
மரம் தேடும் மழைத்துளி — அத்தியாயம் 22
முருகன், படுக்கையிலேயே இருந்து கொண்டு, உடல் உழைப்பின்றி உணவு உட்கொண்டு கொண்டே இருந்ததால் உடல் நலம் பெறவில்லை. மாறாக, உடல் பருமன் கூடியது போலத் தோன்றியது.
வைகாசியும் கடந்து ஆனியும் பிறந்துவிட்டது. முருகன், உடல் நலம் பெற்று மீண்டும் நடமாடி விடுவோம் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டான்.
ஒவ்வொரு நாளும் தன் உபாதைகளைக் கழிப்பதற்கே ஒருவர் அல்ல, இருவர் துணையை நாடி உயிர் வாழ வேண்டியிருப்பதை எண்ணியும்; இனிமேலும் தாய் மற்றும் மனைவிக்குத் தொந்தரவாக வாழக் கூடாது என்று எண்ணியும், தன்னைத் தானே அழித்துக் கொள்ள முடிவு செய்தான். எழுந்து நடமாட முடிந்திருந்தால் ஏதாவது புதிய வழியைத் தேர்ந்தெடுத்திருப்பான். படுக்கையே கதி என்று இருப்பவன் எவ்வாறு தன்னை அழித்துக் கொள்ள முடியும் என்று யோசித்துப் பார்த்தான்; ஏதும் வழி தோன்றவில்லை. வாய்க்குப் பூட்டுப் போட்டு வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் திட்டமிட்டான். அப்போதிலிருந்தே எந்த உணவைப் புகட்டினாலும், உள்ளிழுக்க முடியாதவன் போல வெளியே தள்ளிவிடுவான். பசியைத் பொறுக்க முடியாத சமயத்தில் தாகம் எடுப்பது போலப் பாவனை காட்டி, தண்ணீரை மட்டும் அருந்திக்கொண்டு உணவைத் தள்ளி வைத்தான்.
பார்வதி, சரவணன், கிருஷ்ணன், லட்சுமி என்று ஆளாளுக்கு அவனது முடிவை மாற்றிக் கொள்ள வற்புறுத்தி, உணவை ஏற்றுக் கொள்ளச் சொல்லி மன்றாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், முருகன் தான் எடுத்த முடிவில் திடமாக நின்றான். அவன் எடுத்த முடிவை எண்ணிக் கலங்கிப் போய் வாயடைத்து நின்றாள் ருக்மணி.
முருகனது இல்லம், தினம் ஒரு வற்புறுத்தலும், உறவுகளின் அழுகையுமாக, உறவினர்களின் வருகையாலும் ஒவ்வொருவரின் ஆற்றாமையாலும் களைத்துப் போய்க் கொண்டிருந்தது.
இறுதியில் முருகனே வெற்றி வாய்ப்பைப் பெற்றான். சரவணன் திருமணத்திற்கு 15 நாட்கள் இருக்கும் தருவாயில் முருகன் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்று சேர்ந்தான்.
ருக்மணியும், பார்வதியும் கதறி அழுதார்கள். சரவணன் உறவினர்களுக்குத் தகவல் சொல்லி வரவழைத்தான்.
மாரியம்மாள், தலையில் அடித்து அழுதுகொண்டு, தன் மகளுக்கும் தன்னைப்போலவே வாழ்க்கை அமைந்துவிட்டதை எண்ணித் துடித்தார்.
பார்வதி, மாரியம்மாளைப் பார்த்து, “அந்தக் காலத்துல நீ… புள்ளையைச் சுமக்கையிலே என் தம்பியைத் தூக்கிக் கொடுத்துட்ட. இப்ப உன் மகள் பிள்ளையைச் சுமக்கையிலே என் பிள்ளையைத் தூக்கி விட்டுட்டா. நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா? நானும் எத்தனை தடவை பிள்ளையைக் கலைக்கச் சொல்லி, உங்க கால்ல விழுந்து கெஞ்சாத குறையா கேட்டு இருப்பேன்? ஒரு தடவையாவது என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, நீ ஒரு பெத்தவளா இருந்து, அவளைக் கூட்டிட்டுப் போய் கருவைக் கலைச்சுக் கொண்டு வந்து விட்டிருந்தேன்னா, இன்னைக்கு நான் என் பிள்ளையை இழந்திருக்க மாட்டேனே!” என்று நெஞ்சில் அடித்து அழுதார்.
