
குருவை மேலும் கத்த விட்டு மிச்ச சொச்ச மானத்தை இழக்க அருணாச்சலம் விரும்பவில்லை. எல்லோரும் சத்திரம் விட்டு கிளம்ப உமா உணர்வுகளை வெளிப்படுத்தாமல் கவனமாய் நடந்துகொண்டாள். அவள் முகத்தில் ஏதேனும் வலி தென்படுகிறதா என்று கவனித்துக் கொண்டிருந்த குருவுக்கு பெருத்த ஏமாற்றம்! இதை அவன் அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
மெலிதாக அவள் காதுகளில், பிறருக்கு கேட்காமல், உனக்கு உங்க வீட்டுக்கு போகணும்னு தோணலையா,என்றவனுக்கு நிச்சயம் அவளின் உணர்வுகளின் மேல் ஆதிக்கம் செலுத்தும் ஈடுபாடு புலப்பட, அவனிடம் அடி மன உணர்வுகளை காண்பிக்காமல் “இனி, நீங்க இருக்கும் வீடு தான் என் வீடு “என்றவளை வியப்பு மீற பார்த்து கொண்டு நின்றான் குரு. அவள் வார்த்தைகளில் ஏதோ அர்த்தம் ஒளிந்திருப்பதாகவே அவனுக்கு தோன்றியது.இவர்கள் இருவரின் உரையாடல் யாருக்கும் கேட்கவில்லை. இதையெல்லாம் அருகே நின்று கவனித்துக் கொண்டிருந்த அருணாசலத்திற்கு சற்றே மன நிறைவு. வந்திருக்கும் பெண்ணாவது குடும்ப மானத்தை கட்டி காப்பாற்ற முயற்சி செய்வாள், நாசுக்கு தெரிந்து நடக்கிறாள் என்பது அவருக்கு சந்தோஷமாய் இருந்தது.
சிவன் குடும்பம் முழுவதும் வருத்தம் மிக கிளம்பினார்கள். சிவன் ஆட்டோ கூட்டி வந்தார். அவர்கள் உடைகள் கொண்ட பெட்டியும், சாப்பாடு கூடையும் மட்டுமே அவர்களுடன்… வெறும் மூன்று பேர். திருமணத்திற்கு வந்த சிவனின் உறவுகள் சொற்பம். அவர்களும் கிளம்பியாயிற்று. மணமக்கள் வரப் போவதில்லை என மதியம் அவர்களை வேறு சொல்லி அனுப்பிவிட்டார் சிவம் . பெரும்பாலும் அவர் சொந்தங்கள் அவரின் சொந்த மண்ணில்.
ரத்னா வேறு வராதது அவர்களுக்கு மனதில் வருத்தம். சாந்தா கண்ணீரில் கரைய, உமாவின் கண்களில் கலக்கம். ஆனால், தங்கையை தாங்க அவள் முனையவில்லை. அன்னபூரணிதான் சாந்தாவை சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று. குரு முகத்தில் உமா பற்றிய ஆராய்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது. அதற்கெல்லாம் உமா அசையவில்லை.
அன்று இரவே முதலிரவு வைத்தாக வேண்டும் என குரு ரகளை செய்துவிட்டான். அன்று சாந்தி முஹூர்த்தம் செய்ய நேரம் ஏற்றதல்ல என ஜோசியர் சொல்ல கேட்பேனா என்றான் குரு. அருணாச்சலம் தம்பதி செய்வதரியாது நிற்க, உமா மெல்ல குருவிடம் ‘’மாமா, எனக்கு அந்த மூன்று நாட்கள் நெருங்குது” என்று மெல்ல அவனிடம் கூறினாள் அவர்கள் தனியறையில் . ஸோ ஒரு வாரம் கழிச்சு இதெல்லாம்… என்று மெல்ல கொஞ்சி கொஞ்சி அவனிடம் பேச, சந்தேகமாய் அவளை பார்த்தவனுக்கு பாதியில் ஏதாவது ஆகிதொலைந்தால் என்று எண்ணம் எழ “சரி, அடுத்த வாரமும் ஏதாவது சாக்கு சொல்லாத” என்று கடுப்புடன் வெளியே சென்று விட்டான். அவள் சொல்வது உண்மையா இல்லை தன்னை தவிற்கும் வழியா… பொறுத்திருந்து பார்ப்போம் என்று யோசித்தான் குரு.உமாவின் மாமா எனும் அழைப்பு உள்ளே தேனை வார்க்க மௌனமாய் தோப்பு வீட்டுக்கு சென்று படுத்துவிட்டான், அதிசயமாக தனியாளாய்.
