Loading

விடிய விடிய உறக்கமின்றி கழிந்தது நிவேதாவிற்கு. வீல்சேரில் வந்து சேர்ந்த மகனுக்கு என்ன ஆனதோ என்ற கலக்கம் ஒரு புறமும், அவனை இன்னும் எப்படியெல்லாம் நோகடிக்கப்போகிறார்களோ என்ற பயமும் கலந்தடித்தது.

‘நாளைக்கு முதல் வேலையா, இங்க இருந்து கிளம்பிடனும்…’ என்ற எண்ணத்தில் படுத்திருந்தாள் பவித்ராத்யா.

அவளுக்கு அருகில் எப்போதும் போல அக்னிலா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவளது கேசத்தை கோதிக்கொண்டவளுக்கு ‘இவளை விட்டு எப்படி தான் செல்வதோ’ என்ற வேதனையும் எழுந்தது.

மருந்தின் வீரியத்தில் விக்ரம் நல்ல உறக்கத்தில் இருக்க, அவன் நெஞ்சில் தலை வைத்துப் படுத்திருந்த திலோத்தமா அவனையே வெறித்திருந்தாள்.

அந்தப் பிறந்தநாள் விழாவிற்குப் பிறகு, அவளது வீட்டு வழியாக அந்த தெருவைக் கடப்பதை வழக்கமாக்கி இருந்தான் விக்ரம வேந்தன்.

கார் செல்வதற்கு சற்றே நெருக்கடியாக இருந்தாலும், பொறுமையாய் அவளைத் தேடியபடி நகர்வான்.

ஒருமுறை அவளது தெருவை கடக்கும்போது, இடையில் இரு சைக்கிள்கள் நின்றதால், அவனால் நகர இயலவில்லை.

இறங்கிச் சென்று தள்ளி வைக்கலாம் என்றால், கதவைத் திறக்க இயலாமல் பக்கவாட்டில் நின்ற வண்டி இடித்தது.

இதென்ன சோதனை என்ற ரீதியில் ஹார்ன் அடித்துக் கொண்டே நின்றான்.

“யாரு ரொம்ப நேரம் ஹார்ன் அடிக்கிறது?” என்று மாடியில் இருந்து எட்டிப்பார்த்த திலோத்தமாவிற்கு சூழ்நிலை புரிந்தது.

“அட எங்க சைக்கிள் தான் நிக்குது. யாரு இது? இந்த தெருவுக்குள்ள கார்ல வர்றது” என்று முணுமுணுத்தபடி வேகமாய் கீழிறங்கிப் போனாள்.

அவசரமாய் நான்கு மாடியும் இறங்கியதில் மூச்சு வாங்கியது.

“வெய்ட்” என்று காரை நோக்கி கையைக் காட்டி விட்டு, இரு சைக்கிள்களையும் நகற்றினாள்.

ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருந்த வண்டியையும் மெல்ல நகற்றி வைத்தவள், “இப்ப போங்க” எனத் திரும்பிட, அவளைக் கண்ட பரவசத்தில் ரசனை மின்ன கார் ஜன்னலை இறக்கினான் விக்ரம வேந்தன்.

அவனைக் கண்டதும் மெல்லத் திகைப்புற்றவள், “நீங்களா… இந்தப் பக்கம் என்ன பண்றீங்க?” என வினவ,

‘உன்னைத் தேடி தான் வந்தேன்’ என வாய் வரை வந்தாலும் அதனை சொல்லாமல், “ரோடு சைட் ஏதோ வேலை பாக்குறாங்க…” என மழுப்பினான்.

“அப்படியா, நான் தினமும் அந்த வழியா தான் வர்றேன். அப்படி ஏதும் பார்க்கலையே” என்றாள் யோசனையாக.

“கவனிச்சுருக்க மாட்ட!” தோளைக் குலுக்கியவன், அவளது நெற்றியில் பூத்திருந்த வியர்வைத் துளிகளை விழிகளால் பருகியபடி, “ஏன் இப்படி மூச்சு வாங்குது உனக்கு…” என்றான்.

“எங்க சைக்கிள் தான் வழியை மறைச்சு நின்னுச்சு. அதான் இடிச்சுடுவீங்களோனு மாடில இருந்து ஓடி வந்தேன்…”

“ஓஹோ! இங்க தான் இருக்கா உன் வீடு?”

“ம்ம் ஆமா இதோ அந்த மாடி தான்” எனக் கை காட்ட, குனிந்து மேலே பார்த்தவன், “ஓகே ஓகே அப்போ அடிக்கடி பார்க்கலாம்…’ என ரசனைப் புன்னகை பூத்து விட்டு காரை கிளப்பிச் செல்ல, திலோத்தமா விழித்தபடி நின்றாள்.

அவளது பாவனையை கண்ணாடி வழியே பார்த்தவனுக்கு சிரிப்பு பொங்கிட, ஜன்னலின் வழியே கையை மட்டும் நீட்டி டாட்டா காட்டினான்.

அதில் அவளது இதழ்களிலும் மையல் புன்னகை நிறைந்தது.

—————-

“விக்ரம்க்கு எதுவும் பெருசா பிரச்சினை இல்லை தான?” அடுக்களைக்கு வந்த அக்னி வேந்தனிடம் தவிப்பாய் கேட்டார் நிவேதா.

அக்னி பொறுமையாய் அவன் நிலையை விளக்கி விட்டு, “டாக்டர்ஸ்கு நேத்தே அவனோட ரிப்போர்ட்ஸ் அனுப்பிட்டேன்மா. அவன் சரியாக நிறைய சான்ஸ் இருக்குனு சொல்லிருக்காங்க. டோன்ட் வொரி” என்று ஆறுதல்படுத்தினாலும் அவர் விழிகள் நீரால் நிரம்பியது.

“ஏன் தான் அவனுக்கு இப்படி ஒரு சோதனையோ!”

“ம்மா ப்ளீஸ். அவன் முன்னாடி நீங்க பலவீனமாகுறது அவனுக்கு தான் அதிகமா ஹர்ட் ஆகும்.”

மகனின் கூற்று புரிந்திட, “அவன் முன்னாடி அழ மாட்டேன்” என்று கண்ணைத் துடைத்துக் கொண்டார்.

திலோத்தமா விக்ரமிற்கு பால் கலக்குவதற்காக கீழிறங்கி வந்தாள் தயக்கத்துடன். அடுக்களையில் தாயும் மகனும் நின்றதில் அவளும் சங்கடத்துடன் நின்று விட, அவளைக் கண்டு விட்ட அக்னி “விக்ரம் முழிச்சுட்டானா?” எனக் கேட்டான்.

