
அவன் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் இவள் இதயத்தில் ரணமான வலியினை தந்தது. நியாயப்படி பார்த்தால் அவனது பிரிவு மகிழ்ச்சியை அல்லவா அளித்திருக்க வேண்டும். மாறாக வலியைத் தர பெண்ணவளின் மனதில் எழுந்த மாற்றத்தை எண்ணி அவள் மனம் துடித்தது.
“இனி இந்த நந்தா உன் வாழ்க்கையில இல்லை. இனி வரவும் போறதில்லை. அவ்வளவு தான் இந்த நாடகத்துக்கு முற்றுப்புள்ளியும் வந்தாச்சு. நான் இங்க இருந்து போகப்போறேன் மது. இனி எப்போதும் உன் முன்னாடி” என்றவன் தன் பின்னந்தலையை கோதி, உதடுகளை மடித்து தன்னை சமப்படுத்தியபடி, “வர…மாட்டேன்.” என்றவன் வலியிலும் புன்னகைத்தான்.
எந்த வார்த்தை அவனிடமிருந்து பெற வேண்டும் என்று ஆசைப்பட்டாளோ அந்த வார்த்தை இந்நொடி அவளுக்கு கசப்பாய் தெரிய, தன் கண்களை மூடி திறந்தவளது உதடுகள், “ம்ம்ம்” என்று மட்டுமே உதிர்த்தது. அடுத்த நொடியே மறுபுறம் திரும்பி அவன் கவனிக்காத சமயம் தன் கண்ணீரை துடைத்திருந்தாள் பெண்.
“என்ன மது? போற என்ன பார்க்க கூட விருப்பம் இல்லாமல் திரும்பிட்டியா?” என்றவன் கேட்கவும் அவனை சட்டென்று திரும்பி பார்த்தவள்,
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லையே.” என்று தான் சகஜமாக இருப்பது போலவே பேசினாள்.
“ரைட்டு என்னடா இவன் ஒரு வருசம் நடிக்குறேன்னு வந்திட்டு அதுக்குள்ள போறானேனு யோசிக்கிறியா? நீ எதுவும் கவலைப்படாத. நான் வெளிநாடு போறதா வீட்டுல சொல்லிடலாம். அப்புறம் அங்கயே வேற கல்யாணம் பண்ணிட்டேன் அப்படி இப்படினு என் மேல பழி போட்ரு. சிம்பிள். நமக்கென்ன பொய் சொல்றதா கஷ்டம்?” என்றவன் சாதாரணமாக கூறினாலும், கடைசி வார்த்தை அவளை ஊசிமுனை போல் குத்தியது.
“ஓகே பாய் மது.” என்றவன் சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு நகர, அவளோ அவனை ஏக்கத்துடன் பார்த்தாள்.
‘நிஜமாவே போறியா?’ என்றவள் மனம் மானசீகமாக கேட்க, அவனோ சட்டென்று திரும்பி அவளை பார்த்தபடி,
“கூப்பிட்டியா?” என்று சந்தேகமாக கேட்க, அவள் இதயம் படபடவென அடித்துக் கொண்டது.
இருந்தும் அவள் தலையை இல்லை என்று அசைக்க, “அதுதானே பார்த்தேன். நீ என்னைக்குமே மாறமாட்ட. உன்னை தேடி வரவங்க தான் மாறணும். நானும் மாத்திக்கிட்டேன் என் மனசை” என்று கண் சிமிட்டி விட்டு தன் உடமைகளை எடுத்துக்கொண்டு அவன் செல்ல, “ஒரு நிமிசம்” என்றவளது குரல் அவனை தடுத்து நிறுத்தியது.
வேகமாக தனது கைப்பையிலிருந்து இருபதாயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு அவனை நோக்கி வந்தவள் நந்தாவின் கைகளில் கொடுத்தபடி,
“கை செலவுக்கு வெச்சுக்கோ நந்து.” என்றவள் கூறவும், வெற்று புன்னகை ஒன்றை உதிர்த்தவன் பணத்தினை அவளது கைகளிலேயே திருப்பி கொடுத்து விட்டான்.
“எல்லாமே பணத்தால ஈடுகட்ட முடியாது மது. ஆனால் இப்போ நான் உனக்கு ஒன்னு கொடுக்க ஆசைப்படுறேன்.” என்றவன் கூறவும் அவனையே ஆழ்ந்து பார்த்தாள் பெண்.
