Loading

அந்தப் பெண் தன் மனக் கவலையை அருணிமாவிடம் புலம்பி விட்டுச் செல்ல அவரின் வார்த்தைகள் அருணிமாவைக் கலங்க வைத்தன.

 

சற்று நேரத்தில் தன்னை சமன்படுத்திக் கொண்டு திரும்பியவளின் பார்வையில் பட்டது ஜெய்யைத் திட்டிக் கொண்டிருந்த துருவ் தான்.

 

தன் மனம் கவர்ந்தவனை அங்கு எதிர்ப்பார்க்காத அருணிமா ஒரு நொடி அதிர்ந்து நிற்க அவள் மனசாட்சி, “முன்னாடி எல்லாம் ராத்திரி தூங்கும் போது மட்டும் தான் அவன பத்தி கனவு கண்டுட்டு இருப்ப… இப்போ பட்டப் பகல்லயே அதுவும் முழிச்சிட்டே கனவு காண ஆரம்பிச்சிட்டியாலே… அவன் எப்படி இங்குட்டு வருவான்… நீ தான் எப்பப் பாரு அவன் ஞாபகமாவே சுத்திட்டு இருக்கியலே… அதான் அவன் இருக்குற போல உன் கண்ணுக்கு தெரியுதா இருக்கும்…” எனத் தன் பக்க நிலையைக் கூற,

 

“ஆமால… நம்மாளுக்கு இங்குட்டு என்ன சோலி இருக்க போகுது… அருணு… வர வர இந்த பாழாப்போன காதலால நீ பைத்தியமாகிட்டு வர… ஒழுங்கா கண்ண தெறந்து பாருலே…” என தனக்கே கூறிக் கொண்ட அருணிமா கண்களைக் கசக்கி விட்டு மீண்டும் அவ்விடம் பார்க்க அவள் எதிர்ப்பார்த்ததற்கு மாறாக இன்னும் துருவ்வும் ஜெய்யும் அங்கு தான் நின்றிருந்தனர்.

 

தன்னவன் நிஜமாகவே அங்கு இருப்பதைக் கண்டவளின் கண்கள் பளிச்சிட அவள் நின்ற இடத்திலிருந்தே துருவ்வை நோக்கி, “மாமா…” என அருணிமா கத்த, தம் வீட்டுக்குக் கிளம்ப அடி எடுத்து வைத்தவனின் நடை அருணிமாவின் குரலில் தடைப்பட்டது.

 

ஆனால் அடுத்த நிமிடமே அதனைக் கண்டு கொள்ளாத துருவ் மீண்டும் நடக்கத் துவங்க, அவள் அழைத்தது துருவ்விற்கு கேட்கவில்லையோ என மீண்டும் அழைத்துப் பார்த்தாள்.

 

அப்போது துருவ், ஜெய் இருவருமே நின்று தமக்குள் ஏதோ பேசிக் கொள்வதைக் கண்டவள் சற்று சத்தமாகவே, “மாமோய்…” எனக் கத்தினாள்.

 

அதன் பலனாக துருவ்வும் ஜெய்யும் அருணிமா இருந்த பக்கம் திரும்ப அவர்களைப் பார்த்து புன்னகைத்தாள் அருணிமா.

 

துருவ், ஜெய் இருவரும் அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, அருணிமா வேகமாக பாதையைக் கடந்து அவர்கள் இருந்த இடத்திற்கு சென்றாள்.

 

அருணிமா துருவ்வைக் கண்ட மகிழ்ச்சியில் அவனுடன் பேச, அவனோ அருணிமாவை வார்த்தைகளாலே வதைத்து விட்டுச் செல்லவும் அங்கேயே கலங்கி நின்றாள்.

 

இருவரும் அவள் பார்வையில் இருந்து மறைந்த பின்னே தன் வீட்டிற்கு கிளம்பினாள் அருணிமா.

