Loading

பச்சை இலைகளின் நடனத்தை ரசித்தபடி வருடிச் சென்றது நவம்பர் மாதத் தென்றல்.

மலையடிவாரத்தின் குளுமை கோயம்புத்தூரின் புறநகரப் பகுதியை மேலும் குளிர்விக்க, உயர்தர கட்டட வடிவமைப்பின் எதிரொலிப்பாய் கம்பீரமாய் வீற்றிருந்தது, அந்த சொகுசு முதியோர் இல்லம்.

அக்ரம் சொகுசு இல்லம்!

பளிங்கு கற்களால் பளபளத்தது பெயர்ப்பலகை.

அதீத பணத்துடன் தனித்து இருக்கும் முதியோர்கள் தானாகவே இங்கு வந்து இணைந்து விடுவர்.

இங்கு ஒவ்வொருவருக்கும் விருப்பப்படி தனி தனி காட்டேஜுகளுடன், ஒரு லக்சுவரி சுற்றுப்புறத்தையும் வாழ்க்கை முறையையும் கொடுப்பதே அக்ரம் அமைப்பின் வேலை.

பெரியவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கென்றே ஹை – ஃபை வசதி கொண்ட உடற்பயிற்சி கூடமும், தினமும் மெடிக்கல் செக்கப் செய்வதற்காக அவசர கால சிகிச்சைகளுக்கென மினி மருத்துவமனையும் இருந்தது.

அங்கு அனைத்து துறையிலிருந்தும் சிறப்பு பெற்ற மருத்துவர்களும் தாதியர்களும் இருந்து கொண்டே இருப்பர்.

அந்த இல்லத்தில் இருக்கும் முதியவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மருத்துவமனையில் தேவையான படுக்கைகளும் எப்போதும் தயாராக இருக்கும்.

பார்க், நடைப்பெயர்ச்சிக்கென தனி இடம், மெடிடேஷன் செய்ய ஓர் கூடம், ஷாப்பிங் மால் என அனைத்தும் ஒரு சேரக் கொண்டது.

சில நேரங்களில், பெரியவர்களின் ஆசைக்கிணங்க சிறு சிறு பயிற்சி வகுப்புகளும் கூட நடைபெறும்.

அப்படித்தான் கடந்த இரு மாதங்களாய், சில முதிய பெண்மணிகளின் விருப்பத்தின் பெயரில் தையல் வகுப்புகள் நடைபெற்றது.

ஆண்களுக்கும் பெண்களுக்குமான தனி தனி காட்டேஜ் தான் என்றாலும், கோ – எட் பள்ளி மாணவர்கள் போல அடிக்கடி குட்டி கலாட்டாக்களும், செல்ல சண்டைகளும் அவ்வப்பொழுது அரங்கேறும்.

“என்ன ஜெயசுதா… வீம்பு பிடிச்சு காலம் போன காலத்துல தையல் கத்துக்கிட்டியே, எனக்கு ஒரு கோர்ட்டு தச்சு கொடுக்குறது!” மரத்தடி நிழலில் கையில் ஊசி நூலுடன் அமர்ந்திருந்த அறுபது வயது இளம் பெண்மணியை சீண்டினார் தேவாரம். அறுபத்தைந்தை நெருங்கிய சுறுசுறுப்பான இளைஞன்.

“தேவாரம்ன்ற பேருக்கு கோர்ட்டு வராது, கர்சீப் வேணும்னா வரும்” ஜெயசுதா நொடித்துக் கொள்ள,

“அடேயப்பா… உனக்கு கர்சீப் மட்டும் தான் தைக்க தெரியும்னு சூசகமா சொல்றியாக்கும்” என வாரியதில் ஜெயசுதாவிற்கு புசுபுசுவென கோபம் வந்தது.