இன்னும் பதிநைந்து நாட்கள் கழித்துதான் முஹூர்த்தம் இருக்காம் என்றாள் அன்னபூரணி. எனக்கும் இன்னும் ஒரு வாரம் கழிச்சு தான் நாள் அத்தை என்றாள் உமா. இருவரும் சிரித்துகொண்டனர்.
குரு தன் புது மனைவியை அதிகம் கண்டுகொள்ளவில்லை. அவளை ஆழம் பார்த்தான். அவளாக அவனிடம் வந்து பேசினாள். திருமண நிகழ்வுக்கு முன்னர் இருந்த தயக்கம் அவளிடம் இல்லை. நாடகம் செய்கிறாளா என யோசித்தால், அப்படியும் தெரியவில்லை. சிவன் அடுத்த நாளே வேலைக்கு வந்து விட்டார். அவருடன் அப்பா என்று நிற்கவில்லை பெண். மறுவீடு செல்ல கேட்கவும் இல்லை.குருவுக்கு அவளை புரிந்துகொள்ள முடியவில்லை. பிறந்தகம் போகணும் என்று அவள் கேட்கவில்லை, அந்த ஆசை இருப்பதாகவே தெரியவில்லையே!அவள் மனதில் என்ன என்று தெரியாமல் குழம்பினான் குரு. சரியாக ஒரு வாரம் கழித்து மாத விடாய் என்று ஒதுங்கினாள் உமா. குரு மனதில் மீண்டும் எதிர்பார்ப்பு. ஐந்து நாட்கள் ஒன்றும் சரிவராது என்றுவிட்டாள் உமா.. மேலும் மூன்று நாட்கள் தள்ள, முதலில் குல தெய்வ கோயில் செல்ல வேண்டும். பிறகு எல்லாம் பார்க்கலாம், தலைமை முடிவு சொல்லும் நாளில் கோயில் செல்ல முடிவெடுத்தார் அருணாச்சலம். குருவுக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை. மீண்டும் ரகளை. ஆனால் பயனில்லை. எப்படியோ நாட்கள் நகர ஜோசியர் சொன்ன அந்த நாள் வந்தது.
அருணாச்சலத்துக்கு எம் எல் ஏ சீட் தர மேலிடம் ஒப்பு கொண்டது. வென்றால் அமைச்சர் பதவி எனும் நிலை. அவருக்கு நிலை கொள்ளவில்லை. முதல் முறையாக சட்ட சபை தேர்தலில் நிற்கிறார்.
முதல் இரவு நாளுக்கென குரு உமாவுக்கு தங்க கொலுசு பரிசளித்தான். உமா எந்த மறுப்பும் இன்றி தன்னையே அவனுக்கு பரிசாக அளித்தாள். அவள் வேண்டுமென்றே இந்த சடங்கு நிகழாமல் தள்ளி போடுகிறாள் என்று நினைத்திருந்தவனுக்கு அவளின் ஒத்துழைப்பு போதை கூட்டியது. முதலில் வன்மையாக கையாண்டவன் பிறகு என்ன நினைத்தானோ, அவளை ராணி போல் நடத்த அவளுக்கு ஆச்சர்யம். அவளின் கூசி குழைந்த தந்த நிற தேகம் அவனுக்குள் மோகம் எனும் நெருப்பை கொழுந்து விட்டு எரிய செய்தது.
