Loading

 

வருணிகா கண் விழித்துப் பார்த்தாள். மருத்துவமனைக்குள் நுழைந்தது மட்டும் தான் நினைவு இருந்தது. மெத்தையில் படுத்து இருக்கிறோம் என்று புரிய, மீண்டும் கண்ணை மூடிக் கொண்டாள்.

சில நிமிடங்களில் மனதை ஒரு நிலைக்கு வர, பார்வையை சுழற்றினாள். ஹரிஹரன் கைபேசியை பார்த்தபடி ஓரமாக நின்று இருந்தான்.

அவனைக்கூப்பிட்டு பேச மனம் வரவில்லை. ஆனால் பேச வேண்டுமே.

“நர்ஸ கூப்பிடுங்க”

“என்ன?” என்று வேகமாக அருகே வந்தான்.

“நர்ஸ்”

அவனும் உடனே அழைக்க, நர்ஸ் உதவியுடன் கழிவறை சென்று வந்தாள் வருணிகா.

இன்னும் ட்ரிப்ஸ் ஏறி முடிக்காததால், மீண்டும் படுத்துக் கொண்டாள்.

“என் போன கொடுங்க” என்று கேட்க, ஹரிஹரன் கைபேசியை கொடுத்தான்.

வாங்கி யாருக்கோ அழைத்தாள்.

“யார கூப்பிடுற?”

பதில் சொல்லவில்லை. அந்த பக்கம் அழைப்பு எடுக்கப்பட்டது.

“சித்தி..”

“வருணி.. என்னமா ஒரு மாதிரி பேசுற?”

“என்ன வந்து கூட்டிட்டுப் போறீங்களா? அத்தை சாரதாவயும் பாப்பாவையும் விட்டுட்டு வர முடியாது”

“என்ன வருணி? ஏன் இப்படி பேசுற? உனக்கும் மாப்பிள்ளைக்கும் எதாவது சண்டையா?”

“இல்ல சித்தி. உங்க கையால சாப்பிடனும் போல இருக்கு. அத்தை பண்ணுற புட்டும் கூட சாப்பினும் போல இருக்கு. அதான்”

“என்ன புள்ளை நீ? அதுக்கு தான் இங்கயே இருனு சொன்னோம். கேட்டியா? டாக்டர பார்க்கனும்னு சொல்லிட்டு போயிட்ட. இப்ப வாய்க்கு ருசியா சமைச்சுக் கொடுக்க பக்கத்துல ஆளு இல்ல. நாளைக்கு நைட்டே கிளம்பி வர பார்க்குறேன். மேனகா இப்பதான் அவங்கம்மா வீட்டுக்கு போயிருக்கா. வர ஒருவாரம் ஆகும் நான் வந்து உன்னை பார்க்குறேன்”

“ம்ம். அண்ணி கிட்ட பேசனும்னு நினைச்சேன். உங்க கிட்ட பேசுனா என்னைக் கூப்பிடச்சொல்லுங்க”

“சரி மா. ஏன் குரலே ஒருமாதிரி இருக்கு?”

“டயர்ட் சித்தி. நான் தூங்கட்டா?”

“சரிமா. தூங்கி எந்திரிச்சு நேரத்துக்கு சாப்பிடு. நானும் உன் அண்ணனும் நாளைக்கே வர பார்க்குறோம்.”

அழைப்பை துண்டித்தவள், அனுராதாவிற்கு அழைத்தாள்.

“வருணி.. என்ன இந்த நேரத்துல போன் போடுற? தூங்கலையா?”

“இல்ல அத்த. நான்… ஊருக்கு வர்ரேன் அத்த”

“இங்கயா?”

