Loading

பிறை 6

 

அன்றைய நாள் இரண்டாவது முறையாக மயங்கிய சஞ்சீவனியை தாங்கிய பொன்னம்மா மீண்டும் அவள் படுத்திருந்த இடத்திலேயே படுக்க வைத்து, அவள் மயக்கத்தை போக்க முயன்று கொண்டிருந்தார்.

 

அவளும் சில நிமிடங்களில் கண் விழிக்க, முதலில் பார்வையில் பட்ட பொன்னம்மாவை கண்டதும் பயப்பட ஆரம்பித்தாள்.

 

தன்னையே பார்த்து பயப்படும் சஞ்சீவனியைக் கண்டு ஒரு பெருமூச்சுடன், “நான் சொல்றதை நம்ப கஷ்டமா தான் இருக்கும் சஞ்சீவனி. ஆனா, அது தான் உண்மை. அதை தெரிஞ்சுக்க வேண்டிய வயசும் உனக்கு வந்துடுச்சு.” என்றவர், அவள் முதுகில் இருக்கும் தழும்பை அவள் பார்வைக்கு படுமாறு கண்ணாடியை காட்டியவர், “நான் சொல்றதுக்கு இது தான் சாட்சி. இந்த தழும்பு எப்போ வந்துச்சு?” என்றார்.

 

சஞ்சீவனி யோசனையுடன், “எப்போ வந்துச்சுன்னு எனக்கும் சரியா தெரியல. ஆனா, நான் நேத்து தான் கவனிச்சேன். கனவுல வேர்உல்ஃப்…” என்று ஆரம்பித்தவள், தன் கனவுக்கும் இப்போது பொன்னம்மா சொல்வதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்று சிந்திக்க ஆரம்பித்தாள்.

 

அவள் கூறியதைக் கேட்ட பொன்னம்மா, “உன் கனவே சொல்லுது, உன் பிறப்பின் நோக்கத்தை.” என்றார்.

 

சஞ்சீவனியின் மனமும் அதை நம்புவதற்கான முதல் படியை எடுத்து வைத்தாலும், அவளுக்கு இருக்கும் கேள்விகளை பொன்னம்மாவிடம் கேட்க ஆரம்பித்தாள்.

 

“அப்படியே நான் வேர்உல்ஃப் ஹண்டராவே இருந்தாலும், இத்தனை நாள் இல்லாம இப்போ திடீர்னு எதுக்கு இந்த தழும்பு வந்துருக்கு?” என்று வினவினாள்.

 

“பிறப்புலேயே ஓநாய் மனிதர்களை வேட்டையாடுறவங்களா பிறந்தாலும், அவங்களுக்கு சக்தி கிடைக்குறது என்னவோ அவங்க இருபதாவது வயசுல தான்.” என்று கூறிய பொன்னம்மாவை இடைவெட்டிய சஞ்சீவனி, “ஆனா எனக்கு இப்போ இருபத்திரெண்டு வயசாகுதே.” என்றாள்.

 

“நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கல.” என்று அவளின் அவசரத்துக்கு குட்டு வைத்த பொன்னம்மா, “வேர்உல்ஃப் ஹண்டருக்கான தேவை எப்போ வரும்?” என்று அவளிடமே கேள்வியும் கேட்டார்.

 

“வேர்உல்ஃப் ஹண்டருக்கான தேவை…” என்று யோசித்தவளுக்கு அதற்கான பதிலும் கிடைக்க, “அப்போ இத்தனை நாள் இங்க வேர்உல்ஃப் தொல்லை இல்ல. இப்போ இருக்குங்கிறதால இந்த தழும்பு உருவாகியிருக்கா?” என்றாள் சஞ்சீவனி.

 

அவள் பதிலை பொன்னம்மாவும் ஆமோதிக்க, “ஆனா, ஹண்டருக்கான தகுதி எதுவும் என்கிட்ட இல்லையே. இதுவரை ஹண்டிங் பண்ணது என்ன பார்த்தது கூட இல்ல.” என்று அவள் உதட்டைப் பிதுக்கினாள்.

 

“ஓநாய் மனிதர்களை வேட்டையாடுறது ஒவ்வொரு ஹண்டருக்கும் அவங்க ரத்தத்துலேயே ஊறுனது. அது உனக்கு போகப்போக புரியும். ஆனா, அதுக்கு முன்னாடி நீ உன்னோட ஆயுதத்தை கண்டுபிடிக்கணும்.” என்றார் பொன்னம்மா.