இது வரை அவன் மற்ற பெண்களிடம் காணாத ஏதோ ஒன்று மனைவியிடம் கண்டவனுக்கு கொண்டாடி தீர்க்க அந்த இரவு போதவில்லை. முதலில் கஷ்ட பட்டவளுக்கு வலியில் கண்ணீர் வர, இவனுக்கு தன் கண்ணீரை காட்ட கூடாது எனும் அவளின் தீர்மானம் நினைவு வர தன்னை நிதானித்து கொண்டாள். அவனின் மோகம் நிறைவதாய் தெரியவில்லை.
ஒவ்வொரு நாளும் உமா அவனுக்கு புதியதாய் தெரிய பித்து பிடித்தவன் போல் ஆனான்.
சொத்து நிர்வாகம் பார்க்க உமா அவனை கட்டாயபடுத்தி அனுப்பி வைத்தாள். வேலை
முடிந்தவுடன் நல்ல கணவனாய் மாலை வீடு வரும் அவனைப்பார்த்து அருணாசலத்துக்கும், அன்னபூரணிக்கும் வியப்பு தாங்க முடியவில்லை.
ஆனால், அவனது பலவீனம் உமாவுக்கு நன்றாக புரிந்தது. அவன் தன்னை விட்டு வேறு பெண்களிடம்
செல்லக்கூடாது. வேறு ஒருத்தியின் நியாபகம் கணவனுக்கு எந்த காலத்திலும் ம்ஹும்… கூடாது என்று யோசித்தவள் மனதிற்குள் அந்த முடிவை இறுக்கி பதிய வைத்தாள்.
தினமும் உடல் பயிற்சி செய்ய ஜிம் செல்ல ஆரம்பித்தாள். உணவு கட்டுபாடும் சேர்ந்து இன்னும் அவளின் அழகு கூடியது. அவள் உடை அலங்காரம் என்று முழுவதும் மாறினாள். அந்தரங்கத்தில் கணவனுடன் ஒன்றி அவனை சந்தோஷம் கொள்ள செய்தாள். அவனால் இரவு அவள் இல்லாமல் இருக்க முடியாது எனும் அளவிற்கு அவளுள் மூழ்கினான். ஆனால், அவளுள் மரித்த அவள் எழவே இல்லை. இயந்திரதனமாய் இருந்தது அவனுடனான அவளது கூடல்.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று அவனது மோக வலை அறுந்து விழ அவள் எப்போதும் சம்மதிக்க தயாராக இல்லை. அவளது முயற்சிகளை அன்னபூரணியும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள்.
ஒரு தாயாக அவளுக்குள்ளும் தன் மகன் திருந்தி நல்ல குடும்ப வாழ்வு வாழவேண்டும் என்ற பிரார்த்தனைகள் உண்டு. அதனாலேயே, உமாவின் வழியிலேயே அவளை விட்டு விட்டாள். மெல்ல மெல்ல, உமாவை வீட்டு நிர்வாகத்திற்கும் பழக்கினாள் அன்னபூரணி. சிவனுக்கு தன் மகள் எடுத்து வைக்கும் அடிகள் மிகுந்த மகிழ்ச்சியை உண்டு பண்ணியது.
மருமகன் என்னதான் திமிர் பிடித்தவனாக நடந்துகொண்டாலும் மகளிடமும் தன்மையாக நடந்து கொள்வது மனதிற்கு ஆறுதலாக இருந்தது. பாறுகுட்டியும் சரி, இங்கே வராவிட்டால் கூட நல்ல வாழ்வு அவளுக்கு அமையப் பெற்றால் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டாள். சிவன் தினமும் அங்கே நடப்பவற்றை சொல்லும்போது, விவரிக்க முடியாத எண்ணங்கள் அவளுக்குள் எழும். மகளுக்கு சந்தோஷத்தை கொடு தேவி என்று பிரார்த்தனை செய்வதைத் தவிர அந்த தாய்க்கும் வேறுவழியில்லை.