 

_______________________________________________

 

துருவ் அருணிமாவைத் திட்டி விட்டு ஜெய்யை இழுத்துக் கொண்டு வர, சற்று தூரம் வந்ததும் துருவ்வின் கையைத் தட்டி விட்ட ஜெய், “ஏன்லே இப்படி பண்ற… பாவம் அந்த புள்ள… நீ பேசின பேச்சிக்கு எப்படி கண்ணு கலங்கி நின்னுச்சின்னு பார்த்தியாலே… எனக்கே ஒரு மாதிரி இருந்துச்சு… அப்படி அந்தப் புள்ள என்ன பண்ணிச்சுன்னு அந்த ஏச்சி ஏசிட்டு வர… உன்ன காதலிச்சது ஒரு குத்தமாய்யா… அது என்னலே பஜாரி போல பேசுறன்னு சொன்ன… இந்தூரு பாஷையே அதான்… உனக்கு அது நல்லாவே தெரியும்… நான் கூட தான் அப்படி பேசுறேன்… அப்போ நானும் கெட்டவனால… அந்தப் புள்ள கலங்கி நின்னு நான் பார்த்ததே இல்ல… ஆனா அடுத்த நிமிஷமே அதை மறச்சிட்டு சிரிச்சிட்டு பேசினாளே… அவ மனசுலாம் உன்ன மாதிரி கல் நெஞ்சக்காரனுக்கு எல்லாம் புரியாதுல… ச்சே…” என்றான் கோபமாக.

 

துருவ், “டேய்… மச்சான்… சாரிடா… நான் ஒன்னும் அவள ஹர்ட் பண்ணனும்னு அப்படி பேசலடா… ஆல்ரெடி இந்த ஊருக்காரங்க மேல கோவத்துல இருந்தேன்… அவளும் வந்து கண்டதையும் பேசவும் எனக்கு கடுப்பாகிடுச்சுடா… அதான் அவ மேல கோவத்தைக் காட்டிட்டேன்…” என்க,

 

ஜெய், “சரி அதெல்லாம் விடுலே… இப்போ நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு… அந்தப் புள்ள நீ காலேஜுக்கு சேர்ந்ததுல இருந்து உன் பின்னாடி தான் சுத்திட்டு இருக்கா… ஆனா நீ விலகி விலகி போய்ட்டு இருக்க… அது மேல எந்தக் குறையும் சொல்றதுக்கு இல்ல… அழகா இருக்கா… உன் அளவுக்கு இல்லன்னாலும் நல்லா படிக்கிறா… என்னாலயே புரிஞ்சிக்க முடியுதுலே அவ காதல் நெசம்னு…” என்றான் ஆதங்கமாய்.

 

சில நொடி அமைதி காத்த துருவ், “அவ என்னை லவ் பண்ணினா பதிலுக்கு நானும் அவளை லவ் பண்ணனும்னு அவசியமாடா… முதல் விஷயம் எனக்கு அவள பிடிக்கல… அவ எனக்கு செட் ஆக மாட்டா…” என்றான் எங்கோ பார்த்தபடி.

 

அவனைத் தன் பக்கம் திருப்பிய ஜெய், “உண்மைய சொல்லுல… இத்தனை வருஷத்துல அந்தப் புள்ள மேல கொஞ்சம் கூட உனக்கு காதல் வரலயா…” என்றதும் துருவ்விடம் இருந்து பதில் வரவில்லை.

 

புன்னகைத்த ஜெய், “பார்த்தியாலே… உன்னால பதில் சொல்ல முடியல… நெசமாலுமே உனக்கு அந்தப் புள்ளய பிடிக்காம இருந்தா பொசுக்குனு இல்லன்னு சொல்லி இருப்ப… ஆனா நீ பதில் சொல்லாம இருக்குறதுலயே தெரியுதுலே நீயும் அந்தப் புள்ளய விரும்புறன்னு…” என்றதும்,

 

“உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாதுடா… பிடிக்கலன்னா பிடிக்கல தான்… எனக்கு அவ மேல காதல் கிடையாது…” என்ற துருவ் ஜெய்யின் பதிலை எதிர்ப்பார்க்காது அங்கிருந்து சென்றான்.

