
மரம் தேடும் மழைத்துளி 14
பார்வதி பரபரப்பாக கிருஷ்ணனின் வீட்டுக்கு ஓடிச்சென்ற அதே நேரத்தில். கிருஷ்ணனின் மொபைல் போனில் கதிரின் அழைப்பு வந்தது.
கிருஷ்ணன், மொபைலை எடுத்து பார்த்துவிட்டு. “இவன் எதுக்காக கூப்பிடுறான்?” என்ற சிந்தனையோடு அழைப்பை ஏற்றார்.
கதிர், “மாமா… முருகன் சாரத்தில் இருந்து கீழே விழுந்துட்டான் அவனை தருமாஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனோம். அங்கே பார்க்க முடியாதுன்னு சொல்லி திருநெல்வேலிக்கு அனுப்பி வச்சிருக்காங்க. நானும் அவனும் இப்போ திருநெல்வேலிக்கு கிளம்பி கிட்டு இருக்கிறோம். நீங்க அவனோட அம்மாட்டையும் பொண்டாட்டி கிட்டயும் சொல்லிட்டு திருநெல்வேலி ஆஸ்பத்திரிக்கு வர சொல்லிருங்க.” என்று சொல்லிவிட்டு. கிருஷ்ணனின் பேச்சு என்ன என்று கவனிக்காமல், ஆஸ்பத்திரியின் பரபரப்பு ஒட்டிக்கொண்ட நிலையில் இணைப்பை துண்டித்துக் கொண்டான்.
போன் இணைப்பை துண்டித்த பிறகு. கிருஷ்ணன் நிமிர்ந்து பார்க்க. எதிரில் பார்வதி வந்து நின்று பரபரப்பாக, “எய்யா… முருகனுக்கு, கீழ விழுந்து அடிபட்டுடுச்சாம். தர்மாஸ்பத்திரிக்கு போய் இருக்கனாம்.” என்று சொல்ல.
கிருஷ்ணன், “இப்ப தர்மாஸ்பத்திரியில அவங்க இல்ல. திருநெல்வேலிக்கு கூட்டிட்டு போய் இருக்கிறதா கதிர் போன் பண்ணுனான். நம்ம நேரா திருநெல்வேலிக்கு கிளம்புவோம். நீங்க போயி அவன் பொண்டாட்டியையும் சேர்த்து கூட்டிட்டு வாங்க. நானும் லட்சுமியும் கிளம்பி வாரோம்.” என்று பார்வதிக்கு பதில் சொன்னார்.
பார்வதி, “திருநெல்வேலிக்கு கூட்டிட்டு போய் இருக்காங்கன்னா… அடி ரொம்ப பட்டிருக்கும் போல இருக்கே. ஐயையோ…” என்று தலையில் அடித்து அழுதார்.
பார்வதியின், அழுகுரல் கேட்டு, வீட்டுக்குள் இருந்த லட்சுமி ஓடி வந்தார். “என்ன க்கா… இப்படி அழுவுற? என்ன நடந்துச்சுன்னு சொல்லு?”
பார்வதி, “என் புள்ள… “ என்று கதறி அழுது கொண்டிருக்க.
கிருஷ்ணன், “முருகன் மாடியில இருந்து கீழே விழுந்துட்டானாம் திருநெல்வேலி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் இருக்காங்க. நீயும் மதினியோட போய் அந்த பிள்ளையையும் சேர்த்து கூட்டிகிட்டு வா… நான் காருக்கு ஏற்பாடு பண்ணிட்டு. சரவணனோட வரேன்.” என்று அடுத்த கட்ட வேலையை தொடங்கினார்.
லட்சுமியும் கலங்கிப் போய் பார்வதியை அழைத்துக் கொண்டு. அவரது வீட்டுக்குச் சென்று. ருக்மணியை உடன் புறப்பட்டு வரும்படி சொல்ல. அவளும் தயார் நிலையில் இருந்தாள். சிறிது நேரத்தில், கிருஷ்ணனும், சரவணனும் அம்பாசிடர் காரில் வந்து வாசலில் நிற்க. மூன்று பெண்களும் அதே காரில் ஏறிக்கொண்டு திருநெல்வேலியை நோக்கி புறப்பட்டார்கள்.
