
மரம் தேடும் மழைத்துளி 8
சரவணன், தினமும் மாலை ஏழு மணிக்கு மேல், சேத்தூரில் இருக்கும் தனது பெற்றோருக்கு போன் செய்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
வழக்கத்திற்கு மாறாக, மதிய உணவு இடைவேளையின் போதே கிருஷ்ணன், சரவணனை அழைத்திருந்தார். மொபைலில் அப்பாவின் அழைப்பு என்பதை பார்த்ததும் ஒரு நிமிடம் பதறிப் போனான்.
தற்போது போல அன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன்கள் கிடையாது. வெறும் பட்டன் ஃபோன்களை தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருந்தோம். நேரம் கெட்ட நேரத்தில், போன் செய்தால் அது கண்டிப்பாக துக்க செய்தியாக இருக்கும் என்று ஒவ்வொருவரும் பயம் கொள்வது இயல்பே.
“ஹலோ அப்பா…” என்று அவன் அழைத்த விதத்திலேயே, பயத்தில் விளிக்கிறான் என்று புரிந்து கொண்டார் கிருஷ்ணன்.
“சரவணா, சரவணா. பயப்படாதப்பா. ஒரு சந்தோஷமான விஷயம் சொல்றதுக்காக போன் போட்டுட்டேன்.”
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட சரவணன், “சரிப்பா… சுந்தரிக்கு புதுசா நகை ஏதும் வாங்கி இருக்கீகளா?”
சிரித்துக் கொண்ட கிருஷ்ணன், “அதெல்லாம் போதுமான அளவுக்கு இருக்கு. சுந்தரிக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கோம். வர்ற ஞாயிற்றுக்கிழமை பொண்ணு பார்க்க வராங்க. அதான் நீயும் லீவ் சொல்லிட்டு வந்துடுன்னு சொல்றதுக்காக கூப்பிட்டேன். அம்மா போன் போடேலயே சொன்னா. நேரம் கெட்ட நேரத்துல போன் பண்ண வேண்டாம். அவன் என்னமோ ஏதோன்னு பயப்பட போறான்னு. எந்த ஷிப்ட் போயிட்டு வந்திருக்கான்னு தெரியாது. உறங்குகிறானோ முழிச்சிருக்கானோன்னு சொன்னாள். நான் தான் ஒரு அவசரத்தில் பண்ணிட்டேன். இப்ப வீட்ல இருக்கியா வேலையில இருக்கியா?”
“நான் இப்போ ரூம்லதான் ப்பா இருக்றேன். நைட் வேலைதான்.”
“சரி சாப்பிட்டு தூங்கு.” என்று சொன்ன கிருஷ்ணன், இணைப்பை துண்டித்துக் கொண்டார்.
மாலையில், கிருஷ்ணனும், லட்சுமியும் முருகன் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.
பார்வதி, வாங்கய்யா. வா…லட்சுமி, என்று வரவேற்று அமர்வதற்கு பாய் விரித்து விட்டார்.
லட்சுமியும், கிருஷ்ணனும் பாயில் அமர்ந்தார்கள்.
“முருகன் இன்னும் வேலையை விட்டு வரலையா?” என்று கிருஷ்ணன் கேட்க.
பார்வதி, “வந்துட்டான்ய்யா, மாடியில் இருக்கிறான் கூப்பிடுறேன். என்று வாசலுக்கு வெளியே எட்டிப் பார்த்து. சத்தமாக “முருகா… சித்தப்பா வந்திருக்காரு.” என்று அழைத்தார்.
மாடியில் இருந்த முருகனும், ருக்மணியும். ஒன்றாக கீழே இறங்கி வந்தார்கள்.
ருக்மணி, “வாங்க மாமா. வாங்க அத்தை.” என்றபடி வீட்டுக்குள் நுழைந்தாள்.
அவளை பின் தொடர்ந்து வந்த முருகன், “சித்தப்பா, சுந்தரிக்கு கல்யாணம் முடிவாயிருக்கா?”
“எங்க முருகன், கரெக்டா கண்டுபிடிச்சிடுவான்.” என்று லட்சுமி பெருமைப்பட்டுக் கொண்டார்.
“அப்படியா??? மாப்ள நம்ம சொந்தக்காரங்களா? அந்நியமா?” என்று பார்வதி கேட்க.
“அந்நியம்தான் மதினி.” என்று கிருஷ்ணன் சொல்ல.
