Loading

பழைய நினைவுகளில் மூழ்கிக் கிடந்த துருவ்வை மீட்டது அவனின் கைப்பேசி ஒலி.

 

கைப்பேசி திரையில் “அண்ணா” என்ற பெயர் மின்னியதும் அழைப்பை ஏற்று காதில் வைத்த துருவ், “அண்ணா…” என்க, 

 

மறுபக்கம், “எலேய் துருவா… என்னயா பிரச்சினை.. யாருலே அந்தப் புள்ள… அண்ணன நெனச்சி யோசிக்கிறியா… எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லலே… உனக்கு பிடிச்சிருந்தா சொல்லு… எந்த தடிப்பயலாலயும் உனக்கு ஒரு பிரச்சினை வர விட மாட்டான்லே இந்த அண்ணன்..” என்க,

 

துருவ், “இல்லண்ணா… இந்த ஜெய்க்கு வேற வேலை இல்ல.. அதான் உங்க கிட்ட கண்டபடி உளறி இருக்கான்… நீங்க இருக்கும் போது எனக்கு என்ன அண்ணா பிரச்சினை வர போகுது… நிஜமாலுமே எனக்கு அந்தப் பொண்ண…..” என இழுத்தவன் பெருமூச்சு விட்டு விட்டு, 

 

“எனக்கு அந்தப் பொண்ண பிடிக்கலண்ணா… இந்த காதல் கத்திரிக்கா எல்லாம் நமக்கு செட் ஆக மாட்டாதுணா…” என்றான்.

 

மறுபக்கம், “சரிலே.. நீ சொல்றத நான் நம்புறேன்… கண்டதையும் மண்டைல ஏத்திக்காம பரீட்சைக்கு தயாராகுலே… ஏதாவது பிரச்சினைனா அண்ணனுக்கு உடனே ஃபோன போடு… ஆத்தாவையும் பார்த்துக்கோ… நான் சீக்கிரமா ஊருக்கு வர பார்க்குறேன்… சரிலே… அப்போ அண்ணன் ஃபோன வெச்சிடுறேன்… பார்த்து சூதானமா இருந்துக்கோலே…” என்று விட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

 

அழைப்பு துண்டிக்கப்பட்டதும் துருவ் சற்று நேரம் கைப்பேசியையே வெறித்தவாறு இருந்து விட்டு எழுந்து வெளியே செல்ல, அங்கு ஜெய் பாயாசத்தை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருந்தான்.

 

‌துருவ் மெதுவாக ஜெய்யின் பின்னே சென்று நின்று அவன் கழுத்தை சுற்றி தன் கரத்தைப் போட்டு அழுத்த,

 

“கொலை… கொலை… ஆத்தா… உன் புள்ளைய கொல்ல பார்க்குறான் ஆத்தா… வந்து காப்பாத்து ஆத்தா…” எனக் கத்தினான் ஜெய்.

 

ஜெய் கத்திக் கொண்டிருக்க துருவ் மெதுவாக அவன் தோளில் தட்டி, “போதும்… நிறுத்து உன் நடிப்ப… நான் கைய எடுத்து ரொம்ப நேரமாச்சு…” என்கவும் தன் கழுத்தைத் தொட்டுப் பார்த்த ஜெய் துருவ்வைப் பார்த்து இளித்து வைத்தான்.

 

ஜெய்யின் கத்தலில் அங்கு வந்தவர், “எதுக்குலே எழவு வீடு போல கத்திட்டு இருக்க…” என ஜெய்யைத் திட்டி விட்டுச் செல்ல,

 

“இன்னும் கொஞ்சம் நேரம் போயிருந்தா இந்த வீட்டுலே ஒரு எழவு விழுந்திருக்கும்…” என முணுமுணுத்தான் ஜெய்.

