Loading

மரம் தேடும் மழைத்துளி 19

ருக்மணிக்கு, முருகனின் நிலை ஓரளவுக்கு விளங்கினாலும். அவனுக்கு சாதகமாக பதில் சொல்ல பிடிக்கவில்லை. என்ன பதில் இவனுக்கு சொல்ல? என்று தயக்கத்தோடு அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“என்ன ருக்கு? ஒன்னும் பேசாமல் என்னையவே பார்த்துகிட்டு இருக்கே.”

 

“இல்ல நான் ஏதாவது சொன்னால், நீங்க தப்பா எடுத்துப்பீங்களோனு…”

 

“நீ என்ன சொன்னாலும் சரியா இருக்கும். நான் உன்னை கேவலப்படுத்தனும்னு செஞ்சதை கூட மறந்துட்டு. என்னோடு இப்படி சேர்ந்து உட்கார்ந்திருக்றயே… இந்த நல்ல குணம், கொஞ்சமாவது எங்க அம்மாவுக்கு இருந்திருந்தால் எங்க அப்பாவ திருத்தி நல்லபடியா வாழ வச்சிருப்பால்ல.”

 

“ஆம்பளைங்க செய்யுற ஒவ்வொரு காரியத்தையும் அசட்டை செய்யாமல் இருக்கிற பொம்பளைங்க நல்லவங்கனு அர்த்தமா மாமா? நீங்க செஞ்சதை, நான் மறக்கவும் இல்லை. மன்னிக்கவும் இல்லை.” என்று ருக்மணி சொன்னதும், முருகன் அதிர்ந்து விழித்தான்.

 

முருகனின் கைக்குள் இருக்கும் தனது கையை கட்டாயப்படுத்தி எடுத்துக்கொண்டு. அவனது கைமேல் வைத்து அழுத்தமாக பிடித்தாள். “அதேபோல நான் உங்களை விட்டு விலக போறதும் இல்ல. ஏன்னா உங்க காதல் எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்கு தெரியல. என்னோட காதல் உண்மையானது. அந்த ஒரு காரணத்துக்காக நான் இந்த வீட்டுக்குள்ள இருக்கிறேன்னு அர்த்தம் இல்ல. எங்க அம்மா, இன்னமும் நான் சந்தோஷமா இருக்கேன்னு நினைச்சுகிட்டு இருக்கா. அதுக்காக நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன். நீங்க ஏதாவது ஒரு தப்பை, ஒரு தடவை செஞ்சால் சகிச்சு போயிருப்பேன். ஒவ்வொரு முறையும் மனசுல வஞ்சத்தோடவே என் கூட பழகுறீங்க. இப்போ என்னோட உட்கார்ந்து பேசுற இந்த நிமிஷத்தையும் நான் சந்தோஷமா பார்க்கல. இதுக்கு பின்னாடி என்ன மர்மம் இருக்குமோன்னு பயமா இருக்கு. நீங்க உடம்பு முடியாமல் இருந்தப்ப, ஐயோ பாவமே இப்படி நடந்திருச்சேனு எல்லார் மேலேயும் வற்ர இரக்கம்தான் உங்க மேல எனக்கு வந்ததே தவிர, நிஜமான பாசம் வரல. நீங்க செஞ்ச எதையும் மறக்கிற அளவுக்கு நான் பக்குவப்படல.”

 

ருக்கு எந்த அளவுக்கு நொந்து போயிருக்கிறாள் என்று அவள் வார்த்தையில் இருந்தே தெரிந்து கொண்டான் முருகன். மீண்டும் தான் திருந்தி விட்டேன் என்று வாக்குறுதி கொடுத்து. அவளை ஏமாற்ற விரும்பவில்லை. அதேபோல . அவளை தேற்றுகிறேன் என்ற பெயரில், மீண்டும் ஒருமுறை காயப்படுத்த எண்ணவில்லை. அவள் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்தான்.

 

இத்தனை தூரம் பேச்சு வளர்ந்து விட்ட பிறகு எதற்காக ஒழித்து மறைத்து பேச வேண்டும்? என்ற முடிவு எடுத்த ருக்மணி தொடர்ந்து, “நம்ம கதையை போலத்தான் உங்க அம்மாவோட கதையும் இருக்கும்னு நினைக்கிறேன். நீங்க உங்க அப்பாவோட இன்னொரு முகத்தை புரிஞ்சுக்க முடியாத வயசுங்கறதால, உங்க அப்பா நல்லவர்னு இன்னமும் நம்புறீங்க. உங்க அம்மா, எங்க அப்பா கூட பிறந்த அத்தைங்குற காரணத்துக்காக, அவளுக்கு பரிந்து பேசுறேன்னு மட்டும் நினைச்சுடாதீங்க. பானை சோத்துக்கு பருக்கை பாதம்னு சொல்லுவாக. அதுபோல உங்களையும், உங்க நடவடிக்கைகளையும் பார்த்து புரிஞ்சுக்கிட்டதால. உங்க அப்பாவும் இப்படியேதான் இருந்து இருப்பாருன்னு ஒரு அனுமானத்துல சொல்றேன். என்னை தப்பா எடுத்துக்காதீங்க”.