 

முன்னே செல்லும் தன் நண்பனின் முதுகை வெறித்த ஜெய் புன்னகைத்தவன், ‘இப்போ கூட என் கண்ண நேரா பார்த்து நீ சொல்லல… எங்க எனக்கு தெரிஞ்சிரும்னு தான் இம்புட்டு வெறசா போற… ஆனா நான் உன் சேக்காளி… நீ எதுக்காக இப்படி பண்றன்னு எனக்கு தெரியும்லே… நானே இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்…’ என நினைத்துக் கொண்டான்.

 

ஜெய்யிடம் ஒழுங்காகப் பதில் கூறாது வந்த துருவ் மனதில், ‘சாரி மச்சான்… அவ மேல எந்தக் குறையும் இல்ல… அவ காதலும் பொய் இல்ல… ஆனா நான் அவளுக்கு தகுதியானவன் இல்லடா…’ என நினைத்தவன் தன் கலங்கி இருந்த கண்களைத் துடைத்துக் கொண்டான்.

 

_______________________________________________

 

ராஜதுரை, “என்னலே சொல்ற…. நீ ஒழுங்கா பார்த்தியா…” எனக் கோபமாகக் கேட்க, அவர் முன் கை கட்டி நின்றிருந்த அவரின் அடியாள் ஒருவன்,

 

“ஆமாங்க ஐயா… நம்ம சின்னம்மா தெருமுனைல வெச்சி அந்தப் பயலுங்க கிட்ட பேசிட்டு இருக்குறத பார்த்தேனுங்க… நான் கொஞ்சம் தள்ளி மறஞ்சி நின்னு தான்யா பார்த்தேன்… அதனால அவிய என்ன பேசிட்டு இருந்தாய்ங்கன்னு சரியா தெரியல…” என்றான் தரையைப் பார்த்தபடி.

 

ராஜதுரை அவன் சொன்ன செய்தியில் யோசனை வயப்பட, சரியாக வீட்டுக்குள் நுழைந்தாள் அருணிமா.

 

தன் முகத்தில் எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாத ராஜதுரை அருணிமாவிடம், “கட்சி ஆஃபீஸுல இருந்து வரும் போது ரெண்டு பய கூட நீ பேசிட்டு இருக்குறத பார்த்தேன்லே… யாரு தாயீ அவிய…” என அருணிமாவின் முகத்தை நோட்டம் விட்டவாறு சாதாரணமாகக் கேட்க,

 

அருணிமா, “என் காலேஜ் சீனியர்ஸ்பா… இங்குட்டு நம்ம காலேஜு தான் அவியலுக்கும் எக்சேம் சென்டர்… வர வழியில இரண்டு பேரையும் பார்த்தேன்… அதான் பேசிட்டு வந்தேன்… ஏதாவது பிரச்சினையா…” என்கவும் புன்னகைத்த ராஜதுரை,

 

“ஒன்னும் இல்லடா… சும்மா தான் கேட்டேன்… நீ உள்ள போலே… அப்படியே உன் ஆத்தாட்ட ஒரு கப் மோரு கொண்டு வர சொல்லு…” என்கவும் சரி எனத் தலையசைத்து விட்டு சென்றாள் அருணிமா.

 

அருணிமா சென்றதும் ராஜதுரை தன் அடியாளிடம், “ச்சே… நீ நம்ம புள்ள அந்தப் பயலுங்க கூட பேசிட்டு இருக்குறத பார்த்தேன்னு சொன்னதும் நான் ஏதேதோ கற்பனை பண்ணிட்டேன்லே… அவ தங்கம்… அதுவும் இந்த ராஜதுரையோட இரத்தம் தான் அவ உடம்புலயும் ஓடுது…” எனப் பெருமையாக சொன்னவர்,

 

“அவன் நம்மூர் காலேஜுல மட்டுமில்ல… எங்கையுமே பரீட்சை எழுத கூடாதுலே… அவனுக்கு எம்புட்டு தைரியம் இருந்தா என்னையே எதிர்த்து பேசுவான்… அவனோட தகுதி என்னன்னு நான் காட்டுறேன் அவனுக்கு… நம்ம மாரிக்கு உடனே ஃபோன போட்டு அந்தப் பயலுங்கள பத்தி விசாரிக்க சொல்லுலே… அந்த ரெண்டு பயலோட மொத்த ஜாதகமும் இன்னைக்கே என் கைக்கு வரணும்…” எனக் கோபமாகக் கூறினார் ராஜதுரை.

