Loading

தனதறையில் சிந்தனையில் லயித்திருந்த ஆராவின் அருகில் வந்து உட்கார்ந்தார் நீலவேணி.

 

அவளது செல்பேசி உடைந்து அதன் பாகங்கள் தரையில் இருப்பதைக் கண்டதும் அவளின் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்து, 

 

“என்னாச்சு ஆராம்மா? அவன் உன்னை ரொம்பத் திட்டுனானா? உன்னோட மொபைல் வேற உடைஞ்சுக் கிடக்குது! இது யார் பண்ண வேலை? அபூர்வன் தானே?”என அவளிடம் மென்னையாகக் கேட்டார் நீலவேணி. 

 

அவர் உள்ளே நுழையும் போதே அவளிருந்த கோலத்தைக் கண்டார் அல்லவா! 

 

அதனாலேயே மருமகளிடம் பதறிப் போய் விசாரிக்காமல் அவளைப் பொறுமையாகக் கையாள முடிவெடுத்து இவ்வாறு பேசினார் நீலவேணி. 

 

“இல்ல அத்தை. நான் மயக்கம் போட்டு விழுந்தேன்னுத் தெரிஞ்சு அவர் துடிச்சுப் போய்ட்டாரு போல! ரொம்ப ஃபீல் பண்ணாரு. ஆனால் அவர் என்னைத் திட்டலை அத்தை”என்றவள் கூறுவது பொய் என்று தெரிந்தாலும் தன் கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசிய ஆராவைக் கனிவுடன் பார்த்து விட்டு, 

 

“அப்போ மொபைல் எப்படி உடைஞ்சுது?”எனச் சந்தேகமாய்க் கேட்க, 

 

“என் கை தவறிக் கீழே போட்டுட்டேன் அத்தை”என்று கீழே விழுந்ததில் கீறல் ஏற்பட்டு, முகப்பு உடைந்திருந்த தனது செல்பேசியை எடுத்து வேலை செய்கிறதா? என்று ஆராய்ந்து பார்த்தாள் ஆராத்ரிகா. 

 

ஆனால் அதில் காரிகாவின் செல்பேசி எண் மட்டும் அப்படியே உறைந்து இருந்ததைக் கண்டுத் தனது செல்பேசியைக் கடையில் கொடுத்து தான் சரி பார்க்க முடியும் என்பதால் பெருமூச்சு விட்டவாறே, அதைக் கட்டிலின் ஓரத்தில் வைத்து விட்டாள்.

 

இவ்வளவு நேரமாக ஆராவின் செய்கைகளை அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்த நீலவேணியோ, அவளது செல்பேசி மிகவும் உடைந்து, பழுதடைந்து இருப்பதை அறிந்து கொண்டார்.

 

“அச்சோ! உன் மொபைல் ரொம்ப உடைஞ்சுருக்கே ஆரா! நான் வேணும்னா அபூர்வன் கிட்ட சொல்லி அதைச் சரி பண்ணித் தரச் சொல்லவா?”எனத் தன்னிடம் பரிவாகக் கேட்டவரை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“இல்லை வேணாம் அத்தை. அவர் ஏற்கனவே வொர்க் டென்ஷனில் இருக்காரு. அதனால் அவரைத் தேவை இல்லாமல் தொல்லைப் பண்ண வேண்டாம். எனக்கு எதுவும் அவசரம்ன்னா உங்க மொபைலை யூஸ் பண்ணிக்கவா அத்தை ப்ளீஸ்?”என்று தன் மாமியாரிடம் வேண்டிக் கேட்டாள் ஆராத்ரிகா. 

 

“அதுக்கென்ன? யூஸ் பண்ணிக்கோ ஆரா! ஆனால் இனிமேல் இப்படி எங்கிட்ட கெஞ்சிக் கேட்காமல், உரிமையாக எடுத்துக்கோ”என அவளுக்கு அறிவுறுத்தினார் நீலவேணி.