 

அவர் சென்றதும் ஜெய்யின் அருகில் அமர்ந்த துருவ் ஜெய்யின் கரத்திலிருந்த பாயாசக் கோப்பையை பிடுங்கி தான் சுவைத்தவாறு, “எதுக்குடா அண்ணனுக்கு கால் பண்ணி கண்டதையும் சொல்லி வெச்சிருக்க…” என்க,

 

பாயாசம் பறிபோன சோகத்தில் இருந்த ஜெய் துருவ்வை முறைத்தவாறு, “அப்படி தான்லே சொல்லுவேன்… திரும்ப அந்தப் புள்ளைய ஏதாவது சொன்னியன்னா ஆத்தா கிட்ட கூட சொல்லுவேன்…” என்கவும் அமைதியாகினான் துருவ்.

 

_______________________________________________

 

துருவ்விடம் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தவன், “கஜா…” என்று சத்தம் போடவும் அவன் முன் வந்து கை கட்டி நின்றான் கஜா.

 

கஜா, “கூப்பிட்டியலா அண்ணே…” எனப் பணிவாகக் கேட்கவும்,

 

ஆம் எனத் தலையசைத்தவன், “நம்ம தம்பிங்கள எப்பவும் கண்காணிச்சிட்டே இருக்க சொன்னேனால்ல… அப்போ ஏன்ல துருவ் காலேஜு படிக்கும் போது ஒரு பொட்டப் புள்ள அவன் பின்னால சுத்திட்டு இருந்தத சொல்லாம விட்டீய… நீ ஒழுங்கா தம்பிங்கள பார்த்துக்கலயா… யாருலே அந்த சிறுக்கி… உனக்கு ஏதாவது தெரியுமா…” எனக் கேட்டான்.

 

கஜா, “அண்ணே… நீ மறந்துட்டியன்னு நெனக்கிறேன்… துருவ் தம்பி காலேஜு சேர்ந்த புதுசுலயே ஒரு புள்ள தம்பி பின்னால சுத்திட்டு இருக்கான்னு நான் உன்ட சொன்னேன் அண்ணே… நீ தான் வயசுக்கோளாருல சுத்திட்டு இருக்கும்… அதெல்லாம் கண்டுக்காதேன்னு சொன்னியேண்ணே…” என்கவும் யோசனை வயப்பட்டவன்,

 

“சரிலே… நான் மறந்துட்டேன் போல… யாருலே அது… நான் சொல்லிட்டேன்னு நீ சும்மா இருந்து இருக்க மாட்டியே… அந்தப் புள்ளைய பத்தி தேடி இருப்பியே…” என்று புன்னகையுடன் கேட்க,

 

இளித்தபடி தலையை சொறிந்த கஜா, “அதுண்ணே… மன்னிச்சிருண்ணே… நம்ம தம்பி மேல உள்ள பாசத்துனால தான் நீங்க சொல்லியும் கேட்காம அந்தப் புள்ளைய பத்தி விசாரிச்சேன்ணே… ஆனா நான் விசாரிச்ச வரைல நல்ல பொண்ணு தான்ணே… என்ன கொஞ்சம் வாய் தான் ஜாஸ்தி… எதுன்னாலும் பட்டுன்னு பேசிடும்… பெரிய இடத்து பொண்ணு தான்ணே… அதுவும் நம்மூரு தான்…” என்கவும் கஜாவைப் புருவம் சுருக்கி பார்க்க,

 

“திருவம்பட்டி எம்.எல்.ஏ. ராஜதுரையோட பொண்ணுண்ணே… பேரு கூட ஏதோ அருணாவோ அருணிமாவோ…” என கஜா கூறியதும் தான் இருந்த இருக்கையை விட்டு கோபமாக எழுந்து கஜாவின் கழுத்தைப் பிடித்தான் அவன்.

 

கஜா அதிர்ந்து அவனை நோக்க, “என்னலே சொல்ற…. ஏன் இதை நீ முன்னாடியே சொல்லல… சொல்லுலே…” எனக் கோபத்தில் கத்தவும் கஜா பேச முடியாமல் மூச்சு விட சிரமப்படுவதைக் கண்டு அவனை விடுவிக்க, கஜா தன் கழுத்தைப் பற்றியபடி இறுமினான்.

