
அத்தியாயம் 4
அலுவலக அறையில் அமர்ந்திருந்த கீதனின் முகத்தில் இருந்த பிரகாசம் அதிரனுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது.
“என்ன மச்சி முகம் எல்லாம் டாலடிக்குது?”
“ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைச்சா டாலடிக்க தான் செய்யும்டா.. உனக்கு அனு கிடைச்ச மாதிரி” என்றவன் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தான் அலைபேசியை பார்த்து கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்த அழைப்பு வரவே இல்லை.
அதை பார்த்த அதிரன் அனுவுக்கு அழைக்க அவள் அழுது கொண்டே நடந்ததை சொன்னாள். அதிரனுக்கு கஷ்டமாக இருந்தது. ஒருவேளை கீதன் சரி ஆகிவிடுவான் என்றால் கனியை சமாதான படுத்தலாம். ஆனால் நிச்சயம் இல்லாத ஒன்றிற்கு எதை சொல்லி சமாதான படுத்துவான்?
கீதனின் முகவாட்டம் கூட அவனை கஷ்டப்படுத்தியது. பேசாமல் சொல்லி விடுவோமா என்று எண்ணியவன் பின் நடக்கும் விபரீதத்தை அறிந்து அமைதியானான்.
கனிமொழியோ கீதனுக்கு சிகிச்சை செய்யும் மருத்துவர் முன் அமர்ந்திருந்தாள். அவனின் மருத்துவ குறிப்பேடுகளை அவர் முன் வைத்தவள் “டாக்டர் நீங்க ஏன் இதை இன்னும் அவருக்கு சொல்லல? அவர் மனதால் ரெடி ஆக கொஞ்சம் நேரம் கொடுக்கலாமே.. சட்டுன்னு தெரிந்தால் இன்னும் அதிர்ச்சி அதிகம் தானே ஆகும்..” என்று கேட்டாள்.
“கண்டிப்பா மிசஸ் கீதன்.. அவனுக்கு உண்மை தெரிந்தால் கண்டிப்பா விபரீத முடிவெடுப்பான்.. சிறுவயதில் இருந்தே அவனை பார்த்துட்டு இருக்கேன் நான்.. உன்னை கல்யாணம் கூட பண்ணிருக்க மாட்டான்.. அவனுக்கு அடுத்த முறை இந்த விஷயத்தை பற்றி சொல்ல தான் போறேன்.. ஆபரேஷன் பண்ணினால் குணப்படுத்த வாய்ப்பு இருக்கு.. ஆனால் சிலசமயம் கோமா நிலைக்கும் போகவும் சான்ஸ் இருக்கு” என்று சொல்ல கனிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
சிறிது நேரத்தில் தன்னை நிலைப்படுத்தியவள் “டாக்டர் நான் அவரோட கேஸ் ஹிஸ்டரி பத்தி தெரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டாள்.
“கண்டிப்பா மிசஸ் கீதன்.. மூளையில் இருக்கும் உயிரணுக்களின் வளர்ச்சி அசாதாரணமாவதால் இந்த உயிரணுக்களின் தடையற்ற வளர்ச்சியால் மூளையில் கட்டிகள் வருகிறது. இந்த கட்டிகள் எல்லாமே புற்றுநோயாக மாறுவது கிடையாது. புற்றுநோய் அல்லாத கட்டிகள் எல்லாம் ரொம்ப கேடு வர வைக்காது. இது மெதுவாகவளரும் தன்மை கொண்டவை. சிகிச்சை பிறகும் இவை மிக அரிதாக மீண்டும் வரக்கூடும். புற்று நோயை உண்டாக்கும் கட்டிகள் மூளைக்குள் வளர்ந்து பிற பகுதிகளை வேகமாக தாக்கும் அல்லது வேறு எங்காவது தொடங்கி மூளையை தாக்கும். இவை உண்டாகும் இடமும் அவை வளரும் விதமும் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை உண்டாக்கும். இப்போ வரைக்கும் கீதனுக்கு புற்று நோயா மாறல. கடைசி இரண்டு முறை செக் பண்ணும் போதும் அவன் நார்மலா தான் இருந்தான். பட் பயங்கரமா தலைவலி இருந்துச்சு. அதற்காக மருந்து கொடுத்திருந்தேன். அடுத்த செக்கப் பண்ணும் போது தான் அது புற்று நோயாக மாறியிருக்கான்னு தெரிய வரும். இப்போதைய அவனோட மனநிலைக்கு அமைதி ரொம்ப முக்கியம். உன்னை என்ன சொல்லி கல்யாணம் பண்ணி வச்சாங்கன்னு தெரியல. பட் அவனுக்கு கொஞ்சம் சப்போர்ட்டிவ் ஆக இரு. அவன் உன்னை ரொம்ப நேசிக்குறான். புற்று நோயை விட உன் பிரிவு அவனுக்கு அதிக அதிர்ச்சியை கொடுக்கலாம்” என்று கூற “ஓகே டாக்டர் தேங்க்ஸ்” என்றவள் அவனின் பைலை எடுத்து கொண்டு வெளியே வந்தாள்.