 

ராஜதுரையிடம் பேசி விட்டு தன் அறைக்குச் சென்ற அருணிமா கண்ணாடி முன் நின்று தன் விம்பத்தைப் பார்த்து விஷமமாக புன்னகைத்தவள், “நீங்க சொல்றது சரி தான்பா… நான் உங்க இரத்தம்… உங்க புத்தி கொஞ்சமாவது எனக்கு இருக்க வேணாமா… உங்க முகத்துல எதையும் காட்டிக்காம என் கிட்ட உங்களால பேச முடியும்னா என்னால மட்டும் முடியாதா… அவியலுக்கு உங்களால எந்தப் பிரச்சினையும் வர விட மாட்டேன்பா…” என்றாள்.

 

_______________________________________________

 

காலையில் ஒன்றாக சென்று விட்டு இப்போது துருவ் மட்டும் வாடிய முகத்துடன் வீட்டினுள் நுழைவதைக் கண்டு பதட்டமானவர், “துருவ் கண்ணா… என்னாச்சுலே… ஜெய் எங்க… நீ மட்டும் தனியா வர… ஏன்யா உன் மூஞ்சி இம்புட்டு வாடி போய் கிடக்குது… ஊருல யாராவது ஏதாவது சொன்னாங்களாய்யா… அவியல திருத்த முடியாதுலே… நீ அதெல்லாம் கண்டுக்காதே ராசா…” என்க, 

 

அவசரமாக தன் முகத்தில் போலிப் புன்னகையை வரவழைத்த துருவ், “ஐயோ அம்மா… எதுக்கு சும்மா டென்ஷன் ஆகுறீங்க… யாருமே எனக்கு எதுவும் சொல்லல… இந்த ஊருல யாருக்காவது இந்த துருவ்வ பத்தி தப்பா பேச தைரியம் இருக்குமா என்ன…” என்றான் தாயை சமாதானப்படுத்தும் விதமாக.

 

ஆனால் அவரின் முகம் இன்னும் தெளிவடையாமல் இருக்கக் கண்டவன் அவரின் கைப் பிடித்து, “வெயில்ல சுத்திட்டு வந்த அலைச்சல்மா… கொஞ்சம் தலைவலி… வேற ஒன்னும் இல்ல… ஜெய் பின்னால மெதுவா வரான்… நான் தலைவலின்னு சீக்கிரம் வந்துட்டேன்…” என்கவும் பதறியவர்,

 

“இருலே… நான் போய் உனக்கு சூடா சுக்கு காஃபி கலந்து எடுத்துட்டு வரேன்… தலைவலிக்கு நல்லா இருக்கும்…” எனச் சமையலறைக்குச் செல்லப் பார்க்க,

 

அவரைத் தடுத்த துருவ், “வேணாம்மா… தூங்கி எழுந்திரிச்சா சரியா போயிடும்… நீங்க ஒன்னும் யோசிக்காதீங்க…” என்று விட்டு தன் அறைக்குச் சென்றான்.

 

சற்று நேரத்தில் ஜெய்யும் வந்து சேர அவனைப் பிடித்துக் கொண்டவர், “எலேய்… என் புள்ளெக்கி என்னாச்சுலே… ஏன் புள்ள மூஞ்சி அம்புட்டு வாடி போய் கிடக்குது… ஏதாவது பிரச்சினையா…” எனக் கேட்க,

 

ஜெய், “ஒரு பிரச்சினையும் இல்ல ஆத்தா… நீ கண்டதையும் போட்டு குழப்பிக்காதே… ஆமா எங்க அவன காணல…” எனக் கண்களால் தேட,

 

“வெயில்ல அலஞ்சிட்டு வந்தது தலைவலியா இருக்குதாம்லே… கொஞ்சம் தூங்கி எந்திரிக்கிறதா சொன்னான்… எனக்கு மனசு என்னவோ போல இருக்குயா.. ஜெய் கண்ணா… நீ கொஞ்சம் அவன் கூட இருலே…” என்கவும்,