மாரியம்மாள், பார்வதி சொல்வது ஒரு வகையில் சரிதானோ என்று எண்ணி, “நான் பாவி மதினி… நான் பாவி. என் பிள்ளை பொழப்ப நானே கெடுத்துட்டேன். உங்க பேச்சைக் கேட்காமல் போயிட்டேன். நான் பாவி மதினி…” என்று அவரும் தலையில் அடித்து அழுதார்.
ருக்மணி ஐந்து மாதக் கருவைச் சுமந்துகொண்டு, தற்போது கணவனை இழந்துவிட்டாள். இந்த நிலையில் மாமியார் பேச்சைக் கேட்டுக் கருவைக் கலைத்திருந்தால், முருகனின் அன்பையும் அரவணைப்பையும் நினைவூட்டும் கருவை இழந்த பிறகு, முருகனையும் சேர்த்து இழந்துவிட்டு வாழ்வில் ஏதொரு பிடிப்பும் இல்லாமல் நின்றிருப்பாளே என்று எண்ணித் தன் தலையில் அடித்து அழுதாள்.
லட்சுமி, ருக்மணியை நோக்கி, “வயித்துப் பிள்ளைக்காரி தலையில அடிச்சு அழுகாதே. ஏங்கி அழுதால் ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடும். பிறகு உன்னைத் தூக்கிட்டு அலைய விட்டிராதே. அமைதியா இரும்மா…” என்று சொன்னார். அவர் சொன்ன வார்த்தைக்காகச் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தாள்.
முருகனுக்கு இறுதியாக நடக்கும் சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் வரிசையாக ஒன்றொன்றாக நடந்து கொண்டிருந்தன.
கல்யாணத்தில் அணிந்திருந்த பட்டு வேட்டி, பட்டுச் சட்டையை முருகன் உடலுக்கு அணிவித்து, தலையில் தலைப்பாகை கட்டி, மாப்பிள்ளை தோரணையில் துவண்டு கிடந்த முருகனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு இருந்தான் ரவி (ருக்மணியின் அண்ணன்).
அதேபோல ருக்மணிக்கும், கல்யாணத்தன்று அணிந்திருந்த பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டு, தலையில் மல்லிகைப் பூச் சூடி, நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டு வைத்து, அணிந்திருந்த திருமாங்கல்யத்தில் மல்லிகைப் பூ வைத்து, அனைவருக்கும் தெரியும் படி வெளியில் எடுத்துப் போட்டு, முருகனின் அருகில் அமர்ந்திருந்தாள்.
முருகனின் கை கட்டை விரலைப் பிடித்த வெட்டியான், ருக்மணியின் நெற்றியில் வைத்திருந்த பெரிய குங்குமப்பொட்டை அழித்துவிட்டான். அடுத்ததாக, ருக்மணியின் கழுத்தில் கிடந்த திருமாங்கல்யத்தில் முருகனின் கையை வைத்துப் பிடித்துக் கொண்டிருக்கும் படி செய்து, கத்தரிக்கோல் கொண்டு தாலியை அறுத்துவிட்டான். பின்பு தாலிச் சரடை முருகனின் வலது காலில் கட்டிவிட்டு, அதில் இருந்த தங்கத் திருமாங்கல்யத்தைப் பசும்பாலில் போட்டுப் பார்வதியிடம் ஒப்படைத்தான். ருக்மணியின் தலையில் சூடியிருந்த மல்லிகைப் பூவைப் பிடுங்கி, முருகனின் கழுத்தில் அணிந்திருந்த மாலையோடு சேர்த்துச் சூட்டிவிட்டு, முருகனின் உடலைப் பாடையில் ஏற்றினார்கள்.
நிறைகுடத்துத் தண்ணீரை ருக்மணியின் தலையில் ஊற்றி, ஈரம் கலையாமல் வீட்டுக்குள் செல்லும்படி சொல்லிவிட்டு, முருகனின் இறுதி ஊர்வலத்தைத் தொடங்கினார்கள்.
முருகனின் நண்பர்களான கதிர், கருப்பு, கணேசன் ஆகியோரோடு சரவணன் என நால்வரும் முருகனின் பாடையைச் சுமந்தபடி மெல்ல நடந்து மயானத்திற்குச் சென்றார்கள்.