 

முதலில் இருந்த பதட்டமும் பயமும் இப்போது சஞ்சீவனியிடம் இல்லை என்று தான் கூற வேண்டும். மாறாக ஒருவித ஆர்வம் அவளை தொற்றிக் கொண்டது.

 

அதே ஆர்வத்துடன், “ஆயுதமா?” என்று சஞ்சீவனி கண்களை விரித்து கேட்க, “ஆமா, சாதாரணமா இருக்க ஓநாய் மனிதர்களை வெள்ளி கத்தி வச்சு சுலபமா கொன்னுடலாம். ஆனா, சில சக்திவாய்ந்த ஓநாய் மனிதர்களை சாதாரண வெள்ளி கத்தி காயப்படுத்துமே தவிர அவங்க உயிரை எடுக்காது. அதுக்காகவே உருவாக்கப்பட்டது தான் வேர்உல்ஃப் ஹண்டர் குழுத்தலைவருக்கான வாள்.” என்று கூறி பழைய புகைப்படம் ஒன்றை காட்டினார்.

 

அந்த புகைப்படத்திலும் கூரிய முனை பளபளக்க, கைப்பிடியில் ரத்தச்சிவப்பு நிற மாணிக்க கல் மினுமினுக்க கம்பீரமாக காட்சியளித்தது அந்த வாள்.

 

அதைக் கண்டு வாயைப் பிளந்தபடி இருந்த சஞ்சீவனியை சுயத்திற்கு அழைத்து வந்தது பொன்னம்மாவின், “இந்த வாளை நீ தான் கண்டுபிடிக்கணும்.” என்ற குரல்.

 

“எது? நான் கண்டுபிடிக்கணுமா? இப்போ தான் இதை பார்க்குறேன். நான் எப்படி கண்டுபிடிக்க?” என்று அவள் வினவ, “அந்த ஓநாய் மனிதர்கள் கிட்டயிருந்து இந்த வாளை காப்பாத்த, உங்க அம்மா அதை ஒளிச்சு வச்சுருக்காங்க. அந்த வாள் அதுக்கான அடுத்த உரிமையாளருக்காக பல வருஷமா காத்திருக்கு.” என்றார்.

 

‘அம்மா’ என்ற சொல் அவள் மனதில் பல்வேறு உணர்வுகளை தோற்றுவித்தாலும், அதை வெளிக்காட்டாமல், “அது சரி, அவங்க ஒளிச்சு வச்சாங்கன்னா எனக்கு எப்படி தெரியும்?” என்றாள்.

 

பொன்னம்மா ஒரு பெருமூச்சுடன், “டாப்ஹில்லுக்கு போற வழியில ஒரு காட்டுப்பாதை வரும். அங்க கொஞ்ச தூரம் உள்ளப்போனா, காட்டுக்கு நடுல ஒரு பெரிய பங்களா இருக்கும். அது தான் உங்க அப்பா அம்மா வாழ்ந்த இடம். அது இப்போ பாழடைஞ்சு போயிருக்கு. அதை சுத்தி இருக்க காட்டுல தான் எங்கயோ உங்க அம்மா அந்த வாளை ஒளிச்சு வச்சுருக்காங்க. நீ அங்க போனா, அந்த வாளே உனக்கான வழியை காட்டும்.” என்றார்.

 

அவர் கூறியது அவள் மூளையில் பதிந்தாலும், அவள் மனமோ தன் அன்னை தந்தையை பற்றி கேட்க உந்தியது. அவளும் வாயை திறக்கும் அதே சமயம் பிரத்யூஷா அழைத்திருந்தாள்.

 

அப்போது தான் மணியை பார்த்து நேரமானதை உணர்ந்த சஞ்சீவனி, அவசரமாக தோழியின் அழைப்பை ஏற்று, “சும்மா ஒரு வாக் வந்தேன் பிரத்யூ. நீ வீட்டுக்கு வந்துட்டியா?” என்றாள்.

 

மறுபக்கம் என்ன சொல்லப்பட்டதோ, “அச்சோ, சாரி பிரத்யூ, சாவியை நானே எடுத்துட்டு வந்துட்டேன். இதோ ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடுவேன்.” என்று வேகமாக தன்னிடத்தை விட்டு எழுந்தாள்.

