Loading

மரம் தேடும் மழைத்துளி 20

 

சமையல் கட்டில் நின்று கொண்டு, தாய் மகன் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த ருக்மணி, உண்மையிலேயே நெகிழ்ந்து போனாள். “ச்சே… இப்படி பக்குவமா ஆரம்பத்தில இருந்தே எடுத்து சொல்லாததால், பதராகி போயிட்டாரு. இனிமேலாவது அவருக்கு உண்மையான அன்புன்னால் எது? உண்மையான மனுஷங்க யாருன்னு, கூடவே இருந்து புரிய வைக்கணும். இன்னமும் வீம்பு பண்ணிக்கிட்டு இருக்கக் கூடாது.” என்று தனக்குத் தானே திட்டம் வகுத்துக் கொண்டாள்.

 

இரவில் மாடியறையில், முருகன் அமைதியாய் உட்கார்ந்திருந்தான். ருக்மணி இரவு நேர உணவை உண்டு முடித்துவிட்டு மாடியறைக்கு வந்தாள்.

 

எப்போதும் அடைத்தே கிடக்கும் அந்த அறையின் கதவு இன்று விசாலமாக திறந்திருந்தது.

 

அறைக்குள் ருக்மணி தனது காலடியை எடுத்து வைக்கும் போது, உள்ளிருந்த முருகன் “வா…ருக்கு” என்று வரவேற்பளித்தான்.

 

ருக்மணி தன் மனதில் “இப்போது பார்ப்பது இன்னும் ஒரு மாற்றம்” என்று எண்ணிக்கொண்டாள்.

 

முருகனின் அருகில் சென்றதும் ருக்மணியின் கையை பிடித்து அவன் அருகில் அமரச் சொன்னான். ருக்மணியும் மறுப்பு சொல்லாமல் அமர்ந்து கொண்டாள்.

 

முருகன், “இன்னைக்கு என் மனசு ரொம்ப லேசா தெரியுது’. என்று சொல்லும்போது ருக்மணி அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

முருகன், “ஏன்னு கேட்க மாட்டியா?”

 

ருக்மணி “அதுக்கு காரணம் எனக்கு தெரியுமே!” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு, பார்வையை திசை திருப்பாமல், கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“நானே சொல்றேன். அதுக்கு காரணம் நீதான். எங்க அம்மா கூடவே இத்தனை வருஷம் இருந்திருக்கேன். அவளோட கையாலயே சாப்பிட்டு வளர்ந்திருக்கேன். அப்படி இருந்தும் அவ மேல துளியும் நம்பிக்கை இல்லாமல், இவள் வயித்துல பிறந்துட்டோமேனு என்னை நானே கேவலமா நினைச்சுகிட்டு இருந்திருக்கிறேன். நேத்து என்கிட்டே அவளை பத்தி, நீயும் சொல்லாமலே இருந்திருந்தால், இன்னும் தப்பாவே நினைச்சுட்டு இருந்திருப்பேன். எங்க அம்மா நல்லவனு நீ சொல்லி நான் தெரிஞ்சுக்க வேண்டியதா போச்சேன்னு ஒரு சின்ன வருத்தம். இருந்தாலும் இப்பவாவது உன் மூலமா தெரிஞ்சுக்கிட்டேனே அது போதும். எங்க அம்மா ஆம்பளைக்கு ஆம்பளையா இந்த குடும்பத்துக்கு உழைச்சு கொட்டி இருக்கா. பொம்பளைக்கு பொம்பளையா இருந்து பொறுப்பா எங்களை வளர்த்து கவுரவம் குறையாம பார்த்துக்கிட்டு இருக்கா. அப்படிப்பட்டவளை நான் எவ்வளவு கேவலமா நினைச்சு இருக்கேன்னு பார்த்தியா? அது, என் மேல தப்பு இல்ல. எங்கப்பா என் மனசுல விதைச்சவிதை. அவர் சொன்ன வார்த்தை இன்னும் என் காதுக்குள்ள கேட்டுகிட்டு இருக்கு ருக்கு. எல்லாருக்கும் அம்மா எப்படி பாசமா இருக்கிறா, உங்க அம்மாவை பாரு, பேய் மாதிரி விழுவானு அவர் சொல்லி வாயை மூடவும். எங்க அம்மா ஆக்ரோஷமா கத்தி அவர் கூட சண்டை போடுவா. அப்போ… அப்பா சொன்னது உண்மையோனு யோசிப்பேன். அவர் அவளை சீண்டி கேட்கிறதும், அதுக்காக அவ கத்தினாங்கிறதும் எனக்கு தெரியாது. ஒரு நாள் எங்கப்பா, “நான் உன்னை விட்டுட்டு போகப்போறேன். நீ என்னோட புள்ள. உன்னை பிரிஞ்சு போறது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. இருந்தாலும் உங்க அம்மா கூட என்னால வாழ முடியாது. இனிமேல்