 

அவன் தன் கண்களை மூடி பெருமூச்சுகள் விட்டு தன்னை நிதானப்படுத்திக் கொள்ள கஜா, “என்னை மன்னிச்சிருண்ணே… நீ இதுக்கு இம்புட்டு ஆத்திரப்படுவன்னு தெரியாதுண்ணே… அந்தப் புள்ள மட்டும் தான் துருவ் தம்பி பின்னால சுத்திட்டு இருந்துச்சு… நம்ம தம்பி அந்தப் புள்ளைய கண்டுக்கவே இல்லண்ணே… அதனால நானும் அதை சாதாரணமா விட்டுட்டேன்ணே…” எனத் தலை குனிந்து கொண்டு சொல்ல,

 

அவன் தோளில் தட்டியவன், “மன்னிச்சிரு கஜா… ஆத்திரம் கண்ணை மறச்சிடுச்சுலே…” என்கவும் பதறிய கஜா, “என்னண்ணே பண்ணுறீய… என் கிட்ட போய் மன்னிப்பு எல்லாம் கேக்குறீய… உனக்கு என்னை என்ன வேணா பண்ண உரிமை இருக்குண்ணே… இந்த வாழ்க்கை நீ போட்ட பிச்சை அண்ணே… உனக்காக உசுரயும் குடுப்பேன் அண்ணே…” என்றான்.

 

“சரிலே… உடனே ஊருக்கு போக ஏற்பாடு பண்ணு… இனிமே நமக்கு அங்குட்டு தான் சோலி இருக்கு…” என்றவன் கஜா சரி எனத் தலையசைத்து விட்டு சென்றதும்,

 

“எலேய் ராஜதுரை… வரேன்டா… நான் தான்லே உனக்கு எமன்… உன் பொண்ண வெச்சி என் தம்பியவே தொடப் பாக்குறியா…” என்றான் கோவமாக.

 

_______________________________________________

 

தன் கட்சி ஆஃபீஸில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்த ராஜதுரையிடம் ஓடி வந்த அவரது கட்சி தொண்டன் ஒருவன், “ஐயா… ஐயா… அந்த  கீழ் சாதிக்காரப் பயலுங்க நம்ம ஆஃபீஸ் முன்னாடி போராட்டம் பண்ணுறாய்ங்கய்யா..” என்கவும் தன் கையிலிருந்த சிகரெட்டை தரையில் போட்டு தன் காலால் அதனை கோபமாக நசுக்கிய ராஜதுரை,

 

“என்னலே சொல்லுற… எதுக்கு அந்த *****சாதிக்கார பயலுங்க போராட்டம் பண்ணுறானுங்க… அம்புட்டு பேரையும் அடிச்சு வெரட்ட வேண்டியது தானேலே…” என்றார்.

 

“இல்லங்க ஐயா… அம்புட்டு பேரும் நம்ம ஃபேக்டரில வேலை செய்ற பயலுங்க… கொஞ்சம் நாளாவே அவிய சம்பளத்த ஏத்தி கேட்டுட்டு இருந்தானுங்க… நாம கண்டுக்காம விட்டதும் அவிய இப்போ அம்புட்டு பேரையும் கூட்டிக்கிட்டு போராட்டம் நடத்துறாங்கய்யா… இப்போ என்ன பண்றது ஐயா… சம்பளத்த ஏத்தி தரதா சொல்லிடட்டுமாய்யா…” என அந்தத் தொண்டன் கேட்கவும் மேசையிலிருந்த கோப்புகளை அவன் முகத்தில் விட்டெறிந்த ராஜதுரை,

 