“தானும் உருப்படுறது இல்ல. அடுத்தவங்களையும் உருப்பட விடுறது இல்ல சில பெருசுங்களுக்கு இதே வேலையா போச்சு…”

“ஆமா நாங்க பெருசு… இந்த அம்மா இப்ப தான் பருவம் அடைஞ்சுருக்கு. நீயும் அதே கெழம் தான்.”

இருவரும் வாக்குவாதத்தில் இருக்கும்போதே, அவர்கள் வயதை ஒத்த குருமணியும், விஜயாவும் வந்து இருவருக்கும் இடையில் அமர்ந்தனர்.

“இன்னைக்கு என்ன இன்டரஸ்டிங் டாபிக் போயிட்டு இருக்கு?” குருமணி நக்கலாய் வினவியதில்,

“குரு உன் ப்ரெண்டுட்ட சொல்லி வைடா. என் பேஷனை கிண்டல் பண்ணுனா நான் அமைதியா இருக்க மாட்டேன்” என ஜெயசுதா சிலுப்பிட, தேவாரம் வாய் விட்டே சிரித்தார்.

விஜயாவோ, “சிரிச்சு அவளை வெறுப்பேத்தாத ரம்மு!” எனச் சிரிப்பை அடக்கிக் கொண்டே கூற,

“சிரிக்காம என்ன செய்ய சொல்ற விஜி. பேஷன்னா ஏதாவது ஒன்னு தான் இருக்கணும். இவ மாசத்துக்கு ஒரு க்ளாஸ் போறா, க்ளாஸ் முடிஞ்சதோட அவ்ளோ தான் அது” என நக்கலடித்ததில்,

“உன் அப்பா வீட்டு சொத்தா போகுது?” ஜெயசுதா பொருமினார்.

“சொத்து இருக்கட்டும். நிம்மதி போகுதே. உன் பேஷன்னா நீ மட்டுமா கத்துக்குற. எங்களையும் தான டார்ச்சர் பண்ற… உன்னால தையல் கத்துக்குறேன்னு இதோ பாரு” என விரலைக் காட்டியவர், “ஊசியை வச்சு என் விரலை குத்தி குத்தி ஓட்டையே விழுந்துடுச்சு” என்றார் பாவமாய்.

அதில் ஜெயசுதாவிற்கும் சிரிப்பு பீறிட, “கண்ணு மங்கலாகிட்டே வருதுல அதான் உனக்கு ஊசியே ஒழுங்கா கோர்க்க தெரியல…” என்றதில்,

“ஆமா உங்க கண்ணு அப்படியே பளிச்சுனு தெரியுதோ. அதுவே பல லேசர் பண்ணி பட்டிங் டிங்கரிங் தான பார்த்துருக்காங்க…” எனக் கிண்டல் செய்ததில் மீண்டும் ஆரம்பித்தது அவரது போர்.

விஜயாவோ தலையில் கையை வைத்து, “அடக்கடவுளே நான் எல்லாம் என் மருமககிட்ட கூட வாக்குவாதம் செஞ்சது இல்லபா. நீங்க என்னன்னா மாறி மாறி பேசி தலைவலியே வருது. உங்க வீட்டு பசங்கலாம் பாவம் தான்…” என்று சிரித்ததில் இருவருமே ஓர் நொடி அமைதியாகி விட்டனர்.

இந்தப் பேச்சுகளும் கிண்டல்களும் உரிமைகளும் இங்கே வந்த பின்னால் தானே!

அதிலும் தேவாரம் எல்லாம் இங்கு வந்த முதல் இரு வருடத்தில் தேவையுடன் கூட யாரிடமும் பேசியதில்லை.

ஜெயசுதாவோ, அவரது காட்டேஜை விட்டே வந்ததில்லை.

இவர்களை எல்லாம் சாதாரணமாய் பேச வைத்தவன் அவன்!

இப்போது, இவர்களுக்குள் தோன்றிய நட்பிற்கும் அன்பிற்கும் காரணமானவனும் அவன் தான்.