“வாங்கிக்க உனக்கு சம்மதமா?” என்றவன் கேட்கவும் அவளால் மறுக்க முடியவில்லை.
அவளது மௌனத்தை சம்மதமாக எடுத்தவன் தனது வலது கரம் கொண்டு அவள் கன்னத்தை தாங்கினான். அவனது அழுத்தமான தொடுகையை, கண்களை மூடி பெண்ணவள் ஏற்க, கருவிழி அங்கும் இங்கும் அலைபாய பார்த்தவனது பார்வையில் நொடியில் பரிதவிப்பு இழையோடியது.
அடுத்த நொடியே அவனது மற்றொரு கரமும் உடன் ஏந்திக்கொள்ள, அவளது நெற்றியை தன்நெற்றியோடு சேர்த்து அணைத்தவனது மூக்கின் நுனி பெண்ணவளின் மூக்கின் நுனியினை அழுத்தமாக உரசியது. அந்நொடி இருவருமே இவ்வுலகை மறந்தனர். கண்மூடி அவனது ஸ்பரிசத்தை உணர்ந்தவளது உதடுகள் துடித்தது.
இந்நொடி நீண்டுக்கொண்டே செல்லாதோ என்ற நப்பாசை இருவருக்கும் தோன்ற, அவனது பிடியில் கட்டுண்டு கிடந்தாள் பெண்தாரகை.
‘என் காதலை உன்னால புரிஞ்சிக்கவே முடியாமல் போயிருக்கலாம். ஆனால் இப்போ இந்த நொடி நான் கொடுக்கப்போற முத்தத்தோட ஈரம் என்னைக்குமே உன் நினைவில என் காதலை சொல்லிகிட்டே இருக்கும். லவ் யூ மது.’ என்று மனதாலே அவளிடம் பேசியவன் அடுத்த நொடி பெண்ணவளின் உச்சி வகுட்டில் முத்தம் கொடுக்க, பெண்ணவளின் இமையோரத்தில் கண்ணீர் துளியாக கசிந்தது.
அந்த ஒற்றை முத்தமே அவன் காதலை பறைசாற்ற, பெண்ணவளின் இரும்பு மனமும் அந்நொடி உருகியது என்னவோ உண்மைதான். அடுத்த நொடியே அவளை விட்டு பிரிந்தவன் விறுவிறுவென்று அங்கிருந்து சென்றிருந்தான்.
அவன் அறிவான். இன்னும் இங்கிருந்தால் அவளை விட்டு அவனால் விலகிச் செல்ல முடியாது என்பதை. செல்லும் அவனது புன்னகை முகம் நொடியில் இறுகிக்கொண்டே செல்ல, அவனையும் மீறி கண்கள் கலங்க, தன்னிடமிருந்த கூலர்ஸை எடுத்து அணிந்துக் கொண்டவன், யாரும் பார்ப்பதற்கு முன் அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
ஆனால் பெண்ணவளோ அசையாது சிலை போல் அவன் கொடுத்த முத்தத்தில் மூழ்கிப் போய் நின்றிருந்தவள், தாமதமாகவே தன் கண்களை திறந்தாள். அந்நொடி அவனை நேருக்கு நேராக சந்திக்கும் தைரியம் அவளுக்கும் இல்லை. அவன் தந்த முத்தத்தின் ஈரம் உணர்ந்தவளது முகத்தில் அத்தனை ஏக்கம் பிரதிபலித்தது.
தாயை பிரிந்த குழந்தையின் தவிப்பை உணர்ந்தவளது குரல் சிறு கேவலாக ஒலிக்க, பதறி அடித்துக் கொண்டு பால்கனியின் அருகே ஓடியவள், செல்லும் அவனையே வலியுடன் பார்த்தாள்.
அவனைக் காணும் போது அவள் உடல் நடுங்கியது. “நந்து..” என்றவள் வாய்க்குள்ளே முணுமுணுக்க, அவனோ வெளியே அவனுக்காக தயார் நிலையில் காத்திருந்த ஆட்டோ ஒன்றில் ஏறிக்கொள்ள, அவளது முகம் முற்றிலும் வாடிப்போனது.