 

அவள் பொன்னம்மாவிடம், “இன்னொரு நாள் வந்து முழுசா கேட்டுக்குறேன் பாட்டி. இப்போ நான் கிளம்பணும்.” என்று கூற, அவளின் கைகளை பிடித்து நிறுத்திய பொன்னம்மாவோ, “உன் குடும்பத்தை பத்தி மெதுவா தெரிஞ்சுக்கலாம். ஆனா, அந்த வாளை இன்னைக்கே தேடி எடுத்துடு.” என்று கூறினார்.

 

அவரின் கூற்று அவளை புருவம் சுருங்க வைக்க, “அந்த இடத்துல ஏற்கனவே ஓநாய் மனிதர்களோட நடமாட்டம் ஜாஸ்தியா இருக்குன்னு தகவல் கிடைச்சுருக்கு. அந்த வாள் அவங்க கைக்கு போறதுக்கு முன்னாடி நீ எடுத்தாகணும். இல்லன்னா, அவங்களை அழிக்கவே முடியாம போயிடும்.” என்று எச்சரித்தார் பொன்னம்மா.

 

அவரிடம் அப்போது ஒன்றும் சொல்லாமல், தலையை மட்டும் அசைத்தவள், அங்கிருந்து அகன்றாள்.

 

செல்லும் வழியில், ‘இந்த பாட்டி சொல்றதெல்லாம் உண்மையா? அப்பா – அம்மா… ப்ச், இப்போ ரொம்ப அவசியம் இந்த நினைப்பு!’ என்று பல எண்ணங்கள் மனதில் வலம் வந்து கொண்டிருந்தன.

 

ஒருவழியாக வீட்டிற்கும் வந்து சேர்ந்தாள் சஞ்சீவனி. அங்கு அவளை திட்டுவதற்கென்றே தயாராக இருந்தாள் பிரத்யூஷா.

 

அவளை சமாளிக்கவே நொடிகள் அனைத்தும் கழிய, அவர்கள் தூங்கப்போகும் சமயமும் வந்தது.

 

“சஞ்சு, நேத்து மாதிரி கத்தாம இருப்பியா?” என்று பிரத்யூஷா வினவ, ‘க்கும், நைட்டு என்ன நடக்கும்னே தெரியாம இருக்கேன். இதுல இவ வேற!’ என்று மனதிற்குள் நினைத்தவள், வெளியே சிரித்து வைத்தாள்.

 

*****

 

சர்வஜனனுக்கு அன்றைய நாளும் பரபரப்பாகவே கழிந்தது. ரோஹித்திடம் கூறியது போல, மேலிடத்தில் அவன் சந்தேகத்தை பற்றிக் கூற, முதலில் அதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

 

பின், அந்த காலடித்தட புகைப்படத்தைக் காட்டி, பல விளக்கங்களை கொடுத்ததும் தான் மேலிடம் சற்றாவது காது கொடுத்து அவன் சொல்வதை கேட்க ஆரம்பித்தது.

 

அதற்கே பல மணி நேரங்கள் அவன் கழித்திருக்க, அந்த கலந்துரையாடல் முடிந்து அவன் வெளியே வந்தபோது, இரவாகி இருந்தது.

 

வாகனத்தை தேடிச்சென்ற அவனின் குழுவினர், அவர்கள் விட்டுவைத்த இடத்திலும் தேடியிருந்தனர். அங்கு அவர்கள் எதிர்பார்த்ததை போல எதுவும் கிடைக்கவில்லை என்ற தகவலே சர்வஜனனை அடைந்திருந்தது.

 

“சார், அந்த இடத்துல கொஞ்ச தூரம் போனா ஒரு பாழடைஞ்ச பங்களா இருந்துச்சு. அங்கயும் சேர்ச் பண்ணியாச்சு சார். ஆனா, எந்த தடயமும் கிடைக்கல.” என்றான் சரவணன்.

 

சர்வஜனன் அதை எதிர்பார்த்தே இருந்தாலும், சரவணன் கூறிய ‘பங்களா’ அவனின் மூளையை குடைந்தது. அவன் உள்ளுணர்வு அங்கு சென்று பார்க்குமாறு கூற, அதை வெளியே யாரிடமும் கூறவில்லை.

 

இதோ இரவு நேரம் யாருக்கும் தெரியாமல், அந்த பங்களா இருக்கும் இடம் நோக்கி பயணமானான்.