தேர்தல் முடிவுகள் வந்து அருணாச்சலம் எம்எல்ஏ ஆகிவிட்டார். மருமகள் வந்த நேரம் தன் வாழ்வில் ஏற்றங்கள் என்று அவளை கொண்டாடினார் அருணாச்சலம். குருவும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
அருணாசலத்திற்கு அமைச்சர் பதவியும் கிடைக்க, காவல்துறையும், சுகாதார துறையும் அவரின் நிர்வாகத்தில் இயங்கத் தொடங்கியது. குருவுக்கு தந்தைக்கு கிடைத்த பதவி இன்னும் கொஞ்சம் திமிரை அதிகப்படுத்தியது. மறைமுக தொழிலில் தைரியமாக இறங்கி விட்டான். அவனது தொழில் ரகசியங்கள் பற்றி உமா, அன்னபூரணி, அருணாச்சலம் யாருக்குமே தெரியாது.
சிவனுக்கு மட்டும் தன் மருமகன் ஏதோ தவறான செயல்களில் ஈடுபடுகிறான் என்ற அச்சம் மனதில் இருந்தாலும் வாய்விட்டு இன்னும் அவர் எதையும் கூறவில்லை.
அருணாச்சலம் அமைச்சரானவுடன் அவரது குடும்பம் சென்னைக்கு இடம் பெயர சிவனும் தனது குடும்பத்துடன் சென்னை செல்லலானார். சிவனை இப்பொழுதும் தன்னுடனேயே வைத்துக் கொண்டிருக்கிறார்
அருணாச்சலம் . சம்பந்தி என்ற மரியாதை சிவனுக்கு என்றும் கிடையாது. ஆனால் உண்மையான விசுவாசியை எங்கே வைத்திருக்க வேண்டும் என்பது அறிவார் அருணாச்சலம். சிவனுக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.
அருணாச்சலதுடன் சென்னைக்கு வந்துவிட்ட மற்றொரு நபர் வீரன். அருணாசலத்திற்கு தன் உயிரைக் காப்பதற்கு மட்டும் காவலுக்கு தன்னுடன் ஆள் தேவைப்படவில்லை. தேவைப்படும் பொழுது தன் உயிரைத் தரவும் விசுவாசி தேவைப்படுகிறது. அதற்கு வீரன் சரியான ஆள் தான். அவருக்கு உயிர் பயம் இப்போது அதிகமாகி விட்டது. பதவி வந்தவுடன் அவர் ஆளும் அதிகம் மாறிப்போனார்.
ரத்னா திருச்சூரில் கல்லூரி சேர்ந்தாயிற்று. சங்கரனும் திருச்சியில் கிளை திறந்து நிர்வகிக்க ஆள் நியமனம் செய்துவிட்டான். அவர்கள் வாழ்வு காதலின் முதல் படியில். இன்னும் அவர்கள் திருமண வாழ்வுக்குள் புகவில்லை. அவள் படிக்க வேண்டிய சிறு பெண். சம்சார பாரம் இப்போது வேண்டாம் என யோசிக்கிறான் சங்கரன். ஆனால், அந்த சிறு பெண்ணுக்குள் திருமண சம்மந்தமான ஆசைகள் எழும்ப தொடங்கிவிட்டது.
**********************************************************
சாதுர்யா தன் ஆசைப்பட்டபடி அரசியல் அறிவியலில் சேர்ந்து கொண்டாள். வீட்டிலுள்ளவர்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்கும் அளவில் அவள் இல்லை. தான் பிடித்தால் பிடித்தது தான் எனும் முரட்டு பிடிவாதம்!
ரங்கன் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்றுவிட்டான். இன்னும் ஒரு மாதத்தில் அவன் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்கிறான். சாதுர்யா மனதில் எப்படியாவது ரங்கனிடம் தன் மனதை விரைவில் பதியவைக்க வேண்டும் என்ற துடிப்பு அதிகமாக இருந்தது. அவளுக்கு நிச்சயமாய் தெரிந்துவிட்டது ரங்கன் மீது தனக்கு இருப்பது காதல் தான் என்று.
அது அத்தானுக்கும் தெரிந்திருக்கும். ஆனாலும் ஏன் தன்னை தவிர்க்கிறார் என்றது அவளுக்கு புரியவில்லை. தன்னை புரிய வைத்துவிடும் வேகம் அவளுக்கு அதிகமாகிவிட்டது.