 

“சரிங்க அத்தை”என்றவளது முகம் தெளிந்தாலும் ஏதோ ஒன்றை நினைத்து அவள் தன் மனதைக் குழப்பிக் கொண்டு இருக்கிறாள் என்று யூகித்து விட்டு, 

 

“முதல்ல நீ தண்ணீர் குடி”என்று அங்கேயிருந்த தண்ணீர்ப் போத்தலை எடுத்து வந்து மருமகளுக்குக் குடிக்கக் கொடுத்தார்.

 

அவள் அதை வாங்கிப் பருகி முடித்ததும்,”நீ எதை நினைச்சும் கவலைப்பட்டுட்டு இருக்காதே! அபூர்வன் சண்டைப் போட்டுட்டுப் போயிருந்தாலும் சாயந்தரம் வீட்டுக்கு வந்ததுமே தன்னோட மனசில் எதையும் நினைச்சுக்காமல் உங்கிட்ட பேசிடுவான்! நீயும் அவன் கிட்ட பேசிடு! இப்போதெல்லாம் வர, வர உங்க ரெண்டு பேருக்கும் ஒரு வருஷம் கழிச்சுக் குழந்தைப் பிறக்கப் போகுதுன்றக் களையே உங்க ரெண்டு பேர் முகத்துலயுமே பார்க்க முடியலை!”என்றவரின் மன வருத்தத்தை நன்றாக உணர்ந்து கொண்டாள் ஆராத்ரிகா.

 

‘நீங்க சொல்வதும் நிஜம் தான் அத்தை! இதுக்கு முன்னாடி வரைக்கும் அவர் அப்படித் தான் இருந்தார்! ஆனால் இன்னைக்குச் சாயந்தரம் வேலை முடிஞ்சு வந்து சமாதானம் ஆகி என்கிட்ட அவர் பேசுற மாதிரி நான் நடந்துக்கலையே அத்தை’என்றெண்ணி வருத்தப்பட்டவளோ,

 

காலையில் தன்னிடம் ஏனோ, தானோ என்று பேசி விட்டுச் சென்றக் கணவனின் உள்ளத்தில் தன்னால் உருவாகி இருந்த ரணத்தை எவ்வாறு சரி செய்யப் போகிறோம் என்று தெரியாமல் விழித்தாள்.

 

அவளது விழிப்பைப் பார்த்தவரோ,’குழந்தை உண்டாகி இருக்கா. இந்தச் சமயத்தில் தான் இவங்க சண்டை போடுவாங்களா? அபூர்வனுக்கும் அறிவே இல்லை’என இருவரையும் தயவுதாட்சண்யம் இல்லாமல் மனதிற்குள் திட்டி விட்டு, 

 

“ரெண்டு நாள் கழிச்சு ஹாஸ்பிடல் போகனும். அபூர்வன் கிட்ட சொல்லி வைக்குறேன். டெஸ்ட்ஸ் எல்லாம் எடுத்துட்டுக், கம்ப்ளீட் செக்கப் பண்ணிட்டு வாங்க. குழந்தை ஆரோக்கியமாக இருக்கனும்! அதுக்கு நீ மனசு வச்சா தான் முடியும்”என்று அறிவுறுத்தி விட்டுச் சென்றவரது அக்கறையான வார்த்தைகள் அவளைச் சற்று நிதானப்படுத்தி இருந்தது.

 

  “அபூ! எப்பவும் போல இப்போவும் என் மேல் உங்களுக்கு வந்திருக்கிறக் கோபம் சீக்கிரம் போயிடனும்”என்று ஏக்கத்துடன் சொல்லிக் கொண்டுக் கண் மூடிச் சாய்ந்து படுத்தவள் உறக்கத்தை விரும்பி ஏற்றுக் கொண்டு நன்றாகத் தூங்க ஆரம்பித்தாள் ஆராத்ரிகா. 

