Loading

“ஐ லவ் யூ ஜெய்… நாம கல்யாணம் பண்ணிக்கலாமா…” என்க, “ஆனா உன் புருஷன் ரன்வீர் சிங்க என்ன பண்ண தீபு…” என சோகமாக கேட்டான் ஜெய்.

 

தீபிகா, “அவன் கிடக்குறான் விடு ஜெய்… எனக்கு நீ தான் முக்கியம்…” என்றவாறு ஜெய்யை நெருங்க வாயெல்லாம் பல்லாக சிரித்தவாறு தீபிகாவின் முகம் நோக்கி குனிந்தான் ஜெய்.

 

சரியாக எங்கிருந்தோ வந்த ரன்வீர் சிங் ஒரு பக்கட் தண்ணீரை எடுத்து ஜெய்யின் முகத்தில் ஊற்ற, “ஏய் ரன்வீர்… நீ என்ன ஆட்டம் போட்டாலும் தீபு எனக்கு தான்லே…” எனக் கத்தியவாறு எழுந்தமர்ந்தான் ஜெய்.

 

அவன் முன் துருவ் கையில் பக்கட்டுடன் ஜெய்யை முறைத்தவாறு நிற்க, “ச்சே… கனவா… நான் கூட தீபு அந்த ரன்வீர டிவோர்ஸ் பண்ணிட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்க போறதா நெனச்சிட்டு இருந்தேன்… எங்க இனி..  கனவுல கூட எனக்கு நல்லது நடக்குறது உனக்கு பிடிக்காதே…” என தன் கனவுக் காதலியான தீபிகா படுகோனுடன் டூயட் பாட இருந்ததை கலைத்து விட்ட கோபத்தில் புலம்பினான் ஜெய்.

 

தன் கையிலிருந்த பக்கட்டை ஜெய்யின் மீது எறிந்த துருவ், “கனவு காணுறதுன்னாலும் ஒரு நியாயம் வேணாம்… ஆல்ரெடி கல்யாணம் பண்ணின பொண்ணுங்க தான் உனக்கு கேக்குதா… ஐயாவோட மூஞ்சோட லட்சணத்துக்கு இவருக்கு தீபிகா படுகோன் தான் கொறச்சல்… கருமம்டா… ஒழுங்கா எந்திரிச்சு வரதா இருந்தா வா… நான் ஊர சுத்தி பார்க்க போக இருக்கேன்… லேட் ஆகினா கிளம்பி போய்ட்டே இருப்பேன்..” என ஜெய்யைத் திட்டியவன் அறையிலிருந்து வெளியே செல்ல இரண்டு அடி எடுத்து வைத்து விட்டு மீண்டும் திரும்பி ஜெய்யிடம் வந்து அவனை மேலிருந்து கீழ் வரை நோட்டம் விட்டான்.

 

“என்ன இவன் இப்படி ஒரு லுக்கு விடுறான்..” என நினைத்த ஜெய் தன்னைக் குனிந்து பார்க்க, 

 

ஜெய்யைக் கேவலமாக ஒரு பார்வை பார்த்த துருவ், “தீபிகா கேக்குதாம்… த்தூ…” என ஜெய்யின் முகத்தைப் பார்த்து விட்டு கீழே பார்த்து காரி உமிழ்ந்து விட்டு சென்றான் துருவ்.

 

தன் முகத்தை துடைத்துக் கொண்ட ஜெய், “நம்ம இமேஜ இந்தப் பயலு ரொம்பத் தான் டேமேஜ் பண்றான்… அம்புட்டு சுமாராவா இருக்கு நம்ம பர்சனாலிட்டி…” என்றவன், “இதுக்கு மேல ஒரு செக்கன் இங்கயே இருந்தாலும் திரும்ப வந்து இதை விட டேமேஜ் பண்ணிடுவான்… எஸ்கேப்டா ஜெய்..” என்று விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

 

சற்று நேரத்தில் ஜெய் குளித்து தயாராகி வெளியே வர உணவு மேசையில் காலை உணவு தயார் நிலையில் இருந்தது.

 

தன் பாட்டிற்கு வந்து தட்டில் உணவைப் போட்டு ஜெய் சாப்பிட ஆரம்பிக்க அவன் தலையில் தட்டிய துருவ், “டேய் சாப்பாட்டுக்கு பொறந்தவனே… அம்மாவும் நானும் நீ வரும் வரை வெய்ட் பண்ணிட்டு இருந்தா நீ பாட்டுக்கு வந்து கொட்டிக்குற…” எனத் திட்டினான்.