“இல்ல பால் எடுத்துட்டு போய் தான் எழுப்பனும்…” என்றாள் கையைப் பிசைந்து கொண்டு.

“நான் காய்ச்சி வச்சுட்டேன்மா…” நிவேதா கிளாஸை எடுத்து நீட்ட, இருவரையும் பாராது தலையைக் குனிந்தபடி வாங்கிக்கொண்டவள், அக்னியின் தீப்பார்வையை உணர்ந்தாலும் பயந்து திடுதிடுவென மாடிக்கு ஓடி விட்டாள்.

“அவளைத் திட்டாத அக்னி” நிவேதாவிற்கு பாவமாக இருந்தது அவளைப் பார்த்தாலும்.

தனது மகனின் இந்த நிலையிலும் முற்று முழுதாய் உடன் இருக்கிறாளே…

“எனக்கு வர்ற கோபத்துக்கு அவளை சப்பு சப்புன்னு அடிக்க தான் தோணுது. விக்ரமுக்கு சரியாகட்டும். அவளுக்கு தனி பனிஷ்மென்ட் இருக்கு” என்றான் பல்லைக்கடித்து.

ஆனால், அதில் கோபமெதுவும் தென்படாததால் நிவேதா மகனை முறைக்க, அந்நேரம் அவர்களுக்குப் பின்னால் இருந்து, “யாரும் யாருக்கும் பனிஷ்மென்ட் குடுக்க தேவை இல்ல. என் அக்கா ஒன்னும் எந்த தப்பும் பண்ணல…” என நொடித்தாள் பவித்ராத்யா.

அரை தூக்கத்தில் இருந்த அக்னிலாவை தோளில் போட்டிருந்தவள், “உங்க அண்ணன் தான் காரை எடுத்துட்டு வந்து எங்க தெருவுல ரோந்து போனாரு” என முணுமுணுத்திட,

“ஓஹோ… அப்போ நீயும் உன் அக்காவை சைக்கிளை எடுத்துட்டு இந்த வீட்டு வாசல்ல ரோந்து போகல…” என்றான் அர்த்தமாய்.

“நாங்க எப்பவுமே ஸ்கூல் முடிச்சதும் இந்தப் பக்கம் தான் வருவோம்” உதட்டைக் குவித்து முறைத்தவள், “பாப்பாக்கு பால் வேணும் அத்தை…” என்றாள் நிவேதாவிடம்.

இருவரும் ஒருவரை ஒருவர் காட்டமாய் பார்த்திருந்ததை சுவாரஸ்யமாய் ஏறிட்ட நிவேதா, “நானே கொண்டு வரலாம்னு நினைச்சேன்மா. தூங்கிட்டு இருந்தீங்க அதான் வச்சுருந்தேன்” என எடுத்துக் கொடுத்தார்.

எப்போதும் அக்னிலா பவித்ராத்யாவிடம் தான் உறங்குவாள். அதனால் விக்ரமிற்கு விபத்து நடந்தபிறகு அவளை முழுதாய் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அவளுடையதாகிற்று.

“சித்தப்பா லிப்ட்ல போலாமா…” அக்னியைப் பார்த்ததும் அவனிடம் தாவிய நிலாவைப் பிடித்தவள்,

“ப்ரஷ் பண்ணிட்டு, சாப்பிட்டுட்டு அப்பறம் தான் விளையாட்டு எல்லாம்” எனக் கண்டிப்பாய் கூறிட, நிலாவும் சித்தி சொல்லைத் தட்டாது, “சித்தப்பா நான் ரெடியாகிட்டு வரேன்” என்று ஹஸ்கி குரலில் ரகசியமாய் கூறினாள்.

அதில் அக்னியும் நிவேதாவும் புன்னகைத்து விட, அந்நேரம் “இங்க என்ன கூடி கும்மியடிச்சுட்டு இருக்கீங்க. நிவேதா காபி ரெடியா?” என்ற சவுந்திரவல்லியின் குரலில் நிவேதா பதறி விட்டார்.

இதுவரை தனது வீட்டில் யாரும் சத்தமிட்டுப் பேசி பழக்கமில்லாததால் அக்னிலா பயந்து பவித்ராத்யாவின் கழுத்தை இறுக்கி கட்டிக்கொண்டாள்.

பவித்ராத்யா அக்னிலாவை தூக்கிக் கொண்டு அறைக்குச் சென்று விட, சவுந்திரவல்லி அக்னியிடம் எகிறினார்.

“உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க அகி. நம்ம குடும்ப மானத்தை நடுத்தெருவுல நிறுத்திட்டுப் போனவனை குடும்பம் குட்டியோட கூட்டிட்டு வந்துருக்க. அதுவும் உன் அப்பா இல்லாத நேரமா பார்த்து…”

“அதுக்காக அவன் இந்த வீட்டு வாரிசு இல்லைன்னு ஆகிடாது பாட்டி. இது அவன் வீடு.”

“சரிப்பா இது அவன் வீடு தான். நான் ஒத்துக்குறேன். கூடவே அந்த ஓடிகாலியை எதுக்கு கூட்டிட்டு வந்து. பிரெண்டு பிரெண்டுன்னு உன்னை நம்ப வச்சு கழுத்தறுத்துட்டு போனவளை பார்த்த இடத்துலயே கண்ட துண்டமா வெட்டிப் போட்டு வந்துருக்க வேண்டியது தான. இதுல கொசுறா. ஒரு குழந்தையும் அந்தத் திமிரு பிடிச்சவளும்” என்று பொங்கினார்.

“என்ன பாட்டி பேசுறீங்க. அது விக்ரமோட குழந்தை” அக்னி அழுத்தமாய் கூற,

“அந்தக் குழந்தைக்குன்னு ஒரு தகுதி இருக்கணும். கண்டவ பெத்துப்போட்டதுக்கு எல்லாம் நம்ம மரியாதை குடுத்து நடுவீட்ல வைக்க முடியாதுல” அவரும் சீறினார்.

“விக்ரமோட இந்த இக்கட்டான நிலைமைலையும் அவன் கூட இருக்கா. இதை விட வேற என்ன தகுதி வேணும் உங்களுக்கு.”

“அதான் நைசா தங்கச்சியை தூது அனுப்பி இங்க வந்து ஒட்டிட்டாளே. ஏன் இவ்ளோ வருஷம், அவன் கூட எடுத்துட்டுப் போன காசை எல்லாம் அனுபவிக்க தெரிஞ்சுதுல. இப்ப காசை கரைக்கவும் இங்க வந்து டேரா போட்டுட்டு இருக்கா. உன் வயசு என் அனுபவம் அகி. இந்த வீட்ல பிறந்த பாவத்துக்கு விக்ரம் வேணும்னா இங்க இருக்கட்டும். கூட ஒட்டிட்டு வந்தவளுங்களை நீ துரத்தல. நானே துரத்துவேன்” என்றார் அதீத கோபத்துடன்.

