Loading

தேசம் 1

உலகநாயகன் சூரியனே இன்னும் வரவில்லை அதற்குள் சில காலடி சத்தங்கள் பூமியை தொந்தரவு செய்து கொண்டிருந்தது. கண் கவரும் புடவைகள் ஒரு பக்கம், வயது பெண்களின் வகை வகையான ஆடைகள் ஒரு பக்கம். ஆண்கள் மட்டும் அவர்களுக்கே உண்டான விதிவிலக்கோடு சிக்கனமான ஆடையில் நின்று கொண்டனர்.

காவி துணி கொண்டு கட்டி வைத்த மேளங்களைப் பிரித்த வாத்திய வித்வான்கள் லேசாக அடித்து அதனை சோதிக்க, இரண்டாம் தளத்தில் அக்னி தேவன் நல்லபடியாக எரியத் துவங்கினான் அறுசுவை விருந்துக்கு. திருமணத்திற்கு தேவையான அனைத்தையும் கனகச்சிதமாக செய்த பெற்றோர்கள்,

“அவளை எழுப்பி விட வேண்டியது தான.”

“அதுக்கு தாங்க போறேன்” என பேசிக்கொண்டனர்.

போலி முகங்கள் வாழும் இவ்வுலகில் உண்மையான முகத்தை காட்டும் ஒரே சக்தி பளபளக்கும் கண்ணாடிக்கு மட்டுமே உண்டு. எங்கு எவரிடம் நடித்தாலும் இதன் முன்பு மட்டும் நடிக்கவே முடியாது. அப்படி பெற்றோர்களிடம் நடித்தவள் முகம் கண்ணாடி முன்பு கலைந்து போனது.

எண்ணத்தில் கடந்த ஆறு மாத காலங்கள் ஓடிக்கொண்டிருந்தது. கடைசி நொடி வரை வந்திருக்க கூடாது முதலே தடுத்திருக்க வேண்டும் என தாமதமாக வருந்தி கொண்டிருக்கிறாள். இரவெல்லாம் காதலனுக்கு அழைப்பு விடுத்தே நொந்து போனவள் என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருக்க,

“பிரார்த்தனாமா…” கதவைத் தட்டினார் தாய் வள்ளி.

கடிகாரத்தின் மீது கண் வைத்தவள் ஒருமுறை காதலனுக்கு அழைத்துப் பார்த்தாள். இந்த முறையும் எடுத்து பதில் கூறாதவனை முடியும் மட்டும் திட்டியவள் கதவை திறக்க,

“நலங்கு வைக்கணும் ரெடி ஆகிட்டு வா.” என்றார்.

கதவடைத்தவள் மீண்டும் கண்ணாடி முன்பு அமர, குறுஞ்செய்தி கவனத்தை திருப்பியது. காதலன் பெயர் கண்டு ஆர்வமாக எடுக்க,

“எதுக்கு கூப்பிட்டுட்டு இருக்க? அதான் அப்பவே தெளிவா சொல்லிட்டேனே உன் வாழ்க்கைல இனி நான் இல்லன்னு. நான் அதிர்ஷ்டம் இல்லாதவன் தனா. எல்லாமே முடிஞ்சிருச்சுன்னு நினைக்கும்போது இல்ல வாழ்க்கை இருக்குன்னு நீ வந்த. நீதான் எல்லாம்னு நினைக்கும் போது மொத்தமா போயிட்ட. மரணம் ஒன்னு தான் இனி எனக்கான துணை. உன்னோட துணை உனக்காக மணமேடையில காத்திருக்கு. சந்தோஷமா வாழ்க்கையை தொடங்கு தனா.” என்றதோடு அந்த குறுஞ்செய்தி முற்றுப்பெற்றது.

படித்துக் கொண்டிருக்கும் பொழுதே லேசாக மீன் விழிகள் கலங்கியிருக்க முடித்ததும் மீனை விட்டு நீர் வெளியேறியது கன்னம் தொட. காதலன் முகம் கண்ணாடியில் தெரிந்தது. நன்றாக இருந்த மனதில் கல் எரிந்து விட்டு இப்படி பேசுகிறானே என்ற ஆதங்கம் அவளுக்குள். உடனே கண்ணாடியில் தெரிந்த அவன் முகம்,

“நீ தான தனா அப்பா அம்மா ஒத்துக்க மாட்டாங்கன்னு சொன்ன. உன்ன கஷ்டப்படுத்தி என்னால எப்படி வாழ முடியும்.” என்றது.