முருகன், “தம்பிபட்டிக்கார மாப்பிள்ளை வந்ததா, என் கூட்டாளி கருப்பு சொன்னான். அவர் தானா? வேற யாருமா சித்தப்பா?”
“அவரே தான்.”
லட்சுமி, “கருப்புக்கு சொந்தக்காரரா?”
முருகன் அவனுக்கு சொந்தக்காரர் கிடையாது நம்ம ஊருக்குள்ள வரும்போது அவன் கிட்ட வீட்டுக்கு வழி கேட்டு இருக்காங்க அவனும் பதிலுக்கு விவரம் கேட்டு இருக்கிறான் அதனால அவனுக்கு தெரியும்.
கிருஷ்ணன், “ஆமா முருகா. அவங்க அப்பாவும் அம்மாவும் வந்து பார்த்துட்டு போனாங்க. மாப்பிள்ளைக்கு இன்னும் ஒரு வாரம் லீவு இருக்கிறதா சொல்லி இருக்காங்க. அந்த லீவுக்குள்ள பார்த்து பேசி முடிவு பண்ணிட்டு போறாங்களாம். அடுத்த லீவுக்கு வரும்போது கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லி இருக்காங்க. அதான் வர ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க வரச் சொல்லி இருக்கேன். நீயும் உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வந்துரு.” என்று சொன்னவர் பார்வதியை, “மதினி உங்களை சொல்லலன்னு நினைக்காதீங்க நீங்களும் வந்துருங்க”. என்று சொல்லிவிட்டு. “அப்ப நாங்க கிளம்புறோம்.” என்றதும்
ருக்மணி, “ஒரு காப்பி தண்ணி குடிச்சிட்டு போங்க மாமா.” என்று நிறுத்த.
பார்வதி, “நான் கூட அயத்துப் போனேன். பாருங்க.” என்று சொல்ல.
லட்சுமி, ஒன்னும் வேண்டாம். நம்ம வீட்ல காபி குடிக்கிறதுக்கு நேரமே இல்லையா? எப்பவேண்ணாலும் குடிக்கலாம்.” என்று சொல்லிவிட்டு லட்சுமியும் கிருஷ்ணனும் வெளியேறி சென்றார்கள்.
சனிக்கிழமை பகல் பொழுதில் வேலையை முடித்துக் கொண்டு. சென்னையில் இருந்து புறப்பட்டான் சரவணன். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் சேத்தூருக்கு வந்து சேர்ந்தான்.
ருக்மணியும், முருகனும் காலையிலேயே கிருஷ்ணன் வீட்டுக்கு வந்து விட்டார்கள். ருக்மணி, சுந்தரியை அலங்காரம் செய்துகொண்டு. அவளோடு சேர்ந்து இருந்தாள்.
சுந்தரியை பெண் பார்க்க வந்திருந்த மாப்பிள்ளை வீட்டார்கள் 10 பேர், தவேறா வண்டியில் வந்து இறங்கினார்கள்.
கிருஷ்ணனும், லட்சுமியும் வாசலில் நின்று அவர்களை வரவேற்று. வீட்டில் அமரச் செய்தார்கள்.
பெண் தரகர், “மாப்பிள்ளையோட அம்மா அப்பாவை உங்களுக்கு தெரியுமில்ல கிருஷ்ணன் அண்ணாச்சி?”
கிருஷ்ணன், எங்களுக்கு தெரியும் தரகரே, எங்க சொந்தக்காரங்களுக்கு தெரியாதுல்ல. நீங்க கொஞ்ச நேரம் அமைதியா உட்காருங்க நாங்க பேசிக்கிறோம்.”
தரகர், “அதுக்கு இல்ல. நான் என்ன சொல்ல வரேன்னா?”
முருகன், “நாங்க எதுக்க எதுக்க(எதிர் எதிராக) உட்கார்ந்து இருக்கிறோம். எங்களை நாங்களே அறிமுகப்படுத்திக்கிறோம் ஐயா… உட்காருங்க.”
மாப்பிள்ளையின் தகப்பனார், கிருஷ்ணனிடம், முருகனை “இது உங்க மூத்த பையனா?” என்று விசாரிக்க.