 

“இதை நீ சொல்லணுமா ஆத்தா… நான் பார்த்துக்குறேன்… அவன் கொஞ்ச நேரத்துல சரி ஆகி வருவான்… இந்த வெயில் வேற கொளுத்தி போடுது… ஆத்தா உன் கையால பாயாசம் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு… செஞ்சு குடுக்குறியா..” என அவரின் எண்ணவோட்டத்தைத் திசை திருப்பப் பேச, அது சரியாக வேலை செய்தது.

 

ஜெய்யின் தலையை வருடியவர், “என் புள்ளைக்கு இல்லாததாலே… நீ இரு… நான் இப்பவே போய் செஞ்சி எடுத்துட்டு வரேன்…” என்று விட்டு சமையலறைக்குச் சென்றார்.

 

அவன் சென்றதும் பெருமூச்சு விட்ட ஜெய் தன் மொபைலை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

 

தன் அறைக்கு வந்து விட்டத்தைப் பார்த்தவாறு கட்டிலில் படுத்த துருவ் கண்களை மூடிக் கொள்ள, அவனின் மூடிய இமைகளைத் தாண்டி கண்ணீர் வழிந்தோடியது.

 

‘சாரி…’ என மனதில் கூறிய துருவ்வின் எண்ணவோட்டங்களோ கடந்த காலத்துக்குச் சென்றன.

 

இங்கு அருணிமாவும் துருவ்வுடனான முதல் சந்திப்பின் பின் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தாள்.

 

_______________________________________________

 

அருணிமாவும் காயத்ரியும் வகுப்பில் பாடத்தைக் கவனித்துக் கொண்டிருக்க, திடீரென காயத்ரியின் கரத்தை சுரண்டினாள் அருணிமா.

 

ஆசிரியருக்குத் தெரியாமல் அருணிமாவின் பக்கம் திரும்பிய காயத்ரி, “ப்ச்… என்னடி… எதுக்கு இப்போ கைய சுரண்டிட்டு இருக்க…” என்றாள் மெதுவான குரலில்.

 

அருணிமா, “காயு… நீ ஏன் புள்ள கொஞ்ச நாளா அவிய பத்தி பேசவே இல்ல…” என்க,

 

காயத்ரி, “யாரைப் பத்திடி பேசல… நீ என்னை மேம் கிட்ட மாட்டி விடாம இருக்க மாட்ட போல… பேசாம பாடத்தைக் கவனி…” என்று விட்டு ஆசிரியர் பக்கம் திரும்பினாள்.

 

அருணிமா மீண்டும் காயத்ரியின் கரத்தை சுரண்ட, “என்னடி…” என்று சற்று சத்தமாகவே கேட்டு விட்டாள் காயத்ரி.

 

ஆசிரியர், “காயத்ரி… அருணிமா… கெட் அவுட் போத் ஆஃப் யூ ஃப்ரொம் மை க்ளாஸ்…” எனக் கத்தவும் அருணிமா காயத்ரியைப் பார்த்து இளித்து வைக்க, அவளை முறைத்த காயத்ரி, “சந்தோஷமா… வந்து தொலை…” என தன் பையை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல அவளைப் பின் தொடர்ந்தாள் அருணிமா.

 

இருவரும் வகுப்பை விட்டு வெளியே வந்ததும் காயத்ரி, “சொல்லுடி… என்னப் பிரச்சினை உனக்கு… யாரை பத்தி கேட்டுட்டு இருக்க… கொஞ்ச நாளாவே நீ சரி இல்லடி..” என்க,

 

“அதான் காயு… அந்த லேட் ஜாய்ன்… நீ தானேல அவர அப்படி புகழ்ந்துட்டு அவர் பாட்டையே பாடிட்டு இருந்த…” என்றாள் அருணிமா.