 

”இப்படி தினம் தினம் ஒரு சித்தரவதையை அனுபவிக்கிற பொம்பள, அடுத்த முறை நெருங்கி வரும் போது ஏமாறுவதற்கு தயாரா இல்லாமல். எரிஞ்சு விழுந்து விரட்டி இருப்பாள். அதனால அவளே சண்டக்காரியா உங்களுக்கு தெரிந்திருப்பாள். இன்னொரு விஷயம் சொன்னீங்களே உங்க அப்பா பேச கூடாதுன்னு சொன்ன மேஸ்திரி கூடவே பேசிட்டு இருப்பான்னு. உங்க அப்பா கொடுக்காத ஆறுதலை இன்னொருத்தர் கொடுத்தால் அவங்க கூட மன அமைதிக்காக பேசி இருப்பாங்க. அதுல என்ன தப்பு இருக்கு? பொம்பளையை இழிவுபடுத்த, ஆம்பளைங்க கடைசியா எடுக்கிற ஆயுதம் நடத்தை கெட்டவ அப்படிங்கற பேரு. அவ நடத்தையில சந்தேகப்பட்டு வீட்டை விட்டு ஓடி போறது ஒரு ஆம்பளத்தனம்னு நினைக்கிறீங்களா? கேவலமா இல்ல. தன்னோட கேவலமான புத்திய பிள்ளைக்கும் விதைத்து விட்டு போறது எவ்வளவு பெரிய துரோகம். தான் இல்லாத இடத்தில் தன்னைப் போல ஒருத்தனை நிறுத்தி வச்சிட்டு போறது எவ்வளவு பெரிய அசிங்கம். அந்த அசிங்கத்தை தான் உங்க அப்பா செஞ்சுட்டு போயிருக்கிறாரு. நீங்க சொன்னீங்களே எங்க சித்தப்பா மாதிரி பொறுப்பானவர்னு. உங்க சித்தப்பா பொறுப்பானவர் அதை நான் ஒத்துக்குறேன். அந்த பொறுப்பான மனுஷன், உண்மையிலேயே உங்க அம்மா தப்பானவங்களா இருந்திருந்தா… இப்படி பக்கத்துல, பங்காளி வீட்டை கொடுத்து தங்க வைத்திருப்பாரா? தன்னோட அண்ணனை விட மதினி ஒசத்தின்னு நினைச்சிருப்பாரா? என்னைக்கோ விரட்டி அடிச்சு இருக்க மாட்டாரு. அண்ணே தொலைஞ்சு போறதுக்கு காரணமா இருந்த மதனிக்கு எதுக்காக இத்தனை காலம் மதிப்பும் மரியாதையும் கொடுத்துக்கிட்டு இருக்காரு? இதைபத்தி என்னைக்காவது யோசிச்சு பார்த்து இருக்கீங்களா மாமா? இப்போ என்கிட்ட சொன்ன மாதிரி ஒரு நாளாவது உங்க சித்தப்பா கிட்ட, எதுக்காக அம்மாவை இங்கே தங்க வச்சிருக்கீங்கனு கேட்டிருக்கீங்களா மாமா?’ என்று அவள் கேள்விகளை அடுக்க. இல்லை என்று மெல்ல தலையசைத்தான் முருகன்.

 

“நீங்க இந்த கேள்வியை உங்க சித்தப்பாவை பார்த்து கேட்டுருந்தால் இப்படி மனநோய் பிடிச்சு, நீங்களும் தப்பா மாறிருக்க மாட்டீங்க.”