கிருஷ்ணன், “ஆமா அது எங்க வீட்டோட மூத்த பையன். எனக்கு, கூட பிறந்த அண்ணே மகன். பேரு முருகன். ருக்மணியை காட்டி இது அவனோட சம்சாரம். கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆகுது. பெரிய பெரிய வீட்டு வேலை எல்லாம் எடுத்து பார்க்கறான். எங்க ஊர்லயே பெரிய கொத்தனார்” என்று சொல்லும் போது . சமையல் கட்டில் இருந்து வெளியே வந்த பார்வதியை காட்டி “இது எங்க மதினி, முருகனோட அம்மா.” என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.
பார்வதி மரியாதை நிமித்தமாக, கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தார்.
மாப்பிள்ளையின் தகப்பனார், “எம்பேரு குருசாமி. இது என்னோட சம்சாரம், சுசீலா. எங்களுக்கு பூர்வீகம் தம்பிபட்டிதான். எங்க ஊர்ல பெரிய பண்ணையம் பாக்குறது, எங்க குடும்பம் தான். வீடு, வாசல், மாடு கண்ணுக்கு குறையில்லை. இது என்னோட மகள் அன்னமயில். இது என்னோட மாப்ள செந்தில். எங்க பேரங்க. சூர்யா, விஜய். இது எங்க அம்மா. இவன்தான் மாப்பிள்ளை, லிங்கம். இவ்வளவும் என்னோடு குடும்பம் மட்டும்தான். எனக்கு நாலு அண்ணனும், மூணு அக்காவும் இருக்காக. அவக குடும்பத்தி எல்லாம் சொல்லணும்னா, ஒரு நாள் போதாது.” என்று அவர் சொல்லி முடிக்க.
பார்வதியும், லட்சுமியும், அவர்களுக்கு சாப்பிட மிச்சரையும், காபியையும் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
கிருஷ்ணன் அவரது குடும்பத்தை அறிமுகப்படுத்தினார்.
“இது என்னோட சம்சாரம் லட்சுமி. இது என்னோட மூத்த மகன் சரவணன். இது எங்க அண்ணே மகள் கோமதி. அது எங்க அண்ணே மருமகன் சங்கர். கோமதியோட வீட்டுக்காரர். நீங்க பொண்ணு பார்க்க வந்திருக்கிறது என்னோட சின்ன புள்ள சுந்தரியை.”
அனைவருக்கும், லட்சுமியும், சரவணனும் கரம் கூப்பி வணக்கம் தெரிவித்து கொண்டார்கள். அதேபோல மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் கரம் கூப்பி வணக்கம் தெரிவித்து கொண்டார்கள்.
சுசீலா, “நம்மளே ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருக்கோம். பொண்ணை கூட்டிட்டு வந்து சபையிலே உட்கார வைங்க.
பார்வதி, “ருக்கு… சுந்தரியை கூட்டிட்டு வாம்மா.” என்றதும்
ருக்மணி, எழுந்து கொள்ள. அவளோடு மாப்பிள்ளையின் சகோதரி அன்ன மயிலும் சேர்ந்து எழுந்து கொண்டாள். இருவரும் ஒன்றாக சமையல் கட்டுக்கு பக்கத்து அறைக்கு சென்று. சுந்தரியை அழைத்துக் கொண்டு வந்தார்கள்.
சுந்தரி, இளமை தோற்றத்து லட்சுமியை போல அழகாக இருந்தாள். சுந்தரியை வீட்டில் நடு அறைக்கு அழைத்து வந்தார்கள்.
அங்கே அமர்ந்திருந்த சொந்த பந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு. அவர்களோடு சேர்ந்து தரையில் அமர்ந்து கொண்டாள் சுந்தரி. ருக்மணியும் அவளோடு சேர்ந்து அமர்ந்து கொண்டாள்.
சுசீலா, “பொண்ணு அவளோட அம்மா மாதிரியே அழகா இருக்கா.” என்று சொல்ல, லட்சுமிக்கு வெட்கம் ஒட்டிக்கொண்டது. லட்சுமி நாணச்சிரிப்போடு தலை கவிழ்ந்தார்.
அன்னமயில். அவர்கள் வாங்கி வந்திருந்த மல்லிகை பூச்சரங்களை எடுத்து. சுசிலாவின் கைகளில் கொடுத்து. “உன்னோட மருமகளுக்கு பூ வச்சு விடு”. என்று சொல்ல சுசீலா சந்தோஷமாக சுந்தரியின் தலையில் பூ வைத்து விட்டார்கள்.