உண்மைதானே என்ற மனது திருமணம் முடிவான அன்றைய நாளை நினைவு கூற ஆரம்பித்தது. பிரார்த்தனா மனநல மருத்துவத்தில் பட்டம் முடித்து தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள். வழக்கம்போல் பணி முடித்து திரும்பியவளை அழைத்த பெற்றோர்கள் மாப்பிள்ளை புகைப்படத்தை காட்ட,

“எனக்கு இந்த கல்யாணம் வேணாம் ப்பா” என்றாள்.

ஏன் என்று கேட்ட தந்தை சாமிநாதனுக்கு, “நான் ஒருத்தரை காதலிக்கிறேன்” என்றாள் தயங்கிக் கொண்டு.

காதல் என்றதும் வழக்கம் போல் கொதித்தெழுந்த பெற்றோர்கள் விவரத்தை கேட்க, “அவர் என்னோட பேஷன்ட். அம்மா அப்பா யாரும் கிடையாது. இருந்த காதலியும் ஏமாத்திட்டு போனதால மனவிரக்தில என்னை பார்க்க வந்தார். இதுவரைக்கும் பார்த்த கேஸ்லயே அவர் ரொம்ப வித்தியாசமா இருக்கவும் அதிக அட்டென்ஷன் கொடுத்தேன். காலப்போக்குல எங்களுக்குள்ளல எங்களையும் அறியாம காதல் வந்துருச்சு.

அன்ப தேடி ஏங்குற குழந்தை அவர். அந்த அன்பை என்கிட்ட பார்த்ததும் என்னையே முழு உலகமா நம்ப ஆரம்பிச்சுட்டாரு. அப்படிப்பட்ட ஒருத்தரை உதாசீனம் படுத்த எனக்கு விருப்பம் இல்லப்பா. நான் அவர மனசார காதலிக்கிறேன்.” விளக்கம் கொடுத்தாள்.

சாதாரணமாக பெற்ற பிள்ளை காதலிக்கும் விஷயம் தெரிந்தாலே பொங்கும் பெற்றோர்கள் மனநல சிகிச்சைக்காக வந்த ஒருவனை காதலிக்கிறாள் என்றால் சும்மா இருப்பார்களா? இதுவரை அவள் வாழ்வில் பார்க்காத பெற்றோர்களின் முகங்களை பார்த்தாள். ஒரு வார காலம் எவ்வளவு பேசியும் சம்மதிக்காத சாமிநாதன் கடைசியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

எப்படியோ காப்பாற்றிய இரு பெண்கள் மருத்துவமனையில் சேர்க்க, “அவன் தான் வேணும்னா எனக்கு கொள்ளி வச்சிட்டு போ.” என்று விட்டார் முடிவாக.

நான்கு பக்கமும் தீ சூழ்ந்து கொண்டது போல் தத்தளித்தவள் தன்னை காப்பாற்றிக் கொள்ள வழி தெரியாது காதலனிடம் விவரத்தை கூற, அன்று அவளை விட்டு விலகியவன் தான்.

பெற்றோர்கள் ஒரு பக்கம் புதிதாக முளைத்த காதல் ஒரு பக்கம் என பெண்ணவளை துயரம் வாட்டி எடுத்தது. அவள் மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்ட பெற்றோர்கள் திருமண வேலைகளை செய்ய துவங்கி விட்டனர். மகள் காதல் விவகாரம் தெரிந்ததும் நிதானம் காட்டாமல் அதிரடியாக அனைத்தையும் செய்தார்கள். மாப்பிள்ளை புகைப்படத்தை கூட பார்க்க விரும்பாதவள் இன்னும் சில நொடிகளில் மணமேடையில் அமரப் போகிறாள்.

“மரணம் ஒன்னு தான் இனி எனக்கான துணை.” என்றவனின் வாசகம் மனம் முழுவதும் நிறைந்து மூளையை மழுப்பியது.