வீட்டைப் பற்றி பேசி, அவர்களை ‘மூட் அவுட்’ செய்ய வைத்தது புரிந்த விஜயா, மானசீகமாக தன்னையே அறைந்து கொண்டார்.

குருமணியோ விஜயாவை முறைத்து விட்டு, “இப்ப சுதாவோட வேலையை விஜி எடுத்துருக்கா” எனக் கிண்டலாய் ஆரம்பித்ததில் மூவருமே என்னவென பார்த்தனர்.

‘அய்யயோ! ஏதோ சமாதானம் செய்யணும்னு ஆரம்பிச்சு இவளை கோர்த்து விட்டுட்டோமே’ எனப் பதறி, “அது வந்து விஜிக்கு யோகா கத்துக்கணுமாம்” என்றிட, விஜயா வாயில் கை வைத்தார்.

“நான் எப்படா?” என ஆரம்பிக்கும்போதே அவர் கையைப் பிடித்துக் கொண்ட குருமணி, “இந்த வயசுல தலைகீழா நிக்க சொல்லுவாங்க. நின்னுடுவியா விஜி?” எனப் பரிதாபமாய் கேட்க, விஜயா பற்களை நறநறவென கடித்தார்.

ஜெயசுதாவோ ஊசி நூலை கீழே போட்டு விட்டு, “ஹே எனக்கும் யோகா பண்ணனும்னு ஆசைப்பா” என்றதில் “போச்சுடா…” என்று தேவாரம் கன்னத்தில் கை வைத்ததில் அங்கு கொலுசொலியாய் சிரிப்பலை எழுந்தது.

——-

“மூர்த்தி… தம்பி எங்க?” பெரியவரின் குரல் கேட்டதும் பதறி அடித்து ஓடி வந்தான் சமையல்காரன் மூர்த்தி.

“சின்னையா, பெரியய்யா ரூம்ல இருக்காருய்யா. வர சொல்லுட்டங்களா?” வெகு பவ்யமாய் வெளிவந்த வார்த்தைகளில் கோபம் பீறிட்டது சிவக்குமாருக்கு.

“இந்த வீட்ல சின்னையா பெரியய்யானு யாரும் இல்ல மூர்த்தி. ஒரே வாரிசு. என் சின்ன மகன் மட்டும் தான். அந்த ரூமை பூட்டி வைக்க சொன்னேனே. யார் திறந்தது?” சிவக்குமார் கர்ஜிக்க, அவரது சத்தத்தில் வேகமாய் அங்கு வந்த அவரது மனைவி நிவேதா,

“ஏங்க இவ்ளோ டென்சன் ஆகுறீங்க. பிபி கூடிடும்” என்றார் வருத்தமாய்.

“இதுக்கு மேல கூடுறதுக்கு என்ன இருக்கு?” எரிச்சலாய் மொழிந்தவர், தனது இளைய மகனின் அழுத்தக் காலடியோசை கேட்டதில் மெல்ல தணிந்து விட்டார்.

“சின்னவன் வர்றான். அமைதியா இருங்க” நிவேதா கிசுகிசுக்க,

“எனக்குத் தெரியும் நீ போ” அவரும் அதே கிசுகிசுப்பை பின்பற்றி கூறியதில் நிவேதாவிற்கு சிரிப்பு பீறிட்டது.

“அப்படியே மெதுவா பேசுங்க” என்று கணவரைக் கிண்டல் செய்து விட்டுச் சென்றதில் சிவக்குமார் முறைத்து வைத்தார்.

தான் அணிந்திருந்த பிராண்டட் பழுப்பு நிறச் சட்டையின் கைப்பகுதி பட்டனைப் போட்டபடி தந்தையிடம் வந்தான் அவன்.