 

அதற்கு முகத்தை சோகமாக வைத்துக் கொண்ட ஜெய், “உங்களுக்கு பசிச்சா சாப்பிட வேண்டியது தானேலே… என்னை ஏன்டா பட்டினி போட பார்க்குறீங்க…” என்கவும்,

 

“அவன் திங்கட்டும் துருவ் கண்ணா… புள்ள ரொம்ப பசியா இருந்திருப்பான்… நீயும் உக்காருலே… ஆத்தா ரெண்டு பேருக்கும் பரிமாறுறேன்…” என்றவர் துருவ்விற்கும் ஒரு தட்டை வைத்து உணவைப் பறிமாற அவர் கைப் பிடித்து தடுத்த துருவ்,

 

“ரொம்ப நாள் கழிச்சி வீட்டுக்கு வந்திருக்கோம்மா… நீங்களும் எங்க கூடவே உக்காந்து சாப்பிடுங்க…” என்றவன் அவரை அமர வைத்து பரிமாறினான்.

 

ஜெய், “ஆத்தா… எம்புட்டு பெரிய ஃபைவ் ஸ்டார் ஹாட்டல்ல சாப்பிட்டாலும் உன் கறிக் கொழம்புக்கு ஈடாகாது… அட அட அட… என்னா ருசி…” என்றான் சப்புக் கொட்டியபடி.

 

அதில் மனம் நிறைந்தவர், “நீயும் சாப்பிடுலே… வயசு பையன் நல்ல தெம்பா இருக்க வேணாமா… பாரு எம்புட்டு எழச்சி போய் வந்திருக்கன்னு… என்னத்த திங்குறியோ…” என துருவ்வைத் திட்டியவாறு பரிமாறினார்.

 

துருவ் மெதுவாக சாப்பிடுவதைக் கண்டவர், “என்னல இது பொட்ட புள்ள போல தட்டுல நோண்டிட்டு இருக்க… நல்ல கை நெறய எடுத்து திங்குலே… இரு கண்ணா நானே என் ரெண்டு பயலுக்கும் ஊட்டி விடுறேன்…” என்றவர் தன் கையாலே துருவ்விற்கும் ஜெய்யிற்கும் ஊட்டி விட துருவ்வின் கண்கள் கலங்கின.

 

“என்னாச்சு கண்ணா… ரொம்ப காரமா இருக்குதாலே…” என்க, துருவ் பதிலேதும் கூறாமல் அவரை அணைத்துக் கொண்டான்.

 

துருவ்வின் தலையை வருடியவர், “கண்டதையும் யோசிக்காதலே… உங்க ரெண்டு பேருக்கும் ஆத்தா நான் இருக்கேன்… சாப்பிட்டு ஊர சுத்தி பாத்துட்டு வருவியலாம்…” என்றார் புன்னகையுடன்.

 

_______________________________________________

 

“எங்க புள்ள இம்புட்டு வெறசா போய்ட்டு இருக்க…” என அருணிமாவின் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருந்த ஒரு பெண்மணி கேட்க,

 

அருணிமா, “தெருமுனைல விளையாடுற குட்டிப் பயலுவல தேடி தான்க்கா… சீமைல இருந்து வந்து மூணு நாளாச்சு… ஒரு பயலும் என்னைப் பார்க்க வரலியே… நான் நம்மூருல படிச்சிட்டு இருக்கும் போது மட்டும் யக்கா யக்கான்னு என் பின்னாடியே ஆட்டத்துக்கு கூப்பிட்டு சுத்திட்டு இருந்தானுக… ஆனா இப்போ நான் எப்படி இருக்கேன்னு ஒரு எட்டு பார்க்கணும்னு தோணிச்சா அவியலுக்கு… மொத்தப் பயலுக்கும் இன்னெக்கி இருக்கு…” என்றாள் கோபமாக.

