட்டுக் குடுத்துட்டாரு.. எனக்கு இனிமே டீ குடிச்சாலே யூரின்தான் ஞாபகம் வரும்” சித்திரன்.

“அப்பா.. நீங்க ஏன் பேசாம இருக்கீங்க… இப்போலாம் நீங்க பேசுறதே இல்லை” மதுபல்லவி..

“நீங்க எல்லாம் சின்ன பிள்ளைங்க. உங்களோட சரி சமமா என்னால பேச முடியலமா.. வயசாயிடுச்சுல்ல” திருநல்லன்.

“யாருக்கு.. உங்களுக்கா.. எங்களுக்கு வயசாயிடுச்சுன்னு சொல்லலாம். நீங்க அனுபவத்தில் மட்டும்தான் பெரியவர்.. மத்தபடி எங்களோட திடமான ஆளு” மதுபல்லவி.

“ஆமா.. அந்த யூரின் டீய விடாம குடிச்ச ஒரே ஆள் அவர்தான். அதனால நீ சொல்றது சரிதான் அக்கா” தணிகை.

அவர் புன்னகைத்துக் கொண்டார்.

இருள் நன்றாக சூழ்ந்திருந்தது. அனைவரும் பெரும் சாரளத்தின் வழியே செவ்வாயின் வானைப் பார்த்தனர். ஒன்றும் பெரிதாக வித்தியாசம் இல்லை.‌ வானில் நிலவு தெரிந்தது. வட்டமாய் இல்லை. யாரோ சுத்தி வைத்து ஒரு பக்கம் அடித்தது போல் இருந்தது. ஒரு வடிவமற்ற நிலவு.

“செவ்வாய் கிரகம் பல கோடி வருஷத்துக்கு முன்னாடி நம்ம பூமி மாதிரி செழிப்பா இருந்ததா கதை சொல்லுவாங்க..” திருநல்லன்.

“இது உண்மையா இருந்தா இந்த கிரகத்தில் உயிர் வாழ சாத்தியம் இருக்கில்லையா?” மதுபல்லவி.

“அதான் இப்போ வாழ்ந்திட்டு இருக்கோமே… ஆனா என்னோட கவலையே வேறமா.. இதே மாதிரி பூமியும் ஆனா என்ன செய்றது.. மண்ணுக்கு அடில உள்ள மீத்தேன் ரொம்ப முக்கியமா இருக்கு. இங்க பாரு.. செவ்வாயோட மேற்பரப்பில் இல்லாத உலோகமே இல்லை. அவ்ளோ சத்து இருக்காம். ஆனா ஒரு செடியால இங்க வளர முடியாது. ஏனா அதற்கான தட்பவெப்பநிலை இங்க இல்லை” என்று வருந்தினார் திருநல்லன்.

“அப்பா.. இங்கையும் வந்து எதுக்கு கவலைப்படுறீங்க. சென்னியும் காப்பியனும் சொன்னது ஞாபகம் இருக்குல்ல. இந்நேரம் பூமியில் மக்கள் எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சிருக்கும். ஒரே பரபரப்பா இருக்கும். நீங்க நினைச்சதை நிச்சயம் சாதிக்கலாம். கவலைப்படாதீங்க” மதுபல்லவி.

“அக்கா… நம்ம நிலா எவ்ளோ அழகா இருக்கும். இந்த நிலா நல்லாவே இல்லை” தணிகை.

“டேய்.. அது முழு நிலா இல்லை. பௌர்ணமி அன்னைக்கு நிலா எப்படி இருக்குன்னு பார்க்கலாம்” ஆரு.

“செவ்வாய்ல அமாவாசை பௌர்ணமி எல்லாம் கிடையாது” மதுபல்லவி.

“அக்கா.. சும்மா ஏதாவது சொல்லக் கூடாது. நிலா இருந்தா அதெல்லாம் இருக்கும்.. எங்களுக்கு கொஞ்சம் அறிவு இருக்கு” வேதன்.

“செவ்வாய்க்கு ரெண்டு நிலவாம்.. காப்பியன் சார் சொன்னாரு.. போபோஸ்… டெய்மோஸ்..” மதுபல்லவி.

“மோமோஸ் மாதிரி எவன்டா பேரு வச்சான்” சித்திரன்.

“என்னக்கா குழப்புற.. அதெப்படி ரெண்டு நிலா இருக்கும்.. நம்ம பூமிக்கு ஒண்ணுதானே..” தணிகை.