முருகனை திருநெல்வேலி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கதிர்.. முருகனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டி, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்தான். அனுமதிக்கப்பட்ட பிறகு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருந்தது. முருகன், இன்னும் கண் திறக்கவில்லை.
சிறிது நேரத்தில் கிருஷ்ணன் அழைத்து வந்த கார் மருத்துவமனைக்குள் நுழைந்தது.
கிருஷ்ணன் தனக்கு வந்த கதிரின் அழைப்பை எடுத்து, மீண்டும் கதிருக்கு அழைப்பு விடுத்தார்.
கதிர், “மாமா அப்படியே முன்னாடி வந்து. ஐ சி யூ வார்டு எங்க இருக்குன்னு கேட்டு வாங்க. நானும் அங்கேதான் இருக்கேன்.”
கிருஷ்ணன், “சரிப்பா முதல் வாசல் வழி வரவா? இரண்டாவது வாசல் வழி வரவா?”
“முதல் வாசல் வழியா வாங்க மாமா.”
கிருஷ்ணன், “சரிப்பா அந்த வாசல்குள்ள தான் நுழைஞ்சிருக்கோம். இப்ப வந்துருவோம்.” என்று இணைப்பை துண்டித்து செல்போனை பைக்குள் போட்டார்.
அனைவரும் இறங்கி ஐ சி யு வார்டை நோக்கி விரைந்து நடந்தார்கள்.
தீவிர சிகிச்சை பிரிவில் 10 படுக்கைகளில் 10 நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டிருந்தார்கள் அதில் முருகனும் ஒருவன். அறையை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி வழியே, முருகனை அவனது குடும்பத்தார் கண்டார்கள்.
முருகனுக்கு காது வழியே வழியும் ரத்தக்கசிவை கட்டுப்படுத்துவதற்காக காதில் பஞ்சு அடைக்கப்பட்டிருக்கிறது. சுவாசிக்க ஏதுவாக ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டு. தலையில் ஏற்பட்ட காயத்தில் கட்டுப்போட பட்டிருந்தது. அதோடு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு பார்ப்பதற்கு பயங்கரமாக படுத்து கிடந்தான்.
அவனை கண்டவுடன் பார்வதி, கதரித்துடித்து அழுதார்.
லட்சுமி தன்னுடைய முந்தானை சேலையால் வாயை பொத்திக்கொண்டு அழுது துடித்தார்.
கிருஷ்ணனும், சரவணனும் பதைபதைத்துப் போனார்கள்.
ருக்மணி, அமைதியாக நின்று அவனை பார்வையிட்டுக் கொண்டு இருந்தாள்.
அழுது கொண்டிருக்கும் இரண்டு தாய்மார்களுக்கும், அவளை பார்த்து கோபமும் வந்தது. இந்த நிலையில் இருப்பவனை பார்த்து, இதயம் துடிக்கவில்லையே என்ற ஆதங்கமும் ஏற்பட்டது.
முருகனின் அருகில் இருந்த கதிர், அந்த அறையை விட்டு வெளியே வந்து. “கூட்டமா போக கூடாதுன்னு சொல்லுவாங்க. ஒரு ஒருத்தரா போய் பாத்துட்டு வாங்க.” என்றான்.
லட்சுமி, கதிரிடம், “ரெண்டு பேரும் ஒண்ணா தானே ய்யா… வேலை பார்த்தீங்க.?” என்று கேட்க.
கதிர், “நான் கீழ நின்னு சாந்து குழைச்சு கொடுத்துக்கிட்டு இருந்தேன். அவன் சாரத்துல நின்னு பூசிக்கிட்டு இருந்தான்.