அனைவரும் அவனின் நிலையையே யோசிக்க தனக்காக யோசிக்க ஒரு ஜீவன் இல்லையே என்று வருந்தினாள். கணவனை ஒழுங்காக புரிந்து கொள்ளவில்லை என்பதற்கு இதுவே சாட்சி. ஆனால் அவள் கணவனோ வீட்டில் “கனி.. கனி..” என்று அவள் பெயரை ஏலம் போட்டு கொண்டிருந்தான்.
திருமணம் ஆன மறுநாளே வேலைக்கு சென்றவனுக்கு தன் மனைவி இன்னும் போன் பண்ணவில்லை என்கவும் சிறிது நேரம் பொறுத்து பார்த்தவன் அவளை தேடி வீட்டிற்கே வந்து விட்டான். காரை கூட ஒழுங்காக பார்க் பண்ணாமல் “கனி.. கனி” என்று அவளை கூப்பிட்டவாறே உள்ளே வந்தவனுக்கு அவனின் காதல் மனைவி பதில் தரவே இல்லை.
“அண்ணா என்னாச்சு?” அனு பதறி கொண்டு வர அவளை அவன் கண்டு கொள்ளவேயில்லை.
“கனி.. கனி..” என்று மாடிக்கு சென்று குளியலறை வரை தேடிப்பார்த்தவன் முகம் அவள் அங்கும் இல்லை என்றதும் வாடி விட்டது.
பெரிய தொழில் நடத்துபவன் தான். ஆனால் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததாலோ என்னவோ அன்புக்கு மிகவும் ஏங்குபவன். அவன் காதலித்து திருமணம் செய்தவளை ஒரு நொடி காணவில்லை எனினும் அவன் நெஞ்சம் பதறியது.
கீழே வரவும் அவனுக்கு எதிரில் வந்தாள் அனு. “அண்ணா என்னாச்சு? எதுக்கு இவ்ளோ பதட்டம்?”
“கனியை காணல அனு..” அவனின் பேச்சில் அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.
“அண்ணி வெளில போயிருக்காங்க அண்ணா.. நீங்க முதலில் அமைதியா இருங்க” என்றவள் அவனை சோபாவில் அமர வைத்தாள். அவனுக்கு தேவையான மருந்துகளை எடுத்து கொண்டு வரவும் கனி வீட்டினுள் நுழையவும் சரியாக இருந்தது.
அவனை அந்நேரம் வீட்டில் எதிர்பார்க்கவே இல்லை அவள். கட்டாய திருமணம் தான். ஆனால் அவனின் அன்பை நேற்று கண்டபின் காயப்படுத்த மனம் வரவில்லை அவளுக்கு.
“இவர் எதுக்கு இப்போ வந்தார்?” என்று யோசித்து கொண்டு உள்ளே வந்தவள் சட்டென கதவு சட்டத்தில் காலை இடித்து கொண்டாள்.
“ஷ்.. ஆ..” அவள் வலியில் முனக கீதன் அவசரமாக அருகில் வந்தான்.
“கனி என்னமா ஆச்சு? பார்த்து வந்திருக்க கூடாதா?” என்று அவளின் காலை தூக்கி பார்க்க அவளுக்கு வலி உயிர் போனது.
“ஆஆ.. வலிக்குதுங்க..” என்றவள் கையில் இருந்த பைலை சோபாவில் வைத்தவள் அனுவிடம் கண் காட்ட அவசரமாக அதை தன் கையில் எடுத்து கொண்டு உள்ளே சென்றாள் அனு.
“அனு சீக்கிரம் முதலுதவி பாக்ஸை எடுத்துட்டு வா” கீதன் கத்த “வரேன் அண்ணா” என்ற அனு எடுத்து வர கனியின் கால்களுக்கு மருந்திட்டவன் கண்கள் கலங்கி இருந்தன.