 

“உங்க அம்மா, உங்கள கொண்டு போயி மேஸ்திரி கிட்ட விட்டுட்டு வந்ததும். மேஸ்திரி உங்களை கொத்த வேலைக்கு அனுப்பிட்டாருன்னு சொன்னீங்களே… உதவி செய்றவங்க, அவங்களால முடிஞ்ச உதவியத்தானே செய்வாங்க. உங்க அம்மாவுக்கும், அவருக்கும் தப்பான ஒரு தொடர்பு இருந்திருந்தால், உங்க அப்பா ஓடி போறதுக்கு முன்னாடியே. உங்க அம்மா ஓடிப்போய் இருப்பாங்களே… ஏன் ஓடல? உங்க அம்மாவுக்காக எதையும் செய்ய முடிஞ்சிருந்தா…. அந்த மேஸ்திரியே உங்களுக்கு தேவையான பணத்தை கொடுத்து, உங்க அம்மாவை தங்கம்னு தாங்கி, பொன்னுனு பாதுகாத்து வைத்திருப்பாரே. அப்படியா செஞ்சாரு? நீங்க, உங்க குடும்பம் சுயமா சம்பாதிச்சு வாழனும்னு உங்களுக்கு ஒரு வேலையை அமைத்துக் கொடுத்திருக்க மாட்டாரே. உங்க அப்பா உங்க அம்மாவை சந்தேகப்பட்ட மாதிரி மேஸ்திரியோட பொண்டாட்டி, அவரை ஏன் இன்னும் சந்தேகப்பட மாட்டேங்கிறாங்க? என்னைக்காவது ஒரு நாள், அந்த அம்மா உங்க வீட்டு வாசல்ல வந்து நின்னு சண்டை பிடிச்சு இருக்காங்களா? அவர் மேல நிஜமாவே தப்பு இருந்தால், இத்தனை நாளும் தப்பிச்சு இருந்திருக்க முடியுமா? மறைமுக வாழ்க்கை எத்தனை நாளைக்கு வாழ்ந்திட முடியும்? அதையேன் நீங்க புரிஞ்சுக்கல மாமா?

 

ருக்மணியின் எந்த ஒரு கேள்விக்கும் முருகனிடத்தில் பதில் இல்லை. விக்கித் தவித்தான்.

 

போதும் என்று நினைத்த ருக்மணி அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.

 

ருக்மணி கீழ் வீட்டில் பாயை விரித்து படுத்துக் கொண்டாள்.

 

பார்வதி அவளுக்கு அருகில் படுத்து கொண்டார். அவளை ஏதொரு கேள்வியும் கேட்கவில்லை. இயல்புக்கு மாறாய் நடக்கிறாள் என்று எண்ணவும் இல்லை.

 

முருகன் அவள் மாடி அறைக்கு வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவள் கேட்டு சென்ற கேள்வி கணைகள் அவனது மூளையை துழைத்துக் கொண்டிருந்தது. கண்ணை மூடி உறங்க முயற்சி செய்து பார்த்தான். ஆனால் முடியாமல் போனது. இந்த மூளை பரிதவிப்பின் விளைவால் வியர்த்து கொட்டியது. தலை நிமிர்ந்து உட்கார்ந்து இருக்க முடியவில்லை. அதனால் விரிப்பில் படுத்துக்கொண்டு புரண்டு திரிந்து புழுவாய் நெளிந்து கொண்டிருந்தான். இதுவே அவனுக்கு ரத்தக் கொதிப்பு ஏற்பட முதல் காரணமாய் அமைந்தது.

 

மறுநாள் காலையில் நேற்று இரவு எதுவும் நடக்காதது போல சாதாரணமாக சென்று முருகனை எழுப்பினாள் ருக்மணி.

 

முருகனும் எந்த ஒரு வார்த்தையும் பேசாமல்,எழுந்து சென்று புறப்பட்டு அவனது வேலையை பார்க்க கிளம்பிச் சென்றான்.

 

ருக்மணி, பார்வதி மற்றும் சரவணன் ஆகியோர் ஒரே மில்லில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். மதிய உணவு இடைவேளையில் பார்வதியும் ருக்மணியும் கேண்டினில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மேஸ்திரி அங்கே வந்தார். பார்வதியை பார்த்து முருகன் வந்து தன்னை சந்தித்து, தனது கையை பிடித்து மன்றாடி மன்னிப்பு கேட்டுக்கொண்டு சென்றான். எதற்காக அப்படி நடந்து கொண்டான் என்று தெரியவில்லை. என்று ஆச்சரியமாக சொன்னார்.

 

பார்வதிக்கும் அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் ருக்மணிக்கு பளிச்சென்று விளங்கியது.

 

“அத்தே… நேரம் ஆகுது சீக்கிரம் சாப்பிடுங்க”. என்று துரிதப்படுத்துவதைப் போல அந்த பேச்சுக்கு முட்டுக்கட்டையிட்டாள்.

 

“அடி இருடி” என்று ருக்மணிக்கு பதில் சொல்லிவிட்டு. மேஸ்திரியிடம் “சரின்ணே என்னன்னு கேட்டு சொல்றேன்.” என்று பதில் சொல்லிவிட்டு சாப்பிட தொடர்ந்தார்.