“ஆமா. பாப்பா கண்ணுக்குள்ளயே இருக்கா. உங்க புட்டு சாப்பிட ஆசையா இருக்கு. இங்க நானா செஞ்சு சாப்பிடவும் பிடிக்கல”

“பிள்ளையோட இப்படி அலையுறது சரியா? டாக்டர் கிட்ட கேளு. இல்லனா நாங்க அங்க வர்ரோம்”

“ம்ம். நானே வர்ரேன். டாக்டர் கேட்டுட்டு சொல்லுறேன்”

கைபேசியை கீழே வைத்ததுமே மருத்துவர் வந்து விட்டார். அவளை பரிசோதித்து முடிக்க, ட்ரிப்ஸ் முடிந்து போனது.

“உங்க கிட்ட பிபி ஏறக்கூடாதுனு சொல்லி இருந்தேன்ல?”

“இனிமே ஏறாது டாக்டர்.”

“கவனமா இருங்க”

“நான் ட்ராவல் பண்ணலாமா? ஊருக்கு போகனும்”

“இந்த நிலைமையோட வேணாம். ரெண்டு மூணு நாள் ரெஸ்ட் எடுத்துட்டுப் போகலாம்”

“தாங்க்யூ டாக்டர்.”

“இப்ப நீங்க வீட்டுக்கு போகலாம்” என்று கூறி விட, எழுந்து கொண்டாள்.

மீண்டும் ஒரு மௌன பயணம். ஹரிஹரன் அவளது ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டே இருந்தான்.

வீடு வந்து சேர்ந்ததும் வருணிகா அறைக்குள் செல்ல, “எதாவது சாப்பிட்டுப் படு” என்றான்.

அவனை திரும்பிப் பார்த்தவள், “இந்த அக்கறை யாருக்கு வேணும்? பிபி ஏறக்கூடாதுனு டாக்டர் சொல்லி இருக்காங்க. எதுவும் பேசாதீங்க” என்று விட்டு சென்றாள்.

அவனிடம் பேச வேண்டும். ஆயிரம் கேள்வி கேட்க வேண்டும். எல்லாவற்றையும் சொல்லி முடிக்க வேண்டும். ஆனால், எதற்கும் உடல் ஒத்துழைக்கவில்லை. அவன் உண்மை என்று சொல்லி விட்டான். இதற்கு மேல் என்ன? அது தான் பெரிய கேள்வியாக முன்னால் நின்றது.

நன்றாக தூங்கி எழுந்து பார்க்க, ஹரிஹரன் வெளியே சென்று விட்டு மீண்டும் வந்தான்.

‘தன்னை தனியாக விட்டுச் சென்று இருக்கிறான்’ என்று நினைத்தவளுக்கு, விரக்தி தான் வந்தது.

அவள் மதிய சாப்பாட்டை வாங்கி வைத்து சாப்பிட, அவன் அது வரை அமைதிகாத்தான்.

“உன் கிட்ட பேசனும்”

“சொல்லுங்க”

“சந்திரா உன்னைப் பார்க்க வர்ரதா சொன்னா”

உடனே கைபேசியை எடுத்தவள், சந்திராவை அழைத்தாள்.

“வருணி.. உடம்பு முடியலாமே.. இப்போ எப்படி இருக்கு?”

“இன்னும் சாகல சந்திரா. வா இங்க தான் இருப்பேன்”

பட்டென அழைப்பைத்துண்டித்து விட்டாள்.

“இப்ப எதுக்கு அந்த பொண்ணு கிட்ட இப்படிப் பேசுற?”

“என்ன லவ்வா?”

இவ்வளவு நேரம் கேட்க தயங்கிய கேள்வியை, இப்போது கோபத்தில் நேரடியாக உடைத்துக் கேட்டாள். ஹரிஹரன் அதிர்ந்து தடுமாறிய ஒரு நொடி, அவளுக்கு பதிலை சொல்லி விட்டது.

“அமேஸிங். லவ் பண்ணுறது தப்பே இல்ல. நான் உங்க காதலுக்கு தடையா இருக்க மாட்டேன். தாராளமா லவ் பண்ணுங்க. ஆனா….” என்று எதையோ தீவிரமாக யோசித்தவள், முகத்தில் ஒரு கொடூரமான புன்னகை வந்தது.