 

*****

 

நிலா தேய ஆரம்பித்த இரண்டாவது இரவு… நல்ல உறக்கத்தில் இருந்த சஞ்சீவனிக்கு கனவில் இதுவரை கண்டிராத முகங்கள் மின்னி மின்னி மறைந்தன. எப்போதும் போல கோர்வையாக இல்லாமல், முன்னும் பின்னுமாக காட்சிகள் தோன்றின.

 

ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் போக, உறக்கத்திலிருந்து விழித்து விட்டாள் சஞ்சீவனி.

 

விழித்தாலும் அவள் மனம் ஒருநிலையில் இல்லை. யாரோ அவளைக் கட்டுப்படுத்துவது போல உணர்ந்தாள்.

 

திடீரென்று அந்த வாள் கண்முன் தோன்ற பதறித்தான் போனாள் அவள். இம்முறை எவ்வளவு கத்தியும் பிரத்யூஷா எழுந்து கொள்ளவில்லை. அந்த சூழ்நிலையே அவளுக்கு வித்தியாசமாக இருக்க, மெதுவாக எழுந்தவள், அந்த அறையை விட்டு வெளியே சென்று திரும்பிப் பார்க்க, அந்த வாளும் அவளைத் தொடர்ந்தது.

 

மனமோ அடித்துக்கொள்ள, சில நொடிகளில் பயத்தை விடுத்து, மெல்ல அந்த வாளை தொட முயன்றாள். ஆனால், அவள் கையோ அதனுள்ளே சென்று மறுபக்கம் வந்தது. அப்போது தான் அது நிஜ வாள் இல்லை என்பதை உணர்ந்தாள்.

 

அவள் நடுகூடத்தில் அங்குமிங்கும் நடக்க, அந்த வாளும் அவளைப் பின்தொடர்ந்தது.

 

அதில் கடுப்பானவள், “இப்போ என்னதான் வேணும் உனக்கு?” என்று கத்த, “அந்த வாளே உனக்கான வழியை காட்டும்.” என்ற பொன்னம்மாவின் குரல் கேட்டது.

 

ஒரு பெருமூச்சுடன் அந்த வாளை பார்த்தவள், “உன்னை எடுக்குற வரைக்கும் இப்படி தான் பயமுறுத்துவியா?” என்று அதனோடு பேச்சுவார்த்தை நடத்தினாள் சஞ்சீவனி.

 

அது என்ன பதில் கூறியதோ, இல்லை அவள் என்ன உணர்ந்தாளோ, மெல்ல வீட்டை விட்டு வெளியேறியவள், பிரத்யூஷாவின் டியோவில் அவள் அன்னை தந்தை வாழ்ந்த இடத்தை நோக்கி பயணமானாள்.

 

*****

 

சுற்றிலும் கருநிறத்தை அள்ளி பூசியது போலிருக்க, பத்தாவது முறையாக டார்ச் எடுத்து வராத தன் மடத்தனத்தை எண்ணி தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.

 

பொன்னம்மா கூறியது போல அந்த காட்டுப்பாதையில், ஒற்றை பூவையாய் கையில் அலைபேசி ஒளியுடன் நடந்து கொண்டிருந்தவளின் உடல் பயத்தில் தடதடத்துக் கொண்டிருந்தது. அதையும் மீறி ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

 

ஒவ்வொரு அடிக்கும் எதிர்பாட்டாக மற்றொரு அடி கேட்க, அது எந்த திசையிலிருந்து வருகிறது என்று அவளால் கணிக்க இயலவில்லை.

 

‘ஐயோ, இந்த பாட்டி சொன்னதைக் கேட்டு, இப்படி நைட்டு நேரம் வந்து மாட்டிக்கிட்டேனே! இப்போ திரும்பிப் போகவும் பயமா இருக்கு, முன்னாடி முன்னேறவும் பயமா இருக்கு. இதுல எங்க அந்த வாளை கண்டுபிடிக்குறது?’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.

 

இப்போது அவள் பின்னே காலடிச்சத்தம் வேகமாக கேட்க, பயத்தில் அவளும் வேகத்தை அதிகரித்திருந்தாள்.

 

கூடவே, அவள் மீது ஏதோ வெளிச்சமும் படர, சட்டென்று தன் நடையை நிறுத்தி உறைநிலைக்கு சென்றாள் சஞ்சீவனி.

 

“யார் அது?” என்று அழுத்தமான ஆண்குரல் கேட்க, மூச்சுக்கே பஞ்சமாகிப் போன வேளையில் பேச்சு வருமா என்ன சஞ்சீவனிக்கு?