அந்நொடி கத்தி அழத் துடித்த தன் வாயினைப் பொத்திக் கொண்டு பெண்ணவள் தரையில் பொத்தொன்று அமர்ந்துக் கொள்ளவும், அவன் ஆட்டோவிலிருந்து இறங்கி ஒருமுறை மாடியிலிருந்த அவளது அறையின் பால்கனியைப் பார்க்கவும் சரியாக இருந்தது. பின் வீட்டினை ஒருமுறை பார்த்தவன் பெருமூச்சொன்றை விடுத்தபடி ஆட்டோவில் ஏறிக்கொள்ள, ஆட்டோ செல்லும் சத்தம் கேட்டு எழுந்தவளோ செல்லும் அவனை வலியுடன் பார்த்தாள்.
நடை பயிற்சி செய்தபடி வீட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்த, சைத்ராவோ ஆட்டோவில் துணிப்பையோடு ஏறி செல்லும் நந்தாவை பார்த்துவிட்டாள். அந்நொடி எதுவோ தவறாகப்பட, விரைந்து வீட்டிற்கு வந்தவள், நேராக சென்றது என்னவோ மதுவின் அறைக்கு தான்.
பூட்டப்படாத அறைக்கதவு அவள் தள்ளியதும் திறந்துவிட, உள்ளே வந்தவளது பார்வை மதுவை மட்டுமே தேடியது.
“மது…மது.” என்றவள் அழைத்துக் கொண்டே இருக்க, குளியலறையில் தண்ணீர் சத்தம் கேட்கவும் புரிந்துக் கொண்டவள், மதுவிற்காக அவ்வறையிலேயே காத்திருந்தாள். பத்து நிமிடங்கள் கழித்தே முகத்தை கழுவியபடி வெளியே வந்தாள் மதுவர்ணிகா.
“மது, நந்தா எங்கயோ கிளம்பி போயிட்டு இருக்காரு.” என்று புரியாது போய் அவள் கேட்டாலும் அந்நொடி தான் அழுது சிவந்திருந்த பெண்ணவளது கண்களைக் கண்டாள் சைத்ரா.
“மது அழுதியா?” என்றவள் பதறிக் கொண்டு அவளிடம் நெருங்க, “கண்ணுல தூசி விழுந்திருச்சு. மத்தபடி ஒண்ணும் இல்லை.” என்று வலுக்கட்டாயமாக புன்னகைத்தபடி கூற, சைத்ராவோ நம்பாத பார்வை பார்த்தாள்.
“நம்பிட்டேன். நீ அழுதா உன் மூக்கு கூட சிவக்கும். என்ன அடுத்து ஜலதோசம்னு ரீசன் சொல்ல போறியா?”
“ஹே சைத்து, எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுற? நிஜமாகவே ஜலதோசம் தான்.”
“சரி விடு நந்தா எங்க போறாரு?”
“நடிச்சது போதும்னு இங்க இருந்து கிளம்பிட்டாரு.” என்றவள் துண்டில் தனது முகத்தை ஒற்றியெடுக்க,
“நான் சீரியஸா கேட்கிறேன்.”
“நானும் உண்மைய தான் சொல்றேன். இனி நந்தா இங்க வர மாட்டாரு.” என்றவள் உறுதியாக கூறவும் சில வினாடிகள் இருவருக்கும் இடையில் அமைதியே நிலவியது.
“வாவ் சூப்பர்டி கங்கிராட்ஸ். இனி உனக்கு எந்த கவலையும் இல்லை. ஜாலியா இருக்கலாம்.” என்று துள்ளிக் குதித்தபடி அவளை அணைத்துக் கொள்ள, சைத்ராவின் இந்த செயலை மதுவர்ணிகாவும் எதிர்பார்க்கவில்லை.
“சைத்து?” என்றவள் தோழியை புரியாத பார்வை பார்க்க,
“என்ன மச்சி, இப்படி முழிக்குற. வாவ் இந்த சந்தோசமான விசயத்தை செலிபிரேட் பண்ண வேண்டாமா..? ஜஸ்ட் டென் மினிட்ஸ் குளிச்சிட்டு வரேன் இரண்டு பேரும் வெளியே போலாம். ஜாலியா கொண்டாடலாம்.”
“சைத்து ஸ்டாப்பிட். எதுக்கு இப்படி ரியாக்ட் பண்ற? இது ஒண்ணும் கொண்டாடுற விசயம் இல்லை.”
“லூசு. உனக்கு அவனை பிடிக்காது தானே. அவனே உன்னை விட்டு போயிருக்கான் தொல்லை ஒளிஞ்சுதுனு கொண்டாட வேண்டாமா? இப்போ உன் மனசுலயும் சந்தோசம் தானே இருக்கு?நிச்சயமா இருக்கும், வா இப்போவே போகலாம்” என்றவள் அவளது கைகளை பற்றிக் கொண்டு இழுத்துச் செல்ல, மதுவோ பெண்ணவளது கைகளை உதறியிருந்தாள்.