 

“இதப் பாருலே… நீ முன்ன மாதிரி இல்ல இப்போ… அந்தப் பயலுகளும் வளர்ந்துட்டாய்னுங்க… உன் ஐயன் தான் இனிமே யக்கா யக்கான்னு உன்ன தேடி வர கூடாதுன்னு புள்ளைங்கள போட்டு மெரட்டி வெச்சி இருக்காருலே… உன் ஐயன் போடுறது தானே நம்மூருல சட்டம்… அவர எதிர்க்குற தைரியம் இருக்கா எந்தப் பயலுக்காவது…. ஆம்பளைன்னு பேரு மட்டும் தான் அம்புட்டு பேருக்கும்… சாதின்னு வந்தா தான் அவியலோட ஆம்பளைத் திமிர காட்டுறாய்னுங்க… மத்தபடி உன் ஐயனுக்கு அடங்கிய பொட்டி பாம்பு தான்… அந்தப் பயலுகளோட நீ பேசுறத பார்த்தாரு உனக்கு ஒன்னும் இல்லல… அந்தப் புள்ளைங்கள தான் உன் ஐயன் வையுவாரு… வேற சோலி இருந்தா போய் பாருலே… வந்துட்டா சிறுக்கி மவ… இவ ஐயன் புத்தி தானே இவளுக்கும் இருக்கும்…. என் மவ நெலமை திரும்ப யாருக்கும் வராம நீ தான் காப்பாத்தனும் கறுப்பா…” எனத் தன் பாட்டிற்கு புலம்பியபடி சென்றார்.

 

அவரின் மகள் தான் சில நாட்களுக்கு முன் வேறு சாதி ஒருவனுடன் ஓடிச் சென்று திருமணம் முடிக்கவும் அவர்களைப் பிடித்த ராஜதுரையின் ஆட்கள் ராஜதுரையிடம் ஒப்படைக்க அப் பெண்ணின் கண் முன்னே அவளின் கணவனை வெட்டிக் கொன்றார் ராஜதுரை.

 

அந்த ஆத்திரத்தில் அப் பெண்ணும் அவ்விடத்திலே தற்கொலை செய்து கொள்ள இருவரையும் அவரது இடத்திலே புதைத்தார் ராஜதுரை.

 

இருவரையும் காணவில்லை எனத் தகவல் வரும் போதே ராஜதுரை தான் அவர்களைக் கொன்றிருப்பார் எனத் தெரிந்தும் அவ் ஊரில் எவருமே ராஜதுரைக்கு எதிராகப் பேசவில்லை.

 

பெற்ற மகளை இழந்த சோகத்தில் தான் அப் பெண்மணி அருணிமாவிடம் புலம்பி விட்டுச் சென்றார்.

 

அவரின் பேச்சில் அருணிமா கண் கலங்கி நிற்க சில நிமிடங்களில் தன்னை சமன் படுத்திக் கொண்டவள் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பியவளின் பார்வை அதிர்ச்சியில் அவ்வாறே நிலைத்து நின்றது.

 

_______________________________________________

 

துருவ்வும் ஜெய்யும் ஊரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு செல்ல இருவரையும் வழியில் மறித்த ஒருவர், “யாருல நீரு… பார்க்க பெரிய இடத்து பயலாட்டம் இருக்க… அந்த கீழ் சாதிக்காரனுக வாழுற தெரு பக்கம் இருந்து வரத பார்த்தேன்… இங்க என்னலே பண்ற..” என அவர்களை சந்தேகமாகப் பார்த்தபடி கேட்க,

 

துருவ் கோவத்தில் ஏதோ பதில் சொல்ல வர, அதற்குள் அவனின் கைப் பிடித்து அழுத்திய ஜெய் துருவ்விடம் கண்களால் எச்சரித்து விட்டு தம் முன் நின்றிருந்தவரைப் பார்த்து, 

 

“சீமத்துல இருந்து வந்திருக்கோமுங்க ஐயா… எங்க காலேஜுல வளர்ந்துட்டு வர கிராமங்கள பத்தி ஒரு ப்ராஜெக்ட் செய்ய சொல்லி இருக்காங்க… உங்க ஊர பத்தி வெளிய ரொம்ப…நல்ல விதமா பேசிக்கிறாய்னுங்க… அதான் நானும் என்ர சேக்காலியும் உங்க ஊர பத்தி தெரிஞ்சிக்க வந்திருக்கோமுங்க… எங்க ப்ராஜெக்ட்டுக்கும் பெரிய உதவியா இருக்குமுங்க…”‌என்றான் புன்னகையுடன் அடக்கமாக.