 

மேஸ்திரியும் சரி என்று புறப்பட்டு விட்டார்.

 

மாலையில் வேலையை முடித்துக் கொண்டு வந்த முருகன், தன்னுடைய தாய் பார்வதியை அழைத்து. அவரது இரு கையை பிடித்துக் கொண்டு. “என்னை மன்னிச்சிடும்மா” என்று மன்னிப்பு கோரினான்.

 

மதியம் மேஸ்திரி சொன்னதை மறந்தே போன பார்வதிக்கு, முருகன் மீண்டும் மன்னிப்பு கேட்டதும். மேஸ்திரியின் ஞாபகம் வந்தது.

 

பார்வதி, “மன்னிப்பு கேட்கணும்னு ஏதாவது வேண்டுதல் வச்சிருக்கியா?”

 

“இல்லம்மா… நான், என் உயிர் போறவரைக்கும் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டு இருந்தாலும் தப்பில்லை.” என்று சொன்னவன். பார்வதியின் காலில் விழுந்து. காலை கட்டிக்கொண்டு கதறி அழுதான்.

 

பார்வதிக்கு முருகனின் செயல்கள் பித்து பிடித்துவிட்டதோ என்று, தோன்றியது. “ஐயோ காலை விடுடா. காலை இழுத்து தள்ளிவிட்டுடாதே.” என்றபடி நின்ற இடத்திலேயே அமர்ந்து கொண்டு. அவன் தலையை தடவி, “என்ன ஆச்சு? இன்னைக்கு ஏன் இப்படி நடந்துக்கிறே? எலுமிச்சம் பழம் பிழிஞ்சு கொடுக்கட்டாய்யா? என்று கரிசனத்தோடு கேட்க.

 

சமையல் கட்டில் நின்று கொண்டிருந்த ருக்மணி, வாயை பொத்துக் கொண்டு சிரித்தாள். அதே நேரத்தில் மாமியாரின் எகடாசி பேச்சு, மீண்டும் அவனுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தை, எழுப்பி விட்டு விடுமோ என்றும் பயந்தாள்.

 

ஆனால் முருகன் திருந்தி நெடுநாட்கள் ஆகிவிட்டதே. இதுக்கெல்லாம் எதற்காக கோபப்பட போகிறான்? “எனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கும்னு பயப்படுறயா ம்மா…” என்றான்.

 

“எதுக்கு இப்படி கண்ணுல கண்டவகளுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டுக்கிட்டு இருக்கேன்னு? தெளிவா சொல்லிட்டேனால், நானும் பயப்படாம இருப்பேன்ல்ல ராசா…”

 

“அப்பா வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னாடி. உன்னையும் மேஸ்திரி மாமாவையும் சேர்த்து வச்சு. தப்பு தப்பா என்கிட்ட சொன்னாரு. அன்னைக்கு அதை உண்மைன்னு நினைச்ச நான்… இன்னைக்கு வரைக்கும் அந்த நினைப்பு மாறாமலேயே இருந்துட்டேன். உங்க ரெண்டு பேரோட அருமை எனக்கு புரியாமலே போயிருச்சு ம்மா… நீ எப்படிப்பட்டவன்னு எனக்கு எடுத்துச் சொல்ல இன்னொரு ஆள் தேவைப்பட்டு இருக்கும்மா… என்னை மன்னிச்சிடும்மா.” என்று அவன் அழும் போது. இத்தனை நாட்களும், தான் பெற்ற பிள்ளை தன்னை தவறாக எண்ணிக்கொண்டு இருந்திருக்கிறான் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டார். அதுவரை இயல்பாக இருந்த பார்வதியின் முகம் இருண்டு போனது.

 

பார்வதி, “பிள்ளைகளுக்காக வாழ்ந்து ஜெயிச்சுட்டேன்னு சந்தோசமா இருந்தேன். ஆனால் நான் ஏமாந்து போயிருந்தேன்னு இப்பதான் தெரியுது. ஆனாலும் என் பிள்ளை, என்னை புரிஞ்சுகிட்டன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு.”

 

முருகன், “என்னை மன்னிப்பியா ம்மா?”

 

“நான் மன்னிக்காமல் எங்கடா போக போறேன். இப்போவே இந்த பேச்சை விட்டுடு. மாமா கிட்ட என்னைக்கும் இந்த விஷயத்தை தெரியப்படுத்தக்கூடாது. பாவம் வருத்தப்பட போறாரு. உதவிக்கு வந்தது ஒரு குத்தமானு யோசிச்சுற போறாரு.”

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்