Loading

இரண்டு நாட்களில் துருவ்வும் ஜெய்யும் தங்கள் ஊரை வந்தடைந்தனர்.

 

பல வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வருவதால் சுற்றியும் பார்த்தபடியே இருவரும் நடந்தனர்.

 

ஜெய், “என்னலே நம்மூரு இம்புட்டு மாறி போய் கிடக்குது…” என ஆச்சர்யப்பட,

 

“சிட்டி போய் படிச்சும் நீயும் உன் பேச்சும் மாறாம இருக்குறதுக்காக நம்ம ஊரும் அப்படியே இருக்குமா என்ன..” என ஜெய்யைக் கிண்டல் செய்தான் துருவ்.

 

அவனை முறைத்து விட்டு ஜெய் முன்னே நடக்க, சிரித்துக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்தான் துருவ்.

 

திடீரென ஜெய் துருவ்வின் கைப் பிடித்து அவன் நடையை நிறுத்தவும் அவனைக் கேள்வியாக ஏறிட்டான் துருவ்.

 

ஜெய் கை காட்டிய திசையைப் பார்த்த துருவ்வின் கண்கள் கோபத்தில் சிவந்தன.

 

ராஜதுரை கோவமாக அவர் முன் நின்ற வயதான ஒருவரின் சட்டையைப் பிடித்து அவரை அடிக்கக் கை ஓங்க, அவரின் கரம் பாதியிலேயே நின்றது.

 

தன்னைத் தடுத்தது யாரென்று திரும்பிப் பார்க்க, ராஜதுரையின் கையை இறுக்கிப் பிடித்தபடி நின்றிருந்தான் துருவ்.

 

ராஜதுரையின் அடியாள்கள், “ஏய்…” எனக் கத்திக் கொண்டு துருவ்வை நோக்கி வர, அவர்களைத் தன் பார்வையால் அடக்கினார் ராஜதுரை.

 

துருவ் ராஜதுரையின் கையை விடுவித்து விட்டு அவர் பிடியிலிருந்து அந்த வயதானவரின் சட்டையை விடுவித்தான்.

 

துருவ், “பார்க்க பெரியவர போல இருக்கீங்க… ஆனா உங்கள விட வயசுல மூத்த ஒருத்தர அடிக்க கைய நீட்டுறீங்க..” என ராஜதுரையிடம் அமைதியான குரலில் அழுத்தமாக கேட்டான்.

 

ராஜதுரை, “யாருலே நீயி… உன்ன இங்குட்டு பார்த்ததே இல்லையே… எங்க ஊருக்கு வந்து என்னையே எதிர்த்து நிக்கிறியாலே…” என்றார் கோபமாக.

 

“தப்ப தட்டி கேக்குறதுக்கு யாரு எந்த ஊரு எதுவும் முக்கியம் இல்ல…” என துருவ் பதிலளிக்கவும் அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த ராஜதுரை,

 

“பார்க்க சின்னப் பயலா இருக்கியேலே… வீணா என்னை எதிர்த்து உன் வாழ்க்கையை அழிச்சிக்காதே… மருவாதையா இங்கிருந்து போயிரு…” என எச்சரிக்க,

 

அவரைக் கண்டு கொள்ளாத துருவ்வோ அந்த வயதானவரை நெருங்கி, “என்ன ஐயா பிரச்சினை… இவர் ஏன் உங்கள அடிக்க பார்த்தாரு..” எனக் கேட்டான்.

 

“என் பேரன் பன்னண்டாவது படிக்கிறான் தம்பி.. ரொம்ப நல்லா படிக்கிற பயலு… பரீட்சைல கூட நல்ல புள்ளி எடுத்திருக்கான்லே… அவனுக்கு ஐயன் ஆத்தா இல்ல.. ஒரு விபத்துல அவன் சின்னப் பயலா இருக்கும் போதே போய் சேர்ந்துட்டாய்ங்க… ரொம்ப கஷ்டப்பட்டு தான் கவர்மெண்ட் பள்ளில படிக்க வெச்சேன்… இப்போ அவன் டாக்டருக்கு படிக்கனும்னு ஆசைப்படுறான்லே… என் கிட்ட அம்புட்டு வசதி இல்ல தம்பி… ஐயாவோட காலேஜுல வசதி இல்லாத சனத்த இலவசமா படிக்க வைக்கிறதா சொன்னாய்ங்க.. அதான் ஐயா கிட்ட வந்து என் பேரனுக்கும் அவர் காலேஜுல இடம் தர சொல்லி கேட்டேன் தம்பி… ஆனா அவிய நாங்க…. நாங்க… ****சாதின்னு சொல்லி ரொம்ப கேவலமா பேசிட்டாருலே…” என அழுதார் அந்த வயதானவர்.