“இனாஃப் சைத்து. ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்.” என்றவள் கத்தவும் அவளை கேள்வியாக திரும்பி பார்த்தவள், புருவம் உயர்த்தினாள்.
“ஹே மது, வொய் டென்ஷன். இது உனக்கு ஹாப்பி நியூஸ் இல்லையா?”
“இல்ல… இல்ல… இல்லவே இல்லை சைத்து.” என்று பற்களை கடிக்கும் பெண்ணவளை பார்வையால் அளவெடுத்தாள் சைத்ரா.
“உனக்கு நந்தானாலே பிடிக்காது தானே? அதுவும் இல்லாமல் இது ஜஸ்ட் கான்ட்ராக்ட் மேரேஜ். அவனா பாதியில போகிறது உனக்கு நல்லது தானே.”
“சைத்து, போதும் ஐ நோ எவ்ரிதிங். திரும்ப நீ பின்பாயிண்ட் பண்ணி சொல்லாத.”
“உடனே என் வாயை அடைப்பீங்க மேடம். நந்தாவை பிடிக்காதாம். அவனை கண்டாலே கோபம் வருமாம். ஆனால் அவன் மேல லவ் இல்லையாம். லவ் இல்லாம தான் அவன் போனதுக்கு அழுதீங்களா மேடம்?” என்றவளின் கேள்வியில் ஆடிப்போனாள் மது.
அவளிடம் அதற்கான பதில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
“சொல்லுங்க மேடம் நீங்க ஏன் அழணும்? எதுக்காக நீங்க சந்தோசப்படலை. அப்போ அவன் மேல உனக்கு ஏதோ பீலிங் இருக்குன்னு தானே அர்த்தம்?”
“இல்ல. அப்படி எதுவுமே இல்ல.”
“திரும்ப திரும்ப பொய் சொன்னா அது உண்மையா மாறிடாது. உன் கண்ணுல தெரியுது வலி. ஏன் மது, உன்னை நீயே ஏமாத்திக்குற? எதுவுமே எங்கிட்ட மறைக்கமாட்டியே மச்சி. இல்ல இவ எல்லாம் ஒரு ஆளானு யோசிக்கிறியா?” என்று கூறும் போதே சைத்ராவின் கண்களில் நீர் கோர்த்தது.
அவள் வாயிலிருந்து உண்மையை வர வைக்கவே போராடியவள் அப்படி எல்லாம் பேச, எத்தனை பேசியும் இறுகிப் போய் நின்றவளைக் காணும்போதே ஏமாற்றமாகிப் போனது சைத்ராவிற்கு.
“நான் இவ்ளோ சொல்லியும் நீ அமைதியா தான் இருப்பேன்னா, சொல்ல வேண்டாம். நான் போறேன்.” என்றவள் வலியுடன் நகர்ந்துச் செல்ல,
மதுவோ கண்கள் கலங்க, “பயமா இருக்கு சைத்து. எனக்கு பயமா இருக்கு. எங்க அவனை லவ் பண்ணிடுவேனோனு ரொம்ப பயமா இருக்கு.” என்று கண்கள் கலங்கி போய் அவள் கூறவும், சைத்ரா மிக வேகமாக அவளைத் திரும்பி பார்த்தாள்.
“மது?” தான் கேட்டது கனவா? இல்லை நினைவா? என்பது போல இன்ப அதிர்ச்சியில் ஏறிட்டன சைத்ராவின் இருவிழிகள்.
“சைத்து.” என்றவள் அவளை தாவி அணைத்தபடி வெடித்து அழுதாள்.
“எனக்கு இது தான் இன்னும் பயமா இருக்கு. நான் நேசிக்குற யாருமே என்னோட இருக்க மாட்டாங்க. அப்பா, அம்மா, தம்பி அப்புறம் நீ கூட வெளிநாடு போயிட்ட. நீங்க எல்லாம் என் வாழ்க்கையில இருந்து தள்ளி போனதுனால தான் ரகுவரன் காட்டிய அன்பை நிஜம்னு நம்பி ஏமாந்தேன். ஆனால் இதுக்கு காரணம் நீங்க மட்டும் தான் சொல்ல மாட்டேன். என் மேலயும் தப்பு இருக்கு.” என்றவள் தேம்பிக் கொண்டே கூற அவளது தலையை ஆதரவாக வருடிவிட்டாள் சைத்ரா.