“நீங்க லவ் பண்ணுற விசயம் அவளுக்கு தெரியுமா?”

ஹரிஹரன் என்ன பேசுவதென்று தெரியாமல்  விழித்தான்.

“சோ.. தெரியாது. ஓகே. இது போதும் எனக்கு”

“என்ன சொல்லுற?”

“ஹா ஹா.. இனிமே நடக்கப்போறத பாருங்க”

வேகமாக மீண்டும் சந்திராவை அழைத்தாள்.

“நீ வராத. மூணு நாள் கழிச்சு நானே உன் வீட்டுக்கு வர்ரேன்” என்று அழைப்பை துண்டித்து விட்டாள்.

“என்ன பண்ணப்போற நீ?”

“உங்க காதலுக்கு தூது போகப்போறேன்..” என்றவள் சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

“புருஷன் காதலுக்கு தூது போறது தான் காலம் காலமா பொண்டாட்டிங்களோட வழக்கம் இல்ல?. பழைய காலத்துல தமயந்தி தூக்கிட்டு போனாளாம். கம்ப்யூட்டர் காலத்துல வருணிகா தூது போகப்போறா”

சிரிப்போடு சொன்னவள், அவனை கசப்பாக பார்த்து விட்டு சென்று விட்டாள்.

அடுத்த நாள் முழுவதும் ஹரிஹரனுக்கு படபடப்பாகவே இருந்தது. இது தவறு என்று தெரிந்தும், சந்திராவின் பக்கம் அவன் மனம் சாய்ந்து விட்டது. அந்த தவறுக்கு காரணம் கூட, தன் மனைவிதான் என்று நினைத்தான்.

இவள் இடையே வரவில்லை என்றால், சந்திரா காதலை சொல்லி இருப்பாள். அவளோடு நன்றாக வாழ்ந்து இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டான்.

அந்த குற்ற உணர்வும் கோபமும் தான், மனைவியிடம் பேச விடாமல் செய்து, அவள் முகத்தை கூட பார்க்காமல் வீட்டை விட்டே ஓட வைத்தது.

முழுநாளும் பதட்டத்துடனே அவன் கழிக்க, அடுத்த நாள் மொத்த குடும்பமும் சென்னையில் வந்து இறங்கியது. அனுராதா, ஏகாம்பரம் கூடவே தெய்வா, மாணிக்கம்.

நான்கு பேரையும் பார்த்து ஹரிஹரன் அதிர்ந்து நிற்க, “வாங்க அத்த. வாங்க மாமா. வாங்க சித்தி சித்தப்பா” என்று வருணிகா எல்லோரையும் வரவேற்றாள்.

எல்லோரும் இயல்பாக பேசி அவள் நலம் விசாரிக்க, ஹரிஹரன் தான் அதிர்ந்து பயந்து நின்று இருந்தான்.

வருணிகா அறைக்குள் செல்ல, ஹரிஹரன் பின்னாலே வந்தான்.

“இப்ப எதுக்கு எல்லாரையும் கூப்பிட்டு இருக்க?”

“…”

“எல்லாரையும் கூப்பிட்டு என்ன செய்யப்போற?”

“பாவ மன்னிப்பு கேட்க போறேன்”

“வாட்?”

“உங்களுக்கு சில உண்மைகள் தெரியாது ஹரி. தெரிஞ்சுக்கனும்னு நீங்க ஆசைப்பட்டு இருந்தா, நேரடியா என் கிட்டப் பேசி இருப்பீங்க. சந்திரா என்ன சொன்னாலும் கண்ண மூடிட்டு நம்புற நீங்க.. ஒரு பர்ஸண்ட் கூட பொண்டாட்டி கிட்டயும் கேட்கனும்னு தோணல இல்ல? இப்பக் கூட ஒன்னும் கெட்டுப்போகல. உங்க கேள்விக்கு நான் பதில் சொல்லுறேன். ஆனா, கேட்க நீங்க தயாரா?”