காலையிலிருந்து பூசிக்கிட்டு தானே இருக்றான். கடைசி சமுக்கத்தை முடிக்கேல்ல கம்பு உடைஞ்சிருச்சு. மூணு படியா நின்னு ஆளுங்க சாந்து எடுத்துக் கொடுத்துக்கிட்டு இருந்தாக. கம்பு உடைஞ்சதும் எல்லாரும் கைல கிடைச்சதை புடிச்சு தொங்கிட்டாங்கன்னால், இவன் எப்படி தான் தலை குப்புற விழுந்தான்னு தெரியலையே த்தே… எம்மானு ஒரு சத்தம் கொடுத்தான் அவ்வளவுதான். மாடசாமி கொத்தனார்க்கு புசம் இறங்கிடுச்சு. சிலுக்கு பிள்ளைக்கு கைய்யி ஒடஞ்சிடுச்சு. மத்தவகளுக்கெல்லாம் லேசு லேசான அடிதான். நல்லவேளை அங்கனக்குள்ள ஒரு வண்டி கிடையாது. எந்த சாமி புண்ணியமோ ஒத்த ஆட்டோ வந்துச்சு. அந்தானைக்கு வழி மறிச்சு, இவன தூக்கிக்கிட்டு நான் உள்ளே ஏறிக்கிட்டேன். கூட ரெண்டு அடிபட்டவக பின்னாடியே ஏறி உட்கார்ந்துட்டாக. எங்கள ஆஸ்பத்திரியில் இறக்கி விட்டதும். இன்னமும் ஆளுங்க இருக்காங்கன்னு திருப்பி போனான் என்ன ஆச்சுன்னு தெரியல. நம்ம ஊருல தொட்டு கூட பாக்கல. ஆம்புலன்ஸ்க்கு சொல்லிவிட்டாக. ஆம்புலன்ஸ் வருத அந்த கொஞ்ச நேரம், அந்த ஆஸ்பத்திரி வாசல்ல இருந்தோம். வண்டி வந்ததும் ஆளும் பேருமா ஏற்றிவிட்டு அனுப்பி விட்டுட்டாக. அங்க ஏறுனது தான் தாமஸம் ஆம்புலன்ஸ் பறந்து தான் வந்துச்சு ஒரு மணி நேரத்துல ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து இறக்கி விட்டுட்டான். ரத்த டெஸ்ட், மருந்து வாங்க. போட்டோ புடிக்க. அது இதுன்னு நான் கொஞ்ச நேரம் அலைஞ்சிட்டு இருந்தேன். நீங்களும் வந்து சேர்ந்துட்டீங்க.” என்று அவன் கதை போல சொல்லச் சொல்ல. ஐந்து பேரும் கலக்கத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
கதிர், “சரி நீங்க ஒருத்தர், ஒருத்தரா பாருங்க. நான் அங்க இருக்கவுக, எப்படி இருக்காங்கன்னு ஒரு வார்த்தை கேட்கிறேன்.” என்று தன்னுடைய போனை எடுத்துக் கொண்டு அவர்களை விட்டு சற்று தள்ளி நின்று கொண்டான்.
கிருஷ்ணன் பார்வதியை, “மதனி முதல்ல நீங்க போயி. உங்க மகனை பக்கத்துல பாருங்க. பேச்சியாத்தாளை நினைச்சு ஆசீர்வாதம் பண்ணிட்டு வாங்க.”
பார்வதி, கலங்கிய கண்களோடு, “என் புள்ள 12 வயசுல குடும்பத்தை தாங்கி பிடிச்சு நிப்பாட்டினானே… இப்படி கிழிஞ்ச சறுகா கிடக்கானே. அந்த சாமிக்கு கண்ணு இல்லைன்னு போச்சே.” என்று அழத் தொடங்கினார்.
கிருஷ்ணன், “அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நம்ம யாருக்கு என்ன கெடுதலை செஞ்சோம்? நம்ம பிள்ளைக்கு ஒன்னும் ஆகாது. ஏதோ கெட்ட நேரம். நடக்கக்கூடாதது நடந்திருச்சு. அதுக்காக அதையே நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தால் என்ன ஆகிறது? புள்ளைய தேத்தி எழுப்பி விடணும்னு தைரியமா இருங்க. நீங்க தைரியமா இருந்தாத்தான் அந்த புள்ளையும் தைரியமாய் இருக்கும்.” என்று ருக்மணியையும் சேர்த்து சொன்னார்.
அப்படியே ருக்மணியை “ஏத்தா உங்க அத்தையை கைதாங்களா கூட்டிட்டு போய் பாத்துட்டு வா.” என்று சொல்ல.
ருக்மணி, பார்வதியின் தோளில் ஆறுதலாய் கை வைத்து, “வாங்க த்தே…” என்று வாய் மலர்ந்து அழைத்தாள்.