உனக்கு நான் அப்பா கிடையாது. உங்க அம்மா கூட வேலை பார்க்கிறானே மேஸ்திரி, அவன் தான் உன்னோட புது அப்பா. அவனுக்கும் உங்க அம்மாவுக்கும் குழந்தை பிறக்க போகுது. அதுதான் உன்னோட தம்பி. நீ என்னோட பிள்ளைங்கறதனால அவன் உன்னை கொலை பண்ணிடுவான். எச்சரிக்கையா இருந்துக்கோனு சொல்லிட்டு போயிட்டாரு அவர் சொன்னபடியே எங்க அம்மாவுக்கு கோமதி பிறந்தாள். சின்னப் பிள்ளையிலே கோமதியை எனக்கு சுத்தமா பிடிக்காது. அவ எங்க அம்மாவோட பிள்ளை. எனக்கு தங்கச்சி இல்லைனு நினைப்பேன். அவ வயசுக்கு வந்ததுக்கு அப்புறம் இந்த அவமானத்தை வெளியேத்தணும்னா யாருக்காவது கட்டிக் கொடுத்து அனுப்பி விடணும்னு வைராக்கியத்தோட, சம்பாதித்து நகை நட்டு போட்டு அவளுக்கு 17 வயசுல கல்யாணம் முடிச்சு குடுத்துட்டேன். அதை ஒவ்வொருத்தரும் பெருமையா சொல்லுவாங்க. ஆனால் என் மனசுக்குள்ள ஒரு சிறுமையான எண்ணம் இருந்திருக்குனு இப்பதான் தெரியுது ருக்கு.

 

ருக்மணி, “எனக்கு பெருமையா இருக்கு மாமா……”

 

முருகன், “நான் கோவிச்சுப்பேன்னு எனக்காக சொல்றியா?”

 

“இல்ல மாமா… கோமதி, உங்களோட தங்கச்சி என்கிற நினைப்பு இல்லாத சமயத்துல. யாரோட பிள்ளையோதானேன்னு அவளுக்கு வஞ்சனை செஞ்சுடாமல் நல்லபடியா கரையேத்தனும்னு நினைச்சீங்களே… யாரோட பிள்ளையும் எதுக்காக நம்ம கூட இருக்கணும்னு ஏதும் தப்பா முடிவு எடுக்காமல், அவளை தள்ளி வைக்கிறதுக்கு. கட்டிக் கொடுத்திடலாம்னு யோசிச்சீங்களே… கெட்ட எண்ணத்துலயும் நல்லதை யோசித்து இருக்கிறேங்களே அதுதான் பெருமைப்பட வேண்டிய விஷயம்.”

 

முருகன், நகைச்சுவைக்காக “அப்போ எங்க அப்பாவும் நல்லவர் தானே?” என்றதும்.

 

ருக்மணி, “என்னடா இது? திரும்பி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிடுச்சு.” என்று எண்ணியபடி விழி விரித்தாள்.

 

முருகன், “பிடிக்காத பொண்டாட்டி இனிமேலாவது நிம்மதியா இருக்கட்டுமேனு. அவளை விட்டுட்டு அவர் ஓடி போயிட்டாரே அதை சொன்னேன்.’”

 

விழி அகலா வியப்பில், முருகனை கட்டித்தழுவினாள் ருக்மணி.

 

சரவணன் குடும்பத்தில் இருந்து, கிருஷ்ணனும், லட்சுமியும் ஜோதிடரை சந்தித்து, கல்யாணத்திற்கு நாள் குறிக்க சென்றார்கள்.

 

ஜோதிடர் சரவணன் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து. “இந்த ஜாதகருக்கு ஆவணி மாசத்துக்கு மேல குரு பார்வை படுது. அதனால ஆவணி மாசம் கல்யாணத்த நடத்தினால் சிறப்பா இருக்கும்.”