“எம்புட்டு தைரியம் இருந்தா இப்படி சொல்லுவியலே… அந்த ****சாதிக்கார பயலுங்க சம்பளத்த ஏத்தி கேட்டதும் அப்படியே தூக்கி கொடுக்குறதுக்கு இது என்ன உன் அப்பன் வீட்டு சொத்தாலே… அம்புட்டும் நான் என் புத்திய பயன்படுத்தி சம்பாதிச்சதுலே… சம்பளத்த ஏத்துறேன்னுறானாம்… ******” எனத் திட்டவும் அந்த தொண்டன் தலை குனிய,

 

“எலேய்… இதுக்கு என் கிட்ட ஒரு வழி இருக்குலே… போய் நான் சொல்றது போல செய்… கொஞ்ச நேரத்துலயே அம்புட்டு பேரும் துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓட போறத்த பாருலே…” என விஷமமாக சிரித்தபடி ராஜதுரை கூற அவரைப் புரியாமல் நோக்கினான் அந்தத் தொண்டன்.

 

ராஜதுரை தன் திட்டத்தை அவனிடம் கூறவும் அந்தத் தொண்டனின் முகத்தில் ஒரு குரூரப் புன்னகை உதித்தது.

 

அத் தொண்டன் ராஜதுரையின் திட்டத்தை செயல்படுத்தச் செல்ல, இன்னுமொரு சிகரெட்டைப் பற்ற வைத்தவாறு மர்மப் புன்னகையுடன் தன் இருக்கையில் சாய்ந்தார் ராஜதுரை.

 

_______________________________________________

 

கட்சி ஆஃபீஸின் முன் மக்கள் சம்பளம் உயர்த்திக் கேட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்க, அவர்களுக்கு தலைவன் போல் இருந்த ஒருவனிடம் ஓடி வந்த ஒருவன், “அண்ணே… நம்ம வூட்டையெல்லாம் யாரோ கொளுத்திப் போட்டுட்டாய்ங்கண்ணே…” என்றதும் அச் செய்தி அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் காட்டுத் தீயாய் பரவ, அனைவரும் கூச்சலிட்டுக் கொண்டு தம் வீடுகளை நோக்கி ஓடினர்.

 

அதனைத் தன் கட்சி ஆஃபீஸில் இருந்து கண் குளிரப் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜதுரை.

 

அனைவரும் வியர்வை சிந்த உழைத்துக் கட்டிய குடிசை போன்ற சிறிய ஓலை வீடுகள் தீயில் கருகிக் கொண்டிருக்க, எதுவுமே செய்ய இயலாமல் கண்ணீருடன் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தனர் கீழ் சாதி என வெறுத்து ஒதுக்கப்பட்டிருந்த மக்கள்.

 

“ஐயோ…. என் புருஷன் எனக்கும் என் புள்ளைங்களுக்கும்னு மிச்சம் வெச்சிட்டு போனது இந்த வூடு மட்டும் தான்லே… அதை இப்படி ஒன்னுமில்லாம பண்ணிட்டாய்ங்களே…” என கணவனை இழந்த பெண்ணொன்று அழ,

 

“ஐயா… ஆத்தாவோட ஃபோட்டோ வூட்டுக்குள்ள கிடக்குது… நான் போய் எடுத்துட்டு வாரேனே…” என தாயை இழந்த மகளொன்று தன் தந்தையிடம் கெஞ்ச,

 

தந்தையானவரோ தன் கண் முன்னே எரிந்து கொண்டிருக்கும் தன் வீட்டில் தன்னவளுடன் வாழ்ந்த நாட்களை எண்ணிக் கண்ணீர் வடித்தார்.