“என்ன கேட்கனும்ங்குற?”

வருணிகா அவனை பார்த்து விரக்தியாக சிரித்தாள்.

“அவ சொன்னது எல்லாமே உண்மைனு உங்களுக்குத்தோணுதா?”

“உண்மை இல்லங்குறியா? பொய் சொல்லாத. நான் ஆதாரம் இல்லாம பேசல”

“எனக்குக் கூட ஆதாரம் கிடைச்சது. அந்த போட்டோஸ பார்த்துட்டு, உங்க கிட்ட கேட்காம எல்லாமே என் இஷ்டம்னு எதுவும் நான் முடிவு பண்ணலையே? உங்க கிட்ட கேட்கத்தான செஞ்சேன்?”

“எனக்கு அது தேவை இல்ல”

“முடிஞ்சது. உங்களுக்காக, உங்க மேல வச்சுட்ட பாசத்துக்காக, நம்ம குழந்தைக்காக நான் கொடுத்த கடைசி சான்ஸ, நீங்க தூக்கி போட்டீங்கள்ள? அப்போ எல்லாமே முடிஞ்சது. ஆனா.. இனிமே தான் உங்க வாழ்க்கையில எல்லாமே ஆரம்பம். வெயிட் அண்ட் வாட்ச்”

கண்ணீரை துடைத்துக் கொண்டு வேகமாக திரும்ப, “நில்லுடி.. தப்பு பண்ணது நீ.. என்னை குற்றவாளி ஆக்கிட்டுப்போற? நீ என்னடி வேணாங்குறது? நான் சொல்லுறேன் எனக்கு நீ வேணாம்” என்றான்.

வேகமாக திரும்பியவள் பட்டென அவனை அடித்து விட்டாள். அவன் அதிர்ந்து பார்க்க, “இந்த அடி என்னை நம்பாம சந்தேகப்பட்டதுக்கு இல்ல. உங்கள போயா என் மனசுல கும்பிட்டேன்னு அருவருப்புக்கு கொடுத்தது. இனி நீங்க எனக்கு…” என்றவள், “குப்பை” என்று பல்லைக்கடித்துக் கொண்டு கூறி விட்டு வெளியே வந்தாள்.

கண்ணீரோடு அவள் வருவதை பார்த்து விட்டு, பெரியவர்கள் பதறி விட்டனர்.

“வருணி” – தெய்வா

“என்னாச்சு? ஏன் அழுகுற? அவன் எதுவும் சொன்னா?” – அனுராதா

“என்னமா? இப்படி அழுற?” என்று மாணிக்கம் அருகே போக, அவர் தோளில் சாய்ந்து கொண்டு கதறி விட்டாள்.

“ஹரி.. ஹரி இங்க வா நீ.. எதுக்கு வருணி அழுறா. இங்க வா”

‌ஏகாம்பரம் சத்தம் போட வெளியே வந்தான்.

“என்ன இது? எதுக்கு வருணி அழுறா?”

ஹரிஹரன் மனைவியை திரும்பியும் பார்க்காமல், இறுகிப்போய் நின்றான்.

“சொல்லுடா. ஏன் அழுறா?”

“அவ தான அழுறா? என் கிட்ட ஏன் கேட்குறீங்க?”

“உன் கிட்ட பேசிட்டு தான் அழுதுட்டு வர்ரா”

ஹரிஹரன் வாயை இறுக்கமாக மூடிக் கொண்டு நின்றான்.

“வருணி அழுகைய நிறுத்து. என்னனு சொல்லாம அழுதா நாங்க என்னனு நினைக்கிறது?”

அனுராதா அதட்ட, தெய்வா மகளின் அழுகையில் பதறிப்போய் நின்று இருந்தார்.