இறுக்கமான இதழ்கள்! இன்றேனோ மறந்தும் இறுக்கம் தளர்த்த பிடித்தமின்றி இறுகிப் போயிருக்க, தந்தையை நோக்கி அழுத்தப்பார்வை பார்த்தான் அக்னி வேந்தன்.

“என்ன சத்தம்?” என்ற கேள்வி அதில் பொதிந்திருந்தது புரிந்தாற்போல, “சும்மா பேசிட்டு இருந்தேன்பா… மூர்த்தி டிபன் ரெடியா? எடுத்து வை…” என்று பேச்சை மாற்றிட மூர்த்தி தலையைச் சொறிந்து கொண்டு அடுக்களைக்குச் சென்றார்.

“அதெல்லாம் சாப்பாடு ரெடி தான். வாங்க சாப்பிடலாம். அக்னி வாப்பா” நிவேதா அழைக்க, அவனும் தாயின் பேச்சைத் தட்டாமல் வந்து விட்டான்.

சில நொடிகளுக்கு மேலே பொறுக்க இயலாத சிவக்குமார், “எதுக்கு அந்த ரூமை திறந்த?” என்றார். அதில் ஆதங்கமும் அடங்கி இருந்தது.

அவரை நிதானமாய் ஏறிட்ட அக்னி வேந்தன், “நம்ம ஹோம் சம்பந்தமான ஒரு பைல் காணோம். அங்க இருந்துச்சு…” என்றான் எளிமையாய்.

“ம்ம்!”

அதன்பிறகு சிவக்குமாரிடம் இருந்து எந்த பேச்சும் இல்லை.

நிவேதா உணவை எடுத்து வைத்து விட்டு அடுக்களையில் நின்று கொண்டார்.

பெற்ற மனம், அவர்களை போல ஆத்திரத்தை சேமிக்க அனுமதிக்கவில்லை.

எப்போதும் போல இன்றும் உள்ளம் குமுறியது. கூடவே சிறு தாங்கலும்.

‘பெரியவன் அப்படி என்ன தப்பு பண்ணிட்டான்? பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஓடிப்போய் கல்யாணம் பண்ணிட்டான் தப்பு தான். ஊர் உலகத்துல யாருமே பண்ணலையா. அப்பறம் வந்து சேரலையா… அதே மாதிரி என் பையனையும் சேர்த்துக்கிட்டா என்ன தான் பிரச்சினை இவங்களுக்கு…’ என உள்ளுக்குள் பொருமினார்.

அவருக்கு இருக்கும் வேதனையும் வலியும் அவரை விட அக்னி வேந்தனுக்கு அதிகமாகவே இருக்கிறதென்றும் தெரியும் தான்.

தமையனின் மீது ஒட்டு மொத்த அன்பையும் குவித்து வைத்திருந்தானே! தன்னை ஒரு பொருட்டாக நினையாது ஏதோ ஒரு பெண்ணிற்காக உதறி விட்டுச் சென்றது அவன் மனதில் தீராக் காயமாக பதிந்து விட்டது.

“என்ன நிவேதா… இங்க நின்னு வேடிக்க பார்த்துட்டு இருக்க?” தனது மாமியாரின் குரலில் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவர் பரபரத்தார்.

“அத்த… சும்மா தான். நீங்க ஏன் வந்தீங்க. நானே சாப்பாடு எடுத்துட்டு வந்துருப்பேனே” எனப் பதற்றத்துடன் தட்டை எடுக்க, “மணி ஒன்பதை தாண்டியும் சாப்பாடு வரல. அதான் நானே வந்தேன்…” என்றவர் சண்டை போடுவது போல குரலை உயர்த்தி இருந்தார்.

அவரது பேச்சே அப்படித் தான். இத்தனை வருடமாய் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்தும் நிவேதாவின் மீது பழி போடவில்லை என்றால் அவருக்கு அன்று உறக்கமே வராது. பேசியபடி டைனிங் ஹாலுக்கு வந்து விட்டார் சவுந்தரவல்லி.