 

“எம்புட்டு கஷ்டப்பட்டு கட்டின வூடுலே…. இதைக் கட்டி முடிச்ச முன்னாடி என் வூட்டுக்காரி என்னைக் கொஞ்சம் கூட மதிக்கல… இப்போ ஒன்னுமில்லாம போச்சே…” என ஒருவர் தன் நண்பனிடம் கண்ணீர் விட,

 

“என் புள்ள அம்புட்டு ஆசையா கேட்ட விளையாட்டு சாமான கூட வாங்கி வூட்டுக்குள்ள வெச்சி இருந்தேன்லே… அதோட பொறந்த நாளைக்கு அதைக் குடுத்து சந்தோஷப்படுத்தலாம்னு பார்த்தா இப்போ அது சாம்பலாகிடுச்சே…” என ஒரு தந்தை தன் மனைவியிடம் கூறி அழ, என்ன நடக்கிறது எனப் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் தன் மூன்று வயது மகளை கையில் ஏந்தி கணவனின் வேதனையைக் கண்ணீருடன் கேட்டுக் கொண்டிருந்தாள் அவன் மனைவி.

 

ஒவ்வொருவரும் எரிந்து கொண்டிருக்கும் தம் வீடுகளைப் பார்த்தவாறு பலவாறு தம் மன வேதனையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

 

“என்னலே ஒரே புகை மூட்டமா இருக்குது… ஆளுங்க கத்துற சத்தம் கூட கேக்குது…” என அவ்வழியாக வந்த ஜெய் துருவ்விடம் கூறவும் இருவரும் அவசரமாக அங்கு ஓடினர்.

 

அங்கு இருந்த நிலமையைக் கண்டு நண்பர்கள் இருவரும் அதிர்ந்தனர்.

 

அங்கிருந்த ஒருவரிடம் துருவ் என்ன நடந்தது எனக் கேட்டு அறிந்து கொள்ள, நிச்சயம் இதனை யார் செய்திருப்பார்கள் என புரிந்து அவன் கண்கள் கோபத்தில் சிவந்தன.

 

ஓலையால் வேயப்பட்ட வீடுகள் என்பதால் பாதி வீடுகள் ஏற்கனவே தீயில் கருகி இருக்க, இன்னும் சில வீடுகள் எரிந்து கொண்டிருந்தன.

 

திடீரென, “ஐயோ…. என் புள்ள வூட்டுக்குள்ள தூங்கிட்டு இருந்துச்சு… யாராவது என் புள்ளைய காப்பாத்தி குடுலே….” என ஒரு பெண் பாதி எரிந்து கொண்டிருக்கும் தன் வீட்டை நோக்கி ஓட முயற்சிக்க, சுற்றியிருந்த மக்கள் அப் பெண்ணை பிடித்து, “ஏற்கனவே அம்புட்டு வீடும் எரிஞ்சிடுச்சுலே…. இதுக்கு மேல போனாலும் நம்மாள எதுவும் செய்ய முடியாது… மனசே தேத்திக்கோலே…” என்கவும் தன் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார் அப் பெண்.

 

அப் பெண்ணின் கதறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த துருவ், “என்னங்க இது… யாரும் எதுவுமே செய்யாம வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க… அதான் அந்த அம்மா அவங்க புள்ள வீட்டுக்குள்ள இருக்குறதா சொல்றாங்களே… போய் தண்ணீர ஊத்தி நெருப்ப அணைக்கலாம்ல…” எனக் கடிந்தவன் அங்கிருந்த குழாய் ஒன்றில் நீர் பிடித்து அவ் வீட்டின் மீது ஊற்றினான்.

 

துருவ்விற்கு உதவியாக ஜெய்யும் நீர் கொண்டு வந்து ஊற்றினான்.

 

ஆனால் அந் நெருப்பு அவ்வளவு இலகுவில் அணையவில்லை.

 

வீட்டின் வாசலில் இருந்த நெருப்பு லேசாக அணைந்ததும் துருவ் சுற்றியும் எரிந்து கொண்டிருந்த நெருப்பைக் கண்டு கொள்ளாது யாரும் எதிர்ப்பார்க்காதவாறு வீட்டினுள் நுழைய ஜெய் அதிர்ந்து, “துருவா…” எனக் கத்தினான்.

 

வீட்டின் பாதி ஏற்கனவே எரிந்து முடிந்திருக்க, நெருப்புக் கனல்கள் பறந்து வந்து துருவ் மீது விழுந்தன.