“என்னனு சொல்லுமா.. கேட்குறோம்ல?” என்று தெய்வா கெஞ்ச, “எனக்கு.. டைவர்ஸ் வேணும் சித்தி” என்றாள்.

அங்கிருந்த எல்லோருமே அதிர்ந்து விட்டனர்.

“உன்னை மெச்சூர்ட்னு நினைச்சேன். சின்ன சண்டைக்கு டைவர்ஸ்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு இருக்க?” என்று அனுராதா கோபமாக திட்ட, “என்ன பேச்சுடா இதெல்லாம்?” என்று மாணிக்கமும் அதட்டினார்.

“என்ன சண்டை? சொல்லு சரி பண்ணிக்கலாம். இப்படி எல்லாம் பேசாத” என்று தெய்வா கெஞ்சினார்.

இது வரை, தாங்க ஆள் இல்லாததால், துக்கத்தை தானே சுமந்து கொண்டிருந்த வருணிகா, இன்று ஆள் இருப்பதால் அழுது தீர்த்து விட்டாள்.

சில நிமிடங்கள் அவளை அழ விட்டவர்கள், “போதும். பிள்ளைய வயித்துல வச்சுக்கிட்டு தேம்பி தேம்பி அழாத.” என்று அனுராதாவே அதட்டினார்.

அதன் பின்பு தான் அழுகையை குறைத்து அமைதியானாள்.

“இப்பவாது சொல்லு. என்ன பிரச்சனை?”

மீண்டும் அழுகை வரும் போல் இருக்க, கைபேசியில் இருந்த படங்களை எல்லோருக்கும் காட்டினாள்.

பெரியவர்கள் எல்லோரும் அதிர்ந்தனர்.

“என்னடா இது?” என்று அனுராதா மகனை கேட்க, “இது சந்திரா தான?” என்று தெய்வா அதிர்ந்து போய் கேட்டார்.

தலையாட்டிய வருணிகா, “அவள நான் ஏமாத்திட்டேனாம் சித்தி” என்று கண்ணீர் வடித்தாள்.

“கடவுளே.. என் பொண்ண சோதிக்கிறியே” என்று தெய்வா கண்ணீர் விட ஆரம்பித்து விட்டார்.

“யாரு சந்திரா?” – அனுராதா

“ராஜராஜன் பொண்ணு சந்திரா தான இது?” – மாணிக்கம்

“யாரு சம்பந்தி?” – ஏகாம்பரம்

“ராஜராஜன்னு தூரத்து சொந்தம் ஒருத்தரு. அவரோட பொண்ணு. வருணி கூட படிச்சா. ரெண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரண்ட்”

“ஓஓஓ… அந்த பொண்ண உனக்கு எப்படித் தெரியும்?” – அனுராதா மகனிடம் கேட்டார்.

“இவரோட ஆபிஸ்ல வேலைக்குச் சேர்ந்து இருக்கா. ரொம்ப நாள் பழக்கம். எனக்கு இப்போ தான் தெரியும். பெங்களூர்க்கு ஒன்னா போயிருக்காங்க. அங்க எடுத்து என் ஃப்ரண்ட் அனுப்புனா. இவர் கிட்ட கேட்டா ஆமா.. அப்படித்தான் ஊர் சுத்துவேன். அவளத்தான் லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டாரு. இதுக்கு மேல டைவர்ஸ் கேட்காம வேற என்ன செய்ய சொல்லுறீங்க அத்த?”

கண்ணை துடைத்துக் கொண்டு வருணிகா பதில் சொல்லி விட, அத்தனை பேரும் அதிர்ச்சியோடு ஹரிஹரனை பார்த்தனர்.

“அவ சொன்னது உண்மையா? சொல்லுடா” என்று அனுராதா கேட்க, “ஆமா. எனக்கு சந்திராவ தான் பிடிச்சு இருக்கு” என்று கூறி விட்டான்.

பளாரென அனுராத விட்ட அறையில், வருணிகாவே அதிர்ந்து போனாள்.