அதை பார்த்த கனி “எனக்கு ஒன்னும் இல்லைங்க.. நீங்க இவ்ளோ பதட்ட படுற அளவுக்கு ஏதும் இல்ல” என்று சமாதானப்படுத்த அதை கேட்கும் மனநிலையில் அவனும் இல்லை.
நமக்கு நெருங்கிய சொந்தத்தில் ஒருத்தருக்கு வலி என்றாலே கண்கள் கலங்கும். காதலித்து திருமணம் செய்து கொண்ட அவன் மனைவிக்கு சிறு அடி என்றாலே அவனின் நெஞ்சம் பதறியது. அவளுக்கு மருந்திட்டவன் மெதுவாக அவளை தங்கள் அறைக்கு அழைத்து செல்ல அவனின் அன்பில் கரைந்து அவனோடு சென்றாள் கனி.
அவளிடம் காதல் சொன்ன ரிஷியை கல்யாணம் செய்திருந்தால் கூட இவ்வளவு அன்பை அனுபவித்திருப்பாளோ என்னவோ இவனின் அன்பு அவளை மூச்சடைக்க வைத்தது. “போதும்ங்க.. எனக்கு வலிக்கவே இல்ல” என்று அவள் கூற அவளின் முன் மண்டியிட்டான் அவன்.
“என்னங்க இது?”
அவளின் சாரியை விலக்கியவன் அவளது இடுப்பை கட்டி கொண்டு வயிற்றில் முகம் புதைத்தான். அத்துணை நேரம் நின்று கொண்டிருந்தவளுக்கு அவனின் இந்த செயல் கூச்சத்தை வரவைக்க கட்டிலில் அமர்ந்தாள். அவள் முகம் செங்கொழுந்தாக சிவந்திருக்க கீதனின் கண்களில் அது படவே இல்லை. அவளின் விலகல் அவனின் முகத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது.
அதை கவனித்தவள் கட்டிலில் வாகாக அமர்ந்து காலை நீட்டி கொண்டாள். “இங்க வாங்க..” என்று அவனை அழைக்க அமைதியாக வந்து நின்றான்.
சட்டென அவனை இழுத்து தன் மடியில் படுக்க வைத்தவள் வயிற்றோடு சேர்த்து அணைத்து கொண்டாள்.
அவளின் செயலில் குழந்தையாய் குதூகலித்தவன் மனம் இன்னும் அவளுடன் இழைந்தது.
“ஹே கெட்ட பையா.. என்னாச்சு உங்களுக்கு? லவர் பாய் மூட்ல இருந்து சட்டுனு எதுக்கு சோக கீதம்?” அவன் தலைகோதி கேட்க அவனோ அதில் சுகமாய் மூழ்கியிருந்தான். அவனிடம் இருந்து பதில் வராமல் போகவே அவனின் நிலையை கண்டவளுக்கு பரிதாபமாக இருந்தது.
‘உங்களுக்கு இவ்ளோ பெரிய நோய் கடவுள் தராமல் இருந்திருக்கலாம்’ என்று நினைத்தவள் அவனின் காது மடலை கிள்ள அதில் சிலிர்த்து எழுந்தமர்ந்தான் அவன்.
“என்ன பிரச்சனை உங்களுக்கு?”
“நீ ஏன் இன்னைக்கு கால் பண்ல?”
“வாட்?” என்று அதிர்ந்தவளுக்கு வேறு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை.
அவளின் அமைதியை பார்த்தவனுக்கு ஏதேதோ எண்ணங்கள் மண்டைக்குள் குடைய தலை வலிக்க ஆரம்பித்தது. அவன் அழுத்தமாக நெற்றி பொட்டை பிடிக்க கனி பயந்து விட்டாள்.
“ஏங்க என்ன ஆச்சு? வலிக்குதா?” என்று மாத்திரையை தேட அது மேசையின் மேல் இருந்தது. அனு நேரப்படி எழுதி வைத்திருக்க எடுத்து அவனுக்கு கொடுத்தவள் அவன் மாத்திரையை விழுங்கியதும் தலை கோதி தூங்க வைக்க அவளின் மடியிலேயே துயில் கொண்டான் அவன்.
ஒருபக்கம் தன் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்று மருகினாலும் இன்னொரு பக்கம் அவனுக்காக ஏங்கியது. காதல் என்றால் என்ன என்பது அவளுக்கு தெரியாது. ஆனால் கீதனின் அன்பு அவளை எங்கேயோ இழுத்து சென்று விட்டது. அவன் நன்றாக இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தவளுக்கு இனி தானே அனைத்துமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.