நிவேதாவிற்கோ இன்னைக்கு ஒரு பஞ்சாயத்து கன்ஃபார்ம் என்ற பதற்றம் இருக்க, அக்னி நொடியில் நிலையை உள்வாங்கி கொண்டு, “பாட்டி நான் தான் இன்னைக்கு உங்க கூட சாப்பிடலாம்னு சொல்லிருந்தேன் அம்மாட்ட. உங்களை கூப்பிடலாம்னு ரூம்க்கு வந்தேன். நீங்க பாத்ரூம்ல இருந்தீங்க… உக்காருங்க” என்று தனது எதிர் இருக்கையைக் காட்ட, அத்துடன் அவரது சத்தம் அமிழ்ந்து விட்டது.

அவன் இருக்கும் நேரம், நிவேதாவை ஒரு வார்த்தை பேசி விட்டாலும் அதை கடுமையாய் எதிர்த்து விடுவான்.

பெரியவனுக்கு அந்த சூது வாது இருக்காது. பெரியவர்கள் அதட்டினால் கண்ணீர் மளமளவென கொட்டிவிடும் அளவு இளகிய மனம் கொண்டவன். அப்படிப்பட்டவன் குடும்பத்தை உதறிவிட்டுச் சென்றது எத்தகைய வேதனை!

“என்கூட சாப்பிடனும்னு எனக்கு முன்னாடி சாப்பிட்டுட்ட?” பேரனை குறுக்கு விசாரணை செய்த சவுந்திரவல்லியிடம், “இன்னைக்கு சாப்பாடு டேஸ்ட் நல்லாருந்துச்சு. அதுனால சீக்கிரம் சாப்பிட்டுட்டேன்” கண்ணுக்குத் தெரியாத சிறு நகை மின்ன எழுந்தான்.

ஆக, காலை உணவு நன்றாக இல்லையென்றும் சண்டை இழுக்க இயலாது!

நிவேதா உதட்டைக் கடித்துச் சிரித்துக் கொண்டார்.

பேரன்பின் பிம்பம் அக்னி வேந்தன். அந்த அன்பின் ஆழம் போன்றே பேரழுத்தக்காரனும் கூட!

—–

“நீ சொல்லு…”

“நீ சொல்லு!”

“ப்ச் நீ சொல்லு ரம்மு…”

“உனக்கு தான வேணும். அப்போ நீயே கேளு விஜி”

தேவாரம், ஜெயசுதா, விஜயா, குருமணி நால்வரும் ப்ரின்சிபல் அறைக்கு வரும் மாணவர்கள் போல திருட்டு முழியுடனும், கிசுகிசுப்பான உரையாடல்களுடனும் அவன் முன்னே நின்றிருந்தனர்.

அவர்களின் வரவு அறிந்தும் குனிந்த தலையை நிமிர்த்தாது ஒரு கோப்பில் புதைந்திருந்த அக்னி வேந்தன், ஒற்றை விரலை இதழ்களில் மறைத்து சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

“தம்பி…” ஜெயசுதாவே அழைத்து விட, அதன்பிறகே நிமிர்ந்தவனாக “ஹே சுதா… என்ன இந்தப் பக்கம்! எல்லாரும் ஒண்ணா வந்துருக்கீங்க. எதுவும் பிரச்சினையை இழுத்துட்டீங்களா?” என்று கண்ணை உருட்டிக் கேட்டான்.

“ஐயோ அதெல்லாம் இல்ல அகி” தேவாரம் மறுத்ததும், “சரி அப்பறம் என்ன?” என்றான் பேனாவை மூடி வைத்து விட்டு.

கையைப் பிசைந்து கொண்டிருந்த விஜயாவைக் காட்டிய குருமணி, “எங்களுக்கு ஒன்னும் இல்ல இவளுக்கு தான் ஏதோ வேணுமாம்…” என்றதில், விஜயா அவரது கையை நறுக்கென கிள்ளினார்.