“இப்படித்தான் உன்னை வளர்த்தேனா? கட்டுன பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணிட்டு, இன்னொரு பொண்ண பிடிச்சுருக்குனு எங்க முன்னாடியே எவ்வளவு தைரியம் இருந்தா சொல்லுவ?”

மீண்டும் மீண்டும் அறைந்தார். கை சிவந்து போகும் வரை அவனை அடித்துக் கொண்டே இருந்தாலும், அனுராதாவின் கண்ணிலும் கண்ணீர் வழிந்தது.

தெய்வாவும் வருணிகாவும் விட்ட கண்ணீரை நினைத்து, அவரது மனம் துடித்தது. வாழ வந்த பெண்ணின் கண்ணீருக்கு ஆளாகி விட்டனரே. அவருக்கும் ஒரு மகள் இருக்கிறாளே. பெண்ணை பெற்றவர்களின் வலி தெரியுமே.

“அனு.. போதும். இனி அவன் மேல கை வாக்காத. அவன் நமக்கு புள்ளையும் இல்ல. நாம அவன பெக்கவும் இல்ல. விடு” என்று ஏகாம்பரம் வந்து மனைவியை பிடித்துக் கொண்டார்.

“எப்படிங்க இப்படிப்போனான் இவன்? அய்யோ”

“என்னை மட்டும் குறை சொல்லுறீங்க? அவள எதுவும் சொல்லாதீங்க? அவ பண்ண தப்பு என்னனு கேளுங்க?”

“அப்படியாபா? சரி சொல்லு. என்ன தப்பு பண்ணா?”

“சந்திரா என்னை காலேஜ் டேய்ஸ்ல இருந்து லவ் பண்ணி இருக்கா. எல்லா உண்மையும் தெரிஞ்சும், வீட்டுல என்னை மாப்பிள்ளை பார்த்தப்போ சரினு சொல்லிட்டு, சந்திரா கிட்ட, இனி ஹரிய நினைக்காத. அவரு எனக்கு சொந்தம். நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கனு சொல்லி இருக்கா.”

“இதுல என்ன தப்பு இருக்கு?”

“அப்பா.. அவ லவ் பண்ணுறானு தெரிஞ்சும், உண்மைய மறைச்சு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பு இல்லையா?”

“இல்லையேபா. இது தப்பா தெரியலையே”

“அப்பா..”

“மாமா.. விடுங்க. இப்போ அவர் உணர மாட்டாரு. நான் முடிவு பண்ணது பண்ணதுதான். என்னால இவரோட‌ இனி வாழவே முடியாது. ஒரு தடவ இவங்க காதலுக்கு நான் குறுக்க வந்துட்டேன்னு சொல்லிட்டாரு. இப்போ நான் குறுக்க வரல. அவரும் அவள லவ் பண்ணுறாரு. அவளும் பண்ணுறாளாம். கல்யாணம் பண்ணிக்கட்டும். எனக்கு பிரச்சனை இல்ல.”

“வருணி..” – தெய்வா.

“அழுகாதீங்க சித்தி. நான் ஒன்னும் எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு பண்ணல. இவர் கிட்ட பேசி நல்லா யோசிட்டு தான் சொல்லுறேன். அவருக்கு இன்னொரு பொண்ணு மேல காதல் வந்துடுச்சு. அப்புறமும் நான் இவரோட இருந்தா, அது எனக்கு தான் அவமானம். என் பிள்ளைய பெத்துகிட்டு தனியா வாழுறேன். சப்போஸ் இவர பிரிஞ்சப்புறம்.. என்னை எனக்காக மட்டுமே நேசிக்கிற யாராவது வந்தா, கல்யாணம் பண்ணிட்டுப் போறேன். அடுத்தவள மனசுல சுமந்துட்டு, என் மேல பழி போடுறவரு எனக்கு வேணாம்”

மிக அழுத்தமான குரலில் தன் முடிவை கூறி விட்டாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
7
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்