 

“சாமி வைகாசி மாசம் நாள் நல்லா இல்லையா?” என்று லட்சுமி கேட்க.

 

“வைகாசி மாசம் இவருக்கு வேண்டாம்னு சொல்கிறேன். அதையும் மீறி வைகாசியில கல்யாணம் முடிச்சா ரொம்ப கஷ்டப்படுவாங்க. குரு பார்வை ஆவணி மாசத்துக்கு மேல தான் ஆரம்பிக்குது. அதனால அடுத்த வருஷம் கல்யாணம் நடத்தணும். அப்படித்தான் ஜாதகத்துல வாய்ப்பு இருக்கு. இப்போ நீங்க நினைக்கிற படி நடத்துவதற்கு ரொம்ப சிரமமும் எடுத்து போராடனும்.”

 

கிருஷ்ணன், “சரிங்க சாமி நீங்க ஆவணி மாசத்துலயே நாள் குறிச்சு கொடுங்க. என்ன நடக்கணும்னு இருக்கோ அதுபடி நடக்கட்டும்.” என்று நாள் குறித்து வாங்கிக் கொண்டார்.

 

அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமையில் அனைவரும் ஒன்றாக சுபத்ராவின் வீட்டிற்கு சென்று, சுபத்ராவுக்கு பூவைத்து சரவணனின் மனைவி சுபத்ரா என்று உறுதி செய்து கொண்டு வந்தார்கள். ஆவணி மாசத்தில் திருமணமா… இன்னும் ஆறு மாத காலம் இருக்கிறதே என்று சுபத்ராவின் குடும்பத்தார் தயக்கம் காட்டினாலும். குணமுள்ள மாப்பிள்ளை சரவணன். என்பதற்காக சம்மதம் தெரிவித்தார்கள்..

 

முருகனுக்கு வலது கை கட்டை விரலில் சிறிது வலி தொடங்கி இருந்தது. அதற்கு விக்ஸ், அமிர்தாஞ்சன் போன்ற வலி நிவாரணி களிம்புகளை தடவிக் கொண்டிருந்தான்.

 

முருகன், ருக்மணி தம்பதிக்கு அந்த மாதத்தில் அனைத்து நாட்களும் மகிழ்ச்சியோடு கழிந்தது. சித்திரை மாதம் தொடங்கியது, மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு காப்பு கட்டுதல் வைபவமும் தொடங்கியது. பத்து நாட்கள் திருவிழா கோலாகலமாக ஆரம்பம் ஆனது.

 

திருவிழா தொடங்கிய முதல் நாளில் இருந்து பத்து நாட்களும் முருகனும் ருக்மணியும் ஒன்றாக கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு வந்தார்கள் பதினோராவது நாள் மஞ்சள் நீராட்டு விழாவோடு சித்திரை திருவிழா நிறைவு பெறும்.

 

மஞ்சள் நீராட்டு விழாவை பற்றி சிந்திக்கும் போது தான் ருக்மணி இன்னும் தலை முழுகாமல் இருக்கிறாள் என்றே அறிந்து கொண்டாள்.

 

மனதிற்குள் நாட்களை எண்ணிப் பார்த்து கணக்கிட்டாள் மொத்தம் 35 நாட்கள் கழிந்திருக்கிறது என்று நினைத்து, சந்தோஷப்பட்டு கொண்டாள்.

 

முருகன், மறுநாள் நடக்க இருக்கும் மஞ்சள் நீராட்டு வைபவத்தை, எவ்வாறு கொண்டாடி களிக்கலாம் என்று திட்டம் வகுத்துக் கொண்டிருந்தான்.

 

மறுநாள் மஞ்சள் நீராட்டு, மங்களகரமாக தொடங்கியது. ருக்மணி இறுதி நாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.

 

மஞ்சள் தண்ணீர் தெளித்தாலும் தெரியாத மாதிரி இருக்கும் மஞ்சள் வண்ணத்தில் புடவையை எடுத்து கட்டிக் கொண்டிருந்தாள். மடிப்பு வைத்து எடுத்து சொறுகும் போது தன்னுடைய வயிற்றை, தானே தொட்டு மகிழ்ந்தாள்.

தன் வயிற்றில் இருக்கும் குழந்தை, தன் குடும்பத்து வாரிசு. அதை உறுதி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தவள், “கோவிலுக்கு போயிட்டு வந்ததும் மாமா கிட்ட ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகச் சொல்லணும்.” என்று எண்ணினாள்.