படித்தவளாகவும் யோசிக்காமல் பெற்று வளர்த்தவர்களுக்கு பிள்ளையாகவும் யோசிக்காமல் காதலனுக்கு காதலியாக மட்டுமே யோசித்தாள். அவளுக்கான நொடி குறைவு என்பதால் விறுவிறுத்தது மொத்த உடல். லேசாக கதவை திறந்து வெளியில் எட்டிப் பார்த்தவள் உடனே கதவடைத்துக் கொண்டாள்.

கழிவறை சென்று கண்ணாடி ஜன்னல்களை கழட்டி குதிக்க முயன்றவள் கையெல்லாம் ரத்தம் பீறிட்டது. சற்று சர்க்கரை நிறம் கொண்டவள் ரத்த நிறத்தை கூட பொருட்படுத்தாமல் எகிறி குதித்தாள். முயற்சிக்கும் வரை இருக்காத பயம் விழும் நொடி வந்துவிட கண்கள் இருண்டது.

“திக்! திக்!” ஓசையோடு மண்ணில் தான் விழப் போகிறோம் என்றவள் எண்ணம் தவிடு பொடியானது யாரோ ஒருவனின் கையில் விழுந்ததில். இரு நொடி இதயத்தை அமைதி படுத்தியவள் பயத்தோடு விழித்திறக்க, கொடூர முகமூடி அணிந்தவன் கைகளில் இருந்தாள். விழிப்பகுதி மட்டும் நன்றாக தெரிந்தது. ஆனால் அந்த விழியில் தான் நன்மை இல்லை.

ரத்தத்தில் நஞ்சுவை கலந்த ரசாயனம் போல் வீரியம் கொண்டு சிவந்திருந்தது. விழிக்குள் இருக்கும் கருவிழி அடர் கருமை நிறத்தில் அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. இமை முடி அதிகம் சூழ்ந்த அந்த கண்ணில் அவ்வளவு கொடூரம். அதை கண்டதும் அலறியவள் துள்ளி குதித்து விடுபட முயற்சிக்க, இடம் கொடுக்கவில்லை அந்த உருவம்.

பயத்தை விடுத்து கத்த ஆரம்பித்ததும் வாயை மூடினான். “ம்ம்…ம்ம்…” என்பதை தவிர அந்த விடியற்காலை இருட்டில் வேறொன்று கேட்கவில்லை. தன்னை தற்காத்துக் கொள்ள அவன் கைகளைக் கடிக்க முயன்றவள் பற்கள் உடைந்து போகும் அளவிற்கு வலித்தது.

கையுறை சாதாரண துணி போல் இல்லை. அதை உணர்ந்தவள் மெல்ல அவன் உருவத்தை உற்று நோக்க ஆரம்பித்தாள். அதை கண்டு கொண்டவன்,

“ஹா…!ஹா…!” என கொக்கரித்தான்.

அந்த கனீர் சத்தம் முகமூடியும் சாதாரணம் இல்லை என்பதை உணர்த்தியது. மேற்கொண்டு தன்னை ஆராய்வதற்குள் அவளை சுவற்றில் சாய்த்து நிற்க வைத்தவன் கையில் வடியும் ரத்தத்தை வாசம் பிடிக்க அருகில் சென்றான்.

தன்னருகே அவனின் மூச்சுக்காற்றை உணரவில்லை என்றாலும் உருவத்தை உணர்ந்து முகத்தை திருப்பிக் கொள்ள, “இந்த ரத்த வாடையை முகர்ந்து பார்க்கணும்னு எவ்ளோ நாள் ஆசை தெரியுமா. உலகத்திலேயே எனக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாடு உன் ரத்தம் தான்.” என்றான்.

தன் கை கொண்டு அவன் முகமூடியை கழற்ற முயற்சித்தாள். சிறிது நேரம் வெறுப்பேற்றி விளையாடியவன் வாயில் இருந்த கையை எடுத்துவிட்டு அள்ளித் தோளில் போட்டான். சத்தமிட வாய் திறந்தவள் அவன் உடையில் இருந்த மயக்க மருந்தால் விழி சுருங்கி தோளில் தொங்கிக்கொண்டு சென்றாள்.