ரங்கனை சனிக்கிழமை மாலையில், கல்லணைக்கு போய் வரலாம் என்று கூப்பிட்டு கொண்டு சென்றாள்.அவள் ஏதோ பேச விரும்புகிறாள் என அவனுக்கு புரிந்து போனது.
‘நான் திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பேன்’ என்று அவள் சொன்னது ரங்கனை அன்றே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. அவளிடம் அதுபற்றி கேட்டுவிட வேண்டும் என்று பல நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறான்.
இன்று இருவரும் ஒருவர் மனதில் இருக்கும்அந்தரகங்கத்தை இன்னொருவர் அறிய பகிர்ந்து கொள்வதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதலில் ரங்கனே பேச்சை நேரடியாக தொடங்கிவிட்டான்.” படிப்பு முடிந்த பிறகு நீ கட்டாயம் கல்யாணத்துக்கு ஒத்துக்கணும், வேற காரணங்கள் சொல்லி கல்யாணத்தை தள்ளி போடக்கூடாது சாதுர்யா” என்றவனை தீர்க்கமாக பார்த்தபின் பெண் சொன்னது, “’அத்தான் மணமகன் நீங்கன்னா கண்டிப்பாக நான் உங்கள கல்யாணம் செஞ்சுக்குவேன்’’ என்று. சட்டென்று அவள் அவ்வாறு சொல்வாள் என்று ரங்கன் எதிர்பார்க்கவில்லை.
இதற்கு மேல் காலதாமதம் செய்ய கூடாது என்று அவள் முடிவு செய்து கொண்டுதான் வந்திருந்தாள். வெகு காலமாய் மனதில் பூட்டி வைத்த ரகசியம், இன்று எப்படியோ தைரியத்தை கூட்டி கொண்ட சொல்லி விட்டாள்.
இருவரும் திரும்பி வரும்போது மௌனம் மட்டுமே இருவருக்கும் நடுவில். ரங்கன் தனது பதிலை இன்னும் எதுவும் சொல்லவில்லை. அவள் வார்த்தைகள் அவனுக்கு ஒரு ஆயிரம் குழப்பங்களை விதைத்திருக்கிறது. அவன் முடிவு என்ன என்பது காத்திருந்த தான் தெரிந்து கொள்ள வேண்டும். அவன் மனதில் அவள் சிரித்தாள். அவனால் அவளது சிரிப்புக்கு பதில் சொல்ல முடியவில்லை.ஆனால், யார் அவள், அவனுக்குள் சிரித்து, சில சமயம் அழுது அவனை பல வருஷங்களாய் தூக்கம் கெடுக்கும் பெண்?
சாதுர்யா இவ்வளவு சீக்கிரம் தன் மனதில் இருப்பதை சொல்லி விடுவாள் என்று ரங்கன் சிறிது கூட எதிர்பார்க்கவில்லை. காரில் வரும்போதெல்லாம் இருவருக்கும் மௌனம் மட்டுமே மொழியாக! ஏனோ அந்த பெண்ணுக்கு தன் அத்தானிடம் தன் காதலை
இப்பொழுது சொல்லவில்லை என்றால் எப்பொழுதுமே சொல்ல முடியாமல் போய்விடுமோ என்ற ஒரு தவிப்பு. என்றைக்கு ஆனாலும் சொல்லித்தான் தீரவேண்டும் என்றால் இன்று சொன்னால் என்ன தவறு என்ற மூளையின் கேள்வி அவளை இன்று ஒருவழியாக பேச வைத்துவிட்டது. தன் மனதில் உள்ளதை அவனிடம் சொல்லி விட்டதாலோ என்னவோ இரவு தூக்கம் அவளை வேகமாக தழுவிக்கொண்டது. ஆனால் ரங்கனுக்கு தான் மனசு ஒரு நிலையில் இல்லை.