“உங்களால முடிஞ்சா துரத்திக்கோங்க!” அவர் உயரத்திற்கு குனிந்து சவால் விட்டவன், அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் அங்கிருந்து நகர, சவுந்திரவல்லியின் சினம் எல்லையைக் கடந்தது.

நடந்ததை எல்லாம் பவித்ராத்யாவும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.

அப்படி மானம்கெட்டுப் போய் இங்க இருக்கணுமா? என்ற எரிச்சல் மேலெழும்பினாலும், விக்ரமிற்கு உடம்பை தேற்றுவதற்காக தானே இதை விழுங்கி கொள்ள வேண்டியதாக இருக்கிறது என்ற ஆயாசமும் தோன்றியது.

இன்னும் அவனது சிகிச்சைக்காக 30 லட்சங்களுக்கும் மேல் தேவைப்படுகிறது. அதனை எப்படியும் பிரட்ட வழியின்றி தானே திலோத்தமா அக்னியிடம் உதவி கேட்டு அனுப்பினாள்.

தனதறைக்குச் செல்லப் போன அக்னியை தடுத்து நிறுத்தினாள் பவித்ராத்யா.

“நான் இங்க வேலைக்கு சேருறப்ப என் பிரெண்ட் வீட்ல தான் தங்கி இருந்தேன். நான் அங்க போய் தங்கிக்கிறேன்” என்றாள் அவனைப் பாராமல்.

கையைக் கட்டிக்கொண்டு நின்ற அக்னி வேந்தன், “ஓகே உன் இஷ்டம். எல்லாத்துல இருந்தும் பாதியோட ஓடுறது தான அக்கா தங்கச்சிங்களுக்கு வழக்கம்” என்றான் சீறலுடன்.

அதில் சிவந்த விழிகளுடன் நிமிர்ந்தவள், “நான் ஒன்னும் யாரையும் விட்டுட்டு ஓடல…” என மூச்சிரைத்தாள்.

“நீ சேஃபா இன்னொரு இடத்துக்குப் போய்டுவ. உன் கூடவே ஒட்டிட்டு இருக்குற நிலாவை என்ன செய்வ? திலோவை என் பாட்டி துரத்தி விட்டா பரவாயில்லையா? ம்ம்?”

“திலோவுக்கு எந்த பிரச்சினையும் வர விட மாட்டேன்னு நீங்க சொல்லிருக்கீங்க தான?”

“சோ, என் மேல அவ்ளோ நம்பிக்கையா. சொன்னதை செய்வேன்னு” அர்த்தமாய் வினவியதில் திருதிருவென விழித்தாள்.

“நீ போறதுன்னா எங்க வேணாலும் போ! திரும்பி அக்கா, ஆட்டுக்குட்டின்னு இந்த வீட்டுப்பக்கமே நீ வரக்கூடாது. ஓகேன்னா போ!” என்றான் கோபத்துடன்.

“நான் ஏன் என் அக்காவை பார்க்க வரக்கூடாது?” உதட்டைப் பிதுக்கியவளுக்கு கண்ணீர் இதோ அதோவென நின்றது.

அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்தியவன், “தேவையான நேரத்துல கூட நிக்காம ஓடணும்னு நினைச்சா, இதான் பனிஷ்மென்ட்…” என்று காட்டத்துடன் கூற,

“நான் ஓடணும்னு நினைக்கல. அவளையும் நிலாவையும் மட்டுமாச்சு இங்க ஏத்துக்கிட்டா போதும். நான் எதுக்கு தேவையில்லாம இங்க பிரச்சினையா இருக்கணும். உங்க பாட்டியை பார்த்தா எனக்குப் பத்திக்கிட்டு வருது. ஏதாச்சு பேசி விட்டேன்னா, தேவையில்லாத பிரச்சினை வரும்… அதுக்கு தான் சொன்னேன்” என்று உதட்டைப் பிதுக்கினாள்.

தாடையைப் பிடித்திருந்த ஒற்றை விரலை எடுக்காமலேயே பெருவிரலால் அவளது கீழுதட்டை வருடியவன், “உன் மனசுல யாரோ புகுந்து நீ பெரிய தைரியசாலின்னு நம்ப வச்சுருக்காங்க ஆத்யா. ஆக்சுவலி நீ திலோவை விட கோழை…” என்றான் இதழ் வளைத்து.

தன்னிதழ் தொட்டவனின் செய்கையில் அதிர்ந்திருந்த பவித்ராத்யா, அவனது கூற்றில் பொங்கி விட்டாள்.

அவன் கையை கடுப்பாய் தட்டி விட்டவள், “யாரு கோழை. நான் ஒன்னும் கோழை இல்ல…” என்றதில்,

“சில்லி… அவள் கூட தைரியம் வந்து பிடிச்சவனைக் கூட்டிட்டு இங்க இருந்து போனா. உண்மையா உதவி தேவைப்படும்போது, உன்னை வச்சு காரியம் சாதிச்சுக்கிட்டா. ஆனா, நீ என்ன பண்ற…? இப்ப பிரச்சினையை விட்டு எப்படி தப்பிச்சு ஓடலாம்னு பாக்குற. அப்போ நீ கோழை தான?” என ஏற்றி விட,

“ஏதோ வயசான பீசாச்சே, மரியாதை குடுக்கணுமேன்னு தான் வாயைக் கட்டிட்டு இருக்கேன். எனக்கு என்ன வந்துச்சு. அந்த கிழவியை வாயை உடைச்சுட்டு தான் இங்க இருந்து போவேன். அப்பறம் என்னைத் தப்பு சொல்லிட்டு வராதீங்க… பாப்போம் யார் கோழைனு” என்று மூச்சு வாங்கினாள்.

அவளை நெருங்கி நின்று அவளது முதுகை தடவிக் கொடுத்தவன், “முடிஞ்சா உடைச்சு பாரு…” என்று அவளிடமும் சவாலை விட்டு, இரு பக்கமும் தூண்டி விட்டான்.

அவனது நெருக்கம் வேறு, அவளுக்கு புது அவஸ்தைகளைக் கொடுக்க, வேகமாய் பின்னால் நகன்றவள், “பாருங்க பாருங்க” என்று நாக்கைத் துருக்கி அழகு காட்டி விட்டு அறைக்குச் செல்ல, அக்னி வேந்தனின் இதழ்களில் மர்மப் புன்னகை பரவியது.

