
மரம் தேடும் மழைத்துளி 13
அன்றைய பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற பிறகு. ருக்மணி, முருகன் முகத்தில் விழிப்பது இல்லை. முருகனும் ருக்மணியை கோபப்படுத்தும் படி நடந்து கொள்வதில்லை.
ருக்மணி, அன்றைய சம்பவம் நடந்த அடுத்த நாளே… தான், முன்பு வேலை செய்த மில்லிற்கு மீண்டும் வேலைக்குச் சேர்ந்தாள்.
அந்த வாரம் வேலை செய்த சம்பளத்தை வாங்கி. கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய 500 ரூபாய் கடனை திருப்பிக் கொடுத்தாள்.
பார்வதி, இப்படியே… இருவரும் ஒருவர் முகத்தில் ஒருவர் விழித்துக் கொள்ளாமலே ஒதுங்கி இருந்து விடுவார்களோ என்று பயந்தார்.
அதே நேரத்தில்.
சரவணன் சென்னையில் பணியாற்றிய நிறுவனத்திற்கு மீண்டும் வேலைக்கு சென்றான். அந்த நிறுவனத்தார் சரவணன் எடுத்த விடுமுறையை கணக்கில் கொண்டு. வேலை இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அதனால் சென்னையிலேயே தங்கிருந்து இன்னொரு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தான்.
தினமும் போன் செய்யும் கிருஷ்ணன், “வேலை இல்லாவிட்டால் ஒன்றும் பரவாயில்லை. வீட்டுக்கு வந்து சேரு.” என்று உத்தரவிட்டார்.
சரவணன் மறுப்பு சொல்லாமல், சேத்தூருக்கு வந்துசேர்ந்தான்.
அன்று உணவு உண்ணும் நேரத்தில், சரவணன் மற்றும் கிருஷ்ணனும் சாப்பாட்டில் அமர்ந்திருக்க. லட்சுமி உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்.
லட்சுமி, “வருத்தப்படாதே சரவணனா… மெட்ராஸ்ல தான் வேலை பார்க்கணும்னு ஒன்னும் இல்ல. உள்ளூருக்குள்ளயே நீ படிச்ச படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கும். சம்பளம் முன்ன பின்ன இருந்தாலும் பாரு.”
கிருஷ்ணன், “வேலையே கிடைக்காட்டிலும் பரவால்லடா. அப்பாவோட விவசாயம் பாரு. அதுக்கு மிஞ்சின தொழிலு உலகத்துல இல்லவே இல்லை.”
சரவணன், “என் கூட படிச்ச ரவி லோக்கல் மில்லில் வேலை பார்த்துகிட்டு இருக்கான். நானும் கேட்க சொல்லி இருக்கேன். கேட்டுட்டு வரட்டும். கூப்பிட்டு விட்டா போகணும்.”
லட்சுமி, “நீ கட்டாயம் வேலைக்கு போய் தான் ஆகணும்னு இல்லடா. அதையே நினைச்சு வருத்தப்படாதே. அப்பா சொன்ன மாதிரி விவசாயம் பாரு. விவசாயம் பார்த்தால் பொண்ணு கொடுக்க மாட்டாங்கன்னு பயப்படுறியா? என்று கேலியாக கேட்டார்.
“ஏன் அம்மா இப்படி” என்று வெட்கம் கொண்டான் சரவணன்.
சுந்தரியின் கணவன் லிங்கம் வெளிநாடு சென்ற பிறக. சுந்தரிக்கு பிறந்த வீடு செல்ல வேண்டும் போல இருந்தது. அதை மாமியார் சுசிலாவிடம் தெரிவிக்க.
“சரி சுந்தரி, இங்கே பத்து நாளும். உங்க வீட்டுல பத்து நாளும் இரு.” என்று சொன்ன சுசீலா.சுந்தரியை அழைத்துக் கொண்டு சேத்தூருக்கு வந்தார்.
லட்சுமி மட்டும் வீட்டில் இருந்தார். “வாங்க சம்மந்தி அம்மா… வாட்டி சுந்தரி”.