 

காரிகாவிற்கு நிதானத்திற்கு வர சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

 

ஏனெனில் தானும், ஆராவும் பேசிக் கொண்டு இருக்கும் போதே அவளது அழைப்புத் திடீரென்று துண்டிக்கப்பட்டதை நினைத்து, அவளது அடி வயிற்றில் கலக்கம் நிரம்பி வழிந்தது.

 

ஆராவின் உடல்நிலையைக் குறித்துக் கனி தன்னிடம் அறிவுறுத்தி இருந்த போதும் கூட அவர்கள் இருவரும் தன்னிடம் அறிவுறுத்தி இருந்தாலும் கூடக் கர்ப்பம் தரித்து இருக்கும் தோழியை எண்ணி மகிழ்ச்சி அடைந்தவளை உடனே நேரில் சென்று பார்க்க விழைந்தது காரிகாவின் மனம். 

 

அதனால் தான் ஆராத்ரிகாவின் வீட்டிற்கு அவளிடம் சொல்லாமல் சென்றிருந்தாள். 

 

தனது அந்த முட்டாள்தனமான செயலால் இன்று ஆரா வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருப்பதை சில நிமிடங்களுக்கு முன்னர் அவள் பேசியப் பேச்சிலேயே உணர்ந்து செய்து கொண்டாள் காரிகா. 

 

தானும், கனிஷ்காவும் தங்கள் தோழி ஆராத்ரிகாவிற்கு உதவி செய்கிறோம் என்று அவளுக்கு வாக்களித்து இருந்த இந்தச் சமயத்தில் தனது இந்தச் செய்கை அவளது வாழ்வில் எப்படிப்பட்ட தாக்குதலை நிகழ்த்தி இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டாள். 

 

தாம் தான், முந்திரிக் கொட்டைத் தனமாக நடந்து கொண்டு அனைத்தையும் சொதப்பி வைத்து விட்டோம் என்பதை எண்ணி நொந்து போனாள் காரிகா. 

 

ஆராவின் கோபம் நூற்றுக்கு நூறு சரியே! எவ்வளவு நாட்களாகத் அவள் தன்னுடைய சுமூகமான கல்யாண வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் வந்து விடக் கூடாது என்பதற்காக ஒரு திட்டம் தீட்டி இப்போது வரை அதற்கேற்றவாறு காயை நகர்த்திக் கொண்டு இருக்கிறாள்!

 

வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானை உடைந்த கதையாகத் தன்னுடைய செயல் அமைந்து விட்டதே! என்று தன் மேலேயே கோபமும், ஆத்திரமும் கொண்டு விட்டிருந்தாள் காரிகா. 

 

“பேசப் பேசக் கால் கட் ஆகி இருக்கு வேற? அப்படின்னா என்ன அர்த்தம்? ஒருவேளை ஆரா சொன்ன மாதிரி அபூர்வன் அண்ணா கூட அவளுக்குக் கருத்து வேறுபாடு வந்துடுச்சா? இது தான் நடக்கக் கூடாதுன்னு நானும், கனியும் ரொம்பவே வேண்டிக்கிட்டோம்! கடைசியில் என்னாலேயே எல்லாம் கல மீறிப் போயிடுச்சே!”என்றவளின் மனதில் குற்ற உணர்ச்சி மேலோங்கி விட்டிருந்தது. 

 

“ஐயோ! இதுக்கு எல்லாம் நான் மட்டும் தான் காரணம்! இதை எப்படி சரி செய்யப் போறேன்? ஏற்கனவே ஆரா அவ வாழ்க்கையில் நிறையக் கஷ்டப்பட்டு இருக்கா! இப்போ அவளோட கல்யாண வாழ்க்கையும் இப்படி ஆகி விடக் கூடாது!”என்றக் காரிகாவின் மனம் பதைபதைத்தது! 