சில நிமிடங்களில் குடும்பமே காலை உணவிற்காக டைனிங் டேபிளில் கூடியது. விக்ரமிற்கு அனைவரையும் எதிர்கொள்ளவே சங்கடமாக இருந்ததில் அறையை விட்டு நகன்றானில்லை.

நிவேதாவும் அவனைத் தொந்தரவு செய்யாமல் அவனுக்கும் திலோத்தமாவிற்கு காலை உணவை அறையிலேயே கொண்டு வந்து கொடுக்க, “நானே வந்து எடுத்துருப்பேனே அத்தை…” என்றாள்.

“பரவாயில்லமா. டிராவல் டயர்ட் இருக்கும். சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க” என்றபடி விக்ரமின் கேசத்தை கோதி விட்டவர், கண்ணீரை அடக்கிக்கொண்டு “எல்லாம் சரியாகிடும் விக்ரா” என்றார் அன்பாய்.

வேதனையை அடக்கிக் கொண்டு முறுவலித்தவனின் கன்னம் வருடும்போதே சவுந்திரவல்லியின் குரல் கேட்க, “நான் போய் சாப்பாடு எடுத்து வச்சுட்டு வந்துடுறேன். வந்து மீதியை பேசலாம்… ரெண்டு பேரும் சாப்பிடுங்க” என்று விட்டு அவசரமாக கீழே சென்றார்.

விக்ரம் தான், “அம்மா இன்னும் மாறவே இல்ல. இன்னும் பாட்டி மேல இருக்குற பயம் அப்படியே தான் இருக்கு” என்றான் பெருமூச்சுடன்.

“அவங்க குணமே அதான விக்ரம்…” என முறுவலித்த திலோத்தமாவிடம், “ஹ்ம்ம் ஆனா நீ உன் மாமியாருக்கு பயந்து நடுங்க தேவையில்லை. ஷீ இஸ் சோ சுவீட் ஆல்வேஸ்…” எனக் கண்சிமிட்டினான்.

அதில் புன்னகைத்தவள், “உங்க பொண்ணை பார்த்தீங்களா. அவங்க சித்தப்பாவைப் பார்க்கவும் நம்மளை கண்டுக்கவே இல்ல… பாத்துக்குறேன் அவளை” என போலியாய் மிரட்டியதில்,

“அவளைப் பார்த்தாவது இங்க எல்லாரும் மனசு மாறுனா நல்லாருக்கும் திலோ” என்றான் வருத்தத்துடன்.

வீல் சேரில் வந்தவனையே வஞ்சத்துடன் பார்த்தவர்கள்! சின்னக் குழந்தைக்காகவெல்லாம் தங்களது நிலையை மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்ற சலிப்பு உருவாக அதனை அவனுக்கு காட்டாமல் மறைத்துக் கொண்டவள், “எல்லாரோட மனசும் மாறும் விக்ரம்!” என அவனை வயிற்றுடன் கட்டிக்கொண்டாள்.

இங்கோ, பவித்ராத்யா அக்னிலாவைக் குளிக்க வைத்து, உணவும் ஊட்டி விட்டாள்.

இனியா தான், “புள்ளையையும் இன்னொருத்திகிட்ட கொடுத்தாச்சு. புருஷனையும் படுத்த படுக்கையாக்கியாச்சு. இனி இருக்குற சொத்தையும் கரைச்சுட்டுப் போய்டலாம் உங்க மருமகளுக்கு. நல்ல மருமகளை கொண்டு வந்தீங்க…” டைனிங் டேபிளில் அமர்ந்து நிவேதா கொடுத்த உணவை உண்டபடியே அவரை வருத்தினார்.

“அண்ணா வரட்டும். எல்லாரையும் துரத்தி விடுறேன்” பல்லைக்கடித்து கூறிய மனோஜ் நிவேதாவையே முறைத்து வைக்க, அவருக்கு கையெல்லாம் நடுங்கி விட்டது.

அக்னிலாவை அறையில் விளையாட விட்டு விட்டு, உணவு மேஜைக்கு வந்த பவித்ராத்யாவிற்கு இந்த உரையாடல்களைக் கேட்டு இரத்தம் கொதித்தது.

“நான் நிலாவோட சித்தி. அத்தானும் அக்காவும் வேலைக்குப் போறதுனால, அவள் அதிக நேரம் என்கூட இருந்து பழகிருக்கா. அத்தானுக்கு உடம்பு சரியில்லாம ஆனதுல இருந்து ராத்திரி பகலும் கண்ணு முழுச்சு பார்த்தது அவள் தான். யாரோட சொத்தையும் கரைக்கணும்னு அவளுக்கு அவசியம் இல்ல. அவளே கை நிறைய சம்பாதிக்கிறா. அத்தானுக்கு ஆக்சிடென்ட் ஆனதுல இருந்து மொத்த குடும்பத்தையும் அவள் சம்பாத்தியத்துல தான் பார்த்துக்குறா. தேவையில்லாம அவள் கேரக்டரை பத்தி யாரும் பேசாதீங்க” என கொந்தளித்தாள்.

சவுந்திரவல்லியோ, “என்னடி வாய் நீளுது. எங்க முன்னாடி வந்து சரிக்கு சமமா பேசுற உரிமையை உனக்கு யாரு குடுத்தது. ஓசி சோறுக்கு ஒட்டிக்கிட்டு வந்தவ, வால ஒடிக்கிட்டு இருக்கணும்” என எச்சரிக்க,

“அதை தான் நானும் சொல்றேன். யார் யார் எதுக்கு வந்தாங்களோ அதை மட்டும் பாக்குறது நல்லதுன்னு…” என்று மனோஜையும் இனியாவையும் தீப்பார்வை பார்த்ததில் மனோஜ் சேரை தள்ளி விட்டு எழுந்து அவளை அறையக் கை நீட்டினார்.

அக்னி வேந்தன் பவித்ராத்யாவைப் பிடித்து தன்பக்கம் இழுக்க, காற்றையே அறைந்து விட்டு ஒரு சுத்து சுத்தி நின்றவருக்கு தலை சுற்றியது பாவம்.

முன்பின் தெரியாத பெண்ணை அறைய எத்தனித்தவரை திகைத்துப் பார்த்த பவித்ராத்யா, அக்னியின் கைகளில் அடங்கிட, சவுந்திரவல்லிக்கு அபாய மணி அடித்தது.