 

துருவ், “உங்க அட்ரச குடுத்துட்டு போங்க ஐயா… நான் அப்புறம் உங்கள வந்து சந்திக்கிறேன்… உங்க பேரன் படிக்கிறது என் பொறுப்பு…” என்கவும் அவனைக் கையெடுத்து கும்பிட்டபடி,

 

“ரொம்ப நன்றி தம்பி…” என்று விட்டு சென்றார்.

 

ராஜதுரை, “தப்பான இடத்துல மோதிட்டேலே…” என ஆத்திரமாகக் கூற, துருவ் அவருக்கு பதில் கூற வரும் முன் அவனிடம் ஓடி வந்த ஜெய்,

 

“வேணாம் மச்சான்… நாம இங்கிருந்து போயிரலாம்லே… இவியல பார்த்தா அம்புட்டு நல்லவங்களா தெரியல… பிரச்சினை வேணாம்லே..” என்று விட்டு துருவ்வை இழுத்துக்கொண்டு சென்றான்.

 

துருவ் செல்லும் வழியில் திரும்பி ராஜதுரையைப் பார்க்க, அவரின் பார்வையும் அவன் மீது தான் பதிந்து இருந்தது.

 

துருவ் சென்றதும் தன் அடியாட்களிடம் ராஜதுரை, “இந்தப் பயல பத்தி உடனே விசாரிலே.. இந்த ராஜதுரையையே எதிர்த்து பேசுற அளவுக்கு இந்தப் பொடிப் பயலுக்கு அம்புட்டு தைரியமாலே… அவன இப்பவே அடக்கி வைக்கணும்…” என்றார் கோபமாக.

 

_______________________________________________

 

தன் ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் அன்று மாலை தன் கையிலிருந்த கைப்பேசியைப் பார்த்தபடி தனக்குள் சிரித்துக்கொண்டிருந்தாள் அருணிமா.

 

கைப்பேசித் திரையில் துருவ்வின் பக்கவாட்டுப் புகைப்படம் ஒன்று இருந்தது.

 

கல்லூரி இறுதி நாளன்று துருவ்வை மறைந்து நின்று எடுத்த புகைப்படங்கள் அவள் கைப்பேசியை நிறைத்து இருந்தன.

 

துருவ்வின் புகைப்படத்தை பார்த்து வெட்கப்பட்ட அருணிமா, “எம்புட்டு அழகா இருக்கியேலே மாமா நீயி… என் கண்ணே பட்டுரும் போல இருக்கு… திரும்ப உன்ன எப்போ பார்ப்பேன்னு இருக்கு மாமா…” என்றவள் துருவ்வை முதல் முறை சந்தித்த தருணத்தை நினைத்துப் பார்த்தாள்.

 

_______________________________________________

 

அருணிமா கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் வேளை அது.

 

மதிய இடைவேளையின் போது அருணிமா வகுப்பை விட்டு வெளியே வர மாணவிகள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து நின்று ஏதோ கிசுகிசுத்துக்கொண்டிருந்தனர்.

 

அருணிமா அவர்களைப் பார்த்து புருவம் சுருக்கியபடி கடந்து செல்ல எங்கிருந்தோ ஓடி வந்து அவளைப் பிடித்துக்கொண்டாள் அருணிமாவின் நண்பியான காயத்ரி.

 

தன் முன்னே மூச்சிறைக்க நின்றிருந்தவளைக் கேள்வியாக ஏறிட்ட அருணிமா, “எதுக்குலே இம்புட்டு வெறசா ஓடி வர… ஏதாவது பேய் கீய கண்டியா என்ன…” எனக் கேலி செய்தாள்.