சுசீலா “என்ன மதினி, இன்னும் சம்மந்தகாரின்னு அந்நிய படுத்தியே கூப்பிடுறேய. அண்ணன் பொண்டாட்டியை மதினியேன்னு கூப்பிட வேண்டியதுதானே…”
“சரி மதினி வாங்க. திடுதிப்புனு பார்த்ததும் ஒரு பதட்டத்தில கூப்பிட்டுட்டேன். அண்ணே நல்லா இருக்காகளா?” என்று நலம் விசாரித்த லட்சுமி.
“உங்க அண்ணனுக்கு ஒரு குறையும் இல்லை. எங்க லிங்கம் வெளிநாடு போயிட்டான். சுந்தரிக்கு வீட்ல இருக்கதுக்கு சிரமமா இருக்குன்னாள். அதுதான் இங்கே பத்து நாளைக்கும் அங்க பத்து நாளைக்குமா இருக்கட்டும்னு கூட்டிட்டு வந்தேன். அடுத்த முறை வரும்போது அவளே தனியா வந்துக்குவா முதல் முறையா பாதை காட்டுறதுக்கு கூட வந்தேன். எங்க அண்ணே, மருமகேன் எப்படி இருக்காக?” என்று சுசீலா வந்த விஷயத்தை சொன்னார்.
“உங்க அண்ணே தோட்டத்துக்கு போய் இருக்காங்க. சரவணன் பக்கத்துல கூட்டாளி வீட்டுக்கு போய் இருக்கான்.”
சுந்தரி “சரவணன் வேலைக்கு போகலையாம்மா?”
லட்சும, “கல்யாணம் முடிஞ்சு வாரத்திலேயே வேலைக்கு போனான். ரொம்ப லீவு போட்டதனால, வேண்டாம்னு சொல்லிட்டாக. போன கிழமை இருந்துட்டு. புதன்கிழமை வீட்டுக்கு வந்துட்டான். சரி நம்ம ஊருக்குள்ளையும் நிறைய மில்லுக இருக்கு. இங்கேயே ஏதாவது ஒரு இடத்துக்கு வேலைக்கு போகட்டும். பிறகு என்ன செய்ய?”
சுசீலா, “எங்க லிங்கம் கூட்டாளிகட்ட கேட்டு வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டியதுதானே மதினீ.”
“வெளியூர்ல வேலை பாக்கறதுக்கு ரொம்ப வருத்தப்படுறான். வெளிநாடு வரைக்கும் போனோம்னா இருக்க மாட்டான். அவனால எங்களை விட்டுட்டு இருக்க முடியாது. எங்களாலையும் அவனை விட்டுட்டு இருக்க முடியாது. வெறும் விவசாயத்தை பார்த்து நாங்கள் எல்லாம் பொழைக்கலையா? என்று லட்சுமி மகனுக்காக பேசினார்.
சுசிலா, “அதுவும் சரிதான். நாங்களும் வெளிநாடுக்கு அனுப்பி வச்சிட்டு. வதைச்சிட்டு கெடக்குறோம்.”
லட்சுமி, “பாருங்க வீட்டுக்கு வந்தவங்கள ஒரு காபி தண்ணி கூட கொடுக்காமல் பேசிக்கிட்டு இருக்கிறேன்.” என்றவர் வீட்டுக்கு உள்ளே சென்று நீர் மோர் எடுத்துக் கொண்டு வந்து சுசிலாவிடம் கொடுத்தார். சுந்தரியை பார்த்து அத்தைக்கு காப்பி போட்டு கொடுடி. என்றதும்,
சுந்தரி, அடுப்படிக்குள் சென்று, “பால் இருக்காம்மா? கடுங்காப்பி போடவா?” என்றாள்.
லட்சுமி “பாலு உரைக்கு எடுத்து வச்சிருக்கேன். அதை காப்பி போடு.”
சுசீலா, “மதினி கடுங்காப்பியே குடிக்கிறேன். பால் காப்பி சளி பிடிக்கும்.”
லட்சுமி, “சுந்தரி… அத்தைக்கு கடுங்காப்பியே போட்டுக்கோ. உனக்கு வேணும்னா பால் காப்பி போட்டுக்கோ.”
சுந்தரி, “7 பேத்துக்கு ஏழு காபி போடுவாக. சீமண்ணை விக்கிற விலையிலே… ஆளுக்கு ஒரு தரம் அடுப்பை பத்த வைக்கவா? நானும் கடுங்காப்பியே குடிச்சிக்கிறேன். என்று பதில் சொல்லியபடியே மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்தாள்.
ரவி, சரவணனை அழைத்துக் கொண்டு. அவன் வேலை செய்யும் நூற்பாலைக்கு வேலை கேட்டுச் சென்றான்.
நூற்பாலையின், மேனேஜர், சரவணனை சந்தித்து இன்டர்வியூ எடுத்தார். “மில்லுல எலக்ட்ரிக்கல் சம்பந்தமான வேலைகள் நீங்க பார்த்த அனுபவம் இருக்கா?”
சரவணன், “நான் மில்லுக்குள்ள இப்போதான் என்டர் ஆகுறேன். இதுக்கு முன்னாடி எலக்ட்ரிக்கல் எரக்ஷன் வேலை பார்த்துட்டு இருந்தேன். நான் வேலையை சீக்கிரமாக கத்துக்குவேன்.”
“நீங்க எலக்ட்ரிக்கல் எரக்சன் எந்த கம்பெனியில் பார்த்தீங்க?”
“நான் சென்னையில என்று அந்த நிறுவனத்தின் முகவரியை சொன்னான் சரவணன்.
“நம்ம ஊர்ல நீங்க சென்னையில வாங்குன அளவுக்கு சம்பளம் கொடுக்க மாட்டோம். அதுக்கும் நீங்க சம்மதிக்கிறீங்களா?” என்றார் மேனேஜர்.
“சம்மதிக்றேன் சார்…”
“நீங்க என்னிலிருந்து வேலையிலே ஜாயின் பண்ற மாதிரி இருக்குறீங்க?”
“திங்கட்கிழமையிலிருந்து வேலைக்கு வரேன் சார்…” என்று சரவணன் பேசிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.
மேனேஜர் அறைக்கு எதிர்ப்புறத்தில், குடிதண்ணீர் குழாய் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. அங்கே ருக்மணியும் இன்னொரு பெண்ணும் தண்ணீர் குடிக்க வந்தார்கள்.
அவள் தலையில் பஞ்சு ஒட்டாமல் இருக்க துண்டை கட்டி இருந்தாள். உடம்பில் பஞ்சு ஒட்டாமல் இருக்க ஆண்கள் அணியும் சட்டை அணிந்து இருந்தாள். கழுத்து வளைவில் வியர்வையோடு படிந்த பஞ்சு படலம் மெல்லிய கோடாய் தங்கி இருக்க. அழகியல் என்பது துளியும் இல்லாமல் இருந்தாலும். கொண்ட வைராக்கியத்தில் பேரழகியாக, சரவணன் கண்களுக்கு தெரிந்தாள். “இந்த வயசுலயும், அம்புட்டு பிரச்சனையும் ஒத்தையில நின்னு சமாளிக்கிறாளே! பெரிய தைரியசாலி தான்.” என்று மனதால் அவளை மெச்சினான்.
ருக்மணிக்கு அங்கே சரவணன் தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பது கூட தெரியாமல், தண்ணீரை குடித்துவிட்டு. அவள் பணி செய்யும் இடத்திற்கு சென்றாள்.
சிறிது நேரத்தில் ரவி, சரவணன் இருக்கும் இடத்திற்கு வந்தான்,. “என்ன சரவணா… செலக்ட் ஆயிட்டியா? மேனேஜர் என்ன சொன்னாரு?”
சரவணன், “திங்கட்கிழமையிலிருந்து வேலைக்கு வர சொல்லி இருக்காரு.”
“சூப்பர் டா மாப்ள. திங்கட்கிழமை வந்துரு. அதுக்கு முன்னாடி நம்ம பவர் ஹவுஸ் எப்படி இருக்குன்னு பாத்துட்டு வந்துடலாம். வா…” என்று உடன் அழைத்துச் சென்றான்.
சரவணனும் ரவியும் பவர் ஹவுஸ் சென்று. அங்கிருந்த பேனல் போர்டுகளை சுற்றி பார்த்தார்கள்.
எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் அங்கே வந்து, சரவணன் பற்றிய தகவல்களை விசாரித்துக் கொண்டார். சிறிது நேரத்தில் திங்கட்கிழமை வேலைக்கு வருவதாக சொல்லி, இருவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.
முருகன் மூன்று மாடி கட்டிடத்தில் வெளிப்புற சுவருக்கு சிமெண்ட் பூச்ச பூசும் வேலையை செய்து கொண்டிருந்தான்.
அதற்கு சவுக்கு மரக்கம்புகளால் சாரப் பாலம் அமைத்து. அதன் மேல் நின்று கொண்டு. சுவரில் சிமெண்ட் கலவையை அள்ளித் தெளித்து பூசி. ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தான்.
மூன்றாவது மாடியில் வெளிப்புற சுவரில் வேலை நடப்பதால், அந்த உயரத்திற்கு கம்புகள் கிடைக்கவில்லை. இரண்டு கம்புகளை ஒன்றாக இணைத்து கட்டி உயரத்தை அதிகப்படுத்தி சாரப்பாலம் அமைத்திருந்தார்கள். வேலை முடியும் தருவாயில், தாங்கிக் கொண்டிருந்த கம்பு முறிந்து. முருகன் உயரத்தில் இருந்து தலை குப்புற கீழே விழுந்தான். அவனோடு நின்று வேலை செய்து கொண்டிருந்தவர்கள். கிடைத்ததை பிடித்து, தொங்கிக் கொண்டிருந்த கம்புகளை பிடித்து, சிறிய காயங்களோடு தப்பினார்கள். ஆனால் முருகன் எதையும் பற்றிக் கொள்ளாமல். தலைகீழாக விழுந்து விட்டான். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, காது வழியே ரத்தக்கசிவு ஏற்பட தொடங்கியது. அதோடு முருகன் மயக்க நிலைக்கு சென்று விட்டான்.
சுற்றி இருந்த மக்கள் முருகனை தூக்கிக் கொண்டு, ஆட்டோவில் ஏற்றிவைத்து. அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கே போதுமான உபகரணங்கள் இல்லை என்று, முருகனை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
முருகனோடு வேலை செய்து கொண்டிருந்த சித்தாள் பெண்மணி வேக வேகமாக முருகன் வீட்டிற்கு ஓடி வந்தார்.
பார்வதியும், ருக்மணியும் அவரவர் வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பி இருந்தார்கள்.
பார்வதி, வாசலைப் பெருக்கி தண்ணீர் தெளித்து கொண்டு இருந்தார்.
பாதையில் ஓடி வரும்போதே அந்தப் பெண்மணி பார்வதியை, “ஏக்கா பார்வதியக்கா… உங்க மவேன் சாரக்கம்பு ஒடிஞ்சு கீழ விழுந்துட்டாரு.” என்று சத்தமாக சொல்லிக் கொண்டு வர.
மாடி அறையில் இருந்த ருக்மணி திடு திடுவென படிக்கட்டில் இறங்கி வாசலுக்கு ஓடி வநதாள்.
ருக்மணி வாசலுக்கு வருவதற்கும். அந்த பெண்மணி வாசலுக்கு வருவதற்கும் சரியாக இருந்தது.
ருக்மணியை பார்த்ததும் அந்த பெண்மணி, “ஏத்தா… உன் புருஷன் சாரக்கம்பு ஒடிஞ்சு கீழ விழுந்துட்டாரு.” என்று சொன்னதும்.
பார்வதி பரபரப்பாக, “லேசான காயம் தானே பவுனு?” என்றார்.
“காதுலையும், மூக்குலையும் ரத்தம் ஒழுகுது. கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்காக.”என்று மூச்சு விடாமல் அவர் சொல்ல. ருக்மணிக்கு மூச்சு முட்டியது. தலை கிறுகிறுவென சுற்றியது. அப்படியே வாசலில் மயங்கி சரிந்தாள். அவளை கீழே விழாதவாறு அந்த பெண்மணியும், பார்வதியும் ஓடிச்சென்று பிடித்துக் கொண்டார்கள்.
பார்வதி, “பவுனு என் மருமகள இப்படி படியில உட்கார வச்சிட்டு கூடவே இரு. நான் என்னோட கொழுந்தனார் வீட்டுக்கு தாக்கல் (தகவல்) சொல்லிட்டு வந்துடறேன். என்று கிருஷ்ணன் வீட்டுக்கு ஓடிச் சென்றார்.