“பூமிக்கு ஒண்ணுனா எல்லா கோளுக்கும் ஒண்ணுதான் இருக்குமா.. சனி கோளுக்கு 82 நிலவு..” பதுபல்லவி.

“என்னது 82ஆஆஆ? அம்புட்டும் ஒண்ணாவா சுத்தி வருதா?” தணிகை.

“ஒண்ணா எப்படி சுத்தும்.. எல்லாம் தனித்தனியா அதோட வழில சுத்தும்..” மதுபல்லவி.

“அதான் சனி பகவான் சும்மா சுத்தி சுத்தி அடிக்கிறாரா?” தணிகை.

“சரி.. அவரு எப்படியோ போகட்டும்.. அக்கா.. நீங்க செவ்வாயோட நிலாவ பத்தி சொல்லுங்க..” இரட்டையர்.

“போபோஸ் செவ்வாய் கிரகத்தில் இருந்து ரொம்ப தூரத்தில் இருக்காம். அதனால அது நட்சத்திரம் மாதிரியோ இல்லை அதைவிட கொஞ்சம் பிரகாசமா இருக்குமாம். இது 8 மணி நேரத்தில் செவ்வாய் கிரகத்தை சுத்தி வரும். டெய்மோஸ் செவ்வாயக்குப் பக்கத்தில் இருக்கும். இதுதான் இப்போ நமக்கு தெரியுது. அது முப்பது மணிநேரத்தில் செவ்வாய் கிரகத்தைச் சுத்தி வந்திடும். செவ்வாயோட ஒரு நாள் கிட்டத்தட்ட பூமியோட ஒரு நாளும் ஒண்ணுதான். இங்க ஒரு நாளுங்கிறது 24 மணிநேரம் 37 நிமிஷம். அப்போ கிட்டத்தட்ட ஒரு நாள்தான் இந்த கோளை சுத்தி வர நிலா எடுத்துக்கிது. அப்புறம் எப்படி பௌர்ணமி அமாவாசை எல்லாம். நமக்கு பூமியை சுத்தி வர 27 நாள் ஆகும். அதனால நிலா தேயிறதும் வளருறதும் நமக்கு தெரியும். ஆனா இங்க பகல்லையே பௌர்ணமி அமாவாசை எல்லாம் வந்திடும். அந்த வித்யாசம் கண்டுபிடிக்கிறது கஷ்டம்” என்று நீண்ட விளக்கம் அளித்தாள் மதுபல்லவி.

“அக்கா.. நீ எங்க கூடதானே இருந்த. உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்” சித்திரன்.

“ஒரு நாள் நீங்க எல்லாம் தூங்கிட்டீங்க. காப்பியன் சார் சொன்னாரு” மதுபல்லவி.

அனைவருக்கும் ஏதோ புதுவித உணர்வு. புதிதாக வீடுக்கட்டி குடியேறியதுபோல் இருந்தது.

அதே நேரத்தில் பூமியில் அனைத்து ஊடகங்களிலும் செவ்வாய்க்கு பயணம் செய்த விண்கலம் பற்றிய பேச்சுதான். இந்த ஆராய்ச்சி ரகசியமாக நடந்தென்றும், அதில் குறிப்பிட்ட நிறுவனம் வெற்றிகரமாக செவ்வாயின் பயணத்தை சாத்தியப்படுத்தியது என்றும் செய்திகள் பரவிக்கொண்டிருந்தது. இதைப் பற்றிய விவாதங்கள் வேறு அணல் பறந்து கொண்டிருந்தது.

இனி காசிருந்தால் போதும். செவ்வாய்க்கு சாமானியனும் சென்று வாழலாம் என்று ஒரு பக்கம் செய்திகள் பரவ, இதை இந்த நிறுவனம் செய்தது தவறு. அரசாங்கம் எப்படி இதை மக்களிடம் இருந்து மறைக்கலாம் என்றும் விவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தது.

சென்னியைக் கேள்விக்கனைகளால் துளைத்தனர். ஆனால் அனைத்திற்கும் பதில் ஒற்றை சிரிப்பு மட்டுமே அவன் வழங்கினான்.

“இந்த பயணம் ஏன்.. எதற்காக.. இதனால் நமக்கு என்ன பயன் என்று இன்னும் சில தினங்களில் சொல்கிறேன்” என்று பதிலளித்தான்.

ஆரல் வளரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்