அந்த கண்ணாடி அறைக்கு கதவு இல்லை. மாறாக ரெசின் கிளாத் திரை போடப்பட்டிருந்தது. அந்தத் திரையை விலக்கிக் கொண்டு மாமியாரும் மருமகளும் உள்ளே நுழைந்தார்கள். வாசலில் இருந்து மூன்றாவது படுக்கையில் படுத்திருந்தான் முருகன். அந்த அறைக்குள் நுழைந்ததும். மருத்துவமனையின் மருந்து நெடியும், நோயாளிகளின் உடல் வெக்கையும் ஒன்று கூடி. ருக்மணியின் வயிற்றை புரட்டிக்கொண்டு வந்தது. முருகனின் படுக்கை அருகில் நின்றுகொண்டிருந்த பார்வதியை அப்படியே விட்டுவிட்டு. உமட்டிக்கொண்டு வெளியே ஓடிச்சென்றாள். ருக்மணியை கவனித்த கதிர், பக்கத்தில் இருக்கும் டாய்லெட்டை காண்பித்தான்.
உள்ளே சென்று வாந்தி எடுத்துவிட்டு முகம் கழுவிக்கொண்டு இருந்தாள் ருக்மணி.
பார்வதி, முருகனை கவனித்ததை விட, ருக்மணியை ஆழமாக கவனித்தார். “என் பிள்ளை குத்துயிரும் கொலை உயிருமா கிடக்கிறதை பார்த்து. உனக்கு வாந்தி வருதாக்கும்!” என்று மனதில் கருவிக் கொண்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்.
வெளியில் இருந்து, பார்வதியை கவனித்த சரவணன், உள்ளே வந்து “பெரிம்மா… அண்ணனை பார்க்காமல் யாரை பார்த்துகிட்டு இருக்கீங்க?” என்று வினா தொடுக்க.
பார்வதி, சரவணன் கையைப் பிடித்துக் கொண்டு. “அண்ணன் எப்படி கிடக்கான்? அந்த சிறுக்கி மக எப்படி ஓடுறான்னு பாரியா…” என்று தேம்பி அழுதார்.
சரவணன், “விடு பெரியம்மா. இந்நேரம் இதெல்லாம் பாத்துட்டு இருக்க கூடாது. வீட்டுக்கு வந்த பிறகு பேசிக்கலாம்.” என்று சொன்னான்.
பார்வதி, “நான் இங்க வச்சு ஒன்னும் சொல்லல. என் பெத்த வயிறு எரியுதே. அவள் யாரோ எவரோன்னு இருக்காளேன்னு ஒரு ஆதங்கம்.” என்று சொல்லிவிட்டு. முருகனின் கை, கால் மார்பகம், கன்னம் என்று தடவிப் பார்த்தார் பார்வதி.
சரவணன், பார்வதியை கைதாங்குதலாக பிடித்து வெளியே அழைத்துக் கொண்டு வந்தான்.
முகம் துடைத்துக் கொண்டு வெளியே வந்த ருக்மணியை பார்த்த லக்ஷ்மி,கோபத்தை மறைத்துக் கொண்டு. ருக்கு பாவம் அவன் கீழ விழுந்ததிலிருந்து கிரங்கி கிரங்கி விழுகுறா. என்று அவர் சொன்னதும்.
ருக்மண, “இது என் மேல இருக்கிற அனுதாபத்தில் சொல்ற மாதிரி தெரியலையே. நான் ஏதோ நாடகம் நடிக்கிறதா சொல்றது போல தெரியுது.” என்று எண்ணியவள் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்ய தொடங்கினாள். “அவர் கீழே விழுந்தது எனக்கு வருத்தம்தான். ஆனாலும் கிரங்கி விழுகிற அளவுக்கு நான் கத்தி அழல. அப்புறம் ஏன் எனக்கு இந்த தலைசுத்தல் வருது. மருந்து வாடையும் ரத்த வாடையும் ஒத்துக்கலயோ?” என்று யோசித்தவள், “என்னன்னு தெரியல த்தே… திடீர்னு தல சுத்துற மாதிரி இருக்கு. ஆஸ்பத்திரி வாட சேராமல் வாந்தி வந்திருச்சு.” என்று அவள் சொன்னதை கேட்ட பார்வதியும், கிருஷ்ணனும், யூகித்துக் கொண்டார்கள். கிருஷ்ணன் அதை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார். பார்வதி அதை வெறுப்போடு ஏற்றுக் கொண்டார்.