 

இதற்குத் தான் அவள் உன்னிடம் அத்தனை அன்பாக இருந்தாளா? அத்தனை உறுதுணையாக இருந்தாளா? அவளது ஆழ் மனம் காரிகாவைக் கேள்வியாக கேட்டுத் துளைத்து எடுத்தது.

 

அவளுக்குத் தங்களது கல்லூரி நாட்கள் ஞாபகம் வந்து விடவும், அதை நினைத்துப் பார்க்கத் தொடங்கினாள். 

 

“ஓய் காரிகா. இங்கே வா!” என்றச் சீனியரின் அதிகார அழைப்பைக் கேட்டதும் உடனே அனிச்சையாக அந்த இடத்திற்கு நகர்ந்தாள்.

 

“சொல்லுங்க?”எனப் பவ்யமாக கேட்கவும் 

 

 அங்கு குழுமி இருந்த பெண்களோ தாங்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவளை வேலை வாங்கத் தொடங்கி விட்டார்கள்.

 

தங்களது சீனியர்கள் இப்படி அவளை அனைத்திற்கும் வேலை வாங்குவதைக் கவனித்து விட்டு, 

 

“என்ன இந்தப் பொண்ணு யாரு என்ன சொன்னாலும் செஞ்சிட்டு இருக்கா?”என்று ஒரு புறம் ஆச்சரியம் மற்றும் மறு புறம் எரிச்சல் உருவாகி விடத் தன் முகத்தைச் சுளித்தாள் ஆராத்ரிகா. 

 

அதற்குப் பிறகு அவளைத் தனியாக அழைத்து,”நீ என்ன அவங்க சொல்றதை எல்லாம் கேட்டுக்கிட்டுச், செஞ்சுட்டு இருக்கிற? அவங்களும் நம்மள மாதிரி இங்கே படிக்க வந்தவங்க தானே? அவங்க வேலையை அவங்களே செஞ்சுப்பாங்க. நீ படிக்குற வேலையை மட்டும் செய்!”என்று அவளுக்கு அறிவுரைகள் வழங்கினாலும் அடுத்தடுத்து வந்த நாட்களில் காரிகா அதையே செய்தது இவளுக்கு மேலும் எரிச்சலூட்டியது.

 

அதைப் பொறுக்க முடியாமல்,”ஹலோ எக்ஸ்க்யூஸ்மி!”அவளை உரக்க அழைக்கவும், 

 

“என்ன ஆரா?”என்றதுமே,

 

அவள் தன் பெயரைச் சொல்லிப் பேசியதைக் கேட்டவுடனேயே,’அதெப்படி இவளுக்குத் தன் பெயர் தெரிந்து இருக்கிறது?’எனக் காரிகாவை ஆராய்ச்சியுடன் பார்த்தாள் ஆராத்ரிகா. 

 

“எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்; நீங்க எப்பவும் துறுதுறுன்னு இருக்கீங்க. அதனால் உங்கப் பேர் என்னன்னுக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்”என அவளுக்கு விளக்கம் அளிக்க, 

 

“அப்படியா! சரி, சரி. என்னோட முழுப் பேர் ஆராத்ரிகா”என அவளிடம் தன்னை முறையாக அறிமுகம் செய்து கொண்டாள்.

 

“வாவ்! உங்க முழுப் பேர் இன்னும் சூப்பராக இருக்கு”என்று அவளை மனதாரப் பாராட்டவும் செய்தாள் காரிகா.

 

“நீங்க இன்னும் உங்க பேர் என்னன்னு இன்னும் நீங்க சொல்லலையே?”என்று தன் துறுதுறுத்தனத்தை அவளிடம் பிரயோகித்துப் பார்க்க ஆரம்பித்து விட்டிருந்தாள் ஆராத்ரிகா.

 

“என் பேர் காரிகா”என்று கூறி மெலிதானப் புன்னகையை உதிர்த்தாள்.

 

“ஆஹா! நான் ஆராத்ரிகா! நீங்க காரிகா ரைமிங் செம்மயாக இருக்கே!”என்று குதூகலமாகப் பேசிய ஆராத்ரிகாவின் நட்பை விரும்பியே ஏற்றாள் காரிகா.