 

அந்த பதட்டத்தில் அந்த ஆண்குரலை அடையாளம் காணவும் முடியவில்லை அவளால்.

 

உறைநிலையில் இருந்தவளை உருக வைக்கவென்று, அவள் முன் வந்தான் அவன், சர்வஜனன்.

 

*****

 

சரவணன் கூறிய பங்களாவை நோக்கி நடந்தவன், சற்று நேரத்திலேயே அவனுக்கு முன்னர் யாரோ நடப்பதை உணர்ந்து கொண்டான். சில நொடிகள் மௌனமாக பின்தொடர்ந்து யாரென்று யூகிக்க முயன்றான்.

 

அவன் யூகமோ முன்னே செல்லும் நபர் ஆபத்தானவர் அல்ல என்று கணிக்க, மெதுவாக அந்நபரின் நோக்கத்தையும் அறிய முயன்றான்.

 

சில நிமிடங்களும் கழிய, அவர்கள் நடைக்கும் முடிவில்லை, நோக்கத்தை அறிந்து கொள்ளவும் வழியில்லை என்ற நிலை ஏற்பட, தன் கையிலிருந்த டார்ச்சை உயிர்ப்பித்து முன்னே சென்ற நபரின் மீது வெளிச்சம் படுமாறு காட்ட, அதன் வெளிச்சம் அந்நபரை பெண் எனக் காட்டியது.

 

இந்நேரத்தில் இங்கு ஒரு பெண்ணா என்ற யோசனையுடன் தான் அவன் யாரென்று வினவியபடி அவள் முன் வந்து நின்றான்.

 

இருவருமே மற்றவரை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களின் அதிர்ந்த முகத்தில் தெரிந்தது.

 

முதலில் அதிர்ச்சியிலிருந்து வெளிவந்த சர்வஜனன் சஞ்சீவனியிடம், “நீ இங்க என்ன பண்ற?” என்று வினவ, அவளோ விடை தெரியாத குழந்தைகளுக்கு மத்தியில் கேள்வியே புரியாத குழந்தையாய் முழித்துக் கொண்டிருந்தாள்.

 

அந்நொடியிலும் அவள் முகபாவனை அவனை ஈர்க்க, கேட்ட கேள்வி மறந்தவனாக அவனும் அவளையே நோக்கிக் கொண்டிருந்தான்.

 

இருவரும் கலைந்தது என்னவோ அருகிலுள்ள புதரிலிருந்து கேட்ட சத்தத்தில் தான்.

 

இருட்டில் புதருக்கு இடையில் இருப்பது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்தவன், அவள் வந்த காரணத்தை கூட அறிந்து கொள்ள விழையாமல், “ஃபர்ஸ்ட் இங்க இருந்து போவோம்.” என்று அவளிடம் கூறினான்.

 

அவளும் தானே அந்த சத்தத்தைக் கேட்டு பயந்திருந்தாள்!

 

உடனே, தலையசைத்து அவனுடன் கிளம்ப ஆயத்தமானாள்.

 

அந்த இடம் முழுவதுமே சேற்றினால் நிரம்பியிருந்தது. மேலும், கும்மிருட்டாக இருந்த இடத்தில், எங்கு கால் பதித்து, எப்படி நடப்பது என்றே சஞ்சீவனிக்கு புரியவில்லை.

 

அப்போது சர்வஜனனின் ஜில்லென்ற கரம் அவளின் கரத்தை இறுக்கமாக பற்ற, ஜிவ்வென்று உள்ளுக்குள் வெப்பம் பரவுவதை உணர்ந்தாள் அவள். ஆனால், அந்த ஜிவ்வென்ற உணர்வு எதனால் என்று யோசிக்கும் முன்னரே அவனின் குரல் அவளின் சிந்தனையை கலைத்திருந்தது.

 

“இங்க பாதை வழுக்குற மாதிரி இருக்கு. சோ, கேர்ஃபுல்லா நட.” என்று கூறியவன், முன்னே நடக்க, அவளோ அவன் கைப்பாவையை போல சுயவுணர்வின்றி அவன் பின்னே நடந்தாள்.

 

அவன் எதற்கோ நிற்க, அதை உணராமல், அவன் மீதே மோதிக் கொள்ள, அதில் அவளுக்கு என்னவாகிற்று என்று பார்ப்பதற்காக திரும்பினான் சர்வஜனன்.