 

குழைத்த மஞ்சளை கையில் அள்ளிக் கொண்டு, ருக்மணியின் பின்புறம் வந்து நின்றான் முருகன். முருகன் பின்புறம் நிற்கிறான் என்று உணர்வால் அறிந்த ருக்மணி, “மாமா கோயிலுக்கு போகணும். முதல்ல கிளம்புங்க. போயிட்டு வந்ததுக்கு அப்புறம் ஆஸ்பத்திரி வரைக்கும் போயிட்டு வரனும்.”

 

“என்ன ருக்கு சொல்றே மேலுக்கு முடியலையா?”

 

“நாள் தள்ளி போயிருக்கு. ஏதும் பிரச்சனையானு பாக்கணும் மாமா.” என்று ஏதும் அறியாதவள் போல சொன்னவள் முருகனின் புறம் திரும்பினாள்.

 

முருகன் கையில் கொண்டு வந்த மஞ்சளை அவள் கன்னத்தில் தடவி விட்டான். “என்னடி சொன்னே நாள் தள்ளிப் போய் இருக்கா?” என்று ஆனந்த அதிர்ச்சி கேட்டான். அதீத சந்தோஷத்தில் அம்மா! அம்மா! என்று பார்வதியை அழைத்தான். கண்கள் சொருக மல்லார்ந்த நிலையில் அப்படியே தரையில் விழுந்தான்.

 

முருகன் அழைத்ததால் வந்த பார்வதியும், முருகனுக்கு முன்புறம் நின்று கொண்டிருந்த ருக்மணியும், கீழே விழுந்த முருகனை பார்த்து பதரிப்போய் “மாமா…” என்று ருக்மணியும், “முருகா…” என்று பார்வதி சத்தமிட.

 

பாவம் முருகனால் தன் நிலையை தெரிவிக்க முடியாமல், திணறலாய் படுத்துக் கொண்டிருந்தான்.

 

அவனை எழுப்ப முயன்றார்கள். கண்கள் திறந்து இருக்கிறான். கண்ணீர் வழிகிறது. வார்த்தை வர மறுக்கிறது. வாயில் நுறையாக பொங்குகிறது. வலது புறம் கை கால் மிகவும் கனமாக, பெரும் பாரத்தை கட்டி இழுப்பது போன்ற உணர்வு. அதை சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டு கிடக்கிறான்.

 

பார்வதி, “ருக்கு போய் மாமாவையும் அத்தையும் கூட்டிட்டு வாடி.” என்று பக்கத்து வீட்டில் இருக்கும் லட்சுமி கிருஷ்ணனை அழைத்து வர அனுப்பி வைத்தார்.

 

விரைந்து ஓடிச் சென்ற ருக்மணி, கிருஷ்ணனின் வாசலில், மாமா… அத்தை… கொஞ்சம் வெளிய வாங்க. முருகன் மாமா திடுதுப்புனு தரையில கிரங்கி விழுந்துட்டாரு. வாயில நுரை தள்ளிக்கிட்டு இருக்கு.” என்று அழுது கொண்டே சொன்னாள்.

 

லட்சுமியும், கிருஷ்ணனும், “சரவணா… முருகனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல டா… கீழ விழுந்து கிடக்கிறானாம் சீக்கிரமா ஓடியா” என்று குரல் கொடுத்துக்கொண்டு முருகனின் வீட்டுக்கு சென்றார்கள்.

 

இறுதியாக வந்த சரவணன், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக, தெருமுனைக்கு ஓடிச்சென்று ஆட்டோவை அழைத்து வந்தான்.

 

முருகனை சூழ்ந்து நின்ற நால்வரும், அவனது கன்னத்தை, கை, காலை, தட்டி “உனக்கு ஒன்னும் இல்ல. நாங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருவோம்டா. பயப்படாதே.” என்று அவனுக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தவும் முடியாமல் கண்ணீர் சொரிந்தான்.

 

சரவணன், “அப்பா ஆட்டோ வந்துருச்சு. அப்படியே ஆளும் பேருமா அண்ணனை தூக்குங்க. ஆட்டோல உட்கார வைத்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருவோம்.” என்று அவசர அவசரமாக முருகனை தூக்கிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றார்கள்.

 

 

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்