‘இவனும் கையை மீறி போய்விட்டால்? பசங்களை வளைச்சு போடுறதுக்குனே எங்க இருந்து வருவாளுங்களோ…’ என பொருமிய சவுந்தரவல்லி,

“என்ன மனோஜூ… பொம்பளைப்புள்ளையை அடிக்க போறதுலாம் தப்புல்ல” என்று அதட்டுவது போல பாவனை காட்டி விட்டு, பவித்ராத்யாவை அக்னி வேந்தனிடம் இருந்து பிடித்து இழுத்தார்.

“இங்க பாரு இங்க இருக்குற வரை பேச்சு மூச்சு இல்லாம இருக்கணும்…” என்று விரல் நீட்டி எச்சரிக்க,

“அதையே எல்லாரும் பாலோ பண்ணுனா நல்லது பாட்டி. என் அக்காவைப் பத்தி தப்பா பேசுனா கேட்டுட்டு இருக்க மாட்டேன்” என எகிறினாள்.

ஆனாலும் தனக்காக அவர் மகனை அதட்டுகிறார் என்றால் கொஞ்சமே கொஞ்சம் நாகரிகம் இருக்கிறது போல என தவறாகவோ எண்ணிக்கொண்டாள்.

சவுந்திரவல்லி தனது ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, ‘நேரம் வரட்டும். அப்பறம் பாத்துக்குறேன் அவளை…’ என்று பட்டும் படாமல் வஞ்சத்தை கக்கி விட்டுச் சென்றவர், மனோஜுக்கும் இனியாவிற்கும் கண்ணைக் காட்டினார்.

அவளை முறைத்து விட்டு அவர்களும் நகர, இந்தப் பதுங்கல் எதுக்கென்று புரிந்த அக்னி வேந்தன் நக்கல் நகையை சிந்தினான்.

இவன் மட்டும் வரவில்லை என்றால், அந்தப் பெரிய மனிதர் தன்னை அடித்தே இருப்பார்! அப்பறம் கோழை என்று கிண்டல் செய்து கொல்லுவான். இதற்காக அவரைத் திரும்பி அடிக்கவா இயலும்! தனக்குள் நொந்து கொண்ட பவித்ராத்யாவை ஆழப் பார்த்தவன், “ஹோம்கு போகணும் கிளம்பு” என்றான்.

“எதுக்கு?”

“யோகா க்ளாஸ்? என்ன அதுல இருந்தும் எஸ்கேப் ஆகலாம்னு நினைப்பா?” இடுப்பில் கையூன்றி கேட்டவனை முறைத்தவளைக் கண்டுகொள்ளாது, “நிலாவையும் கூட்டிட்டுப் போலாம்” என்றதில், “நிலா எதுக்கு?” என்றவளுக்கு பதில் அளிக்காது,

“ம்மா… ரெண்டு மணிக்கு டாக்டர் அப்பாயின்மென்ட். திலோவையும் விக்ரமையும் கிளம்ப சொல்லிடுங்க. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்…” என உத்தரவிட்டான்.

பவித்ராத்யா மேலும் ஏதோ பேச வர, “பைவ் மினிட்ஸ் டைம் உனக்கு…” என்று விட்டு காருக்குச் செல்ல, “பேசுறதை காது குடுத்து கேட்டா தான் என்னவாம்…’ எனப் பல்லைக்கடித்தாள்.

சொன்னது போன்றே ஐந்து நிமிடத்தில் அக்னிலாவை அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்.

திலோத்தமாவிற்கு குறுஞ்செய்தியும் அனுப்பி இருந்தாள்.

“ஐ சித்தப்பா நம்ம கார்ல போறோமா?” அக்னிலா விழி விரிக்க, “ஆமா குட்டிமா…” என அவளை முன்னே அமர வைத்து சீட் பெல்ட்டையும் போட்டு விட்டான்.

“நீங்க நிலாவைக் கூட்டிட்டு வாங்க. நான் பஸ்ல வரேன்” என்று நாசூக்காய் நகர முயல, விறுவிறுவென பின் கதவிற்கு வந்தவன், “உங்கிட்ட கொஞ்சி கார்ல வர சொல்லலாம் எனக்கு டைம் இல்ல. கெட் இட்” என்று தள்ளி விடாத குறையாக காரினுள் அமர வைத்தான்.

“உங்க ஹோம்ல வேலை பாக்குற எல்லாரையும் கார்ல தான் கூட்டிட்டுப் போவீங்களாக்கும்” அவள் வாய்க்குள் முணுமுணுத்துக் கொள்ள, அவன் வாயிலிருந்து வார்த்தைகளை கொட்டினால் தானே!

அக்ரம் இல்லத்தினை அடைந்தபோதே பவித்ராத்யா, “காரை நிறுத்துங்க சார்” என்றாள்.

ஏன் என்பது போல கண்ணாடி வழியே பார்த்தவனிடம், “ஏற்கனவே உள்ள இருக்குறவங்க உங்க பாட்டிகிட்ட இல்லாததும் பொல்லாததும் சொல்றாங்க. இதுல உங்ககூட வர்றதை பார்த்துட்டா தேவையில்லாத பிரச்சினை. வாசல்ல இறக்கி விடுங்க நான் நடந்து வரேன்…” அவளது விளக்கங்கள் எல்லாம் செல்லாக் காசு என்பது போல காரை அமர்த்தலாய் ஓட்டிச் சென்று நட்ட நடு கேம்பஸில் கீறிச்சிட்டு நிறுத்தினான்.

அதில் உள்ளிருந்தவர்கள் கூட வெளியில் வந்து எட்டிப் பார்த்தனர். அக்னி வேந்தனின் நண்பன் சஞ்சீவும். 

“அடப்பாவி… மெதுவா வந்துருந்தா கூட யாரும் பாத்துருக்க மாட்டாங்க” என்று பவித்ராத்யா வாயில் கை வைக்க, மீண்டுமொரு முறை கண்ணாடி வழியே பார்த்து கேலி நகை புரிந்தவன், “இப்ப யாரும் பார்த்திருக்க மாட்டாங்க தான ஆத்யா” என்றான் வெகு தீவிரமாய்.

“ஆமா ஆமா இங்க இருக்குற 450 பேர தவிர வேற யாருமே பார்க்கல” என நொடித்ததில், இதழ் மடித்து சிரிப்பை அடக்கினான்.

அதில் அவளுக்கும் கூட துளியாய் சிறு புன்னகை படர்ந்தது.

காரிலிருந்து குழந்தை சகிதமாய் இறங்கிய அக்னி வேந்தனைக் கண்டு நால்வர் குழு தான் வாயில் கை வைத்துப் பார்த்தது.