 

“நீங்க கூட க்யூட்டா பேசறீங்க ஆரா!”என அவள் பேசும் விதத்தை ரசித்துக் கூறவும், 

 

“நீ வேணும்னா என்னை வாங்க, போங்கன்னு சொல்லிக்கோ. ஆனால் நான் உன்னை வா, போ இல்லைன்னா ரிகா அப்படின்னு தான் கூப்பிட்டுப் பேசுவேன்”என்றவள் கூறிய விதத்தில் சிரித்து விட்டு, 

 

“உனக்கு எப்படி என்னைக் கூப்பிடத் தோணுதோ, அப்படியே கூப்பிட்டுக்கோ! அதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை! அப்படி உட்கார்ந்து பேசலாம். வா”என்று சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டுத் தங்களைப் பற்றிய பொதுவான விவரங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

 

அந்த அழகான நட்பு இன்று வரை தொடரும் என்று ஆரா மற்றும் காரிகாவிற்கு அப்போது தெரிந்து இருக்கவில்லை.

 

ஆனால் அப்படி ஆரம்பித்த தோழமை தான் இன்று வரை தொடர்கிறது.

 

ஆரா தன் மேல் கொண்டிருக்கும் நட்புப், பாசத்தை நினைத்துக் காரிகாவுமே கர்வமாக உணர்வாள்.

 

ஆனால் ஆராவின் வாழ்வில் ஏற்படவிருக்கும் பிரச்சினையைத் தீர்த்து வைக்க உதவி செய்வதாக ஒப்புக் கொண்டு விட்டத் தன்னாலேயே அவளுக்கு மேலும் இன்னல் வரும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்து இருக்கவில்லை காரிகா.

 

“இப்போ வரைக்கும் நீ என் மேல் வச்சிருக்கிற அக்கறையை நினைச்சு நான் பெருமைப்பட்டுட்டு இருந்தால் கடைசியில் உனக்கு உதவுறேன்னுச் சொல்லிட்டு அதில் நானே ஒரு பெரிய பிரச்சினையை உண்டுப் பண்ணி விடுவேன்னு நான் சத்தியமாக நினைச்சுப் பார்க்கலை ஆரா!”என்று எண்ணியவளோ, இதற்காகவே, ஆரா தன்னை மன்னிக்கவே மாட்டாள் என்று லருந்தினாள்.

 

“அது மட்டும் இல்லாமல் ஒரு வருஷமாக குழந்தை இல்லாமல் நீ கஷ்டப்பட்டு இப்போ தான் உனக்குள்ளே ஒரு உயிர் உருவாகி இருக்கும் போது அதைக் கூட மனசில் வச்சுக் கவனமாக இல்லாமல் இப்படி நடந்துக்கிட்டேனே! நீ ப்ரக்னன்ட் ஆக இருக்கன்னுச் சொன்னப் பிறகும் உன் வீட்டுக்கு வந்து உனக்கு டென்ஷன் கொடுத்து இருக்குனே!”என்று, தான் செய்த தவற்றை நினைத்துக் காரிகாவின் மனம் மிகவும் கலங்கிப் போய் விட்டது!  

 

“ஆராவுக்கு நான் உதவிப் பண்ணலைன்னாலும் பரவாயில்லை. உபத்திரவம் எதுவும் செஞ்சிடக் கூடாது! அதனால் நான் இனிமேல் அவளைத் தொந்தரவு செய்யக் கூடாது! ஆனால் ஆராவுக்குக் குழந்தை பிறந்ததும் கண்டிப்பாகப் போய் பாத்துடனும்”என ஆராவின் வாழ்வில் தன் இடையூறு இருக்கவே கூடாது என்று ஒதுங்கி இருக்க முடிவெடுத்து விட்டிருந்தாள் காரிகா.

 

– தொடரும் 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்