 

சரியாக அதே சமயம், கருநிற வானத்தில் மின்னல் வெட்டி அந்த இடத்தை நொடிப்பொழுது வெளிச்சமாக்க, இங்கு இருவரும் ஒருவருக்கொருவர் பார்வையால் தழுவிக் கொண்டனர்.

 

அவனின் பழுப்பு விழிகளிலேயே அவளின் விழிகள் நிலைத்து விட, அவனின் பார்வையோ, பாவையின் இளஞ்சிவப்பு அதரங்களில் நிலை கொண்டிருந்தது.

 

அப்போது திடீரென்று அந்த இடத்தில் கேட்ட உறுமல் சத்தத்தில் இருவரும் தங்கள் மோன நிலையிலிருந்து வெளிவந்தனர். வெவ்வேறு திசையில் திரும்பி இருந்தாலும், இருவரின் மூச்சுக்காற்று ஓசை கூட மற்றவர்களுக்கு தெளிவாக கேட்டது. காரணம், அத்தனை அருகில் நெருங்கி நின்றிருந்தனர்!

 

முதலில் தெளிந்த சர்வஜனன், அவளை நோக்காமல், “இந்த இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்பணும். எதுவா இருந்தாலும் மார்னிங் வந்து நான் பார்த்துக்குறேன்.” என்று கூற, அவளோ பதில் சொல்லும் நிலையிலேயே இல்லை.

 

அதை உணர்ந்து கொண்டவனாக, முன்போலவே அவளின் கரத்தை பற்றியபடி நடந்தான்.

 

ஆனால், சற்று நேரத்திலேயே, அந்த உறுமல் சத்தம் இவர்கள் திரும்பிச் செல்லும் வழியில் கேட்பது போலவும், நொடிகள் கடக்க, அந்த சத்தம் நெருங்கி வருவதை போலவும் இருக்க, முன்னேறி செல்வது ஆபத்து என்பதை அறிந்து, சட்டென்று அவளுடன் அருகிலிருந்த பாறைக்கு பின்னே மறைந்தான்.

 

அந்த பாறை சற்று பெரிதாக இருக்கவே, இருவரையும் கச்சிதமாக மறைத்தது.

 

சஞ்சீவனிக்கு நடப்பது கனவா நனவா என்றே புரிபடவில்லை. அப்போது அவளின் மூளை ஏதோ செய்தியை அனுப்பி அவளை சுயத்தை அடைய பணித்தது.

 

மூளை கூறிய செய்தியில் சட்டென்று கீழே பார்க்க, சர்வஜனனின் கரமோ அவளின் அபாயகரமான இடத்தை சுற்றி அணைவாக பிடித்திருந்தது.

 

அவனுக்கு அந்த யோசனையே இல்லை போலும். ஆனால், பெண்ணவளோ கூச்சத்தில் நெளிந்து கொண்டிருந்தாள். வாய் திறந்தும் கூற முடியாத நிலை அவளுக்கு!

 

அவள் நெளிவதை சற்று தாமதமாகவே புரிந்து கொண்ட சர்வஜனனோ, “ஷ், யாரோ இல்ல எதுவோ இந்த பக்கமா தான் வர மாதிரி இருக்கு. சோ, கொஞ்ச நேரம் அமைதியா இரு.” என்று சூழ்நிலை புரியாமல் அதட்ட, சஞ்சீவனியோ எப்படி சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

 

அவளின் முகபாவனையை பார்த்தவன், “என்னாச்சு? எதுக்கு இப்படி முழிக்குற?” என்று வினவ, அவளோ கண்களால் அவன் கரத்தை நோக்க, அவனும் அப்போது தான் அவன் கரத்தை, அது இருக்கும் இடத்தையும் கண்டான்.

 

“ஓஹ் சாரி!” என்று வேகமாக கரத்தை இழுத்துக் கொண்டவன், மற்றைய புறம் திரும்பிக் கொண்டான்.

 

இருவருமே படபடப்பில் இருந்ததை அவர்களின் உடல்மொழியே மற்றவர்களுக்கு காட்டிக் கொடுத்தது.

 

இருவரின் அந்நிலையை கலைத்தது அருகில் கேட்ட சத்தம். அதைக் கேட்டு, லேசாக மறைவிலிருந்து எட்டிப் பார்த்தவர்கள் கண்டது….

 

மாயம் தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்