 

“ஓஹ்… காலேஜு விஷயமா வந்திருக்கியலா… அந்த தெரு பக்கமா நீரு வரத பார்த்ததும் கொஞ்சம் சந்தேகமா இருந்ததுல… அதான் கேட்டேன்… ஊருக்கு வெளிய நம்மூர பத்தி அம்புட்டு பெருமையா பேசிக்குறாய்னுங்களா… எல்லாம் நம்ம ராஜதுரை ஐயாவால தான் இருக்கும்… சரிலே எனக்கு சோலி கிடக்குது… நான் போறேன்… ஆஹ்… இனிமே அந்த தெரு பக்கமா போகாதீங்க… அது கீழ் சாதிக்காரனுக வாழுற இடம்… நம்ம ஐயாவுக்கு தெரிஞ்சா வம்பா போயிடும்… படிக்க வந்தோமா அதை மட்டும் பார்த்துட்டு போங்கலே…” என்று விட்டு சென்றார்.

 

அவன் சென்றதும், “ஹப்பாடா… அந்தாளு கிட்ட இருந்து ஜகா வாங்குறதுக்குள்ள எனக்கு மூச்சி தள்ளிடுச்சுலே… ஆளே பார்க்க ரௌடி பய போல இருக்கான்…” என்றவாறு திரும்ப அவனை முறைத்தபடி நின்றிருந்தான் துருவ்.

 

ஜெய், “ஆத்தி… அந்தாளு கிட்ட இருந்து தப்பி இவன் கிட்ட மாட்டிக்கிட்டேனே… என்னப் பண்ணப் போறானோ…” என மைன்ட் வாய்ஸ் என நினைத்து சத்தமாக பேச,

 

துருவ், “எதுக்குடா அந்தாளு கிட்ட பொய் சொன்ன… உண்மைய சொல்லி இருக்க வேண்டியது தானே நாமளும் அந்த நாய் சொன்ன கீழ் சாதில இருந்து தான் வந்திருக்கோம்னு..” என்றான் கோபமாக.

 

அவன் தோளில் கை போட்ட ஜெய், “மச்சி கோவப்படாதேல… உனக்கு தான் தெரியுமே இந்த ஊர்க்காரனுங்க பத்தி… அவிய சாதி விஷயத்துல எந்த எல்லைக்கு வேணா போவாங்கன்னு… நாம பரீட்சை எழுத வந்திருக்கோம்… அதை மனசுல வெச்சிக்கோலே… வந்த இடத்துல ஏதும் வம்பு தும்புக்கு போயிறாதே… ஆத்தாக்கு தான் அவியலால பிரச்சினை வரும்..” என்றதும் சற்று சமாதானமடைந்தான் துருவ்.

 

பின் இருவரும் அங்கிருந்து கிளம்பி சற்று தூரம் வந்ததும் தன் நடையை நிறுத்தினான் துருவ்.

 

“என்னாச்சுல… ஏன் இங்குட்டே நின்னுட்ட…” என ஜெய் கேட்க,

 

தன் நெற்றியைத் தேய்த்துக் கொண்ட துருவ், “ஒன்னுமில்ல மச்சான்… போலாம்…” என்று முன்னே நடக்க அவனைப் பின் தொடர்ந்தான் ஜெய்.

 

சில நொடிகளில் இருவருமே நடையை நிறுத்த பெருமூச்சு விட்ட துருவ், “அவளால பெரிய தலைவலியா இருக்கு மச்சான்…” எனத் தலையைப் பிடித்துக் கொண்டு கூற,

 

ஜெய், “யார பத்திடா சொல்ற… ஓஹ்… உன் ஆளா… அந்த பொண்ணு என்ன பண்ணினா..” என்க,

 

“நான் சொன்னேனாடா அவ என் ஆளுன்னு… திரும்ப இப்படி ஆளு கீளுன்னு பேசிட்டு இருந்த செவுட்டுலயே ரெண்டு வெப்பேன்…” என்றான் கோபமாக.

 

உடனே ஜெய் தன் வாயை மூடிக் கொள்ள, “காலேஜ்ல எப்பப்பாரு என் பின்னாடியே லவ்வு லவ்வுன்னு சுத்தி சுத்தி எங்க பார்த்தாலும் அவ பேசுறது போலவே இருக்குடா… இப்போ கூட பக்கத்துல எங்கயோ இருந்து மாமான்னு கூப்பிடுறது போல கேக்குதுடா மச்சான்…” என்றான் துருவ் சலிப்பாக.

 

ஜெய், “உன் ஆளு… சாரி சாரி… அந்த பொண்ணு பேசுறது போல உனக்கு கேட்டா சரி… எதுக்குலே எனக்கும் கேக்குது… ஒரு வேளை நான் எப்பவும் உன் கூடவே சுத்திட்டு இருக்கேனே… அதனால இருக்குமோ..” என துருவ்வின் தலைவலியை அதிகப்படுத்தினான்.