“ஏன் சுதா… இவன் என்ன ஒரே நாள்ல குழந்தையே பெத்துட்டான்” தேவாரம் யோசனையாக கேட்க,

அவரை முறைத்த ஜெயசுதா, “ஆமா ஒரே நாள்ல குழந்தை பொறந்து அது வளர்ந்துருச்சு. நீ எல்லாம் என்னத்த கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துனியோ… உன் பொண்டாட்டி பாவம்” என்றிட இப்போது முறைக்கும் முறை தேவாரம் உடையது ஆகிற்று.

“ஹே அங்க பாருங்கப்பா நம்ம பவி டார்லிங்கும் அகி கூட தான் வர்றா” குருமணி மகிழ,

விஜயா அக்னிலாவை உற்றுப் பார்த்தார்.

பின் விழி விரித்தவராக, “விக்ரமோட குழந்தை” என்று முணுமுணுக்க, மூவரும் அவரை புரியாது பார்த்தனர்.

“அப்டியே விக்ரம் சாயல்ல இருக்கா அந்த பாப்பா” விஜயா கண் கலங்கி கூற,

“விக்ரம் தான் இந்த ஹோம் ஆரம்பிச்சான். அதை தான் அகி எடுத்து நடத்துறான்னு தான் நமக்கு தெரியும். ஆனா விக்ரமை  நிவேதா போட்டோல காட்டுனதோட சரி. அப்பறம் எப்படி இவ்ளோ கன்பார்மா அது விக்ரமோட குழந்தைனு சொல்ற விஜி…” தேவாரம் குழப்பமாய் கேட்க,

“விஜிக்கு யோகா செஞ்சு செஞ்சு, வருங்காலம் கடந்தகாலம் எல்லாம் கண்ணுக்கு தெரிய ஆரம்பிச்சுடுச்சு” போல ஜெயசுதா கிண்டல் செய்ய, அவரோ அக்னிலாவையே கண்ணெடுக்காது ஏறிட்டதில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அக்னிலாவைத் தூக்கிக் கொண்டு நேராய் இவர்களிடம் வந்த அக்னி வேந்தனிடம், “சித்தப்பா இது யார் வீடு?” எனக் கேட்டாள்.

“ம்ம்ம்ம்… நம்ம மார்னிங் யார் வீட்ல இருந்தோம். உன் பாட்டி வீட்ல தான?” அவன் கொஞ்சலாய் கேட்க, அவள் வேகமாய் தலையாட்டினாள்.

“இது உன் அப்பாவோட பாட்டி வீடு…” என அவள் நெற்றியில் முட்டிட, “என் அப்பாக்கும் பாட்டி இருக்காங்களா. நிவேதா பாட்டி மாதிரியா?” அவள் விழிகளை உருட்டிக் கேட்டாள்.

அவனது கூற்றை புரிந்து கொள்ள இயலாமல் பவித்ராத்யா விழிக்க, “ஆமா அவங்களை விட ஸ்வீட்டா. இங்க ஒரு பாட்டி இல்ல நிறைய தாத்தா பாட்டி இருக்காங்க…” என்றான் கண் சிமிட்டி.

‘ஓ பொதுவா சொல்றாரா!’ என ஆசுவாசமானவள், விஜயா தவிப்புடன் “அகி இது…” என தட்டுத் தடுமாறி கேட்டதில், “இது என் அக்காவோட பொண்ணு ஆண்ட்டி” என்றாள்.

“அகி…” என்னவாகினும் ஆடவனின் கண்ணசைவிற்காக காத்திருந்த விஜயாவிடம் கண்ணை மூடித் திறந்தான் அக்னி வேந்தன்.

நிலாவை அவனிடம் இருந்து ஆர்வமாய் வாங்கி கொண்ட விஜயா, “அப்படியே விக்ராவை உரிச்சு வச்ச மாதிரி இருக்கா அகி… என் செல்லம்” என்று முத்தம் கொடுத்தார்.

அவளது பெயரைக் கேட்டு வியப்புற்றவர், “பார்த்தியா உன்னை விட்டுட்டுப் போய்ட்டான்னு வருத்தப்பட்ட. அவன் மகளுக்கு கூட உன் பேரை தான் வச்சிருக்கான்…” என்று விஜயா பெருமைப்பட்டார்.

“ஹ்ம்ம் நம்ம வேணும்னா அவனுக்கு சிலை வச்சுடலாம் விஜி…” கிண்டலாய் கூறியவனை “போ அகி” என குறைபட்டவர், நிலாவுடன் பேசிச் சிரித்ததோடு மற்ற மூவரையும் அவளுக்கு அறிமுகம் செய்து வைக்க, அவர்களோ விஜயாவை ஒரு மார்க்கமாகப் பார்த்தனர்.

“சரி சரி உங்க யோகா க்ளாஸ்கு டைம் ஆகுது. நீங்க போங்க” என அக்னி நிலாவை வாங்க முயல,

“இன்னைக்கு எந்த க்ளாஸும் கிடையாது. ஆமா விக்ரம் எப்படி இருக்கான். நல்லாருக்கான்ல… அவன் வரலையா அகி” என அவரது விழிகள் விக்ரமைத் தேடியது.

அதில் முகம் மாறிய அக்னி, “வருவான் விஜி. சீக்கிரமே!” என இறுக்கத்துடன் கூறியவன், தனதறைக்குச் சென்றான்.

அக்னிலா, பெரியவர்களுடன் இணைந்து விளையாடி கழிக்க, பவித்ராத்யா தான் ஆரம்பித்தாள் தயக்கத்துடன்.

“உங்களுக்கு விக்ரம் அத்தானை தெரியுமா ஆண்ட்டி?”

விஜயா ஒரு கணம் புன்னகையை நிறுத்தி விட்டு தனது தோழமைகளைப் பார்க்க, “நீ இதுவரை உன்னைப் பத்தி சொல்லதே இல்லையே விஜி!” என்றார் ஜெயசுதா.

“விக்ரமும் அகியும் என் பேரப்பசங்க” மெல்லிய குரலில் கூறியதில் குருமணியைத் தவிர மற்றவர்களுக்கு சிறு அதிர்வு.

“அப்போ நிவேதா?” தேவாரம் நிறுத்த,

“என் பொண்ணு” என்றார் அவர்களை காணாமல்.

பவித்ராத்யாவுக்கு கடும் அதிர்வு. “நிவேதா அத்தை அம்மான்னா இவங்க ஏன் இங்க இருக்கனும்?” அவளுள் ஓடிய கேள்வியை கேட்டே விட்டாள்.

விஜயா பதில் கூறாது அமைதி காக்க, ஜெயசுதாவும் “சொல்லு விஜி. இந்த இடமே உன் பேரப்பசங்களோடது. என்ன தான் இங்க எல்லா வசதியும் இருந்தாலும், பேரப்பசங்களோட இல்லாம நீ ஏன் இங்க இருக்க? எங்களுக்கு கூட இருக்க யாரும் இல்ல. ஆனா நீ ஏன்?” என ஆதங்கமாக கேட்டார்.