அன்னமயில், “தரையவே பார்க்காதம்மா. நேரா நிமிந்து பாரு. என்னோட தம்பி முகத்தை பாரு. பிடிச்சிருக்கா பிடிக்கலையானு, நேருக்கு நேரா சொல்லு. கூச்சப்படாதே.” என்று சுந்தரியை தெம்பூட்டும் விதமாக சொல்ல.
சுந்தரி மெல்ல நிமிர்ந்து லிங்கத்தின் முகத்தைப் பார்த்தாள். இப்போது லிங்கம் நாணத்தில் தரையை பார்க்க.
செந்தில், “மாப்ள உங்க அக்கா உனக்கும் சேர்த்துதான் சொல்லி இருக்காள். நிமிந்து பொண்ணை பாரு.” என்று சொல்ல.
லிங்கமும் சுந்தரியின் முகத்தை பார்த்தான். இருவரது பார்வைகளும் அவர்களது அன்பை பரிமாறிக் கொண்டது.
அந்த நிகழ்வை வைத்தே அங்கிருந்த சொந்த பந்தங்கள் அனைவரும், பெண்ணுக்கு மாப்பிள்ளைையும். மாப்பிள்ளைக்கு பெண்ணையும் பிடித்திருக்கிறது என்று யூகித்துக் கொண்டார்கள்.
தரகர், “மேற்கொண்டு பேச வேண்டியது, எல்லாம் இப்பவே பேசிருங்க.”
கிருஷ்ணன், “எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு. நாங்க யாரு மனமும் கோணாத அளவுக்கு. எங்களால முடிஞ்ச அளவுக்கு நிறைவா செஞ்சுடுவோம்.”
குருசாமி, “எங்க பிள்ளைக்கு, நாங்க எதுவும் கேட்கிற அளவுக்கு, எங்களை ஆண்டவன் வைக்கல. எல்லாத்தையும் அள்ளி தான் கொடுத்து இருக்காரு. அதனால உங்க பொண்ணுக்கு உங்களால முடிஞ்சதை செய்யுங்க. நாங்க அதை தடை சொல்ல போறது கிடையாது. மேற்கொண்டு கேட்க போறதும் கிடையாது.” என்று பெருந்தன்மையாக சொல்ல.
தரகர், நமக்கு கமிஷன் ரேட் எவ்வளவு என்று தெரியவில்லையே என்று அமர்ந்திருக்க.
முருகன், “தரகருக்கு நீங்க எவ்வளவு கொடுக்கிறதா நினைச்சிங்களோ அந்த அளவுக்கு அதிகமாகவே கொடுத்துருங்க சித்தப்பா.” என்று தன்னுடைய சித்தப்பாவிடம் தரகரை சிபாரிசு செய்தான்.
குருசாமி, ‘நாங்களுமே தரகர் கேட்கிற பணத்தை கொடுத்துடனும்னு முடிவோட தான் இருக்கிறோம். எங்களுக்கு பொண்ணை ரொம்ப புடிச்சிருக்கு. எங்க பிள்ளைக்கும் பிடிச்சிருக்கு. இப்படி ஒரு பொண்ணை, கூட்டிட்டு வந்து காட்டுன தரகருக்கு நாங்க என்ன வேணும்னாலும் செய்யலாம்.”
தரகர், அவரது பெருந்தன்மையை காட்டும் விதமாக, நீங்க ரெண்டு பேரும். நான் கேட்கிறதை விட அதிகமா கொடுப்பிகனு தெரிஞ்சுதானே வாயவே திறக்கலை” என்றார்.
லட்சுமி, எல்லாரும் இருந்து சாப்பிட்டுட்டு போகலாமே. நாங்க அக்காளும் தங்கச்சியும் இருக்கோம். என் மருமகளும் ஒத்தாசைக்கு இருக்கா. கொஞ்ச நேரத்திலே சமையல் செஞ்சு முடிச்சிடுவோம்.
சுசீலா, “லிங்கம் ஊருக்கு போறதுக்கு முன்னாடி, ஒரு நாள் வந்து கை நெனச்சிடுவோம். அப்போ மூணு வேளையும் சமைச்சு போட்டு, எங்களை அனுப்பி வையுங்க.” என்று சொல்லி சிரித்தபடியே அனைவரும் கிளம்பி சென்றார்கள்.