“சைத்து, நந்து என் லைஃப்ல வந்ததும்… இழந்த அப்பா, அம்மா மீண்டும் எனக்கு கிடைச்சாங்க. அவங்களை இழக்கக்கூடாதுனு ஒரே காரணத்துக்காக தான் இந்த கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். ஆனால் அந்த இடியட் கொஞ்சம் கொஞ்சமா என்னை நெருங்கி வர ஆரம்பிச்சுட்டான். அதாவது என் மனசு என்னையும் மீறி அவனை ரசிக்க ஆரம்பிச்சுது. அது நடக்கக்கூடாதுனு ஒரே காரணத்துக்காக தான் அவனை திட்டுவேன். ரொம்பவே கேவலப்படுத்தியிருக்கேன். ஆனாலும் அவன் எங்கிட்ட உரிமையோட பழகுனான்.”
“அவனோட பேசும்போது ரகுவரனோட நினைப்பே வந்ததில்லை. நந்தாவை எங்க வீட்டுல இருக்க எல்லாருக்குமே பிடிக்கும். ஒவ்வொரு முறை எனக்கு கோபமா வரும். ஆனால் சில முறை அவங்க இவனை பாராட்டி சொல்றது கேட்கும் போது ஒரு சந்தோசம் வரும். அப்புறம் எனக்கே என் மேல கோபமும் வரும். அது எல்லாமே நான் அவன்கிட்ட தான் காட்டுவேன். இதுக்கு மேல அவன் என்னோட இருந்தால், எங்க அவனை விரும்பிருவேனோனு பயத்துல தான் பிறந்தநாள் நைட் அவங்கிட்ட ரொம்ப தப்பா பேசிட்டேன்.” என்று விழிகள் கலங்கியவளது கண்ணீரை துடைத்தாள் சைத்ரா.
“பைத்தியக்காரி நீ அவனை எப்போவோ விரும்பிட்ட.” சைத்ரா கூறவும் மது அதிர்ந்து போய் அவளை நிமிர்ந்து பார்த்தாள்.
“அவனை எப்போ உனக்கு பிடிச்சுதுனு எனக்கு தெரியாது. ரகுவரனோட சுண்டு விரல் கூட படாமல் தள்ளி வெச்சு பார்த்தவ நீ. ஆனால் மனசுல எவ்வளவு காதல் இருந்தா பர்த்டே விஷ் பண்றப்போ நீ அவனை ஹக் பண்ணி கிஸ் பண்ணியிருப்ப. நீ நினைச்சா நேரடியாவே திட்டிருக்கலாம். அங்கயே நீ உன் லவ்வை காட்டிட்ட, அப்புறம் அவன்கிட்ட தோத்துட்டோமேனு உன் ரூம்க்கு வந்திருக்க, அந்த கோபத்தை வேற மாதிரி காட்டியிருக்க. இது பொய்னு சொல்லாத மது. மனசு தொட்டு யோசிச்சு பாரு உனக்கே புரியும்.” என்று சைத்ரா கூறவும் பொட்டில் அடித்தாற் போல உரைத்தது பெண்ணவளுக்கு.
“இப்பவும் உன் புத்திக்கு ஏறலைனா, நந்தாவோட இந்த பிரிவு உனக்கு வலியை…” என்றவள் கூறும்முன் இடைப்புகுந்தவள்,
“எஸ் ஐ லவ் ஹிம்.” என்று கண்ணீரோடு கூறும் பெண்ணவளை கண்டு மகிழ்ச்சியில் திளைத்தாள் சைத்ரா.
“நந்தா ஒரு திருடன் பரவாயில்லையா?”
“எஸ் திருடன் தான் என் மனசை திருடிட்டு போயிட்டான் அந்த பாவி.” என்று கண்ணீர் மல்க உரைத்தவளை கண்டு மென்புன்னகை புரிந்தாள் சைத்ரா.
“அப்போ ஏன் இன்னும் டைம் வேஸ்ட் பண்ற? வா நந்தாவை கூப்பிட்டு வருவோம்.” என்றவள் அவளது கரம் பற்றி இழுக்க, அசையாது நின்ற மதுவோ, அவளைக் கண்டு உதிர்த்த ஒற்றை வார்த்தையில் சைத்ராவின் முகத்திலிருந்த புன்னகை முழுவதும் வற்றிப் போனது.