 

அருணிமாவின் தோளில் தட்டி அவள் சிரிப்பை நிறுத்திய காயத்ரி, “நீ வேற… பேய பார்த்து ஒன்னும் நான் ஓடி வரல… ஒரு ஆண் தேவதையைப் பார்த்துட்டு ஓடி வரேன்..” எனக் கண்களை மூடி ரசனையாகக் கூற, அவளைக் கேவலமாக ஒரு பார்வை பார்த்த அருணிமா,

 

“வர வழில எங்குட்டாவது விழுந்து தொலச்சியாலே… கண்டதையும் உளறிட்டு இருக்க..” என்றாள்.

 

தன் நெஞ்சில் கை வைத்த காயத்ரி, “ஆமா… விழுந்துட்டேன்… அவன் அழகுல மயங்கி விழுந்துட்டேன்…” என்றாள் மீண்டும் கண்களை மூடியபடி.

 

அருணிமாவிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் கண்களைத் திறந்து பார்த்த காயத்ரி தன் முன்னே அருணிமாவைக் காணாது தேட, அவளோ மைதானம் பக்கம் சென்று கொண்டிருந்தாள்.

 

அவசரமாக அருணிமாவிடம் ஓடிய காயத்ரி, “ஏன்டி பேசிட்டு இருக்கும் போது பாதில விட்டுட்டு போற..” எனக் கோபமாகக் கேட்க,

 

அருணிமா, “ஓஹ்.. என் கிட்ட தான் பேசிட்டு இருந்தியா… நான் ஏதோ நீ வேற உலகத்துக்கு போயிட்டதா நெனச்சேன்…” என்க,

 

காயத்ரி, “நீ தான் முரட்டு சிங்கிளாச்சே… உனக்கு எங்க அதெல்லாம் புரிய போகுது… எவன் வந்து பிரபோஸ் பண்ணாலும் உன் ஊரு பாஷையால அவன கேவலமா திட்டி திரும்ப உன் பக்கமே தலை வெச்சி படுக்காதபடி செய்வ… நீயா எவனையும் லவ் பண்ணவும் மாட்டேங்குற… நீ கடைசி வரை கட்ட பிரமச்சாரியா தான் இருக்க போற.. வேணும்னா பாரு…” என்கவும் அவளை முறைத்த அருணிமா,

 

“யாருலே சொன்னது நான் எவனையும் லவ் பண்ண போறது இல்லன்னு… இந்த அருணிமாக்கு ஏத்த ஒருத்தன் இன்னும் என் முன்னாடி வரல…” என்றாள் இல்லாத காலரைத் தூக்கி விட்டபடி.

 

காயத்ரி, “ஆமா ஆமா… அப்படி ஒருத்தன் இனிமே பொறந்து தான் வரணும்… சரி அதை விடு.. நான் சொல்ல வந்த விஷயத்தையே மறந்துட்டேன் பாரு… செம்ம ஹேன்ட்சமான பையன் ஒருத்தன் நம்ம டிப்பார்ட்மென்டுக்கு சேர்ந்து இருக்கான்… நம்ம க்ளாஸ் பொண்ணுங்க அத்தனை பேர் கண்ணும் அவன் மேல தான்… பார்த்ததும் விழுந்துட்டேன்டி… என்னா அழகு… ஆனா சிரிப்புன்னா என்ன விலைனு கேட்பான் போல… ரொம்ப ஸைலன்ட் டைப் போல… ஒரு தடவ நீ அவனை பார்த்தேன்னு வை… நீயும் விழுந்துடுவ…” என்கவும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள் அருணிமா.

 

அருணிமா, “ஏன்லே காமெடி பண்ணிட்டு இருக்க… அதான் நீயே சொல்லிட்டியே ரொம்ப ஸைலன்ட் டைப்னு… அவன்லாம் எனக்கு செட்டாக மாட்டான் புள்ள… நம்ம ரேன்ஜே வேற… இந்த அருணிமாவ காதலிக்கிறவன் கிட்ட தனி கெத்து இருக்கணும்லே… ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கூட ஒருத்தன பார்த்து இதே போல தான்லே நீ சொன்னீய… கேட்டா க்ரஷ்ஷாம்…” என சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர்களின் சக வகுப்பு மாணவனான தினேஷ் தயங்கித் தயங்கி அவர்களின் முன் வந்து நின்றான்.

 

காயத்ரி மெதுவாக அருணிமாவின் காதில், “வந்துட்டான் இன்னொருத்தன்… நான் போறேன்மா… என்னால உன் தேன் வடியுற வார்த்தையெல்லாம் கேட்டுட்டு இருக்க முடியாது… நீயே சமாளிச்சுக்கோ…” என முணுமுணுத்தவள் அங்கிருந்து நழுவினாள்.