***

பெரும் ஈசல் சத்தத்தில் விழித்திருந்தவளுக்கு எங்கும் இருட்டு. உடல் வலி வாட்டி எடுக்க அசைய நினைத்தவள் உணர்ந்து கொண்டாள் கை கால்கள் கட்டப்பட்டு இருப்பதை. எங்கிருக்கிறோம் என்ற அச்சத்தோடு எப்படியோ எழுந்தமர்ந்தவள் பயம் கொண்டு வாயை கட்டி இருக்கும் துணியை எடுக்க முயலும் நேரம் எங்கோ இருந்து வெளிச்சம் தென்பட்டது.

உடனே கடத்தப்பட்டவள் பார்வை அங்கு சென்றது. வெள்ளை நிற விளக்கின் வெளிச்சத்தில் நிழல் கால்கள் தென்பட்டது. பயந்து அப்படியே விழி உயர்த்த அந்த உருவம் முழுதாக வந்து நின்றது. வேர்த்து கொட்டும் முகத்தை துடைக்க முடியாது அஞ்சு நடுங்கிய பாவை அமர்ந்தவாறு பின் நகர, அவசரம் காட்டாமல் பொறுமை நடையிட்டவன் அவள் அருகில் ஒரு கால் மடக்கி குனிந்தான்.

கடத்தும் பொழுது அவ்விழியில் என்ன குரோதத்தை கண்டாளோ அவை சிறிதும் குறையவில்லை இப்பொழுதும். சிறு வெளிச்சம் தான் என்றாலும் அந்தக் கண் அவளுக்குள் ஆழ்ந்து பதிந்தது. வாயில் இருக்கும் துணியை கழட்டியதும் கத்த நினைத்தவளை,

“உஷ்ஷ்ஷ்!” மிரட்டலான சத்தம் பின்வாங்க வைத்தது.

“சத்தம் வந்துச்சு அடுத்த நொடி உன் உயிர் இந்த மண்ணுல இருக்காது.” என்றவன் அவள் கையால் வாயை மூடிக்கொள்ள சைகை செய்தான்.

செய்யாமல் பிரார்த்தனா முழிக்க, கைகள் மீது பார்வை சென்றது. தப்பிக்கும் பொழுது காயம் ஏற்பட்டு பீறிட்ட ரத்தங்கள் காய்ந்திருந்தது. அந்த காய்ந்த இடத்தை விட்டுவிட்டு காயம் பட்ட இடத்தை கிளறினான். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிகப்பு சாயம் கொப்பளித்தது.

“ஆஆஆ…ஹா..ஆ” துடித்தாள்.
அதைக் கண்டதும் காற்றை மட்டும் வெளியிட்டு மூச்சால் சிரித்தவன் ரத்தம் வந்த கைகளை இறுக்கப் பிடித்து, “சொன்னதை செய்யலனா நான் சொன்னதை செய்ய வேண்டி வரும்.” என்றிட, வலியை கூட பொருட்படுத்தாமல் வாயை மூடி கொண்டாள்.

“ம்ம்! இதான் எனக்கு வேணும். இந்த மாதிரி நான் சொல்றதை தட்டாம செஞ்சிட்டேனா இங்க இருந்து எந்த சேதாரமும் இல்லாம போகலாம்.” என அவள் எதிரில் நன்றாக அமர்ந்தான்.

பிரார்த்தனா மரண பயத்தில் பார்த்திருக்க, “எதுக்கு உன்ன கடத்துனன்னு தெரியுமா?” கேட்டான்.

பயத்தில் இருப்பவள் பதில் கூற முடியாமல் அவனையே பார்த்திருக்க, “தெரியுமா… தெரியாதா?” என்றான் அவ்வறை அலற.

“ஹாக்!” என துடித்து வேகமாக மறுத்து தலையசைக்க, “இதோ இந்த ரத்தம் உன் உடம்ப விட்டு மொத்தமா வெளி வரணும். உயிர் இல்லாத உடலை மண்டபத்துக்கு அனுப்பி வைக்கணும்.” என கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியை எடுத்து அவள் கழுத்தில் வைத்தான்.

தேசம் தொடரும்
அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்