அவனுக்கு தீர்மானமாக தெரியும் இதெல்லாம் சரியாக வராது என்று. இருவருக்கும் படிக்க வேண்டிய வயது, மனதை சிதற விட்டால் சரியான தருணம் இது இல்லை அவள் சொல்வதற்கு எல்லாம் சரி என்று சொல்லி விட்டாலும் கூட வெளிநாடு சென்று வந்த பிறகு நிலைமை எப்படி இருக்கப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது. இப்போதைக்கு ஒரு மாதத்திற்கு வேண்டுமானால் அவளது கேள்விக்கு பதில் ஆமாம் என்று விடலாம்.ஆனால் பிறகு? நிச்சயம் இதற்கெல்லாம் மாலதி சம்மதிக்க போவதில்லை. தன் அண்ணன் மகனுக்கு தன் மகளை திருமணம் முடிப்பது பற்றி மாலதிக்கு கனவு உண்டு. அதுபற்றியும் ரங்கனுக்கு தெரியும்.
சரி தவறு என்பதை பற்றிய ஆராய்ச்சி செய்வதைவிட இந்த பிரச்சனையை இப்போதைக்கு வாயை மூடி கொண்டுவிட்டு கடந்து சென்று விடலாம். அவளுக்கு எந்த பதில் கொடுத்தாலும் அது தவறாகத்தான் முடியும். சொந்தங்களுக்குள் விரிசல் வருவதை ரங்கன் விரும்பவில்லை. இன்னும் சரியாக ஒரே மாதத்தில் அவனும் கிளம்பிவிட போகிறான். அவன் எண்ண
அலைகள் மீண்டும் மீண்டும் தன் மாமன் மகளையே சுற்றி சுற்றி வந்தது.
அவள் சொன்ன விதத்தையும் அவள் தைரியத்தையும் மனதில் எண்ணி எண்ணி சிரித்துக் கொண்டான். அது அவனுக்கு பிடித்துதான் இருக்கிறது. மறுப்பதற்கில்லை.
பெண்ணும் அழகிதான், அவள் காதல் சொன்ன விதம் இன்னும் அழகு. சடங்கு அன்று அவன் வாங்கிக் கொடுத்த பாவாடை தாவணியை உடுத்திக் கொண்டு இருந்த அந்த பருவப்பெண்ணின் உருவம் அவன் மனதை சிதறடித்தது. தலையை உலுக்கிக் கொண்டு, தூங்கச் சென்றால் இரவு முழுவதும் அவள் நினைவுகள் அவனை துரத்தின. விடியும் வேளையில் தான் லேசாக தூக்கம் வந்தது. இனி,இந்த நினைவுகள் சரிவராது என்று தனக்குத்தானே யோசித்தவன் வெளிநாடு செல்லும் முன் நண்பர்களை பார்த்து விட்டு வருகிறேன் என்று ஒரு வாரத்திற்கு சென்னை சென்று விட்டான். செல்லும்பொழுது அந்தப் பெண்ணிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை.
அவன் பதில் சொல்லாத விதமே அவள் மனதில் ஆழ்ந்த காயத்தை உண்டு பண்ணியது. அவளைப் பொறுத்த வரைக்கும் மறுப்பதற்கு காரணங்கள் ஏதும் கிடையாது. அவள் மனதில் ஆழப்பதிந்து இருப்பது அவன் முகமே. முதல் காதலும் இதுதான்… அவளது முடிவான காதலும் அவன் மீதுதான்!
அவனுக்கு இது புரியவில்லை என்றால் கூட சரி. எல்லா காதலும் திருமணத்தில் தான் முடிய வேண்டும் என்ற சட்டம் எழுதப்பட்டுள்ளது? அத்தான் அவன் மறுத்து விட்டால் இருக்கவே இருக்கு படிப்பு. அன்று சொன்னது போல் கல்யாணமே செய்துகொள்ளாமல் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று வாழ்க்கையை வேறு விதத்தில் அமைத்துக் கொள்ளலாம் என்று எண்ணினாள் அந்தப் பெண். அவன் விலகிச் சென்றாலும் அவள் மனதிற்குள் இருக்கும் இந்த உணர்வு அவளுக்கு பெரிய பலத்தை தருகிறது. எப்பொழுதும் அவன் தன்னுடனே இருப்பது போன்ற ஒரு மனத் தோற்றம். இது காட்சி பிழையோ கருத்து பிழையோ அல்ல… காதல் பிழை!