“ஆஆ…” குருமணி கத்தி விட, அக்னி வேந்தன் முயன்று சிரியாமல் கட்டுப்படுத்திக் கொண்டான்.

“சரி நீங்க என்ன பேசணும்னு டிஸ்கஸ் பண்ணிட்டு வாங்க” என்று விட்டு மீண்டும் கோப்பை திறக்க, “இல்லப்பா! ஒரு நிமிஷம்” என தேவாரம் தடுத்து விட்டு, “யோகா க்ளாஸ் அரேஞ்ச் பண்ணனும்” என்றார் நெளிந்து.

“ஹ்ம்ம்! ஆல்ரெடி எக்ஸர்சைஸ் பண்றேன்னு மூணு மாசத்துக்கு முன்னாடி காலை உடைச்சுக்கிட்டது மறந்துடுச்சா உங்களுக்கு?” கண்டிப்பாய் கேட்டான் அக்னி வேந்தன்.

ஜெயசுதா பக்கென புன்னகைத்து வைக்க, அவரை முறைத்த தேவாரம், “சும்மா சிம்பிள் யோகா சொல்லிக் குடுத்தா போதும். விஜி தான் கேட்டா” என்று மாட்டி விட்டார்.

அவரும் “ஆமா தம்பி… காலெல்லாம் ஒரே வலி. என்ன தான் வாக்கிங் போனாலும் யோகா பண்ணணுமாமே. யூடியூப்ல சொன்னாங்க. ஆனா யூடியூப்ல பார்த்து பண்றது போரா இருக்கு. ஏதாவது டீச்சர வர சொன்னா, எங்களுக்கும் பொழுது போகும்ல…” என்று சிரித்து வைக்க,

“உங்களுக்கு யாரையாவது வெளில இருந்து வரவச்சு, அவங்களை வம்புக்கு இழுக்கனும். அதுக்கு இது ஒரு காரணம்” என்றான் அவர்களை கணித்து.

“அச்சோச்சோ! நாங்க எதுவும் வம்பு இழுக்க மாட்டோம் அகி” ஜெயசுதா வாயை மூடிக்கொள்ள,

“ஹான்… ஆல்ரெடி உங்களுக்கு தையல் சொல்லிக் குடுக்க வந்த பொண்ணுகிட்ட என்ன சொன்னீங்க?” அர்த்தமாய் பார்த்து வைத்தான்.

“ஒண்ணுமே சொல்லலை தம்பி. கல்யாணம் ஆகிடுச்சானு தான் கேட்டோம். இல்லடா ரம்மு” என்று ஜெயசுதா தேவாரத்தையும் துணைக்கு அழைக்க, அவரும் திருதிருவென விழித்தபடி தலையாட்டினார்.

“நாலு பேர் மண்டையையும் பொளந்துருவேன். தையல் சொல்லிக் குடுக்க வந்த பொண்ணை என்கூட மேட்ச் பண்ணி மேட்சிங் பண்ண பார்க்கல நீங்க?” போலிக் கோபத்துடன் கண்ணைச் சுருக்கி கேட்டான்.

அசடு வழிந்த நால்வரில் விஜயா, “நீயும் சிங்கிள், அவளும் சிங்கிள். பாக்கவும் அழகா இருந்தா. நல்லா சமைக்க கூட தெரியுமாம் தம்பி. அதுவும் உனக்கு பிடிச்ச வட்லாப்பம் சூப்பரா செய்யுமாம் அந்தப் பொண்ணு” என கன்னத்தில் கை வைத்து அதிசயமாய் கூற, அக்னி வேந்தனின் கண்களில் இருந்து அக்கினிகுண்டலமே வெளிவந்ததில், நால்வரும் தெறித்து வெளியில் ஓடினர்.

போதை தெளியும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
25
+1
3
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்