அவன் தூங்கியதும் தலையணை வைத்து படுக்க வைத்தவள் கீழே வர அனு அவளுக்காக காத்திருந்தாள். கூடவே அதிரனும். அதை பார்த்தவளுக்கு அதிரனின் பங்கு இந்த வீட்டில் என்ன என்பது புரிந்தது.
“அண்ணா எப்படி இருக்காங்க அண்ணி?” என்று கேட்டவளை முறைத்தாள் கனி.
“எப்பவுமே உங்க அண்ணா மட்டும் தான் முக்கியம் இல்லயா?”
அவளின் கேள்வியில் அனு மற்றும் அதிரன் தலை தானாக கவிழ்ந்தது.
“அப்படி இல்லை அண்ணி..” என்று பேசியவளை தடுத்தாள் கனி.
“நான் பேசி முடிச்சிடுறேன்” என்றவள் அதிரனை பார்த்து “உங்க பிரெண்டுக்கு ப்ரைன் டியூமர்னு உங்களுக்கு எப்போ தெரியும்?” என்று கேட்டாள்.
“ஏழு மாசத்துக்கு முன்னாடி தெரியும்.. ஒரு முறை நாங்க காலேஜ் பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து கோவா டூர் போயிருந்தோம்.. அப்போ கீதன் தலை வலிக்குதுன்னு ரொம்ப கஷ்ட படவும் அங்கே இருந்த டாக்டர்கிட்ட காட்டினோம்.. அவர் டியூமரா இருக்கலாம்னு சொன்னார்.. இங்க வந்து செக் பண்ணுனா டாக்டர் கன்பார்ம் பண்ணிட்டாங்க”
“சோ அப்பவே தெரிஞ்சும் எதுக்காக அவர்கிட்ட சொல்லாம இருக்கீங்க? தெரியும் போது அவர் நிலைமை இன்னும் மோசமாகும்னு தோணலையா? இதுல என் வாழ்க்கையையும் சேர்த்து பணயம் வச்சிட்டீங்களே” என்று கேட்க அவர்களிடம் அதற்கான பதில் இல்லை.
அவளின் வாழ்க்கையை பணயம் வைக்க அவர்கள் யார்? நண்பனுக்கு பிடித்து விட்டால் பிற்காலத்தில் அவனுக்கு மனைவியாகும் பெண்ணின் நிலையையும் யோசித்திருக்க வேண்டும் அல்லவா? அனு ஏதோ பேச வர கைகளால் தடுத்தாள் கனி.
“நான் கீதனை கூட மன்னிச்சிடுவேன்.. ஆனா உங்களை எப்பவும் மன்னிக்க முடியாது.. இந்த பணம் எல்லாத்தையும் சரி பண்ணிடும்னு நினைக்குறீங்களா? முடிஞ்சா இந்த பணத்தை வச்சு அவரை குணப்படுத்துங்க பார்க்கலாம்.. ஒரு பெண்ணோட வாழ்க்கையை நாசமாக்குறோம்னு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் எப்படி பேச முடியுது?” என்று சீற அனு தலை குனிந்தாள்.
“சாரி அண்ணி.. அண்ணாவோட உடல்நிலையும் காதலும் மட்டும் தான் என் கண்ல பட்டுச்சு.. உங்க மனநிலை இப்போ தான் புரியுது..”
“இப்போ புரிஞ்சு என்ன பயன்? எல்லாம் முடிஞ்சு போச்சே” என்று சொன்னவள் தன் அறைக்கு சென்று விட அதிரன் அனுவை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தான். அவளுக்கு தன் தவறு புரிந்தாலும் அண்ணனின் மனநிலை தான் கருத்தில் பட்டது.
கனி தன் அறைக்கு வரும் போது கீதன் விழித்திருந்தான். அவளுக்கு ஒரு நொடி அதிர்ச்சியாகி விட்டது. கீழே பேசிய அனைத்தும் கேட்டிருப்பானோ எனும் சந்தேகம் வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்றெண்ணியவள் “தூக்கம் வரலையா?” என்று அவனின் அருகில் வந்தாள்.
“அடிபட்ட காலை வச்சிட்டு நீ எங்கே போன?” என்று கேட்க “அனுவை பார்க்க போனேன்” என்றாள்.
“அங்கேயும் இங்கேயும் ரெண்டு நாளைக்கு அலையாம ரெஸ்ட் எடு” என்றவன் குளியலறைக்கு சென்று விட அவனின் செயலில் ஒன்றும் புரியாமல் விழித்தாள் கனி.