இறுதிச்சடங்கான கொள்ளி வைக்கும் நிகழ்வைச் செய்ய முருகனுக்குக் குழந்தை இல்லை; அவனது தகப்பனும் இல்லை. அதனால், கிருஷ்ணன் தகப்பன் ஸ்தானத்தில் முருகனுக்குக் கொள்ளியை வைத்துவிட்டு வீடு திரும்பினார்.
பார்வதிக்கு இப்போது ருக்மணியின் மீது துளியளவும் இரக்கம் தோன்றவில்லை. அதற்குத் காரணம், தன் பிள்ளையின் சாவுக்கு ருக்மணியின் வயிற்றில் வளரும் கருவே காரணம் என்றும், அதைக் கலைக்க மறுத்த ருக்மணி தனக்கு அவசியமற்றவள் என்ற எண்ணம் தோன்றியதே ஆகும். பார்வதி, ருக்மணியைக் கண்ட இடத்திலெல்லாம் எரிந்து விழுந்தார்.
சரவணனின் திருமணம் மிகவும் நெருக்கத்தில் இருப்பதால், முருகனுக்குச் செய்ய வேண்டிய நிறைவு காரியத்தை ஐந்தாவது நாளில் செய்து முடித்துவிட்டு, அதன் பிறகு சரவணன் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்த கிருஷ்ணன், பார்வதியிடம் அனுமதி கேட்டார்.
பார்வதியும், “இறந்து போனவன் திரும்ப எழுந்து வரப்போவதில்லை; அதனால் நடக்க வேண்டியதை நல்ல முறையில் நடத்தி விடுங்கள்” என்று சம்மதம் தெரிவித்தார். அதன்படி, கடைசி காரியத்தை ஐந்தாவது நாளில் செய்து முடித்தார்கள்.
அதோடு பார்வதி தன் வீட்டில் இருந்த ருக்மணியைப் பற்றி, “இவள் இனி என் கண்ணுக்கு முன்பு இருக்கக் கூடாது. இவள் முகத்தைப் பார்க்கும்போது எனக்கு வரும் கோபத்தில், இவளை நானே ஏதாவது செய்து விடுவேனோ என்று தோன்றுகிறது. அதனால் அவளை அவளது தாய் வீட்டுக்கு அனுப்பி விடுங்கள்” என்று கிருஷ்ணனிடம் சொல்ல; கிருஷ்ணனும் மாரியம்மாளிடம் ருக்மணியை அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார்.
மாரியம்மாளும் ருக்மணியை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
கிருஷ்ணன் தன் வீட்டில் மகள், மகன், மனைவியுடன் அமர்ந்து, “வீட்ல ஒரு துக்க சேதி நடந்த பிறகு, ஊரைக் கூட்டிப் பிள்ளைக்குக் கல்யாணம் செய்யறது கொஞ்சம் சங்கடமா இருக்கு. அதனால வீட்டு மட்டுக்கும், பிள்ளையார் கோயிலில் வச்சுத் தாலி கட்டிக் கூட்டிட்டு வந்துருவோம். வெளியூர் சொந்தங்களுக்குச் சொல்லிக்க வேண்டாம். உள்ளுக்குள்ள நமக்குத் தெரிஞ்ச நாலு சொந்தங்களைக் கல்யாணத்துக்குக் கூப்பிடுவோம்” என்று கேட்க; லட்சுமி, “சரிங்க” என்று அரைமனதாகச் சம்மதம் தெரிவித்தார்.
சரவணன், “என்னப்பா பேசுறீங்க? இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லுவீங்கன்னு நெனச்சேன். நீங்க என்னப்பா பேசுறீங்க? கல்யாணத்த அடுத்த வருஷம் செஞ்சுக்கலாம்ப்பா…” என்று அதிர்ச்சி தரும் செய்தியைச் சொன்னான்.