 

காயத்ரி சென்றதும் அருணிமா தன் முன் நின்றவனைக் கை கட்டி கேள்வியாகப் பார்க்க, அவனோ தயங்கியபடி நிற்கவும் அவனைக் கடந்து செல்ல முயன்றாள்.

 

தினேஷ், “அருணிமா நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்கவும் நின்று நிதானமாகத் திரும்பிப் பார்த்த அருணிமா, “ஹ்ம்ம்..” என்றாள் சரி எனும் விதமாக.

 

அதில் தைரியம் வரப் பெற்ற தினேஷ், “நான் உன்ன ரொம்ப நாளா சின்சியரா லவ் பண்ணிட்டு இருக்கேன்…” எனும் போதே அருணிமா, “நாட் இன்டரஸ்டட்…” என்றாள் பட்டென்று.

 

தினேஷ், “அழகா இருக்கேன்னு திமிரா… நீ என்னை லவ் பண்ணி தான் ஆகணும்… ரொம்ப சீன் போடாதே…” என்கவும் நக்கலாக சிரித்த அருணிமா,

 

“இதான்லே நீயி… என்னவோ ரொம்ப நல்லவனாட்டம் வந்து பேசினீய… எனக்கு உன்ன பத்தி முன்னாடியே தெரியும்லே… இன்னைக்கு யாரையும் திட்டுற மூட்ல நான் இல்ல.. அதனால தான் அமைதியா பேசிட்டு இருக்கேன்… என்ன… உன் ஃப்ரெண்ஸ்ட பெட் கட்டிட்டு வந்து இருக்கியாலே… போய் அவனுங்க கிட்ட சொல்லு இந்த அருணிமா அவ்வளவு சீக்கிரம் எவனோட நடிப்புக்கும் ஏமாற மாட்டேன்னு…” என்றவள் திரும்பி செல்லப் பார்க்க, அவள் கையைப் பிடித்து இழுத்தான் தினேஷ்.

 

அதில் ஆத்திரமடைந்த அருணிமா தினேஷை அடிக்கத் திரும்ப, அதற்குள் அருணிமாவின் கையை விட்டிருந்தான் தினேஷ்.

 

அருணிமா திரும்பிப் பார்க்க, தினேஷின் கரத்தை முறுக்கியபடி நின்றிருந்தான் துருவ்.

 

அருணிமாவின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

 

துருவ், “அதான் அந்தப் பொண்ணு பிடிக்கலன்னு சொல்றால்ல… பின்ன எதுக்கு அவ சம்மதமில்லாம கைய பிடிச்சு இழுக்குற… உண்மையான ஆம்பளையா இருந்தா பொண்ணுங்க கிட்ட இவ்வளவு சீப்பா பிஹேவ் பண்ண மாட்டான்… உண்மையா காதலிக்கிறதா இருந்தாலும் அந்தப் பொண்ணோட உணர்வுக்கு மதிப்பளிக்கணும்… காதல வலுக்கட்டாயமா வர வைக்க கூடாது… திரும்ப எந்தப் பொண்ணு கிட்டயாவது இப்படி நடந்துக்குறத பார்த்தேன்…” என விரல் நீட்டி தினேஷை எச்சரிக்க,

 

“இல்ல இல்ல… நான் இனிமே இப்படி பண்ண மாட்டேன்… என்னை விட்டுருங்க…” என வலியில் கெஞ்சவும் அவன் கையை விட்டான் துருவ்.

 

துருவ் விட்டதும் தினேஷ் இருந்த இடம் தெரியாமல் ஓடி விட, இன்னும் துருவ்வையே விழி அசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அருணிமாவை ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து சென்றான் துருவ்.

 

துருவ் சென்று பல நொடிகள் கடந்த பின்னும் இன்னும் அதே இடத்தில் நின்று அவன் சென்ற திசையைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்த அருணிமாவிடம் வந்த காயத்ரி,

 

“என்னாச்சு அருணி… அந்த ஹேன்ட்சம் பையன் எதுக்கு இங்க வந்தாரு… தினேஷ் ஏன் அப்படி ஓடினான்… என்ன சொன்னாரு… உன் கூட பேசினாரா… ஏன் நீ இப்படி நிற்கிற… ச்சே… நான் மிஸ் பண்ணிட்டேனே… உனக்கு தான் பிடிக்கலன்னு சொல்லிட்டியே… அவன் வந்தப்போ எனக்கு ஒரு கால் பண்ணி இருக்கலாம்ல… நானாவது வந்து பேசி அந்தப் பையன இம்ப்ரஸ் பண்ணி இருப்பேன்…” எனத் தன் பாட்டுக்கு பேசிக்கொண்டு போனாள்.