 

காயத்ரி, “ஓஹ்… நீ துருவ்வ பத்தி கேக்குறியா… அவர் எல்லாம் நமக்கு செட் ஆக மாட்டாரு அருணி… சரியான படிப்ஸா இருக்காரு… நமக்கும் படிப்புக்கும் தானே ஏணி வெச்சாலும் எட்டாது… அவர லவ் பண்ணினா ரொமான்ஸ் பண்ணுறத விட்டுட்டு படிப்பு சொல்லி கொடுப்பாரு… அங்க பாரு.. இப்போ கூட கைல ஏதோ நோட்ட வெச்சி பார்த்துட்டு இருக்காரு… அவர் கூட இருக்குற அவரோட ஃப்ரெண்ட பாரு… போற வர பொண்ணுங்கள சைட் அடிச்சிட்டு இருக்காரு…” என ஒரு மரத்தின் பக்கம் கை காட்டி கூறினாள்.

 

அருணிமா காயத்ரி காட்டிய திசையைப் பார்க்க, அங்கு துருவ் கையில் ஒரு புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருக்க, அவனுடன் இருந்த ஜெய் காயத்ரி கூறியது போலவே அவ் வழியாக சென்ற பெண்களை நிறுத்தி வைத்து ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.

 

காயத்ரி, “சரிடி… எனக்கு பசிக்குது… நான் கேன்டீன் போறேன்…. நீயும் வரியா..” என்க,

 

அருணிமா, “இல்ல காயு… நீ போ… நான் அப்புறம் வரேன்…” என்கவும் அங்கிருந்து சென்றாள் காயத்ரி.

 

காயத்ரி சென்றதும் புன்னகையுடன் துருவ் இருந்த மரத்தடிக்கு ஓடினாள் அருணிமா.

 

“ஹாய்…” எனத் திடீரென தன் முன் வந்து நின்ற அருணிமாவைக் கேள்வியாக நோக்கினான் துருவ்.

 

ஜெய், “ஹாய்…” என வாயெல்லாம் பல்லாக அருணிமாவைப் பார்த்து கையசைக்க,

 

அருணிமா, “ஹாய் அண்ணாத்த…” என்றதும்,

 

அதிர்ந்த ஜெய், “வாட்… மீ… அண்ணாத்த…” எனத் தன் பக்கம் கை காட்டிக் கேட்க,

 

“ஆமாலே… எனக்கு ஒரு அண்ணன் இல்லையேன்னு ரொம்ப நாளா ஃபீல் பண்ணிட்டு இருந்தேன்… உங்கள பார்த்ததும் எனக்கும் இப்படி ஒரு அண்ணன் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு… அண்ணாத்த… என்னை உங்க தங்கச்சியா ஏத்துக்குறியாலே..” என அருணிமா புன்னகையுடன் கேட்க,

 

பெருமூச்சு விட்ட ஜெய், “ஹ்ம்ம்… வேற வழி… இருந்துட்டு போ…” என்றான்.

 

துருவ்வின் கவனம் புத்தகத்தில் இருக்க அருணிமா, “ஏன் அண்ணாத்த… உங்க சேக்காளி நம்ம கிட்டயெல்லாம் பேச மாட்டாரா…”என்க,

 

ஜெய், “உனக்கு ரெண்டு அண்ணன் இருந்தா நல்லா இருக்கும்னு ரொம்ப நாளா ஃபீல் பண்ணி இருப்ப… அதானே சொல்லப் போற… இவன்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்லே… இவனுக்கு இந்த புக்ஸ் தான் அண்ணன் தங்கச்சி எல்லாமே…” என்கவும் மறுப்பாக தலையசைத்த அருணிமா,

 

“ச்சேச்சே… என்ன அண்ணாத்த இப்படி சொல்லிட்டீய… இவர போய் அண்ணான்னு சொல்ல முடியுமா… இவர் அதுக்கும் மேல…” என்கவும்,

 

“வேற எப்படி…” என சந்தேகமாகக் கேட்டான் ஜெய்.

 

புன்னகைத்த அருணிமா துருவ்வின் பக்கம் திரும்பி சொடக்கிட்டு, “ஹெலோ…” என அவனின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப அழைக்க,

 

துருவ்வோ புத்தகத்திலே கண்ணாக இருந்தான்.

 

ஜெய் என்ன நடக்கிறது என வேடிக்கை பார்க்க, “மிஸ்டர் படிப்ஸ்… எம்புட்டு நேரம் தான் அதையே படிச்சிட்டு இருப்பீய… போரடிக்காதா… சரி நான் சொல்ல வந்தத சொல்லிட்டு போய்டுறேன்… உன்ன பார்த்ததுமே எனக்கு பிடிச்சிருச்சுலே… நீரு பார்க்க அப்படியே சினிமா ஹீரோ மாதிரி இருக்கீய… அதுக்குலாம் எனக்கு உன்ன பிடிச்சு போகல… அன்னைக்கு அந்த தினேஷ் பய கிட்ட இருந்து என்னைக் காப்பாத்தினதும் நீ என் கூட சிரிச்சு பேசி இருந்தன்னா பொண்ணுங்க முன்னாடி சீன் போடுறியான்னு தான்லே கேட்டு இருப்பேன்… ஏனா அந்த தினேஷ்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாது… நானே அவன ஓட விட்டிருப்பேன்… ஆனா வந்த முதல் நாளே ஒரு பொண்ணுக்கு பிரச்சினைன்னதும் வந்து தைரியமா கேள்வி கேட்ட பார்த்தியா… அதுல தான் நான் விழுந்துட்டேன்லே… செம்ம போல்டுயா நீயி… அது தான் என்னை உன்னைக் காதலிக்க வெச்சது… ஏன்னா நான் இதுவரை பார்த்த பயலெல்லாம் பொண்ணுங்க முன்னாடி வெட்டி சீன் காட்டிட்டு.. இல்ல அவியலோட ஆம்பளைத் திமிரக் காட்டி தான்லே… ஆனா நீ ஒருத்தன் தான் நெசமான ஆம்பளையா நடந்துக்கிட்ட… எனக்கு உன்ன பிடிச்சிருக்குலே… உன்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்…. நீ ஒன்னும் உடனே பதில் சொல்ல அவசியம் இல்ல… நல்லா யோசிச்சு பிடிச்சிருக்குன்னு சொல்லுலே… ரொம்ப நாளைக்கு தவிக்க வெச்சிடாதே… லவ் யூ மாமோய்… வரட்டா அண்ணாத்த…” என அதிரடியாய் தன் காதலை துருவ்விடம் தெரிவித்து விட்டு செல்ல, 

 

ஜெய் அதிர்ந்து அருணிமாவைப் பார்த்துக் கொண்டிருக்க, அதற்கு எதிர்வினையாற்ற வேண்டியவனோ முகத்தில் எந்த வித உணர்வையும் காட்டாது அருணிமா கூறி விட்டுச் சென்றது தன் காதிலேயே விழாதது போல் புத்தகத்தில் கவனம் பதித்திருந்தான்.

 

துருவ்வை உலுக்கிய ஜெய், “டேய்… மச்சான்… என்னடா நீ… எதுவுமே நடக்காதது மாதிரி உக்காந்துட்டு இருக்க…” என்க, அவனைப் புரியாமல் பார்த்த துருவ், “ஏன்… என்ன பண்ணணும்…” என்றான்.

 

ஜெய், “சரி தான்லே… அந்தப் புள்ளைய சொல்லணும்… உன் கிட்ட போயி லவ்வ சொல்லிட்டு போகுது பாரு… நமக்கு தான் எதுவும் அமைய மாட்டீங்குது…” என்றான் சலிப்பாய்.

 

துருவ் மீண்டும் புத்தகத்தில் பார்வையைப் பதிக்கவும் தலையிலடித்துக் கொண்ட ஜெய் அங்கிருந்து சென்றான்.

 

_______________________________________________

 

பழைய நினைவுகளில் மூழ்கிய துருவ் கைப்பேசி அழைப்பு ஒலியில் தன்னிலை அடைந்து கைப்பேசியை எடுத்துப் பார்க்க திரையில், “அண்ணா” என்ற பெயர் மின்னியது‌.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்