 

ஆனால் துருவ் தன் வலியைப் பொருட்படுத்தாதவாறு இயன்றளவு வேகமாக அப் பிள்ளையைத் தேடினான்.

 

வீடு புகை மூட்டமாக இருக்க துருவ்வின் கண்களுக்கு எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.

 

சில நொடிகளில் துருவ்வின் கண்களில் சில காயங்களுடன் மூர்ச்சையாகி விழுந்திருந்த பிள்ளை படவும் அதனைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்டு வெளியே ஓட முயற்சிக்க அவன் கரத்தில் ஒரு எரிந்த மரக்கட்டை விழுந்தது.

 

பல்லைக் கடித்து வலியைப் பொறுத்துக் கொண்டவன் பிள்ளையை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வரவும் அவன் பார்வையில் முதலில் பட்டது அருணிமா தான்.

 

தன் தோழிகளை சந்திக்க வந்திருந்தவளின் செவியில் இந்த செய்தி எட்ட, உடனே அங்கு வந்திருந்தாள் அருணிமா.

 

அப் பிள்ளையின் தாய் துருவ்விடம் ஓடி வந்து தன் பிள்ளையை வாங்கிக் கண்ணீர் வடித்தார்.

 

துருவ்வும் நன்றாக காயமடைந்திருக்க கலங்கிய கண்களுடன் அவனிடம் ஓடி வந்து அவன் கரத்தைப் பற்றினாள் அருணிமா.

 

அருணிமா, “மாமா… உங்க கையெல்லாம் தீக் காயம் ஆகி இருக்கு…” எனப் பதட்டமாகக் கூற,

 

அவள் கையைக் கோபமாகத் தட்டி விட்ட துருவ் இன்னும் கண் விழிக்காத அக் குழந்தையைக் காட்டி, “பாரு… நல்லா பாரு உன் அப்பன் பண்ணி இருக்குற வேலைய…. இந்தக் குழந்தைக்கு என்ன வயசாகுது… ஒரு நாழு அஞ்சி வயசு இருக்குமா… என்ன தெரியும் அதுக்கு… பெரியவங்க தான் சாதி அது இதுன்னு சுத்திட்டு இருக்காங்க… ஆனா இந்த சின்ன பசங்க எல்லாரையும் தன்னோட சொந்தமா தான் பார்க்கும்… இந்த காயத்தோட வலி ஒன்னும் எனக்கு பெரிசா தெரியல… ஆனா இந்த குழந்தையோட உடம்புல இருக்குற காயம்… அந்த வலிய தாங்கிக்க முடியுமா அதனால… இந்த அம்மா தன் குழந்தைய பார்க்கும் வரை கதறின கதறல்… இது எல்லாத்துக்கும் உன் அப்பனும் அவன் ஆளுங்களும் தான் பதில் சொல்லணும்… அப்படி என்ன கிடைக்க போகுது அவருக்கு இந்த ஜாதியால… எல்லாரோட உடம்புலயும் ஓடுற இரத்தம் சிவப்பு தான்… ஆனா உன் அப்பன் மாதிரி ஆளுங்களுக்கு என்னவோ அவங்க உடம்புல ஓடுறது தான் தரமான இரத்தம்னும் எங்க உடம்புல… அதான் கீழ் சாதிக்காரங்க உடம்புல ஓடுறது மட்டமான இரத்தம்னும் எண்ணம்… முதல்ல இதை சொல்லு… அது என்ன மேல் சாதி… கீழ் சாதி… எதை வெச்சி அதை முடிவு பண்ணுறீங்க… பொறப்ப வெச்சா… கடவுள் எல்லாரையும் ஒரே மாதிரி தான் படைச்சி இருக்கான்… வந்துட்டாங்க சாதி அது இதுன்னு…” என தன் மொத்த ஆற்றாமையையும் அருணிமாவிடம் கோவமாக வெளிப்படுத்தவும் கண் கலங்கி நின்றாள் அருணிமா.

 

ஜெய், “டேய்.. துருவா… கோவப்படாதே… பாவம்ல அந்தப் புள்ள.. அவ அப்பன் பண்ணின காரியத்துக்கு அது என்ன செய்யும் சொல்லு…” என துருவ்வை சமாதானப்படுத்த,

 

“முதல்ல அவள என் கண் முன்னாடி நிற்காம போக சொல்லுடா… ச்சே… அவ மூஞ்ச பார்க்கவே பிடிக்கல எனக்கு…” என துருவ் கோபமாகக் கூற, முழுவதுமாகவே மனம் உடைந்து விட்டாள் அருணிமா.

 

ஜெய் அருணிமாவைத் தயக்கமாகப் பார்த்து, “தங்கச்சிமா… நீ வீட்டுக்கு போலே… அவன் ஏதோ கோவத்துல பேசுறான்… அதெல்லாம் மனசுல போட்டுக்காதலே…” என்கவும் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட அருணிமா முகத்தில் இல்லாத புன்னகையை வரவழைத்து,

 

“ச்சேச்சே… நான் அதெல்லாம் பெரிசா எடுத்துக்கல அண்ணாத்த… இவர் தானே திட்டினாரு… அவருக்கு அதுக்கு முழு உரிமையும் இருக்கு… நான் போறேன் அண்ணாத்த… அவர் காயத்துக்கு மருந்து போட்டு விட்டுருங்க…” என்று விட்டு அங்கிருந்து வேகமாக அழுதபடி ஓடினாள்.

 

சற்று நேரத்திலே அப் பிள்ளை கண் விழிக்கவும் அதனை வாரி அணைத்துக் கொண்ட அதன் தாய்,

 

“கண் முழிச்சிட்டியா கண்ணு… ஆத்தாவ பதற வெச்சிட்டியேல… இம்புட்டு நேரமா என் உசுரு என் கிட்ட இருக்கல…” என்று தன் பிள்ளையின் முகம் முழுவதும் முத்தமிட்டார்.

 

அதனை கலங்கிய விழிகளுடன் துருவ் பார்த்துக் கொண்டிருக்க, அவனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்ட அப் பிள்ளையின் தாய், “ரொம்ப நன்றி தம்பி… சாமியா வந்து என் புள்ளைய காப்பாத்திட்டேல… நீ நூறு வருஷம் நல்லா இருக்கனும்யா… அந்த சாமி உனக்கு எந்தக் குறையும் வைக்க மாட்டான்…” என்கவும் அவர் கரங்களை இறக்கி விட்ட துருவ்,

 

“குழந்தைய பத்திரமா பார்த்துக்கோங்கக்கா…” என்று விட்டு அக் குழந்தையின் தலையை வருடி விட்டுச் சென்றான்.

 

ஜெய்யும் அவனைப் பின் தொடர்ந்து சென்றவன், “எலேய்.. வாலே ஹாஸ்பிடலுக்கு போலாம்… காயம் பெரிசா இருக்குலே…” என்க,

 

துருவ், “ப்ச்… விடுடா… இது ஒன்னும் அவ்வளவு பெரிய காயம் இல்ல… என் மனசுல இருக்குற காயம் தான் ஆறாத வடுவா இருக்கு…” என்றான் தன் கரத்திலிருந்த காயத்தைப் பார்த்தபடி.

 

“நீ சொல்லுவேல… ஆத்தா கேட்டா நான் என்னத்த பதில் சொல்லுவேன்… ஆத்தா என்னைத் தான் வைய போறாய்ங்க… சும்மா வீம்பு பிடிக்காம வாலே…” என்று துருவ்வை மருத்துவமனைக்கு இழுத்துச் சென்றான் ஜெய்.

 

அவர்கள் இருவரும் மருத்துவமனையை நோக்கி செல்ல, சரியாக அங்கு வந்து நின்ற பேரூந்திலிருந்து இறங்கினான் முத்துராசு.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
5
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்