 

அருணிமாவோ காயத்ரியின் பேச்சைக் காதிலே போட்டுக் கொள்ளாது துருவ் சென்ற திசையிலேயே புன்னகையுடன் நடந்தாள்.

 

“என்னாச்சு இவளுக்கு திடீர்னு…” என்ற காயத்ரி அருணிமாவைப் பின் தொடர்ந்தாள்.

 

_______________________________________________

 

அன்றைய நிகழ்வில் மூழ்கி இருந்த அருணிமா துருவ்வின் புகைப்படத்தைப் பார்த்து, “எவனுக்குமே அவ்வளவு சீக்கிரம் மடங்க மாட்டேன்னு எகத்தாளமா சுத்திட்டு இருந்தேன்… ஹ்ம்ம்… ஆனா உன்ன பார்த்ததும் உன் பக்கம் விழ வெச்சிட்டியேலே..” என்றாள் புன்னகையுடன்.

 

அறைக்கதவு திடீரென திறக்கப்படவும் பதட்டமான அருணிமா கைப்பேசித் திரையை அவசரமாக மறைத்தாள்.

 

அருணிமாவின் பதட்டமான முகத்தைப் பார்த்தவாறே வந்த விஜயா, “என்னாச்சு புள்ள… ஏன் இம்புட்டு வேர்க்குதுலே…” என்க,

 

முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்ட அருணிமா, “ஒன்னுமில்ல ஆத்தா…” என்கவும்,

 

“சரி சாப்பிட வாலே… உங்க ஐயன் வந்த நேரத்துல இருந்து எதுக்கெடுத்தாலும் எரிஞ்சி விழுந்திட்டு இருக்காரு… இன்னைக்கு எந்த பயலோட தலைய அறுத்துட்டு வந்திருக்காருன்னு தெரியல… இவர் பண்ற பாவம் எல்லாம் எங்க தலைல தான் விடிய போகுது…” என கண்ணைக் கசக்கிக்கொண்டு சென்றார் விஜயா.

 

தாயின் பேச்சில் அவ்வளவு நேரம் இருந்த மொத்த மகிழ்ச்சியும் வடிந்து விட, பெருமூச்சு விட்டபடி எழுந்து கீழே சென்றாள் அருணிமா.

 

கூடத்தில் ராஜதுரை யாருடனோ கோபமாக பேசிக்கொண்டிருந்தார்.

 

ராஜதுரை, “ஊருக்கு புதுசா அவன்… அந்தப் பயல பத்தின மொத்த தகவலும் உடனே எனக்கு வரணும்லே…” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தார்.

 

அருணிமா அவர் அருகில் வரவும், “வா புள்ள.. வந்து இங்குட்டு உட்காருலே..” என்கவும் தந்தையின் அருகில் அமர்ந்தாள் அருணிமா.

 

ராஜதுரை, “என்ன தாயீ ஒரு மாதிரியா இருக்க… எந்தப் பயலாவது வம்பு பண்ணுறானாலே..” என்கவும் மறுப்பாக தலையசைத்தாள் அருணிமா.

 

“சரில… உனக்கு பரீட்சை என்னைக்கு இருக்கு…” என ராஜதுரை கேட்கவும் அருணிமா, “இன்னும் ஒரு வாரத்துலப்பா… உங்க காலேஜுல தான் வைக்கிறாய்ங்க போல…” என்க,

 

ராஜதுரை, “நல்லதாப் போச்சுலே… ஆமா அது என்ன உங்க காலேஜ்… என் வாரிசு நீயி… இந்த மொத்த சொத்தும் உனக்கு தான்ல…” என்கவும் வேறு வழி இல்லாமல் தலையசைத்தாள் அருணிமா.

 

_______________________________________________

 

“என்ன மச்சான் இன்னும் கோவமா இருக்க… அதான் அந்தாளு அடிக்க முன்னாடி போய் தடுத்திட்டியே…” என இன்னும் கோபம் குறையாமல் நின்றிருக்கும் துருவ்விடம் கேட்டான் ஜெய்.