 

துருவ் குழப்பமாக ஜெய்யை நோக்க மீண்டும், “மாமோய்….” என அருணிமாவின் குரல் கேட்கவும் இருவரும் அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

சத்தம் வந்த திசையில் இருவரும் திரும்ப அவர்கள் நின்ற தெருவின் மறுமுனையில் அவர்களுக்கு கை காட்டியபடி நின்றிருந்தாள் அருணிமா.

 

ஜெய்யும் துருவ்வும் அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள அந்த இடைவெளியில் அவசரமாக தெருவைக் கடந்து அவர்களை நெருங்கி இருந்தாள் அருணிமா.

 

இன்னும் அதிர்ச்சியில் இருந்த துருவ்வைப் புன்னகையுடன் நோக்கிய அருணிமா, “என்ன மாமா… பொண்டாட்டி மேல அம்புட்டு பாசமா… ரெண்டு நாள் கூட என்னைப் பிரிஞ்சி இருக்க முடியாம என் பின்னாடியே வந்துட்டியலா…” என்க,

 

தன்னிலை அடைந்த துருவ் அருணிமாவைப் பார்த்து கோபமாக, “ஏய்… கண்டதையும் பேசினா கொன்னுருவேன்டி… பொண்டாட்டியாம்… யாருடி உன் பின்னாடி வந்தா… நீ தான் இங்கயும் என்னை நிம்மதியா இருக்க விடக் கூடாதுன்னு என் பின்னாடியே வந்திருப்ப… ச்சே… கொஞ்சமாச்சும் பொண்ணு மாதிரி நடந்துக்குறியா… எப்பப் பாரு பஜாரி மாதிரி பேசிக்கிட்டு…” என்றான்.

 

துருவ்வின் வார்த்தையில் அருணிமாவின் கண்கள் கலங்கி விட உடனே அதனை மறைத்துக் கொண்டாள்.

 

ஆனால் சரியாக ஜெய்யின் கண்களுக்கு பட்டு விட்டது அவளின் கலங்கிய முகம்.

 

அருணிமா அவசரமாக தன் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டவள், “ஐயே… ஆசை தான் துரைக்கு… நான் எதுக்குல உன் பின்னாடி வரணும்… இது எங்க ஊரு… எங்க ஊருக்கு வந்து பேச்ச பாரு…” என்கவும் அதிர்ந்த ஜெய்,

 

“உன் ஊராலே… என்ன சொல்ற..” எனக் கேட்க,

 

“ஆமா அண்ணாத்த… நான் இந்த ஊரு ஊர்த்தலைவரோட பொண்ணு… ஆமா நீங்க என்ன விஷயமா இங்குட்டு வந்திருக்கீய…” என்றாள் அருணிமா.

 

ஜெய் அருணிமாவுக்கு பதில் சொல்ல வர, அதற்குள் அவனைப் பிடித்து இழுத்துச் சென்றான் துருவ்.

 

அவர்களைப் பின் தொடர்ந்து ஓடிய அருணிமா அவர்களை வழி மறித்து நின்று துருவ்வை முறைத்து விட்டு ஜெய்யைப் பார்த்து, “அண்ணாத்த… உன் ஃபோன குடு…” என்க அவளைக் குழப்பமாகப் பார்த்தபடி தன் கைப்பேசியை நீட்டினான் ஜெய்.

 

அதில் தன் எண்ணைப் பதிந்தவள் மீண்டும் கைப்பேசியை ஜெய்யிடம் வழங்கி விட்டு, “என் ஃபோன் நம்பர இதுல போட்டிருக்கேன்… இனிமே உனக்கு இந்த ஊருல ஏதாவது உதவி தேவைப்பட்டுச்சினா எனக்கு கால் பண்ணு அண்ணாத்த… இந்த தங்கச்சி எப்ப வேணா உனக்கு உதவி பண்ணுவேன்… சில பேருக்கு ரொம்பத் தான் திமிரு ஒரு பொண்ணு அவிய பின்னாடி சுத்துறான்னு…” என்றாள் உதட்டை சுழித்தபடி.

 

ஜெய் வாய் மூடி சிரிக்க அவனை முறைத்த துருவ் ஜெய்யின் கை பிடித்து இழுத்துச் சென்றான்.

 

அருணிமா, “கொல்லார போயிட்டு வாலே…” எனப் பின் இருந்து கத்த அதனைக் கண்டு கொள்ளாது தன் நடையைத் துரிதப்படுத்தினான் துருவ்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்