மெலிதாய் முறுவலித்த விஜயா, “என் பொண்ணையும் பேர பசங்களையும் தப்பா நினைக்காத சுதா. என் மேல கொள்ளைப்பாசம் அவங்களுக்கு… இந்த ஒட்டுமொத்த இடத்தையும் எங்களுக்காக மட்டுமே உருவாக்குனான் விக்ரம்” என்றார் கண்கள் பனிக்க.

“உங்களுக்காகன்னா?” தேவாரம் ஒரு மாதிரியாகக் கேட்டார்.

விஜயா சற்றே விழித்து விட்டு குருமணியை பார்க்க, அவரோ “எங்களுக்காகன்னா எங்களுக்காக தான்” என்றார் முணுமுணுப்பாக.

“புரியலையே” கையில் இருந்த வளையலை பின்னால் நகர்த்திய ஜெயசுதா எப்போது வேண்டுமானாலும் தாக்க தயாராக இருந்தார் குருமணியை.

“நானும் விஜயாவும் ஹஸ்பண்ட்  அண்ட் வைஃப்” திருட்டு விழியுடன் கூறியவரை “அடப்பாவி” எனப் பார்த்தனர் இரு பெரியவர்களும்.

பவித்ராத்யாவிற்கு தலையே சுற்றியே உணர்வு!

“எனக்குப் புரியல” பரிதாபமாய் கேட்டவளிடம், “ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்னா கல்யாணம் பண்ணுவாங்கள்ல டார்லிங்” என இளித்து வைத்தவரை முறைத்தாள்.

தேவாரமும் ஜெயசுதாவும் உச்சகட்ட அதிர்வில், “நீங்க புருஷன் பொண்டாட்டின்னு ஏன் சொல்லவே இல்ல… நீங்க ப்ரெண்ட்ஸ்னு தான நினைச்சோம்” என ஒன்றாகக் கேட்க,

“நீங்க கேட்டா தான சொல்ல முடியும். நாங்க எப்பவாவது சொல்லிருக்கோமா ப்ரெண்ட்ஸ்னு. நீங்களா அப்படி நினைச்சுக்கிட்டீங்க. எங்களுக்கும் எங்களை எக்ஸ்போஸ் பண்ண பிடிக்கல. அதான் அப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டோம்…” என்றதில் தேவாரம் குருமணியின் முதுகில் சுள்ளென அடித்தார்.

“அதுக்காக கட்டுன பொண்டாட்டியைவே மறைப்பியா” கோபம் கொண்டவரிடம்,

“அப்படி இல்ல ரம்மு. எங்க கல்யாணமே ஒரு ட்ராஜிடி. அது நிவேதா வாழ்க்கையையும் சேர்த்து பாதிச்சுடுச்சு” என சட்டென வேதனை கொண்டவரின் கையைப் பிடித்துக் கொண்டார் விஜயா.

“என்ன சொல்ற குரு?” ஜெயசுதா வினவினார்.

“நானும் விஜியும் செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். எனக்கு ஒரு பையன். அப்போ பத்து வயசு இருக்கும். விஜிக்கு பதினஞ்சு வயசுல நிவேதா இருந்தா. விஜிக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சுட்டதுனால அவளுக்கும் வயசு கம்மி தான். எங்க ரெண்டு பேர் பேரண்ட்ஸ்ஸும் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. என் பையனை அவள் பையனா வளர்த்தா. அதே மாதிரி நிவேதா என் பொண்ணா வளர்ந்தா. எங்களுக்குள்ள நல்ல அண்டர்ஸ்டாங்டிங் இருந்துச்சு. எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு அஞ்சு வருஷத்துலயே சவுந்தரவல்லி அம்மாவோட வீட்ல சம்பந்தம் பண்ண என் சொந்தக்காரங்க பேசுனாங்க.

எனக்கு அப்போ பிஸினஸும் நல்லா போச்சு. நிவேதாவை நல்ல குடும்பத்துல கல்யாணம் பண்ணி குடுத்த நிம்மதில இருந்தோம். என் பையனும் படிச்சு வெளிநாட்டுக்குப் போய் செட்டில் ஆகிட்டான். ஆனா விக்ரம் பிறந்த கொஞ்ச நாள்லேயே பிரச்சினை ஆரம்பிச்சுடுச்சு” எனப் பெருமூச்சு விட்டார்.

இரண்டாவது திருமணம். எத்தனை மனக்கசப்புகள் இருந்திருக்கும்! ஆனால் அந்த உறவில் நட்பையும் பொருத்தி அழகாய் வாழ்ந்த இருவரையும் கண்டு பவித்ராத்யாவிற்கு வியப்பு தாளவில்லை.

“என்னப் பிரச்சினை?” அவள் கேட்டதில்,

பெருமூச்சுடன் விஜயாவே தொடர்ந்தார்.

“நிவேதாவோட அப்பா அவளுக்கு எட்டு வயசா இருக்கும்போதே இறந்துட்டாரு பவிமா. என் அப்பா மட்டும் தான் எங்களுக்கு துணையா இருந்தாரு. ஒரு நாள் அவரும் படுத்த படுக்கையானதும் அவருக்கு பயம் வந்துடுச்சு. உங்களை தனியா விட்டுட்டுப் போனா நீ எப்படிமா பொம்பளைப்பிள்ளையை வச்சு தனியா இருப்பனு… அப்ப எனக்கும் 35 வயசு தான். கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி அப்பாவோட நிழல்ல, கல்யாணத்துக்கு அப்பறம் புருஷனோட நிழல்ல வாழ்ந்தாச்சு. அவரு படுக்கவும் எனக்கே பயம் வந்துடுச்சு. அப்ப தான் அப்பா குருவைப் பத்தி சொல்லி கல்யாணம் பண்ண கேட்டாரு. நிவேதாவும் ஒரு குடும்பத்துக்காக ஏங்குனா. எல்லாத்துக்கும் மேல எனக்கே எனக்கு ஒரு குடும்பம் வேணும்னு தோணுச்சு. கடவுள் என்கிட்ட இருந்து பறிச்சுக்கிட்ட குடும்ப அமைப்பை, திரும்ப குரு மூலமா எங்களுக்கு குடுத்தாரு. கட்டுன புருஷனை மறந்துட்டு இன்னொருத்தரை கல்யாணம் பண்ணதுல எனக்கு அருவருப்பு எதுவும் இல்ல. குரு என்னை அப்படி நடத்துனதும் இல்ல.