 

துருவ், “பின்ன என்னடா… இந்த உலகத்துல பொறந்த ஒவ்வொருத்தருக்கும் படிக்க முழு உரிமையும் இருக்கு… அதைப் போய் சாதி அது இதுன்னு சொல்லி தடுத்துட்டு இருக்காரு… இன்னுமாடா இவங்க மாறாம இருக்காங்க…” என்றான் கோபமாக.

 

ஜெய், “விடுல… இவனுங்கள திருத்த முடியாது… இவிய ரெத்தத்துல சாதி வெறி ஊறி போய் கிடக்குது… இவியல முதல்ல அழிச்சா தான் இதுக்கு ஒரு முடிவு வரும்…” என துருவ்வை சமாதானம் செய்ய, சற்று நேரம் அமைதியாக இருந்த துருவ் தன் மனதில் ஏதோ உறுதி செய்து கொண்டான்.

 

ஜெய், “எதுக்குலே அந்த பெரியவரோட அட்ரச வாங்கின… என்ன பண்ண போறலே நீயி..” என்க,

 

“நல்ல வேலை டா ஞாபகப்படுத்தின… உடனே அண்ணன் கிட்ட சொல்லி அந்தப் பையன் படிக்க ஏற்பாடு பண்ணனும்…” என்றான் துருவ்.

 

ஜெய், “சரிலே… இருட்டிடுச்சு.. வீட்டுக்கு போலாம்ல.. ஆத்தா கிட்ட கூட நாம வரதா சொல்லல… இன்னைக்கு ராத்திரி திண்ணைலயே தூங்க வேண்டியதா போகும்..” என்றவாறு துருவ்வை அழைத்துக்கொண்டு சென்றான்.

 

இருவரும் சென்று ஒரு வீட்டின் முன் நின்று கதவைத் தட்ட சற்று வயதான பெண்மணி ஒருவர் வந்து கதவைத் திறந்தார்.

 

வாசலில் புன்னகையுடன் நின்ற ஜெய்யையும் துருவ்வையும் கண்டவர், “எலேய் கண்ணுங்களா… இந்த ஆத்தாவ பார்க்க வந்திட்டியாலே… எம்புட்டு காலமாச்சு ரெண்டு பேரையும் பார்த்து… துருவ் கண்ணா… என்ன இப்படி எழச்சி போய் கிடக்க… சரியா சாப்பிடுறியாலே..” என்கவும் அவரை அணைத்துக்கொண்ட துருவ்,

 

“நான் நல்லா இருக்கேன்மா… நீங்க எப்படி இருக்கீங்க… உங்க சமையல ரொம்ப மிஸ் பண்ணேன்மா… அங்க சாப்பாடு எதுவும் பிடிக்கவே இல்ல…” என்றான் சோகமாக.

 

“அதான் வந்துட்டியலே… இனிமே என் புள்ளைங்களுக்கு வாய்க்கு ருசியா சமச்சி போடுறது தான் என் வேலை…” என்கவும் தன் தொண்டையை செறுமினான் ஜெய்.

 

“ஜெய் கண்ணா… என்னல அமைதியாவே இருக்க..” என்கவும்,

 

உதட்டை சுழித்த ஜெய், “உங்களுக்கு இவன் மட்டும் தானே கண்ணுக்கு தெரியுறான்…” என்க,

 

“என் மவனுக்கு கோவம் வந்திடுச்சா என்ன… எனக்கு ரெண்டு பேருமே ஒன்னு தான்லே… உன் நடிப்ப இந்த ஆத்தா கிட்ட காட்டாதே படுவா…” என்கவும் சிரித்த ஜெய்,

 

“கண்டுபிடிச்சிட்டியே ஆத்தா… பலே கில்லாடி தான் நீயி…” என்றான்.

 

“வாய் வாய்…” என ஜெய்யின் காதைத் திருகியவர், “நான் ஒருத்தி கூறு கெட்டவ… புள்ளைங்கள வாசல்லயே நிக்க வெச்சி பேசிட்டு இருக்கேன்… உள்ள போலாம்ல..” என்று விட்டு உள்ளே செல்ல அவரைப் பின் தொடர்ந்தனர் இருவரும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
9
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments