Loading

 

 

இரவு நேரம், படுத்துக் கொண்டே செல்லும் பேருந்தில் கிளம்பினர்.

வருணிகா எனக்கென்ன என்று, வந்ததுமே படுத்து கண்ணை மூடிக் கொண்டாள். வயிறுக்கு அணைவாக, காற்று ஊதிய தலையணை இருந்தது. அதனால் அமைதியாக படுத்திருக்க, எதிரில் இருந்த ஹரிஹரன் அவளை யோசனையாகப் பார்த்தான்.

அந்த சண்டைக்குப் பிறகு அவள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. கேள்வி கேட்பாள். சண்டை போடுவாள் என்று எதிர் பார்த்தான். எதையுமே அவள் செய்யவில்லை.

அந்த செயினை பற்றியும் இன்னும் கேட்கவில்லை. மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டிருந்தனர். அதனால், ஊரில் போய் கேட்கலாம் என்று அமைதி காத்தான்.

சென்னை வந்து இறங்கி வீட்டுக்குள் நுழைந்ததுமே, “ஒரு நிமிஷம் நில்லு” என்று நிறுத்தினான்.

வருணிகா திரும்பிப் பார்த்தாள்.

“அந்த செயின் ஏது? பாப்பாவுக்கு போட்டியே?”

“வாங்குனேன்”

“காசு?”

“எங்க வீட்டுல எனக்கு கொடுத்த பணம்”

“எதுக்குக் கொடுத்தாங்க?”

“இது என்ன கேள்வி?”

“நான் கரெக்ட்டா தான் கேட்குறேன். நீ இங்க இருக்க. உன் செலவுக்கு உன் வீட்டுல இருந்து ஏன் பணம் கொடுக்குறாங்க?”

அவனை ஒரு மாதிரியாக பார்த்தவள், சோபாவில் சென்று அமர்ந்து கொண்டாள். வலித்த காலை தூக்கி வைத்து தடவினாள்.

“கேட்குறேன்ல?”

“அப்படித் தான் அனுப்புவாங்க. உங்களுக்கு அதுல என்ன பிரச்சனை?”

“ஏன்னு தான் கேட்குறேன்”

“காலேஜ் படிக்கும் போது என் தேவைக்கு மாசமாசம் பணம் போடுவாங்க. அதை கல்யாணத்துக்கு அப்புறமும் நிறுத்தல. போன மாச மளிகை சாமான் அதுல தான் வாங்கினேன். அதுல தான் சாப்பிடுறேன். அந்த செயினும் அதே காசு தான்”

“அறிவிருக்கா? ஏன் என் கிட்ட காசு கேட்க மாட்டியோ?”

“ஏன் கேட்கனும்? எனக்கும் என் பிள்ளைக்கும் தான் சாப்பாடு தேவை. உங்களுக்கு சாப்பாடு தேவை இல்லையே. உங்க கிட்ட கேட்டு, நான் வீட்டுல சாப்பிடுறதே இல்ல.. காசு தர முடியாதுனு சொல்லிட்டு போவீங்க. நீங்க தான் எப்போ என்ன பேசுவீங்கனே தெரியாதே. என் வீட்டுல கொடுக்குறாங்க. நான் சாப்பிடுறேன். ஆமா.. என்ன திடீர்னு கேள்வி? இத்தனை நாள் நான் சாப்பாட்டுக்கு என்ன பண்ணேன்? எப்படி இருந்தேன்? எதுவுமே உங்களுக்குத் தெரியாதே? இப்ப என்ன புதுசா?”

அவள் கோபத்தை எல்லாம் முழுங்கி விட்டாலும், வார்த்தைகளில் நக்கல் தெறித்தது. அப்படித் தானே இருந்தான். காலையில் எழுந்து செல்வது. நள்ளிரவு வருவது. இடையில் எது நடந்தாலும் தெரிந்து கொள்வதில்லை. மனைவி என்று ஒருத்தி இருக்கிறாள். அதுவும் பிள்ளையை சுமந்து கொண்டு இருக்கிறாள் என்றே தெரியாது அலைந்தான். அந்த கோபத்தை இப்போது காட்டி விட்டாள்.

“என்ன? கிளம்பலயா? இன்னேரம் ஓடி இருப்பீங்களே. கிளம்புங்க. சாப்பிடாம வேற இருக்கீங்க. கிளம்பிப்போய் வயிறு முட்ட சாப்பிட்டுட்டு, வேலையைப் பாருங்க. நான் தூங்குறேன்”

அவனது திகைப்பையோ கோபத்தையோ பொருட்படுத்தாமல், அறைக்குள் சென்றாள். உடையை மாற்றிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள். அவன் என்ன செய்கிறான் என்று கவனிக்கவே இல்லை.

பாலில்லாமல் போக, பால் பவுடரை கரைத்து குடித்து விட்டு, அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

ஹரிஹரன் தான் மனைவியின் குற்றச்சாட்டில் அசையாமல் அமர்ந்து இருந்தான்.

‘அவள் என்ன செய்கிறாள் என்றே கவனிக்காமல் விட்ட தன் மடத்தனத்தை என்ன சொல்வது?’

இத்தனை நாட்களாக இல்லை மாதங்களாக அவனது எண்ணங்களில் உழன்றவன், தன் குழந்தையை சுமக்கும் மனைவியை மறந்தே போய் விட்டான்.

கைபேசி இசைக்க, எடுத்துப் பார்த்தான். சந்திராவின் பெயர். எடுத்துப் பேசி விட்டு உடனே கிளம்பி விட்டான்.

படுத்திருந்த வருணிகாவிற்கு தூக்கம் வரவில்லை. இன்னும் பயம் தான் இருந்தது. விசயத்தை கேட்பதற்கு.

இல்லை என்றால் அவனை வீணாக சந்தேகப்பட்டது போல் இருக்கும். ஆமாம் என்றால் மனம் உடைந்து விடும். இரண்டில் எது நடந்தாலும், இந்த உறவில் விரிசல் விழுவது உறுதி. அதைத்தாங்க தைரியம் வேண்டும்.

மீண்டும் இருவரிடையே மௌனம். ஐந்தாம் மாத முடிவில் மீண்டும் ஒரு முறை கவுன்சலிங் சென்று வந்தாள். மனம் திடப்பட்டு இருந்தது. எப்படிப்பேச வேண்டும் என்று முடிவு செய்து இருந்தாள்.

அன்று விடுமுறை நாள்..

அன்றும் வழக்கம் போல் ஹரிஹரன் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான். அவன் முன்னால் வந்து நின்றாள்.

“உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்”

“என்ன? காசு எதுவும் வேணுமா?” என்று பர்ஸை எடுக்க, “வேணாம். பேசனும்” என்றாள்.

அவளை யோசனையாக பார்த்தவன், “என்ன?” என்று கேட்டான்.

“என் ஃப்ரண்ட் சந்திரானு ஒருத்தி இருக்கா”

மெதுவாக ஆரம்பித்து அவன் முகத்தை ஆராய, திடீரென அவன் முகம் மாறியது.

“அவளும் சென்னையில தான் இருக்கா. நான் அவள பார்க்க போகனும். தனியா போறதா இல்ல. நீங்களும் வர்ரீங்களா?”

அவளை ஆராய்ச்சியாக பார்த்தானே தவிர எதுவும் பேசவில்லை.

“சொல்லுங்க. வர்ரீங்களா?”

“ஏன் போற?”

“அவ கிட்ட ஒரு விசயம் கேட்கனும். அதுக்கு தான்”

“ஏன் போன் இல்லையா?”

“இருக்கு. அந்த போன்ல இருக்க போட்டோவும் விடியோவும் காட்டித் தான் ஒன்னு கேட்கனும்”

“என்ன ஃபோட்டோ?”

அவனை ஒரு மாதிரி பார்த்தவள், தன் கைபேசியில் கார்த்திகை அனுப்பியதை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

“இது நீங்க தானா? இல்ல.. உங்கள போல வேற யாருமானு கேட்கனும்”

அதிர்ந்து போய் அப்படியே நின்று விட்டான். இது எல்லாம் பெங்களூரில் எடுத்தது என்று பார்த்ததும் அவனது அறிவு அடித்துக் கூறியது.

“நீங்களா இருக்க வாய்ப்பே இல்ல. ஏன்னா.. சொந்த பொண்டாட்டி என்னையே பக்கத்துல இருக்க கடைக்குக் கூடக் கூட்டிட்டுப்போனது இல்ல. சினிமா பார்க்க, ஐஸ்க்ரீம் சாப்பிட, ஹோட்டல்ல சாப்பிடனு அவள கூட்டிட்டு நீங்க எப்படிப்போயிருப்பீங்க? அதுக்கெல்லாம் உங்களுக்கு எங்க நேரமிருக்கு? பேபிக்கு மன்த்லி செக் அப் டேட் கூட உங்களுக்குத் தெரியாது. இதுல தியேட்டராம். நம்புற மாதிரியே இல்ல. அதான் யாரு இதுனு கேட்கனும். உங்களையும் கூட்டிட்டே போகலாம்னு இருக்கேன். வாங்க போகலாம்”

போனை பறித்துக் கொண்டு, திரும்பி நடந்தாள். ஹரிஹரன் தன் உணர்வுகளில் இருந்து அவசரமாக வெளியே வந்தான்.

“நில்லு..”

அதட்டலாகவே கூற, நின்று விட்டாள்.

“அவ கிட்ட பேசுறதுக்கு முன்னாடி.. உன் கிட்ட நான் பேசனும்”

“என்ன? அதுல இருந்தது நீங்க இல்லயா?”

ஒரு நொடி தடுமாறியவன், “நான் தான்” என்றான்.

“ஓ.. சூப்பர். அப்புறம்?”

“என்ன அப்புறம்? என்ன நிற்க வச்சு கேள்வி கேட்குற? இப்படிக்கேட்டா நீ பண்ண தப்பு எல்லாம் மறைஞ்சுடுமா?”

“நான் வேற எந்த ஆம்பளை கூடவும், கை கோர்த்து சினிமாக்கு போனனா என்ன?”

“ஏய்…”

“ஏன் கத்துறீங்க? உங்களுக்கு உங்க பொண்டாட்டி மட்டும், வார்த்தையில கூட கலங்கப்படக்கூடாது. ஆனா நீங்க ஊர் மேயுவீங்களா?”

“ஏய்.. அறைஞ்சேன்னா.. நான் ஊர் மேய்ஞ்சேன்னு பார்த்தியா?”

“சரிங்க சார். என் தப்பு தான். நீங்க உத்தமர் தான். ஆனா, என் கேள்விக்கு பதில் சொல்லுங்க. சந்திரா என் ஃப்ரண்ட்டுனு உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?”

“தெரியும்”

தடுமாற்றத்தோடு பதில் சொன்னான்.

“அப்போ அவ கூட இவ்வளவு சுத்துனவரு.. என் கிட்ட ஏன் சொல்லல..?? உன் ஃப்ரண்ட்ட பார்த்தேன். பேசுனேன். எனக்கும் ஃப்ரண்ட்டா மாறிட்டா. அப்படினு… எந்த கலங்கமும் உங்க மனசுல இல்லனா.. சொல்ல வேண்டியது தான? ஏன் சொல்லல?”

அவளை முறைத்து பார்த்தானே ஒழிய, வாயைத்திறக்கவில்லை. சொல்ல அவனிடம் பதில் இல்லை. அவள் கேள்விகள் அவனை குற்றவாளியாக்குவதும் அவனுக்குப் பிடிக்கவில்லை.

“எப்படி சொல்லுவீங்க? உங்க ஆபிஸ்ல, உங்க கூடவே வொர்க் பண்ணுறா. அப்பவே சொல்லல. பெங்களூர் ஒன்னா போய் ஊர் சுத்துனத மட்டும் சொல்லுவீங்களா? சான்ஸே இல்ல.”

மீண்டும் மீண்டும் அவனை குற்றம் சாட்டியவளை பார்த்து, அவனுக்கு ஆத்திரமாக வந்தது.

“ஹேய் ஆமாடி.. அப்படித்தான் சுத்துனேன். அதுக்கென்னங்குற? உன்னை மாதிரி அவ வாழ்க்கைய நான் பறிச்சுக்கல. நான் பண்ணுறது துரோகம்னா, நீ பண்ணது பச்ச துரோகம். அப்புறம் என்ன என்னை குறை சொல்லுற?”

“துரோகமா? என்ன துரோகம்? அவளுக்கு துரோகம் பண்ண அவ புருஷன் கூட நான் ஊர் சுத்துனனா?”

“ஆமா”

“வாட்?”

“என்ன சாக் ஆகுற? நடிக்காத. காலேஜ்ல அவ என்னை லவ் பண்ணத மறைச்சு தான, என்னை நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட? அவ மனச கொன்னுட்டு, என் கூட வாழுற. உனக்கு நீ பண்ணது அநியாமா தெரியல. தனியா இருக்க பொண்ணுனு நான் ஹெல்ப் பண்ணா, உனக்கு அநியாயமா தெரியுதா?”

இரண்டு நிமிடம் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள். ஒரு நீண்ட பெரு மூச்சை விட்டு விட்டு, மீண்டும் ஆரம்பித்தாள்.

“சோ.. அவ உங்கள காலேஜ் டேய்ஸ்லயே லவ் பண்ணா. நான் அதை மறைச்சு.. உங்கள இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுனால நீங்க என்னை விட்டுட்டு அவ கூட சுத்துறீங்க. அதான?”

“சுத்துறனு சொன்ன அவ்வளவு தான்”

“ஓகே ஓகே. உங்க பாசையில ஹெல்ப் பண்ணுறீங்க. ஐஸ் க்ரீம் சாப்பிட ஹெல்ப். படம் பார்க்க கம்பெனி கொடுத்தீங்க. நான் பண்ணது துரோகம். நீங்க பண்ணது ஹெல்ப். ஓகே புரிஞ்சுடுச்சு” என்றவள் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

“ஏய்.. இப்ப எதுக்கு சிரிக்கிற?”

“சிம்பிள். சிரிக்க தோனுச்சு சிரிக்கிறேன்”

“பைத்தியமா நீ?”

“இவ்வளவு நாளா அப்படித் தான் இருந்துருக்கேன். இன்னைக்கு தான் தெளிஞ்சுருக்கு. சந்திரா என் கிட்ட இருந்து எதை எதையோ திருடி இருக்கா. அப்ப எல்லாம் சரியா கவனிச்சு இருந்தா, இன்னைக்கு என் புருஷனையும் திருடி இருக்க மாட்டா. பைத்தியம் இப்போ தான் தெளியுது”

ஹரிஹரன் அவளை விழி இடுங்கப்பார்த்தான். இது சந்திரா அவனிடம் சொன்ன வார்த்தை.

“வருணிக்கு எப்பவும் என் பொருள் மேல கண்ணு இருக்கும். ஃப்ரண்ட் தானேனு விட்டுக் கொடுத்துருவேன். அப்படி கொடுத்து கொடுத்து பழகி தான், கடைசியா என் காதலையும் என் கிட்ட இருந்து பறிச்சுட்டா. பரவாயில்ல என் ஃப்ரண்ட் தான. அவ நல்லா இருந்தா போதும்”

சந்திரா சொன்ன வார்த்தைகள் காதில் ஒலித்தது. அதையே தான் இப்போது வருணிகா சொல்கிறாள்.

“என்ன சொல்லுற நீ?”

“எதுவும் சொல்லல. இப்போ எனக்கு பாதி புரிஞ்சுடுச்சு. மிச்சமும் கேட்க எனக்கு தெம்பு இல்ல” என்றவள் திரும்பி நடந்தாள்.

வயிற்றில் சுள்ளென ஒரு வலி எழ, வயிற்றை பிடித்துக் கொண்டு நின்று விட்டாள். ஒரு கை வயிறை பற்றி இருக்க, மற்றொரு கையால் சோபாவை பற்றி இருந்தாள்.

முகமெல்லாம் வியர்க்க ஆரம்பித்து விட்டது. பல்லைக்கடித்து வலியை பொறுத்துக் கொள்ள பார்த்தாள். முகத்தின் வியர்வையும் வலியும், மேலும் பயத்தை கிளப்பி விட்டது.

“என்ன ஆச்சு?” என்று அவன் பதறி அருகே செல்ல, அவள் பதில் சொல்ல வில்லை.

இரண்டு நிமிட போராட்டத்தில், வயிறு வலி குறைவது போல் இருந்தது. ஆனால், அப்படியே விட மனமில்லை. இனி தனக்கென்று கணவன் இல்லை. குழந்தை மட்டும் தான். அந்த குழந்தைக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்று மனம் அடித்துக் கொண்டது.

மெதுவாக சுவரை பற்றிக் கொண்டு நடந்து, அறைக்குள் நுழைந்தாள். பர்ஸோடு அவளது மருத்துவ அறிக்கை இருக்கும் கைப்பையை எடுத்துக் கொண்டு, மீண்டும் வெளியே வந்தாள்.

அவளது வியர்த்துக் கொட்டிய முகத்தை பார்த்து, ஹரிஹரன் பயந்து விட்டான்.

“வருணி.. என்ன செய்யுது உனக்கு?”

பதில் சொல்லலாம். சொல்லி தோளில் சாய்ந்து அழலாம். அவனது ஆறுதலை தேடலாம். ஆனால், உள்ளே இருந்த வீம்பு அதைச் செய்ய விடவில்லை.

வெளியே சென்று கதவை பூட்டி விட, அவனும் அவளோடு தான் வந்தான். சாலையில் இறங்கி நடக்கும் போது, வெளிக்காற்று சற்று அசுவாசப்படுத்தியது.

“வருணிகா.. செக் அப் க்கா கிளம்பிட்ட?” என்று, பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவற்றில் துணி காயப்போட்டுக் கொண்டிருந்த பெண் கேட்க, “ஆமா கா” என்று புன்னகைத்து வைத்தாள்.

நடந்து வந்து சாலையில் நின்று விட்டாள். தலை சுற்றுவது போல் இருந்தது.

‘ஹாஸ்பிடல் போயிடனும். போயிடனும்’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு நிற்க, சேர் ஆட்டோ வந்தது.

அதில் ஏறி அமர்ந்து கொள்ள, ஹரிஹரனும் உடன் அமர்ந்தான். அவன் வருகிறான் என்று தெரிந்தும், அவள் திரும்பி பார்க்கவில்லை.

ஆட்டோவில் வயிறு குலுங்காமல் இருக்க பாதுகாப்புடன் அமர்ந்தாள். எதிர் காற்று முகத்தில் மோதிய பின்பே, அவளுக்கு மனம் அமைதி பெற்றது.

மருத்துவமனைக்கு அழைத்து, முன்அனுமதி வாங்கிக் கொண்டாள்.

மருத்துவமனை இருக்கும் பகுதிக்குச் சென்று இறங்கிய பின், ஹரிஹரனே ஆட்டோவிற்கு பணம் கொடுக்க, வருணிகா எதுவும் பேசவில்லை.

மீண்டும் அமைதியுடனே நடந்து மருத்துவமனைக்குள் சென்றாள். ரிசப்ஷன் பெண்ணிடம் சொல்லி விட்டு திரும்புவதற்குள், தலை சுற்றி விட்டது. தலையை தாங்கிப்பிடித்து சமாளிக்க முயன்று, முடியாமல் மயங்கி விட, ஹரிஹரன் பிடித்துக் கொண்டான்.

“ஏய்.. வருணி.. என்னாச்சு?” என்று கன்னத்தை தட்ட, அவள் விழிக்கவில்லை.

அவசரமாக அங்கிருந்த செவிலியர்கள் உதவியுடன், அவளை நாற்காலியில் அமர வைத்தான். மருத்துவர் வந்து அவளை மெத்தையில் படுக்கவைக்கக் கூறினார்.

அது சிறிய மருத்துவமனை. க்ளினிக் போன்று இருந்தாலும், மூன்று அறைகள் அவசரத்துக்கு என்று வைத்திருந்தனர்.

அதில் அவளை படுக்க வைத்து சோதித்து முடித்து விட்டு, மருத்துவர் வந்தார்.

“ப்ரஷ்ஷர் அதிகமா இருக்கு. என்ன கவனிக்கிறீங்க நீங்க?” என்று ஆரம்பித்தவர், ஹரிஹரனை வறுத்து விட்டார்.

ஏற்கனவே இப்படி இருந்தது. வருணிகாவும் குடும்பத்தில் பிரச்சனை என்று வேறு கூறி இருக்கிறாள். இது வரை கணவனோடு பரிசோதனைக்கு அவள் வந்தது இல்லை. இன்று பார்த்ததும் பேசி விட்டார்.

“சாரி டாக்டர்”

“உங்க சாரி எதுவும் பண்ணிடாது மிஸ்டர். அவங்க ஹெல்த் மேல தான் அக்கறை இல்ல. உள்ள இருக்க உங்க குழந்தை மேலயும் அக்கறை இல்லையா? அதுக்காகவாது நீங்க அவங்கள கவனிச்சு இருக்க வேணாமா?”

“இனிமே பார்த்துக்குறேன் டாக்டர்”

“திரும்ப ப்ரஸ்ஸர் கூடுச்சுனா அட்மிட் தான் பண்ண சொல்லுவேன். சாப்பிடக் கூட இல்ல. அதோட கூட்டிட்டு வந்துருக்கீங்க. இனிமேலாவது பார்த்துக்கோங்க. போய் பாருங்க. கண்ணு முழிக்க கொஞ்ச நேரம் ஆகும்”

அவனை அனுப்பி விட்டார். வருணிகா இன்னும் கண் விழிக்கவில்லை. ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க, ஹரிஹரன் அவளை பார்த்தபடி நின்றான்.

அந்நேரம் சந்திராவிடமிருந்து அழைப்பு வந்தது.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
5
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்