ஆனா, நான் செஞ்சது எவ்ளோ பெரிய தப்புன்னு சவுந்திரவல்லி என் பொண்ணை கேவலமா பேசும்போது தான் புரிஞ்சுது.

எங்களுக்கு நடந்தது ரெண்டாவது கல்யாணம்னு அந்த அம்மாவுக்கு தெரியாது போல.

என் சொந்தக்காரங்க எல்லாம் தெளிவா சொல்லிட்டோம்னு எங்களை நம்ப வச்சுட்டாங்க. அவங்களுக்கு எங்களைப் பத்தி தெரியும்னு நினைச்சு நாங்களும் சந்தோஷமா இருந்தோம்.

விக்ரம் பிறக்குற வரைக்கும் அவளை நல்லா தான் பாத்துக்கிட்டாங்க. ஆனா கொஞ்ச நாள்லேயே யார் மூலமாவோ விஷயம் தெரிஞ்சுடுச்சு. அவங்களுக்கு அதை பத்தி முதல்லயே நாங்களே விளக்கி இருக்கணும்னு எங்களுக்கும் அப்பறம் தான் உறைச்சுது.

நாங்க குடும்பமா மனப்பூர்வமா வாழ ஆரம்பிச்சாச்சு பவிமா. இரண்டாவது கல்யாணம், அது இதுனு எங்களுக்கே தோணல. உண்மையை மறைச்சு கல்யாணம் பண்ணி வச்சுட்டோம்னு அந்த அம்மா ஆட்டமா ஆடிடுச்சு.

‘பதினைஞ்சு வயசு பொண்ணை வச்சுக்கிட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிருக்கா உன் அம்மா. உனக்கே கேவலமா இல்ல’னு நிவேதாவை ரொம்ப பேசிருக்காங்க.

என் பொண்ணை என்னை பார்க்கவே விடல. நான் அவங்க வீட்டுக்கு வந்தாலே அவங்களுக்கு அசிங்கம்னு நினைச்சாங்க.

நிவேதாவும், ‘வேணாம்மா. நீங்க கவுரமா அப்பா கூட வாழுங்க. எனக்கு இங்க எந்த குறையும் இல்ல. நான் நல்லாருக்கே’ன்னு எனக்காக அவள் மனசுல இருந்த காயத்தை எல்லாம் மறைச்சுக்கிட்டா.

அப்பறம் அக்னியும் பிறந்தான். பிரசவத்துக்கு கூட என்னை வர விடல. ஆனா விக்ரமும் அகியும் வளர வளர நிலமையைப் புருஞ்சுக்கிட்டாங்க. சவுந்திரவல்லிக்கும் மாப்பிள்ளைக்கும் தெரியாம எங்களை பார்த்துட்டுப் போவாங்க. கொஞ்ச வருஷம் முன்னாடி, இவருக்கு தொழில் நொடிச்சுடுச்சு. திடீர்னு எனக்கு உடம்பும் சரியில்லாம போனதுக்கு கூட நிவேதாவை அனுப்பல.

எங்க பையன் கனடால டாக்டரா இருக்கான். குழந்தைங்க படிப்பு அது இதுனு அவனாலயும் சட்டுனு இங்க வர முடியல. எங்களுக்கும் அங்க இருக்குற குளிர் சேரல. இவனுக்கு ஏற்கனவே வீசிங் இருக்கு. மூச்சு விடாம சோதிப்பான்…” எனக் குருமணியை காட்டி உரிமையாக கூறிட, அவர் முகத்தில் சிறு புன்னகை.

“விக்ரமுக்கும் அகிக்கும் எங்களை ஒதுக்கி வைக்கிறது சுத்தமா பிடிக்காது. இதுனால மாப்பிள்ளைக்கும் அவங்களுக்கும் நிறைய சண்டை வந்துருக்கு. என் தாத்தா பாட்டியை தனியா விடமாட்டேன்னு சபதம் எடுத்துட்டு தான் இந்த ஹோம ஆரம்பிச்சான் விக்ரம். அதுக்கு யோசனை குடுத்து பாட்டிக்கும் அப்பாவுக்கும் எதிரா செய்யத் தூண்டுனது அக்னி.

அவன் அப்போ எம். பி. ஏ படிச்சுட்டு இருந்தான். படிப்பு முடிஞ்சதும் அவனும் விக்ரம்கு உதவியா வர்றது தான் அவங்க திட்டம்.

எங்களை பத்தி யோசிக்காதனு விக்ரம்கிட்ட நாங்க எவ்ளோவோ சொன்னோம். அவன் கேட்கல. எல்லாம் கூடி வரும்போது அவனுக்கு என்ன பிரச்சினையோ இங்க இருந்து போக வேண்டிய சூழ்நிலை. ஆனா விக்ரம் நினைச்சதை அகி சாதிச்சுட்டான். எங்களுக்கும் இங்க இருக்குறது மனசுக்கு இதமா இருந்துச்சு.

ஆரம்பத்துல எல்லார்கிட்டயும் ‘இவங்க என்னோட தாத்தா பாட்டி தான். இந்த இடத்துக்கு இவங்க தான் ஓனர்ஸ்’னு இங்க வர்ற எல்லார்ட்டயும் சொல்லுவான் அகி.

ஆனா அதுவே எங்ககிட்ட மத்தவங்களை ஒட்ட விடல. அப்பறம் தான் எங்களை பத்தி யாருக்கும் தெரிய வேணாம்னு சொல்லிட்டோம். சுதாவும் ரம்முவும் வந்தப்பறம் எங்க கூடு இன்னுமே பெருசானமாதிரி இன்னும் அழகான உணர்வு!” என இருவரையும் அன்பாய் ஏறிட்டு கூற, ஜெயசுதா பொங்கிய கண்ணீருடன் விஜயாவை அணைத்துக் கொண்டார்.

தேவாரம், குருமணி பெருமையாய் தோளோடு இணைத்தவர், “உன்னை பிரெண்டுனு சொல்லவே ரொம்ப பெருமையா இருக்குடா” என்று நிமிர்வாய் கூறிட, பவித்ராத்யாவின் விழிகளோ தூரத்தில் நின்று சஞ்சீவுடன் தீவிரமாய் பேசிக்கொண்டிருந்த அக்னி வேந்தனின் மீது நிலைத்தது.

சிறு ரசனையும் தெளித்ததோ என்ற சந்தேகத்துடனே இலைகளும் அசைந்து கொடுத்து சிறு புள்ளியாய் நேசத் தென்றலை துளிர விட்டது.

போதை தெளியும்
மேகா 

 

  

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்