கிருஷ்ணனும், லட்சுமியும் வியப்போடு சரவணனைப் பார்க்க, அவன் தொடர்ந்து பேசினான்: “செத்தது வேற யாரோ இல்ல, எங்க அண்ணன். என் கூடப் பிறக்கலைனாலும் அவன் உங்க கூடப் பிறந்தவரோட மகன். நாங்க எல்லாம் ஒண்ணும் மண்ணுமா இந்த வீட்டுக்குள்ள சிரிச்சு விளையாடி வளர்ந்தோம். இப்ப அவன் செத்ததும், வருத்தமே இல்லாம நான் எப்படிப்பா கல்யாணம் பண்ணிக்க முடியும்? ஒரு வீடு துக்கத்தில் இருக்கும்போது இன்னொரு வீட்ல சந்தோஷமான நிகழ்ச்சி நடத்துவது எப்படிப்பா நல்லா இருக்கும்? பெரியம்மா மனசு என்ன கஷ்டப்படும்னு கொஞ்சமாவது யோசிச்சீங்களா? அவங்க பிள்ளையைப் பறிகொடுத்துட்டு நிற்கையிலே நீங்க உங்க பிள்ளைக்குக் கல்யாணம் முடிச்சு வைக்குறீங்களா? அந்தத் தாயோட மனசு என்ன பாடுபடும்னு நினைச்சுப் பாருங்கப்பா. பேசாமல் பொண்ணு வீட்டுல சொல்லி, அடுத்த வருஷம் அண்ணனுக்கு வருஷ திதி கொடுத்ததற்கு அப்புறமா கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொல்லுங்க. சரின்னு சம்மதிச்சா அடுத்த வருஷம் கல்யாணம் முடிப்போம்; இல்ல முடியாதுன்னா வேற மாப்பிள்ளையைப் பாருங்கனு சொல்லிட்டு இதோட விட்டுடுங்க அப்பா” என்று அவன் மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லிவிட்டான்.
சுந்தரி, சரவணனை நோக்கி, “நீ சுலபமா சொல்லிட்டே. ஆனா பொண்ணு வீட்டுக்காரன் கல்யாணத்தை நிறுத்தி வைக்கிறதுக்கு என்ன பாடு படுவான்னு யோசித்துப் பார்த்தியா? அந்தப் பொண்ணு மனசு என்ன கஷ்டப்படும்னு நெனச்சியா?” என்றாள்.
சரவணன், “ஒரு உயிரே போயிருச்சு. அவங்க கல்யாணம் நின்னு போனதுக்கு வருத்தப்படுவது உனக்கு பெருசா தெரியுதா? சின்னப் புள்ள நீ, சின்னப் புள்ள மாதிரி இரு” என்றான்.
லட்சுமி, “சரவணா… அவ சொல்றதும் சரிதான். எனக்குமே பொண்ணு வீட்டுக்காரங்க கிட்ட எப்படிச் சொல்றதுன்னு ஒரே தவிப்பா இருக்கு. நாளைக்கு நானும், அப்பாவும் போயி பேசிப் பார்க்கிறோம். அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்த்துக்கிட்டு அதுக்கப்புறமா முடிவெடுப்போம்” என்றார்.
“நீங்களும் அவங்களும் என்ன முடிவு வேணும்னாலும் எடுங்க; ஆனால் எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்” என்று சொன்ன சரவணன், அங்கிருந்து எழுந்து வெளியே சென்றுவிட்டான்.
அடுத்த நாள் காலையில், சுபத்ராவின் பெற்றோர்களான மணியும் அன்னமும் சரவணன் வீட்டுக்கு வந்திருந்தார்கள். கிருஷ்ணனும் லட்சுமியும் அவர்களை வரவேற்று, அவர்களிடம் எப்படிப் பேச்சைத் தொடங்கலாம் என்று தெரியாமல் திணறிக்கொண்டு இருந்த வேளையில், அவர்களாகவே பேசத் தொடங்கினார்கள்.
மணி, “மாமா, கல்யாணத்தை கொஞ்சம் நாள் தள்ளி வச்சுக்கலாம். ஒரு வீட்டுக்குள்ள ஒருத்தவங்க கஷ்டப்படும்போது, இன்னொருத்தங்க சந்தோஷமா கல்யாணம் செய்றது ரொம்ப தப்பு. அவங்களோட (பார்வதியின்) ஆசீர்வாதமும் நம்ம பிள்ளைகளுக்கு வேணும். அதனால கல்யாணத்தை தள்ளி வச்சுக்கலாம்னு சொல்றதுக்காகத்தான் நானும் உங்க தங்கச்சியும் வந்தோம்” என்றார்.
கிருஷ்ணன், “ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை. நானும் இந்தத் தவிப்போடுதான் எப்படிப் பேசப் போறோம்னு இருந்தேன். நீங்களே என் மனசுல இருக்கிறதைப் படிச்ச மாதிரி சொல்லிட்டீங்க. சந்தோஷம்” என்று கண்கலங்கினார்.

